Skip to main content

நாற்பத்து இரண்டு!

 

Answer_to_Lifeஉயிரியல் வாழ்க்கை, எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் பற்றிய அந்த ஒரே கேள்விக்குரிய பதிலை, Answer to the Ultimate Question of Life, The Universe, and Everything ஐ கண்டுபிடிக்கவென “ஆழ்ந்த சிந்தனை” (Deep Thought) என்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கணணி வடிவமைக்கப்பட்டது. அது ஏழரை மில்லியன் ஆண்டுகளாய் கணக்கிட்டு சொல்லிய பதில் தான் “நாற்பத்திரண்டு”!

பதிலை கண்டுபிடித்தாயிற்று. அதற்கான கேள்வி தான் என்ன? என்று கேட்டுக்கொண்டே hSenid மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி( Chief Technical Officer) ஹர்ஷா சஞ்சீவா மேடையேற, Yarl IT Hub இன் இரண்டாவது சந்திப்பு 21-05-2012 அன்று யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கில் ஆரம்பிக்கிறது.

Printதொழின்முறை தகவல் தொழில்நுட்ப துறையில் விழிப்புணர்வையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், யாழ்ப்பாணத்தை ஒரு சிலிக்கன் வாலியாக மாற்றவேண்டும் என்ற தூரநோக்கோடு Yarl IT Hub அமைப்பு செயல்பட்டுவருகிறது. கணணிதுறையில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதோடு, அந்த துறையில் உள்ள சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் துறைசார் நிபுணர்களை கொண்டு தெரியப்படுத்துவதன் மூலம், இதில் முடியாதது என்று ஒன்றுமில்லை, நாங்களும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை கொடுத்து, யாழ்மண்ணில் இருந்தே ஒரு கணணி தலைமுறையை உருவாக்கும் முகமாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை Yarl IT Hub அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கணணித்துறை நிபுணர்களின் சந்திப்பு இம்முறை யாழ் பல்கலைக்கழக கணணி குழுமத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக சமுதாயத்தினர், யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஏனைய நாடுகளிலும் தொழில்புரியும் தகவல் தொழில்நுட்ப விற்பன்னர்கள், கணணி நிறுவனங்கள் மாணவர்கள் என பலரும் பங்கேற்ற இந்த இரண்டாவது சந்திப்பில்,  இலங்கையின் hsenid மென்பொருள் நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழுவும் சிறப்பு விருந்தினர்களாக வந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில் தொடர்ந்து பேசிய ஹர்ஷா, கணணித்துறையின் தனித்துவத்தன்மையை, புத்திசாலித்தனத்துக்கும், திறமைக்கும் உள்ள மதிப்பை, வித்தியாசமாக சிந்தித்து தனித்த திறமையை காட்டக்கூடிய சந்தர்ப்பங்களை பற்றி விளக்கினார். அப்படியான மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு நின்று திறமை காட்டகூடியவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும், அவ்வகை தனித்திறமைகளை வளர்த்தெடுக்ககூடிய முறைகளை, உடற்பயிற்சி, வாசிப்பு, புதிய கணணி மொழிகளை ஆண்டுக்கு ஒன்றேனும் கற்றல் என பலவாறாக வரிசைப்படுத்தி தகவல் தொழில்நுட்பத்தின் வித்தியாசமான சுவாரசிய பக்கத்தை விளக்கி எழுச்சியூட்டினார்.

 

IMG_6766IMG_6781IMG_6767

 

அடுத்ததாக நிரோஜனின் Functional Programming பற்றிய அறிமுகம் நிகழ்ந்தது.  ஒரு சிக்கலை functional programming முறை மூலம் தீர்க்கமுனைவதால் வரும் நேர்த்தியை, எளிமையை மிக அழகாக தமிழில் விளங்கப்படுத்தி,  அடுத்த தலைமுறை கணணி மொழி என்பது object oriented programming முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக functional programming நோக்கி நகரும் என்ற  தகவலையும், அது எப்படி வித்தியாசமான கோணத்தில் சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவி செய்யும் என்பதையும் செயன்முறை விளக்கத்தோடு காட்டினார்.

“நாற்பத்திரண்டு” என்ற பதிலை, கேள்வியே தெரியாமல் கண்டுபிடித்ததால் குழப்பம்! “Deep Thought” கணனிக்கு அந்த கேள்வியை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லை. ஆனால் அதை கண்டுபிடிக்கக்கூடிய இன்னுமொரு சிஸ்டத்தை வடிவமைத்துகொடுக்க அதனால் முடியும். அந்த கணணிதான் பூமி! பூமி, என்ற கணணியை வடிவமைத்து அதில் உயிரினங்களை computational matrix என்ற வரிசைமாற்றம், சேர்மான படிமுறைகள் மூலம் உருவாக்கி, அவர்களூடாகவே அந்த கேள்வியை தேடவைத்ததன் மூலம் பத்து மில்லியன் ஆண்டுகளில் முடிக்கவேண்டிய ப்ரோஜக்டை எட்டு மில்லியன் ஆண்டுகளிலேயே முடிக்கும் தருவாயை நெருங்கிய போது தான்… அந்த சம்பவம் நிகழ்ந்தது!

நிரோஜனை தொடர்ந்து, சிலிக்கன் வாலியில் வேலைசெய்யும் மெமரி ஐபி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ராமோஷன் இணையம் வழி இணைந்து, எதிர்காலத்தில் ஹார்ட்வேர் சந்தை என்பது கிளவுட் கம்பியூட்டிங் (cloud) சார்ந்து தொழிற்படபோகிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். வீடியோ சார்ந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மெமரி பாண்ட்வித் சிக்கலை தீர்க்க எவ்வாறு 100Gக்குமேலான மெமரிகளைகூட சின்ன சிப்ஸ்களுக்குள் அடக்கலாம்? என்ற, தான் பங்குபெற்றும் அணி செய்யும் ஆய்வுகள் பற்றிய சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்தார்.

IMG_6809அதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர் அணிகள் தங்களுடைய இரண்டு திட்டங்களின் விவரணங்களை அரங்கில் பகிர்ந்தார்கள்.  முதலில் பி.ஆர்த்திகா, எஸ்.சகிலா, பி ஜீவிதா அடங்கிய மூவர் குழு “ஆலோசகர்” என்ற ஒரு மென்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். மாணவருக்கு அவர்களின் தகுதி, திறமைகள், விருப்பு அடிப்படையில் எந்த வகையான பாடநெறிகளை கற்கலாம், அவற்றை கற்றால் கிடைக்கும் வாய்ப்புகள், அறிவு என்பனவற்றை தானாகவே, தன்னிடம் இருக்கும் தரவுகளை கொண்டு உய்த்தறியும் ஒரு சிஸ்டம்.  அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் எப்படி மின் அட்டைகளை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து டிக்கட்டிங் சிஸ்டம் கொண்டுவரலாம் என்றும், ஜிபிஎஸ் முறை மூலம் பஸ் வரும் நேரத்தை கணிக்கவும், அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கே உள்ள பிரத்தியேகமான போக்குவரத்து சிக்கல்கள் பலவற்றை தீர்க்கலாம் எனவும் எஸ்.ஜனனி, ஆர். ஜராசந்தன், எஸ்.சிவரூபி அடங்கிய மாணவர் குழு தங்கள் திட்டங்களை முன் மொழிந்தனர். இவர்களின் உத்தேச செயல் திட்டங்களில் இருக்கும் சாதக பாதகங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக கணணித்துறை பொறுப்பாளர் கலாநிதி சார்ள்ஸும், hsenid நிறுவனத்தின் COO பிரியங்காவும் அலசினார்கள்.

கலாநிதி சார்ள்ஸ்

மாணவர்கள் தங்கள் திட்டங்களை வெறுமனே தொழில்நுட்ப ரீதியில் மாத்திரம் அணுகாமல், அவற்றை எப்படி சந்தைப்படுத்தலாம்,  வியாபார பொருளாதார மூலோபாயங்கள், பல தரப்பட்ட பங்குதாரர்கள் என்று விவரித்ததை அவதானிக்கும் பொழுது, தொழின்முறைப்படுத்தக்கூடிய, சந்தைப்படுத்தல், வியாபாரம் சம்பந்தமான விழிப்புணர்வு கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப தலைமுறை யாழ்ப்பாணத்தில் மெல்ல மெல்ல உருவாவதை அறியக்கூடியதாக இருந்தது.

நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய யாழ் பல்கலைக்கழக கணணி குழுமத்தினர் நன்றியுரையுடன் நிகழ்வு முடிந்தபோதும், தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் கூடி தொடர்ந்து தமக்குள் கலந்துரையாடிக்கொண்டு இருந்தமை சிறப்பம்சம் ஆகும்.

நாற்பத்திரண்டு என்ற பதிலுக்கான கேள்வியை ஏறத்தாள கண்டே பிடித்துவிட்டார்கள் தான். ஆனால் இந்த நேரம் பார்த்து ஏலியன்கள் பூமியை தாக்கி அழித்துவிட, இப்போது மீண்டும் புதிதாக அந்த கேள்வியை தேடவேண்டும். இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் கழித்து, திரும்பவும் அந்த கேள்வியை கண்டுபிடுக்கும் தருவாயில் மீண்டும் அழிவு, மீண்டும் எழுச்சி. மீண்டும் மீண்டும் அழிக்க அழிக்க புதுது புதிதாக தேடும் ஆர்வம் பூமியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேடல் என்பதற்கு முடிவில்லை. முடிவை அடைந்தாலும் அது தன் அடுத்த தேடலை அங்கே இருந்து மீண்டும் ஆரம்பிக்கும். இங்கே கேள்வியோ பதிலோ அவ்வளவு முக்கியம் இல்லை.

IMG_6852

“The Hitchhiker's Guide to the Galaxy” என்ற டக்லஸ் அடம்ஸின் நாவல் சொல்லும் தத்துவம் தான் சிலிக்கன் வாலி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டிருப்பதற்கான பயணத்தில் அடி நாதம். “மேம்பட்ட வாழ்க்கை” என்ற பதிலுக்கான  கேள்வியை தேடி தேடி ஒரு கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டோமோ என்று நினைக்கும் தருணத்தில், இல்லை என்று மீண்டும் தன்னைத்தானே புதுப்பிக்கும். சிலிக்கன் புரட்சி, கணணிப்புரட்சி, இணையப்புரட்சி, சமூக தளங்கள் என்ற சிலிக்கன் வாலியின் தேடலின் தத்துவ விளக்கம் இந்த வகை புத்தகங்களில் விரவிக்கிடக்கிறது. இந்த தேடல் யாழ்ப்பாணத்தில் வரக்கூடாதா என்ற ஏக்கமும், வராமலா போய்விடுமா என்ன? என்ற நம்பிக்கையுடனும் yarl IT hub இன் இரண்டாவது சந்திப்பு இனிதே நிறைவுபெற்றது!

How many roads must a man walk down? – Bob Dylan 

 

சுட்டிகள் :

http://www.youtube.com/user/yarlithub

www.yarlithub.org

http://www.facebook.com/groups/264218806991707/

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக