கனகரத்தினம் மாஸ்டர்!

 

“Bloody Indians...!”

கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால் பெட்டியில் போட்டிருந்த விளம்பர பத்திரிகைகளை எடுத்து சுருட்டிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினார்.  கால்கள் நடுங்கின. அவன் அழைத்த தோரணையே மிரட்டலாக இருந்தது.

“Hey Mister, Come here ..”

ச்சே சனியனுக்கு நாற்பத்தைந்து தாண்டியிருக்குமா? நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத பிரவுன் தாடி. பியரும் சிகரட்டும் இன்னமும் நாசியில் அடித்தது.  அவனும் அவனின்ட கலிசானும். நீலமும் பிரவுனுமாய் பெயிண்ட், மேலுக்கு பனியன் மட்டும். அதுவும் கிழிந்திருந்தது. பிச்சைக்காரன். கையில் டிரில்லர் மெசினை வைச்சுக்கொண்டு படம் காட்டிறானா? மாஸ்டருக்கு மீண்டும் மீண்டும் மண்டைக்குள் நடந்தது ஓடிக்கொண்டிருந்தது.

“Yes Sir….”

“How long you been doing this?”

“Five Years Sir”

“Five years! You know English? Read this?”

மாஸ்டர் அவன் வீட்டு தபால் பெட்டியில் ஒட்டியிருந்ததை வாசிக்கிறார். குரல் நடுங்குகிறது.

“’No Junk Mail’ Sir .... Sorry Sir I did not notice it”

“Get outta here, ever you put your rubbish again, I will complain next time...”

“Really Sorry Sir, I will not put again.”

“Get lost …”

இதே மெல்போர்ன் தாமஸ் டவுனில் இருக்கும் அலெக்ஸாண்டர் அவெனியுவில் தான் ஐந்து ஆண்டுகளாக மாஸ்டர் பேப்பர் போடுகிறார். இவ்வளவு காலமும் இந்த இத்தாலிக்காரன் தபால் பெட்டியில் “No Junk Mail” என்ற ஸ்டிக்கர் இருக்கவில்லை. இந்த வாரம் தான் ஒட்டியிருக்கிறான், ஏனோ மாஸ்டரும் கவனிக்கவில்லை.

வாரம் ஒரு முறை விளம்பர பத்திரிகைகளை வீடு வீடாக சென்று போடவேண்டும். பத்திரிகைகள் பலவிதம், பல சைஸ்கள். கோல்ஸ் சூப்பர்மார்க்கட்டில் ஆப்பிள் ஒரு கிலோ இரண்டு டாலர். பெண்களுக்கு மட்டும் நெயில் பாலிஷ் செய்து விட இருபது டாலர். வெள்ளைத்தாளில் பத்து வெள்ளைக்காரிகள் வித விதமான பிராக்களில் ஒய்யாரமாய், பத்து டாலரில் இருந்து நூறு டாலர் வரை மலிவு விலை. வாலண்டைன்ஸ்டேக்கு மூன்று மோதிரம் ஒன்றாக வாங்கினால் டிஸ்கவுன்ட். லேலூரில் புதிதாக தொடங்கிய இந்தியன் ரெஸ்டாரண்டில் சில்லி பாராட்டா ஆறு டாலர். இப்படி வாரத்துக்கு சுமார் பத்து விளம்பர பத்திரிகைகள். இருநூற்றைம்பது வீடுகள். போட்டால் நாற்பது டாலர் வரை. கையில் காசு வாங்கினால் டாக்ஸ் ஏய்க்கலாம். விடுமுறை சீசன் என்றால் பத்து இருபது டாலர்கள் அதிகமாகலாம். மாதத்துக்கு 200 டாலர்கள். வருடத்துக்கு 2400 டாலர்கள். மாஸ்டர் ஐந்து வருடத்தில் 10,000 டாலர் வரை சேர்த்துவிட்டார். இலங்கை காசுக்கு பன்னிரெண்டு லட்சம் ரூபாய்கள். அவரின் இருபது வருட இலங்கை சம்பளம்.

மாஸ்டரின் எண்ணம் சிந்தனை எல்லாம், சொந்த ஊரான வட்டக்கச்சிக்கு திரும்பிச்சென்று அங்கே சின்னதாக முருகன் கோயில் ஒன்று கட்டவேண்டும். கும்பாபிஷேகத்துக்கு பஞ்சமூர்த்தி எந்த நாட்டில் இருந்தாலும் அழைத்து நாதஸ்வர கச்சேரி நடத்தவேண்டும். ஹட்சன் ரோட்டில் காணியும் பார்த்துவிட்டார். புண்ணியமூர்த்தி தான் கோவியருக்கு தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். இயக்கமும் இப்போது இல்லை. எப்பிடியாவது தாடிக்காரரை பிடித்து காணியை ஒப்பேற்றி விடவேண்டும். இன்னமும் ஐந்து வருடங்கள் ப்ளடி இந்தியனாக பல்லைக்கடிக்கவேண்டும். 

தலை குனிந்து கொண்டே அடுத்த வீட்டுக்கு நகர்ந்தார். வீட்டுக்காரன் சீக்கியன். லாரி வைத்திருக்கிறான். கூரியர் சர்வீஸ் செய்வான். வீட்டில் ஏழு பேர்கள். பெரிய குடும்பம். வெயில் நேரம் பேப்பர் போட போகும் நேரங்களில் சிலவேளை கோக் கொடுப்பான்.

“Don’t worry Kana, he is an Idiot”

“No .. it’s ok, it was my mistake anyway”

“That bastard is also a refugee from Italy. Credit card forger! Retard ..”

கனகரத்தினம் மாஸ்டருக்கு சுருக்கென்றது. சீக்கியன் தன்னையும் அகதி என்று குத்தாமல் குத்துகிறான் என்று புரிந்தது. சிரித்தபடியே அப்பாலே நகருகிறார்.

மாஸ்டரின் ஊர் வட்டக்கச்சி. ஏழு மணிக்கு சைக்கிள் எடுத்தால், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் எட்டு மணிக்கு நிற்பார். இங்கிலீஷ் மாஸ்டர். இங்கிலீஷை இங்கிலீஷிலேயே படிப்பிப்பார். வீட்டில் Chapman grammar புத்தகத்துக்கென்று தனி டியூஷன் சொல்லிக்கொடுப்பார். செவ்வாய்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு வகுப்பு. மாதத்துக்கு பீஸ் பத்து ரூபாய். எட்டு மாணவர்களுக்கு நான்கு மாணவிகள். மகள் தாரிணிக்கு, ஆங்கில இலக்கியம் தனியாக பார்த்து பார்த்து படிப்பித்தார்.

“…But in your perishing you will shine brightly, fired by the strength of the God who brought you to this land and for some special purpose gave you dominion over this land and over the red man”

ஏனப்பா கடவுள் இவங்கள அம்போ எண்டு விட்டிட்டு அவங்களுக்கு மட்டும் அதிகாரத்தையும் ஆதரவையும் குடுத்தவர்? பாவம்பா!

Only English!

Why god give power and support to them and …

What …?

..தெரியலைப்பா ... எப்பிடி இங்க்லீஷ்ல கேட்கிறதெண்டு…!

Why did god give the power and support only to them and let us down? -- மாஸ்டர் திருத்தினார்

..Why did... -- தாரணி திருப்பிச்சொல்ல மாஸ்டர் பதில் சொல்லாமல் தொடர்ந்து சொன்னார்..

“That destiny is a mystery to us, for we do not understand when the buffalos are all slaughtered, the wild horses are tamed, the secret corners of the forest heavy with the scent of many men, and the view of the ripe hills blotted by talking wires. Where is the thicket? Gone. Where is the eagle ? Gone. The end of living and beginning of survival”

மகள் ”மிஸ்டரி” என்று வாசிக்கும் போது “மிஸ்ட்ரி” என்று உச்சரிப்பு திருத்துவார். தாரணி படிப்பில் படு சுட்டி. ஒஎல் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே தனியொருத்தியாக ஆங்கில இலக்கியத்தில் அதிவிசேட சித்தி எடுத்தாள். ஆனால் ரிசல்ட் வருவதற்கு முதலேயே அவள் இயக்கத்தில். முன்னேறிப்பாய்ச்சல் அடிபாட்டில் செத்துப்போய் ஒரு கை இல்லாத தாரணியின் பிரேதத்தை பார்த்த மாஸ்டர் ரொம்பவே ஆடிப்போனார். அடுத்தவாரமே ஆறு ஏக்கர் வயல் காணியை விற்று மகன் ரமேஷை ஆஸ்திரேலியா அனுப்பிவிட்டார். கையோடு பென்ஷன் பேப்பரை குடுத்துவிட்டு சைவபழமானார்.  கூற்றாயினவாறு விலக்ககளீர் என்று வெள்ளிக்கிழமையானால் வட்டக்கச்சி  முருகன் கோயிலில் அழுதார்.

MYSCAN_20100420_0018[2]இது நடந்து ஏழு எட்டு வருஷங்கள் கடந்திருக்கும். ஒருநாள் திருவெம்பாவை பஜனை முடிந்து கோயில் கழுவிக்கொண்டு இருக்கும்போது தான் ரமேஷின் கடிதம் வந்தது.

அன்புள்ள அப்பாவுக்கு,

நான் நல்ல சுகம். நீங்கள் எப்படி இருக்கிறீங்க?

நிற்க, எனக்கு சிட்டிசன் கிடைத்துவிட்டது. இனி உங்களுக்கு விசா ஈசியாக எடுக்கலாம். உடனடியாக கொழும்பு வந்து பாஸ்போர்ட் அப்ளை பண்ணுங்கள். இங்கு வந்தவுடன் ஒரு லாயரை பிடித்து அகதி விசா குத்தி விடலாம். நீங்கள் உழைப்பதை விட ஐந்து மடங்கு காசு சும்மா இருப்பதற்கு வெள்ளைக்காரன் தருவான். உங்களை விட்டு என்னாலும் இனி பிரிந்து இருக்க முடியாது.

ஆ, மறந்துவிட்டேன். மேகலா மூண்டு மாசமா சுகமில்லாமல் இருக்கிறாள். புதிதாக வீடு ஒன்றும் வாங்கி இருக்கிறோம். நீங்கள் வந்தால் வசதியாக தங்கலாம்.

உங்கள் நலம் நாடும்,

அன்பு மகன்,

ரமேஷ்

பேரப்பிள்ளை பிறக்கப்போவது தெரிந்தது முதல் முத்துநாயகிக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா போவதென்றால் வீட்டை யாரிடம் பொறுப்பு கொடுப்பது? பள்ளன் சண்முகத்திடம் கொடுப்பதில் மாஸ்டருக்கு துளியும் இஷ்டமில்லை. அப்படியே விட்டுவிட்டுப் போனால் இயக்கம் வேறு குடும்பங்களை இருத்திவிடும். சாதியில் வேறு ஆட்களையும் பிடிக்கமுடியவில்லை. இறுதியில் சண்முகத்துக்கே கொடுக்க அக்ரீமன்ட் போட்டார். ஆறுமாசத்துக்கு ஒரு முறை வேலி அடைக்கவேண்டும். ஐந்து கள்ளுத்தென்னைக்கும் தோப்பு தேங்காய்க்கும், வாடகைக்குமாய் சேர்த்து எண்ணூறு ரூபா பாங்க் அக்கவுண்ட்டில் போட வேண்டும். பாஸ் எடுத்து கொழும்பு புறப்பட்டாச்சு.

ஆறு மாசத்தில் பிடிக்காவிட்டால் திரும்பலாம் என்று தான் மாஸ்டர் முதலில நினைத்தார். ஆஸ்திரேலியா வந்து பார்த்தால், நாற்பது நாட்களுக்குள் கேஸ் போட்டால் தான் அகதி அந்தஸ்து கிடைக்குமாம், வந்த இரண்டாம் மாசத்திலேயே மாஸ்டரும் மனைவியும் அந்தஸ்துள்ள அகதிகளானார்கள். சென்டர்லிங்க் காசும் கொஞ்ச நாட்களிலேயே கிடைக்க,  பேத்தி வானதியும் பிறக்க, முத்துநாயகிக்கும் ஆஸி பிடித்துபோயிற்று. ரமேஷும் மேகலாவும் வேறு மாய்ந்து மாய்ந்து கவனித்தார்கள். ஆஸி காட்டினார்கள். மாஸ்டரும் வந்தது தான் வந்தோம், ஒரு ஐந்து வருடம் இருந்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு நிம்மதியாக கடைசிக்காலத்தை வட்டக்கச்சிக்கு போய் கழிக்கலாம் என்று கணக்குப்போட்டார்.

எல்லாமே இரண்டு வருஷங்கள் தான். ஒரு நாள் பின்னேரம் தேத்தண்ணி குடிக்கும் போது ரமேஷ்.

அப்பா உங்களிட்ட ஒண்டு …

சொல்லு?

வானதிய டே கெயாரில விடப்போறம்

ஏண்டா? நானும் அம்மாவும் பார்க்க மாட்டமா?

அதான் அப்பா! வானதிக்கு ஆஸ்ஸி ஸ்லாங் வருகுதில்ல, நீங்களும் அம்மாவும் வீட்டில, அவளும் யாழ்ப்பாண தமிழ் கதைச்சுக்கொண்டு இருக்கிறாள்,

அவள் தமிழ் கதைக்கிறது நல்லம் தானே!

மற்ற பிள்ளையள் இங்க்லீஷ் கதைக்குதுகள். உங்கட இங்க்ளிஷும் ஸ்ரீலங்கன் இங்க்லீஷ்! அதான் டே கேயாரில விட்டிட்டு வேலை முடியும் போது நானோ மேகலாவோ கூட்டி வரப்போறோம்

நாங்க தனியா இருக்கிறதா?

கஷ்டம் அப்பா, நீங்களும் அம்மாவும் ஏன் இங்க தனிய இருந்து குளிருக்க கஷ்டபடுறியள்? பேசாம வட்டக்கச்சிக்கே திரும்ப போயிடுங்களேன்?

மேகலாண்ட ஐடியாவா இது?

அவளை ஏன் இதுக்க இழுக்கிறீங்க? நான் தான் … உங்கட நல்லதுக்கு தான் சொல்றன்

நீ வா எண்ட போது வரோணும், போ எண்ட போது போணுமா?

பிழையா நினைக்கிறீங்க அப்பா..

தெரியும்டா, நீ சுயநலம் பிடிச்சவன்! வரேக்கையே தெரியும். இப்ப காரியம் ஆனோன காய் வெட்டுறாய், உன்னை நம்பி வந்தம் பார், செருப்பால அடிக்கணும்

சும்மா என்னையே சொல்லாதீங்க, ரண்டு பேருக்கும் கவர்மன்ட் இவ்வளவு காசு தருதே, எனக்கு கொஞ்சமாவது தந்தீங்களா? பொத்தி பொத்தி எல்லாம் வட்டக்கச்சிக்கு போறது எனக்கு தெரியாதா?

நீ தான் வேண்டாம் எண்டு சொன்னியேடா?

சொன்னா? உங்களுக்கு எங்க மதி போச்சு?

இது நீ பேசற பேச்சா தெரியேல்ல? மேகலா தான் ஓதி இருக்கிறாள். கைக்குளர் பெட்டைய சொல்வழி கேளாம கட்டேக்கைய சொன்னனான். நாய் தன்ர குணத்த காட்டீட்டுது.

மாஸ்டர் கோபத்தில் பேசிக்கொண்டிருக்க ரமேஷ் ஆத்திரத்தில் திருப்பிக்கத்தினான்.

You Bloody ..… ? இதுக்கு மேல ஒரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேசினா, அப்பன் எண்ட மரியாதை கிடைக்காது சொல்லிட்டன்

மகன் சொன்னபோது கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். உடனடியாகவே வாடகைக்கு ஒரு வீடு பார்த்தார். வாரம் முன்னூறு டாலர்கள் என்றார்கள். மனுஷன் அசரவில்லை. ரூம் ஒன்றை வாரம் நூறு டாலர்களுக்கு வாடகைக்கு விட்டார். ரூமில் இருப்பவனுக்கு மூன்று நேர சாப்பாடு. அதில் அறுபது டாலர்கள். வாடகையை சமாளித்தாகிவிட்டது. நண்பர் ஒருவரை பிடித்து மொழிபெயர்ப்பாளர் வேலை எடுத்தார். அலெக்ஸாண்டர் அவேனியுவில் பேப்பர் போட்டார். ரமேஷின் பேச்சை கேட்டு திரும்பிப்போவதில் அவருக்கு ஆர்வம் இல்லை. என்ன ஆனாலும் வட்டக்கச்சியில் தன் பெயரில் முருகன் கோயில் கட்டாமல் திரும்பி ஊரில் காலடி வைப்பதில்லை. ஐந்தே ஐந்து வருடங்கள் தான். கட்டிவிடலாம்.

கடைசி வீட்டிற்கும் பேப்பர் போட்டுவிட்டு கனகரத்தினம் காருக்கு வந்தார். கார் லாக் செய்யப்படாமலேயே இருந்தது. உள்ளே ஏறி ஸ்டார்ட் செய்தார். கார் கர்ரேன்று உறுமியபடியே புறப்பட்டது. ஏன் என்று புரியாமலேயே மெயின் ரோட்டுக்கு காரை திருப்பினார். தாமஸ் டவுன் தாண்டிய பின்பும் கர்கர் சத்தம் நின்றபாடில்லை. என்னடா இது என்று டாஷ் போர்டை சுற்றும் முற்றும் பார்த்தார். ம்ஹூம். கொஞ்சம் கீழே பார்த்தபோது தான் ஹாண்ட் ப்ரேக் ரிலீஸ் பண்ணப்படவில்லை. மாஸ்டர் அவசர அவசரமாக பிரேக்கை ரிலீஸ் பண்ணும்போது, கார் லேன் மாறி இடது பக்க லேனுக்குள் நுழைந்ததை கவனிக்கவில்லை. திடீரென்று பின்னால் இருந்த கார் மிகப் பயங்கரமாக ஹாரன் அடித்தது. அதிர்ச்சியில் மீண்டும் கவனிக்காமல் லேன் மாற்றினார்.

“You Bloody Indian …. watch out your !@#$ing  dick .. you Idiot!”

ஹாரன் அடித்த காரில் இருந்து ஒருவன் இவரை பார்த்து திட்ட, மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக கார் கண்ணாடிகளை ஏற்றினார். அவமானம் தாங்கமுடியவில்லை. நான் இந்தியன் இல்லை என்று கத்தவேண்டும் போன்று இருந்தது. அவன் So What? என்று கேட்பான். என்ன பதில் சொல்வது? இது இன்றைக்கு மட்டும் இரண்டாம் தடவை. முதலில் இத்தாலிக்காரன். இப்போது இவன். ஏன் இந்த நாட்டில் இப்படி முகம் தெரியாதவனிடம் கூட ஏச்சு வாங்க வேண்டி இருக்கிறது? வட்டக்கச்சியில் இவர் சைக்கிள் தூரத்தில் வந்தாலே போதும். மாணவர்கள் எல்லோரும் தங்கள் சைக்கிள்களில் இருந்து இறங்கி வணக்கம் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அடுத்தநாள் பாடசாலையில் அவர்களுக்கெல்லாம் முள்ளங்கால் தான். இப்போது பெற்ற மகனுக்கே ப்ளடி ஆகியாயிற்று. வெள்ளைக்காரனுக்கென்ன?

கனகரத்தினத்தின் கார் கராஜில் நுழைந்த போது முத்துநாயகி வாசலிலேயே காத்திருந்தாள்.

இஞ்சருங்க, பின்னேரம் வானதியை பார்க்க போகோணும்

இண்டைக்கு ஏலாது

அவளுக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லையாம், மேகலா தான் கால் பண்ணி சொன்னவள்

அவையளுக்கு தேவை எண்டா வாறதுக்கும் தேவையில்லை எண்டா போறதுக்கும் நாங்க என்ன …

மாஸ்டர் சொல்லவந்ததை நிறுத்தினார்.

காலம தானே போவம் எண்டு சொன்னீங்களே, ஏன் நேரத்துக்கு ஒரு கதை கதைக்கிறீங்க?

என்ன நீ வர வர கனக்க கதைக்கிற .. You bloody bitch..…

மாஸ்டர் ஆவேசமாக திட்டும்போது முத்துநாயகி அவமானத்தில் கூனிக்குறுகிப்போனாள்!

--------------------------------------------------------- முற்றும் ---------------------------------------------------------------


63 comments :

 1. இன்றைக்கு வாசித்ததில் மிகவும் அருமையான சிறுகதை. அதுவும் வசனங்களிற்கும், மேற்கோள் வசனங்களிற்கும் தனி நிறம் கொடுத்திருப்பது இன்னும் அழகு. மிக நன்றி.

  ReplyDelete
 2. போட்டில அடிச்சு பொறி கலங்கோணும் - வாசிக்க வேண்டியவை வாசிச்சா - வாசிப்பினமோ தெரியேல்லையே......

  ReplyDelete
 3. நல்ல கதை. இதில ஏகத்துக்கும் பல சாதிகளை இழுத்திருக்கிரியல். சாதிகளே இல்லை, அந்த மாயையை அகற்றவேண்டும் என்ற உலகத்தில், உள்ளூர் சாதிகளை இழுத்தது, வெளிநாட்டிலும் நம்மளை ஒருவன் சாதிகாட்டி ஒதுக்குவான் என மக்களுக்கு போதிக்க என்றால், கொஞ்சம் ஊரில இருக்கிற நல்ல சாதிகளையும் இழுத்திருக்கலாம் என நினைக்கிறான். அல்லது, இவ்வாறான நோக்கம் அற்றது எனின், வருந்த தக்கது.

  ReplyDelete
 4. சாதிகளை இதில் கொண்டு வந்தமைக்கு என்னுடைய கடுமையான எதிர்பை தெரிவித்துக் கொள்வதுடன் இதனை உடனடியாக அகற்றவும் ஒரு சராசரி யாழ்ப்பாணத்தான் எண்டதை காட்டி விட்டீர்கள்.

  ReplyDelete
 5. அட சனியனே அங்க போயும் உன்ர சாதிப்புத்தி ஒழிய வில்லையா? ...........ஏனடா எங்கட யாழ்ப்பாணத்து மானத்தை வாங்கிறீன்கள் பெயரை வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை எண்டு வச்சுக்கொண்டு மூதேசி நாய்!

  ReplyDelete
 6. ஒரு நல்ல கதை சாதிகளின் பெயர்கள் காரணமாக சாக்கடையாக மாறியுள்ளது இது போன்ற கதைகளை இணைய நிர்வாகம் பிரசுரிக்கும் போது கூடிய கவனம் எடுக்க வேண்டும். எழுத்தாளர் தனது சொந்த தளத்தில் எழுதினால் பிழையில்லை ஆனால் இந்த வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை ...........?

  ReplyDelete
 7. எங்கள் வீட்டில் என்றுமே சாதி பாவித்து கதைத்தோ, கெட்டதாகவோ ஞாபகம் இல்லை, முதியவர்கள் கூட அப்படி பேசி பார்த்ததில்லை. ஆக, அது ஒரு நெருடலாக இருந்தது.

  ReplyDelete
 8. பெயரில்லாதவர்களுக்கும், இலங்கைத் தமிழன் எண்டு அவசரமாய் பெயரிட்டுக் கொண்டவருக்கும்,

  ஓ நீங்கதான் அந்த சண்டியரை விருமாண்டி ஆக்கி விருமாண்டியை கமலஹாசன் ஆக்கின ஆக்களா - உங்களைத்தான் நிறையநாளா தேடிக்கொண்டு இருந்தனான் - கௌதம்மேனனின் நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போகேல்லையே; பாவம் blue cross இல வெருட்டி இருப்பானுகள் போல.

  கோபி, பல்கலைக்கழக கண்டீனில எங்கட வயசுப் பெடியளே சாதிப் பெயர்களை உரத்து சொல்லும் போது கேட்டுக் கொண்டு சும்மா தானே நாங்கள் இருந்தனானுகள் - பக்கத்து மேசைக்கு மாறி எதிர்ப்பு தெரிவிச்சிருப்பீங்க போல.

  யாழ்ப்பாணத்து முதியவர்கள் இளஞ்ஞர்கள் எண்டு எல்லாத் தரப்பிலும் கனகரத்தினம் மாஸ்டர்கள் ஒழிந்திருப்பினம் - உங்கள், எங்கள் வீடுகளிலும் கூட, கொஞ்சம் உத்துப் பாருங்கோ கோபி - தேடி கண்டு பிடித்து அவையத் துரத்துங்கோ - இல்லை துரத்த சொன்னா ஜேகேயை துரத்துங்கோ - கமெண்டு சூடேறினா பலோக்கர்களுக்கு கொண்டாட்டம்;

  பறைய ருக்கும் இங்கு தீயர்
  புலைய ருக்கும் விடுதலை;
  பரவ ரோடு குறவருக்கும்
  மறவ ருக்கும் விடுலை;
  திறமை கொண்ட தீமை யற்ற
  தொழில்பு ரிந்து யாவரும்
  தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
  வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை!

  இதை எழுதினவரையும் கண்டு பிடிச்சு திட்டுங்கோவன்... இவர் ஜேகே இன்ட தாத்தாதான்...

  முடிஞ்சா இதையும் வாசிச்சிட்டு ஜெகேயப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது better: http://www.padalay.com/2012/01/blog-post_18.html

  ReplyDelete
 9. He just told the story about a mentality of typical "Yalpanathaan". I don't think he meant to pull all casts.. Please do understand the core of the story

  ReplyDelete
 10. நன்றி ஹாலிவுட் ரசிகரே! நன்றி வாலிபரே

  ReplyDelete
 11. பெயரில்லா ரசிகர்களே.
  சாதியத்தை ஏகத்துக்கு இழுத்திருக்கிறேனா?
  //வெளிநாட்டிலும் நம்மளை ஒருவன் சாதிகாட்டி ஒதுக்குவான் என மக்களுக்கு போதிக்க என்றால், கொஞ்சம் ஊரில இருக்கிற நல்ல சாதிகளையும் இழுத்திருக்கலாம் என நினைக்கிறான்//
  இது ஆப்வியஸ் இல்லையா? Sacred Land ஸ்கிரிப்ட் ரெபரன்ஸ் இருக்கும்போதே இது புரியவேண்டாமா? ம்ம்ம்ம்

  ReplyDelete
 12. இலங்கை தமிழர்
  //ஒரு நல்ல கதை சாதிகளின் பெயர்கள் காரணமாக சாக்கடையாக மாறியுள்ளது//
  உங்கள் அளவுக்கு இந்த கதையை புரிந்துகொண்டவர் எவரும் இல்லை. என்ன ஈழத்து ஒரு தலைமுறை சாக்கடை என்று துணிந்து சொல்கிறீர்கள். ஒரு நல்ல இனம் சாதிகள் காரணமாக சாக்கடையாக மாறியுள்ளது என்று சொன்னால் மற்றவர்களுக்கும் புரியும் இல்லையா!

  ReplyDelete
 13. இன்னொரு பெயரில்லா நண்பரே!
  //அட சனியனே அங்க போயும் உன்ர சாதிப்புத்தி ஒழிய வில்லையா? ...........ஏனடா எங்கட யாழ்ப்பாணத்து மானத்தை வாங்கிறீன்கள்//

  அகுதே! கனகரத்தினம் மாஸ்டர்மார் தலைமுறை ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். மானத்தை வாங்கவில்லை. விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

  யாழ்ப்பாணத்து மானமா? சாதியம் ஒன்று வெளிநாட்டில் இருந்து எங்கள் ஊருக்கு வரவில்லை! அதி யாழ்ப்பாணத்து மானமே தான்!

  //வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை எண்டு வச்சுக்கொண்டு மூதேசி நாய்!//

  ஆ ஹா .. கோபம் வருது. ஆனால் மாச்டரில் வராத கோபம் எழுத்தாளரிடம் வருவது வாசிப்பை காட்டுது. வீரகேசரி, உதயனின் மணமக்கள் தேவை விளம்பரம் பார்த்தது இல்லையா? யாழ்ப்பாண சாதிகள் லிஸ்ட் பார்க்கலாம். உதயன் வீரகேசரியை நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எங்க போய் கமெண்ட் போடலாம்?

  ReplyDelete
 14. >என்ன நீ வர வர கனக்க கதைக்கிற .. You bloody bitch..…

  எப்படி முடிக்கப்போகின்றீர்கள் என யோசித்துக் கொண்டிருந்தேன். நன்றாகவே முடித்துள்ளீர்கள். (ஆனால் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை)

  ReplyDelete
 15. சாதியப் பற்றித் திட்டுவோர் வாசிக்கவும் வண்ணநிலவனின் "கடல்புரத்தில்". சாதி களையப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் ஒன்றை எழுதக்கூடாது என்றால் என்ன செய்வது?

  ReplyDelete
 16. நன்றி கோபி

  கதையில் வரும் மாஸ்டர் ஓய்வுபெற்ற தலைமுறை. கிராம வாசி. அந்த தலைமுறையின் சாதி பேச்சுக்கள் மிக casual ஆனவை. அவர்கள் சம்பாசனைக்கு கிராம வாழ்க்கை அனுபவம் உதவியது.

  இந்த கதையில் நான்கு புள்ளிகள்.
  1) ஒன்று Sacred Land வாசிக்க்கும் போதே தேசப்பற்றை காட்டிய தாரணி. அவள் உணர்வு. அவள் நிலை. மறக்கடிக்கப்பட்டவள்.

  2) மூத்த தலைமுறை பெண் முத்துநாயகி. இவள் முடிவு ஒருவருக்கும் முக்கியம் இல்லை. சாதியத்தின் அடித்தளம் இது.

  3) மாஸ்டர். போலி பகட்டு. சாதியம். பண வெறி. போலி பக்தி..

  4) இரண்டாம் தலைமுறை குடியேறி ரமேஷ். சாதியம் பெரிய விஷயமில்லை. தாண்டிவிட்டார்கள். ஆனால் அவர்கள் சுயநலங்கள் வேறு. பணம் பண்ணல் ஒரு தளம். ப்ளடி இந்தியன் என்று வெள்ளைக்காரன் திட்டினான் "நான் இந்தியன் இல்லை" என்று சொல்லும் கோமாளி ரகம்.

  எழுதியவர் கதையின் புள்ளிகளை விளக்கம் கொடுப்பது என்பது ரொம்ப கேவலம். உங்கள் வீட்டில் , எங்கள் வீட்டில் பேசியதை மட்டும் எழுதுவது என் நோக்கம் இல்லை. வாசிக்கும் போது வரும் நெருடல், நாங்கள் கொஞ்சம் முன்னேறி இருக்கிறோம் என்று காட்டுகிறது. ஆனால் சேர் பொன் இராமநாதன் போல இன்னொரு வர்க்கத்தின் நெருடல் இல்லாமல், நெருடல் எல்லோரிடமும் வரவேண்டும்.

  எப்போது மணமகள் தேவையில் சைவ உயர் வெள்ளாளர் ஒழிகிறதோ, அப்போது இந்த கதை எழுதுபவன் காணமல் போவான். போகவேண்டும்!

  பொதுவாக பல வெளிகளில் கை வைக்கவேணும். நல்லதையும் உணர்வையும் புரட்சியையும் எழுதி நல்ல பிள்ளை(சாதி இல்லை!) எழுத்தாளர் பெயர் வாங்கும் எண்ணமும் இல்லை.

  ReplyDelete
 17. சாதிப்பிரச்சினை இன்னும் நுண்ணியமானது. A, B, C, D என்று 4 சாதிகள் உண்டு என்று வைத்துக்கொள்வோம். A க்கும் B க்கும் இடையே அல்லது B க்கும் C க்கும் இடையே உள்ள சாதி வேறுபாடு மட்டுமல்ல C க்கும் D இக்கும் இடையே உள்ள சாதி வேறுபாடும் களையப்பட வேண்டும். (இங்கு A, B, C, D என்பன வேறும் குறியீடுகளே) இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சாதி என்று ஒன்றே இருக்கக் கூடாது.

  ReplyDelete
 18. நன்றி சக்திவேல்!
  //>என்ன நீ வர வர கனக்க கதைக்கிற .. You bloody bitch..…

  எப்படி முடிக்கப்போகின்றீர்கள் என யோசித்துக் கொண்டிருந்தேன். நன்றாகவே முடித்துள்ளீர்கள். (ஆனால் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை)//

  முடிவு வீட்டில் போய் திட்டுவதில் முடிக்கவேண்டும் என்று ஆரம்பிக்கும் போதே தீர்மானித்தேன். சாதிய வட்டத்தில் இது ஒரு முக்கிய புள்ளி இல்லையா?

  நன்றி சக்திவேல்!

  //சாதியப் பற்றித் திட்டுவோர் வாசிக்கவும் வண்ணநிலவனின் "கடல்புரத்தில்". சாதி களையப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் ஒன்றை எழுதக்கூடாது என்றால் என்ன செய்வது?//

  சரியாக சொன்னீர்கள்... பாலும் தேனும் பாகும் தானே எங்கட வாழ்க்கை. சாதியமா ... வாட் இஸ் தாட்?

  ReplyDelete
 19. //சாதிப்பிரச்சினை இன்னும் நுண்ணியமானது. A, B, C, D என்று 4 சாதிகள் உண்டு என்று வைத்துக்கொள்வோம். A க்கும் B க்கும் இடையே அல்லது B க்கும் C க்கும் இடையே உள்ள சாதி வேறுபாடு மட்டுமல்ல C க்கும் D இக்கும் இடையே உள்ள சாதி வேறுபாடும் களையப்பட வேண்டும். (இங்கு A, B, C, D என்பன வேறும் குறியீடுகளே) இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சாதி என்று ஒன்றே இருக்கக் கூடாது.//

  பெரியார் இப்படி தான் ஆரம்பித்தார். அதை இலாவகமாக பார்ப்பான் எதிர்ப்பாக மாத்திரம் காட்டிவிட்டார்கள். நம்ம ஆக்கள் ரொம்ப தெளிவானவாங்க பாஸ். சாதியம் ஒழிக்கமுடியாது. ABCD போய் PQRS வரும். இங்கே இந்தியன், லெபனானன் என்று நம்ம ஆக்கள் சொல்றது இல்லையா. எங்கள் மனம், Inferiority, superiority.. எல்லாமே survival of the fittest! என்ன சிலர் intellect ஆகி அதை புத்தியாக மறைக்க தெரிந்தவர்கள்! எழுதும் எழுத்தாளன் ஈசியாக மூதேசி ஆகிறான்!

  ReplyDelete
 20. நீங்கள் கோடிட்ட விடயங்கள் தெளிவாகவே புரிந்தன. வாலிபனுடன் பேசும் பொது இதையே வாலிபனுக்கும் கூறினேன். சில விடயங்களை மறைமுகமாகவே எடுத்து கையாண்டிருந்தால், சொல்ல வந்த கருத்து பலரின் உணர்சிகளுக்கும் கோபங்களுக்கும் பலியாகி இருக்காது. ஒரு மட்டத்தில் வெளியில் இருந்து வாசிப்பவர்கள் மட்டுமே இதை கதையாக பார்க்க முயல்வர் (அவர்கள் மிகவும் சிரிதளவானவர்களே). பெரும்பான்மை வாசகன் எல்லாவற்றையும் ஒரு உணர்ச்சியுடன் (பீலிங்) நோக்குபவன் தான். அவனை முன்னிலைப்படுத்தியே பலவிடயங்கள் இயங்கும் போது, அவன் இங்கே தொலைந்து விடுகிறான்.

  ReplyDelete
 21. யாழ்ப்பாணம் என்ற தனிப்பெரும், தூய்மையான சமுக அமைப்பில் சாதி என்ற ஒன்றே இல்லை. அங்கே யாவரும் சமம். நாங்கள் யாருக்கும் சிரட்டையில தேத்தண்ணி கொடுத்ததில்லை. வீட்டுக்க வராத எளிய நாயே எண்டு திட்டினதில்லை. நாய குளிப்பாட்டி நடுவீட்டுக்க வைச்சாலும் அது தன்ர வேலைய காட்டும், குலப்புத்தி போகுமே, எளிய சாதியள் எண்டு சொன்னதில்லை.பனை ஏறி கள்ளு இறக்கிறது ஒரு குறைவான தொழிலா நாங்கள் நினைச்செதேயில்லை. சம்பந்தம் பேசேக்க நாங்கள் சாதி பாக்கிறேல்ல. எட சாதிஎண்ட ஒண்டு இருந்தா தானே. வேற சாதியில கலியாணம் கட்டினா சொந்த சகோதரம் கூட முகத்தை திருப்பிக்கொண்டு போறதெண்டு சொன்னா சுத்த பொய். எல்லாம் எங்கட அரசர் மகிந்தர் சொல்லுறது போல, எல்லாரும் ஒண்டா ஒற்றுமையா சந்தோசமா இருக்கிறம், உந்த வெளிநாட்டில இருக்கிற விடுகாலிகளுக்கு பொறாமை. சும்மா கற்பனை செய்து எழுதுறது. எழுத்தாளர் ஜேகே யாழ்ப்பாணத்தில் எப்போதும் இருந்திருக்காத, இப்போதும் இல்லாத சாதிமுறையை தனது கதை எனப்படும் இந்த சொற் குவியலுள் நுழைத்திருப்பதை, உன்னத யாழ்ப்பாணத்து வீர சைவ வெள்ளாள நள பள்ள பறை சக்கிலிய கோவிய துரும்ப பிராமண அம்பட்ட வண்ணா சிவிய என்ற சாதிகள் ஏதும் இல்லாத யாழ்ப்பாணத்தின் குரலாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 22. //இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சாதி என்று ஒன்றே இருக்கக் கூடாது.//
  சாத்தியம் எண்டு நினைக்குறீர்களா ?

  // ABCD போய் PQRS வரும்// அதுதான் யதார்த்தம்

  பகுத்தலும், தொகுத்தலும் - மனித மூளையின் இயல்பும் வரமும் சாபமும் கூட. இப்ப நவீன மென்பொருள் தொழிற்சாலையில் developers ஒரு சாதி, testers இன்னொரு சாதி - தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் இன்றும் உண்டு. அதிலும் PM ஒரு கோபம் கொண்ட மேல்தட்டு ? ? ?

  பிறப்பின் வழி இறுக்கப்பட்ட தொழிலும் -> தொழிலின் வழி சமூகத்தில் ஒதுக்கலும் தூக்கலும் -> இதுதான் எங்களுக்கு தெரிந்த பழமை சாதிய கட்டமைப்பு.

  பிரச்சனை -> எல்லா Xஉம் இப்படித்தான் (categorizing X தொகுத்தலும்:Generalizing the attributes of X)

  குலத்தளவே ஆகுமாம் குணம்: இது திறந்த மனதோடு கொஞ்சம் விவரத்தோடு ஆராயப்பட வேண்டியது. விட்டுடுங்க இது தருணமல்ல.

  எல்லாத்தமிழனும் கொட்டி ஆனதும் / ஆவதும்
  எல்லாச் சிங்களவனும் கோத்த ஆனதும் / ஆவதும் இதுதான்:

  "Travel is fatal to prejudice, bigotry, and narrow-mindedness, and many of our people need it sorely on these accounts. Broad, wholesome, charitable views of men and things cannot be acquired by vegetating in one little corner of the earth all one's lifetime." ~Mark Twain

  Can we consider displacement as travel ?
  over to JK, Gobi & Ketha.

  ReplyDelete
 23. கட்டுள்ள சாதிகள் (bound castes)
  பிராமணர், வெள்ளாளர், கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோர்.
  கட்டற்ற சாதிகள் (unbound castes)
  செட்டிகள், தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் முதலானோர்.
  பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
  பண்டாரம், நட்டுவர்
  பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
  கரையார், கொல்லர், தச்சர், குயவர்
  கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது குடிமை முறை என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் சிறைகுடிகள் எனப்பட்டன.

  ReplyDelete
 24. முதல் காதலிட அப்பன்2/15/2012 2:12 pm

  மாப்பு,

  உனக்கு வைக்கப்போறாங்க ஆப்பு. போறபோக்கை பார்த்தால் கட்டுநாயக்கா எயர்போர்டுக்கு இல்லை, அலெக்ஸாண்டர் அவெனியுகே போகமுடியாது போல.

  ReplyDelete
 25. //ஆ ஹா .. கோபம் வருது. ஆனால் மாச்டரில் வராத கோபம் எழுத்தாளரிடம் வருவது வாசிப்பை காட்டுது. வீரகேசரி, உதயனின் மணமக்கள் தேவை விளம்பரம் பார்த்தது இல்லையா? யாழ்ப்பாண சாதிகள் லிஸ்ட் பார்க்கலாம். உதயன் வீரகேசரியை நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எங்க போய் கமெண்ட் போடலாம்?// ஓம் ஜேகே உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் அவங்கள் வியாபாரத்துக்கு செய்யும் வேலை அது எனவே அங்கு எதுவும் செய்ய முடியாது எனவே தான் இங்கு விமர்சிக்க வேண்டி வந்தது.

  ReplyDelete
 26. //ஒரு நல்ல இனம் சாதிகள் காரணமாக சாக்கடையாக மாறியுள்ளது என்று சொன்னால் மற்றவர்களுக்கும் புரியும் இல்லையா!// absolutely true இந்த சாதியம் என்ற சாக்கடையை வைத்துக்கொண்டு நாங்கள் யாழ்ப்பாணத்தவர்கள் என்று கூறுவதில் எங்களுக்கு ஒரு பெருமை வேறு

  ReplyDelete
 27. // இலங்கைத் தமிழன் எண்டு அவசரமாய் பெயரிட்டுக் கொண்டவருக்கும் // நான் ஒண்டும் அவசரமாக பெயரிட்டவன் அல்ல உங்களை மாதிரி நாட்டில இருக்க வக்கிலாமல் வெளிநாட்டுக்கு ஓடிப் போனவன் அல்ல தொடர்ந்து நாட்டில் இருக்கும் இலங்கை தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படும் ஒருவன் . நானும் யாழ் பல்கலைகழகத்தில் தான் படித்தவன் அங்கை ஒண்டும் எங்கட canteen இல சாதிப் பெயர் சொல்லி கதைப்பதில்லை. எதையும் ஆதாரத்துடன் எழுதவும் வாலிபன் என்று பெயர் வைத்த முதியவரே!

  ReplyDelete
 28. இதில் பலர் தங்களது ஏக்கத்தை சொல்லியிருக்கிறார்கள்,முக்கியமாக சாதிப்பெயர்களை மட்டுமே உத்து பார்த்திருக்கிறார்கள்..ஆனால் JK நீ கனகரத்திரனம் மாஸ்டர் ஊடாக சொல்லிப்போன பல நெஞ்சைத்தொடும் கருத்துக்களில் மனம் லயிக்கவில்லை போலும். சாதிப்பெயர் கூறி திட்டுவது என்பது எமது எமது தலைமுறை பெரியவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் விமர்சனம் செய்த ஒருவர் கூட இதுவரை தம்து வாழ்நாளில் ஒரு கெட்டவார்த்தையேனும் பாவிக்கவில்லை என்றால் அது அவர்கள் முகத்திலேயே காறித்துப்புவது போன்றது.கோபம் வருகையில் சாதிப்பெயர் சொல்லி திட்டவதை நீங்களும் கூடத்தான் மனதில் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளூங்கள்.

  JK கதையின் நீர் ஓட்டத்தில் ஒரு சூப்பரான விடயம் சொல்லியிருக்கிறாய்.. நன்றாக இருக்கிறது.ஆபீஸில் திட்டுவாங்கும் ஒரு தந்தை அதற்கான பழிவாங்கல் திட்டு லிஸ்ட் அவர் வீடு வரை சென்றூ பிள்ளை ஊடாக பள்ளீ வரை செல்வது போல.. கோப தருணங்களில் வார்த்தைகளை அடக்கி கொண்டும் எம் சுயபரீட்சை செய்தாலே போதும்.எம்மை சுற்றீ நடப்பெதெல்லாம் நல்லதற்க்கானவையே என்று தோன்றூம்..

  உதயன் பத்திரிகையில் ஒவ்வோர்நாளும் வரும் திருமண விளப்பர பகுதியில் ஊரில் உள்ள சாதிப்பெயர்கள் எல்லாமே வருகின்றன என்பது தெரியதவர்களுக்கு கொசுறுத்தகவல்.நாமெல்லாம் மறக்க நினைக்கிறோம். ஆனால் என் முன்னோர் திணிக்கிறார்கள்.எனவே எம் கையில் குடும்ப ஆட்ச்சி வரும்ப்போது அதை ஓரளவாவது குறைக்க முயற்சி செய்வோம்

  ReplyDelete
 29. அதாவது மாணவர்களே, உங்களுக்கு ஏற்கனவே பகுத்தலும் தொகுத்தலும் பற்றி சொல்லி இருந்தேன், இப்ப இதின் ஆபத்தான வகை அவசரப் பகுத்தலும் அவசரத் தொகுத்தலும் (பொதுமைப் படுத்தல் என்பது மேலும் பொருத்தமாய் இருக்கும்) : (quick generalization and quick categorization)

  இப்ப நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில படிச்சனான் எண்டால், பல்கலைக்கழகத்தில படிச்ச எல்லாரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே படிச்சிருப்பினம் எண்டு எண்ணுறது - QC

  அதே மாதிரி இப்ப என்ட profileல நான் அமெரிக்காவில இருக்குறதா சொன்னா நான் "இருக்க வக்கிலாமல் வெளிநாட்டுக்கு ஓடிப் போனவன்" - QC

  அட இதெல்லாம் விடுங்க சார் அதென்ன வெளிநாட்டுக்கு எல்லாரும் 'ஓடிப் போகினம்' இந்த வெள்ளவத்தையில 155 பிடிக்க ஓடிப்போய் ஏறுற மாதிரி flight ல foot-board அடிக்க ஓடிப்போறதோ - யாரவது புரிஞ்சவை தெரிஞ்சவை சொல்லுங்கப்பா.... நமக்கு வயசாயிட்டுதில்லை....

  //இருக்க வக்கிலாமல்// குளிக்க வக்கில்லாமல் ஓகே அதென்ன இருக்க வக்கில்லாமல் ? - நீங்க செமக்காமடி பாசு; நம்ம சிற்றறிவுக்கு உங்க சோக்கு புரியலையே...

  இப்ப வீட்டுப்பாடம்: பின்வரும் வார்த்தைப்பிரயோகங்களில் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் நோக்கு பிரயோகங்கள் எவை ?
  1) யாழ்ப்பாணத்தான்
  2) வாலிபன்
  3) முதியவன்
  4) இலங்கைத்தமிழன்
  5) இந்தோனேசியத் தமிழன்
  6) மஞ்சள்த்தமிழன்
  7) பச்சைத்தமிழன்

  ReplyDelete
 30. நல்ல விஷயத்தை சொல்ல வந்த இந்த கதையை பற்றி கருத்திடுங்கள் என்றால் நீங்கள் இருவரும்(ஏ.எ.வாலிபன்,இலங்கைத்தமிழன்) தேவையில்லாத விடயத்துக்கு போய் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்? ஏதாவது பிரயோசனமாக கருத்திடுங்கள்

  ReplyDelete
 31. நொட்டை2/15/2012 4:49 pm

  எப்படி உங்களால மட்டும் தான் முடியுது பாஸ். உண்கண்டை எழுத்து திறமை பற்றி கனக்க எழுத வேண்டும் போலத்தான் இருக்கு ஆனால் Google transliteration உடன் ஒருநாள் பூராக சண்டை போட ஏலாது...
  யாரு பாஸ்... அது இலங்கைத்தமிழன்... தமிழுக்கும் இலங்கைக்கும் தான் ஆகாதே...எப்படி அது பேருக்கு மட்டும் ஆகுது...சரி அதுக்குதான் பெயர் வச்சவரே விளக்கம் கொடுத்துட்டாரே.. முடிஞ்ச்சால் உண்டை பெயருக்கு விளக்கம் தா? என்றதுக்கு முன்னாலை... நான் வந்ததை சொல்லிட்டு போறன். எல்லாருமே இந்த கதையில் உள்ள சாதிகள் பற்றித்தான் கமெண்ட் பண்ணினார்கள். உண்மையில் யாழ்பாணத்து காரனுக்கு சாதி மட்டும் தான் பிரச்னை இல்லை, ஆண் பெண் பாகு பாடும் பிரச்சனைஜே எண்டு பாஸ் மிகவும் சாதுரியமாக சொல்லி உள்ளார் (You bloody bitch).
  //எல்லாத்தமிழனும் கொட்டி ஆனதும் / ஆவதும் // Better you would have avoided this specific example to emphasize your point as the statement by itself is very sensitive and could be misinterpreted easily

  ReplyDelete
 32. மொக்கை2/15/2012 5:11 pm

  மிகச் சரி யாழ்ப்பாணத்தவனுக்கு சாதி, பெண் இரண்டும் பிரச்சனை தான்

  ReplyDelete
 33. @நன்றி கோபி. அந்த கதையின் அடி நாதம் சாதியம், அது சார்ந்த உளவியல், சாதியம் கடந்த அதன் அடிப்படை உளவியல். பெயரை சொல்லாமல் எழுதியிருந்தால் அடிபட்டு போயிருக்கும். பாராட்டியிருப்பார்கள் தான். ஆனால் அது வேண்டாமே!

  //ஒரு மட்டத்தில் வெளியில் இருந்து வாசிப்பவர்கள் மட்டுமே இதை கதையாக பார்க்க முயல்வர் (அவர்கள் மிகவும் சிரிதளவானவர்களே). பெரும்பான்மை வாசகன் எல்லாவற்றையும் ஒரு உணர்ச்சியுடன் (பீலிங்) நோக்குபவன் தான். //

  இதில் தான் சிக்கல். என் தளத்துக்கு வரும் வாசகர்கள், உங்களை போல வாசிப்பு கூடியவர்களே. மற்ற கருத்துக்களை ஆணித்தரமாக வைப்பவர்கள். பல detailed ஆன கமெண்ட்கள் மிரள வைத்திருக்கின்றன. ஒருமுறை வாலிபனின் கதைக்கு விமர்சனம் எழுதியிருந்தேன். பிரவீணா அந்த விமர்சனமே தப்பு என்று நிரூபித்து பதில் கமெண்ட் போட்டார். இவர்கள் தான் நிரந்தரமானவர்கள். எனக்கு பெரும்பான்மையானவர்கள்!

  ReplyDelete
 34. நன்றி கேதா ... You just opened another can of worms!! நீங்கள் சொன்னது புரியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 35. @பெயரில்லா நண்பர்கள். விக்கிபீடியாவில் இருக்கும் சாதிய டீடெயில் கொடுத்தமைக்கு நன்றி! வரலாற்றில் என்ன பிழை விட்டோம் என்று தெரிந்தால் தான் அதை கடந்து போகலாம். அந்த பொறுமை நமக்கு வரும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 36. முதல் காதலியின் அப்பனே!
  கடைசி வரைக்கும் நீங்க சம்மதிக்கவே இல்லையே :(

  ReplyDelete
 37. இலங்கை தமிழன். என்னை போட்டு நன்றாக குழப்புகிறீர்கள். கதையை சாக்கடை என்று விமர்சீத்தீர்கள். இப்போது கதையில் சாக்கடையில் கதை என்கிறீர்களா? சாக்கடை துப்புரவாக்க முதலில் இறங்க வேண்டும் தலைவரே. இப்படி பார்த்தால் என் கக்கூஸ் கதையும் சாக்கடையா?

  ReplyDelete
 38. நன்றி மன்மத குஞ்சு.. கதையை அக்கு வேறு ஆணி வேறாக புரிந்தது வாசித்து இருக்கிறாய். சின்ன சின்ன விஷயங்கள் கூட செருகி இருப்பேன். (வாலண்டைன்ஸ் டே விளம்பரத்தில் எதுக்கு மூன்று மோதிரங்களுக்கு டிஸ்கவுன்ட்?) இப்படி பல!

  சாதீயம் கூட ஒரு வித hierarchical structure இல் வந்து கடைசியில் கட்டிய மனைவியில் முடியும்!

  சரிவிடு நானே எழுதி நானே விமர்சிக்கவேண்டியது தான்!

  ReplyDelete
 39. ஒரு சராசரி இலங்கைத் தமிழனின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் ஒரு அருமையான சிறுகதை.

  இங்கே சாதிப் பெயர்கள் பாவிக்கப்பட்டதன் காரணமாக பலர் தன்னிலை இழந்து சூடான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும், அதாவது இந்த சாதிப்பாகுபாடுகள் நம்மிடையே இன்னும் நீறுபூத்த நெருப்பு போல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் நம்மவர்கள் சாதிப் பொருத்தம் பார்த்த பின்னரே கல்யாணப் பொருத்தம் பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள். இது ஒரு கசப்பான உண்மை. அந்த வகையில் இச்சிறுகதையில் சாதிப் பெயர்களை நேரடியாகச் சுட்டிக் காட்டுவது தவறு என்பது ஒரு பிழையான விவாதமாகும், சிலர் இதைப்பபடித்து விட்டு கோபமடையக் காரணம் இச்சிறுகதை அவர்களது பேச்சு வழக்கை அப்படியே படம்பிடித்துக் காட்டியதால் இருக்கலாம். உண்மை எப்பவும் சுடத்தான் செய்யும். என்னுடைய கருத்து என்னவென்றால் (நான் சாதிகளை பற்றி அதிகம் அறிந்தவனில்லை, ஆனால் எனது தந்தையும் அவரது தமையன் மு. தளையசிங்கமும் சாதிப்பாகுபாட்டிற்கெதிராக போராடியவர்கள்) சாதிகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்களுக்கு சாதிப்பெயர்களின் பயன்பாடு ஒரு பெரிய விடயமாக தெரிந்திருக்காது. சாதிப்பாகுபாடு பற்றி கதைப்பது தவறு என்ற நிலைப்பாட்டை உடையவர்களுக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் சாதிப்பாகுபாட்டை பேணுபவர்களுக்கு இது உண்மையில் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் தன்நிலை உணர்ந்தால் இது போன்ற ஆக்கங்கள் அவர்களது சாதிபாகுபாட்டு மனப்பான்மையை மாற்று உதவும் என்று நம்புகின்றேன்.

  ReplyDelete
 40. வாலிபன்! என்ன தல .. நீங்க வேற அடுத்த தலை முறை சாதிகளை இங்கே அறிமுகப்படுத்துகிறீங்க?

  ReplyDelete
 41. ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாய் எழுதி அறிவுரை சொல்லிய பெயரில்லா நண்பருக்கு வந்தனமும் நன்றியும்!

  ReplyDelete
 42. நொட்டை அண்ணே!
  // உண்மையில் யாழ்பாணத்து காரனுக்கு சாதி மட்டும் தான் பிரச்னை இல்லை, ஆண் பெண் பாகு பாடும் பிரச்சனைஜே எண்டு பாஸ் மிகவும் சாதுரியமாக சொல்லி உள்ளார் (You bloody bitch).//

  சூப்பர் அண்ணே. நீங்கள் மட்டும் இந்த கூகிள் transliteration சரியா பழகிட்டா நாம எல்லாம் பதிவே எழுத ஏலாது! சீரியஸ் அண்ணே .. ஒரு ப்ளாக் தொடங்குங்க

  ReplyDelete
 43. நன்றி மொக்கை! பெயரில் மட்டும் தான். கருத்து கெத்து தலைவரே!

  ReplyDelete
 44. நன்றி மனோகரன் ... நிதர்சனமான கருத்து!
  //ஒரு சராசரி இலங்கைத் தமிழனின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் ஒரு அருமையான சிறுகதை. //

  உண்மை தான். இங்கே விமர்சித்த பலர் சரியாக கதையை வாசிக்கவே இல்லை நண்பரே. கதையில் வரும் மாஸ்டர், போன தலைமுறை, அவர் தான் சாதி பெயர் சொல்கிறார். ரமேஷ் வேறு சாதி பெண்ணை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறான். தலைமுறை மாற்றம் வாசித்தவருக்கு புரியவில்லை. அதே நேரம் இந்த தலைமுறையில் சுயநலம், இன்னொரு வித அரசியல் சொல்லியிருக்கிறேன்.

  வாசித்து absorb பண்ணி நீங்கள் சொல்லிய கருத்துக்கு மிகவும் நன்றி மனோகரன்.

  ReplyDelete
 45. உங்கள் தளத்தில் முதலில் வாசித்ததே அந்த கக்கூஸ கதை தான் மிக அருமை இதிலும் அந்த சாதி என்ற விடயத்தை தவிர ஏனைய எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்

  ReplyDelete
 46. தாங்க்ஸ் இலங்கை தமிழன்!

  ReplyDelete
 47. உங்களது பதிவு எனக்கு ஏற்படுத்திய வெறி http://srilankantamilan.blogspot.com/

  ReplyDelete
 48. வணக்கம் இலங்கைத்தமிழரே,
  கருத்துகளில் முரண்பாடும் அதன் விளைவாய் காரசாரமாய் நக்கல் நையாண்டியாய் வாதிடிவதும் எங்களுக்குள் பகைமை என்று ஆக போதாது என்று நம்புகிறேன்.

  நீங்கள் இந்த மாதத்தில்தான் இந்த பெயரை சூடிக்கொண்டதை கூகிள் profile சொன்னது; பெயரில்லாமல் தடித்த வார்த்தைகளில் விமர்சித்தவர்கள் தான் இப்படி வேடம்... -> அவசரமாய் பெயர் இட்டதாகக் கருதியது என் quick conclusion - நானும் அதே தவறுதான்; as jk said it is an instinct;

  உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமல்ல, ஆனால் எனக்கு தவறு என்று தெரிவதையும் இன்னொரு பக்க நியாயத்தையும் சொன்னேன்.

  எனக்கு ஏற்பில்லாத நிலைப்பாடு ஆயினும் நீங்கள் அதில் வெளிப்படயாயும் உறுதியாயும் நிற்பது ஆரோக்கியமான விடயம்.

  நொட்டை நன்றி, அதுபற்றி வேறொரு சமயம் கிடைச்சா விரிவா ஆராயலாம். (ஏற்கனவே நான் கதையின் மையக் கருத்தை திசை திரிப்பிட்டத Romeo and Juliet எழுதியவர் Anonymous (it is a movie name) கருதுவதால்...)

  ஜேகே:
  []கனக்ஸ் மாஸ்டர் மனுசிட்ட ஆங்கிலத்தில் திட்டுவது கொஞ்சம் உறுத்தலாய் இருக்கு - (நான் வளர்ந்த சூழல் காரணமாய் இருக்கலாம்) - இதுவும் ஒரு மனோபாவம் எண்டு காட்ட விளைகிரீங்களா... இதன் தமிழ் வடிவில் திட்டுவதை பார்திருக்குறேன் - அவர்கள் ஆங்கில ஆசிரியர்களாய் இருந்ததில்லை

  []ஏற்கனவே ஆங்கில இலக்கியம் படிச்சனிங்கள், உங்களுக்கு என்னைவிட பெட்டரா தெரியும், எனக்கு anticlimax கொஞ்சம் பில்ட் அப் காணாது எண்டு படுது;

  []முத்துநாயகி - கனரத்தினம் அளவுக்கு பெயர்ப்பொருத்தம் இல்லை - கொஞ்சம் சினிமாத்தனமான பெயரோ ?

  இதுதான் பிரியோசனமாய் கருத்திடல் எண்டு நினைத்தால்..... அதுக்கு நான் ஆளில்லை; என் தொல்லைகளையும் நீங்க பொறுத்துதான் ஆகணும்.

  ReplyDelete
 49. வணக்கம் வாலிபரே! நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். எங்கே என்னுடைய கருத்து இதனுடன் தொடர்பே இல்லாத ஒரு வெளி மனிதனின் கருத்தாக வெளிப்பட்டுவிடுமோ என்பதால் தான் நானும் அவ்வாறு வாதிட வேண்டி ஏற்பட்டது.

  ReplyDelete
 50. கதையில்.... யாழ்ப்பாணம் (யாழ்ப்பாணத்தான்) தொடர்பாக எதுவுமே.. கூறப்படவில்லையே... அப்படியிருக்க இங்கே.. எல்லோருமே.. அதுதொடர்பாகக் கதைப்பது.. எனக்குப் புரியவில்லை....
  ரூபன்

  ReplyDelete
 51. வாலிபன்!
  //கனக்ஸ் மாஸ்டர் மனுசிட்ட ஆங்கிலத்தில் திட்டுவது கொஞ்சம் உறுத்தலாய் இருக்கு//
  அந்த அவரின் Identity Crisis. நம்மில் பலர் வெளிநாடு வந்தவுடன், நின்றால் இருந்தால் "What the fuck" சொல்லுவோம் இல்லையா? வாசிக்கும் போது அபத்தமாக இல்லை?

  //எனக்கு anticlimax கொஞ்சம் பில்ட் அப்//
  பில்ட் அப் காணாது என்பது, கனக்ஸ் மனைவியை அப்படி திட்டுவதை மிக லைட்டாக எடுத்துக்கொள்ளும் சமூகம் நாங்கள் என்பதை நிரூபிக்கிறதா? Beside than, நான் முயற்சி பண்ணியும் முடியவில்லை!

  //முத்துநாயகி - //
  கொஞ்சம் சறுக்கல் தான். ஏதோ ஒரு காரணத்தால் எழுதியது தான். ஆனால் புரியாவிட்டால் நோ எழுதியது அர்த்தம் இல்லை. பெயர் சறுக்கல் அடுத்த கதையல் தவிர்க்க பார்க்கிறேன்.

  ReplyDelete
 52. //உங்களது பதிவு எனக்கு ஏற்படுத்திய வெறி http://srilankantamilan.blogspot.com///

  ஏன் பதிவு ஏற்படுத்திய வெறியா? நான் உங்கள் பெயரை ஒன்றுமே சொல்லவில்லை தலைவரே! நீங்கள் கதையை சாக்கடை என்று சொன்னது புரியாமல் இன்னமும் விழித்துக்கொண்டு நிற்கிறேன். அதற்குரிய காரணமும் சொல்லவில்லை. சாதியை குறிப்பிட்டதை முதலில் தவறாக interpret பண்ணி இருக்கிறீர்களோ என்றும் சொல்லவில்லை.

  உங்கள் பதிவு பற்றிய கம்மென்ட் .. உங்கள் பதிவில் போடுகிறேன் தலைவரே!

  ReplyDelete
 53. நன்றி ரூபன்.

  என்ன நீங்க சின்ன பிள்ளையாகவே இருக்கீங்க!!

  இதில வட்டக்கச்சி வந்தது, மகா வித்தியாலயம். வன்னியில் வளர்ந்த தாரணி முன்னேறிப்பாய்ச்சலில் யாழ்ப்பாணத்தில் செத்ததும் யாருக்கு உரைக்க போகுது?

  நீங்கள் அதை கண்டு கொண்டது .. அனுமன் இலங்கை காட்டில் சீதையை கண்டனன் போலவே! நன்றி தலை.

  ReplyDelete
 54. anticlimax: கனக்ஸ் வீட்டை வந்ததில் இருந்து திட்டும் வரை, திட்டுறது climax - என் பார்வையில்; முத்துநாயகி அது சறுக்கியே இருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டல, இன்னொருருவருக்கு உங்கள் உள் எண்ணம் புரிந்தும் இருக்கலாம்.

  ReplyDelete
 55. ஆகா!!! google readeraல இருந்து பதிவுக்கும் வரணும் பொல இருக்கு.
  இந்த பின்னூட்டங்கள தவற விட்டுறன் :).

  வர வர உங்கட பதிவ வாசிக்க கன நேரம் செல்லுது :) 4/5 தரம் வாசிக்க வேண்டியிருக்க்கு (நமக்கு ஒண்டும் விளங்கற்தில்ல) நிறய விடயத்த தொட்டு செல்கிறது.

  அண்ணே என்க்கு விளங்கின அளவில,வகைப்படுததல் பிரச்சனை இல்லாமல் போகது. அது இன்னோண்டக transform ஆகும் எண்டு நினைக்கிறன்.
  இன்னொண்டு, “வலியார் வாழ்வர்” நான் சொல்ல தலைவர் சொன்னது.

  ReplyDelete
 56. ஹரி ஏழுதின பதிவுகள். சும்மா இதில பொடுறன். தொடர்பில்லை யெண்ட அழித்து விடுங்கோ...
  http://muranveliemag.blogspot.com.au/

  ReplyDelete
 57. வாலிபன்... அட இது தோன்றவில்லை எனக்கு ... build up to climax is very ordinary தான். கேதா ஷார்ட் பில்ம் எடுக்க போறானாம்! screen play ல கவனிக்கிறம்!!!

  ReplyDelete
 58. திலகன் மொத்தமாக 60 கமேண்டுகளில் ஒன்றிரண்டு பேர் மாத்திரமே உறுத்துவதாக எழுதியிருக்கிறார்கள். அதை அப்படியே ஏற்றுகொள்ளுவோம். வியாலமாற்றத்தில் குறிப்பிட்டது போல, கதையை வாசித்து வரும் கோபம் கூட கதைக்கு கிடைத்த அங்கீகாரமே. என்ன கதையை விமர்சிக்காமல், எழுதியவரை விமர்சிப்பது, narrator ஐயும எழுத்தாளரையும் போட்டு குழப்புவதால் வருவது...

  ReplyDelete
 59. எனக்குத்தெரிஞ்சு ரமேஷ் மாதிரியாக்கள் நிறைய இருக்கினம் இங்கை....! சிலநேரம் நானும் கூட ஆகி ஊரோட ஒட்டிக்கிடக்கிற அம்மா அப்பாவை பிரிச்சுப்போடுவனோ எண்டு பயந்ததுண்டு... ஆனா இப்ப நல்லா முளிச்சிட்டன்.

  ஆனா பிறகு பேரப்பிள்ளையோட ஒட்டினாப்பிறகு பிரிக்கநினைக்கிற ரமேஷ் மாதிரி ஆக்களை ...! நாம கத்தி என்ன நடக்கப்போகிது. அட்லீஷ் காலத்தை பதிவாக்கீற்றீங்க.... சாதியத்தையும் சேர்த்துத்தான்

  ReplyDelete
 60. நல்லதொரு சிறுகதை !!!

  ஒவ்வொரு தலைமுறை சந்ததியிலும், தனக்கு மூத்த தலைமுறை சந்ததிகளிடம், கலாசார முரண்பாடு ,கருத்து முரண்பாடு ,பழக்கவழக்க முரண்பாடு இருப்பதுவே மாற்றத்திற்கான அறிகுறி . தங்களுடைய சிறுகதையும் இதனை மையப்படுத்தி இருப்பதாகவே நான் எண்ணுகிறேன் .

  ReplyDelete
 61. நன்றி வல்வைத்தென்றல் .. கதையில் வரும் பாத்திரங்கள் நான் ஆங்காங்கே சந்தித்தது தான் ..

  ReplyDelete
 62. நன்றி முருகேசன் ,, கூர்ந்த அறிவிப்பு .. இன்னொரு விஷயம் .. survival of the fittest .. superior/inferior complex பற்றியும் தான் .. தொடர்ந்து வாங்க தலைவரே

  ReplyDelete
 63. வீட்டுப்பெயர் கஜன்7/30/2013 12:04 am


  உங்களுடைய வெளிப்படையான எழுத்துக்கள் என்னை படலைப் பக்கம் அடிக்கடி வரவழைக்கின்றது.

  புதிய தலைமுறையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை.

  இந்த கதை சாதித் தடிப்பு பிடிதவர்களுக்கு உச்சந்தலையடி.

  ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே