முகவுரை
சுமந்திரன் வருகை
அறை எண் முப்பது
மூன்றாவது தளம்.
நாசா விண்வெளி நிலையம்
மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயம்பார்த்து முன்னாலே இருந்த மின்காந்த கதிரியக்க கருவி, திடீரென்று சடுதியான மீடிறன் அடிப்பை காட்டத்தொடங்கியது. விஞ்ஞானி சோதிலிங்கம் புரியாமல் குழம்ப தொடங்கினார். போத்தல் மூடியில் மிக்ஸரை கொட்டி, மேலும் மேலும் கொறித்தும் பார்த்தார். ஏன் மீடிறன் அடிப்பு தீடிரென்று உருவாயிற்று? ஒரு மாதிரியான இரைச்சல் கேட்க தொடங்கியது. ஏதோ ஒரு சங்கேத வார்த்தை தான் அது. ஆனால் அர்த்தம் புரியவில்லை. பக்கத்து அறை விஞ்ஞானியான குமரனை இண்டர்கொம்மில் அழைத்தார்.
“குமரன், திடீரென்று மீடிறன் அடிப்பு ஏற்படுது … ஏன் எண்டு விளங்கேல்ல”
“நான் அப்பவே சொன்னன் சேர் ... பௌதீகம் எண்டுறது ஒரு கடல்..”
சோதிலிங்கம் என்ன சொன்னாரேன்றே கவனிக்காமல் குமரன் பதிலளித்தார்.சோதிலிங்கம் மட்டும் என்ன சளைத்தவரா?
“இல்லை .. அது சிம்பிள் .. IQ.வை பாவிச்சா முடியும். MCQ என்றால் எறும்பை பிடிச்சு கூட விடலாம் .. ஆனா இது வேற விஷயம்”
“எங்கள் ரெண்டுபேருக்குமே புரியாத பௌதீகமும் இருக்க முடியுமே? இந்தா வாறன்”
&&&&&&&&&
பிரகராதி; பூமியில் இதுவரைக்கும் வெளியிடப்படாத நூல். பூமி மனிதர்கள் கேட்டறியாத, பிரபஞ்சத்தின் மிகச்சிறந்த அகராதி. அகராதி என்பதால் படு மோசமாக, அயர்ச்சியாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். எழுத்து நடையில் ஒரு சுஜாதா சுவை இருக்கும். மலையாளத்தில் இல்லாததால் ஜெயமோகனாலும், லத்தீன் அமெரிக்காவில் தோன்றாததால் சாரு நிவேதிதாவாலும் குப்பை என்று புகழப்பட்டிருக்க கூடிய நூல் இது. மிகச்சிறந்த நூல்கள் என்று பாராட்டுபெறுபவை எவையுமே பெரும்பாலும் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் பிரகராதி அப்படியல்ல. இது ஒரு பிரபஞ்சம் தழுவிய பெஸ்ட் செல்லர். “வன்னி” என்று சொல்லப்படும் பிரபஞ்சம் முழுதும் புகழ்பெற்ற ஒரு இணைய புத்தக கடை இருக்கிறது. எழுதப்பட்ட நூல்கள் மட்டுமல்லாது இன்னமுமே வெளிவராத “கந்தசாமியும் கலக்ஸியும்” போன்ற நூல்கள் கூட இந்த புத்தகக்கடையில் கிடைக்கும். வன்னியில், பிரகராதியின் விலை வெறும் இரண்டு சூரியன்கள் பெறுமதி தான். வாசகர்களால் 2, 453, 345 நட்சத்திரங்கள் வாங்கிய நூல் இது. சுமந்திரன் கூட “அருமை” என்று 10, 567, 342வது நபராக கொமென்ட் போட்டிருப்பார்.
சபரி கிரகத்தில் நடந்த ஒரு ஆய்வில், பல “All Time Greatest” நூல்களை எடுத்து ரிவியூ செய்ததன் மூலம் பிரகராதியை “All Light Greatest” என்று கணித்திருக்கிறார்கள். “பூச்சிய ஈர்ப்பில் வாழலாம் வாருங்கள்”, “கடவுள் எங்கே போனார்”, “ஒரே ஒளியாண்டில் கிரகம் டிசைன் பண்ணுவது எப்படி?” போன்ற புகழ் பெற்ற நூல்களை விட பிரகராதி சிறந்த நூல் என சிலாகிக்கப்படுகிறது.
இது ஏன் சிறந்த நூல் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்; “தண்ணி” என்ற சொல்லுக்கு பிரகராதி கொடுக்கும் விளக்கம் இது.
“தண்ணி பெரும்பாலும், உலோகங்களால் செய்யப்படும். அதிலும் துருப்பிடித்த உலோகங்களோடு அழுகிய பிஸ்கா பழத்தையும், கிரீஸ் போன்றவற்றையும் கலந்து நொதிக்க செய்து உருவாக்கவேண்டும். மாங்காய்கலக்ஸி பகுதியில் கிடைக்கும் ஒருவகை “மாம்பழம்” என்ற பழத்தை சூப்பி சாப்பிட்டு விட்டு, அதே எச்சிலுடன் பழத்தின் கொட்டையை போட்டு நொதிக்க செய்தால், பெறுமதி வாய்ந்த “தண்ணி” யை உருவாக்கலாம். எவ்வளவுக்கு எவ்வளவு எலேக்ட்ரோலைட்ஸ் அதிகம் உள்ள எச்சிலால் சூப்புகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தரமான “தண்ணியை” உருவாக்கலாம்.
இப்படி சொல்லும் பிரகராதி கடைசியில் ஒரு பஞ்ச் வைக்கும்.
“தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்”
இப்படியான பினிஷிங் டச் இருப்பதாலேயே பிரகராதி இன்றளவுக்கும் சிறந்த பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.
&&&&&&&&&
“அண்ணே எங்களுக்கு ஒரு பதினைஞ்சு போத்தில் தாங்க”
கேட்ட சுமந்திரனை ஒருமாதிரியாய் பார்த்தார் புக்கை. பாரதியார் சிலைக்கு முன்னாலே, சிவன்-அம்மன் வீதியை இணைக்கும் ஒரு குறுக்கு தெரு இருக்கிறது. அந்த தெருவினுள்ளே ஒரு இருபது வீடுகள் தாண்டினால், வலது கைப்பக்கம் ஒரு குச்சொழுங்கை வரும். அதற்குள் நேரே போனால் புக்கையின் தவறணை; அது ஒன்றும் பெரிய கடை கிடையாது. நான்கு பக்கமும் அடைக்காத கிடுகு கூரை. கப்புக்கால்கள் முழுதும் சிவப்பும் வெள்ளையுமாய் சுண்ணாம்பு திட்டுகள். ஆங்காங்கே குடித்துவிட்டு விசிறி எறியப்பட்டு கிடக்கும் பனையோலை பிளாக்கள். இரண்டொரு குட்டை நாய்கள். பத்திருபது காகங்கள். இது தான் புக்கையின் தவறணை. தினமும் பத்து, பதினொரு மணிக்கு கடை கூடிவிடும். பென்ஷன் விழும் நாட்களில் தவறணைக்கு வெளியே சைக்கிள் பார்க்கிங் ரெண்டு ரூபாய் வசூலிப்பதுமுண்டு. இன்றைக்கும் ஒரு பதினைந்து பேர், கப்புக்கால்களை தேய்த்துக்கொண்டு ஆரம்பித்திருந்தனர். சிலர் பிளாக்களில் குடிப்பார்கள். சிலர் பிளாஸ்டிக் போத்தலை வெட்டி இரண்டு பாதியிலும் குடித்துக்கொண்டு இருந்தனர். அது கொக்கோகோலா போத்தில் தான் என்று தெரியாமல், யாராவது வேற்று கிரக வாசிகள் பார்த்தால், ஏன் குடிக்கும் கப்புக்கு அடியிலே போய் மூடியை டிசைன் பண்ணவேண்டும் என்று ஆராய்ச்சியே செய்திருப்பார்கள்.
“பதினைஞ்சு போத்தில் எண்டா முதலிலேயே சொல்லி வச்சிருக்கோணும் ஐயா! தினம் குடிக்கிறவங்களுக்கும் வேணுமெல்லோ? இல்லாட்டி நாளைக்கு அவங்கள் சண்முகத்திண்ட தவறணைக்கு போயிடுவாங்கள்… அவன் சரியான கள்ளன்.. கசிப்பு கலக்கிறான் .. என்னண்ட சக்கர தண்ணியல்லோ!”
“பயப்பிடாத, நாளைக்கு ஒருத்தரும் வரமாட்டாங்கள் .. எல்லாமே அழிஞ்சிடும்”
“என்னய்யா இப்பிடி சொல்லுறீங்க … நல்ல முழுவியலம் தான் இண்டைக்கு”
“உன்னோட கதைக்க நேரம் இல்ல .. எவ்வளவு காசு எண்டாலும் தாறம், அந்த ரெண்டு கலனையாவது தா”
“ஆ .. ஐயா கனடாவே? கன காலம் நிப்பீங்களே?”
கேட்டுக்கொண்டே ரெண்டு கலன் கள்ளையும் தந்த புக்கையை சுமந்திரன் ஆச்சர்யமாக பார்த்தவாறே பத்தாயிரம் ரூபா தாளை நீட்டினார். தன்னை தெரியாதவன் கூட இந்த ஊரில் இருப்பது சுமந்திரனுக்கு ஆச்சரியமாய் இருந்தது
“காலம வெள்ளன மாத்தின காசு இல்ல”
“Keep the change!”
“ஆ?”
“மிச்சக்காசை செலவுக்கு வச்சிரு .. பத்து நிமிஷம் தான் டைம் ”
“திரும்பி போகும் வரைக்கும் இங்கேயே வாங்க .. நல்ல தனிப்பனை ஸ்பெஷல் கள்ளு …”
கந்தசாமியை இழுத்துக்கொண்டே சைக்கிளடிக்கு விரைந்தார் சுமந்திரன். கந்தசாமிக்கு சுமந்திரன் செய்வது எல்லாமே விசித்திரமாக இருந்தது.
“உனக்கு அறளை பேர்ந்து போச்சு சுமந்திரன்.. உண்ட போக்கு வரத்து ஒண்டுமே விளங்கேல்ல”
“கள்ளை முதலில குடி”
“ரெண்டு கலன் கள்ளு .. அதுவும் காலமை வெள்ளனை .. ”
“காலமை? .. நேரம் எண்டுறதே ஒரு சார்பு .. அதில காலமை … இரவு .. அப்பிடி ஒண்டுமே இல்ல .. முதலில குடி”
“தத்துவம்? இத இந்த கண்டறியாத பேஸ்புக் தரித்திரத்தில போட்டியெண்டால், வாறவன் போறவன் எல்லாம் லைக் பண்ணுவான்”
“போட்டா எல்லாருக்கும் தெரிஞ்சிடும் .. சாக முதல் நிம்மதியா அலையட்டும் விடு .. நீ .. குடி .. நிறைய குடிச்சா தான் தசை இளகும் …. எங்களுக்கு வலு முக்கியம்”
“தசை .. இள… எந்த மூஞ்சில முழிச்சனோ தெரியாது .. எல்லாமே குழப்பமா இருக்கு.. இல்லாட்டி எல்லாமே தெளிவா இருந்து நான் தான் குழம்பி கிடக்கிறனோ தெரியாது .. பிளாவை எடு”
நெற்றி சுருங்கி, முகம் கருத்து, வியர்வை ஊற்ற, கள்ளை குடித்த கந்தசாமியை பார்க்க சுமந்திரனுக்கு பாவமாய் இருந்தது. ப்ச். நிதானமாகவே பேச தொடங்கினார்.
“என்னை எவ்வளவு நாளா உனக்கு தெரியும் கந்தசாமி?”
“ஒரு இரண்டு மூண்டு வருஷம் இருக்குமே? கொழும்பில படிச்சிட்டு திடீரென்று வந்திறங்கினி.. நாங்களும் யாரு என்ன எண்டு விசாரிக்காம உண்ட பேச்சில மயங்கீட்டம்”
சுமந்திரன் தான் செல்வராணியின் அகதிகள் விண்ணப்பத்துக்கு ஆதாரம் திரட்டியது. எப்படி புலிகளாலும், பின்னர் இராணுவத்தாலும் கந்தசாமி துன்புறுத்தப்பட்டார் என்றும், செல்வராணி திரும்பிப்போனால் எவ்வளவு ஆபத்து என்றும், விரிவாக சுமந்திரன் எழுதிய கடிதத்தை, சமர்ப்பித்த அடுத்த வாரமே செல்வராணிக்கு அகதிகள் அந்தஸ்து கிடைத்துவிட்டது. அந்த கடிதத்தில் அப்படி என்ன தான் எழுதினாய் என்று பல தடவை கந்தசாமி கேட்டுவிட்டார். தொழில் ரகசியம் எவ்வளவு கெஞ்சினாலும் வெளியே வராது.
“சரி … இப்ப நான் “சபரி” எண்டுற வேற்று கிரகத்து ஆள், இங்கே தப்பி வந்து அகதியா இருக்கிறன் எண்டு சொன்னா எனக்கு வெறி எண்டு நினைப்பியா கந்தசாமி?”
கந்தசாமி படலை தூணில் ஒட்டியிருந்த சுண்ணாம்பு திட்டை சுரண்டி நாக்கில் வைத்து, இன்னுமொரு பிளாவை மோண்டுவிட்டு சொன்னார்.
“ம்ஹூம் .. வெறி எண்டா நீ எப்பவுமே தெளிவா கதைப்பாய் .. இப்ப உனக்கு வெறியில்ல .. சொல்லு”
கந்தசாமிக்கு பத்து நிமிடத்தில் இதை புரியவைப்பது சாத்தியமில்லை. புரியவைத்தும் என்ன பிரயோசனம்? அது தான் எல்லாமே அழிய போகிறதே.
“சரி விடு .. கெதியா குடிச்சு முடி .. கோயிலடில ஓடிப்போய் கச்சான் வாங்கோணும் .. சொன்னாப்போல, துவாய் எடுத்து வச்சியா?”
“துவாயா? … கொடியில காயப்போட்டு கிடக்கு .. எடுத்தோண்டு வரவா?”
விளக்கம் ஏதும் கேட்கும் நிலையை எல்லாம் கந்தசாமி தாண்டிவிட்டார். இனி சுமந்திரனை அவர் போக்கில் விட்டுப்பிடிக்கவேண்டியது தான். ஆனாலும் “துவாய்” பற்றி பிரகராதி சொல்லும் தகவல்கள் சுவாரசியமானது.
“கிரகத்துக்கு கிரகம் பயணம் செய்து பிழைக்கும் கிரகோடிகளுக்கு மிகவும் பயனுள்ளது இந்த துவாய் எனப்படும் துவாலை. “ஹன்சி” கிரகத்து குளிர் காலத்தின் வெப்பத்துக்காக போர்க்கவும், “சுருதி” கிரகத்தின் வெயில் பருவத்தில் நிலத்தில் விரித்து மேலே படுக்கவும் உபயோகமானது.”சல்லல்லாகு” கிரகத்தின் அடர்ந்த பாலைவனத்தில் நடுவே இதை போர்த்துக்கொண்டு இரவில நட்சத்திரங்களை பார்க்கும் அனுபவமும் அலாதியானது. அவசரத்துக்கு ஆற்றிலே படகில் பாய் விரித்தும் பயணிக்கலாம். ஆபத்துக்கு ஆட்டி ஆட்டி சைகை காட்டலாம். பீச்சிலே விரித்துவிட்டு படுத்தால் மண் ஒட்டாது. கண்ணை ஏதும் குத்திவிட்டால், வாயை துவாய் மேல் வைத்து ஊதி, ஒத்தடம் கொடுக்கலாம். துடைக்க துடைக்க, அழுக்கை அகற்றும் பிரபஞ்சத்தின் ஆச்சர்யம் இது.
அத்தனை அழுக்கும் எங்கே போகிறது என்று தெரியாமல் மிகச்சிறந்த விஞ்ஞானிகளே பல காலமாக திணறிபோய் இருக்கிறார்கள். தலையெல்லாம் கடிக்கும் ஒரு அதிசய வெள்ளை நிற பேன் இனம் இருக்கிறது. பேன் இனங்களுக்குள்ளேயே முட்டாள் இனம் இது. தன்னை மற்றவரால் பார்க்கமுடியாவிட்டால், தன்னாலும் மற்றவரை பார்க்கமுடியாது என்று முன்முடிபு எடுத்துவிடும் பேன். துவாயை கொண்டு தலையை மூடினால், அந்த பேனை நாம் பார்க்கமுடியாது அல்லவா? உடனே அதுவும் கண்ணை மூடிவிடும். கடிக்காது. பேன் கடி உள்ளவர்கள் பெரும்பாலும் துவாயை போர்த்துக்கொண்டே திரிவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, துவாய் மனோதத்துவ ரீதியில் பயன்தரக்கூடியது. யாராவது கிரகோடியிடம் துவாய் இருந்தால், கூடவே அவரிடம் பேஸ்ட், பிரஷ் எல்லாம் இருக்கும் என்று அனுமானிபார்கள். அத்தோடு பனடோல், பெட்ஷீட், பேனா, ஐபோட் .. எல்லாமே; அப்படி இல்லை என்றால் அந்த துவாய் வைத்திருக்கும் கிரகோடிக்கு மற்றவர்களே இவற்றையெல்லாம் கொடுத்து உதவுவார்கள். அவ்வளவு மரியாதை. கிரகங்கள், கலக்ஸிகள், காலங்கள் எல்லாம் பாய்ந்து, பயணித்து தாண்டி வந்தாலும் எவனொருவன் தன் துவாயை தொலைக்காமல் கவனமாக இருப்பானோ அவனே வாழ்வாங்கு வாழ்பவன் என்பது கடவுளின் ....
“துவாயை மட்டும் தொலைச்சிடாத கந்தசாமி .. அது மட்டும் இருந்தா மிச்ச எல்லாமே தானா தேடிவரும்..”
ஐந்து பிளா கள்ளு, அரை மணித்தியாலம் பேச்சு, அப்புறம் யாருக்குமே சுமந்திரனை கேள்வி கேட்க தோன்றாது. கந்தசாமி மட்டும் என்ன விதி விலக்கா?
“இத அடிச்சிட்டு கொடியில கிடக்கிற…”
கந்தசாமி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தூரத்தில் இடிபாட்டு சத்தம் கேட்க, கந்தசாமி அந்த வெறியிலும் துணுக்குற்றார்.
“ஐயோ .. இடிக்க தொடங்கீட்டாங்கள் போல .. அம்மா..”
“இல்ல .. இன்னும் டைம் இருக்கு ..”
“அப்ப என்ன சத்தம் அது?”
“ஓ அதுவா .. மே பி .. உண்ட வீட்டை இடிக்க தொடங்கீட்டாங்கள் எண்டு நினைக்கிறன்”
“ஐயோ”
“விடு .. இனி எப்பிடியோ இடியத்தானே போகுது .. அவங்கள் பம்பலா இடிக்கட்டும்”
“உண்ட கதையை கேட்ட என்ன செருப்பால …”
கத்திக்கொண்டே கந்தசாமி தன் வீட்டை நோக்கி ஓட தொடங்க.
“மறக்காம துவாயை எடுத்து வை”
என்று சொல்லிக்கொண்டே சுமந்திரன் கச்சான் கடையை நோக்கி ஓடினார். இப்போது பூமி முழுதும் அந்த சிக்னல்கள் கிடைக்க ஆரம்பித்திருந்தன. எல்லோரிலும் இனம் புரியாத ஒரு பதட்டம். வீடுகள் மெது மெதுவாக இடிந்து விழ தொடங்கின. புல்டோசரை விட்டு விட்டு சொமரத்னவும் ஏனைய இராணுவ வீரர்களும் எல்லாப்பக்கமும் சுட ஆரம்பித்துவிட்டிருந்தனர். கந்தசாமி வீதிக்கரையிலேயே விழுந்து படுத்துவிட்டார். பல வீடுகளில் அவசர அவசரமாக தங்க நகைகளை தாட்டு வைப்பதற்காக கிணற்றடியை கிண்ட தொடங்கினர். சிலர் நைலான் கயிறு தேடினர். சிலர் உடுப்பு அயர்ன் பண்ணினர். பாடசாலைகள் அவசர அவசரமாக மூட ஆரம்பிக்க, மாணவர்கள் கிரிக்கட் அணி பிரித்தனர்.
&&&&&&&&&
சோதிலிங்கமும் குமரனும் ஒருவழியாக அந்த திடீர் சமிக்ஜையை வாசிக்க பழகிக்கொண்டனர். சொல்லப்போனால், மூன்று மணி நேர முயற்சியின் பின் அந்த சமிக்ஞை தான் இவர்களுக்கு புரியும்படியாக மாற தொடங்கியிருந்தது. நிலைமையின் விபரீதம் கருதி ஒபாமாவும் நாசாவுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சோதிலிங்கத்தின் மிக்ஸர் கிண்ணம் முழுதும் எறும்பு மொய்த்து; எங்கும் ஒரே டென்ஷன்.
“நாங்கள் மிகிந்தர்கள் தொடர்பு கொள்ளுகிறோம். பூமிக்காரர்கள் யாருக்காவது இந்த சிக்னல் கிடைத்தால் தொடர்பு கொள்ளவும் .. ஓவர்”
“ஓவர்” என்று சொல்லுறாங்கள், வெரி ஓல்ட் டெக்னோலாஜி .. அதான் எனக்கு விளங்க இல்ல, ஏதாவது நியூ எலேக்ற்றோனிக் மீடியம் இருக்கா எண்டு கேள்” என்று கிசுகிசுத்த சோதிலிங்கத்திடம் மிக்ஸர் கிண்ணத்தை கொடுத்துவிட்டு குமரன் அந்த சிக்னலுடன் பேச ஆரம்பித்தார்.
“நல்லா விளங்குது… நீங்க ஆரு?”
மிகிந்தர்கள் ஒரு கணம் குழம்பி போனார்கள். இப்போது தான் “மிகிந்தர்கள்” என்றோம், அப்புறமும் யார் என்று கேட்கிறானே? என்று யோசித்துவிட்டு,
“நாங்கள் மிகிந்தர்கள், மிகின் கிரகத்து வாசிகள். உங்கள் பூமியை இன்னும் முப்பது செக்கனில் இடித்து விட போகிறோம்”
“முப்பது செக்கன் என்றால், d= vt + 1/2a*t2
ஒரு பேப்பரை எடுத்து கணக்கு போட குமரன் தொடங்க ஒபாமா உடனே களத்தில் இறங்கினார்.
“மிஸ்டர் மிகிந்தர்ஸ், ஐ ஆம் பிரேசிடென்ட் ஓப் ஏர்த், எங்களிடம் அணு குண்டு இருக்கிறது. சின்ன பையன் சைஸ் தான். ஹிரோஷிமாவே சிதறிச்சு தெரியுமா? இப்பிடி தான் …
“ட்வெண்டி மோர் செகன்ஸ், கலக்ஸி நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், ச1 ஹைப்பர்சாலை அமையும் வழியில் பூமி இருப்பதால் இடித்தே ஆக வேண்டும். எங்களிடம் எந்த மிரட்டலும் செல்லாது”
“இந்த சூழ் நிலையில் சண்டை வேண்டாம் மிகிந்தர்ஸ், இன்னமும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது. ஏற்கனவே ஜிடிபி டவுண். இந்த நேரத்தில் போர் ஆரம்பித்தால், அது நிச்சயம் றோம்னிக்கு சார்பாக தான் முடியும். தேர்தல் முடியட்டும், அப்புறமாக ஆடுவோம்”
“முட்டாள் தனமான பேச்சு. இன்னும் சில செக்கன்களில் நான் பட்டனை அழுத்தி விடுவேன். பூமிக் கணக்கின் படி எக்ஸிகியூஷன் டைம் ரெண்டே நிமிடங்கள் தான். டண் அண்ட் டஸ்டட்”
“டிஸ்டன்ஸ் .. கல்குலேட் பண்ணீட்டன்! எட்டு கிலோ மீட்டர். பூமியில் இருந்து சரியாக எட்டு கிலோ மீட்டர் தூரத்தின் மிகின் களம் நிற்கிறது? சரியா சோதி சேர்”
“இல்ல .. எறும்பு ஒன்பது எண்ட சொய்ஸ் தான் காட்டுது”
“இப்ப எதுக்கு நீங்க ரெண்டு பேரும் டிஸ்டன்ஸ் கல்குலேட் பண்ணினீங்க?”
“வேற என்ன செய்யுறது மிஸ்டர் பிரசிடென்ட்? வி டோன்ட் நோ த வே அவுட்”
“ஷட் அப்… உங்களையெல்லாம் எவன் நாசாவில சேர்த்தானோ?”
சோதிலிங்கத்தையும் குமாரனையும் அதட்டியவாறே, மீண்டும் மிகிந்தர்ஸ் மனிதர்களுடன் ஒபாமா பேச தொடங்கினார்.
“திஸ் இஸ் நாட் ரைட் மிகிந்தர்ஸ், எங்களுக்கு ஒரு அறிவித்தல் கூட தரவில்ல, போவதற்கு வேறு கிரகங்கள் இருக்கிறதா என்று கூட தெரியாது. செவ்வாயில் தண்ணீர் இருக்கலாம் என்று ஒரு அனுமானம். ஆனால் ஒர்கானிக் மட்டர்ஸ் இல்ல .. அட இன்னமும் துகள்களில் இருந்து திணிவை பிரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு பிடிக்கவேயில்லை .. அது கண்டு பிடித்தால் தானே நாங்களும் உங்களை போல ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கலாம்?”
“எஸ் ஒபாமா, அணுவில் இலத்திரன், புரோத்திரன், நியூத்திரன் எண்டு ..”
“யூ டூ .. கெட் லொஸ்ட் ..“ என்று அவர்களை கலைத்துவிட்டு மிகிந்தர்களிடன் தொடர்ந்து ஒபாமா பேச தொடங்கினார்.
“எங்களுக்கு இரண்டு வாரம் டைம் வேண்டும் .. ஐநா வை கூட்ட வேண்டும் .. பேச வேண்டும்”
இப்போது மிகிந்தர்களின் ஒலி கோபத்துடன் கேட்கத்தொடங்கியது.
“ஐம்பது வருஷத்துக்கு முன்னாலேயே உங்கள் உள்ளூராட்சி கவுன்சில் கிரகமான அருந்ததி2 இல் இது சம்பந்தமான திட்ட நகல்கள் பார்வைக்கு வைத்தாயிற்று, இவ்வளவு நாளும் கவனிக்காமல் இப்போது குய்யோ முறையோ என்று கத்தி பிரயோசனம் இல்லை. எதிர்ப்பு ஏதும் என்றால் ஏழு நாட்களுக்குள்ளேயே பெட்டிசன் போட்டிருக்கவேண்டும்”
“பட் .. அருந்ததி2 கிரகம்? கேள்வியே படவில்லை நாங்கள்”
“ஸீ… பூமியின் பல திருமண பதிவுகள் இங்கே தானே நிகழ்ந்திருக்கு. இந்து மதத்தின் பில்லியன் கணக்கான திருமணங்கள் பற்றிய பதிவுகள் அருந்ததி2 ரெஜிஸ்டரில் இருக்கிறது. சுத்த முடியாது யாரும்”
“சேர் .. அத பார்த்து தான் நாங்க கலியாணம் கட்டுறனாங்கள்”
அறைக்கு வெளியே இருந்து சோதிலிங்கம் குரல் கேட்டது. ஒபாமாவுக்கு தலை சுற்ற தொடங்கியது.
“பட்…”
“நோ மோர் டோக்ஸ், ஐஞ்சு ஒளியாண்டு தூரத்தில இருக்கிற கிரகத்துக்கு போறதுக்கு வக்கில்ல, உள்ளூர் பிரச்சனைகளை கூட கவனிக்காம ஒரு மனித இனம். எனக்கென்று இப்படி சாவு கிராக்கிகளா மாட்டுதுகள். டிபார்ட்மென்ட் மாறோனும் ”
என்று புறுபுறுத்துக்கொண்டே அந்த சிக்னல் நின்றுவிட, ஓபாமா பக்கத்தில் இருந்த மேசையடியில் ஒளிய, மெய்ப்பாதுகாவலர்கள் அவரை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தார்கள்.
&&&&&&&&&
பூமியின் மீது வியாபித்து நின்ற மஞ்சள் நிற கலத்தை பார்க்க சுமந்திரனுக்கு கவலையை இருந்தது. ச்சே அழிய போகிறது என்று தெரியும். போயும் போயும் இவர்களா அழிக்க வந்தார்கள்? ஈவிரக்கமற்ற பாவிகள் ஆயிற்றே? பேசி தீர்க்க முடியாதே? ஒரு சில நாட்களாகவே இது நிகழ போகிறது என்று தெரிந்தது தான். ஆனால் மிகிந்தர்கள் தான் வருவார்கள் என்று தெரியாது. சுமந்திரன் கச்சான் பையை கவனமாக கோர்ட்டு பொக்கெட்டில் செருகிக்கொண்டே, வீதியருகே இன்னமும் படுத்து கிடந்த கந்தசாமியை இழுத்துக்கொண்டு அவர் வீட்டு முற்றத்துக்கு ஓடினார். வீதியெங்கும் இன்னமும் அல்லோகல்லோகம். எல்லோரும் சாரை சாரையாக நல்லூரை நோக்கி போய்க்கொண்டிருந்தனர். சிலர் பாடசாலை தான் பாதுகாப்பு என்று யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு படையெடுத்தனர். சிலர் சமைத்து கட்டிக்கொண்டு போகலாம் என்று அடுப்பெரிக்க தொடங்கினார்.
சுமந்திரன் பதட்டப்படாமல் கந்தசாமிக்கு சொன்னார்.
“போய் கொடியில கிடக்கிற துவாயை எடு”
பேயறைந்து போயிருந்த கந்தசாமி ஒன்றும் சொல்லாமல் துவாயை எடுத்து உதறி தோளில் போட்ட சமயம் தான், பூமி சிதறி தூள் தூள் ஆகி, செவிப்பறை மீடிறனை தாண்டிய வெடிச்சத்தம் யாருக்குமே கேட்காமல்,
பூமி அமைதியாக இருந்த இடம் இல்லாமல் போனது.
“இன்னமும் முற்றவில்லை!”

உங்க ஒவ்வொரு பதிவையும் வாசிக்க சாதாரண வாசகன் கஷ்டப்படுவான் என்று நினைக்கின்றேன் :)
ReplyDeleteஆனால் புரிந்தால் உள்கிடக்கையின் அளவு அபாரம்!!
அருமை ஜேகே தொடருங்கோ . அங்காலையும் வந்து பதியிறது
ReplyDelete"சோதிலிங்கம் என்ன சொன்னாரேன்றே கவனிக்காமல் குமரன் பதிலளித்தார்.சோதிலிங்கம் மட்டும் என்ன சளைத்தவரா?"
ReplyDeleteசுப்பர்.
"இப்படியான பினிஷிங் டச் இருப்பதாலேயே பிரகராதி இன்றளவுக்கும் சிறந்த பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது."
அருமை.
எள்ளல் நடையும் மின்னல் வேகமுமாய் கதை நகர்கிறது.
விளம்பர பிரிவு பொறுப்பாளர் உதயா கவனத்திற்கு. அரசியல் விஞ்ஞான சமுக கலை இலக்கிய தொடர்கதை என்று போடுவமோ?
விளம்பர பிரிவு பொறுப்பாளர் உதயாவா - என்ட பரம பிதா, எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க. நல்லதுக்கு காலமில்லை பரமா. பாவம் சோதிலிங்கம் வாத்தியார் இப்பிடி ஒரு நிலைமையை கனவில கூட எதிர் பார்த்திருக்கமாட்டார். வாத்தியார்கள் எண்டால பாத்துரூம் சிவர்களில் இருந்து கூகுள் சிவர் வரை தளை உருளும். கோபிதாஸ் பாத்துக்க.
ReplyDelete"தளை உருளும்"
ReplyDeleteதமிழ் தனிக்காவலன் உதயா விடும் எழுத்துப்பிழைகள் நாளைய தலைமுறைகள் அண்ணை சொன்னா சரியாத்தானிருக்கும் எண்டு தமிழை எங்கையோ கொண்டுபோய் விடும் என்கிற கவலையில், தயைகூர்ந்து எழுத்து பிழை விலக்கி எழுதுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி மைந்தன் சிவா!
ReplyDeleteநான் ரசித்து வாசிப்பதன் தரத்திலேயே நான் எழுதுவதும் இருக்கவேண்டும் என்று அட்லீஸ்ட் முயற்சி ஆவது செய்யோணும் என்று தான் எழுதுகிறேன்
...and நான் ஒரு மிக சாதாரண வாசகனே!
வாங்க கோமகன் .. சென்ற வாரம் ஒரு பதிவு போட்டேனே ..
ReplyDeleteநன்றி கேதா
ReplyDelete//விளம்பர பிரிவு பொறுப்பாளர் உதயா கவனத்திற்கு. அரசியல் விஞ்ஞான சமுக கலை இலக்கிய தொடர்கதை என்று போடுவமோ?//
இதில ஏதாவது ஒண்டு இருந்தாலும் பரவாயில்ல :)
வாலிபன்
ReplyDelete//வாத்தியார்கள் எண்டால பாத்துரூம் சிவர்களில் இருந்து கூகுள் சிவர் வரை தளை உருளும். கோபிதாஸ் பாத்துக்க.//
தளைகளை அகற்றுவது தான் ஆசிரியரின் பணி!
கேதா .. அண்ணே சொன்னதன் அர்த்தம் சரி .. உங்களுக்கு தான் புரிதல் சிக்கல் :)
ReplyDeleteகேதா நாளைய தலைமுறையை விடு நேற்றைய தலைமுறை நம்மளப் படுத்தும் பாடிருக்கே, இந்தா பார் தலை என்று எழுதினா தளை என்று அது தப்பாக அதுக்கு இட்டுக்கட்டி நம்மள உருட்ட எண்டு ஜேகே இருக்கே - இந்தாள் இவளவு நாளா கையைத்தான் பிடிச்சு இழுத்தது இப்ப தளை அட சீ தலை யையும்....
ReplyDeleteஜேகே இந்த புரிதல் சிக்கல் பிரச்சினை எனக்கு புதுசில்ல. நான் வெள்ளைகாரனை வாரியிருக்கிரன் எண்டு நீங்கள் குடுத்த புரிதலா விடவா புரிதல் சிக்கல்.
ReplyDeleteகண்ணதாசன் காறித்துப்பினாலும் அதை கவிதையா பார்க்கிற கூட்டம் நாங்கள். எண்டபடியா நீங்கள் கவனமா எழுதோணும்.
நல்லதொரு வித்தியாசமான பதிவு... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி ! (த.ம. 5)
ReplyDeleteஅருமையான பதிவு!! சுஜாதாவின் கால்க்ஸி சம்பந்தமான கதைகள் வாசித்திருக்கிறேன்!!எழுத்து நடை சில இடங்களில் சுஜாதாவை ஞாபகப் படுத்துகிறது!சூப்பர்!
ReplyDelete//இல்லை .. அது சிம்பிள் .. IQ.வை பாவிச்சா முடியும். MCQ என்றால் எறும்பை பிடிச்சு கூட விடலாம் .. ஆனா இது வேற விஷயம்”//
// நிலைமையின் விபரீதம் கருதி ஒபாமாவும் நாசாவுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சோதிலிங்கத்தின் மிக்ஸர் கிண்ணம் முழுதும் எறும்பு மொய்த்து; எங்கும் ஒரே டென்ஷன்.//
நான் படிக்கிறகாலம் எல்லாம் average student தான், எனக்கு உந்த intelligence reading என்டதெல்லாம் கஷ்டமான வேலை அப்பன், ஆனாலும் வாசிக்கேக்கை ஏதோ ஒண்டு இழுத்துக் கொண்டு போகுது, இந்த பிரதியை தவிர்க்கேலாமல் இருக்கு ஜேகே...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்!
ReplyDeleteவாங்க செழியன் .. கவனித்து வாசித்து .. கருத்தும் சொன்னதுக்கு நன்றிகள்.
ReplyDeleteவாங்க யசோ அண்ணா .. நீங்க intelligent reading இல்லைண்டா நாங்க எல்லாம் சுவரில தான் முட்டிக்கோணும்.
ReplyDeleteநன்றி அண்ணா ..