Skip to main content

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்


திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம்
ஆல் இந்திய ரேடியோ
தூத்துக்குடி வானொலி நிலையம்
நேரம் இரவு எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்
திரைத்தென்றல்!

உங்களில் எத்தனை பேருக்கு இந்த அறிவிப்பு ஞாபகம் இருக்கிறது? அட நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவரா? தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு குட்டி ரேடியோவுடன் அலைந்தவரா? தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சி கேட்காமல் இரவு சாப்பாடு உங்களுக்கும் நிச்சயம் இறங்கி இருக்காது. என்னை மீண்டும் 90களின் அந்த இனிமையான நாட்களுக்கு அழைத்துச்செல்ல இன்றைக்கு முயல்கிறேன்! நீங்களும் வருகிறீர்களா?

ஒவ்வொரு நாள் இரவும் ஆறு மணிக்கு கை கால் முகம் கழுவி படிப்பதற்கு மேசைக்கு போகவேண்டும். அது வீட்டில் எழுதப்படாத சட்டம். நான் படிப்பது சிவபெருமான் புட்டுக்கு அணை கட்டியது போல தான். தொடர்ந்தாப்போல் அரை மணித்தியாலம் கூட என்னால் இருந்து படிக்க முடியாது. அந்த நேரம் தான் தண்ணீர் விடாய் வரும். சாமி கும்பிட தோன்றும். பாத்ரூம் போகவேண்டும் போல இருக்கும். பேனா மக்கர் பண்ணும. பென்சில் கூர் தீட்ட வேண்டி இருக்கும். ஆனால் அம்மா எவ்வளவு கேட்டாலும் சாப்பிட மட்டும் போக மாட்டேன். அதற்கு எட்டரை ஆக வேண்டும். ஆம் எட்டரை!

இந்த பாட்டு திரைத்தென்றலில் ஒலிபரப்பானால் எங்களுக்கு அன்று தீபாவளி தான். இந்த பாட்டு எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எப்படி சொல்வது? ம்ம்ம் நீங்கள் ஒரு பெண்ணை பார்த்து பார்த்து காதலிக்கிறீர்கள். ஆனால் கேட்க தயக்கம். ஒருநாள் தயக்கத்தை விட்டுவிட்டு கேட்டே விட்டீர்கள். அவள் முகம் நெருப்பு எடுக்கிறது. மாட்டேன் என்கிறாள்.  நீங்களும் கேட்டுவிட்டு ஆடிப்போய் அங்கேயே உட்காருகிறீர்கள். ஐந்து நிமிடம் இருக்குமா?  பின்னால் இருந்து ஒரு கை மிருதுவாக தோளில் ஆதரவாய் விழுகிறது. திரும்பினால் அவள் தலையை இடப்பக்கமாக சரித்து மெலிதாக புன்னகைக்கிறாள். எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படி இருக்கும் எனக்கு திரைத்தேன்றலில் இந்த பாடல் ஒலிபரப்பும் போதெல்லாம். என்ன, இப்போதெல்லாம் திரைத்தென்றல் நிகழ்ச்சியே நின்று விட்டது!

மணி சரியாக எட்டரை அடிக்கும்போது அம்மா பசிக்குது என்பேன். அம்மா சிரித்துக்கொண்டே எல்லோரையும் சாப்பிட அழைப்பாள். எட்டரைக்கு வெரித்தாஸ் வானொலி கேட்க தொடங்குவோம். ஜெகத்கஸ்பார் ஈழத்தமிழருக்காய் மணிலாவில் இருந்து உருகோ உருகென்று உருகுவார். அக்கா மிக சீரியஸ் ஆக கேட்டுக்கொண்டு இருப்பாள். எனக்கு எப்போதடா எட்டே முக்கால் ஆகும் என்று இருக்கும்.

Narasimhan-Photoஇந்த பாடல் பாசமலர்கள் படம். அழகான மெலடி. V.S.நரசிம்மன் இசை. பிரபலமான வயலின் வித்துவான். “ஆவாரம்பூவு ஆறேழு நாளா” என்று சுசீலா பாடிய பாடல். ஞாபகம் இருக்கிறதா? இசை ராஜா என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை, இவர் தான் இசை. அட இது எதுக்கு, “How to name it” என்ற ராஜாவின் master piece க்கு வயலின் வாசித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் நரசிம்மனே! Beautiful Song!
மனிதன் கொண்ட காதல் மட்டும் மறைத்து வைப்பதென்ன?
மழைகாற்றில் ஆடும்தளிர் போல் மனம் துடிப்பது என்ன?

அடடா  முக்கியமான விஷயம் நாங்கள் எப்படி ரேடியோ கேட்பது என்பது தான். ஒரு சின்ன mono cassette ரேடியோ, சிவப்பு கலர் Panasonic, ஆறு பாட்டரிகள் போடவேண்டும். அட கடுப்பு ஏத்தாதீங்க. 94ம் ஆண்டு பகுதியில் பாட்டரிக்கு எங்கே போவது? குட்டியின் அண்ணா தான் எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்தார். சைக்கிள் டைனமோவையும், ஒரு பழைய சைக்கிள் ரிம்மையும், பாவித்து மரவேலை செய்பவரிடம் சொல்லி ஒரு சின்ன வீல் டைனமோ சரி செய்து தந்திருந்தார். கதிரையில் இருந்தவாறே, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பாட்டின் தாளத்துக்கு ஏற்ப மிதிக்கலாம். கொஞ்சம் வேகமாக மிதித்தால் சத்தம் கூட கேட்கும். மெதுவானால் சுஜாதா காதுக்குள் தான் கிசுகிசுப்பார். என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் பாருங்கள்!

தூத்துக்குடி வானொலி நிலையத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஒரு விதமான மெலடி ரசிகர்கள். அவர்கள் ஒலிபரப்பும் பாடல்கள் எல்லாமே தனிரகம். இந்த பாடல் எல்லாம் திரைத்தென்றல் இல்லாமல் போயிருந்தால் எப்படி கேட்டு இருப்பேனோ தெரியாது. “மணிரத்னம்” தான் படத்தின் பெயர். யார் இசை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் பாடல் சூப்பர்!

அக்கா  இண்டைக்கு  என்ன பாட்டு போடுவினம்?
அதானே கொஞ்ச நேரத்தில கேட்க போறாய்?
Bet பிடிப்பமா?
சும்மா போடா?
நான் சொல்றன் “கொஞ்சி கொஞ்சி” தான்
சான்ஸே இல்ல, போன கிழமை தான் போட்டவங்கள், இண்டைக்கு “அஞ்சலி அஞ்சலி” தான்
என்ன bet?
தோத்தா நாளைக்கு நீ தான் டைனமோ மிதிக்கோணும்
இல்லாட்டி நீ .. சரியா?
பார்ப்பம்

நானும் அக்காவும் அடுத்த பாடல் எது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நேரம் தான் ஒருமுறை இந்த பாடல் ஒலிபரப்பானது. மனோ ஜானகி பாடிய இன்னொரு gem என்று சொல்லலாம். மனோவின் குரல் அப்படியே தாலாட்டும். இன்றைக்கு youtube இல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!  விடுவோமா? இப்போது ஏத்தியாச்சு! ராஜா ரசிகர்களே, எனக்கு கோயில் கட்டி கும்பிடுங்கள்!!
கூட வரும் நிழல் வேறு எது? கொண்டவளை போல இங்கே?
இந்த நிழல் இருட்டினிலும் பின் தொடர்ந்து ஓடி வரும்

இந்த பாடல் 94 கால பகுதியில் சும்மா ஒரு கலக்கு கலக்கியது. ராஜாவின் comeback படம் என்று வீராவையும் சிறைச்சாலையையும் குறிப்பிடுவார்கள்(ராஜாவுக்கு comeback தேவையில்லை என்பது அப்போது எனக்கு புரியவில்லை). தளபதிக்கு கூட நான்கு தடவை தான் ரீரெகார்டிங் செய்த ராஜா இந்த படத்துக்கு இருபத்தெட்டு முறை ரீரெகார்டிங் செய்ததாக இந்திய டுடே பத்திரிகையில் இந்த படம் சம்பந்தமாக ராஜாவில் கவர் ஸ்டோரி வந்து நாம் திரும்ப திரும்ப வாசித்த ஞாபகம். SPB அநாயசமாக பாடி அசத்தி இருப்பார்.

கொஞ்சி கொஞ்சி பாட்டுக்கும் அஞ்சலி அஞ்சலி பாட்டுக்கும் அந்த காலகட்டத்து ரஜனி-கமல் ரேஞ்சுக்கு போட்டி இருந்தது. “பவர் தரும் ஒலிச்சுடர்” என்று நடராஜசிவம், இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களாக கொஞ்சி கொஞ்சி முதல் இடத்திலும், அஞ்சலி அஞ்சலி இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஒரு நாள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் “ஊர்வசி ஊர்வசி” பாட்டு இந்த பாட்டை புறம்தள்ளி முதல் இடத்தை பெற்றது. கேட்டுக்கொண்டு இருக்கும் பொது எனக்கு ஒரே படபடப்பு. வீட்டில் வேறு அக்கா இல்லை. எனக்கும் ரியுஷனுக்கு நேரமாகியிருந்தது. யாரிடமாவது சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். வேறு வழியில்லாமல். ஒரு பேப்பரில் விலாவாரியாக “ஊர்வசி ஊர்வசி” முதலிடம் வந்த செய்தியை கடிதம் போல எழுதி மேசையில் வைத்து விட்டே நான் புறப்பட்டேன். அக்கா மறந்திருக்கும். போன் பண்ணி இந்த பதிவை வாசிக்க சொல்லவேண்டும்! அது ஒரு கனாக்காலம். இந்த பாட்டு அடிக்கடி திரைத்தென்றல் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள். அந்த சுரம் வரும் இடத்தில் நானும் சேர்ந்து சுரம் பிடிக்க, அக்கா சொல்லும்.

“டேய் போடுறதே மூண்டு பாட்டடா, அதில நீ வேற பாடிக்கொல்லாத!”

சாப்பிட்டு முடிந்து கோப்பை காய்ந்து போயிருக்கும். அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் திரைத்தென்றல் முடியும் மட்டும் ஒரு அடி நகரமாட்டோம். நிறைய பாடல்கள் இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகம் ஆகி இருக்கிறது. 90களின் இறுதிகளில் திரைத்தென்றல் அதன் சோபை இழந்து கொண்டு இருந்தது. FM வருகை, விரும்பிய பாடலை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற நிலை வந்தாலும் கூட, மின்சாரம் இல்லாத அந்த நிசப்த நாட்களில், டைனமோவின் கிறீச்சிட்ட சத்தத்துடன் கேட்ட அந்த பாடல்களின் சுகம் எனக்கு பின்பு கிடைத்ததா என்பது சந்தேகமே. இன்றைக்கு வீடு முழுதும் அதிரும், நுண்ணிய ஒலிகள் கூட கேட்கும்படியான Home Theatre System வீட்டில் இருக்கிறது. எனக்கென்னவோ குட்டியின் அண்ணா தந்த அந்த டைனமோ வீலில் மிதித்து கேட்கும் திரைத்தென்றல் தான் வேண்டும் என்கிறது. கிடைக்குமா?

இதுவரை ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ தொடரில்!
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “மேகம் இடம் மாறும்போது!!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “சின்ன குயிலின் சோகம்!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “கொச்சின் மாடப்புறா!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “நிலவும் மலரும் பாடுது”

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக