Skip to main content

இலையான்!

 

Housefly_-_Project_Gutenberg_eText_18050


“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..”

அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்…

“சேர்”

என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்.

“ஐஞ்சு நிமிஷம் தான் .. டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்”

சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

“உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..”

“சேர்…”

இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் இருந்த மயூரன் தான்; மயூரன் வகுப்பில் பெரும் கெட்டிக்காரன் கிடையாது. முதலாம் தவணை என்றால் தட்டுத்தடுமாறி பத்தாம் பிள்ளைக்குள் வந்துவிடுவான். இரண்டாம் மூன்றாம் தவணைகள் கொஞ்சம் டைப்படித்து பன்னிரெண்டு பதினைந்து என்றாகிவிடும். அழுத்தக்காரன். அப்பா வைத்தி, கல்வியங்காட்டு சந்தையில் தேங்காய் கடை வைத்திருக்கிறார். ஞாயிற்றுகிழமையானால் இவனும் போய் கடையில் உட்கார்ந்துவிடுவான். கணக்கு பாடம் கொஞ்சம் செய்வான். அதிலும் சிட்டை கணக்கு ஒருநாளும் பிழைக்காது.

சோக் கட்டியை மேசையில் போட்டுவிட்டு மயூரனிடம் நெருங்கினார் மாஸ்டர்.

“என்ன பிரச்சனை?”

“சேர் வந்து .. நேத்து மந்திரி பரீட்சை பேப்பர் திருத்தி தந்தனிங்களல்லோ”

“அதுக்கென்ன?”

மாஸ்டரின் இரண்டு கைகளும் இப்போது இரண்டு பொக்கெட்டுகளிலும் நுழைந்திருந்தது. ஆனையிறவிலிருந்தும் மாங்குளத்திலிருந்தும் இருமுனைகளை திறந்துகொண்டு ஸ்ரீலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

“அதில இலையானுக்கு எத்தனை கால்கள்? எண்ட கேள்விக்கு நான் ஆறு எண்டு போட்டிருக்கிறன். நீங்க பிழை போட்டிருக்கிறீங்க”

“எந்த ஊரிலையடா இலையானுக்கு ஆறு கால்? அதுக்கு சரியான ஆன்சர் எட்டு தான்… பேசாம கிட”

“இல்ல சேர் .. எனக்கு வடிவா தெரியும் .. இலையானுக்கு ஆறு கால் தான்”

மாஸ்டருக்கு சரக்கென்று கோபம் வந்தது.

“நீ எனக்கு படிப்பிக்கப்போறியோ? அதெல்லாம் எட்டு கால் தான் .. வேணுமெண்டா லைப்ரரில போய் பார்”

“இல்ல சேர் .. அடிச்சு சொல்லுறன் .. ஆறு தான்”

மயூரன் தொடர்ந்து அழும்பு பிடிக்க, மாஸ்டருக்கு இப்போது கோபம் தலைக்கேறி, கட கடவென்று மேசைக்கு போனார். அங்கே இருந்த கிளுவை தடியை எடுத்து வந்து,

“கையை நீட்டு .. எங்க இப்ப சொல்லு .. இலையானுக்கு எத்தனை கால்”

“…. அம்மானை … ஆறு சேர்”

“படீர்” என்று மயூரனின் கையில் அடி விழுந்தது. “அம்மா” என்று கத்திக்கொண்டே சடக்கென்று கையை உதறினான் மயூரன், கண்கள் இலேசாக கலங்கிவிட்டது அவனுக்கு.

“எங்க பார்ப்பம் .. இப்ப எத்தினை கால் எண்டு .. “

“இல்ல … சேர் .. வீட்டில ..”

“சுளீர்” என்று இம்முறை சுருதி மாறியது. கிளுவை நுனி இலேசாக வெடித்து வழுக்கல் சிதறி பக்கத்து கதிரை சஞ்சீவன் முகத்தில் தெறித்தது. மயூரன் இன்னமும் உதறிக்கொண்டே கதறினான்.

“செல்லம் .. இப்ப சொல்லுங்கோ இலையானுக்கு எத்தினை கால்கள்?”

“… ட்டு சேர்..”

“வடிவா கேக்கேல்ல, வகுப்பில எல்லோருக்கும் கேக்கோணும்; எங்க கத்தி சொல்லு பார்ப்போம்.. ஆ இலையானுக்கு”

4-more“…இலையானுக்கு மொத்தமாக  … எட்டு ..கால்கள் சேர்”

மயூரன் அழுதுகொண்டே சொன்னான். 

“தேங்காய் லோட் ஏத்திறதுகள் எல்லாம் கேள்வி கேட்க வெளிக்கிட்டிதுகள்… இவையளுக்கு அடி உதவிறது போல அண்ணன் தம்பி உதவாங்கள்”

சொல்லிக்கொண்டே அரியலிங்கம் மாஸ்டர் கரும்பலகைக்கு போனார்.

“சூழலில் ஒரு இனத்திலிருந்து இன்னொன்றுக்கு உணவும் சக்தியும் கடத்திச்செல்லபடுவதை”..

ஜெயசிக்குறு ஒப்ரேஷனில் இராணுவம் மீண்டும் முன்னேற ஆரம்பித்திருந்தது.

-------------------------------------

 

“என்ன சேர், என்ர பெடியனுக்கு நேற்று அடிச்சுப்போட்டியலாம்?”

அடுத்தநாள் வகுப்பில் வைத்தி திடும் என்று இப்படி வந்து நிற்பார் என்று அரியலிங்கம் மாஸ்டர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். பாடசாலை வருவதற்காக வைத்தி கட்டியிருந்த புது சாரம் படக் படக் என்று பொங்கியிருந்தது. உரிக்க முயன்றும் முடியாமல் போன ஸ்டிக்கரில் கிப்ஸ் பிராண்ட் இன்னமும் வெளித்தெரிந்தது. மேலுக்கு நீலக்கலரில் மார்டின் சேர்ட், இரண்டு பட்டன்கள் போடாமல் கிடக்க, கழுத்தில் தொங்கிய செயின், தேங்காய் ஏன் எண்பது ரூபாய்? என்பதற்கு விளக்கம் கொடுத்தது. மாஸ்டருக்கும் வைத்தியின் கடையில் தனக்கிருக்கும் அக்கவுண்ட் ஞாபகம் வர,

“என்ன வைத்தி இதுக்கு போய் இவ்வளவு தூரம் வந்தியா? இவன் பெடியன் ஒரு கேள்வி பிழையா சொல்லி..”

“இலையானுக்கு மெய்யாலுமே எத்தினை கால் சேர்?”

“இதென்ன கதை .. பூச்சிக்கு எல்லாம் எட்டு கால் தான் .. இலையான் எண்டா என்ன ..நுளம்பு எண்டா என்ன? எல்லாத்துக்கும் ஒண்டு தான்”

மாஸ்டருக்கு இப்போது தான் முதன்முதலாக டவுட் வந்தாப்போல இருந்தது. மாஸ்டர் புங்குடுதீவில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் ஸ்கந்தாவரோதயாவில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து பார்த்தார். கல்லு நகரவில்லை. மூன்றாம் தடவையில் ஏஎல் மூன்று பாடம் ஒருவழியாக பாஸ் பண்ணி, ஓரெட்டர் சுப்ரமணியம் கொடுத்த சிபாரிசு கடிதத்தால் சைன்ஸ் மாஸ்டர் ஆனவர்.

“டேய் தம்பி .. அந்த இலையானை எடுத்து காட்டுடா”

வைத்தி மயூரனுக்கு சொல்ல, மயூரன் தன் பொக்கெட்டில் இருந்த நெருப்புபெட்டியை எடுத்து கவனமாக திறந்தான். உள்ளே ஒரு இலையான்; ஓரளவுக்கு பெரிய இலையான். அடிபட்டு செத்துப்போய் கிடந்தது.

“சேர் வடிவா பாருங்கோ .. அடிச்ச அடில ஒரு கால் உடைஞ்சு தொங்குது. ஆனாலும் ஆறுகால் தான்”

மயூரன் சொல்ல சொல்ல, மாஸ்டருக்கு சாதுவாக வியர்க்க ஆரம்பித்தது. கையை பொக்கட்டில் இருந்து வெளியே எடுத்தார். இந்த இருபத்தி ஐந்து வருட எக்ஸ்பீரியன்ஸில் ஒரு இலையான் கூட இந்த காட்டு காட்டியதில்லை. இன்றைக்கு செத்த இலையான் ஒன்று மாஸ்டருக்கு தண்ணி காட்டுகிறது.

“இல்ல .. இது வந்து .. நீங்க அடிச்ச அடில மற்ற ரெண்டு காலும் அடிச்ச இடத்திலேயே உடைஞ்சு ஒட்டியிருக்கும்..அதோட இந்த இலையான் உண்மையிலேயே இலையான் வகை இல்லை .. இது ஒரு பூச்சி வகை .. தென்னை மரத்தில ….”

மாஸ்டர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மயூரன் தன் பையிலிருந்து ஒரு ஷொப்பிங் பாக்கை இப்போது வெளியே எடுத்தான். பாக்கின் உள்ளே இருபது முப்பது இலையான்கள். குற்றியுரும் குலையுயிருமாய் ஊர்ந்துகொண்டிருந்தது. சின்னதும் பெரிதுமாய்;

“நேற்று பின்னேரம் முழுக்க இவனுக்கு இதான் வேலை சேர். டியூஷனுக்கும் போக இல்லை. ஒரு அடி மட்டத்தை எடுத்து கண்ட இலையான் எல்லாத்தையும் அடி அடி என்று அடிச்சு, பத்தாம தேங்காய் கடைக்கும் வந்திட்டான். சந்தையடியிலையும் விசாரிச்சம் சேர் .. ஆறு கால் தானாம்..”

மாஸ்டர் தான் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இனி தப்ப முடியாது. “இலையானுக்கு நிஜமாகவே ஆறுகால் தான் போல. ஐயோ, இவன் வைத்தி கொம்ப்ளைன் பண்ணினால் பிரின்சி நாயாய் குலைக்குமே” என்று யோசிக்க மாஸ்டருக்கு கொஞ்சம் நடுக்கமும் தொடங்கியது.

“இல்லை வைத்தி அது மார்க்கிங் ஸ்கீம்ல அப்பிடித்தான் இருக்கு. இலையான் எண்டுறது டிப்டேரா எண்ட விஞ்ஞான குடும்பத்தை சேர்ந்த பூச்சி .. எட்டு கால் தான் இருக்கோணும். எதுக்கும் நான் மற்ற சயன்ஸ் டீச்சர்மாரோடையும் கதைச்சிட்டு செய்யுறன். உண்மையிலேயே இலையானுக்கு ஆறுகால் தான் என்றால் கோட்டக்கல்வித்திணைக்களத்துக்கு அனுப்பி எடுக்கோணும். சிலபஸும் மாத்தோணும். நீ யோசியாத .. நான் சரியா திருத்தி கொடுக்கிறன்”

மாஸ்டர் டிப்டேரா, கோட்டக்கல்வி, சிலபஸ் என்று வைத்திக்கு புரியாத பாஷையில் விளக்கம் கொடுத்து சமாளித்தார்.

“என்னத்த சீலம்பா டிப்பரோ, அறுந்த இலையானுக்கு எத்தினை கால் எண்டு கூட தெரியாத படிப்பு… ”

புலம்பிக்கொண்டே வைத்தி புறப்பட, மாஸ்டர் வகுப்பறையை திரும்பிக்கூட பார்க்காமல் நேரே கரும்பலகைக்கு போனார்.

“கதையை விட்டிட்டு எழுதுங்கடா… விலங்குகளில் தாவர உண்ணி, விலங்கு உண்ணி, அனைத்தும் உண்ணி என்று ..”

ஜெயசிக்குறு நடவடிக்கை மீள ஆரம்பிக்க தொடங்கியது. மெதுவாகவும் பலமாகவும்.  வறு..வறு…வறு….

“படீர்”

“என்னடா அங்க சத்தம்?”

..

“சரியான இலையான் சேர்”

 

------------------------------------------------------------------ முற்றும் --------------------------------------------------------------------

நன்றி:

மூலக்கதை : கேதா

படங்கள் : இணையம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக