அடேல் அன்ரி
முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.
அடேல் பாலசிங்கத்தின் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. மெல்பேர்னில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பண்ணை ஊரான வராகுளில் பிறந்து வளர்ந்தவர். தாதியாக பயிற்சி பெற்றவர். சொந்த ஊரிலேயே இருந்தால் பெரிதாக ஒன்றும் கிழிக்கமுடியாது என்று தெரிந்து இருபத்திரண்டு வயதில் வன்வே டிக்கட்டோடு இங்கிலாந்து பயணமாகிறார். அங்கேயும் நாடோடி வாழ்க்கை, தன்னம்பிக்கையின்மை, மனம் ஒத்துக்கொள்ளாத வேலை என்று எதுவித நிம்மதியும் இல்லை. ஒரு கட்டத்தில் இதெல்லாம் வெறுத்துப்போய் சமூக விஞ்ஞான பட்டப்படிப்பை தொடங்குகிறார். இரண்டாம் ஆண்டில் காலடி வைத்தபோது தான், அதே பாடநெறியில் கலாநிதி ஆய்வு செய்துகொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்தை சந்திக்கிறார். கொஞ்ச நாள் பழக்கத்திலேயே காதல். இருவரும் சேர்ந்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், கிழக்கு திமோர், எரித்திரியா, பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த கூட்டங்களுக்கெல்லாம் போய் வருகிறார்கள். கலந்துரையாடுகிறார்கள். அவர்கள் இவர்களின் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள். பேசுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக லண்டனில் இருந்த தமிழர் இயக்க உறுப்பினர்கள் இவர்கள் வீட்டுக்கு வந்து போக, அனைத்துலக விடுதலைப்போராட்டங்கள் பற்றிய முழு அறிவோடு பிற்காலத்தில் இடம்பெறப்போகும் அரசியல் நெறியாழுகைகளின் வித்து இங்கே போடப்படுகிறது.
1979ம் ஆண்டு அன்டனும் அடேலும் இந்தியா பயணமாகி பிரபாகரனை சந்திப்பதிலிருந்து இவர்களின் அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நிகழ்கிறது. அதன் பின்னரான பேச்சு வார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தம், புலிகள் பிரேமதாசா தொடர்புகள், சந்திரிகா என்று அச்சுக்கு சென்ற ஆண்டான 2001ம் ஆண்டு வரையிலான புலிகளின் சார்பான கோணத்தை இந்த புத்தகம் சொல்லுகிறது. அடேலும் தன் எல்லைக்குள் உச்சபட்டமாக காட்டக்கூடிய நடுவுநிலையையும் காட்டியிருப்பதால், ஓரளவுக்கு உள்ளிருந்து முதன்முதலில் உணரச்சிவசப்படாத தொனியில் வெளிவந்த முதல் புத்தகம் என்று “The Will To Freedom” நூலை சொல்லலாம்.
இந்த நூல் வெளிவந்தது 2002 சமாதான காலத்தில். கொழும்பில் இருக்கும்போது வாசித்த புத்தகம். எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலுமான தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை அறியவேண்டுமானால், திறந்த மனதுடன் நான்கு புத்தகங்களை வாசித்தல் வேண்டும். அனிதா பிரதாப்பின் “Island Of Blood”, அடேல் பாலசிங்கத்தின் “The Will To Freedom”, எஸ். எம். கார்மேகத்தின் “ஈழத்தமிழர் எழுச்சி” மற்றும் ரஜனி திரணகமவின் “The Broken Palmyrah”. நான்கு புத்தகமுமே ஓரளவுக்கு தட்டுத்தடுமாறி போராட்டம் என்ற யானையை தத்தமது கண்ணோட்டத்தில் புரியவைக்க உதவக்கூடிய புத்தகங்கள். முடிக்கும்போது அளவுக்கதிகமான சோர்வும், அயர்ச்சியும், இயலாமையும் வந்து சேர வைக்கும் புத்தகங்கள். இத்தோடு கூடவே The Cage உம் Still Counting The Dead உம் வாசித்தால் தாளாமையோடு கொஞ்சம் தனிமனித பொறுப்பும் சேர்ந்துவரும். வாசிக்கும்போது எனக்கும் பீறிட்டுக்கொண்டு வரும். கொஞ்ச நாளில் அடங்கிவிடும்.
நூலின் மிக நுணுக்கமான பகுதி புலிகள் பிரேமதாசா இருபகுதியும் ஆடிய மங்காத்தா ஆட்டத்தை பற்றியது. ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட என்று பிறேமதாசாவிடமே ஆயுதம் கேட்கிறார் அன்டன். அன்டனின் இந்த கோரிக்கையை கேட்ட அமைச்சர் ஹமீது கொஞ்சம் ஆடித்தான் போனார். ஆனாலும் அன்டனின் ஆளுமை அவர்களை சம்மதிக்கவைத்தது. அன்டன் எப்படி கேட்டார் தெரியுமா?
“புலிகளுக்கு ஆயுதம் கிடைப்பது முக்கியம். வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப்புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டால், இந்தியப்படைகளை வெளியேற்றவேண்டும் என்ற பிரேமதாசாவின் உறுதியான எண்ணம் என்றுமே நிறைவேறாது போகலாம்”
என்கிறார். “நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப்புலிகள்” என்று சொல்லும்போது அன்டன் எப்படி சிரிப்பை கட்டுப்படுத்தியிருப்பார் என்று யோசித்தேன். அதை வாசிக்கும்போது எனக்கு “கந்தசாமியும் கலக்ஸியும்” நாவலில் சுமந்திரன் சொமரத்னவை படுக்கவைத்துவிட்டு கந்தசாமியோடு கள்ளுக்கடைக்கு போகும் சம்பவம் ஞாபகம் வந்தது! சுமந்திரன் இப்படி செம கில்மாக்களை அந்த நாவல் பூராக செய்வார். நம்ம நிஜ சுமந்திரனுடைய பேச்சுகள் கூட சிலசமயம் இந்த வகையிலேயே இருக்கும்!
அடேல் இப்போது தென் இங்கிலாந்திலே அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருவதாக தெரிகிறது. இவரை பெண்புலி என்றும், யுத்தக்குற்றவாளி என்றும் ஒரு ஆவணப்படத்தை அண்மையில் இலங்கை அரச சார்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருந்தது. ராஜபக்ஸவை கேள்விகேட்க முதல் அடேலை கைதுசெய்யவேண்டும் என்ற தொனி அதில் இருந்தது. பிரிட்டன் அரசாங்கம் அதனை கணக்கெடுக்கவில்லை. இந்நாட்களில் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள், கூட்டங்கள் என்று எந்த தொடர்புமில்லாமல் அவர் விலகியே இருக்கிறார். இருக்கவும் விரும்புகிறார் என்று தெரிகிறது. தொடர்புகொள்ள முயன்றவர்களிடம் கூட முடியாது என்று சொல்லி தன்மையாக மறுத்தும் இருக்கிறார். முப்பது வருடங்களாக தன் வாழ்க்கையை ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நீரிழிவு கணவனுக்கும் அர்ப்பணித்த மதிப்பிற்குரிய பெண்மணி அடேல் அன்ரி.
மனிசி நிம்மதியாக வாழட்டும்.
அகலிகை
பந்தை தேடிக்கொண்டிருந்த அவசரத்தில் கவனிக்காமல் மிதித்துவிட்டு மிதித்த வேகத்திலேயே “ச்ச்சிக்” என்று காலைத்தூக்கிப்பார்த்தான் இராகவன். நாய்ப்பீ அடிக்காலில் அப்பிக்கிடந்தது. மீண்டும் “ச்ச்சிக்”கினான். வடிவாக தேய்த்து துடைக்கவெண்ணி நல்ல கல்லாக ஒன்றை தேடினான். சற்றுத்தள்ளி தம்பிக்காரன் லக்கி நாயுண்ணி பற்றைக்குள் ஒரு தடியை விட்டு விலக்கியபடியே பந்தை தேடிக்கொண்டிருந்தான். “அடிச்சவர், நல்லா தேடட்டும்” என்று நினைத்தபடி இராகவன் மீண்டும் ஒருமுறை காலைப்பார்த்தான். குப்பென்று மூக்குக்குள் அடித்தது. கொஞ்சம் அடிக்கால் கடிக்கவும் செய்தது. “சொறிநாயிண்ட” என்று நினைத்துக்கொண்டான். பீயை நன்றாக உரசித்தேய்த்து அகற்ற கல்லுவேண்டும். சொன்னமாதிரியே தூரத்தில் ஒரு கருங்கல் தெரிந்தது. காலை ஊன்றாமல் ஒற்றைக்காலிலேயே கெந்தி கெந்தியபடியே கல்லை நோக்கி நகர்ந்தான்.
“அண்ணே .. பந்தை தேடாம கெந்திக்கொண்டு போறாய்? … ஆணி ஏதும் ஏறிட்டோ?”
பந்தை தேடுவதை நிறுத்திவிட்டு லக்கி இவனைப்பார்த்து கேட்டதை இராகவன் பொருட்படுத்தவில்லை. தட்டுத்தடுமாறி கெந்தியபடியே அந்த கருங்கல்லை அடைந்தான். ஆயாசமாய் பீ அப்பிய காலை உயர்த்தி நன்றாக தேய்க்கவென்று கல்லை தொட விளைந்தபோது… திடுக்கென்று அந்த கருங்கல் ஒரு தேவதையாக உருமாறியது.
தேவதை, தமிழில் இவ்வளவு காலமும் இந்த சொல்லை காதலிக்கு பயன்படுத்தி வீணடித்துவிட்டார்களே என்று எண்ணியபடியே வேறு சொல்லை தேடினான் இராகவன். ஏஞ்சல். பொருத்தமாக இருக்கும்போல் தோன்றியது. கருத்த நீண்ட முடி, அள்ளிக்கோதி அலிஸ்பாண்ட் போட்டிருந்தாள். மேக்கப் என்று பெரிதாக இல்லை. கொஞ்சம் லிப்ஸ்டிக், ஐப்ரோ ட்ரிம் பண்ணி… பேஸியல் செய்திருப்பாள் போல. இல்லை இவள் இயற்கையாகவே பிரம்மனால் பேஸியல் செய்யப்பட்டே படைக்கப்பட்டிருக்கலாம்.. மார்பில் “I LOVE JAFFNA” பொறித்த டீஷேர்ட போட்டு டைட் டெனிமுக்குள் நுழைந்திருந்தாள். கால்களில் சிம்பிளான சப்பல் அணிந்திருந்தாள். நகத்துக்கு ஊதா கலர் போலிஷ் போட்டு, பாதம் வெள்ளை வெளேர் என்று ஸ்பஷ்டமாக தெரிய கல்லில் தேய்க்கப்போன தன் காலை அனிச்சையாக தன்னுடைய மற்றக்காலில் தேய்த்தான் இராகவன். அதைப்பார்த்த ஏஞ்சல் இவனைப்பார்த்து சிரித்தாள். நீ, நிலா பனித்துளி … சடக்கென்று கவிதை எழுத முயன்று தோற்றுப்போனான். இதுக்கு மேல் தாமதித்தால் மீண்டும் கல்லாகிடுவாளோ என்ற பயத்தில் மெல்ல தைரியத்தை வரவழைத்த படியே செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான்.
“எக்ஸ்கியூஸ் மேடம் .. யு நோ .. வாட்ஸ் யுவர் நேம்?”
ஏஞ்சல் இவனை முதுகு வளைந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு சொன்னாள்.
“அகலிகை”
“அகலிகை?”
“யியா .. அகலிகை”
இராகவன் கொஞ்சம் குழம்பிப்போனான். இந்த கல், அகலிகை விஷயங்கள் தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாபகம். அவள் தானோ இவள்? அவளைத்தான் இராமன் மீட்டுவிட்டானே? வாட் ஹாப்பின்ட் தென்?
“விச் அகலிகை?”
”நான் தான் இவன் கௌதமன்ட வைப்”
கனபேர்ம்ட். இது அவளே தான். எனதர் சாபவிமோசனம் என்று நினைத்துக்கொண்டான். பட் ஒரு டவுட்.
”ஓ .. உங்களை தான் இராமன் சாபம் நீக்கி புருஷன்காரனிட்ட சேர்த்து வச்சிட்டாரே… பிறகு எப்பிடி திரும்ப கல்லு ஆனீங்கள்?”
”அது ஒரு ஸீன் ஆயிட்டுது”
”ஏற்கனவே ஒரு ஸீன் ஆகி தானே கல் ஆனீங்கள் … ”
”மெய் தான் .. ஆனா நானும் மனுஷி தானே .அவன் கௌதமன் ஒரு பேக்கு .. காலமை தவம் செய்ய தொடங்கினா சந்தியா காலம் வரைக்கும் கொண்டினியூ பண்ணுவான். பிறகு ஸ்நானம் சாப்பாடு ...”
”அப்புறம்?”
”அப்புறம் திரும்பவும் இரவு தவம்”
”ஷிட்”
”ஸீ .. உங்களுக்கே இவ்வளவு ஷாக்காக இருக்கு என்றால் எனக்கு எப்பிடி இருக்கும்?”
அகலிகையை முதன் முதலாய் கொஞ்சம் பாவமாய் பார்த்தான் இராகவன். பேதைப்பெண். என்ன செய்வாள்? “குரங்கு கையில பூமாலையை குடுத்தாலும் அது அட்லீஸ்ட் பிச்சாவது எறியும். இது பன்னாடை கௌதமன் போட்டு பூசை பண்ணியிருக்கு” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். உச்சுக்கொட்டினான்
”வாஸ்தவம் தான்”
”எனக்கென உணரச்சிகள் தனியாக இல்லையா?”
இப்போது தான் உறைத்தது. ஓ மை கோட்.
”அப்படி எண்டால் திரும்பவும் இந்திரனா? ஐயோ .. அவனுக்கு கிடைச்ச சாபம் தெரியுமே ..தாங்கேலாதே .. எண்ட கடவுளே”
”இல்ல இல்ல .. நீங்க நினைக்கிற மாதிரி அப்பிடி ஒன்றும் நடக்க இல்ல”
”ஓ .. சொறி அப்ப எப்பிடி மீண்டும் கல்லாக மாறினீங்கள்?”
”எவ்வளவு காலத்துக்கு தான் உணர்ச்சிகள் மரத்துபோன கல்லாகவே உலாவுறது? அதுக்கு பேசாக வெறுங்கல்லாகவே மாறினால்?”
“லொஜிக் விளங்கேல்ல”
”வெறுங்கல்லாக மாறினா அட்லீஸ்ட் உணர்ச்சிகளும் சேர்ந்து உறைந்து போயிடுமில்லையா?”
”ஓ ஐ ஸீ. ஸோ. நீங்களே .. இந்திரன் வந்ததா … ஒரு பொய்யை ..சொல்லி .. கௌதமனிட்ட சாபம் வாங்கி .. பிரில்லியண்ட் .. பட் .. எதுக்காக இந்த கல்லாய் சமைந்த வாழ்க்கை?”
”தெரியாமல் தான் கேக்கிறியா இராகவா?”
”வாட் டூ யு மீன்?”
”கல்லாக சமைந்ததால் தானே உன் பாதம் பட்டு இப்பிடி ஒரு விமோசனம் எனக்கு கிடைச்சிருக்கு”
”வாட் தெ ஹெல் ஆர் யூ டோக்கிங்?”
”எஸ் இராகவா .. நீ என்றாவது ஒருநாள் வந்து என் மேல் பாதம் படிவாய் என்று தான் செல் அடி பொம்மர் அடி கூட சமாளிச்சுக்கொண்டு இவ்வளவு காலமும் இருந்தனான்”
”என்ன சொல்லுற? .. அப்படி என்றால் … நான் தான் இந்த …”
குழப்பத்தோடு இராகவன் தூரத்தே தம்பி லக்கியை பார்த்தான். லக்கி இன்னமும் தொலைந்த பந்தை கண்ணும் கருத்துமாய் தேடியவாறே பற்றைகளுக்குள் திரிந்தான். அகலிகை மீண்டும் குனிந்து ஒரு கும்பிடு போட்டாள். பக்கத்துவீட்டு சிடி ப்ளேயரில் இளையராஜா பாடல் ஒலித்தது.
கல்லான பெண் கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
இராகவனே ரமணா ரகுநாதா…
பாற்கடல் வாசா,
ஜானகி நேசா ..
பாடுகின்றேன் .. வரம் தா.
மௌன ராகம்
ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர், கிளைமாக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம். ஆனால் சுவாரசியமாக இருக்கும்.
“மறுபடியும்” படம் பார்த்துவிட்டு, நிச்சயமாக அரவிந்த்சாமியும் ரேவதியும் பின்னர் சேர்ந்திருப்பார்கள் என்று அக்காவோடு வாதிட்டு இருக்கிறேன். அதன் முடிவே அப்படித்தான் எடுத்துப்பார் பாலுமகேந்திரா என்பது என் நீண்டகால வாதம்.
தளபதியில் அந்த ரஜனியின் “வெறுங்காவல்” டயலாக் தொடர்ந்திருக்க சாத்தியமில்லை. ரஜனிக்கும் பானுப்பிரியாவுக்கும் இயல்பாக காதல் மலர்ந்திருக்கும். இதயம் படத்தில் முரளியும் ஹீராவும் நிச்சயம் சேர்ந்திருப்பார்கள். மூன்றாம்பிறையில் அவ்வளவு உணர்வு பூர்வமாக கிளைமாக்ஸை முடித்திருந்தாலும் யோசித்துப்பார்த்தால் அந்த முடிவு ஒரு சப்பை தான். ஸ்ரீதேவி எப்படியும் தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்திருப்பாள். அவளை கண்டுபிடிப்பது கூட கமலுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது. இந்தியன் கமல் சந்தனக்கட்டை வீரப்பன் போல ஒருநாள் அம்புலன்சுக்குள் சுடப்பட்டு கிடந்திருப்பார்! ஆனால் ரசிகன் இதெல்லாம் யோசிக்கமாட்டான். இது ஒருவித கண்கட்டி வித்தையே.

சில படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளையும் இயக்குனர்கள் வைப்பார்கள். நியூ படத்தின் இறுதிக்காட்சி அப்படிப்பட்டது. அதிலே அப்பா சூர்யாவும் மகன் சூர்யாவும் பேசும் காட்சியில் ஒரு இன்டலிஜென்ஸ் இருக்கும். சூர்யா அகத்தியனுக்கு பிறகு தமிழில் உருவான சிறந்த இயக்குனர். நடிப்பாசையால் நாதாரி தறிகெட்டு போயிட்டுது.
மௌனராகம் படத்து மோகனும் ரேவதியும் எப்படி குடும்பம் நடத்தியிருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். இருவருக்குமே செம் ஈகோ. அமுசடக்கிகள். உள்ளே இருக்கும் காதலை சொல்ல கூட ஈகோ தடுக்கும். அதற்காக பிரிவது வரைக்கும் போய்விட்டு சேருவார்கள். இந்த குணவியல்புகள் ஆதாரமானவை என்று வைத்துப்பார்த்தால், வாழ்க்கை பூராக இருவரும் சண்டை பிடித்திருக்கவே சாத்தியம் அதிகம். ஒவ்வொருமுறை சண்டையிலும் கூட முதலில் சமாதானமாவதும் ரேவதியாக தான் இருக்கும். எனக்கென்றால் அந்தப்படத்தின் முதல் காட்சி இப்படி வைத்திருக்கவேண்டும்.
ஒரு வயதான அம்மாவும் வயதான ஐயாவும் ரயில் நிலையத்துக்கு முன்னாலே இருந்து பம்மிக்கொண்டு நிற்கிறார்கள். அம்மாக்காரி ஏதோ அவரைப்பார்த்து அழுதபடி சொல்கிறார். பின்னர் அந்த ஐயா கொடுத்த பேப்பர்களை கிழித்து எறிகிறார். திடீரென்று ரயில் ஹோர்ன் அடிக்கிறது. இந்தம்மா மெதுவாக ஓடுது. இப்ப கமரா கோணம் திரும்பி மூலையில் இருந்த பெட்டிக்கடையை காட்டுகிறது. அப்போது தான் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவன் பெட்டிக்கடை முதலாளியிடம் பேசும் சீன்.
“என்னண்ணே அந்த அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இடையிலே ஏதும் சண்டையா?”
”கண்டுக்காதீங்க தம்பி”
”இல்லண்ணே அந்த அம்மா அழுதுகொண்டே ஓடுது..தள்ளாத வயசில”
”பின்னால அந்த ஐயா விக்கித்துப்போய் கிழிஞ்சு போன பேப்பர்களை பார்த்துக்கொண்டு இருப்பாரே!”
”ஓமண்ணே”
”இப்ப ஏதோ நினைவு வந்தவராய் ரெயிலை நோக்கி ஓடுவாரே”
”அட ஆமா!”
”இந்தம்மாவும் அழுதுகொண்டே வந்து .. ஒரு சின்ன பிரேக் போட்டு..”
”ரெண்டு பெரிசும் கட்டுப்பிடிக்குதுங்க அண்ணே
”இதே சீன் தான் தம்பி ...கருமம் ..அம்பது வருஷமா நடக்குதாம் .. என்ர அப்பாரு சொல்லியிருக்காரு… முன்னெல்லாம் இதுக பசங்களும் அழுதுகிட்டே வருவாங்க .. இப்ப அவிகளுக்கும் அலுத்து போச்சு!”
டொலி
இந்த செம்மறியை ஞாபகம் இருக்கிறதா? முதன் முதலில் குளோனிங் மூலம் உருவான விலங்கு. ஒரு பெண் செம்மறியாட்டின் பால் சுரப்பியில் இருந்து ஒரு செல்லை பிரித்தெடுத்து இன்னொரு பெண் செம்மறியாட்டின் முட்டை செல்லோடு இணைக்கவேண்டும். முன்னையதன் கருவும் பின்னையதன் முட்டையும் சேர்ந்த பின்னர், இந்த முட்டைக்கரு மாட்டரை கொஞ்சம் ஷோக் குடுத்து அருட்டினால், ஒன்று இரண்டாகி, நான்காகி .. ஒரு நூறு செல்லுகள் உருவாகும் என்று வையுங்களேன். இப்போது இதை கொண்டுபோய் ஒரு வாடகைத்தாயின் கருப்பையில் வைத்தால் அந்த தாய் பிள்ளைத்தாய்ச்சி. ஆண்களே தேவையில்லை. மூன்று தாய்மார்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும்.
டொலிக்கும் மூன்று தாய்மார்கள். ஒரு வெள்ளை செம்மறியாட்டின் பால் சுரப்பியில் இருந்து ஒரு செல்லை எடுத்தார்கள். அந்த செல்லின் கருவை புடுங்கினார்கள். இந்த கரு தான் மாட்டர். டிஎன்ஏ. இன்னொரு கருப்பு செம்மறியாட்டின் முட்டையை எடுத்து அதன் உட்கருவை (அட கோழி முட்டை இல்ல பாஸ், இது வேற, நீ எதுக்கும் எஸ்கேப் ஆகு. அடுத்த ஐட்டத்தில மீட் பண்ணுவோம்), அகற்றிவிட்டு அந்த வெள்ளை ஆட்டின் கருவை இந்த முட்டைக்குள் பொருத்தினார்கள். பின்னர் அருட்டல், ஷோக், பல செல்கள் உருவானது, அது தான் குளோனிங். எல்லா செல்லுகளையும் இன்னொரு செம்மறியாட்டின் கருப்பையில் கொண்டுபோய் வைக்க கொஞச நாட்களில் அழகான பெண் செம்மறிகுட்டி ஒன்று பிறந்தது.
டொலி ஆறுவயது வரைக்கும் வாழ்ந்து கான்சரில் இறந்து போனாள். அந்த கான்சருக்கு குளோனிங் காரணமில்லை. சாதரணமாக ஆடுகளிடையே வருவது என்றார்கள். பொதுவாக செம்மறி ஆடுகள் பன்னிரண்டு வயது வரை வாழுமாம். டொலி ஆறு வயதில் இறந்தமைக்கு , ஆறு வயது முதிர்ந்த செல் டிஎன்ஏ இல் இருந்து அதனை உருவாக்கினது காரணம் என்கிறார்கள். அதாவது எண்பது வயதில் ஐன்ஸ்டீன் இறந்துபோகும்போது அவரின் டிஎன்ஏ ஐ எடுத்து குளோன் பண்ணினால், பிறக்கும் குழந்தைக்கு எண்பது வயதுக்குரிய அங்க முதிர்ச்சி இருக்குமாம். சுவாரசியமானது. இதுக்கு மேலே போகவேண்டாம். ஆனால் பரலல் யூனிவெர்ஸ் கொஞ்சம் தெரிந்தவர்கள் இதனோடு தொடுத்து பாருங்கள். ஆர்வம் இருந்தால் டிஸ்கஸ் பண்ணலாம்.
டொலி இறக்கும்போது அதற்கு ஆறு குட்டிகள் இருந்தன. டொலியை தொடர்ந்து வேறு பல மிருகங்களையும் உருவாக்க தொடங்கினார்கள். பூமியில் இருந்து அழிந்து போன இனமான மலைக்காட்டு ஆடு ஒன்றை உருவாக்க முயன்றார்கள். பிறந்த ஆடு உடனேயே இறந்து போனது. ஐன்ஸ்டீன் உதாரணத்தை இப்போது மீண்டும் யோசியுங்கள்.
அப்பிரசிண்டுகளுக்கு ஒரு உதிரிச்செய்தி! அது என்ன டொலி? எப்படி பெயர் வைத்தார்கள்? டொலியின் டிஎன்ஏ ஐ இன்னொரு ஆட்டின் பால் சுரப்பியில் இருந்து எடுத்ததால், அதற்கு பொருத்தமான பெயரை தேடியிருக்கிறார்கள். அப்போது தான் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்த களைப்பில் ஆயாசமாய் மாக்ஸிம் மக்ஸினை திறந்திருக்கிறார். உள்ளே அட்டைப்படத்தில் டொலி பார்டன் படம். விஸ்தாராமாய்!
Makes sense.
சூர்ப்பனகை மூக்கு!
கொஞ்சக்காலத்துக்கு முன்னர் கதை சொல்லாத கதை என்று ஏகலைவனை பேஸ் பண்ணி சிறு கதை எழுதினேன். குருஷேத்திர போரின் பொது ஏகலைவன் என்ன செய்துகொண்டிருந்தான் என்பதை கொஞ்சம் பின்நவீனத்துவம் (or whatever) சேர்த்து எழுதியது. அதற்கடுத்த வியாழமாற்றத்தில் ஏகலைவன் பெருவிரல் அறுத்தபின்னர் என்ன ஆனான் என்று ஒரு சின்ன ரிசெர்ச் இருக்கும்.கம்பன் விழாவில் “பேசாப்போருட்கள் பேசினால்” என்ற தலைப்பில் அறுந்த சூர்ப்பனகை மூக்கை பற்றி எழுதுவதாக தீர்மானித்ததும் இந்த ஐடியா வந்தது. வெறுமனே புலம்பலாக இல்லாமல் அதற்குள் புதிதாக, கம்பராமாயணத்தில் இல்லாத ஒரு கோணத்தை கொண்டுவரவேண்டும் என்று, ஸ்கைப்பில் மனைவிக்கும் அலுப்படித்து, ஐடியா எடுத்து எழுதியது தான் அந்த அரங்குக்கவிதை.
அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?
என்ற வரிகளின் படிமத்தை கேதா புரிந்து அரை மணிநேரம் போன் பண்ணி பேசியபோது திருப்தியாக இருந்தது. அண்ணே இந்த மூக்கை, முகமாலைல தலையில்லாம கிடக்கும் பனைமரங்களுக்கும் ஒப்பிடலாம். உதவியின்றி கைவிடப்பட்டிருக்கும் நம் உறவுகளையும் சேர்க்கலாம் என்றான். யோசிச்சுப்பார்த்தால் நாமே சூர்ப்பனகை, நாமே இராமன் என்றாகிறது. மூக்கை ஆக்கி ஆக்கி அறுத்துக்கொண்டே இருக்கிறோம், மூக்குகள் அறுக்கப்படவில்லை விதைக்கப்படுகின்றன என்பதை உணராமல். இப்போது கவிதையை மீண்டும் வாசித்துப்பாருங்கள்.
அரங்கில் கவிதையின் சாரம் ஓரளவுக்கு போய்ச்சேர்ந்தது என்றே நினைக்கிறேன். “நீ சுஜாதா ரசிகன், நவீனமா தான் இருப்பாய் எண்டு யோசிச்சன், மரபும் உனக்கு நல்லாவே வருது, நிறைய வாசி, நிறைய சொல்லறிவு தேடு” என்றார் கம்பவாரிதி. சொல்லவந்த பொருளை சரியாக சொல்லுவதற்கு தேவையான மொழியறிவு எனக்கு போதாது என்ற குட்டும் அதில் இருந்தது. “நீங்கள் எல்லாம் இந்தளவில, பாரதியை கரைச்சு குடிச்சு முடித்திருக்கோணும்” என்று அவர் சொல்ல குற்ற உணர்வு துருத்தியது. வாசிப்பது காணாது காணாது என்று அறிஞர்கள் எல்லோருமே சொல்லிப்போகிறார்கள். நான் பிஸியாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கோ நிறைய நேரம் கிடைக்கிறது. சுப்பர் சிங்கர் பார்க்கிறேன். சாப்பிட்ட பின்னர் வெட்டியாக டிவி பார்க்கிறேன். வார இறுதியில் அதிகாலை எழுந்தாலே மெல்பேர்ன் விழிக்கமுதல் ஒரு புத்தகமே வாசித்து முடிக்கலாம். எழும்புவது என்னவோ எட்டு மணிக்கு. எல்லோரும் நல்லபடம் என்று சொன்னதால் ஓநாயும் நாய்க்குட்டியும் என்று ஒரு இரண்டரை மணிநேரத்தை வேஸ்ட் பண்ணியாயிற்று.
இதெல்லாத்தையும் நிறுத்திட்டு நிறைய வாசிக்கோணும்.
தேடித்தேடி தேய்ந்தேனே
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய இசைப்பதிவு இது. திடீரென்று ஒருநாள் இந்த பாடல்கள் எல்லாம் எங்கேயாவது கிடைக்குமா என்று நாள் முழுக்க தேடினேன். அவ்வளவு பிடித்த பாடல்கள். அதிலும் இந்த பாடல் இன்னும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமே பிடித்த பாடல். “அன்பே டயானா” என்ற ஒரு மொக்கைப்படத்தில் வெளிவந்தது. இந்தப்பாடல் அடிக்கடி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் போடுவார்கள். பார்க்க சகிக்காத ஹீரோயின் ஒருத்தி கைகளை அகட்டி விரித்த படியே வானத்தை பார்த்து “ஒரு முறை சொன்னால் போதுமா?” என்று பாட கமரா மேலிருந்து கீழே போகஸ் பண்ண, ஹீரோயினோட செமிக்காத வயிறு, எங்களை வவுத்தாலே போக வைக்கும். பதட்டத்தில் டிவியை ஆஃப் பண்ணாமல் கண்ணை மூடி கேட்டிருந்தீர்களானால், கனவு அனுபவம் ஒன்று கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட பாட்டு இது.
90களில் ராஜா, ரகுமானுக்கு சளைக்காத ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்த புண்ணியவான் நம்ம தேவா. ஒரு துளி விஷம் போல ஒரு படத்தில் இரண்டு பாடல்களை சுட்டு போடுவதால், அவர் சொந்தமாக போட்ட பாடல்களையும் எல்லோரும் சுட்டது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப்பொறுத்தவரையில் தேவா இல்லாமல் தமிழ் திரை இசையை எவனும் கடந்து போக முடியாது.
இது டிப்பிகல் தேவா மெட்டு. புல்லாங்குழல், உயர் ஸ்தாயி வயலின், ஹரிஹரன் ஆலாபனை என்று களை கட்டும் இன்டர்லூட். சுஜாதாவின் மென்மையான பெண்மையும் ஹரிஹரனின் ஆண்மையும் அழகான இசை தாம்பத்யம் நடத்தும். “நேற்று வரையிலும் வெறும் வண்ணமாக வாழ்ந்தேன், இன்று காதலால் நான் வானவில்லும் ஆனேன்” என்ற இடத்தில் ஹரிகரன் போலவே சங்கதி எல்லாம் பயப்படாமல் போட்டு மற்றவரை பயப்படுத்துவதுண்டு.
இனி முடியாது!
என்னாச்சு?
திடீரென்று இவர்கள் என்ன ஆனார்கள்? என்ன ஆகியிருப்பார்கள்? என்று தேடுவோமில்லையா? நேர்சரி படிக்கும்போது என்னோடு ராதிகா என்று ஒரு நண்பி படித்திருந்தாள். செம குண்டு. அம்பாசடர் காரில் அவள் மாத்திரம் பின் சீட்டில் வனிலா ஐஸ்கிரீம் பாக்ஸோடு வந்திறங்குவாள். பணக்காரி. யாரோடும் கதைக்கமாட்டாள். ஐஸ்கிரீம் தரமாட்டாள். காரைத் தொட்டால் டிரைவர் திட்டுவான். அந்த பெண் என்ன ஆகியிருப்பாள் என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. அதே கார், அதே ஐஸ்கிரீம் என்றால் இத்தனைக்கு ஒன்று அவள் பிரிந்திருப்பாள். இல்லை கார் பிரிந்திருக்கும். அவளை கண்டாலும் சுவாரசியமிருக்காது. ஏனென்றால் அவள் இப்படி ஆகியிருப்பாள் என்று ஒரு காட்சி நாங்கள் அமைத்திருப்போம்.
இந்த வார வியாழமாற்றம் கூட பல்வேறு ராதிகாக்களை தேடும் முயற்சி தான்.
Are you getting it?
&&&&&&&&&&&&&&&&&&
நன்றி:
படங்கள் இணையம்.
ReplyDelete"ஒருமுறை சொன்னால் போதுமா?" பாட்டு நானும் சின்ன வயசில அடிக்கடி "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில பர்த்திருக்கிறன். திரும்பவும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.. ஆனால் நான் நினைத்தேன் இது "கோல் மால்" (அந்த நேரம் வந்த இன்னொரு மொக்கை படம்) படப்பாடல் என்று.. தகவலுக்கு நன்றி..
உங்களிடம் இருக்கும் ப்ளஸ் பொயின்ட்டே வந்து உங்களின் ஞாபகங்கள்தான்... அதை உங்கள் பதிவின் மூலமாக பகிர்ந்து மற்றவர்களின் ஞாபகங்களையும் கிளறிவிடுகின்றீர்கள்..
ஆதலால்தான் அரசியல், சினிமா, விளையாட்டு என்று எதுவுமே இல்லாமல் "படலை" செம ஹிட் ஆகிறது...
பி.கு: ரொம்ப நாட்களின் பின் இன்றுதான் உங்களின் பதிவை வாசிக்கிறேன் இவளவு நாளும் வாமணன் என்ற பெயரில் பதிவிட்டேன். இன்று முதல் உஙளின் பின்னூட்டத்தில் எனது புனைபெயரைக் களைந்துவிடுகிறேன்.
அன்புடன் வர்மா..
நன்றி .பாஸ் ... அரசியல் சினிமா விளையாட்டு படலையிலும் இருக்கு பாஸ் .. ஏதோ இலக்கியதளம் நினைசிடாதீக!
Delete//அரசியல் சினிமா விளையாட்டு படலையிலும் இருக்கு பாஸ் .. ஏதோ இலக்கியதளம் நினைசிடாதீக!//
Deleteபின்னூட்டம் இட்டபின் உங்களின் பழைய பதிவுகளை கிளறிப்பார்த்து என் முந்திரிக்கொட்டைத் தனமான பின்னூட்டத்தையிட்டு என்னை நானே கடிந்துகொண்டேன். வியாழமாற்றத்தைப் போல கொல்லைப்புறத்துக் காதலியையும் அப்பப்ப கவனிக்கலாமே?
முடிவில் ஒரு ஐரோப்பிய நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி// தென்கிழக்காசிய நாடு பாஸ்... புத்தகத்தில் சொல்லாவிட்டாலும் அது தாய்லாந்து..
ReplyDeleteதகவலுக்கு நன்றி தல. பின்னேரம் மாத்திறன்.
Deleteஅகலிகை கதை உங்களுடைய பாணியில் அடித்து விளையாடியிருக்கிறீர். எனக்கும் பந்தை தேடுகையில் (மனித/மிருக) பீயில் கை/கால் வைத்த அனுபவங்கள் உண்டு. என்னை பொறுத்தவரை இந்த வரியில் //”வெறுங்கல்லாக மாறினா அட்லீஸ்ட் உணர்ச்சிகளும் சேர்ந்து உறைந்து போயிடுமில்லையா?”// இருக்குமளவு நேர்மையும்/தைரியமும் சென்ற வார கவிதை வரியில் (நீரு மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்) இல்லை (I may be wrong, it just my opinion. At the same time, I understand that you cannot be controversial while writing something to present in a gathering). நான் வாசித்த படைப்புக்களில் (I am not like you, I read verrrry less) கம்பராமாயணத்தில் இல்லாத கோணத்தை கொண்டு வந்தவை (excluding yours) 1. லா.ச.ராவின் பாற்கடல், 2. பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.
ReplyDeleteThese lines are 100% true //முடிக்கும்போது அளவுக்கதிகமான சோர்வும், அயர்ச்சியும், இயலாமையும் வந்து சேர வைக்கும் புத்தகங்கள். இத்தோடு கூடவே The Cage உம் Still Counting The Dead உம் வாசித்தால் தாளாமையோடு கொஞ்சம் தனிமனித பொறுப்பும் சேர்ந்துவரும். வாசிக்கும்போது எனக்கும் பீறிட்டுக்கொண்டு வரும். கொஞ்ச நாளில் அடங்கிவிடும்.// When I finished reading Still Counting The Dead, I felt the same. Thanks for introducing “The Will To Freedom”. If I get a chance then I will read it.
நன்றி மோகன்
Delete//இருக்குமளவு நேர்மையும்/தைரியமும் சென்ற வார கவிதை வரியில் (நீரு மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்) இல்லை//
ஓரளவுக்கு இருந்தது என்று நினைக்கிறேன். அரங்கின் சுவை கருதி கொஞ்சம் அப்பிடி இப்பிடி எழுதினது தான்.
correction it is not பாற்கடல்....it is உத்தராயணம்...I realized after clicking publish...
Delete///90களில் ராஜா, ரகுமானுக்கு சளைக்காத ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்த புண்ணியவான் நம்ம தேவா. ஒரு துளி விஷம் போல ஒரு படத்தில் இரண்டு பாடல்களை சுட்டு போடுவதால், அவர் சொந்தமாக போட்ட பாடல்களையும் எல்லோரும் சுட்டது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப்பொறுத்தவரையில் தேவா இல்லாமல் தமிழ் திரை இசையை எவனும் கடந்து போக முடியாது./// அதே!
ReplyDeleteதூர்தர்ஷனில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வித்யாசகரின் இசை என்று நினைத்தேன். வித்யாசாகரின் மெலடிகள் அமைந்த அதே ராகமாக இருக்கலாம். "நீ பேசும் பூவா பூவனமா?" என்றோர் பாடலுடன் குழப்பும் அடிக்கடி. 'அந்தக்கால ஹாரிஸ்' எஸ் ஏ ராஜ்குமாரின் "இருபது கோடி நிலவுகள்..." பாடலுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கிறது என்றே தோன்றுகிறது. இசை தெரிந்தவர்கள்தான் கூற வேண்டும். தேவா தவிர்க்க முடியாதவர். என்ன கொடுமைஎனில் ஆரம்பகால தேவாவின் பல பாடல்களை இளையராஜா இசை என நினைத்திருக்..கிறேன்/கிறார்கள்.
கொஞ்சம் இருக்கு தான் தல. அந்த "நீ பேசும்" பாடல் கோல்மால் படம். தேவா + ←ஹரிஹரன் + சித்ரா கூட்டணி. முன்னமும் எழுதியிருக்கிறன்.
Deletehttp://www.padalay.com/2011/10/blog-post_25.html
The photo in the Ahalihai (Jaffna Olungai) stirred my memories. Also the Muhamali photo.
ReplyDeleteMoondram Pirai claimax is very touching.
I have already told few people that cutting Ehalivan thum is social injustice.
Siva
Its true Siva ... Our epics got so many injustices obviously.
DeleteNice one JK.
ReplyDeleteGetting up early is the biggest challenge for me in weekends as well as in weekdays. Photographing sun rise has been my dream for several years :P. A simple thing, but still hard to be executed. We can do wonders with an early start.
Thanks Dhanya .. FYI I managed to a sunrise shoot in Maldives too :D
DeleteAha....I appreciate your commitment!
ReplyDeleteThe Cage மற்றும் Still Counting the Dead இரண்டையும் தமிழில் வாசித்திருக்கிறேன்.,,, கடைசி கட்ட போரின்போது நிகழ்ந்த மனித நேய உரிமை மீறலை/அவலத்தை,எந்த பக்க சார்பும் இல்லாமல் உலகுக்கு எடுத்துரைத்த புத்தகங்கள்.,..The Will to Freedom இங்கு தமிழ்நாட்டில்/இந்தியாவில் கிடைக்குமா என்பது சந்தேகம்,.. இருந்தாலும் வாங்குவதற்கு முயற்சிக்கிறேன்,.ஏனெனில் இரண்டு மாதத்திற்கு முன்பு மதுரை புத்தக கண்காட்சியில் Anten Balasingham எழுதிய War & Peace:Armed struggle & Peace Efforts of Liberation Tigers என்ற புத்தகத்தை கேட்டபோது கடை உரிமையாளர் உண்மையில் பயந்துபோய் விட்டார்;காரணம் Q branch police மற்றும் Intelligence police .இது போன்ற புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு விற்பவர்களை கண்காணிப்பு செய்கிறார்களாம்,ஈழத்தைப் மீட்டுக் கொடுப்பேன் என வாக்குறிதி அளித்த அம்மாவின் ஆட்சியில்; தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை கேவலம்.,வெட்கக்கேடு.
ReplyDelete