காடு திறந்து கிடக்கிறது!

 

நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு.

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

அபேர்ச்சர் நன்றாக குறைத்து மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்த காட்டுப்பூவை நெருங்கி போஃகஸ் பண்ண கை தடுமாறிக்கொண்டிருந்த நேரம் தான் அந்த குரல். பரிச்சயமான குரல். இந்த காட்டில் .. நானே வழி தடுமாறி அலைந்துகொண்டிருப்பவன். இந்த இடத்தில் எவரும் இருக்கும் சிலமனே இல்லை. அதுவும் என்ன மாதிரி குரல் இது? ஆண் குரலா? பெண் குரலா? எங்கேயோ கேட்டிருக்கிறேன் இதை. எங்கே? தவிப்பில் படமெடுப்பதை நிறுத்திவிட்டு எல்லாத்திக்கிலும் பார்த்தேன். காடு. காடென்றால் அப்படி ஒரு காடு. இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியனாக என்ன துணிச்சல் எனக்கு? சரி, வழி தவறியவன்,  சரியான வழியை தேடுவதை விடுத்து பாதையில் நின்ற பூவில் என்ன அப்படி ஒரு காதல்? பூ கிடக்கட்டும் .. காடு முழுக்க கலர் கலராய்… முதலில் பாதையை வெட்டு. அடர்ந்து இருள் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டிகொண்டு முன்னேறு. சில மணிநேரங்களில் சூரியன் மறைந்துவிடும். அல்லது ஏற்கனவே மறைந்தும் விட்டிருக்கலாம். யார் கண்டார்? இந்த கருங்காட்டில் இரவேது? பகலேது? இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் கண்ணே உருவாக்கிய வெளிச்சம். அடச்சீ வெளிச்சம் போதாத நேரத்தில் அபேர்ச்சர் குறைத்தால் படம் நன்றாக வராதே. அந்த அழகான பூ என்னை பாவமாய் பார்த்தது. “உனக்கென்ன அவசரம்? கொஞ்ச நாள் பொறுத்திரேன். ப்ளீஸ்”. கெஞ்சியது. கோடை வரும். மீண்டும் இந்த காடு எரியும்.  பற்றி எரியும் காடு. அப்போது வெளிச்சம் வரும். படம் எடு. அதுவரைக்கும் பொறுத்திரு என்றது அந்த பூ. நிமிர்ந்து பார்த்தேன். மிரட்டும் தொனியில் ஆங்காங்கே காட்டுத்தீயில் சிக்கி கரிக்கட்டைகளான மரங்கள். அதில் கூட சிலிர்த்துக்கொண்டு வளர்வேன் என்று அடம்பிடிக்கும் ஒட்டுண்ணி தாவரங்கள். எரிந்தாலும் மீண்டும் துளிர்வேன் என்று வீராய்ப்பாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள். குருவிகள். ரீங்காரிக்கும் தேனிக்கள். தூரத்தில் ஏதோ மிருகங்கள் தாவியோடும் சல சலப்புகள். கங்காருவாக இருக்கலாம். நான் இருக்கிறேன் என்ற பயத்தில் பாய்ந்து ஓடலாம். ஓடவேண்டாம் என்று சொல்லவேண்டும். எப்படி சொல்வது? கங்காருகளின் மொழி தான் என்ன? தமிழ் புரியுமா? அதற்கு தெரிவது இருக்கட்டும். எனக்கு தெரியுமா? தெரிந்து பேசினாலும் கூட கங்காரு என்ன நான் சொல்வதை கேட்கவா போகிறது?  ஓடட்டும். எங்கே ஓடிவிட முடியும்? கோடைக்கு இன்னமும் கொஞ்ச நாள் தானே. காட்டுத்தீயில் எல்லாமே தீய்ந்து .. ஐயோ .. நான் விசரன் .. இன்னும் ஏன் நேரத்தை வீணடித்துக்கொண்டு .. ஓடவேண்டும். ஓடு .. ஓ..

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

மீண்டும் அந்த குரல். இம்முறை குரல் வந்த திசை புரிகிறது. மேற்குத்திசையில் தான் யாரோ. அது எதிரொலியா? அப்படி என்றால் கிழக்கு திசையில் இருந்து தான் வரவேண்டும். அது சரி கிழக்கு எது? இந்த காட்டில் எப்படி கிழக்கை கண்டுபிடிப்பது? சரி ஒலி வந்த திசை கிழக்கு. அந்த குரல் .. கேட்டு கேட்டு வெறுத்து வெறுத்து மீண்டும் கேட்டு எனக்கு பரிச்சயமான குரல். ஆண் குரல் தான். பெண்மை நிறைந்திருக்கும் குரல். அல்லது ஆண்மை நிறைந்திருக்கும் பெண் குரல். அது முக்கியமல்ல. யார் அது? அறிமுகம் கூட கொடுக்காமல், அருகில் கூட வராமல், காதலித்திருக்கிறாயா? என்றால் என்னத்தை சொல்ல? நம்பலாமா? பக்கத்தில் இருப்பவரையே நம்பாதவன் நான். பக்கத்தில் இருப்பவரை தான் நம்பவே கூடாதாமே? என்ன ஒரு விதண்டாவாதம். மிகவும் பக்கத்தில் யார் இருப்பான்? நானா? என்னை விட எனக்கு மிகவும் பக்கத்தில் எவர் இருக்க முடியும்? உண்மை தான். பக்கத்தில் இருப்பவரை நம்பக்கூடாது தான்.

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

முதலில் “நீயார்” என்று கேட்கவேண்டும் போல் தான் இருந்தது. ஆனால் கேட்டுத்தான் என்ன பிரயோசனம்? நான் இதுவரைக்கும் தெரிந்துகொண்டவற்றில் எந்த பயனும் இருக்கவில்லை. இனியும் தெரிந்து எதையும் பயன்படுத்தப்போவதுமில்லை. ஆனாலும் தெரிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். அதை தேடல் என்று சொல்லவா? என்ன மண்ணாங்கட்டி தேடல்? பயனற்ற தேடல். பயன் முக்கியமா? தேடல் முக்கியா? எது முக்கியம்? எதை தேடுகிறேன் என்று கூட தெரியாத தேடல். ஒவ்வொருமுறையும் என்னிலேயே வந்துமுடியும் தேடல். திரும்பவும் தேடல். ஏதாவது ஒன்றை தேடவேண்டும். என் தேவை எல்லாம் யாராவது என் எதிரே நின்று துணிந்து கேள்வி கேட்டு துளைக்கவேண்டும். நீ யார் என்று கேட்கவேண்டும். நான் என்பேன். அது நான் இல்லை என்று சொல்லவேண்டும். மறுப்பேன். நிறுத்தாமல் மீண்டும் கேட்டு கேட்டு .. நானில்லை அது என்று சொல்லி நான் மறுத்து அது மறுத்து யார் எதை மறுத்தார் என்ற நிலை அறுத்து .. என்ன இது நட்ட நடு காட்டில் தன்னந்தனியனாக, உளறிக்கொண்டிருக்கிறேன். கவிதை வேறு வருகிறது. உளறுவதெல்லாம் இப்போது கவிதையாகிறது. கவிதைகள் எழுதியபோதெல்லாம் உளறினேன் என்றனர் ஒரு மக்கட் கூட்டம். அது வேண்டாம். அந்த மக்கட் கூட்டம் வேண்டாம் என்று தானே காடேகினேன். ராமன் போல. ராமன் ஏன் காடேகினான்? விரும்பியா? அவன் மக்கட் கூட்டம் வேண்டாம் என்றானா? இல்லையே. “மன்னவன் பணி என்றாகிலும் நும்பணி மறுப்பனோ” என்றானே? நக்கல் தானே. பட்டும் திருந்தவில்லை ராமன். கைகேயி தலைவிரி கோலமாய் இருக்கும்போதும் நக்கல். மந்தரை மீதும் நக்கல். சீதையை அரும்பாடு பட்டு மீட்டபோதும் அவள் மீது நக்கல். “ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,மாண்டிலை” என்றானே அந்தச்சனியன். என்ன திமிர். ராமன் காதலித்திருக்கிறானா?

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

மீண்டும் அமைதியை கிழித்துக்கொண்டு அதே குரல். பொறுமை கெட்டுவிட்டது. கேட்டுவிட்டேன்.

“முதலில் யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?”

பதில் இல்லை, மயான அமைதி. குருவிகள் சத்தம், தேனீக்கள் ரீங்காரம், மிருகங்களின் சலசலப்பு இது எல்லாமே சேர்ந்து காட்டின் அமைதி இன்னமும் வியாபித்தபடி இருந்தது. சத்தங்கள் சேர்த்த அமைதி சத்தமில்லாத அமைதியை விட இன்னமும் மிரட்டக்கூடியது. அது பயந்திருக்கவேண்டும், பதில் இல்லை.

“சொல்லு … யார் நீ.. உனக்கென்ன வேண்டும்?”

“சொல்லு நாயே …. என்னை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாயே .. யார் நீ”

அமைதி மீண்டும் .. இம்முறை அதை மௌனம் என்று சொல்லலாமா? மௌனம் என்றால் எது? பேசாமல் இருப்பதா? ஓசை எழுப்பாமல் இருப்பதா? அமைதி வேறு மௌனம் வேறா? அமைதியில்லாத மௌனமும் இருக்கிறதே? அமைதியின் பேரில் கொண்டாட்டங்களும் இருக்கிறதே. இரண்டும் வேறு வேறு தான் போல. இது எந்த வகை. மௌனமா? அமைதியா? இரண்டையும் கிழித்துக்கொண்டு சொன்னது.

“காடு”

“ஆ?”

“யாரென்று கேட்டாயே … நான் தான் .. காடு .. சொல்லு .. நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

காடு பேசுகிறது. காடு ஏன் என்னிடம் பேசவேண்டும?. அது பேசா மடந்தை அல்லவா. அப்படி பேசவேண்டும் என்றாலும் நான் எதற்கு? காட்டில் கிடைக்காத துணையா? ஏன் நான்? அதையும் கேட்டுவிட்டேன்.

“காடா? … காட்டுக்கெதுக்கு நாட்டிலிருந்து நட்பு?… காட்டில் கிடைக்காததா? இந்த தேனியிடம் பேசினாயா? பூக்கள் பூக்களாய் திரிகிறது பார் .. தறி கெட்ட கழுதை .. அந்த தேனியிடம் பேசு .. கருகிய மரங்களை விட்டுவிட்டு வசந்தகால குருத்துகள் மத்தியில் கூடு கட்டி கொண்டாடுகிறதே குருவிகள். அதனுடன் பேசு. நீ எரியும்போது நாட்டுக்குள் ஓடிவிட்டு துளிர்த்த பின் அடைக்கலம் தேடிய மிருகங்களிடம் பேசு. இதை தானே துணை என்று நினைத்து தனித்து கிடக்கிறாய். தற்குறி. பேசு .. அதை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னோடு என்ன வீண் பேச்சு? நான் யார் உனக்கு? நான் யார் எனக்கென்றே தெரியாதவன் நான். என்னை ஏன் வீணாக வம்புக்கிழுக்கிறாய்?”

கோபமாய் கேட்டாலும் குரலில் ஒரு ஏக்கத்தை காட்டிவிட்டேனோ? தரித்திரம் பிடித்தவன் நான். இதை ஏன் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும்? போயும் போயும் ஒரு காடு .. அது போய் என்னோடு பேசுகிறேன் என்கிறது. விட்டு எறியவேண்டாம்? ச்சே விவஸ்தை கெட்டவன் நான். காடு சிரித்தது.

“நாட்டிலிருந்து நீ என்னைத்தேடி வந்தாயே? நான் கேட்டேனா? இது நியதி. அதை ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாய்? இங்கே நானும் நீயும் தான். இருவருமே தனித்திருக்கும் பனித்திருக்கும் பரம ஏழைகள். காடாய் இருந்து ஒருமுறை பார். எல்லாமே சுத்தி சத்தம்போடும்போது கிறீச்சிட்டுகொண்டு ஒரு மௌனம் கிழிக்கும். அது என்னை கொல்கிறது. நல்ல காலம் நீ வந்துவிட்டாய் .. “

காடு சொல்வது சரியென்றே பட்டது. காடு தானே. யாருமே இல்லாத காடு. இங்கே நானும் காடும் தானே. மனம் திறந்துவிடுவோம். போகும் வழியில் ஒரு துணை. அதுவும் காடளவு துணை. காடேகும் மன்னவனுக்கு காடே துணை இருக்கிறேன் என்கிறது. இதை தான் காடு வா வா என்கிறது என்றானா அவன். எனக்குள் சிரித்துக்கொண்டே முன்னாலே மூடியிருந்த பற்றையை மீண்டும் வெட்ட ஆரம்பித்தேன். அட .. மூடிக்கிடக்கிறது ஒரு ஒற்றையடிப்பாதை. இந்த அடர் காட்டில் என்ன இது ஒற்றையடிப்பாதை? யார் போட்ட பாதை?

“எப்படி இது .. என்ன இது ..எனக்கு முன்னாலே இங்கே யார் வந்தது. யார் போட்ட பாதை இது?”

“நீ போட்ட பாதை தான் .. தடம் மாறினாலும் பாதை ஓன்று தான்”

“நான் போட்ட பாதையா? இது புது வழி .. புது காடு .. இன்றைக்கு தான் இந்த காட்டுக்கே நான் வந்திருக்கிறேனே.. உனக்கு தெரியாததா?”

“இன்றுகள் சேர்ந்தது தானே வாழ்க்கை. இன்றைய நேற்றைகள் தானே நேற்றைய இன்றுகள். பாதையா முக்கியம்? எங்கே போகிறாய் என்பது தானே முக்கியம்”

“ஆனால் பாதை மாறினால் பயணங்கள் மாறிவிடும் இல்லையா?”

“புத்திசாலித்தனமாக பேசுகிறாய் நீ .. பிடித்திருக்கிறது”

“அவசரப்படாதே .. புத்திசாலித்தனமாக பேசுபவன் முட்டாளாகவே இருப்பான். புத்திசாலி முட்டாள்தனமாகவே பேசுவான். நான் பாவம். அவசரகுடுக்கை. ஏமாளி. என்னை ஏமாற்றுவது எருவுக்கு வைக்கோல் போடுவது போல. எளிது. மாயவித்தை காட்டுபவனின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் இருந்து கைகொட்டி சிரிக்கும் சிறுவன் நான். என்னே அதிர்ஷ்டம். நான் காண்பவன் எல்லாம் எனக்கு வித்தை காட்டுகிறான்”

“…”

காடு அமைதியாக இருந்தது. ஏதோ செய்தது. பேசும்போது தொல்லையாய் இருந்த அதே காடு. நிறுத்தியபோது கொலைசெய்தது.

“பேசேன் .. வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்?”

காடு சிரித்தது போல ஒரு சலசலப்பு. செருமிக்கொண்டே கேட்டது.

“அப்படி என்றால் நானும் உன்னை ஏமாற்றுகிறேன் என்று நினைக்கிறாயா?”

காடு அப்படி ஒரு கேள்வி கேட்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. காடு ஏன் என்னை ஏமாற்றவேண்டும்? நானோ வழிப்போக்கன். எங்கே போவது என்று தெரியாமல், தெரியும் ஒற்றையடி பாதையில் செல்லும் வழிப்போக்கன். என்னை ஏமாற்றி என்ன வரப்போகிறது? ம்கூம் நம்பாதே. என்னைக்கண்டாலே சீண்டவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றும். காடு என்ன விதிவிலக்கா? இப்போது காட்டுக்கு என்ன பதில் சொல்ல?

“நீ ஏமாற்றுகிறாய் என்று நான் நினைத்தால் அப்புறம் நான் ஏமாளியாக இருக்கமுடியாது. ஏமாற்றவில்லை என்று நினைத்தால் நான் இந்த பதிலை சொல்லமுடியாது. என்னை விட்டுவிடேன் ப்ளீஸ்”

“அப்படி என்ன அவசரம்? எங்கே போகிறாய்?”

“நீர் வீழ்ச்சிக்கு … “

“நீர் வீழ்ச்சியா .. அது எங்கே இருக்கிறது? யார் சொன்னார்கள்?”

“யாரும் சொல்லவில்லை. எனக்கு நீர் வீழ்ச்சிக்கு போய் அதனோடு சேர்ந்து அழவேண்டும் போல இருக்கிறது. அதன் கண்ணீரில் நனையவேண்டும் போல … அதனோடு சேர்ந்து நானும் குதித்து தற்கொலை செய்யவேண்டும் போல … ஒவ்வொரு பாறைகளிலும் மோதி சிதறி .. ஆங்காங்கே கரையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு நீர் பாய்ச்சி .. மீன் வளர்த்து, சுழியோடி.. ஆறுகளுடன் சங்கமித்து .. நீர்வீழ்ச்சியோடு வாழ்வதை விட சாவது சுகம் தெரியுமா?”

“சொல்லவே இல்லையே? நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

காடு என்னை எப்படியும் விடப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. என் காதலில் உனக்கென்ன அத்தனை அக்கறை? என்னோடு பேசு .. என்னோடு பாடு .. என் படங்களை பார் .. வேண்டுமானால் தீயில் கருகியிருக்கும் யூகலிப்டஸ் மரங்களில் சாய்ந்து ஆசுவாசம் கூட கொடுக்கிறேன். ஆனால் காடேயானாலும் சுதந்திரம் மூக்கு நுனி வரைதான். சொல்லமாட்டேன் ..போ.

“சொல்லு .. நீ என்ன மனதில் நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் .. சொல்லு .. நீ எப்போதாவாது காதலித்திருக்கிறாயா?”

கண்களில் நீர் முட்டிவிட்டது. “ஆண் பிள்ளை அழக்கூடாது”, ஐந்து வயதில் அம்மாவிடம் அடிவாங்கி, அழுதுகொண்டு போனால் பாட்டி இதை சொல்லி சொல்லியே மடியில் வைத்து கொஞ்சும். வாய்விட்டு அழுதால் வெற்றிலை காம்பை உடைத்து வாயில் போடும். அது ஒரு வாழ்க்கை. இப்போது பாட்டியும் இல்லை. அம்மாவும் இல்லை. வெற்றிலை காம்பும் இல்லை. ஆனால் அடி மட்டும் மாறி மாறி விழுந்துகொண்டே இருக்கிறது.

“எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

..

“சொல்லு .. எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

“என்றெல்லாம் நினைத்த தருணங்களில் ஏமாந்திருக்கிறேன் … முன் வரிசையில் இருந்து கைகொட்டி சந்தோஷமாக கண்கட்டி வித்தை அது … காதல்”

“தெரிகிறது இல்லையா? அப்புறம் என்ன நீர்வீழ்ச்சி வேண்டிக்கிடக்கிறது? நீர் வீழ்சசியை பற்றி உனக்கென்ன தெரியும்? எங்கே ஆரம்பித்தது என்று தெரியுமா? எங்கே போய் சேரும் என்று தெரியுமா? கடலில் போய் சேர்ந்தால் பிறகு அது சுவை மாறிவிடும். உப்பு கரிக்கும்? நீ என்ன செய்யபோகிறாய்? அந்த கடலில் நீ யார்? யோசித்தாயா?”

அட, உண்மை தானே. அவ்வளவு குன்றுகள் மலைகள் எல்லாம் வழுக்கி விழுந்து காயப்பட்டு குற்றியுரும் குலையுயிருமாய் கீழே விழுந்து இறுதியில் அது கடலில் சேர்ந்துவிடும். நான்? ச்சே .. ஏன் நான் மீண்டும் மீண்டும் ஏமாறிக்கொண்டே இருக்கிறேன்? நல்ல காலம் எனக்கென்று இந்த காடு வந்தமைந்தது. காடு வந்து தடுத்தாட்கொண்டதா என்னை? எம்பெருமானே. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தால் …

“அப்படி என்றால் நீ என்னோடு இறுதிவரை கூட வருவியா?”

இம்முறை காதல் ஒரே எம்பு தான். காட்டிடம் தாவிவிட்டது. காதல் என்றால் அப்படி ஒரு காதல். ஆண்டாள் காதல். பாரதியின் கண்ணமா காதல். பாவை விளக்கு உமா …மேகலா என்று அத்தனை காதலும் சேர்த்து வைத்து ஒரே இடத்தில் .. காட்டுக்காதல்.

“முதலில் நீ எங்கே போகிறாய்? அதைச்சொல்லு”

“நீர் வீழ்ச்சிக்கு”

“அட அது தானே வேண்டாம் என்று ஆகிவிட்டது.. திரும்பவுமா?”

“ஓ … நீர் வீழ்ச்சி வேண்டாம் ..எத்தனை அழுக்கேறினாலும் ஆகட்டும் ..  வீழ்ச்சியே இருக்ககூடாது ..
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?”

“என்னது இது?”

“கவிதை .. மகா கவிதை?”

“நீ எழுதினாயா?”

“நானா? கவிதையா? கவிஞர்கள் உலகில் தவறிப்பிறந்த கவிப்பொருள் நான். மற்றவர்கள் எழுத முதுகும் கொடுத்து பொருளும் கொடுக்கும் அதிசய சடையப்பன்”

“அதிலும் ஒரு அங்கதம் .. உன் பிழைப்புக்கு தான் “நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” என்றாளே அவள்”

“யாரவள் அவ்வையா?”

“அட .. அவ்வையும் அறிந்தவன் ஏன் இந்த காட்டில் திக்கித்திணருகிறாய்? பேசாமல் வீடு போய் சேர்?”

அதுவும் சரிதான். காடு சொன்னால் எதுவுமே சரியாக தான் இருக்கும். வீடு போகவேண்டும். எப்படி போக? முன்னே உள்ள வழி நீர்வீழ்ச்சிக்கு போகும் போல. யாரோ முதலில் போன பாதை. பின்னே உள்ள வழி வந்த வழி. வந்த வழி மறக்ககூடாது. எதற்கு? அந்த வழி போகாமல் இருக்க தானே? வேண்டாம். இப்போது எந்த வழி போக? காட்டிடமே கேட்கலாம்.

“எனக்கொரு வழி சொல்லு? சொந்த வழி எந்த வழி என்று சொல்லு? சொல்லும் வழி வீடு போய் சேரும் வழியாய் சொல்லு?”

“ஹ ஹ ஹா …”

காடு சிரித்தது. எனக்கு கோபம். காடு கூட என்னைப்பார்த்து சிரிக்கிறது. இன்னமும் கோபம்.

“என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது? வீடேகும் வழி தானே கேட்டேன்? நான் முட்டாள். காட்டிடம் போய் வீடு பற்றி கேட்கிறேன்.. ச்சே”

“உன் வீடு எது? அறிவாயா? வீடேகு என்றவுடன் புறப்பட்டவனுக்கு வீடு எதென்று தெரியவேண்டாமா?”

அட .. திரும்ப திரும்ப அடி வாங்கும் சூட்சுமம் இப்போது தான் புரிகிறது. முதலில் வீடு எது என்று அறியவேண்டும். பின் பாதை சமைக்கவேண்டும். எது வீடு? வேறு வழியில்லை. காட்டிடமே கேட்கலாம்.

“என் அருமைக்காடே ..என் வீடு எது? சொல்லேன் பார்க்கலாம் .. ”

“உன் வீடு .. மூடனே .. அது தெரிந்தால் வழி தவறியிருப்பாயா? வீடு எது என்று தெரிந்து என்ன பிரயோசனம்? வழி தெரியவேண்டாமா? வழியை அறிந்தால் அது முடியும் இடம் தானே வீடு. புரிகிறதா முட்டாளே?”

அம்மாடி. இந்த விஷயம் எனக்கு புரியவே இல்லையே. காடு எத்தனை புத்திசாலி. என்னையும் அறியாமல் கைகொட்டி ஆரவாரமாய் சீட்டி அடித்தேன். எப்படிப்பட்ட ஒரு காடு இது. இது வரை ஏமாளியாய் இருந்தவனை அடக்கி ஆட்கொள்ளவந்த பெருங்காடு.  என்காடு.

“அப்படி என்றால் அந்த வழியையாவது சொல்லேன்”

“அப்படி வா வழிக்கு … கண்டுபிடி .. உன் வழியை கண்டு பிடி. வழியில் எதையும் கண்டு மயங்காமல் .. யார் பேச்சையும் கேட்காமல் உன் வழியை கண்டுபிடி. உன்னை பின்பற்றி செல்லு. ஒருநாள் இல்லை ஒருநாள். வீடு வரும். அந்த வீடு இருக்கும் நாடு வரும். எல்லாமே .. முதலில் பாதையை சமை.. வீட்டை பற்றி இப்போது கவலைப்படாதே”

வெட்டினேன். புதிதாக ஒரு பாதை. முன்னே இருந்த பாதையும் வேண்டாம். வந்த பாதையும் வேண்டாம். என் பாதை. இதுவரை யாருமே வெட்டாத, நான் வந்து வெட்டுவேன் என்று எனக்காக காத்திருக்கும் பாதை. புதர்களுக்குள் அமுங்கிக்கிடக்கும் பாதை. என்னை வீடு கொண்டு போய் சேர்க்கவே இன்னமும் பிறக்காமல் கருவுற்றிருக்கும் பாதை. காடு அவள் தாய். சொல்லிவிட்டாள். வெட்டு. பாதையை வெட்டு. பயணத்தை முடி. சடக். சடக். சடக் .. தூரத்தில் ரம்மியமான சத்தங்கள். அருவி ஓசை. தேனீக்களின் ரீங்காரம். நெருங்க நெருங்க .. சடக். சடக். சடக். அருவி ஓசை சல சல சல .. எங்கேயோ கேட்ட சத்தம் இது. ஆ.

நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இன்னமும் இரண்டு நாள் நடந்தால் போய்விடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு.

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

 

&&&&&&&&&&&&

குறிப்பு

முதலில் இருந்த தலைப்பு “ஒரு காடு பாலைவனமாகிறது”. நீண்ட யோசனைக்கு பின், ஒரு நாள் கழித்து, உதயா மற்றும் வீணாவோடு நடந்த தர்க்கத்தின் பின், படிமம் சொல்லவரும் சேதிக்கு தலைப்பு இடறுகிறது என்று பட்டதால் “காடு திறந்து கிடக்கிறது” என்று மாற்றிவிட்டேன்.

அவ்வை கவிதை.

மரம் போதும் படர்வோம்
மலை அளவு கருமேகம்
அலை அலையா வரு நேரம்
கருவறுத்த கறுப்பு தாலி
எழவெடுத்த கருங்காலி
கட்டியவனை தேடி ஓடி
கருவறையில் வாடி வதங்கும்
கருமாந்திர தமிழ்சாதி.
மலர் படர தேர் கொடுக்கும்
பாரி வேந்தன்
சமர் இல்லை என்றபின்
டொலர் கொடுத்தானில்லை!
தேர் வேண்டாம்
மரம் போதும்
படர்வோம் என்றால்
மரம்கொத்தி பறவைகள்
வருமாம் என்று
தார் ரோட்டில்
பேர் எடுக்கும்
ஜாரிசாந்தன்!
இனியில்லை வழியொன்று
வலியெல்லாம் கழியென்று
கொடியொன்று வேர்விட்டு
மரமாகுது
மரம் வெட்டி விறகெடுத்து
விலைபெசுது.

Photo : Ketha 

காதல் போகி

மேய்வது எல்லாமே மேய்க்கப்படுவதால்
மேய்க்கலாம் என்று மேயப்போனவன்!
மெய்யெனப் பெய்யும் மழையும்
பொய்யன மேனியாம்
பொன்னாம்,
பெண்ணாம்
பெண்ணாகரத்தில் இடைத்தேர்தலாம்!
கானல் நீராம் !
காட்சிப்பிழையாம்!
காதலியாம்!
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதாம்
போதாத கனவாம்!
பூமியும் பொய்யாம்!
படி தாண்டா பத்தினியாம்
படலை தாண்டிய பரமனாம்!
குஞ்சியழகும் கொடுந்தானை கோட்டழகும்
குமட்டுதாம்.
நெஞ்சத்து நல்லம்யாம்!
ஒரு போல்லாப்பும் இல்லையாம்!
புங்குடுதீவு புகையிலையாம்!
பொருள் தேடும் பூமியில்
அருள் தேடும் நெஞ்சமாம்!
போகமாம்,
மோகமாம்,
மோசமாம்
முப்பது நாளில் மாசமாம்!
முன்னூறே நாளில் போகியாம்! 

என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் - பாகம் 1

 

Centrl0309_03_51764_200

இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது.  தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை.

“கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.”

1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெள்ளிக்கிழமை. அம்மா நேற்றே சுட்டு வைத்திருந்த ரோல்ஸ் ஐந்தாறை வாழை இலைக்குள் சுற்றி, அதற்கு மேல் உதயன் பேப்பரை சுற்றி ஒரு பாக்கினுள் போட்டுத்தர தயக்கத்தோடு வாங்கினேன். “பெடியள் பார்த்தால் நக்கலடிப்பாங்கள்” என்று தெரியும். அக்காவின் பேர்த்டேக்கு செய்த ரோல்ஸ். அருமையாய் கிடைப்பது, பின்னேரம் வீடு திரும்பும் போது  ஒன்று கூட மிச்சம் இருக்காது என்று தெரியும். வெட்கத்தை பார்த்தால் வேலைக்காகாது என்று வாங்கி அதை ஸ்டைலாக ஒரு PP பாக்கிற்குள் வைத்துக்கொண்டு, அப்பா என்றைக்கோ சவுதியில் இருந்து கொண்டுவந்த கீறல் விழுந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிப்பார்த்தால், எல்லாமே மங்கலாக தெரிந்தது. இருக்கட்டும் லஞ்ச் பிரேக்கின் போதாவது போட்டுக்கொண்டு திரியலாம் என்று அதுவும் PPக்குள். ட்ரிங்க்ஸ் போத்தலுக்குள் தேசிக்காய் தண்ணி, சென்ஜோன்ஸ் இலச்சினை பொறித்த தொப்பி, சிவப்பு டீசேர்ட் எல்லாமே அணிந்து, அம்மாவிடம் திரும்பிவந்தேன்.

“… ஒரு இருபது ரூவா தாறீங்களா? கச்சானும் ஐஸ் கிரீமும் வாங்கிறதுக்கு”

கேட்டதும் தான் தாமதம் அம்மா தொணதொணக்க ஆரம்பித்தார்.

“அதான் தேசிக்காய்த்தண்ணி .. ரோல்ஸ் எல்லாம் தந்திருக்கிறனல்லோ .. உண்ட அப்பர் இங்க உழைச்சு கொட்டிக்கொண்டு தானே இருக்கிறார் .. ஐஸ் கிரீமுக்கும் கச்சானுக்கும் காசு தர…. இந்த தரித்திரம் பிடித்த “ஊனா” கார்ட்டால வேற ஐஞ்சியத்துக்கும் பிரயோசனமில்ல. நாலு பெடியள வெளிநாட்டுக்கு அனுப்பீட்டு அவனவன் சங்கக்கடையில அவ்வளவு நிவாரணத்தையும் அள்ளிக்கொண்டு போறான் .. எங்களுக்கு அதுவும் கிடைக்காது .. அரைக்கிலோ சீனி .. ஆருக்கு காணும்? ”

அம்மா ஏன் விடியக்காலமை எனக்கு இதை சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. அப்பா அனுராதபுரத்தில் உள்ள நொச்சியாகம காட்டுக்குள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் நில அளவையாளராக பணி புரிந்துகொண்டிருந்த காலம்.  அரசாங்க உத்தியோகம் என்று பெயர், ஆனால் சம்பளம் என்னவோ ஐயாயிரம் ரூபாய் தான். போதாக்குறைக்கு உத்தியோகத்தர் என்று சங்கக்கடையில் எங்களுக்கு உலர் உணவு நிவாரணமும் குறையத்தான் கிடைக்கும். பாதை எப்போதாவது திறந்தால் மட்டுமே யாரிடமாவது சம்பளத்தையும், வேறு ஏதாவது குட்டி சாமான்களையும் அனுப்பிவைப்பார். கொஞ்ச காலமாகவே தாண்டிக்குளம் பக்கம் அடிபாடு. பாதை மூடிக்கிடந்த கடுப்பு அம்மாவுக்கு. எனக்கும் காசு அனுப்பாத அப்பா மீது அர்த்தமில்லாமல் கோபமும் வந்தது.

“என்னட்ட ரெண்டு ரூவா இருக்கு .. ஒரு எட்டு ரூவா தந்தீங்கள் எண்டா கோன் வாங்கி குடிக்கலாம் .. ஐஸ் சொக் கூட பத்து ரூவா .. ப்ளீஸ் .. சிநேகிதங்கள் எல்லாம் இண்டைக்கு காசு கொண்டு வருவாங்கள்”

“சின்னப்பெடியனுக்கு காசைக்குடுத்து பழுதாக்காதீங்க நீங்க” என்ற அக்காவின் முறைப்பாட்டையும் மீறி அம்மாவுக்கு என்னை பார்க்க இரக்கம் வந்திருக்கவேண்டும். பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்ட மேசையில் இருந்து படிக்கும் அக்காவின் முகத்தை திரும்பிப்பார்க்காமலேயே சைக்கிளுக்கு போனேன். “பத்துரூபாய் சுளையாக வாங்கிவிட்டேன்; எப்படியும் தாங்கமாட்டாள். சென்ஜோன்ஸ் தோற்கவேண்டும் என்று நேர்த்தி வைத்தாலும் வைத்திருப்பாள். சொல்ல முடியாது”

வீட்டுக்குள் நிறுத்திவைத்திருந்த சைக்கிளை சன்ஹூடுக்குள் இறக்கும்போது தான் வாசலில் கீர்த்திராஜ். ஆளையும் தோரணையையும் பார்க்க சிரிப்பாக இருந்தது. பிரேமதாசா தந்த அந்தக்காலத்து ஒருவித காக்கி நீலத்து துணியில் தைத்த காற்சட்டை, அது பாட்டுக்கு பொங்கிப்போய் பாவாடையாட்டம், சம்பந்தமேயில்லாமல் மேலுக்கு ஒரு சிவப்பு டீஷர்ட், அவன் மூன்றாவது பிறந்தநாளுக்கு வாங்கியதாக இருக்கவேண்டும், உடம்பை இறுக்கிப்பிடித்துக்கொண்டு, கட்டை டீஷர்ட் மேலெழும்பி வயிறு வேறு தெரிந்தது. முகத்தில் கூலிங்கிளாஸ், சென்ஜோன்ஸ் தொப்பி, லுமாலா சைக்கிளில் சிவப்பு கறுப்பு கொடி என்று ஆள் இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்திருந்தான். பிக்மட்ச் என்றால் சும்மாவா? அதுவும் நாங்கள் சென்ஜோன்சில் இணைந்தபின் நடக்கும் முதல் பிக் மட்ச். ஏதோ இந்தியா பாகிஸ்தான் மட்ச் ஆட்டம் போன்ற பீலிங்கை கொடுத்தது!

“டேய் … நல்லதா காஞ்ச ரெண்டு தடியும் ஒரு எண்ணை பரல் கேனும் தேடோணும் .. இண்டைக்கு கிரவுண்டடில அதுகள காணக்கிடைக்காது”

கீர்த்தி கேற்றடியில் இருந்து கத்த, நான் கள்ளமாக பத்தியடிக்கு போய், சத்தம் போடாமல் அம்மா எண்ணை வைத்திருக்க பாவிக்கும், இந்தியன் ஆர்மி விட்டுச்சென்ற தகர கேனை எடுத்தேன். கால்வாசிக்கு பொரித்த எண்ணை கிடந்தது. அதை எடுத்து ஒரு சட்டிக்குள் ஊற்றிவிட்டு தேங்காய் பொச்சை சன்லைட்டில் தேய்த்து எண்ணை கேனை கிணற்றடியில் வைத்து கழுவினேன்.

என்னடா வெள்ளனயே பெரிய கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கபோறவன் மாதிரி நேரம் போயிட்டு எண்டு துள்ளிக்கொண்டிருந்த .. இப்ப கிணத்தடில என்ன செய்து கொண்டிருக்கிற?”

“ஒண்டுமில்லை சிலிப்பர் முழுக்க சேறு .. கழுவிக்கொண்டிருக்கிறன்”

சத்தம்போடாமால் குசினி யன்னலுக்கு கீழாக பதுங்கி கேட்டடிக்கு போக, கீர்த்தி, ஏற்கனவே பழைய தும்புத்தடியை ரெண்டாக உடைத்து தயாராக வைத்திருக்க, டபிள்ஸ் ஆரம்பமாகியது. நான் சைக்கிள் உழக்க, அவன் பார்த்தடியில் இருந்துகொண்டு, தகர டின்னை வைத்து தாளம் போட தொடங்கினான். சைக்கிள் சவாரி பிரஷாந், குகன், மக்கர் சுட்டா என்று ஒவ்வொருவர் வீடுகளுக்கும் போய், நல்லூரடியில் “சென்ஜோன்ஸ் வெல்லவேண்டும், காண்டீபன் அண்ணே சென்சரி போடோணும்” என்று தேங்காய் உடைச்சு, சொட்டை எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே ஆரிய குளத்தடிக்கு போகும்போது பிரியா, குணாலதாஸ் குரூப்பும் இணைந்துகொள்ள, இப்போது பதினைந்து பேர், பத்து சைக்கிள், பத்து சிவப்பு கறுப்பு கொடிகள், நாலைந்து தகர டின்கள் என தாளம் அந்த ஏரியாவையே அதகள படுத்தியது.

“கொலிஜ் கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“எங்கட கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
central“அப்பே கொலிஜ்.. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“வாட்ஸ் த கலர்? ரெட் அண்ட் ப்ளக்”
“ஹூ இஸ் த கப்டின்?” காண்டீபன்”
“தீபன் தீபன் .. காண்டீபன்”
“எங்கட தீபன் … காண்டீபன்”
“செஞ்சரி தீபன் … காண்டீபன்”
“அடியுங்கோ அண்ணா பவுண்டரி சிக்ஸர்”
“போடுங்கோ அண்ணா .. பொல்லுப்பறக்க”
“சென்றலால ஏலாது”
“ஏலுமெண்டா பண்ணிப்பார்”
“ஏலாட்டி விட்டிட்டு போ”

தகர சத்தமும் கூச்சலும் சிவப்பு கறுப்பு கொடியுமாக போகும்சமயத்தில் தூரத்தில் “தமிழீழ காவல் துறை” வேதாளர் கொமிக்ஸில் வரும் படையினரின் யூனிபோர்மில் நிற்பதை கண்டவுடன் கப்சிப். பலாலி ரோட்டையே மறித்தபடி சைக்கிளில்  பரலளாக வந்துகொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் வீதியோரமாக போக ஆரம்பித்தோம். வேம்படி சந்தியில் ஒரு காவல்துறை அண்ணா தெரியாத்தனமாக எம்மைப்பார்த்து சிரித்துவைக்க, தாளம் மீண்டும் ஆரம்பித்தது.

“எங்கட துறை காவல் துறை”
“மக்களின் துறை காவல் துறை”
“எங்கட துறை காதல் துறை”

பதிலுக்கு அவர் ஏதோ சொல்லி எங்களை அழைக்க போகும்முன்னரேயே நெக் காட்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் வேகம் பிடிக்க, மைதானத்தருகில் தாளச்சத்தமும் விசிலும், கூச்சலும் விண்ணை கிழித்துக்கொண்டிருந்தது.

கொல்லைப்புறத்து காதலிகளில் கிரிக்கட்டை பற்றி எழுதுவது என்று தீர்மானித்தபோது, எந்த எல்லைக்குள் எழுதுவது என்று குழப்பம். மீட்டும்போது சும்மா ஜிவ்வென்று எனக்கு சுருதி ஏறும் கிரிக்கட் எது என்றால், அது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கிரிக்கட் தான். வெறும் ஆறு மணித்தியாலம் டிவி முன் இருந்து பார்த்துவிட்டு நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணும் ஆட்டங்கள் அல்ல அவை. அது ஒரு வாழ்க்கை. அந்த ஆட்டங்கள், இடம்பெற்ற மைதானங்கள், அந்த காலப்பகுதி, அரசியல் நிலை எல்லாமே கூடிக்கலந்த வாழ்க்கை. அதை எழுதலாம் என்று ஒரு ஐடியா. ஒரு சிறுவனாக அந்த கிரிக்கட் ஏற்படுத்திய ஆர்வம். அதை எப்படி பார்த்தோம் என்று பகிரலாம். அதுவும் தொண்ணூறுகளின் முதற் பாதி. இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்து, மக்கள் புதிய ஒரு சூழ்நிலைக்கு தயாராகிக்கொண்டிருந்த சமயம்.  ஊருக்கு வந்துகொண்டிருந்த லக்ஸபான மின்சாரம் பிரேமதாசா-புலிகள் தேனிலவு முடிந்து கொஞ்சநாளில் கட் ஆகி, கூடவே பொருளாதார தடைகளும் வந்து சேர டிவியில் பார்க்கும் கிரிக்கட்டையும், நரேந்திர கிர்வாணியையும், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான், மியன்டாட் போன்ற பெயர்களையும் மறந்து யாழ்ப்பாணம் தன்னுடைய சொந்த ஹீரோக்களை கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தது. 

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தின் மூலை முடுக்கெங்கும் சிவப்பு கறுப்பு நீலம் பிரவுண் என கொடிகள். செவிப்பறை வெடிக்கும் அளவுக்கு மண்ணெண்ணெய் பரல்களில் போடும் தாளச்சத்தம். ஆங்காங்கே டோலக்குகள். கூலிங் கிளாசஸ். அந்த வெயிலிலும் சப்பாத்து போட்டு, ஸ்டைலாக திரியும் மாணவர்கள். மைதானத்தின் வடக்கு பக்கம் மணிக்கூண்டு கோபுரம், இயங்காத கடிகாரம், அதன் உச்சியில் ஒரு சேவல் சிலை இருந்ததாகவும் சுரேன்குமார் அண்ணா அடித்த சிக்ஸரால் தான் அது உடைந்தது என்றும் அவசர அவசரமாக மைதானத்திலே ஒரு ஐதீகம் பரவியது! இதையே சென்றல் மாணவர்களிடம் கேட்டால் வேறு ஒருவரின் சிக்ஸ் என்பார்கள்!

கிழக்குப்பக்கம் யாழ் மத்திய கல்லூரி. மைதானத்தை பார்த்துக்கொண்டே இரண்டு வகுப்பறை கட்டடங்கள்.  ஒன்றில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு, மத்திய கல்லூரி அணிக்கு சப்போர்ட் பண்ண மற்றயதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண்கள், எங்களுக்கு..  சென்ஜோன்சுக்கு சப்போர்ட் பண்ண வந்திருப்பார்கள்! ஆட்டத்தின் சியர் கேர்ள்ஸ்! அதிகமாக கூலிங் கிளாஸ் போடுவதாலோ அல்லது இயற்கையாகவே தானோ தெரியாது. சுண்டுக்குளி பெண்கள் இருக்கும் பக்கம் கொஞ்சம் குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில், சைக்கிளில்  எதிர்பட்டால் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரித்துவிட்டு போகும் பெண்கள் இந்த பெண்கள் தான். அழகும் திமிரும் அதிகம் இருக்கும், எங்கள் ரேஞ்சோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் லெவலுக்கு இங்கிலீஷ் தெரியும். சும்மா வெட்டி ஆடுவார்கள், நாங்கள் எங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் புத்தகத்தில் இருந்த “Me and my TV” ஐ வைத்து சமாளிப்போம். ஆனால் வேம்படி அப்படியல்ல. பார்த்தால் தலை குனிவார்கள். குவிஸ் போட்டி என்றால் சிக்ஸர் பவுண்டரி அடிப்பார்கள். படிப்பில் சுட்டிகள். அதில் கவனம் அதிகரித்ததால் கண்ணாடியை பல நாட்களில் பார்த்து டச்சப் பண்ண மறந்து விடுவதால் சின்ன வயதில் பெரிதாக அவர்கள் என்னை டச் பண்ணவில்லை. ஆனால் பதினெட்டு வயதில் டச்சப் பட்ச்அப் பாக்கப் எல்லாமே பண்ணியது வேம்படி நண்பிகள் தான் என்று இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் Facebook இல் இருக்கும் என் வேம்படி மகளிர் கல்லூரி நண்பிகள் அடிக்கவருவார்கள்!

Jaffna Library

கிரிக்கட்டை பற்றி எழுத வந்து சியர் கேர்ல்ஸ் பக்கம் போயிட்டன் போல. தெற்காலே போனால் பாழடைந்த சுப்பிரமணிய பூங்கா. நின்ற ஓரிரு மரங்களிலும் மாணவர்கள் ஏறி இருந்து வசதியாக ஆட்டத்தை பார்க்க ரெடியாக இருக்க ஆங்காங்கே ஐஸ் கிரீம் வான், சுண்டல் கச்சான் கடை என்று பரப்பப்பட்டு .. மேற்கே திரும்பினால் யாழ் நூலகம். அப்போது எரிந்த நிலையில் இருந்த கம்பீரம், சந்திரிகா பின்னாளில் மீண்டும் திருத்தி தந்தபின்  தொலைந்துபோய் இருந்தது. அவனே எரித்து அவனே கட்டி தருகிறான். மீண்டும் அவனே எரிப்பான் .. உன்னால் என்ன செய்யமுடியும்? என்று அது என்னை பார்த்து பல தடவை கேட்டிருக்கிறது. “நீங்கின் அரிதால் புணர்வு” என்று வள்ளுவன் காமத்துக்கு சொன்னது சம்பந்தமில்லாமல் எனக்கு இந்த இடத்தில் மனதில் வந்துபோகும். வேண்டாம்.

92ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு இடம்பெயர்வு வரை யாழ்ப்பாணத்து கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.  ஏககாலத்தில் எல்லா பாடசாலைகளிலும் திறமையான வீரர்கள் அப்போது இருந்தார்கள்.  முதலில் ஞாபகத்துக்கு வருபவர் காண்டீபன் அண்ணா. சென்ஜோன்ஸ் கப்டின். ஆறரை அடி உயரம், நடக்கும் போது ஒரு பக்கம் சரிந்து அவருக்கென்றே ஒரு ஸ்டைல். ஓபன் பவுலிங், லோங் ரன் அப் எடுத்துக்கொண்டு வந்தாரே என்றால் விக்கட் கீப்பர் பீஷ்மன் அண்ணா வழமையான தூரத்துக்கு இரண்டு மீட்டர் பின்னாடி போய் நிற்பார். பந்தை வீசிவிட்டு அரை பிட்ச் தாண்டியும் பலோ அப் இருக்கும். நெருக்கமாக போய் பட்ஸ்மனை சாய்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடப்பார். அதே காண்டீபன் அண்ணா தான் சென்ஜோன்சின் டூ டவுண் பட்ஸ்மன். சச்சின் போல. ஒரே சீசனில் மூன்று செஞ்சரிகள் அடித்ததாக ஞாபகம். அதிலும் ஒன்று 151 ரன்ஸ்.  அத்தோடு பீஷ்மன், கேர்ஷன், யோகதாஸ் என்று சென்ஜோன்சின் தூண்கள். இங்கே கதை இப்படி என்றால் சென்றல் பக்கம் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், சுரேஷ்(கோழி சுரேஷ்), லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன், நரேஷ், கொக்குவில் இந்துவில் பண்டா, யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலை கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம். வில்ஸ் கிரிக்கட் ரேட்டிங் போல உதயனிலும் அப்போது ரேட்டிங் போகும். சிறந்த துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர் என்று, அதற்கு ஒரு போட்டியும் நடக்கும், எழுதிப்போடலாம். காண்டீபன், சிவசுதன், ரகுதாஸ் நரேஷ் பெயர்கள் எல்லாம் அப்போது முன்னிலையில் இருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

யாழ் இந்துக்கல்லூரி மைதானம், யாழ் நகரின் சென்டர் பீஸ். அந்த நேரங்களில் கோட்டை அடிபாடு முடிந்திருந்தாலும் ஆர்மி பண்ணைப்பாலத்துக்கு அப்பால் நிலை கொண்டிருந்ததால் முத்தவெளி, துரையப்பா அரங்கு, மத்தியகல்லூரி திடல்கள் பெரும்பாலும் பிரபலமாக இருக்கவில்லை. அதே நேரம்,  சின்ன கிரவுண்டாக இருந்தாலும் யாழ் இந்துக்கல்லூரி மைதானம் தான் எங்களுக்கு ரோமானிய கொலோசியம். மணி ரியூஷனில் வில்வரின் கொமேர்ஸ் வகுப்புக்கு பீஸ் கட்டுவதே கட் பண்ணுவதுக்கு தான்.  காலையிலேயே உதயனில் “இன்றைய ஆட்டங்கள்” பார்த்துவிடுவேன். வகுப்பை கட்பண்ணி யாழ் இந்து மைதானத்துக்கு போய், அப்பிடியே கஸ்தூரியார் ரோட்டில் சைக்கிளை மதிலோரமாக சரித்துவிட்டு சீட்டில் இருந்தவாறே மேட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் மதிலில் ஒட்டியிருக்கும் முள்ளு முள்ளு கல்லுகள் குத்தும். சுவரில் தேய்த்திருக்கும் சுண்ணாம்பு கையில் படும். வெயில் கொளுத்தும், ஆட்டத்தில் கண் இருக்கும் போது வீதியிலும் கண் இருக்கவேண்டும். அந்தநேரம் யாராவது பெண்கள் கூட்டம் சைக்கிளில் வந்தால், எவனாவது சிக்ஸ் அடித்து மண்டையில் வந்து பந்து பட்டாலும் எங்களுக்கு தெரியாது. அப்போது பதினாலு வயசு தான். எங்கட மக்ஸிமம் லொள்ளு என்றால், இவ்வளவு தான்.

sri_lanka_2005_1111678200_main_transport_in_jaffna_town“அக்கா .. பின் சில்லுக்கு காத்து போயிட்டுது”
“மஞ்சள் சட்டை .. .. பாக் காரியரில சரியுது”
“கண்ணாடி நல்லா இருக்கு? எங்க வாங்கினீங்க?”
“கொண்டையில் தாழம்பூ கூடையில் வாழைப்பூ நெஞ்சிலே என்ன பூ?”
“டேய் .. நடுவில போற ஏசியா சைக்கிள் .. எண்ட ஆள்டா”
“என்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை? சிங்கார குடை, சிங்க மார்க் குடை!”

அனேகமாக கணக்கெடுக்கமாட்டார்கள். எப்போதாவது அதிஷ்டம் அடித்தால் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவு தான். இதுவே தனியாக நின்று மேட்ச் பார்த்தால், வாலைச்சுருட்டிக்கொண்டு நல்ல பெடியன் போல, அவர்கள் கவனித்தாலும் கவனிக்காதது போல, மட்ச்சை கவனமாக பார்ப்போம். சில நேரங்களில் சொந்தக்காரர் யாராவது அந்த பாதையால் போனால், வீட்டில் போய் போட்டுக்கொடுத்துவிடுவினம். அப்புறம் என்ன, வீடு போனதும் போகாததுமாக காவல்துறை விசாரணை ஆரம்பமாகும்.

பாடசாலை கிரிக்கட் எல்லாம் வெள்ளி மதியம் ஆரம்பித்து சனியும் நடைபெறும். சென்றல்- சென்ஜோன்ஸ் அணிகளின் வடக்கின் பெரும்போரும், சென்பற்றிக்ஸ்-யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையில் நடைபெறும் பொன் அணிகள் போரும் வெள்ளி சனி என இரண்டு நாட்களும் திருவிழா போல நடைபெறும். பொதுவாகவே சென்றல் அணி தரமான அணியாக மிளிர்வதுண்டு. வெல்லவேண்டும் என்ற வெறி உள்ள ஆஸ்திரேலியா போன்ற அணி தான் சென்றல். சென்ஜோன்ஸ் பல நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும் பிக் மட்ச் என்று வரும்போது தடுமாறிவிடும். இந்திய அணி போல. யாழ் இந்து, கொக்குவில் இந்து இரண்டும் ஏனைய இரு முக்கிய பாடசாலை அணிகள். இதைவிட ஸ்கந்தா, ஸ்டான்லி என்றும் அணிகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் பிரபல அணிகள் வெளுத்துவாங்குவதற்கு களம் அமைத்து கொடுக்கும் சிம்பாப்வே, பங்களாதேஷ் ரக அணிகள். இந்த அணிகளுள் டார்க் ஹோர்ஸ் என்றால் அது பற்றிக்ஸ் தான். சத்தம்போடாமல் சில நேரங்களில் பெரும் ஜாம்பவான்களை சாத்தி அனுப்பும். அதில் பலதடவை அடிவாங்கி செத்தது நம்மட சென்ஜோன்ஸ் அணி தான்!

அப்போதெல்லாம் பல கிண்ணங்களுக்கு போட்டி நடக்கும். KCCC கிண்ணம்,  உதயன்-ஷப்ரா கிண்ணம், ஜோலிஸ்டார்ஸ் கிண்ணம் என பல. போட்டிகள் மத்திய கல்லூரி, இந்து கல்லூரி, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெறும். சென்றலைட்ஸ், ஜோனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜோலிஸ்டார்ஸ், KCCC, ஷப்ரா, அரியாலை சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை, ஸ்டான்லி என பல கிளப் அணிகள். சென்றலைட்ஸ் என்றால் சண்முகலிங்கம்(இரும்பன்), ஜோனியன்ஸ் என்றால் சூரியகுமார்(சூரி), ஜொலிஸ்டார்ஸ் என்றால் தயாளன் என ஐம்பது வயதுக்காரர்கள்( தயாளன் கொஞ்சம் இளமை) தான் அணியில் முக்கிய ஆட்டக்காரர்கள். இரும்பன் ரன்அப் எடுத்து பவுலிங் போட்டால் பந்து எகிறிக்கொண்டு போகும். அதுவே யாழ் இந்து மைதானம் என்றால், கீப்பர் விடுவதெல்லாம் பின் மதிலில் பட்டு மதிலுக்கு மேலால் எம்பி விழும். அத்தனை வேகம் அந்த வயதிலும்.

கொக்குவில் இந்து இன்னொரு முக்கிய மைதானம். அதை மைதானம் என்று சொல்லுவதை விட வளவு என்று சொல்வதே பொருத்தம். இரண்டு பக்கங்களும் முப்பது மீட்டர் கூட வராது என்று நினைக்கிறேன். மதில் சுவர் தான் பவுண்டரி லைன்.  சுவரில் புல்லாக போய் பட்டாலும் பவுண்டரி தான். சிக்ஸுக்கு மதில் தாண்டவேண்டும். அப்படி ஒரு ரூல் அங்கே. ஒரு முறை மட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாழ் பல்கலைகழகத்துக்கும் ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் மட்ச். ஓபன் பட்டிங் திலக் என்று நினைக்கிறேன். நான் நேரே கீப்பருக்கு பின்னால் பவுண்டரி லைனில், சுடுமணலில் செருப்பை போட்டு அதற்கு மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நரேன் பந்து வீசுகிறார். சீறிக்கொண்டு வந்து பந்து விக்கட்டில் பட்டு தெறிக்க, பெயில்ஸ் அப்பிடியே ஆகாயத்தில் சரக்கென்று பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. அவ்வளவு சைஸ் அந்த மைதானம்!

ஒருமுறை ஆறுபேர் அணிகொண்ட ஐந்து ஓவர் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.  யாழ் செயலக-கச்சேரி அணி என்று ஒரு கனவு அணி உருவாகியது. அந்த அணியில் ரகுதாஸ், காண்டீபன், பிரஷாந்தன் என எல்லோருமே அதிரடி ஆட்டக்காரர்கள். சென்றல், சென்ஜோன்சில் எதிரும் புதிருமாக மோதியவர்கள் ஒரே அணியில். ஒரு ஆட்டத்தில் ரகுதாஸ் அண்ணா ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். போட்டதெல்லாம் கஸ்தூரியார் ரோட்டில் இருந்த பஸ் ஸ்டொப்புக்கு மேலால் பறந்து ஒவ்வொரு வீடுகளிலும் விழுந்துகொண்டிருந்தது. கூடவே காண்டீபனும் சேர்ந்து பந்தை அக்கம் பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க… அப்போது ஒரு நிறைவேறாத ஆசை. எமக்கென்று ஒரு அணி, அதிலே காண்டி, ரகுதாஸ், பீஷ்மன், சுரேஷ், லட்டு, நரேஷ், பிரபா, கிருபா, சின்ன வரதன், பெரிய வரதன் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி. உலக கிண்ணத்தில், பாகிஸ்தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, இலங்கை என  எல்லோரையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டி இந்தியாவுடன். அந்த பக்கம் சச்சின், காம்பிளி, இந்தப்பக்கம் பௌலிங் போடுவது காண்டீபன். எப்படி இருந்திருக்கும்? ப்ச் ..எல்லாமே ..  பெருமூச்சு தான்.

எங்கள் வீடு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்ததால் அதிகமான கம்பஸ் ஆட்டங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது கம்பஸ் அணியில், சின்ன/பெரிய வரதன், திலக், சுதேசன் தொட்டு பின்னாளில் பீஷ்மன் என முக்கிய பலர் விளையாடினார்கள். அருமையான அணி. இப்போது பூங்காவாக மாற்றப்பட்டிருக்கும் பரமேஸ்வரா கோயிலின் முன் மைதானத்தில் பல ஆட்டங்கள் நடக்கும். அந்த மரங்களுக்கு கீழே இருக்கும் பெஞ்சுகளில் இருந்து மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் முதல் வருட அக்காமாரை சீனியர்கள் கூட்டிக்கொண்டுவந்து செய்யும் ராக்கிங் கூட ப்ரீ ஷோவாக பார்க்கலாம். அந்த “என்ன கலர்? என்ன கலர்? என்ன கலர்?” என்று வெறும் ஈர்க்கை வைத்து ஒரு அக்காவை ஒரு சீனியர் நாதாறி மிரட்டி கேட்ட ராக்கிங் இன்னமும் நினைவு இருக்கிறது. விளங்கப்படுத்தினால் இன்னொரு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்காக போய்விடும். வேண்டாம்!

மீண்டும் வடக்கின் பெரும்போருக்கு வருவோம். 1992 ஆட்டம் நான் பார்த்த மிகச்சிறந்த பிக் மட்ச் என்று நினைக்கிறேன். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி முன்னூறுக்கு மேல் அடித்துவிட்டு மாலையில் டிக்ளேர் பண்ணியது. சென்ஜோன்ஸ் அணியில் யோகதாஸ் அண்ணா ஐந்து விக்கட்டும் காண்டீபன் அண்ணா நான்கு விக்கட்டும் நூற்றுச்சொச்ச ரன் கொடுத்து கைப்பற்றினார்கள். ஆகாஷ் அண்ணே கூட எழுபது ரன் அடித்திருக்கவேண்டும். அந்த ஆட்டத்தில் தான் லட்டு என்கின்ற லட்சுமிகரன் எட்டு விக்கட் எடுத்து சென்ஜோன்சை சரித்ததாக ஞாபகம். காண்டீபன் அண்ணா சமாளித்து ஆடி 74 ரன் அடித்து ஸ்லிப் கட்சில் அவுட் ஆனார். கேர்ஷன் அண்ணா வந்த வேகத்தில் கவர், பாயிண்ட் என்று எல்லா இடமும் சராமாரியாக அடித்து முப்பத்து சொச்ச ரன்னில் ஆட்டமிழக்க, பின்னுக்கு வந்த பிரதீபன் அண்ணா, எப்படிப்போட்டாலும் வழிச்சு துடைக்கும் பட்ஸ்மன். இரண்டு சிக்ஸர் இறக்கிவிட்டு அவரும் ஆட்டமிழக்க சென்ஜோன்ஸ் 230 சொச்ச ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்க்ஸ் சோபை இழந்து போரிங்காக டிரோவில் முடிந்தது வருத்தமே.

1992ம் ஆண்டு. மத்திய கல்லூரியில் under 15 ஆட்டம் ஒன்று. பாடசாலை முடிந்து வீடு போகும் வழியில் பார்த்துவிட்டு போகலாம் என்று நானும், கீர்த்தி, ரங்கன் என்ற எங்கள் வழமையான திருநெல்வேலி/கொக்குவில் குரூப் மைதானப்பக்கம் சைக்கிளில் போகிறோம். சென்ஜோன்ஸ்-சென்றல் ஆட்டம் தான். சென்ஜோன்ஸ் துடுப்பெடுத்தாடுகிறது. அறைக்காற்சட்டை போட்டு thigh pad கூட காற்சட்டைக்குள்ளால் வெளியே தெரியும். அவன் சூரியனை பார்த்து வணங்கியவாறே மைதானத்துக்குள் நுழைகிறான். பன்னிரண்டு வயது சிறுவன். எங்கள் வகுப்பு தான். நடையில் ஒரு கர்வம் எப்போதும் இருக்கும். சிங்கம் போல. பிட்ச்சுக்குள் வந்து, சோக்கட்டி எடுத்து லெக் ஸ்டம்ப் பார்த்து, நிலை எடுத்து அத்தனை பீல்டர்ஸ் பொசிஷனும் பார்தது பந்தை எதிர்கொள்ள தயாராகிறான். வேகப்பந்து. இவன் எப்படி பெரியவங்கள் போடுற பந்தை சமாளிக்கபோகிறான் என்றதில் பார்க்கும் எங்களுக்கு ஒரு அசிரத்தை. முதல் பந்து, ஷோர்ட் ஒப் த லெந்தில் விழும் பந்துக்கு, இயல்பாக ஆரம்பத்தில் பாக்புட்டுக்கு போய் பின் வேகமாக புஃரொண்ட் புட்டுக்கு சென்று எக்ஸ்ட்ரா கவரில் …. சடக்கென்று ஒரு டிரைவ்!

தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்கு கலக்கிய, இன்றைய திகதிக்கு தமிழர்களில் இருந்து பிறந்த மிகச்சிறந்த கிரிக்கட் வீரனனான, the best ever cricketer never to have represented a national team, ஏ.டி.கௌரிபாகன் சிம்பிளாக அந்த டிரைவை அடித்துவிட்டு அடுத்த பந்துக்கு தயாராகிறான். தன் வரவை சத்தம்போடாமல் அறிவித்தபடி!.

இதன் இறுதிப்பாகம் செவ்வாய் இரவு வெளிவரும்!

நன்றி,

படங்கள் இணையம்.

2 States: Story of My Marriage.


“Island of Blood”, “கோபல்ல கிராமம்”, “Restaurant at the end of universe”, “காட்டாறு” என்று தொடர்ச்சியாக கொஞ்சம் சீரியசான புத்தகங்கள். இம்முறை லைட்டாக தான் வாசிக்கவேண்டும் என்று புத்தக வரிசையை நோட்டம் விட்டபோது தலைவரின் “விடிவதற்குள் வா” அகப்பட்டது. திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு .. ப்ச் .. இன்னும் லைட்டாக வேண்டும் என்னும்போது வீணா அடிக்கடி சொல்லுவது ஞாபகம் வந்தது.
“அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள்? பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க .. கதை தெரிஞ்சாலும் வாசிக்க நல்லா இருக்கும்”
எனக்கு இப்போதைக்கு தேவை ரமணிச்சந்திரன் வகையறா தான் என்று அம்மாவிடம் போய் கேட்க, உனக்கென்ன லூசா? வாசிச்சு ரெண்டு பக்கத்தில தூக்கி எறிஞ்சுடுவ, உனக்கு அது தோதுப்படாது” என்றார். சரி ஆணியே வேண்டாம் என்று மீண்டும் என் கலக்ஷனுக்கு வந்து தேடியபோது மாட்டுப்பட்டது தான் 2 States : Story of My Marriage.
6969361
சென்ற வருடம் கஜன் டெல்லி போயிருந்தபோது பரிசாக வாங்கிவந்த புத்தகங்களில் ஒன்று. வாசிக்காமல் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தேன். ட்ரெயினில் போகும்போதும் திரும்பும்போதும், லஞ்ச் டைமில் Flagstaff gardenக்கு போய் எல்லா வெள்ளைகளும் கழட்டி எறிந்துவிட்டு ஜோடியாக புற்தரையில் வெயில் காயும். நான் அதைப்பார்த்து காய்ந்தபடியே புத்தகத்தை வாசித்து, இன்று முடிவுறும் சமயம் பொறுமை இல்லாமல் வீடு வந்ததும் வராததுமாய் சோபாவில் புதைந்து வாசித்து முடித்து … புத்தகத்தை பற்றி எழுதுவதை விட அதை வாசித்த அனுபவத்தை எழுதுவது அலாதியானது!
Five Point Someone, One Night @ the Call Center, The 3 Mistakes of My Life, Revolution 2020: Love, Corruption, Ambition, 2 States: The Story of My Marriage என சேட்டன் எழுதியது ஐந்து நாவல்கள். ஐந்தையும் வாசித்தாயிற்று. எல்லாமே ஒரே பாணி தான். ஒருவர் தன் வாழ்க்கையை யாருக்கோ சொல்லுவதாக எழுதப்பட்ட கதைகள். கதையில் வரும் பெண் ஹிந்தி ஹீரோயின் போல இருப்பாள். அழகான, modern sometimes feminist, அதே சமயம் வசதிப்பட்டால் கேலி செய்ய ஏதுவாக ஒரு வகை டம்ப் பாத்திரம். ஆண் .. ஹீரோ ஏதாவது IIT, IIMA அல்லது corporate சார்ந்த ஒருத்தனாக இருப்பான். காதல் அபத்தமாக வரும். செக்ஸ் அதைவிட அபத்தமாக.  இது சேட்டன் பகத்தின் எல்லா எழுத்திலும் இருக்கும்.
அப்பிடி என்றால் ஏன் வாசித்தாய் என்று கேட்டால், சேட்டன் பகத் ஒரு மஜிக் எழுத்தாளன். அவர் எழுத்து அப்படியே உங்களை கட்டிப்போடும். அவ்வளவு வேகம் சுவாரசியம்,  உங்களை கதைக்களனுக்குள் கொண்டுபோய், நடமாடவிட்டு, சுதாரிக்கவிடாமல் சுவாரசியங்களை தூவி, வாசித்து முடிந்து இரண்டு நாளைக்கு பிறகு தான் தோன்றும் .. அட பக்கா மொக்கை நாவல்டா இது என்று… ஆனாலும் அவரின் அடுத்த நாவல் வரும்போது இயல்பாக போய் வாங்குவீர்கள். அது தான் சேட்டன் பகத்.
கிரிஷ், டெல்லி வாழ் பஞ்சாபி இளைஞன். IIT முடித்து IIMA படிப்புக்காக அகமதபாத் போகிறான். அங்கே அனன்யா. கல்லூரியின் தேவதை. அழகு, திமிர், அதிகப்பிரசிங்கித்தனம் நிறைந்த தமிழ் பிராமண ஐயர்! சந்திக்கிறார்கள். மீண்டும் சந்திக்கிறார்கள். நண்பர்கள் என்கிறார்கள். கொஞ்சநாளில் கிஸ்.. அப்புறம் செக்ஸ்.. இரண்டு வாரத்தில் அவன் இருக்கும் ஹொஸ்டலில் லிவிங்டுகெதர். படிப்பு முடிய அடுத்தது என்ன? இங்கே தான் கதை ஆரம்பிக்கிறது.
கிரிஷ்ஷின் வீடு, அப்பா ஒரு போக்கு. அம்மா டிபிகல் பஞ்சாபி பெண்மணி. அனன்யா வீட்டில் அம்மா அப்பா இருவருமே பொதுவான கொன்சர்வேட்டிவ் பிராமண பெற்றோர். இங்கே பஞ்சாபி மதராசி பிரச்சனைகள், இருவர் கலாச்சார விரிசல்கள், இதற்குள் மாட்டுப்பட்டு திண்டாடும் க்ரிஷ் அனன்யா என வழமையான “ஜோடி”, “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “Meet my parents” வகையறா கதை தான். ஆனால் சேட்டன் பிரசெண்டேஷனில் வெளுத்து வாங்குவார்.
இது சேட்டனின் சொந்த கதை. நிஜத்திலுமே அவர் தமிழ் பெண்ணை தான் மணந்து இருக்கிறார். நாவலின் முக்கியமான விஷயம் இரண்டு கலாச்சாரங்கள், அதன் மனிதர்களை அறிமுகப்படுத்துவது தான். ஆனாலும் கதை கிரிஷின் பார்வையில் சொல்லப்படுவதால் மதராசி என்று சொல்லி தமிழர்களுக்கு செம நக்கல். பஞ்சாபிகளையும் கலாய்த்தாலும் தன் மனைவி தமிழ் என்பதாலும், தான் சொந்த வாழ்க்கையில் எப்படி நினைத்தாரோ அப்படியே எழுதியிருப்பதாலும் தமிழர் மீது நக்கல் பல இடங்களில் எல்லை தாண்டுகிறது. ட்ரெயினில் இருந்து வாசிக்கும்போது பல இடங்களில் இயல்பாக புன்முறுவல் வந்து முன்னுக்கு இருந்த வெள்ளைக்காரி பதிலுக்கு தானும் புன்னகைத்து … அட அந்த கதை என்னத்துக்கு… சொன்னாப்போல தமிழின உணர்வாளர்கள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது! உதாரணத்துக்கு,
“You are so fair, are you hundred percent south Indian? .. By South Indian standards, she is quite pretty, otherwise how black and ugly are the.”
“The Tamil font resembles those optical illusion puzzles that give you a headache if you stare at them long enough.”
“’Apologise’, Ramanujan told me, I glanced around. Tamils gathered around me like the LTTE. I had no choice. ‘I am sorry’ I said”
Five Point Someone வாசித்தவர்களுக்கு, அதன் கதை சொல்லும் பாத்திரம் கிரிஷ்ஷை தெரிந்திருக்கும். அதிலே கல்லூரி பேராசிரியர் பெண்ணை க்ரிஷ் காதலிப்பதாக இருக்கும்(த்ரீ இடியட்ஸ், நண்பனை போட்டு குழப்பாதீர்கள். படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரிஜினல் பாத்திரங்களை தலைகீழ் ஆக்கியிருப்பார்கள்). இந்த நாவலில் அதே க்ரிஷ் தான், அந்த பெண்ணோடு ப்ரேக் அப் என்ற பாணியில் கதை ஆரம்பிக்கிறது. சேட்டன் கூட IIT முடித்து தான் IIMA செய்து, அங்கே தான் மனைவி அனுஷாவை சந்தித்தார். கதையில் அது அனன்யா ஆகிவிட்டது அவ்வளவு தான்.
chetan-bhagat-with-wife-anusha-pic8நாவல் முழுக்க கிளிஷே வசங்கள் ஏகத்துக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு,
“The word “future” and females is a dangerous combination.”
“She had perfect features, with her eye, nose, lips, and ears the right size and in right places. That is all it takes to make people beautiful, normal body parts – yet why does nature mess it up so many times?”
“Corporate types love to pretend their life is exciting. The whispers, fist-pumping and animated hand gestures are all designed to lift our job description from what it really is - that of an overpaid clerk”
சேட்டனை, வாழ்க்கையை அபரிமிதமாக படம் பிடிக்கும், எங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட வைக்கும் எழுத்துக்களை எழுதும் அவரின் சமகாலத்து லாகிரியோடோ, காலீத் ஹூசைனியோடோ ஏன் அனிதா நாயரோடு கூட ஒப்பிடமுடியாது. சேட்டன் ஜனரஞ்சக எழுத்தாளர். சொல்ல வரும் விஷயத்தை மசாலா கலந்து சொல்லுவார். எழுதும்போதே இந்த நாவலை யாராவது படமாக எடுப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே காட்சிகள் அமைக்கிறாரோ என்ற சந்தேகம் பல இடங்களில் வரும். சேட்டன் இன்னுமொரு நாவல் எழுதி அதுவும் இதே பாணியில் அமைந்தால், வாசகர்கள் இவரை தாண்டி சென்றுவிடுவார்கள் என்பது இவரின் கடைசியாக வெளிவந்த Revolution 2020 நாவல் சொல்லும் பாடம். பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று.
The world's most sensible person and the biggest idiot both stay within us. The worst part is, you can't even tell who is who.