பிடிச்சதும் பிடிக்காததும் 2011

 


“My Picks” என்று கடந்த மூன்று வருடங்களாக எனக்கு பிடித்த அந்த ஆண்டுக்கான தெரிவுகளை பதிவது வழக்கம். அது எனக்கு பிடித்த தெரிவாகவே மாத்திரமே அமைந்து விடுவது வழமை. இந்த வருடம் மொத்தமாக ஐந்து தமிழ் படங்களே பார்த்து இருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் நான்கு. Rockstar பாடல்கள் இன்னமும் கேட்கவேயில்லை. எனக்கு வயதாகிக்கொண்டு வருகிறது என்பது புரிகிறது. எப்படி கஜன் எந்தப்படம் வந்தாலும் தியேட்டர் போய் பார்க்கிறான் என்பதும் புரியவில்லை. ம்ஹூம்.

 

engeyum-eppothum_159

 

அரசியல்

 

tunis111111111மிக முக்கிய அரசியல் சம்பவம்:  துனூசிய புரட்சி(Tunisian Revolution)

துனூசிய புரட்சி தான் இந்த வருடம் முழுவதும் நடந்த அரேபிய வசந்தத்துக்கு(Arab Spring) வித்திட்டது. மேற்குலக நாடுகளின் சூழ்ச்சி தான் என்றாலும், அரேபிய வசந்தம் சர்வாதிகாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

 

300px-R_Sampanthanமிக சிறந்த அரசியல்வாதி : இரா சம்பந்தன்(தமிழ் தேசிய கூட்டமைப்பு)

அடடா, உடனே இவன் அவனா? அவன் இவனா என்றெல்லாம் ஆரம்பித்து விடாதீர்கள். மனுஷன் ஆளாளுக்கு இழுப்பதை எல்லாம் சமாளித்துக்கொண்டு, அங்கேயே சூதானமாக அரசியல் செய்வதை ரசிக்கிறேன். எனக்கு உங்கள் அளவுக்கெல்லாம் அரசியல் தெரியாது. ஆனால் சம்பந்தரின் intellectual சிந்தனைகளுக்கு நான் ரசிகன். அவ்வளவே.

 

கேவலமான அரசியல்வாதி :

ஹி ஹீ … சொன்னா இலங்கை ஏர்போர்ட்ல என்ன தூக்கிடுவாங்க பாஸ் (back to back  winner)

 

விளையாட்டு

 

Kim Clijsters Australian Open 2011 Women Champion GG6t_I3VVNylமிகச்சிறந்த விளையாட்டு சம்பவம்: கிம் கிளைஜெர்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் வென்றது.

அந்த பொண்ணை ஆஸ்திரேலியா மீடியா என்ன பாடு படுத்தியது. திருமணம், ஒரு குழந்தைக்கு தாய், grumpy மார்பகங்கள் என்ற விமர்சனம்,  கிம் எல்லாவற்றையும் இலகுவாக கையாண்டார். கோப்பையை வென்றார். நான் ரசிக்கும் ஒரு சில பெண் வீராங்கனைகளில் ஒருவர்.

 

 

djokovic-face-novak-djokovic-11444266-415-500மிகச்சிறந்த விளையாட்டு வீரன் : ஜோகோவிக்

Spirited வீரர். பெடரர், நடால் கோலோச்சும் காலத்தில், விமர்சனங்களை தாண்டி ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்ஸ் வென்றவர்.

 

ATHLETICS-WORLD/மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனை : சாலி பியர்சன்

கடந்த ஒலிம்பிக்ஸில் hurdles பந்தயத்தில் இரண்டாம் இடம். அவர் காட்டிய சந்தோசம் அந்த போராட்ட குணத்தை காட்டியது. பொண்ணுக்கு இந்த வருடம் முழுதும் கலக்கல் தான். லண்டன் ஒலிம்பிக்ஸ் காத்திருக்கிறது!

 

 

 

IT தொழில்நுட்பம்

 

0604_mz_42cloudசிறந்த தொழில்நுட்பம் :  Cloud இன் வளர்ச்சி

Cloud தொழில்நுட்பம் இப்போது தான் வீடு தேடி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக webos பரிணமித்து நாம் வைத்திருக்கும் கணணிகள் எல்லாம் வெறும் hubs ஆகின்றன. சரியான திசை என்று தான் நினைக்கிறேன்.

 

 

சிறந்த மென்பொருள் : சிறி(SIRI)

சிறி அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். அதை ஆப்பிள் ஆரம்பித்து வைத்தது நல்ல பயணத்துக்கு வித்து. கூகிளின் search பிசினஸுக்கு ஆப்பு போல தெரிகிறது.  இதன் தொலை நீட்சி தான் கூகிள் கார் ப்ராஜெக்ட். Eagle Eye தொலைவில் இல்லை போல !!!

Siri Love & Marriage

காமெடி விருது : கூகிள்

கூகிள் panic ஆகி விட்டது. iTunes வெளியான காலத்தில் Microsoft panic ஆனது போல தான் இதுவும். எதிலும் அவசரம். கூகிள்+ நல்லதாகவே இருக்கட்டும். ஸ்டார்ட்டிங் மிகப்பெரிய ட்ரபிள். என்ன தான் ஆளாளுக்கு facebook ஐ வசை பாடினாலும், கூகிள்+ அதற்கு மாற்றா என்று கேட்டால், I don’t think so.

 

சிறந்த தொழில்நுட்ப முயற்சி : Yarl IT Hub!

இது ஒரு முக்கிய முயற்சி. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல, Yarl IT Hub உம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் கொடுக்கும் விருது. ஒபாமா தப்பான உதாரணமோ? Winking smile

 

திரை விருதுகள்

இந்த வருடம் வெளியான படங்களில் பார்த்தது : காவலன், யுத்தம் செய், கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், Hangover II, Limitless, Transformers : Dark Of The Moon, No Strings Attached

Engeyum Eppothum Anjali New Stillsசிறந்த இயக்குனர்:   எம். சரவணன் (எங்கேயும் எப்போதும்)

 

சிறந்த நடிகர்: சேரன் (யுத்தம் செய்)

 

சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்

 

சிறந்த நடிகை: அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)

 

Ilayarajaசிறந்த பாடல்: விழிகளிலே (குள்ளநரி கூட்டம், V.செல்வகணேஷ்)

 

சிறந்த பாடகர்: இளையராஜா (குதிக்கிற குதிக்கிற, அழகர்சாமியின் குதிரை)

 

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோஷல் (ரயிலின் பாதையில், அப்பாவி)

 

 

அதிகம் ஐபாடில் நான் கேட்ட தமிழ் பாடல்: வானத்தில வெள்ளிரதம் ( இளையராஜா)

அதிகம் ஐபாடில் நான் கேட்ட ஆங்கில பாடல்: Girl Is Mine (Thriller, Michael Jackson)

அதிகம் ஐபாடில் நான் கேட்ட ஹிந்தி பாடல்: Tere Naina ( My Name Is Khan)

 

இந்த வருடம் வாசித்த புத்தகங்கள்

 • Three Mistakes Of My Life (Chetan Bhagat)100-00-0000-131-2_b (1)
 • Disgrace (J. M. Coetzee)
 • Thousands Of Splendid Suns ( Khalid Hosseini)Mort-cover
 • Mort ( Terry Pratchett)
 • Island Of Blood (Anita Prathaap)
 • Steve Jobs( Walter Isaacson)
 • Australian Short Stories (Laurie Hergnhan)404px-Kadal-pura
 • The Traitor (Shaba Shakthi)
 • A R Rahman : Sprit Of Music (Nasreen Munni Kabir)
 • கடல் புறா (சாண்டில்யன்)
 • போரே நீ போ போ (செங்கை ஆழியான்)
 • கண்ணீர் தேசம் (யாழர் துரை)
 • ஸ்ரீ ரங்கத்து கதைகள் (சுஜாதா)

 

 

 

Person Of The Year

Steve Jobs

steve-jobs1

 

My Picks Of 2010

My Picks Of 2009

My Picks Of 2008

வியாழமாற்றம் (29-12-2011) : பன்னாடை ஆண்கள்


பன்னாடை  ஆண்கள்!

குல்நாஸ்க்கு வயது பத்தொன்பது. ஒரு நாள் அவளின் ஒன்று விட்ட சகோதரியின் கணவன் அவளை பாலியல் வல்லுறவு செய்துவிட்டான்.  குல்நாஸ் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று மறைத்துவிட்டாள். கொஞ்சநாட்களிலேயே அவள் கர்ப்பம் என்பது தெரியவர, சட்டம் தன் கடமையை ஆரம்பித்தது. Guilty of sex outside marriage அடிப்படையிலும் உடனடியாக முறைப்பாடு செய்யாததற்கும் பன்னிரெண்டு வருட சிறைத்தண்டனை. yes yes, அவளுக்கு தான். அவள் சகோதரியின் கணவன் பன்னாடைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்கு தண்டனை ரத்தாகவேண்டும் என்றால் அவனை திருமணம் செய்யவேண்டும் என்று ஒரு கண்டிஷன் வேறு.

ஐம்பதிலும் ஆசை வரும்!

 

இன்றைக்கு ஐம்பதாவது பதிவு!

thanks3 (1)

அரங்கேற்ற வேளையில் விளையாட்டாய் ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் போது செய்த ஒரே ஒரு தீர்மானம், இனி மேல் மற்றவர்களுக்காக, நான் ஏங்கும் விஷயங்களில் சமரசம் செய்வதில்லை என்பது. திகட்ட திகட்ட வாசிக்கவேண்டும் என்பது அதில் ஒன்று. எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது இன்னொன்று. சிங்கபூரின் மெஷின் வாழ்க்கை அதற்கு காரணம் என்று நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டேன். இனி சொல்வதாயில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் இருந்து எழுதிய பதிவு இங்கே.

 

எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது.  எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன்.

 

ஆரம்பித்த உடனேயே எழுதிய அக்கா சிறுகதை, கௌரி போட்ட கமெண்ட் உடன் செல்ப் பிக்கப் ஆகியது.  என் கதையில் அரசியல் பார்வைகளை நான் திணிப்பதில்லை. அந்த கதைக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதை எழுதுவேன். வாழ்க்கையில் எமக்கு பிடித்ததும் பிடிக்காததும் நடக்கிறது இல்லையா? என் கதையிலும் அது நடக்கும். எனக்கும் எழுதும்போது பிடிக்காது தான். பிடித்ததை மட்டும் எழுதினால், அது பச்சோந்திதனம். யோக்கியனாக எழுத்தில் ஆவது இருந்து பார்ப்போமே!

 

சவால் சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது ஒரு அங்கீகாரம் தான். வெத்துக்கு எழுதும் விசரன் என்று எண்ணியவர்களை கூட atleast அடிக்கடி என்னை வாசிக்கவைத்த அங்கீகாரம். அப்புறம் “உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம்”,  எங்கு இருந்து இப்படி ஒரு கதை வந்தது என்று இன்றைக்கும் வியக்கிறேன். காலை ரயிலில் போகும் போது தோன்றிய எண்ணம், அன்றிரவே சிறுகதையானது. ஒரு நண்பன், பொதுவாக விமர்சனமே செய்வதில்லை. Touched my heart என்று தனி மடலே எழுதி இருந்தான். வாசகர்கள் நண்பர்கள் ஆனார்கள். நண்பர்கள் வாசகர்கள் ஆனார்கள்.  தொடர்ந்து ஊக்கம் தருகிறார்கள். மன்மதகுஞ்சு என்ன அலுவல் இருந்தாலும் கமெண்ட் போட தயங்க மாட்டான். ஒரு சின்ன கமெண்ட் தான். எத்தனை சந்தோசம் அது கிடைக்கும்போது!  சலங்கை ஒலியில் அந்த பாலகிருஷ்ணா, இறுதிக்காட்சியில் கூட்டம் கைதட்டும் போது ஏங்குவாரே! ஞாபகம் இருக்கறதா? பிடித்தால் கமெண்ட் போடுங்கள்!

 

எனக்கு மிகப்பிடித்த பதிவுகள் என்றால் அது குட்டியும் சுந்தரகாண்டமும் தான். அதில் குட்டி அதிகம் வாசிக்கப்பட்டது. குட்டியின் அண்ணா கதைத்தபோது குரல் ஆங்காங்கே குழறியது. ஏண்டா எழுதினோம் என்று இருந்தது. சுந்தரகாண்டம் நான் நினைத்த அளவு வாசிக்கப்படாதது என் துர்பாக்கியமே. புனைவு எழுத்துகளை நிஜத்தில் நடந்த சம்பவங்களுடன் இணைக்கும் போது அதற்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால் அப்படியே எழுதுவது புனைவு ஆகாது. பார்ப்போம்.

 

பதிவு எழுதிய அனுபவங்களை பற்றி இன்னும் நிறைய எழுதலாம். வியாழ மாற்றம் தொடர் அநியாயத்த்துக்கு அதிக ஹிட்ஸ் வாங்குகிறது. அதில் வரும் கலாய்த்தல் பலருக்கு பிடிக்கும் போல. பிட்டு படம் தான் பிடிக்கும் என்றால் பிட்டு பதிவு கூடவா பாஸ்? ம்ஹூம். கொல்லைப்புறத்து காதலிகள் தொடருக்கு என்றே தனி வாசகர்கள் இருக்கிறார்கள். என் பிரச்சனை, காதலிகளை எழுத்தில் கொண்டுவருவது தான். சும்மா just like that ஆக எழுத முடியாது தானே. குட்டியை எழுதும்போது கூட, அந்த play தேவையாய் இருந்தது. சுஜாதாவில் அது கம்மி. பதிவும் அத்தனை பேரை கவரவில்லை.

 

ஊ உ ம ப த ப மா, இசை பதிவு எதிர்பார்க்காத அளவுக்கு flop. எப்படி ரசித்து எழுதியும் ரசிக்கவே மாட்டேன்கிறார்கள். நம்ம ரசனை அத்தனை மட்டம் என்று லேட்டாக தான் புரிகிறது. மட்டம் என்றாலும் என் ரசனை என்னது தானே! அப்பா தான் இப்படியெல்லாமா நீ ரசிப்பாய்? என்று ஆச்சரியப்பட்டார். நான் மாய்ந்து மாய்ந்து காதலிப்பவன். அதனால் தானோ என்னவோ அந்த தொடர் பெரும் flop ஆக போய்விட்டது போலும்!

 

எதை எழுதுவது என்பது தான் ஆரம்பத்தில் இருந்த பிரச்சனை. பக்கம் சார்ந்த முன்முடிபுகள் எழுத்தில் வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். ஓரளவுக்கு இன்னமும் கடைப்பிடிக்கிறேன். நண்பன் ஒருவர் சொன்ன மாதிரி, நீங்கள் யார் என்பது உங்கள் எழுத்தில் புலப்படவில்லை. அதனால் தப்பாக புரிந்த்துகொள்ளப்படும் அபாயம் ஏற்படுகிறது என்று. இந்த புரிதலின்மை மேம்போக்கு வாசகர்களிடம் இருந்தே வருகிறது. ஆனால் சொல்லும் வார்த்தையும், எழுதும் எழுத்தும் பிரிந்த பின் எனக்கு சொந்தமில்லை. நான் சொல்வது ஒருவருக்கு புரியாமல் போவதில் என் பங்கு தான் அதிகம் என்பதால் அந்த தோல்வியில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்று தெரியவில்லை. தப்பாகும் போது குட்டுங்கள். ஆனால் தலையுள் ஆணி அறைந்து விடாதீர்கள். ஏற்கனவே அறைந்த ஆணிகள் புடுங்க முடியாமல் கிடக்கிறது!

 

எழுத்தில் அதிகப்பிரசிங்கிதனம், சிலவேளைகளில் ஜெயமோகன் தனம் இருக்கிறதோ என்ற விமர்சனம் நானே எனக்கு கொடுத்து கொள்கிறேன். ஆபத்தான எழுத்து நடை இது. இதை விட்டு விலகவேண்டும். யசோ அக்கா ஒரு பத்திரிகைக்கு ஆக்கம் ஒன்று எழுதித்தருமாறு கேட்டபோது உடனடியாகவே மறுத்து வேண்டுமானால் சிறுகதை தருகிறேன் என்றேன்.  என் பத்தி எழுத்துக்களில் ஒரு வித அப்படாக்கர் தனம் இருக்கிறது. நான் பெரிய “இவன்” போல எழுதுகிறேனோ? அது நான் இல்லை. எனக்கு சிவனே என்று எழுதுவது தான் safe. சிக்கலுக்குள் மாட்டி சின்னாபின்னமாக வேண்டாமென்று தோன்றுகிறது.

 

தமிழில் எழுத ஆரம்பித்ததும் இரண்டு ஆபத்துகள் வந்தது. முதலாவது சுற்றம் மற்றும் நண்பர் வட்டாரங்களில் வெட்டியாக இருக்கிறேன் என்ற விமர்சனம். எனக்கெல்லாம் இப்போது ரொம்ப டைம் கிடைக்கிறதாம்! என்னத்த சொல்ல? அவர்களுக்கு இருக்கும் அதே இருபத்து நாலு மணிகள் தான் எனக்கும். ஒன்பது தொடக்கம் பத்து மணி நேர வேலை. நேரம் இல்லாமல் போகும்போது நான் கை வைப்பது நித்திரையில் தான். எட்டு மணி நேர தூக்கம் இப்போது எல்லாம் ஐந்தாக சுருங்கிவிட்டது. அதே இருபத்து நான்கு மணிநேரம் தான். முன்னர் எல்லாம் அதிகம் படம் பார்ப்பேன். இப்போதெல்லாம் கடைசியாக நான் பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே என்று சொல்லும் ரேஞ்சுக்கு போயாச்சு!

 

அடுத்தது வாசிப்பு. வாழ்க்கையின் கனவு என் வீட்டில் அழகிய ஒரு books collection, வீட்டின் முன் அறையிலேயே இருக்கவேண்டும்.  ஒரு வீட்டில் காலடி வைத்தவுடனேயே அந்த வீட்டுக்காரனின் வாழ்க்கை தெரியவேண்டும் என்று சொல்வார்களாம். என் வீட்டு முன்னறையை எட்டிப்பார்க்கிறேன். வெற்றிடம் தான். என் வாழ்க்கையை போல! அதை புத்தகங்களால் நிரப்பப்போகிறேன். காலடி வைப்பவனுக்கு “The Namesake” உம் “Terry Prachchet” உம் சுஜாதாவும் கண்களில் தெரியட்டும். அந்த அறையின் நடுவே Ottoman இல் கால் மேல் கால் வைத்து “Small Gods” வாசித்து முடிக்கவேண்டும். வெற்றிடம் குட்டி குட்டி கடவுள்களால் நிரம்பி வழியவேண்டும். டேய் ஜேகே, மீண்டும் அதிகப்பிரசிங்கிதனம், அடக்கி வாசி!

 

எனக்கு பத்து வயது இருக்கும் போது தான் அந்த அக்கா என் வாழ்க்கையில் வந்தார். அப்போது அவர் வரலாற்று துறையில் விரிவுரையாளர். நான் சிறுவன். எனக்கு சுஜாதா, ரோஜா முதல் செஸ் செல்வநாயகம் வரை அறிமுகப்படுத்தியவர். வன்னி இடம்பெயர்வோடு சிதறிவிட்டோம். அவர் இல்லாவிடில் வாசிப்பிலும் இலக்கியத்திலும் இத்தனை ஈடுபாடு வந்திருக்குமா? நான் ரகுமான் இல்லை தான். ஆனால் அந்த அக்கா தான் எனக்கு மணிரத்னம்.  அவருக்கு அது தெரியாது. பதினாறு வருஷங்களுக்கு பிறகு இந்த எழுத்து அவரை கண்டு பிடித்துக்கொடுத்தது. வாரம் தவறாமல் பேசுவார். எங்கு குறை, நான் இதை எங்கே கொண்டு செல்லவேண்டும். எல்லாமே சொல்லுவார். எனக்கு ஒரு கை கிடைத்தது போல இருக்கிறது. இப்போது புரிகிறதா? இது தான் நான் ஐம்பது பதிவுகளில் சம்பாதித்தது. தொலைந்துபோன அர்த்தமுள்ள உறவுகள்! சிலரை சந்திக்கும்போது அடடா இனி நாம் தனியே இல்லை என்று எண்ண தோன்றும் இல்லையா? இந்த மூன்று மாதங்களில் நான் பலரை சந்தித்துவிட்டேன். இனியும் என் முன்னறை வெற்றிடமாக இருப்பது அழகில்லை.

 

சந்தோஷம் தாங்கமுடியவில்லை. நான் சாகும் போது லங்காசிறியில் வெறும் நாலு வரி மரண அறிவித்தலோடு காணாமல் போய்விடுவேனோ என்ற ஒரு பயம் இனி இல்லை! என் பெற்றோர் சகோதரர்களுடன் சேர்ந்து இரண்டு சொட்டு கண்ணீர் விடவேனும் நான்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். அது போதும். மேலும் மேலும் எழுதி அவர்கள் எனக்காக அழுவார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்! கவலைப்படாதீர்கள். நிச்சயம் அழவைப்பேன்!

கரிசல் காட்டு கடுதாசி


கி.ரா அளவுக்கு எளிமையாக வாழ்க்கையை வெறு யாராலும் பதிய முடியுமா என்பது சந்தேகமே. சின்ன சின்ன விஷயங்களை அவர் எடுத்து கையாளும் விதம் அடடா … அதுவும் இயல்பாக வரும் நையாண்டியும் நக்கலும். நாய்கள் பற்றி ஒரு கட்டுரை/கதை இருக்கிறது. ஒவ்வொரு பத்தியையும் வாசித்து முடித்த பிறகு, புத்தகத்தை மூடி வைத்து யோசித்து யோசித்து .. வாவ் .. எழுத்தாளண்டா!

நாய்களை பற்றி எழுதும்போது சொல்கிறார்,
“அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்”
Are you getting it? .. என்ன சொல்ல வருகிறார் பார்த்தீர்களா? இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா! என்ன ஒன்று, சுஜாதாவின் எழுத்துக்களில் ஒரு வித ஏளனம் இருக்கும். கீராவிடம் நையாண்டி மாத்திரமே. ஆனால் அடி நாதம் ஒன்றே .. வேண்டுமென்றால் புதுமைப்பித்தனையும் இந்த வரிசையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். நகுலன்?

konjamtheneer_1

நேற்று மீண்டும் “பதுங்குகுழி” , “கணவன் மனைவி” வாசித்து பார்த்தேன். ஒரு சில இடங்களில் கீராவின் ஆட்டத்தை பார்த்து நான் போட்ட “வான் கோழி” டான்ஸ் தெரிகிறது. அந்த கிழவி பங்கருக்குள் இருந்து தேவாரம் பாடுவதும், “கணவன் மனைவி”யில் வரும் காந்தனை ஒரு வித “impotent” பாத்திரமாக வைத்ததும் கீரா தந்த துணிச்சலில் தான்!

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே!


♫உ.. ஊ.. ம ப த ப மா♪  தொடரை நிறுத்தலாம் என்று தான் அக்காவும் அபிப்பிராயப்பட்டார். உன் ரசனை இது. உன்னோடு வைத்துகொள். ஆளுக்கு ஆள் அது மாறுபடும் என்றார். ஒரு வாரம் பொறுத்துப்பார்த்தேன். முடியல! இந்த பதிவு வேணாம்னு சொல்றது மேகலாவையே வேணாம்னு சொல்ற மாதிரி! என் பாட்டுக்கு எழுதப்போறன். பாட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க!
இந்த வாரம் கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் பாடல்களை கோர்த்து இருக்கிறேன். புள்ளி என்னவோ ஒரே வகை சிந்தனையில் அமைந்த பாடல் வரிகள் தான். ஆனால் அதையொற்றி வரும் பாடல்கள் வேலிகள் எல்லாம் தாண்டி ஓடும். டென்ஷன் ஆக வேண்டாம். பதிவுக்கு போவோம்!
சிலவேளைகளில் வைரமுத்துவின் கற்பனைகள் ஒரே பாணியில் அமைந்துவிடும். ஒரு முறை தான் காதலித்து இருப்பார் போல! இந்த வரிகள் பெண்ணை தொலைத்த ஏக்கத்தில் வரும் வார்த்தைகள். என்ன ஒரு அழகான கற்பனை. வைரமுத்து வைரமுத்து தான்!“கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே”
“அதை தேடி தேடி பார்த்தேன்”

உயிரே படம் சந்திரன் மாஸ்டரிடம் நானும் ப்ரியாவும்(அல்லது பார்த்தியா?) முதல் ஷோ பார்த்தோம் என்று நினைக்கிறேன். பாடல் காட்சி கொஞ்சமே இருவர் படத்து “பூ கொடியின் புன்னகை” பாணி வடிவமைப்பு. உன்னிமேனன் பரவாயில்லாமல் பாடியிருப்பார்! ஆனால் ஹிந்தியில் உதித் நாராயணன் ஒரு அதகளமே பண்ணியிருப்பார்.

உதித்திடம் ஒரு வித தாள நடை இருக்கிறது. சரியான கணத்தில் வெட்டி வெட்டி பாடுவார். ஒரு வித casualness இருக்கும். இந்த படத்தில் வரும் அமர் காரக்டருக்கு அவர் குரல் மிகப்பொருத்தம். அருமையான பாடகர். தமிழிலும் பல பாடல்களில் கலக்கி இருப்பார். அவர் பாடியதில் எனக்கு பிடித்த பாடல் சமுத்திரம் படத்து விடிய விடிய பாடல். என் அக்கா இந்த பாடலுக்கு சொத்தை கூட எழுதிக்கொடுக்கும்! பாடல் ஒலிபரப்பானால், இருக்கும் வேலையை எல்லாம் விட்டு விட்டு இருவருமே கேட்டு ரசித்துக்கொண்டு இருப்போம். தேடிப்பார்த்தால் யூடியூபில் கிடைக்கவில்லை. விடுவோமா? ஏத்தீட்டோம்ல!

முதல் சரணத்தில் இறுதி
நீ வேர்வை ஓற்றிட கையில் வைத்திடும்
கர்சீப்-ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது?
உதித் பாடும் style ஐ கேளுங்கள். Brilliant rendering!


பூங்காற்றிலே பாடல் வரிகள் போல தான் டூயட் படத்து அஞ்சலி அஞ்சலி பாடலிலும் ஒரு வரி வருகிறது.

"கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி
மழைத்துளி?
காதலில் அது போல நான் கலந்திட்டேன்
காதலி"என்ன சிந்தனை ஒன்றல்லவா? இப்போது புரிகிறதா இது ஏன் வைரமுத்துவுக்கு பிடித்த சிந்தனை என்று? பாடலில் மூன்று சரணங்கள். இந்த பாடலை ஏற்கனவே எல்லோரும் பிரித்து மேய்ந்து விட்டதால், இதன் ஹிந்தி version க்கு தாவலாம். ரகுமான் அழகாக மாற்றி improvise அமைத்திருக்கிறார். ஒப்பிடவேண்டாம் போல் தோன்றுகிறது. அப்படியே ரசிப்போம், குறை நிறைகளுடன். காதலியை போல!

ப்ரியதர்ஷன் படம். “அஞ்சலி அஞ்சலியை” ரகுமானிடம்  கேட்டு வாங்கியதாக கூறுவார்கள். காரியமில்லை. அழகான ஒரு version கிடைத்தது.
எனக்கு அந்த ஆரம்ப pan flute மிகவும் பிடிக்கும். அப்புறம் அந்த strings. ரகுமான், அடுத்த பிறப்பில் பெண்ணாக பிறந்து பாருங்களேன்! துரத்தி துரத்தி காதலிப்பேன். மாட்டேன் என்று சொன்னாலும்!


அடுத்த பாடல் தெரிவு செய்தமைக்கு காரணமும் வைரமுத்துவே. அவரின் இன்னொரு காதல் வார்த்தை விளையாட்டு.
நான் என்றும் நீ என்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
இந்த நான், நீ, நாம் மாட்டரை தமிழ் பாடலாசிரியர்கள் விடுவதாயில்லை. இந்த பாடல் கருத்தம்மாவுக்காக! கருத்தம்மா இசையை, கிராமத்தில் அவிழ்த்துவிட்ட பொமனேரியன் நாய்க்குட்டி போல இருந்ததாக விகடன் அந்த காலத்தில் விமர்சனம் செய்தது. அடுத்தடுத்த வாரங்களில் “போறாளே பொன்னுத்தாயி” பாடலுக்கு தேசிய விருது கிடைக்க விகடன் மூக்கில் கரி. கிராமிய இசையின் இன்னொரு படிமத்தை காட்ட முயற்சி செய்தவர் ரகுமான்.
Legends never follow the trends. They set the trends for others to follow.


1994 ம் ஆண்டு. இந்த பாடல் இலங்கை வானொலி வர்த்தகசேவையில் ஒலிபரப்பான “பவர் தரும் ஒளிச்சுடர்” நிகழ்ச்சியில் ஐந்தாம் இடத்தில் நீண்ட காலம் இருந்தது. பாடலில் வரும் “வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே” என்ற வரிகளை நான் சின்ன வயதில்,  ஒரு கதையில் வரும் பெண்ணை வர்ணிக்க பயன்படுத்தினேன். இந்த வரிகளுக்கு மேட்ச் ஆகவேண்டும் என்று வானதி என்று இருந்த பெயரை மேனகை என்று மாற்றினேன். அதை அக்கா கண்டு பிடித்து, நான் வைரமுத்துவை  காப்பி பண்ணுவதாய் நக்கல் அடித்தது ஞாபகம் வருகிறது. பதினெட்டு வருஷம் ஆகி விட்டது .. ம்ஹூம் கதையில் வரும் மேனகை, சைக்கிளில் போகும் போது பொம்மர் குண்டு விழுந்து உயிரிழப்பதாக முடித்திருந்தேன். சுஜாதாவின் ஆண்டாள் சிறுமியால்  வந்த inspiration என்று இப்போது நினைக்கும் போது புரிகிறது. கதையை வாசித்த குமரன் மாஸ்டர், ஆச்சரியப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் வாசித்து காட்டினார். எனக்கு முதலில் கிடைத்த அங்கீகாரம். அவரை யாரோ சென்ற மாதம் யாழ்ப்பாணத்தில் வெட்டிப்போட்டு விட்டார்கள்! உடலை இன்டர்நெட்டில் பார்த்தபோது பகீர் என்றது! 

“நான் என்பதில் ன் மறைந்து இம் வந்ததும் ஏனோ”
“போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ”
என்ன அதே வரிகளா? மீண்டும் சாட்சாத் வைரமுத்துவே தான். அப்பு திரைப்பட பாடல். வசந்த் தேவா கம்பினேஷனில் வந்த இன்னொரு classic ஆல்பம். இந்த படப்பாடல்கள் பற்றி தனிப்பதிவே போடலாம். ஹரிணி ஹரிஹரனின் legendary song. உங்களில் யாருக்காவது பிடிக்குமா?  நான் வாரம் இரு முறையாவது கேட்பேன்.  ஆனால் ஆச்சரியம் இந்த பாடல்கள் எல்லாம் facebook ல் காண கிடைப்பதில்லை. நமக்கு ராஜா ரகுமான் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்களோ? இல்லாவிடில் படமாவது பிரபலமாக இருக்கவேண்டும்!


இந்த வகை “நான் நீ நாம்” வகையறா வரிகள் அந்த காலத்திலும் வந்து இருக்கின்றன. இது சூரசம்காரம் பட பாடல். இசை நம்ம ராஜா தான். கங்கை அமரன் பாடல் வரிகள். அருண்மொழி சித்ராவின் இன்னொரு காதலிக்க வைக்கும் பாடல்.
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அருண்மொழி பாடியிருக்கிறார். ஆச்சரியம்.சித்ரா full form இல் இருந்த காலம். பாடும் போது ஏங்க வைப்பார். காதல் வடியும் குரல்.
கூடினேன் பண் பாடினேன்- என்
கோலம் வேறு ஆனேன்.
தாவினேன் தள்ளாடினேன்-உன்
தாகம் தீர்க்கலானேன்
மிகச்சாதாரணமான வரிகள். ஆளை போட்டுத்தாக்கும் மெட்டும் குரலும் இசையும். சொல்லுங்கள்? மெட்டா வரிகளா ஒரு பாடலுக்கு முக்கியம்? இரண்டும் முக்கியம் என்று எக்ஸ்ட்ரா சப்பை கட்டு கட்ட வேண்டாம்!

வியாழமாற்றம் (22-12-2011) : என்னத்த சொல்ல?


என்னத்த சொல்ல?அரசியல் என் பதிவிலே அணுவளவும் இனி வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் சிங்கள நண்பர்கள் மத்தியில் இந்த வீடியோ சுழன்று திரிகிறது. பேட்டி காணப்படும் பையன் புலிகள் இயக்கத்தில் இருந்து ராணுவத்திடம் பிடிபட்டு தடுப்பு முகாமில் இருந்தவன். முகாமில் இருக்கும் போது சிங்களம் படித்து பாடுகிறான். அதில் தப்பு இல்லை. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கீழ்த்தரமான அரசியல். என்னத்த சொல்ல? சொன்னாலும் தப்பு பிடிப்பார்கள்.

காலை வாரிய காதலியும் கை கொடுத்த நண்பனும்!

 

மூல பதிவு : http://orupadalayinkathai.blogspot.com/2011/12/blog-post_18.html

நேற்று நான் எழுதிய “சந்திரன் மாஸ்டர்” என்ற கொல்லைபபுறத்து காதலிகள் தொடர் பதிவு சின்ன சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு சில நண்பர்களின் மனைவிகள், தம் கணவன்மாரும் பலான படம் பார்க்க வந்திருந்தார்களா என்று கேட்டு ஈமெயில் அனுப்பினார்கள்! இன்னும் சிலர் ஜேகே உங்களுக்கு என்று ஒரு மரியாதை எழுத்தில் உருவாகி இருக்கிறது. நீங்கள் ஏன் இப்படி எல்லாம் எழுதவேண்டும் என்று கேட்டார்கள். என்னடா இது வம்பாயிற்று என்று யோசித்தேன்!

இப்படி இருக்கும் சமயம் பார்த்து ஆபத்பாந்தவனாய் கீர்த்தி என்ற மன்மதகுஞ்சு, வீட்டில் இடம்பெற்ற கடும் ஆட்லறி தாக்குதல்களையும் பொருட்படுத்தாது பதிவுக்கு விமர்சனம் அனுப்பினான். தாங்க்ஸ் டா நண்பா! அவன் கமெண்ட் இதோ!

 

இவ்வளவுகாலமும் இசைப்படம்,காமெடிப்படம்,மசாலா படம் என கலந்துகட்டி அடிச்சிகிட்டிருந்த இயக்குனர் முதன்முதலாக ஒரு " ஒலக படம் " படம் எடுக்க முன்வந்தமை ஊரே கைகொட்டி பாராட்டுகிறது (யாரடா காறி துப்புறது விமர்சனம் எழுதிக்கிட்டிருக்கோமில்ல)!


உலக படம் எடுப்பவர்கள் இழைக்கும் தவறு முதலில் அந்த படம் நடக்கும் காலப்பகுதிதான், அதையே இந்த இயக்குனரும் செய்ய விழைந்திருக்கிறார்.1997 இலேயே படையப்பா படம் வெளியானது என்று கூறவருவதன் மூலம் STD ன்னா வரலாறு தானே எண்டு கேட்டு தானும் ஒரு காமெடியன் என்பதை ஆரம்பத்திலேயே நிரூபித்துவிட்டார்!


தி மாஸ் எண்டு டைட்டில் போட்டுவிட்டு சந்திரன் மாஸ்டரின் பின்புலத்தை ஆராயாமல் விட்டுச்சென்றுள்ளார்(நீண்டகாலமாக சந்திரன் மாஸ்டர், புலிகளின்  நிதர்சனம், கலைவெளியீட்டுபிரிவில் வேலைசெய்தவர்)


கெமிஸ்ட்ரி பாடத்தை கட் பண்ணீவிட்டு கப்பிள்ஸ் கெமிஸ்ட்ரி பார்க்கப்போனதை சீன் பை சீன் சிலாகித்து கூறவதில் தானும் பிரான்ஸ் நாட்டு படங்களின் அடிமையென சொல்லாமல் சொல்கிறார்.


ஒன்றிரண்டு பாதிரங்களினூடாக தாம் சொல்லவந்த திரைக்கதை நகர்த்திச்சென்றாலும் ஒரு சில பாத்திரங்களின் பெயர்களில் அவரே கன்பீஸ் ஆகியிருக்கார் என்றே சொல்லவேண்டும்,அது உண்மைப்பெயரா ,மாற்றப்பட்ட பெயரா?


ஒரு கலைஞன் தனது படைப்பை மக்கள் முன் காட்சிபடுத்தும்போது நாலு பேர் காறித்துப்பத்தான் செய்வான் ஆனால் கொஞ்சம் ரிவைண்டு செய்து பார்த்தால் அந்த படைப்பை பார்த்து நாக்கில் எச்சில் ஊறி அதை வெளியே காட்டிகொள்ளாமல் இப்படி செய்து விட்டுபோவார்கள் கோழைப்பயல்கள்..அந்த இடத்திலே இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் இதுவரை எந்தவிதமான எதிர்கூச்சல்களா வராதவிடத்து ( எத்தனை வீட்டில ஊமைக்குத்தா குத்துறாங்கன்னு சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்)


ஒரு இடத்தில் இயக்குனர் தான் சந்தர்ப்ப வசத்தால்தான் சந்திரன் மாஸ்டரிடம் கிறமர் படித்ததாகவும் அப்பிராணியாகவும் காட்டிக்கொள்கிறார், அப்பிடிப்பார்த்தால் நீ ஏண்டா மூதேவி இராசபாத ரோட்டில உள்ள ஒரு வீட்டில குஷி படத்தை கள்ளக்கரண்ட் எடுத்து பார்க்க போனாய், வீட்டிலேயெ பார்த்திருக்கலாமே என்று ஒரு கருத்தை அந்த கதைப்பாத்திரங்களின் மூலமே கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


சந்திரன் மாஸ்டர் என்பவர் இன்று உலகம் பூரா குறிஞ்சி பூக்களாய் வியாபித்திருக்கும் பல அறிவாளிகளுக்கு ஆங்கிலிஸ் கத்துக்கொடுத்தவர் எனபதும் ஆனாலும் அவர் நம்மை விட்டு பிரிகையில் அஞ்சலிக்கேனும் ஒரு துளி கண்ணீர் விடவில்லையே எனும் இயக்குனரின் விவாதமும் மனக்குறையும் வரவேற்கத்தக்கது.


மொத்ததில் புதைக்கப்பட்ட ஒரு பெரு விருட்சத்தை சிறு செடியாய் காட்ட முயற்சித்து வெற்றி பெற்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்..

வியாழமாற்றம் (15-12-2011) : யார் தமிழர்?


Yarl IT Hub : Logo Competition

போன் அடித்தது. வேறு யாரு? அக்கா இல்லாவிடில் மேகலா! இம்முறை அக்கா தான்!
“டேய், Logo competition பற்றி சயந்தனிண்ட பதிவு வாசிச்சன்”stock-photo-9552671-frustrated-crying-baby
“நீயும் ஒண்டு ட்ரை பண்னேன்?”
“Logo எப்படி இருக்கும் எண்டே தெரியாதடா”

MortMort ஒரு நோஞ்சான் இளைஞன். இவன் வீட்டிலும் வேலை செய்கிறான் இல்லை என்று அப்பா ஒருநாள் சந்தைக்கு கூட்டி சென்று யாருக்காவது கூலி வேலைக்கு கொடுக்கலாம் என்று நிறுத்திவைக்க, அவன் உருவத்தை பார்த்தே எல்லோரும் விலகிபோகிறார்கள். இருட்டிய பிறகு ஒருவர் வருகிறார். அவனை வேலைக்கு எடுக்கிறார். யார் அவர்?

இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது!


"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே.
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே"

இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள்.

அட ஒருவர் செய்த பிழைக்கு ஏன் ஊரை நொந்து கொள்கிறீர்கள் என்று கேட்கவேண்டாம். நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வப்போது கிள்ளுக்கீரையாய் பயன்படுத்தும் போது வலிக்கிறது. கமலை கேரளா கொண்டாடியது என்பதற்காக டாம்999 படத்தை நீங்கள் அனுமதித்தீர்களா? இல்லை தானே. அது போல  முத்துக்குமார்களுக்கு சிரம் தாழ்த்தினாலும் நீங்கள் அடிக்கடி எம்மை வைத்து வியாபாரம் செய்யும் போது வலியோ வலி. யாரிடம் போய் அழமுடியும் சொல்லுங்கள்? அடித்தவனை திருப்பி அடித்து, பின் அவன் காலிலேயே விழுவது ஒன்றும் எமக்கு புதியது இல்லை. என்ன ஒன்று, நாம் அதை ஒரு போதும் ஏற்று கொள்ளமாட்டோம். அவ்வளவே. எங்களுக்கு எப்போது மீசையில் மண் ஒட்டியது?

“யாருமில்லாத தீவு ஒன்று” வேண்டும் என்ற பாடலில் “ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை பூப்பூத்து நீ சூட தர வேண்டுமே” என்று எழுதியபோது, அது உறுத்தவில்லை. அதில் ஒரு நம்பிக்கை இருந்தது. “இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து, காதல் வந்ததே” என்று பாடிய போதும், நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தெனாலியை கூட நகைச்சுவை என்றே கொண்டாடினோம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மணிரத்னம் ஈழத்து போரை ஆயுத வியாபாரிகளின் போர் என்று சொன்னபோதும், அவருக்கு புரியவில்லை என்று ஒரு சால்ஜாப்பு சொன்னோம். அப்போதே புன்னகை மன்னனில் பாலச்சந்தர் நடுவுநிலைமை என்று சொன்ன போது கூட, சரி, கலைப்படைப்பு தானே என்று விட்டு விட்டோம். ஆனால் இப்போது ஏனோ வலிக்கிறது.

யுகபாரதியை குறை சொல்லவில்லை. அவர் பாவம், புதுசாக எழுதவேண்டும் என்று எழுதிவிட்டார். ஈழத்தை பற்றி எழுதினால், யார் கண்டது, இதுவும் கொலைவெறி பாடல் போல youtube இலும் வலம் வரலாம். கோல்ட் விருதும் கிடைக்கலாம். அவர் எண்ணத்தில் தப்பு இல்லை. அது வியாபாரம். எங்களுக்கு புரிகிறது.

ஆனால் இந்த விஷயம் எங்களுக்கு அப்படிப்பட்டது இல்லை.  ஈழம் என்ற விஷயம் நிறைய பதிவுகளை எமக்குள் கொண்டது. சிலர் அழுவார்கள். சிலர் உணர்ச்சிவசப்படுவார்கள். சிலர் வைவார்கள். சிலர் தம்மைப் தாமே நோந்துகொள்வார்கள். ஒரு திரி போல, தூண்டிவிட்டால் மீண்டும் போராட வேண்டும் போலவும் இருக்கும். அது வேண்டாம். புரட்சி பேசி நிறைய இழந்துவிட்டோம். பேசவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பேசி விட்டு அடுத்தது என்ன என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுவிட்டு பேசுங்கள். போகிற போக்கில் பேசிவிட்டு அடுத்த ஐட்டத்துக்கு போவதாக இருந்தால், எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள். நாங்கள் இழந்தது ஊண், உணர்வு கொண்ட மனிதர்களை, எம்மோடு கூடித்திரிந்தவர்களை, நாம் வாழ்ந்த வாழ்க்கையை. எங்கள் அடுத்த தலைமுறை அந்த வாழ்க்கையை தொலைத்துக்கொண்டே பிறந்து கொண்டிருக்கிறது, கடவுளை அறியாத மனிதர்கள் போல. வலிகள், ரணங்களாகி நாளடைவில் வடுக்களாகுமா என்று நாளையை யோசிக்க பலர் ஆரம்பித்துவிட்டார்கள்.  இந்த நேரத்தில் எது செய்தாலும் கொஞ்சம் அதிகம் கவனத்துடன் தான் செய்கிறோம். செய்கிறார்கள். நீங்களும் ப்ளீஸ் செய்யுங்கள்.

இன்னமும் நீங்கள் தான் என்று நினைத்துகொண்டிருக்கும் பேதை இனம் நாங்கள். நீங்கள் அவ்வப்போது ஜாலியாக அருவாளை பாயச்சும்போது, திருப்பி பாய்ச்சவும் பயமாக இருக்கிறது. ஊமையாய் அழுகிறோம். இது ஒன்றும் புதுசு இல்லை எமக்கு. நீங்கள் அடுத்தமுறை பாய்ச்சும்போது தயவுசெய்து நெஞ்சில் பாயச்சுங்கள். வலிக்காது. அடிக்கடி அங்கே ஏறியதால் மரத்துபோயவிட்டது.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்று அம்மா சொல்லும். ஒளிந்து கொள்ள ஒரு பொந்து கூட இல்லாத சுண்டெலிகள் நாங்கள்.  அடித்து ஆடுங்கள்.

------------------------------------

வியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்


ஆப்கானிஸ்தான்

 

kite_runnerகாபுலில் மீண்டும் தற்கொலை தாக்குதல். வேறு மாநிலங்களிலும் தாக்குதல்கள். பாகிஸ்தான் border இல் அமெரிக்கா குண்டு வீசியதில் பாகிஸ்தான் படைவீரர்களும் பலி. அந்த பிராந்தியத்தில் அமைதி என்பது சாத்தியமே இல்லை. மூன்று புத்தகங்கள் வாசித்து விட்டேன்.

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்


திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம்
ஆல் இந்திய ரேடியோ
தூத்துக்குடி வானொலி நிலையம்
நேரம் இரவு எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்
திரைத்தென்றல்!

உங்களில் எத்தனை பேருக்கு இந்த அறிவிப்பு ஞாபகம் இருக்கிறது? அட நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவரா? தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு குட்டி ரேடியோவுடன் அலைந்தவரா? தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சி கேட்காமல் இரவு சாப்பாடு உங்களுக்கும் நிச்சயம் இறங்கி இருக்காது. என்னை மீண்டும் 90களின் அந்த இனிமையான நாட்களுக்கு அழைத்துச்செல்ல இன்றைக்கு முயல்கிறேன்! நீங்களும் வருகிறீர்களா?

ஒவ்வொரு நாள் இரவும் ஆறு மணிக்கு கை கால் முகம் கழுவி படிப்பதற்கு மேசைக்கு போகவேண்டும். அது வீட்டில் எழுதப்படாத சட்டம். நான் படிப்பது சிவபெருமான் புட்டுக்கு அணை கட்டியது போல தான். தொடர்ந்தாப்போல் அரை மணித்தியாலம் கூட என்னால் இருந்து படிக்க முடியாது. அந்த நேரம் தான் தண்ணீர் விடாய் வரும். சாமி கும்பிட தோன்றும். பாத்ரூம் போகவேண்டும் போல இருக்கும். பேனா மக்கர் பண்ணும. பென்சில் கூர் தீட்ட வேண்டி இருக்கும். ஆனால் அம்மா எவ்வளவு கேட்டாலும் சாப்பிட மட்டும் போக மாட்டேன். அதற்கு எட்டரை ஆக வேண்டும். ஆம் எட்டரை!

இந்த பாட்டு திரைத்தென்றலில் ஒலிபரப்பானால் எங்களுக்கு அன்று தீபாவளி தான். இந்த பாட்டு எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எப்படி சொல்வது? ம்ம்ம் நீங்கள் ஒரு பெண்ணை பார்த்து பார்த்து காதலிக்கிறீர்கள். ஆனால் கேட்க தயக்கம். ஒருநாள் தயக்கத்தை விட்டுவிட்டு கேட்டே விட்டீர்கள். அவள் முகம் நெருப்பு எடுக்கிறது. மாட்டேன் என்கிறாள்.  நீங்களும் கேட்டுவிட்டு ஆடிப்போய் அங்கேயே உட்காருகிறீர்கள். ஐந்து நிமிடம் இருக்குமா?  பின்னால் இருந்து ஒரு கை மிருதுவாக தோளில் ஆதரவாய் விழுகிறது. திரும்பினால் அவள் தலையை இடப்பக்கமாக சரித்து மெலிதாக புன்னகைக்கிறாள். எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படி இருக்கும் எனக்கு திரைத்தேன்றலில் இந்த பாடல் ஒலிபரப்பும் போதெல்லாம். என்ன, இப்போதெல்லாம் திரைத்தென்றல் நிகழ்ச்சியே நின்று விட்டது!

மணி சரியாக எட்டரை அடிக்கும்போது அம்மா பசிக்குது என்பேன். அம்மா சிரித்துக்கொண்டே எல்லோரையும் சாப்பிட அழைப்பாள். எட்டரைக்கு வெரித்தாஸ் வானொலி கேட்க தொடங்குவோம். ஜெகத்கஸ்பார் ஈழத்தமிழருக்காய் மணிலாவில் இருந்து உருகோ உருகென்று உருகுவார். அக்கா மிக சீரியஸ் ஆக கேட்டுக்கொண்டு இருப்பாள். எனக்கு எப்போதடா எட்டே முக்கால் ஆகும் என்று இருக்கும்.

Narasimhan-Photoஇந்த பாடல் பாசமலர்கள் படம். அழகான மெலடி. V.S.நரசிம்மன் இசை. பிரபலமான வயலின் வித்துவான். “ஆவாரம்பூவு ஆறேழு நாளா” என்று சுசீலா பாடிய பாடல். ஞாபகம் இருக்கிறதா? இசை ராஜா என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை, இவர் தான் இசை. அட இது எதுக்கு, “How to name it” என்ற ராஜாவின் master piece க்கு வயலின் வாசித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் நரசிம்மனே! Beautiful Song!
மனிதன் கொண்ட காதல் மட்டும் மறைத்து வைப்பதென்ன?
மழைகாற்றில் ஆடும்தளிர் போல் மனம் துடிப்பது என்ன?

அடடா  முக்கியமான விஷயம் நாங்கள் எப்படி ரேடியோ கேட்பது என்பது தான். ஒரு சின்ன mono cassette ரேடியோ, சிவப்பு கலர் Panasonic, ஆறு பாட்டரிகள் போடவேண்டும். அட கடுப்பு ஏத்தாதீங்க. 94ம் ஆண்டு பகுதியில் பாட்டரிக்கு எங்கே போவது? குட்டியின் அண்ணா தான் எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்தார். சைக்கிள் டைனமோவையும், ஒரு பழைய சைக்கிள் ரிம்மையும், பாவித்து மரவேலை செய்பவரிடம் சொல்லி ஒரு சின்ன வீல் டைனமோ சரி செய்து தந்திருந்தார். கதிரையில் இருந்தவாறே, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பாட்டின் தாளத்துக்கு ஏற்ப மிதிக்கலாம். கொஞ்சம் வேகமாக மிதித்தால் சத்தம் கூட கேட்கும். மெதுவானால் சுஜாதா காதுக்குள் தான் கிசுகிசுப்பார். என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் பாருங்கள்!

தூத்துக்குடி வானொலி நிலையத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஒரு விதமான மெலடி ரசிகர்கள். அவர்கள் ஒலிபரப்பும் பாடல்கள் எல்லாமே தனிரகம். இந்த பாடல் எல்லாம் திரைத்தென்றல் இல்லாமல் போயிருந்தால் எப்படி கேட்டு இருப்பேனோ தெரியாது. “மணிரத்னம்” தான் படத்தின் பெயர். யார் இசை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் பாடல் சூப்பர்!

அக்கா  இண்டைக்கு  என்ன பாட்டு போடுவினம்?
அதானே கொஞ்ச நேரத்தில கேட்க போறாய்?
Bet பிடிப்பமா?
சும்மா போடா?
நான் சொல்றன் “கொஞ்சி கொஞ்சி” தான்
சான்ஸே இல்ல, போன கிழமை தான் போட்டவங்கள், இண்டைக்கு “அஞ்சலி அஞ்சலி” தான்
என்ன bet?
தோத்தா நாளைக்கு நீ தான் டைனமோ மிதிக்கோணும்
இல்லாட்டி நீ .. சரியா?
பார்ப்பம்

நானும் அக்காவும் அடுத்த பாடல் எது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நேரம் தான் ஒருமுறை இந்த பாடல் ஒலிபரப்பானது. மனோ ஜானகி பாடிய இன்னொரு gem என்று சொல்லலாம். மனோவின் குரல் அப்படியே தாலாட்டும். இன்றைக்கு youtube இல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!  விடுவோமா? இப்போது ஏத்தியாச்சு! ராஜா ரசிகர்களே, எனக்கு கோயில் கட்டி கும்பிடுங்கள்!!
கூட வரும் நிழல் வேறு எது? கொண்டவளை போல இங்கே?
இந்த நிழல் இருட்டினிலும் பின் தொடர்ந்து ஓடி வரும்

இந்த பாடல் 94 கால பகுதியில் சும்மா ஒரு கலக்கு கலக்கியது. ராஜாவின் comeback படம் என்று வீராவையும் சிறைச்சாலையையும் குறிப்பிடுவார்கள்(ராஜாவுக்கு comeback தேவையில்லை என்பது அப்போது எனக்கு புரியவில்லை). தளபதிக்கு கூட நான்கு தடவை தான் ரீரெகார்டிங் செய்த ராஜா இந்த படத்துக்கு இருபத்தெட்டு முறை ரீரெகார்டிங் செய்ததாக இந்திய டுடே பத்திரிகையில் இந்த படம் சம்பந்தமாக ராஜாவில் கவர் ஸ்டோரி வந்து நாம் திரும்ப திரும்ப வாசித்த ஞாபகம். SPB அநாயசமாக பாடி அசத்தி இருப்பார்.

கொஞ்சி கொஞ்சி பாட்டுக்கும் அஞ்சலி அஞ்சலி பாட்டுக்கும் அந்த காலகட்டத்து ரஜனி-கமல் ரேஞ்சுக்கு போட்டி இருந்தது. “பவர் தரும் ஒலிச்சுடர்” என்று நடராஜசிவம், இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களாக கொஞ்சி கொஞ்சி முதல் இடத்திலும், அஞ்சலி அஞ்சலி இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஒரு நாள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் “ஊர்வசி ஊர்வசி” பாட்டு இந்த பாட்டை புறம்தள்ளி முதல் இடத்தை பெற்றது. கேட்டுக்கொண்டு இருக்கும் பொது எனக்கு ஒரே படபடப்பு. வீட்டில் வேறு அக்கா இல்லை. எனக்கும் ரியுஷனுக்கு நேரமாகியிருந்தது. யாரிடமாவது சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். வேறு வழியில்லாமல். ஒரு பேப்பரில் விலாவாரியாக “ஊர்வசி ஊர்வசி” முதலிடம் வந்த செய்தியை கடிதம் போல எழுதி மேசையில் வைத்து விட்டே நான் புறப்பட்டேன். அக்கா மறந்திருக்கும். போன் பண்ணி இந்த பதிவை வாசிக்க சொல்லவேண்டும்! அது ஒரு கனாக்காலம். இந்த பாட்டு அடிக்கடி திரைத்தென்றல் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள். அந்த சுரம் வரும் இடத்தில் நானும் சேர்ந்து சுரம் பிடிக்க, அக்கா சொல்லும்.

“டேய் போடுறதே மூண்டு பாட்டடா, அதில நீ வேற பாடிக்கொல்லாத!”

சாப்பிட்டு முடிந்து கோப்பை காய்ந்து போயிருக்கும். அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் திரைத்தென்றல் முடியும் மட்டும் ஒரு அடி நகரமாட்டோம். நிறைய பாடல்கள் இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகம் ஆகி இருக்கிறது. 90களின் இறுதிகளில் திரைத்தென்றல் அதன் சோபை இழந்து கொண்டு இருந்தது. FM வருகை, விரும்பிய பாடலை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற நிலை வந்தாலும் கூட, மின்சாரம் இல்லாத அந்த நிசப்த நாட்களில், டைனமோவின் கிறீச்சிட்ட சத்தத்துடன் கேட்ட அந்த பாடல்களின் சுகம் எனக்கு பின்பு கிடைத்ததா என்பது சந்தேகமே. இன்றைக்கு வீடு முழுதும் அதிரும், நுண்ணிய ஒலிகள் கூட கேட்கும்படியான Home Theatre System வீட்டில் இருக்கிறது. எனக்கென்னவோ குட்டியின் அண்ணா தந்த அந்த டைனமோ வீலில் மிதித்து கேட்கும் திரைத்தென்றல் தான் வேண்டும் என்கிறது. கிடைக்குமா?

இதுவரை ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ தொடரில்!
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “மேகம் இடம் மாறும்போது!!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “சின்ன குயிலின் சோகம்!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “கொச்சின் மாடப்புறா!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “நிலவும் மலரும் பாடுது”

“Yarl IT HUB” : யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley

 

4413409946_52c21b243fஅப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தமும், அதை தொடர்ந்த பனிப்போரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நாடுகள் வழமைக்கு திரும்பிக்கொண்டு இருந்த காலம். அந்த ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். பத்து வயது தான். ஒரு முறை பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு இலத்திரனியல் என்ஜினியர் வீட்டுக்கு செல்கிறான்.  அவருடைய வீட்டு கராஜில் ஒரு பரிசோதனை செய்கிறார்கள். கார்பன் மைக்ரோபோனை பயன்படுத்தி சத்தத்தை அம்பிளிபை பண்ணும் பரிசோதனை. என்ஜினியர் அந்த சிறுவனையும் துணைக்கு வைத்து வேலையை தொடர்கிறார். சிறுவன் அன்றிரவு அப்பாவுக்கு வந்து நடந்ததை சொல்கிறான். அவர் நம்பவில்லை. எலேக்ட்ரோனிக் அம்பிளிபயர் இல்லாமல் இதை செய்ய முடியாது என்கிறார். சிறுவன் செய்து காட்டுகிறான். அப்பா மகனை பெருமிதமாக பார்க்கிறார்.

 

சிறுவன் வளர்கிறான். பெற்றோருக்கு அவன் ஒரு சாதாரண பிள்ளை இல்லை என்பது தெரியவருகிறது. அவன் திறமைக்கு தோள் கொடுக்கின்றனர். அவன் தன்னுடைய பாடசாலை பிடிக்கவில்லை என்கிறான். மாற்றிக் கொடுக்கிறார்கள். அவன் இஷ்டப்படியே அவனுடைய சின்ன சின்ன ஆராய்ச்சிகளுக்கு இலத்திரனியல் பொருட்களை வாங்கி கொடுத்தனர். இப்போது அந்த பக்கத்து தெரு என்ஜினியர் அவனுக்கு இன்னும் சிக்கலான சவால்களை கொடுக்கிறார். ரேடியோ, டிவி என்று புது புது இலத்திரனியல் கருவிகளை வடிவமைக்கவேண்டும். அவன் இது தன்னால் இயலாது என்று நினைக்கும் போதெல்லாம் அப்பாவும் என்ஜினியரும், இல்லை இல்லை உன்னால் முடியும் என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்கள். அவன் தான் உண்மையிலேயே ஒரு திறமை சாலி என்ற தன்னம்பிக்கையை அவனுக்கு ஊட்டினார்கள். ஒருவரும் discourage செய்யவில்லை. வேண்டாத வேலை என்று ஏளனமாக பார்க்கவில்லை.

 

அந்த ஊரில் இப்படியான ஆர்வமிகு சிறுவர்களுக்கென பெரியவர்கள் குழுக்களை அமைத்தார்கள். அந்த சிறுவர்கள் செவ்வாய்கிழமைகளில் ஒன்று கூடுவார்கள். ஒரு துறை சார்ந்த நிபுணர் வந்து சின்ன விஷயம் ஒன்றை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார். ஒரு நாள் LED, இன்னொரு நாள் Calculator, இன்னொரு நாள் computer. இந்த சிறுவர்கள் தாங்களும் ஏதாவது ஒரு project செய்யவேண்டும். அந்த சிறுவன் ஒரு இலத்திரனியல் “Frequency Counter” செய்ய தீர்மானித்தான். அதற்கு அவனுக்கு சில கருவிகள் தேவைப்பட்டது. உடனே ஒரு phone call போட்டான். யாருக்கு? அந்த ஊரிலேயே மிகப்பெரிய கம்பனியின் தலைவருக்கு! இந்த பத்து வயது சிறுவன், 3000 தொழிலாளர் வேலை பார்க்கும் நிறுவன தலைவருக்கு தயக்கமே இல்லாமல் call போடுகிறான். அவரும் அவனுக்கு செவி மடுக்கிறார். உடனே அந்த கருவிகள் கிடைக்க வழி செய்கிறார். அத்தோடு விட வில்லை, அவனுக்கு ஒரு சின்ன வேலையையும் தன் நிறுவனத்தில் போட்டு கொடுக்கிறார்.

 

சிறுவன் வளர்கிறான். குட்டி குட்டியாய் இலத்திரனியல் கருவிகள் கண்டு பிடிக்கிறான். அவனை போலவே ஆர்வம கொண்ட இன்னொரு சிறுவனை கண்டு பிடிக்கிறான். இருவரும் சேர்ந்து சின்ன சின்ன இலத்திரனியல் project செய்து சம்பாதிக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஆர்வம் மிக்க இளைஞர்கள் கூடும் கூட்டத்தில் தம் கருவிகளை காட்சிப்படுத்தி சிலாகிக்கிறார்கள். மற்ற இளைஞர்களின் வேலைகளையும் பார்த்து புதிது புதிதாய் கற்றுகொள்கிறார்கள். அந்த சிறுவனின் நண்பனுக்கு புது ஐடியா ஒன்று வருகிறது.  அதை செய்ய அந்த ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் வியாபாரி உதவுகிறார். பணம் போதவில்லை என்று வீட்டில் உள்ள வாகனத்தை விற்க அப்பா சம்மதிக்கிறார். வீட்டின் கராஜில் பரிசோதனை கூடம். ஆபீஸ். இடம் போதவில்லை என்று இலத்திரனியல் பொருட்கள் எல்லாம் சமையலறைக்குள் வருகிறது. தாயார் ஒன்றுமே சொல்லவில்லை. மகனின் திறமையில் அப்படி ஒரு நம்பிக்கை.

 

அந்த இளைஞன் வளர்கிறான். நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கிறான். அவன் நிறுவனம் கணணி வன்/மென் பொருட்களில் சாதனை படைக்கிறது. அவனோடு வளர்ந்த சமகால சிறுவர்கள் எல்லாம் பெரிய பெரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகின்றனர்! அந்த நகரமே தகவல் தொழில்நுட்பத்தின் “மக்கா” தலமாக மிளிர்கிறது. யார் அவன்?

ARE YOU GETTING IT?

jobs_and_wozniak_1975

ஆம் அந்த சிறுவன் தான் ஸ்டீவ் ஜோப்ஸ்.  அவனின் நண்பன் தான் Apple Personal Computer ஐ முதன்முதலில்  வடிவமைத்த Steve Vozniak. அவன் phone பேசிய நிறுவன அதிபர் தான் HP நிறுவனத்தை Packard என்பவருடன் சேர்ந்து உருவாக்கிய Hewlett. அவன் காலத்தின் உருவானவர் தான் அவனின் சமவயது, கணணி யுகத்தின் இன்னொரு பிதாமகன் Bill Gates. இவர்கள் சேர்ந்து கண்டு பிடித்தவை தான், Apple Computers, Macintosh, Windows என்று உலகம் முழுக்க வியாபித்து இன்றைக்கு iPod, iPhone, iPad என்று கணணி உலகை ஆண்டு கொண்டு இருக்கிறது!

 

YARL IT HUB

lamp8இப்போது எங்கள் ஊருக்கு வருவோம். யாழ்ப்பாணம், எம் தேசத்தின் அடையாளம்.  மின்சாரம் இல்லாத காலத்திலும் சின்ன குப்பி விளக்கில் அத்தனை சாதனைகளை செய்த தேசம். சின்ன ஜாம் போத்தலில் முக்கால்வாசி தண்ணீர் விட்டு மீதிக்கு எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றியதை மறக்க முடியுமா? பெட்ரோலுக்கு தட்டுப்பாடா? கொஞ்சம் ஓடிக்கலோன், இரண்டு அடி சேலைன் குழாய்,  காபரேடரில் சின்ன திருகு தாளம், மண்ணெண்ணெயில் மோட்டார் வாகனங்கள் ஒட்டிய மக்கள் எம்மக்கள். யாழ்ப்பாணம் முழுதும் இப்படியான குட்டி குட்டி விஞ்ஞானிகள் உருவானதை யாரும் மறக்கமுடியாது. அத்தனை சண்டையிலும் தனி ஒரு நபராக Milkwhite தொழில் நிறுவனம் இயங்கியது ஞாபகம் இருக்கிறதா? அட, பனம்பழத்தில் சவர்க்காரம் கண்டு பிடித்த மக்கள் நாங்கள். மாடுகள் கொண்டு செய்த சூடு மிதிக்கும் கருவிகள், விவசாயத்தில் செய்த சாதனை.

 

ஆனால் எங்கள் ஊரில் இருந்து ஒரு பெஞ்சமின் பிராங்க்ளின் உருவாகவில்லை, ஒரு அப்துல் கலாம் உருவாகவில்லை.  நிறைய கணித மேதைகள் உருவாகினார்கள், ஆனால் அந்த திறமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்டீவ் வோஸ்னியாக் ஒரு மிகச்சிறந்த கணணி நிபுணர் தான். Intergrated circuit துறையில் ஆர்வம் மிக்கவர். மிகக் குறைந்த அளவு chipset இல் இலத்திரனியல் கட்டளைகளை அமைப்பதில் வல்லவர். ஆனால் அவர் திறமையை சரியான திசையில் திருப்புவதற்கு, அதை கொண்டு ஒரு AppleII என்ற கணணியை அமைப்பதற்கு ஸ்டீவ் ஜோப்ஸ் என்ற வியாபார சிந்தனைகள் நிறைந்த, ஒரு தூர நோக்காளர் தேவைப்பட்டார். Harvard பல்கலைக்கழகத்தில் விளையாட்டாக செய்த ப்ரோக்ராமை கொஞ்சம் கொஞ்சமாக பல கல்லூரிகளுக்கு பரப்பி, அப்புறம் அதை உலகம் முழுக்க வியாபிக்க வைப்பதற்கு Facebook நிறுவனர் Mark Zuckerberg ஆல் மாத்திரம் முடியாது. அவருக்கு தோள் கொடுக்க பலர் முன் வந்திருக்கவேண்டும். அவர் வேலையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படியான, அந்த, அடுத்த கட்டத்துக்கு எம்மை, எம் முயற்சிகளை எடுத்த செல்ல எம்மிடம், யாழ்ப்பாண மண்ணிடம் ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் இல்லை. அது ஏன் என்று ஆய்வு செய்தபோது இரண்டு விடயங்கள் பெருத்த சவால்களாக முன்னே வந்து நின்றன.

முதல் சவால், சிக்கலானதும் கூட. அது தான் நமது கட்டமைப்பு. யாழ்ப்பாணத்தில் குடத்துள் விளக்காக ஒளிர்ந்துகொண்டு இருக்கும் திறமைசாலிகளுக்கு, தம் திறமையை தாமே உணர முடியாத அளவுக்கு நம் சமூக அளவுகோல்கள் அமைந்து விட்டன. நமக்கு, நம் பிள்ளைகளுக்கு நாமே அவநம்பிக்கைகளை வளர்த்து விடுகிறோம். ஒரு திறமையான கணித விற்பனர், ஒரு வித்தியாசமான சிந்தனையாளனின் இலட்சியம் என்பது நல்ல ஒரு சம்பளத்தில் வேலையை தேடி வாழ்க்கையின் இருப்புக்கு மோசமில்லாமல் கடந்துவிடுவதாகவே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ உயர்தர பரீட்சையில் திறமை காட்டும் நாம் அடுத்த பத்து வருடங்களில் காணாமல் போய் விடுகிறோம். நமக்கு நம் திறமையை முதலீடு செய்து, காலம் எல்லாம் நிலைக்கும் ஒரு கண்டுபிடிப்பையோ, நிறுவனத்தையோ ஏற்படுத்த தோன்றுவதில்லை. அப்படியே தோன்றினாலும் அந்த நிறுவனங்கள் உலகம் முழுதும் பரந்த ஒரு Brand Name ஐ ஏற்படுத்த தவறுகின்றன. நல்லதொரு கண்டுபிடிப்பு மனதில் உருவானால், அதை உலகம் பூராகவும் பயன்படுத்தும் ஒன்றாக மாற்றுவதற்கு நிறைய அர்ப்பணிப்பு அவசியம். அதற்குரிய நிர்வாக கட்டமைப்பு வசதிகள் வேண்டும். முதலில் நம்மில் நமக்கு நம்பிக்கை வரவேண்டும். முதன் முதலில் Graphical User Interface என்ற தொழில் நுட்பத்தை வடிவமைத்தது Xerox என்ற photocopy நிறுவனம் தான். ஆனால் அவர்களுக்கு அதை எப்படி உலகம் முழுதும் பாவிக்கும் கணணி தொழில்நுட்பமாக மாற்றவேண்டும் என்று தெரியவில்லை. Steve Jobs இன் கண்ணில் அது பட்டது. அவர் ஆராய்ச்சி கூடம் ஒன்றை அமைத்தார். அல்லும் பகலும் அதை நேர்த்திப்படுத்துவதிலேயே செலவழித்தார். சிலநாட்களில் Bill Gates இன் கண்களும் அதை கண்டு பிரகாசிக்க,  எண்பதுகளில் அந்த இரு இளைஞர்களும் ஆரம்பித்த கணணி முயற்சிகள் இன்றைக்கு உலகையே தன்வசப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அந்த இருவர் என்று இல்லை. அவர்கள் காலத்தில் பல இளைஞர்கள் அப்படி உருவானார்கள். அந்த இளைஞர்கள் எல்லோருக்கும் இரண்டு பொதுவான விஷயங்கள் இருந்தன. ஒன்று திறமை. இரண்டு அந்த திறமையை ஆராதிக்கும், வேண்டும் என்பதை எல்லாம் கொடுக்கும், அந்த திறமையை மேலும் மேலும் வளர்க்க உதவும் சமூக கட்டமைப்பு, அந்த Silicon Valley.

 

நம்மவருக்கு திறமை மிதமிஞ்சி இருக்கிறது. ஆனால் அதை சரியான திசையில் நெறிப்படுத்தி வளர்க்கும் ஒரு சமூக கட்டமைப்பு, ஒரு Sillicon Valley சூழல் எம்மிடம் இல்லை. Yarl IT Hub அந்த கட்டமைப்பை உருவாக்க உறுதி பூண்டிருக்கிறது. இது உருவாக்கும் கட்டமைப்பு, எதிர்காலத்தில் நம் இடத்திலே ஒரு தொழில்நுட்ப நிறுவனம் அமைய வழி சமைக்கும். அதை தொடர்ந்து இன்னொருவர் புதிதாக ஒன்றை உருவாக்குவார். அப்புறம் வேறு ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி இங்கு வந்து ஒரு நிறுவனம் அமைப்பார். ஒன்று இரண்டாகும். இரண்டு நான்காகும். நான்கு நாப்பது ஆகும். கூகிளும், ஆப்பிளும் ஆய்வு கூடங்களுக்கு எங்கள் இடத்தில் இடம் தேடும். இந்த கனவை உங்கள் ஒவ்வொருவரும் கண்டிருப்பீர்கள். நம்மோடு இன்று இல்லாதவர்களும் கண்டிருந்தார்கள். அந்த Social Epidemic நிச்சயம் நடக்கும். என்ன, சிலவேளை கொஞ்சம் காலம் பிடிக்கலாம் தான். என் காலத்தில் சிலவேளை அது நடக்காது. ஆனாலும் அது நடந்தே தீரும். என் தாத்தா எங்கள் வீட்டிலே ஒரு பிலாக்க்கன்று நட்ட பொது அவருக்கு வயது எண்பது. அவருக்கு அந்த மரத்து பழம் சாப்பிடுவதில் ஆசை இல்லை. தன் பேரன் பேத்திகள் சாப்பிடவேண்டும் என்று ஒரு அவா. நானும் நீங்களும் அவர் நட்ட மரத்து பிலாப்பழ சுளைகளை ருசி பார்த்தோம் இல்லையா. இப்போது நாங்கள் நடும் நேரம்.  முதல் மரத்தை நாம் நடுகிறோம். பழத்தை பற்றி பிறகு சிந்திக்கலாம். முதலில் மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றுவோம். திக்கொன்றும் திசையோன்றுமாக நடுவதற்கு பதிலாக, இணைந்து நட்டால் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது இலகு. Yarl IT HUB அதை தான் செய்ய முயல்கிறது.

2006-silicon-valley-guide

இரண்டாவது சவால் நம்மை நாமே ஒருங்கிணைப்பது. Silicon Valley எப்படி உருவானது என்று ஒரு கேள்வி இங்கே எழுகிறது. முன்னமேயே குறிப்பிட்ட படி, போரின் போது உலகம் முழுதும் பயணம் செய்து இருந்த அமரிக்க வீரர்கள், ஏனைய ஐரோப்பிய நாட்டவர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கு திரும்புகின்றனர். திரும்பும்போது அவர்கள் வெறுமனே பணத்தையோ ரணத்தையோ சுமந்து வரவில்லை. போரில் கண்ட அனுபவங்களை தாங்கி வந்தார்கள். போர்க்களத்தில் படித்த, புதுமையாக வித்தியாசமாக சிந்திந்து எதிரியை சரிக்கும் உத்தியை சுமந்து வந்தார்கள். அவற்றை தாம் வாழ்ந்த இடங்களில் சரியாக பயன்படுத்தினர். இலத்திரனியல், மராமத்து, மின்சார தொழில்நுட்பம் என்று எதிலும் புதுமையாக சிந்திக்க, சிந்தித்தவர்கள் ஒன்று கூட, அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட, ஒருவருக்குள் ஒருவர் உதவி செய்ய, அந்த யாரும் எதிர்பாராத social epidemy என்ற சமூக புரட்சி அந்த தேசத்தில் உருவானது. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த புரட்சிக்கு பெருந்தொகை பணமோ, கட்டடங்களோ தேவையாய் இருக்கவில்லை. புத்திஜீவிகளும், அங்கீகரிப்பும், அவர்கள் தேவை என்று நிமிரும்போது தோள் கொடுத்த சமூக நிறுவனங்களும் தான் தேவையாய் இருந்தது. சிந்தித்துப்பாருங்கள், இதை எம்மால் உருவாக்க முடியாதா? அகில இலங்கை ரீதியில் அடுத்தடுத்து முதலிடம் வருபவர்களை தூக்கி விட கசக்குமா என்ன? அப்புறம் ஏன் அதை யாழ்ப்பாணத்தில் செய்ய முடியவில்லை.  வாழ்வோடு வந்துகொண்டிருந்த போர் ஒரு முக்கிய காரணம் தான். ஆனால் இப்போது அதை தாண்டிய ஒரு சிக்கல் இருக்கிறது. யாழ்ப்பாணம் என்ற சமூகம் உலகம் முழுதும் பரந்து சிதறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய். ஆனாலும் இந்த இலத்திரன்களும் புரோட்டான்களும் உலகம் முழுவதும் சுற்றினாலும் எங்கள் மனசு எப்போதும் “யாழ்ப்பாணம்” என்ற நியூகிளியஸ் நோக்கி தான் இருக்கிறது என்பதை சொல்லவேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் ஏதோ செய்யவேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. எப்படி என்பது தெரியவில்லை. இங்கே தான் Yarl IT Hub இன் இணைப்புப்பாலம் உருவாகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கணித விற்பன்னர், பொறியியல் நிபுணர்கள், வியாபார காந்தங்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள், கணக்காளர்கள் மூலை முடுக்கெல்லாம் சாதனைகள் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் எத்தனை பேர் உலகம் முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் பெராசிரியர்களாக விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள் தெரியுமா? எண்ணில் அடங்காது.  கொஞ்சம் யோசித்து பாருங்கள்,  இவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து, யாழ்ப்பாண தளத்தில் இயங்கினால்? தங்கள் துறை சார்ந்த நிபுனத்துவத்தை உதவிகளை வழங்கினால்? யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு Herwlett, ஒரு Disney, ஒரு Bill Gates உருவாக உதவினால்? நினைக்கவே சிலிர்க்கிறது இல்லையா? அட நம்மால் முடியுமா? நாங்கள் தான் திக்கொன்று திசையொன்றாக இருக்கிறோமே?

 

ff_hackers2b_fஇங்கே தான் நாங்கள் யூத இனத்தை நினைவு கூருகிறோம். போரின் பின்னரான யூதர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய அரசாங்கங்களை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு ஒரு சமூக கூறாக வளர்ந்துவிட்டனர். ஆனால் யூதர்கள் எல்லோரும் இஸ்ரேலிலா இருக்கிறார்கள்? இல்லையே, அவர்கள் எல்லா கண்டங்களிலும் அந்தந்த சமூகங்களில் பிணைந்து போய்த்தானே இருக்கிறார்கள். ஒரு யூதன் எங்கே இருந்தாலும் தன திறமையை தன இனத்துக்கு பயன்படுத்தாமல் இருக்கமாட்டான். அந்த எண்ணத்தை நாம் நம்மில் உருவாக்க வேண்டும். யாழ் என்ற நாமம் எமது சமூக அடையாளம். அது அந்த பிரதேசத்தை மட்டும் குறிக்கவில்லை. நாம் தமிழர்கள் சார்ந்த கலாச்சாரத்தை குறிக்கிறது. இங்கே பெயர் என்பதை விட எம் சார்ந்த அடையாளமே முக்கியம். அதை நாங்கள் ஏற்படுத்தலாமே. யாழ்ப்பாணத்து Silicon Valley, உலகம் முழுவதும் வெர்ச்சுவல்(virtual) ஆக உருவாகட்டுமே. யாழின் அடையாளத்தில் இருந்து ஒரு கண்டு பிடிப்பு, ஒரே ஒரு கண்டு பிடிப்பு உலகம் முழுதும் பரவினால் கூட, அது நமக்கு தானே பெருமை. எங்கள் இளைஞர்களுக்கு உலகம் முழுதும் பல்கலைக்கழகங்களில் scholarship சந்தர்ப்பம் எடுத்து கொடுத்தால், அவர்கள் அங்கங்கே தங்கள் அடையாளங்களை பரப்ப, யாழ்ப்பாணத்து Silicon Valleyயை உலகமே திரும்பி பார்க்குமே! நாங்கள் ஒரு நேர்முகத்தேர்வுக்கும போகும்போது, யாழ் என்ற அடையாளத்தை பெருமையுடன் சொல்லும் சந்தர்ப்பம் உருவாகட்டுமே! Mountain View, Cupertino போன்ற நகரங்களின் பெயர்கள் எல்லாம் எப்படி எங்களுக்கு தெரியவந்தன? Mountain View வில் ஆரம்பித்து San Francisco , Los Angeles என பல நகரங்களும் பிரபலமாகி இன்றைக்கு கலிபோர்னியா என்ற ஒரு மாநிலம் அமெரிக்காவில் நிமிர்ந்து நிற்கிறது என்றால், எல்லாமே Silicon Valley யில் இருந்து ஆரம்பித்தது தான். Are you getting it? முதலில் யாழ்ப்பாணத்தை நாம் Silicon Valleyயாக மாற்றுவோம். ஏனைய மாற்றங்கள் தன்னாலே நடைபெறும்!

 

IMG_0628

இது முடியுமா? நமக்கு இயலுமா? இது நாள் வரை வாளாவிருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த கூச்சல் என்ற அவநம்பிக்கைகளை புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் ஒரு விஷயம். எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும். There is always a beginning. அந்த ஆரம்பம் தான் இது. ஏன் இது இத்தனை காலங்கள் செய்யவில்லை? என்று ஒரு கேள்வி. எப்படி அது முடியும்? Survival என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த பொது சாதிப்பது எப்படி? ஆனால் நாம் இப்போது இருக்கும் நிலையில் ஏதாவது சாதித்தால் தான் survive பண்ணவே முடியும்!  நாங்கள் சாதிக்க போகிறோம். சாதிக்கபோகிறவர்களை ஆராதிக்கப்போகிறோம். நீங்களும் இணைகிறீர்கள். இணைந்து  சாதிப்போம்.

 

இந்த பதிவு Yarl IT Hub இன் தூரநோக்கை தெளிவுபடுத்தும் ஒரு ஆக்கம். இதன் அமைப்பு கட்டமைப்பு, குறுகிய கால வேலைத்திட்டங்கள், குழுக்கள், என்னனென்ன செய்ய போகிறோம், இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக எழுத போகிறோம். எழுதும்போதே நீங்களும்  இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் இப்படியான சிந்தனையோட்டம் இருக்கும். சேர்ந்து செய்வதற்கு கலந்து ஆலோசிப்போம். Yarl IT Hub ஒன்றும் Microsoft, Apple, IBM போன்ற வியாபார நிறுவனம் கிடையாது. முன்னமேயே சொன்ன மாதிரி இந்த மாதிரி நிறுவனங்கள் அமைவதற்கு களம் அமைத்து கொடுக்கும் ஒரு Hub. இதன் இலாப நோக்கம் எது என்றால் யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley அமைப்பதே. அந்த இலாபத்தை அடைவதற்கு உங்களையும் அழைக்கிறோம்.

 

நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி! - என்னைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ!

 

Yarl IT Hub - Our Vision
Yarl IT Hub - Our Values
After all, why Jaffna?

தொடர்புகளுக்கு

http://www.facebook.com/pages/Yarl-It-Hub/218986791503185