வியாழமாற்றம் 31-01-2013 : கமல்


கமல்

நேற்றைய பிரஸ்மீட்டை பார்த்தபோது கவலையாக இருந்தது.  நாட்டைவிட்டே வெளியேற போகிறேன் என்று வெறுத்துப்போய் சொன்னார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் பெருமையாக விஜய்டிவி நிகழ்ச்சி ஒன்றில் வந்து, images
உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்
 
 
என்று நாலடியாரை மேற்கோள் காட்டினார். உள்ளத்தாலேயே பேசிக்கொள்பவர்களோடு கூடியிருக்க இன்பம் மேலும் மேலும் பெருகும் என்று இசை ரசனையையை பற்றி பேசும்போது சொன்னார். இறுதி இரண்டு வரிகளையும் அன்றைக்கு விட்டுவிட்டார். ஆனால் இன்றைக்கு தனக்கு தானே சொல்லியிருக்கக்கூடும். நம் கருத்துக்களை வெளிப்படையாக சொன்னாலும் அதை புரிந்துகொள்ளாமல் இருக்கும் அறிவிலிகளை விட்டு விலகிப்போனால் உன்னுடைய துன்பங்கள் எல்லாமே தொலைந்துவிடும் என்று சொல்லி நிற்கும் அற்புத வரிகள். விலகிப்போவோமோ என்று இன்றைக்கு நினைக்கிறார்.
கமலின் திறமைக்கு தமிழர்கள் எப்போதுமே அதற்குரிய அங்கீகாரத்தை கொடுத்ததில்லை. அவரின் தெளிவான மேடைப்பெச்சுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. புரிந்த கொஞ்சப்பேரும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால் கமலை அரை வேக்காடுகள் எப்போதுமே போட்டு பந்தாடி இருக்கின்றன. தேவர்மகன் கூட அந்த காலத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. விருமாண்டியில் துரத்தி துரத்தி அடித்தார்கள். மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு தேவையேயில்லாமல் அலுப்பு கொடுத்தார்கள். மன்மதன் அம்புவில் எழுதிய கவிதையை நீக்க சொன்னார்கள். எல்லாவற்றையும் விட நகைச்சுவை ஹேராம். ஹேராம் காந்தியத்தை கொச்சைப்படுத்துகிறது, மத ஒற்றுமையை குலைக்கிறது என்று தியேட்டர்களை எரித்தார்கள். ஹேராம் அளவுக்கு காந்தியத்தை போதித்த அழுத்தமான படத்தை இந்த தேதி வரைக்கும் நான் பார்க்கவில்லை, இதோடு ஒப்பிடும்போது பென்கிங்க்ஸ்லி நடித்த காந்தி சாதாரணம். ஹேராம் இங்கிலாந்தில் வெளிவந்திருந்தால் பாஃப்டா கிடைத்திருக்கும். ஹோலிவுட் என்றால் நிச்சயம் கோல்டன் குளோப், ஒஸ்கார் எல்லாம் கிடைத்திருக்கும். இந்தியாவில் வெளியானதால் இரண்டு மூன்று தியேட்டர்களுக்கு தீவைப்பும், கூடவே சிறந்த உடையலங்காரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இப்படி முகத்திலடிக்க எவனால் முடியும்?
கமல்50 விழாவில அந்த மனுஷனை தமிழகத்தின் சொத்து பத்து என்று எல்லோரும் கொண்டாடினார்கள். இன்றைக்கு தனக்கு சொந்தமான சொத்தையே இழந்து நடுத்தெருவுக்கு போகும் அளவுக்கு நாயாட்டம் அலையும் நிலை. கமல் திறமைக்கும் அறிவுக்கும் அவர் எந்த நாட்டுக்கு போனாலும் அவரை தலையில் தூக்கி ஆடுவார்கள். விஸ்வரூபம் படம் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது ஒருபுறம். ஆனால் படத்தையே வெளியிடாமல் தடுக்கும் தீவிரவாதத்தை பார்த்தால் தமிழகத்தை பொம்பிளை கோத்தபாயா ஆளுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
பிரெடெரிக்கா ஜோன்சை பற்றி ஏற்கனவே வியாழமாற்றத்தில் எழுதியிருக்கிறேன். பத்திரிகையாளர் லசந்த கொல்லப்பட்டபின்னர் சண்டே லீடர் பத்திரிகையின் எடிட்டராக பணிபுரிந்தவர். கோத்தாவின் அட்டூழியங்களை புட்டு புட்டு வைத்ததற்காக, கோத்தாவிடம் படு 1-014கெட்ட தூஷணத்தில் ஏச்சு வாங்கியவர். உலகம் பூராவும் அவருக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்தார்கள். ஆணியே புடுங்க முடியவில்லை. சண்டே லீடர் பத்திரிகையையே அரசாங்கம் விலைக்கு வாங்கி அவரை வேலையை விட்டு துரத்தியது. தொடர்ந்து குடுத்த குடைச்சல்களால் நாட்டை விட்டே துரத்தியது.
ஷிராணி பண்டாரநாயக்கா, இலங்கையில் உயர்நீதிமன்ற நீதியரசர். அரசாங்கம் கொண்டுவந்த சட்டச்சீர்த்திருத்தம் அரசியல் சாசனவிதிகளுக்கு முரணானது என்று சொன்ன ஒரே காரணத்துக்காக கேவலமாக தூக்கி எறியப்பட்டார். உலகமே கூக்குரல் கொடுத்தது. ஆணியே புடுங்க முடியவில்லை. அவர் எப்போது நாட்டை விட்டு ஓடுவாரோ தெரியாது.
நான்கு பல்கலைக்கழக மாணவர்கள். போரில் இறந்தவர்களுக்காக விளக்கேற்றிய பாவத்துக்காக உள்ளே போடப்பட்டார்கள். விடுதலை செய் இல்லாவிட்டால் வகுப்புகளை பகிஷ்கரிப்போம் என்று மாணவர்கள் சொல்ல, பல்கலைக்கழகத்தையே மூடிவிடலாம், நல்லதாக போயிற்று என்கிறார் கல்வி அமைச்சர்.
“Still Counting The Dead” என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இறுதிப்போரில் சிக்குண்டு உயிர் தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிய பலரின் சாட்சியங்களை பிரான்சிஸ் ஹாரிசன் விரிவாக எழுதியிருக்கிறார். அதிலே கோர்பன் என்பவர் தாய்நாட்டை பிரிந்திருக்கும் சோகத்தை பற்றி இப்படி விவரிக்கிறார். 
“Its as if you cannot love your mother because she somehow hates you. You wish to love her, but she doesn't love you back”, he says feeling rejected by his own country.
“Tamil Nadu wants me out” என்று கமல் புலம்பும்போது எனக்கு இவ்வளவு விஷயங்களும் ஞாபகம் வந்தது. ஈழத்தில்  இடம்பெறும் விஷயங்களோடு ஒப்பிடுகையில் கமல் பிரச்சனை நத்திங். ஆனால் சொந்த நாட்டில், சொந்த மண்ணில் புறக்கணிக்கப்படும் சோகம் எல்லோருக்குமே பொதுதான். ஒரு சாதாரண அக்ஷன் படத்தின் காட்சிகளையே சகிக்கமுடியாமல், சகிப்புத்தன்மையை போதிக்கும் மதத்தின் “ஒரு சிலரின்” ஆட்டத்துக்கு இவ்வளவு கூத்து நடக்கிறது என்றால், அதுவும் கமல் போன்ற லட்சத்தில் ஒன்றாக பிறக்கும் திறமைசாலிக்கே இந்த நிலை என்றால், கமல் மதச்சார்பற்ற secular state ஒன்றில் போய் வசிக்க விரும்புகிறேன் என்று வெறுத்துபோய் சொன்னது சரியே. 
Tamil Nadu doesn’t deserve Kamal.
 

புரைக்கேறுது .. இடக்கண் துடிக்குது .. பீஃலிங்க்ஸ்!

வசூல்  ராஜாவில் கமல் சினேகா காட்சி. “ஒருத்தருக்கு ஒருத்தர் பீலிங் இருந்தால், மனசுக்குள்ள நினைச்சாலே அது அடுத்தாளுக்கு கேட்கும்” என்பார் கமல். சினேகா திரும்பி போய்க்கொண்டே இருப்பார். இவர் மனசுக்குள்ளேயே அழைக்க, அனிச்சையாக சினேகா திரும்பி என்ன? என்று கேட்பார். பின்னணி இசை கதி கலக்கும். அசத்தல் காட்சி அது. பீலிங்க்ஸ்.

வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது புரைக்கேறினால் “யாரோ நினைக்கிறாங்கள்” என்று தலையில் எல்லோரும் ஏறி நின்று குட்டுவார்கள். பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது. ஆண்களுக்கு வலதுகண் துடிக்கவேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். இட்டுக்கதைகள் தான். ஆனால் அனிச்சை செயல்களுக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா? நான் நினைப்பதை உங்களுக்கு அனிச்சையாக தெரியப்படுத்தலாமா? ஏக சமயத்தில் முடியுமா? என்றால், குவாண்டம் எண்டான்ஜில்மண்ட்(Quantum Entanglement) மூலம் முடியும் என்கிறார்கள். தமிழில் எப்படி அழைப்பார்களோ? தெரியாது. தெரிந்த அளவில் குவாண்டம் முடிச்சு என்று வைத்துக்கொள்வோம்.
vasool
குவாண்டம் பௌதீகம் என்பது சடப்போருட்களின் ஆதார கட்டமைப்புகளான குவார்க்குகள், பொசன்கள், அவற்றுக்கிடையேயான தொடர்பாடுகளை மிக நுண்ணிய அளவில் அலசுகிறது. இதுபற்றி ஏற்கனவே வியாழமாற்றத்தில் இங்கேயும் பின்னர் இங்கேயும் தொட்டிருக்கிறேன். இப்போ நேரடியாக மாட்டருக்கு போவோம்.
இரண்டு குவாண்டம் துணுக்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். அது போட்டோனாக இருக்கட்டும். அல்லது இலகுவாக விளங்குவதற்கு இரண்டு அணுக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இரண்டு அணுக்களை எதிரெதிரே அடிப்பதன் மூலமோ, அல்லது கூர்மைப்படுத்துவதன் மூலமோ இரண்டுக்குமிடையே ஒரு முடிச்சு போடலாம். முடிச்சு என்றால் கையிற்றால் கட்டியோ அல்லது ஓட்டியோ போடும் முடிச்சு இல்லை. இரண்டையும் ஒரு செயற்பாடு மூலம் பொருத்தத்தை ஏற்படுத்துவது. Entangling process என்று சொல்வார்கள். அதை செய்வதற்கு பல படிமுறைகள் இருக்கிறது. இங்கே வேண்டாம். அப்படி அந்த அணுக்களை entangle பண்ணினால் .. முடிச்சு போட்டால், அப்புறம் இரண்டு அணுக்களும் தங்களுக்குள் ஒருவித அண்டர்ஸ்டாண்டிங்கில் இயங்க ஆரம்பிக்கும். அதாவது முதலாவது அணு எப்போதுமே இடம்-வலமாக சுற்றினால் அதற்கிசைய இரண்டாவது அணு வலம்-இடமாக சுற்றும். இரண்டும் இப்படி சுற்றிக்கொண்டே இருக்கும். ஒருவேளை முதலாவது வலம்-இடமாக சுற்றினால் உடனே இரண்டாவது இடம்-வலமாக சுற்றும். பொதுவான கணவன் மனைவி போல. கணவன் எது செய்தாலும் அதற்கு நேர் எதிர்மறையாக மனைவி செய்வாள். நிகர விளைவு பூச்சியமாக இருக்கும். இப்படியாக முடிக்கப்பட்ட ஜோடிகளை entangled pair என்கிறார்கள். சிம்பிளாக சொல்லப்போனால் கணவன் மனைவி. இது ஒன்றும் பெரும் ஆச்சர்யமான விஷயம் கிடையாது.அவதார் படத்தில் எல்லா விலங்கு தாவரங்களும் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வோடு இயங்குமே, அதுவுமே ஒரு வகை குவாண்டம் முடிச்சு தான்.
quantum_entanglement
இப்போது இந்த கணவன் மனைவி அணுக்களை பிரித்து வையுங்கள். கணவனை ஏற்காடுக்கும் மனைவியை தெல்லிப்பளைக்கும் அனுப்புங்கள். என்ன நடக்கும்? அந்த அண்டர்ஸ்டாண்டிங் இப்போது தொலைந்துவிடும். அதது தன் வேலையைப்பார்க்கும் என்று நினைப்பீர்கள். அது தான் இல்லை. முடிச்சு அணுக்களை பிரித்து வைத்தாலும் அந்த அண்டர்ஸ்டாண்டிங் தொடரும். எந்த மாற்றமும் இருக்காது. அது அது எந்த வகையில் சுழன்றதோ அப்படியே சுழன்றுகொண்டிருக்கும். சரி அப்படி என்றால் கணவன் அணுவை திசை மாற்றி சுழற்றினால்? எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் மனைவி அணு இப்போது அந்த திசைக்கு எதிர்த்திசையில் சுழற தொடங்கும். இரண்டு முடிச்சு அணுக்களை பிரித்துவிட்டாலும் அவற்றுக்கிடையே இருக்கும் முடிச்சு அப்படியே இருக்கும். தந்தியில்லை, வயர் இல்லை, ரேடியோ இயக்கம் இல்லை. ஆனாலும் ஒன்று செய்வதை உணர்ந்து அந்த பொழுதிலேயே மற்றது தன்னுடைய இயக்கத்தை மாற்றுகிறது. இந்த பரிசோதனையை இரண்டு அயன் என்று சொல்லப்படும் எதிர்மறை அணுக்களை வைத்து 240 மைக்ரோமீட்டர் தூரத்தில் பிரித்து நிறுத்தி பரிசோதித்திருக்கிறார்கள். நம்ம ஆள் ஷ்ரோடிங்கர் இந்த துறையில் மன்னன். ஐன்ஸ்டீன் இதை க்வாண்டம் துணுக்குகளின் மாயாஜாலம் என்று வாய் பிளந்திருக்கிறார். பின்ன? ஒளியின் வேகத்தைவிட மிக வேகமாக முடிச்சு அணுக்கள் சிக்னல்களை கடத்துகிறது. அதுவும் பவர் சோர்ஸ் இல்லாமல்.
சரி இதால என்னதான் பிரயோசனம்? கணனி வலையமைப்பை குவாண்டம் முடிச்சுகளால் உருவாக்கலாம். நெட்வோர்க் டிலே என்பதே இருக்காது.  கணனியில் ப்ரோசசிங் பவர் அதீதமாக பெருகும். தொடர்பாடல் சக்தி நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு வளர்ச்சி அடையும். குவாண்டம் முடிச்சுகளை உருவாக்கி, ஒருதொகுதியை பூமியில் வைத்துக்கொண்டு மற்றையதை பிரபஞ்சம் முழுக்க செலுத்திக்கொண்டிருக்கலாம். இஷ்டத்துக்கேற்றபடி இயக்கிக்கொண்டிருக்கலாம். சக்தி என்பது அதற்குள்ளேயே இருக்கிறது. ஆச்சர்யம் இல்லையா? ஆனால் சூழல் தாக்கங்கள் இந்த முடிச்சின் சக்தியை குலைத்துவிடுமாம். அதனால் புறச்சூழலில் இருந்து அந்த அணுக்களை தனிமைப்படுத்தவேண்டும். முயன்றால் முடியும் என்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் டீப்பாக போனால், இந்த க்வாண்டம் சிக்னல்கள் ஒளியைவிட வேகமாக செல்பவை. அதனாலேயே ஐன்ஸ்டீன் பலகாலமாக இதை நம்பவேயில்லை. இறுதியில் நிரூபித்தபின்னரும் spooky action என்று இதை விளித்தார். அதாவது மஜிக். அவருக்கே மஜிக் என்றால்?
timthumbஎங்கள் பௌதிக விதிகள் எல்லாம் ஒளியை அடிப்படையாக கொண்டவை. ஒளியை விட வேறு எதுவும் வேகமாக போகாது என்று சொல்பவை. ஒருமுறை ஒளியை விட வேகமாக போகும் விஷயம் பற்றி கந்தசாமியில் எழுதியபோது லண்டனில் பிஎச்டி படிக்கும் ஒருவர் என்னைப்போட்டு வாட்டு வாட்டென்று வாட்டினார். ஆனால் இது சாத்தியமே என்று குவாண்டம் அறிவியல் சொல்லுகிறது. சாத்தியமானால் சிலவேளைகளில் முடிவிலி பிரபஞ்சங்கள்(Infinite Universe) என்ற தியரி நிஜமாகும் வாய்ப்பு இருக்கிறது. அது என்ன முடிவிலி பிரபஞ்சங்கள். எங்களுடைய ஒவ்வொரு அசைவும் ஏற்கனவே இங்கே இருக்கிறது. நாங்கள் தான் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்கு போகிறோம். அதாவது இதை எழுதும் நானும் எழுதாத நானும் ஏற்கனவே இருக்கிறது. நான் எழுதுவதை தேர்ந்தெடுக்கிறேன். நீங்கள் வாசிப்பதை தேர்ந்தெடுக்கிறீர்கள். வாசிக்காத நீங்களும் எழுதாத நானும் இங்கேயே இருக்கிறோம். அதை வேறு ஒரு ஜேகேயும் மேகலாவும் தேர்ந்தெடுத்திருக்கலாம். இந்த தேர்ந்தெடுப்புக்கான தொடர்ச்சியை சாத்தியப்படுத்துவது குவாண்டம் முடிச்சு. இதன் நீட்சி தான் கேயாஸ் தியரி. கமல் சத்தம்போடாமல் தசாவதாரத்தில் காட்டிய விஷயம். புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை நாங்கள். பத்து வேடத்தில் வந்து அசத்திய நடிப்பு மாமேதை என்று புகழ்ந்துவிட்டு போய்விட்டோம்.
upanishads3கடந்த காலத்தை திரும்பிப்பார்த்து அட, இது இப்படி நடக்காமல் அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நாங்கள் நினைப்பதில்லையா? ஆனால் இரண்டு சாத்தியங்களுமே நிஜத்தில் இருக்கின்றன. சாஸ்வதம். என்ன நான் இருக்கும் பிரபஞ்சத்தில் ஒரே ஒரு கொம்பினேஷன் சாத்தியமாகிறது. இன்னொரு பிரபஞ்சத்தில் மற்றையது சாத்தியமாகிறது. இதைத்தான் எங்கள் உபநிடதங்களும் சொல்லுது அண்ணே என்று கேதா கொமென்ட் போடலாம். குவாண்டம் பௌதீகம் கொஞ்சம் அப்படித்தான். இந்த முடிச்சை போடுவது கடவுள் என்கிறது மதம். குவாண்டம் இதுவரைக்கும் அது இயல்பான முடிச்சு என்கிறது. Common sense என்று நினைக்கும் பல விஷயங்கள் அணுவைத்துளைத்து குவார்க்குகளுக்குள் புகுந்துவிட்டால் தவிடுபொடியாகிவிடும். ஸ்டீவ் ஜொப்ஸ் சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை.
You can't connect the dots looking forward, you can only connect them looking backwards.
ஆனால் குவாண்டத்தையும் அதன் இயங்கங்களையும் சரியாக புரிந்தால் முன்னே போகப்போகும் புள்ளிகளையும் இணைக்கலாம். அதற்கு இரண்டாயிரம் வருஷங்கள் எடுக்கலாம்.
எனக்கு தெரிந்து பல நண்பர்கள் விஞ்ஞான துறைகளில் பிஎச்டி செய்கிறார்கள். ஆராய்ச்சி என்று இரவு பகல் படலை கூட வாசிக்க நேரமில்லாமல் ஆய்வுகூடங்களில் கழிக்கிறார்கள். ஆனால் பௌதீகத்தில், அதுவும் குவாண்ட்டம் சார்ந்த பார்ட்டிக்கிள் பிஸிக்ஸில் யாருமே செய்வதாக தெரிவதில்லை. செய்பவர்கள் யாராவது இருந்தால், அல்லது அவர்களை யாருக்காவது தெரிந்தால் அறிமுகப்படுத்துங்கள். கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாண கல்லூரி மாணவர் மத்தியில் இதை பரப்பவேண்டும். ஒரு லட்சம் மாணவர்களிடம் முயன்றால் யாராவது ஒருவன் போய் நூலகத்தில் ஷ்ரோடிங்கர் தூக்கலாம். விதை நாங்க போடோணும்!

உயிரிடை பொதிந்த ஊரே

பொங்கல் விழாவுக்கு கவியரங்கம் செய்ய சொன்னார்கள். தலைப்பு “கரும்பிடை ஏறிய சாறு” என்றார்கள். ஹோல்ட் ஒன் என்று சொல்லிவிட்டு உடனேயே கேதாவுக்கு கோல் போட்டு “மச்சி கரும்பிடை ஊறிய சாறு” என்றால் என்ன அர்த்தம்? என்றேன்! “கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போல”, கரும்பு பார்த்தா கொஞ்சம் ஸ்ட்ரோங் என்றாலும் பிழிய பிழிய சுவை வடியும் அண்ணே, அப்பிடி ஊறிக்கிடக்கிற மாட்டரை வெளியே கொண்டுவரணும் என்றான். நீ என்ன எழுத போறாய்? என்று கேட்க “இருளிடை ஏறிய இறையே” என்றான். சுத்தம்.
இதுக்குள்ள நான் என்னத்த பேசிறது? காதலை பேசவா என்று கேட்டேன். “வெறும் சக்கையை வச்சுக்கொண்டு என்ன செய்ய போறீங்கள்” எண்டான். தெளிவா தான்யா இருக்கிறாங்கள் என்று நினைத்துக்கொண்டே ஊரைப்பற்றி பேசலாம் என்று முடிவு எடுத்தாயிற்று. தலைப்பையும் “உயிரிடை உறைந்த ஊரே” என்று முடிவு செய்து விழாக்குழுவுக்கு அனுப்பினேன். “உறைந்த” என்ற சொல்ல கொஞ்சம் எதிர்மறை. “பொதிந்த” என்று மாற்றுங்களேன் என்றார் ஒருங்கிணைப்பாளர். இவ்வளவு ஆழமாக கூட யோசிப்பார்களா என்று அப்போதே குலப்பன் அடித்தது. கேதா வேறு இடையிடையே “பித்தன் எனை பித்தன் என்றான், செம்பு பித்தளை என்றான்” என்று சந்தத்தோடு ஒன்றிரண்டு பிட்டுகள் காரில் எடுத்துவிட வயிற்றை வேறு கலக்கியது.
ஊரென்றால் யாழ்ப்பாணம் பற்றி எழுதலாம். நயினாதீவு எழுதலாம். ஆனால் உயிரிடை பொதிந்த ஊர் என்றால் இரண்டு வருடங்கள் என்னை தத்தெடுத்து கொண்டாடிய வட்டக்கச்சி தான். அதை எழுதும்போது தான் நிஜமான உணர்வு வரும் என்று நினைத்து ஒரே இரவில் எழுதிய கவிதை இது. சென்றமுறை வாலிபன், சந்தமே உங்கட கவிதைல இல்லையே என்று கொஞ்சம் திட்டியிருந்தான். இம்முறை அதுவும் மஹாகவி உருத்திராமூர்த்தியை வாசித்த பாதிப்பில் முயற்சி செய்திருந்தேன். எழுதிவிட்டு வாசித்தபோது ஓரளவுக்கு ஒகே என்று தோன்றியது. சபையில் வரவேற்பு பெற்றது. ஆனால் படலையில் கச்சான் அவ்வளவு விலை போகவில்லை. ஏனென்று தெரியவில்லை. முழுக்கவிதை இந்த லிங்கில்.
“பூத்தகொடி பூத்திருக்கும்” எழுதும்போது புதுவை பாட்டும் அந்த காலமும் நினைவில் வந்து போனது. எழுதும்போது திருப்தி தந்த வரிகள்.
உங்க ஊரில் பொங்கல் என்றால் பானை ரொம்ப சின்னதாகும்
இந்த ஊரில் யானை வந்தால் பானை முன்னே சின்னதாகும்

குசினிக்கு உள்ளிருந்து பொரிக்கும் வடை வாசம் வரும்
மோதகமும் கொழுக்கட்டையும் பிடிக்க ஒரு கூட்டம் வரும்
இடையிடையே குண்டு வரும் பொம்பர் வரும் ஷெல்லு வரும்
பங்கருக்குள் போய் வரவே வடை எல்லாம் தீய்ந்துவிடும்

திட்டமிட்டே தலையை போஃகஸ் பண்ணி, மண்டையில் மாட்டார் இல்லை என்பதை உலகெல்லாம் தெரியப்படுத்திய, வீடியோ எடுத்த வீணாவுக்கு கண்டனங்கள். அடுத்த பிறப்பில் ஆணாக பிறந்து ஆறு வயதிலேயே மொட்டை விழ கடவது.
எனக்கு பிறகு வந்த கேதாவின் கவிதை ஒரு ஷேவாக் இன்னிங்க்ஸ். பல சிக்ஸர்கள் என்ன ஏது என்று பார்க்காமலேயே அடித்தான். நகைச்சுவைக்குள்ளும் கடவுளை கொண்டு வந்து நிறுத்திய கத்தி மேல் நடை அவனுக்கு மட்டுமே முடியக்கூடியது.  அவன் கவிதையில் எனக்கு பிடித்த் வரிகள்.
சுட்டெரிக்கிறான் என்று சூரியனை மதிப்பதில்லை 
அவன் விட்டகன்ற பின்னாலே சத்தமின்றி கடன்வாங்கி 
நித்திரைக்கு போகாதோர் நிம்மதிக்கு ஒளி வீசும் 
ஒற்றை நிலா புகழ் உலகமெல்லாம் பரவி நிற்கும்
அந்த வரிகளை அனுபவித்தாலே புரியும். புரிந்தது. முழுக்கவிதை இங்கே.
 

மயிலே மயிலே உன் தோகை எங்கே?

எட்டு மாதங்களுக்கு முன்னர் Canon 600D ஒன்றை வாங்கி, ஹர்ஷாலும் கேதாவும் குட்டி குட்டி சொல்லித்தர கொஞ்சம் படித்தது. வாங்கி மூன்றே வாரத்தில் திருடன் வீடு புகுந்து ஜட்டி தவிர மிச்ச எல்லாமே சுருட்டிக்கொண்டு போனது பற்றி ஏற்கனவே அழுதுவிட்டேன். ஆனாலும் மூன்றே மாதத்தில் வாயைக்கட்டி வயிற்றைகட்டி மீண்டும் வாங்கியாயிற்று. அதில் எடுத்த படம்.
IMG_0813
இந்த படத்தை வீட்டு வரவேற்பறை கன்வாசில் பார்க்கும்போது முணுமுணுக்கும் பாட்டு மயிலே மயிலே. ஜென்சியும் எஸ்பிபியும் பாடிய இன்னொரு ராஜாங்கம். ஜென்சியின் குரலில் இருக்கும் இன்னசென்ஸ் என்னவோ செய்யும்.
மயில் எனக்கு சிக்கியது ஆச்சர்யம். அதுவும் தோகை விரித்து எனக்காகவே நெடுநேரம் ஆடுகின்ற மயிலை காண ஆச்சர்யமோ ஆச்சர்யம். “டேய் எனக்கு கூட ஒரு மயில் போஸ் குடுத்துது மச்சி” என்று கஜனிடம் சொன்னேன். “தோகை விரிச்சு ஆடினதா?’ என்று கேட்டான். “மைன்ட் ப்ளோயிங்” என்றேன். அப்படியென்றால் அது ஆண் மயில் மச்சான்!
9 comments :

 1. "Tamil Nadu doesn’t deserve Kamal."

  Yes.

  ReplyDelete
 2. கமலை கலங்க தான் வைத்து விட்டார்கள்

  ReplyDelete
 3. JK மிகவும் சுவாரசியமான பதிவு. எதில இருந்து எதுக்கு தாவி அத மிகவும் லாவகமா கையாண்டு அருமையா எழுதி இருக்கிறிங்கள். "Entangled Pair" பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது. இத எல்லாம் ஒழுங்கா கற்க முயற்சி செயேலயே எண்டு கவலையாவும் கிடக்கு.

  //உணர உணரும் உணர்வுடையாரைப்
  புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
  தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
  பிரியப் பிரியுமாம் நோய்//

  ReplyDelete
  Replies
  1. வாங்க வீணா ... மிகவும் நன்றி. கடல் நீங்க ரெண்டு பேரும் பார்க்கவராதது கொஞ்சம் .கவலை .. 8.45 show பார்க்க போறன் ...

   Delete
 4. பெரும்பான்மையான நமது தமிழக மக்களுக்கு சினிமா பற்றிய சரியான புரிதல் கிடையாது.சினிமாவை சினிமாவாக பார்க்கிற புரிதல்;நம் மக்கள் திரையில் தோன்றும் தமது நாயகர்களை பூஜிக்கிறார்கள் ;நிஜ வாழ்க்கையில் நிகழும் தமது பிரச்சினைகளுக்கு திரையில் தீர்வை தேடுகிறார்கள்;தமது நாயகன்கள் திரையில் கூறுவதை எவ்வித மறு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கடைப்பிடிக்கிறார்கள்; தங்களுக்கு வேண்டிய தலைவர்களை நிஜ உலகத்தில் தேடாமல் திரையில் தேடி கொண்டிருக்கிறார்கள்;இதுதான் கடந்த அரை நூற்றாண்டாக தொடர்கிறது.
  அதனால் கமல் போன்ற சிறந்த படைப்பாளிகள் தேவர் மகன்,விருமாண்டி மற்றும் ஹேராம் போன்ற சிறந்த படைப்புகளை உருவாக்கும்போது,கதை நாயகன் ஒரு சாதியை/மதத்தை உயர்த்தியும்,மற்ற சாதியை/மதத்தை பழித்தும் பேசுவதாக நம் மக்கள் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆகவே இது புரிதலில் உள்ள குறைபாடு.

  குவாண்டம் முடிச்சு பற்றிய அறிவியல் விளக்கம் மிக அருமை தல.

  உயிரிடை பொதிந்த ஊரே என்ற தங்களது கவிதையும் இருளிடை ஏறிய இறையே என்ற தங்கள் நண்பரது கவிதையும் காணொளியில் கண்டேன்;தங்களது தளத்திலும் வாசித்தேன். //தேன்வண்டு அதை மறந்து, பெண்ணின் முடியிடையில் முகம் புதைக்கும்// அது என்ன, சங்க காலம் முதல் நவீன காலம் வரைக்கும் எல்லா கவிஞர்களும் தேன்வண்டு பொண்ணுகளை மட்டும்தான் தேடிவருகிறது என்றே எழுதுகிறீர்கள்.ஆண்கள்,பாவம் அவர்களையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க.
  தங்கள் நண்பர் கேதா பல இடங்களில் சிரிக்க வைத்து கூடவே சிந்தனையை தூண்டி விடுகிறார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருகேசன் ...

   // தேன்வண்டு பொண்ணுகளை மட்டும்தான் என்றே எழுதுகிறீர்கள்.ஆண்கள்,பாவம் அவர்களையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க எழுதலாம் பாஸ் .. அவனாடி நீயி என்று கேட்டிடுவாங்க! ஹ ஹா

   //தங்கள் நண்பர் கேதா பல இடங்களில் சிரிக்க வைத்து கூடவே சிந்தனையை தூண்டி விடுகிறார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.//

   கேதாவுக்கு தெரியப்படுத்துகிறேன். மிகவும் நன்றி.

   Delete
 5. விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர்

  விஸ்வரூபம் கார் விபத்து

  ReplyDelete