தூங்காத இரவு வேண்டும்.

 

balu2_jpg_1630733g

கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை.

“கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?”

சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின் தலையை தடவிக் கொடுத்தார். அவளிடத்தில் பெரிதாக சலனமில்லை. முடி எதுவும் இல்லாத தலை. நெற்றியில் குட்டி குங்குமம். கண்கள் சற்று செருகியிருந்தன. முகம் கொஞ்சம் உள்ளே ஒடுங்கியிருந்தது. சொண்டு வெடித்து, கொஞ்சம் வெளிறி, கடைவாயில் சின்ன மாறவே மாறாத அந்த சிரிப்பு, கோமளா அந்த அயர்ச்சியிலும் அழகாக இருந்தாள் போன்றே தோன்றியது. காலையில்தான் தாதியர் அவளை குளிப்பாட்டியிருந்தனர். ஆஸ்பத்திரியில் நோயாளருடைய கவுண் அணியமாட்டேன் என்று அவள் அடம்பிடித்ததால், சிவலிங்கம் வீட்டிலிருந்து ஒரு சோட்டியை எடுத்து வந்திருந்தார். வெள்ளைக்கலரில் சின்ன சின்ன பூப்போட்ட சோட்டி. பெரியாஸ்பத்திரி வார்டில் கண்ணன் பிறந்தசமயமும் கோமளா இப்படி ஒரு சோட்டியையே அணிந்திருந்தாள். இந்த இருபது வருடங்களில், இவ்வளவு வருத்தம் வந்தபிறகும், கோமளா அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சிவலிங்கம் அவரையறியாமலே தனக்குள் புன்னகை செய்தார். கதிரையை இழுத்து அருகில்போட்டுக்கொண்டு சுந்தரகாண்டத்தை கையில் எடுத்தார். முன்னைய இரவு நிறுத்திய இடத்திலிருந்து தொடர்ந்தார்.

“மெய்த்ததாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை,கைகளின் நீக்கி, வேறு
உய்த்த போது,தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகைச்செய்தி மனக் கொள்வாள்”

“என்னவாம் … சீதை அசோகவனத்தில இருக்கிறாவல்லோ, அவவுக்கு பழைய ஞாபகங்கள் வந்திட்டுது. மிதிலைல இராமனை கண்டது முதல்  கலியாணவீட்டில நடந்தது எல்லாம் … . “

புத்தகத்தை வாசித்து, பொருள் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கையில், கோமளாவின் முனகல் கேட்கவே, சொல்லுவதை நிறுத்திவிட்டு திரும்பிப்பார்த்தார்.  “ஒருக்களித்துப் படுக்கப்போகிறேன்” என்று அவள் சைகை காட்ட, யன்னல் பக்கமாக, பக்குவமாக அவளைத் திரும்பிப் படுக்கவைத்தார். யன்னல் திரைச்சீலைகளை இரண்டுபக்கமும் இழுத்துச்செருகி, உள்ளே நன்றாக வெளிச்சம் பரவவிட்டார். இலையுதிர்காலத்தின் இறுதி மாதம் அது. வெளியே அடர்ந்து வளர்ந்த மாப்பிள் மரம் ஒன்று. நன்றாக பழுத்துச் சிவந்த இலைகள் கொப்புகளில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருந்தன. கலர் கலராய் சருகுகள் நிலமெங்கும் பரவிக்கிடந்தன. இரண்டு மூன்று வெள்ளைக்கார குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.  கோமளா யன்னலையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். சிவலிங்கம் மீண்டும் கதிரையில் வந்தமர்ந்து, விளக்கத்தை தொடர்ந்தார்.

“தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகைச்செய்தி மனக் கொள்வாள்”

“அங்க மணமேடைல அவளிண்ட காலை இராமன்  இவளுக்கு மெட்டி போட்டுவிட்டது ஞாபகம் வருது. இப்பிடியெல்லாம் செய்தவன் ஏன் இன்னும் வந்து மீட்டுக்கொள்ளேல்ல? எண்ட கவலை அவளுக்கு ..”

கோமளா தூங்கிவிட்டாள்.

இந்தத் தடவை கொஞ்சம் சீரியஸாகவே நோய் முற்றிவிட்டது. இரண்டுவாரங்களாக கோமளா படுத்த படுக்கையில்தான். தீராத நோய்கள் மாறி மாறி வந்து கடந்த ஐந்து வருடங்களாக துரத்தியடிக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நோய் வந்து துன்புறுத்தலாம். இரண்டு நோய்கள் வரலாம். நோய் மாறி நோய் தொடர்ந்துவந்துகொண்டிருந்தால் என்ன செய்வது? கர்ப்பப்பையில் ஆரம்பித்தது. அகற்றி ஆறு மாதங்களுக்குத்தான் ஓய்வு. அடுத்ததாக சிறுநீரகத்தில் சிக்கல். ஒன்று போனது. நான்கே மாதங்களில் மற்றயதும் பழுதடைய, சிறுநீரக மாற்று அறுவை செய்யவேண்டி வந்தது. அதற்குப்பிறகு பிரச்சனை இல்லை என்று வீடு வந்து இரண்டு மாதம்கூட ஆகவில்லை. மீண்டும் கருப்பையில். இந்தத்தடவை வந்தது புற்றுநோய். அந்தப்பெயரைக் கேட்ட அக்கணமே அந்த இளம் குடும்பம் நிலநடுக்கத்தில் ஆடும் வீட்டைப்போல ஆடிப்போனது.

சிவலிங்கம், கோமளா, கண்ணன் என்று சின்ன முக்கோணம் அவர்களுடையது. அதில் ஒரு புள்ளியை திடீரென்று இல்லை என்றால் முடியுமா? எப்படியும் குணப்படுத்தியே தீருவதென சிவலிங்கம் சங்கல்பம் பூண்டார். பயோப்சி, ஹீமோ, அக்கிரஷன், எண்டோஸ்கோபி என்று புதுவார்த்தைகள் பழக்கமாயின. வைத்தியசாலை வீடானது. வீடு விடுதியானது. கோயில்களில் அரச்சகர்களுக்கு கோமளாவின் நட்சத்திரம் மனப்பாடமானது. நல்லூர் தேரன்று பிரதட்டை செய்வதாக வேண்டுதல் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்கள். படாத பாடு, ஓயாத அலைச்சல். ஒருநாள் பட்ட கஷ்டத்துக்கு கொஞ்சம் பலன் கிடைக்குமாப்போல. கோமளா தேறிவிட்டாள். ஹீமோ வேலைசெய்துவிட்டது. இனிப்பரவாயில்லை. வீட்டுக்கு கொண்டுபோகலாம் என்று சொல்லிவிட்டார்கள். சிவலிங்கம் ஆஸ்பத்திரியில் நின்றவாறே நல்லூரானுக்கு மருமகனிடம் சொல்லி அர்ச்சனை செய்வித்தார். வீடு போகும் வழியில் கரம்ஸ்டவுண் சிவா விஷ்ணு கோவிலில் இறங்கி இரண்டு கடவுள்களுக்கும் பூசை செய்தார்கள்.

வீட்டுக்கு வந்த கோமளாவை ஒரு இடத்தில் இருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆறுமணி குளிரில் எழுந்து கண்ணனுக்கு சாப்பாடு செய்து கொடுப்பாள். சிவலிங்கத்துக்கு டீ. “வேண்டாம் சும்மா இரு” என்றால் “எனக்குத்தானே வருத்தம் மாறீட்டுதே” என்று சிரிப்பாள். அவள் சிரிப்பு. கையைக்கட்டி, தலையை நன்றாக சரித்து, கொஞ்சம் முதுகு கூனிக்கொண்டு, அவள் சிரிக்கும்போது தலை வானத்தையும் பூமியையும் மாறி மாறி பார்க்கும். அப்படிச்சிரிப்பாள். சிவலிங்கத்துக்கு கண்கலங்கும். காட்டிக்கொள்ளமாட்டார். இவளை இயங்க விட்டால்தான் எந்த நோயும் அண்டாது என்று நினைப்பார். பகல் பதினோரு மணிக்கு இருவரும் உட்கார்ந்து, யூடியூபில் மகாபாரதம் பார்ப்பார்கள். சிவலிங்கம் அன்றைக்கு பேஸ்புக்கில் யாரார் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்று வாசித்துக்காட்டுவார். இவள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் லைக் பண்ணுவார்.

மதியம் சிவலிங்கம் தானே சமைப்பார். ஒரு சோறு, பத்தியக்கறி. அவித்த மரக்கறி. அவ்வளவுதான். இவர் பாடிப்பாடி சமைக்க, கோமளா சோபாவிலேயே தூங்கிவிடுவாள். இரண்டுமணிக்கு அவள் எழும்பியபிறகு, சாப்பாடு, கொஞ்சநேரம் பேச்சு. மீண்டும் தூக்கம். குடிக்கும் மருந்துக்கு அவள் முழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும் நேரமே அதிகம். மாலை ஆறுமணிக்க எழுந்து, சாமியறைக்கு விளக்கு வைக்கவும், கண்ணன் வரவும் சரியாகவிருக்கும். எல்லோரும் டீ குடிப்பார்கள். இரவு உணவு இவர் சமைக்கப்போகிறேன் என்றால் முறைப்பாள். “உங்கட சாப்பாட்ட மனிசன் சாப்பிடுவானா? எண்ட மகனுக்கு நான்தான் சமைப்பன்” என்பாள். சிவலிங்கம் சிரிப்பார். சாப்பாட்டுமேசையில் மகனின் வேலைத்தள முறைப்பாடுகளை கேட்டபிறகு, படுக்கப்போவார்கள். இரண்டு மாதங்களுக்குமுதல், தனக்கு மீண்டும் இராமாயணம் படிக்கவேண்டும் போல இருக்கிறது என்று அவள் சொல்லவும், சிவலிங்கம் ஒவ்வொரு பாடலாக வாசித்து பொருள் விளக்கம் கொடுக்கத்தொடங்கினார். பாடல் விளக்கம் மட்டுமில்லாமல், அந்தக்காலத்தில் மேடைகளில் நடந்த சுவாரசிய சம்வங்களும் சேர்ந்துவரும். அவரோடு முரண்டுபண்ணும் நாட்களிலோ, அல்லது தூக்கம் வந்துவிட்டாலோ கோமளா சிவலிங்கத்தின் வாயை அடைத்துவிடுவாள்.

“அப்பா .. உங்களுக்கு இராமாயணமே தெரியாது … எண்ட அண்ணை எண்டா எப்பிடிச்சொல்லும் தெரியுமா?”

சிரித்துக்கொண்டே சிவலிங்கம் செல்லமாக அவள் தலையில் குட்டி தூங்கவைப்பார். அவளுக்கு பக்கவாட்டில் ஒருக்களித்துப் படுத்தால்தான் தூக்கம் வரும். இவர் தோளில் தலைசாய்த்தபடி, ஏதாவது பேசிக்கொண்டு அப்படியே தூங்கிவிடுவாள். இப்படியே இருந்துவிடக்கூடாதா என்று சிவலிங்கம் அனுதினமும் ஏங்குவார்.

ஒருநாள் காலையில் கோமளாவுக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது.

சிறிது கண்ணயர்ந்திருந்த சிவலிங்கம் திடுக்கிட்டு விழித்தார். கோமளா இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். நேரம் ஐந்துமணி. இருட்டிவிட்டது. எழுந்து யன்னல் திரைச்சீலைகளை இழுத்து மூடினார். அறையினுள் ஹீட்டர் போட்டிருந்தாலும் குளிர்ந்தது. போர்வையை இழுத்து கோமளாவின் தலையை போர்த்திவிட்டார். இன்னும் கொஞ்சநேரத்தில் கண்ணன் வந்துவிடுவான். அவனை நிறுத்திவிட்டு வீட்டுக்குப்போய் குளிக்கவேண்டும். இரண்டு இடியப்பமும், சொதியும் வைத்தால், பாவம் அவனாவது கொஞ்சம் சாப்பிடுவான். கோமளாவுக்கு எல்லாமே தண்ணிச்சாப்பாடுதான். சேலைனில் ஏற்றவேண்டும். பெயர் தெரியாத சத்துள்ள தண்ணீர் என்கிறார்கள். ஆங்கிலப்பெயர்கள். சிவலிங்கத்துக்கு புரிவதில்லை.

இம்முறை வந்திருக்கும் நோய் தீராத நோய் என்று வைத்தியர்கள் சொல்லிவிட்டார்கள். ஸ்ட்ரோக் வெறுமனே வரவில்லை. புற்றுநோய் உடல் எங்கும் பரவியதன் விளைவு. திண்ம உணவு சாப்பிட்டால் செமிக்காது. மாஸ்க் இல்லாமல் மூச்சுவிட முடியாது. உடம்பை அடுத்தவர் உதவியின்றி அசைக்கமுடியாது. பேசக்கூட கஷ்டப்படுகிறாள். அடிக்கடி வலி தாளாமல் முனகுகிறாள். எங்கே வலி என்று சொல்லமுடியாது. இங்கேதான் என்றில்லாமல் எல்லா இடமும் வலி. மூளைக்கு மட்டும் இன்னமும் நோய் ஏறவில்லை. சொல்வதெல்லாம் புரிகிறது. ஆட்களை அடையாளம் காண்பாள். ஞாபகம் அபாரம். அன்றைக்கு திரிசடையை தவறுதலாக மண்டோதரி என்று சொல்லிவிட்டார். முறைத்துப்பார்த்தாள். கடவுளே இவள் எனக்கு வேண்டுமே. கண் கலங்கியபடி சிவலிங்கம் கால்மாட்டில் அமர்ந்திருந்து கோமளாவின் கால்களை மெதுவாக பிடித்துவிட்டார்.

கண்ணன் வந்துவிட்டான். வேலையிலிருந்து அப்படியே ஆஸ்பத்திரிக்கு. இதற்கு முதலில் கோமாளாவிடம் திட்டு வாங்கப்போகிறான். “அப்பா நீங்க வீட்ட போயிட்டு வாங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்பவனுக்கு கீழ்த்தளத்து ரெஸ்டாரண்டில் ஒரு கோப்பி வாங்கிக் கொடுத்துவிட்டு, ஜக்கட்டை அணிந்தபடி சிவலிங்கம் வீடு நோக்கி புறப்பட்டார். கோமளா இன்னமும் தூங்கிக்கொண்டே இருந்தாள். அவள் தலையை தடவிவிட்டு, “பாவம், நோவுல கண் துடிக்குது” என்று சொல்லிக்கொண்டே, மனமில்லாமல் அறையைவிட்டு வெளியே வந்தார்.

சிவலிங்கம் ரிசப்ஷனைத் தாண்டும்போது, முதன்மை வைத்தியர் சிவலிங்கத்தை தன் அறைக்கு அழைப்பதாக கோல் வந்தது. எதற்காக இருக்கும்? புதிதாக ஒரு வைத்தியம் செய்வதாக இருந்தால், அழைத்து, விளக்கம் கொடுத்து, அனுமதி வாங்கி, விண்ணப்பம் படிவத்தில் கையொப்பம் இட்டபிறகே, அந்த வைத்தியத்தை தொடங்குவார்கள். கடவுளே இந்த முறையாவது எல்லாம் சரியாகோணும் என்று நேர்ந்தபடி வைத்தியருடைய அறைக்குள் நுழைகிறார்.

“ஹாய் சிவலிங்கம், ஹாவ் ஆர் யூ டூயிங்?”

வெறும் பேச்சுக்கு முகமன் சொல்லும் மனநிலையில் சிவலிங்கம் இல்லை.

“டொக்டர் … எனி நியூ ட்ரீட்மெண்ட்? வில் ஷி பி ஒல்ரைட்?”

வைத்தியர் நிதானமாக பேசத்தொடங்கினார்.

“இங்கே பாருங்கள் சிவலிங்கம். மிசஸ் கோமளாவுக்கு வந்திருக்கும் இந்த வியாதி பாரதூரமானது, இந்தவகை புற்றுநோய்கள் மிக ஆக்ரோஷமானவை. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காத காரணத்தால்…”

அன்றாடம் கேட்ட வசனங்கள்தான். சிவலிங்கத்துக்கு இனியொருமுறை கேட்கத் தெம்பில்லை.

“அவள் குணம் பெறுவாளா? இம்முறை என்ன வைத்தியம் செய்யப்போகிறீர்கள்?”

“நான் சொல்வதைக் கவனியுங்கள் சிவலிங்கம், இதற்கு வைத்தியம் செய்யலாம். ஆனால் பிரயோசனமில்லை, அவர் இப்பொழுதே மிகக் கடுமையாக வேதனைப்படுகிறார். இனியும் வைத்தியம் செய்தால், வேதனை தாங்கமுடியாமல் போகும். அப்படியே செய்தாலும் சிலநாட்களைத்தான் தள்ளிப்போடலாமே ஒழிய, காப்பாற்றுவது கடினம் …

வைத்தியர் மேலும் விளக்கிக்கொண்டுபோனார். சிவலிங்கத்துக்கு தாங்கோணாமல் போனது.

“என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?”

“….. இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று … இப்படியே தொடர்ந்து வைத்தியம் செய்யலாம். மிகவும் வேதனைப்படுவார். தாங்கமுடியாது. காப்பாற்றவும் முடியாது. ஒருநாள் .. ஒருவாரம் .. ஒத்திப்போடலாம். ஆனால் வேதனை தாங்கமுடியாது ..”

“இன்னொரு வழி?”

“இன்னொரு வழி, வைத்தியத்தை நிறுத்திவிட்டு மோர்பின் கொடுப்பது. அவரை மயக்கத்திலேயே ஆழ்த்தி, அவரை இந்த வேதனையிலிருந்து .… அவர் வலியில்லாமல்..”

வைத்தியர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிவலிங்கம் எழுந்து வெளியே வந்துவிட்டார். என்ன இது? என்ன நடக்கிறது இங்கே? ஏன் எமக்கு மட்டும் இப்படி நடக்கிறது? அப்படி என்ன வயசாகிவிட்டது? ஐம்பது வயசெல்லாம் ஒரு வயசா? இன்னும் இருபது வருடங்களாவது சேர்ந்து வாழ வேண்டுமே. மீண்டும் யாழ்ப்பாணம் போய், நிரந்தரமாக தங்கி, அங்கேயே … ஏன்? என் மனைவியை, கோமளாவை, பார்த்துக்கொண்டிருக்கும்போதே எப்படி முடியும்? … சிவலிங்கத்துக்கு இயலாமையில் உடல் தள்ளாடியது. அருகில் இருந்த சுவரோடு சாய்ந்தபடி கீழே இருந்துவிட்டார். இதை எப்படி கண்ணனுக்கு சொல்லுவேன்? இதை எப்படி கோமளாவுக்கு சொல்லுவேன்? கண்ணைத் திறக்கிறாள். என்னை அடையாளம் காண்கிறாள். கதை சொன்னால் கேட்கிறாள். அவ்வப்போது சிரிக்கவும் செய்கிறாள். இவளை எப்படி? வலி அவளதுதானே? உடம்புமுழுதும் ஆயிரம் ஊசிகள் ஏக சமயத்தில் குத்திக்கொண்டிருக்க வாழு என்றால் வாழமுடியுமா? நரம்புமுழுக்க அமிலம் ஓடுவதுபோல எரிந்தால், எப்படி தாங்கமுடியும்? பாவம் அவள். சின்னதாக திட்டினால் கூட முட்டைக்கண்ணீர் வடிப்பவள். இவ்வளவு வலியையும் எப்படி பொறுக்கிறாள். அழக்கூட திராணியில்லாத வலி.

சிவலிங்கம் கலங்கிய கண்களைத் துடைத்தபடி மீண்டும் கோமளாவின் அறைக்குச் செல்ல, கண்ணன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

“என்னப்பா வீட்ட போகேல்லையா?”

கோமளா இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் சலனம் எதுவுமில்லை. கண்கள் மட்டும் அயர்ச்சியாய் துடிப்பதுபோல. அவ்வப்போது சின்னதான முனகல் சத்தம். கைவிரல்கள் புரண்டுபடுக்க எத்தனித்தாலும் முடியமாட்டாத உடல். சிவலிங்கம் அவளை மெதுவாக புரட்டி அடுத்தபக்கம் படுக்கவைத்தார். தொடுகையில் முழித்துவிட்டாள். இவர் கண்கள் கலங்கியிருந்ததையும் கண்டுவிட்டாள். சிரிக்க முயன்றாள். அவள் கண்களில் சொட்டுக்கண்ணீர், மீதமிருந்தது, எட்டிப்பார்த்தது. இவளை எப்படி…? குடும்பத்தின் ஒரே ஆதாரம். இவளில்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? யாரிடம் பேசுவோம்? சண்டை போடுவோம்? நாளைக்கு கண்ணனுக்கு கலியாணம் என்றால் இவள் நிற்கவேண்டாமா? அறுபதாம் கலியாணத்தில் ஒரு தாலி கட்டவேண்டாமா? இவளைப்போய்? எப்படிச்சொல்வேன்? சிவலிங்கம் வெறித்தபடி நிற்க, கோமாளாவிடமிருந்து முனகல் வந்தது.

“என்னம்மா … நோகுதா? ஏலாம இருக்கா?”

அவள் வாய் மீண்டும் சிரிக்க முயன்று தோற்றுப்போனது. மீண்டும் முனகினாள்.

திருமணம் முடித்து முதன்முதல் நல்லூருக்கு போகிறார்கள். சைக்கிளில். அவள் ஒரு நாவல் கலர் காஞ்சிபுரம் சேலை உடுத்திவந்தாள். ஞாபகம் இருக்கிறது. உள்வீதி சுற்றி கும்பிட்டுவிட்டு, வெளிவீதியில், ஐஸ்கிரீம் வானில் ஒரு கோன் வாங்கி சாப்பிட்டபடி வைரவர் மண்டபத்தருகே மரத்தடியில் உட்காரப்போகிறார்கள். கோமளா திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள். சத்தம் போடாமல் விசும்பி விசும்பி. “என்னம்மா?” என்று கேட்டதுக்கு “இந்த மரத்தடி வேர் எண்ட கால் சின்னி விரலை அடிச்சிட்டுது” என்றாள். இவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. படக்கென்று சிரித்துவிட்டார். அவளுக்கு வந்ததே கோபம். சத்தம் போட்டு ஒப்பாரியே வைத்துவிட்டாள். என் வலி உனக்கென்ன அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா? என்ற அழுகை.  வீடு போகும் வரைக்கும் அவள் நிற்கவில்லை.

சிவலிங்கம் வைத்தியரின் அறைக்கு வேகமாக விரைந்தார்.

***************

ஓவியம் : ரஹமத்


20 comments :

 1. சில விடயங்களை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை.

  ReplyDelete
 2. நன்றாக இருக்கிறது. மரணத்தின் வலியை உணர்ந்தது எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழ்ந்த நிகழவுள்ள சம்பவங்களில் பதிவு.
  இன்றைய உலகில் உள்ள யாருக்கும் யாரும் துணையற்ற நிகழ்வை சொல்லியிருகிறீர்கள். மூன்று பேர் நாலு பேர் என்றால் ஒரு குடும்பம்; இன்னும் நாலு பேர் 1000 - 2000 மைல் தொலைவில்..எல்லாம் முடித்தபிறகு 1-2 கிழமை லீவில் வந்து காரியம் முடித்து விட்டு போவார்கள். அதுதான் இன்றைய வாழ்வு. அதற்காக மீள ஊருக்கு எல்லாம் திரும்பி போயி தொலைத்த எல்லாவற்றையும் தேடவும் முடியாது. பல சந்தர்பங்களில் அங்கும் இதே நிலைதான். 40-50 வயதில் ஒருவரை இழப்பதுவும் மற்றயவர்களை தொடர்ந்து வாழச்சொல்லுவதும் என்பது வலிகளின் உச்சம்.
  ஒரேஒரு கருத்து வியாதியை பற்றி;
  இன்று பலவித புற்று நோய்களுக்கு பொருத்தமான சிகிச்சை முறைகள் உண்டு. அந்த அந்த நாடுகளில் உள்ள வழமையான நோய் தடுப்பு, வருமுன் காப்பு முறைகளை கைகொண்டால் அதிகமானவற்றை-எல்லாவற்றையும் அல்ல, அவை பரவுவதற்கு முன் கண்டு பிடிக்க முடியும் .

  Hospice and Palliative care பற்றி;

  இப்ப உள்ள அதிகமான சிகிச்சை முறைகளில், முக்கியமாக I C U சிகிச்சை, தீவிர சிகிச்சை, முதியவர்களுக்குரிய சிகிச்சை முறைகளில், Quality of life என்கிற கருத்து முக்கியமாக பார்க்கபடுகிறது . 80 வயதில் இருந்து 85/90 வயது மட்டும் ஒன்றும் செய்யாமல் படுத்த படுக்கையாக, இருந்த இருக்கையாக இருந்தாரா, அல்லது 80 இல் இருந்து 81-82 வயது மட்டும், வலி இல்லமால், தன்னுடைய பிள்ளைகளுடன், பேரபிள்ளைகளுடன், இனிமையாக களிக்க சந்தர்பம் உண்டா என்று பார்க்கபடுகிறது- அது 25 வயதில் விபத்துக்கு உள்ளாகி ஆயிரத்து எட்டு வயர்களுடன் உயிருக்காக போராடும் இளைஞனுக்கும் பொருந்தும்.

  எந்த ஒரு செயலுக்கு முடிவு உள்ளது போல வைத்தியத்திலும் ஒரு நிலையில் செய்வது எல்லாவற்றையும் சரி பிழை பார்க்கிற நேரமே இந்த குடும்ப சந்திப்புக்கள்-(Family meeting). பல சந்தர்பங்களில்; அந்த நேரத்தில் இருந்து வரக்கூடிய விளைவுகளை, அந்த நேரத்தில் உள்ள தரவுகளுக்கு ஏற்ப சொல்லுவார்கள். முக்கியமாக மேற்கொண்டு தீவிர சிகிச்சையை தொடருவதா அல்லது Supportive care என்று சொல்லுகிற, நோயாளியை மேலும் வருத்தாமல், அவரது சாவை கூடுதாலான மட்டும் இயற்கையின் போக்கில் விடுவதா என்று தீர்மானிப்பார்கள்.
  அதற்கு பிறகும்: அடிப்படையான ஒடிசிசன், நீர், உணவு, வலி நிவாரணி...சாவிட்க்கு எது உடனடியாக காரணமாக அமையாதோ-அதை தவிர்த்து ஏனைய எல்லாம் கொடுக்கப்படும். நோயாளியினதும் உறவினர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நோயாளின் இறுதி யாத்திரை அவருக்கே தெரிந்தும்-தெரியாமலும் தொடங்கும்.
  Gopalan

  ReplyDelete
  Replies
  1. அண்ணா உங்கட கருத்து மிகமுக்கியமானது. எழுதினதுக்கு நன்றி. இந்தவகை சிறுகதைக்கு ஒரு வைத்தியர் தேவையான உப விளக்கத்தை கொடுப்பது அவசியமானது நன்றி.

   கோமளா விஷயத்தில், அவளுக்கு நோயும் வைத்தியசாலையும் புதிதல்லவே. ஆனால் வைத்தியர்கள் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவில்லை. நிபுணர்கள் தத்தம் சோலியை அந்தந்த நோய் வந்தபோது கவனித்தததும் ஒருகாரணம் என்று நினைக்கிறார்கள். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள். ஒரு ஓவர் ஒல் சிகிச்சையை, கண்காணிப்பை பார்க்கமுடியாதா?

   Delete
  2. உங்களுடைய கேள்வி ஒரு பெரிய கேள்வி. எனக்கு தெரிந்த கொஞ்ச அறிவுடன் சொன்னால் இதற்க்கு கிட்டடியில் தீர்வுவரும் என்று நம்பவில்லை.

   எனக்கு ஆஸ்திரேலியவில் உள்ள நடைமுறை தெரியாது. ஆனால் இங்கே அமெரிக்காவில்:
   பெரும்பாலானவர்களுக்கு ஒரு ஆரம்ப வைத்தியர் இருக்கிறார் Primary care physician. அவர் தனியாகவோ அல்லது ஒரு குருப் உடன் சேர்ந்தோ குறிக்கப்பட நோயாளர்களை ஒரு பார்பார். அந்த நோயாளிகள் வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டி வந்தால் அங்கேயும் போய் பார்ப்பார். அவர் பார்க்க முடியாத சந்தர்பத்தில், வைத்திய சாலையில் -இப்படி ஆரம்ப வைத்தியர் பார்க்காத நோயாளிகளை பார்க்கவென ஒரு குருப் (Hospitalist )இருக்கிறது, அவர்கள் வைத்திய சாலையில் பார்த்து , அங்கு நடந்த முழுவதையும் (Discharge summary) அந்த ஆரம்ப வைத்தியருக்கு சொல்லுவார்கள். முக்கியமாக அதாவது மேற்கொண்டு செய்ய வேண்டி இருந்தால் செய்ய சொல்லி சொல்லுவார்கள். (Follow up recommendation)

   துரதிஸ்டமாக இது ஒரு இறந்து கொண்டு இருக்கும் துறை (It’s a dying field). யாரும் ஆரம்ப வைத்தியராக வேலை செய்ய –புதிதாக விரும்பவில்லை. பல இடங்களில் இருக்கிற கிளினிக் எல்லாம் பூட்டுகிறார்கள். அவர்களுக்கு இந்த தொழில் விருப்பமில்லை அதோடு அதனால் கிடைக்கிற வருமானமும் போதாது. பலரும் வைத்திய சாலைகளில் சேர்ந்து வேலை செய்யவே விரும்புகிறார்கள் (As a Hospitalist)
   ஆரம்ப வைத்தியர்கள் குரிய பிரச்சனை என்ன என்றால்; இப்படியான பல வகையான வரும் முன் காப்பு நடவடிக்கைகளை செய்யவேண்டும், (Preventive care) பலரோடு தொடர்பு கொண்டு(Make referrals and follow up on referrals) வேலை செய்யவேண்டும், உண்மையிலே பாதி நேரம் போனில் கதைபதிலும், பழைய ரிப்போர்ட்களை பார்த்து என்ன செய்வது என்று தலை பிய்பதிலே போகும்.

   ஒரு வழி அவர்களுடைய சம்பளத்தை கூட்டுவது, அது இலகுவில் நடக்காது..எங்கும் உள்ளது போல மருத்துவத்திலும்; சிறுபகுதியே பெரும் சம்பளத்தை எடுப்பார்கள் .,..நான் வேலை செய்த ஒரு வைத்திய சாலையில் ஒரு நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் அந்த இடத்தில் உள்ள பல பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார் ..அவரும் இன்னும் 3-4 பெரும் வைத்தியசாலையின் முழு சம்பளத்தில் 25-30 வீதத்தை எடுப்பதாக சொன்னார்கள்

   இப்படியான நிலை உள்ள போது, யார்தான் ஆரம்ப வைத்தியராக வருவார்கள்?

   மற்றது;
   இப்ப இருக்கிற மருத்துவ வளர்ச்சிகள், நீங்கள் சொல்லுகிற overall care என்கிற முன்னேறத்தை நோக்கி போகிறதா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. 80 வயது ஆளை இதய வருத்திற்கு என்று அங்கியோகிராம்-(Angiogram) எடுக்க சொன்னால், அவரது சிறுநீரகம் அந்த டையை (Contrast media) தாங்காது. உண்மையில் இதய மருத்துவர் சொல்லுவார், அங்கியோ கிராம் எடுத்தால் நல்லம் சிறுநீரக வைத்தியரிடம் கலந்து ஆலோசித்து விட்டு வரச் சொல்லி. சிறுநீரக வைத்தியர் சொல்லுவார், இந்த வயதில் டை பாவித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
   இங்கே முடிவு எடுக்க வேண்டியவர் நோயாளியாக வருகிறார்...அதுதான் இப்ப நடக்கிறது. அதைவிட வேறு வழிகளும் இப்ப தெரியவில்லை. ஆனால் விளம்பர உலகில், 90 வயதில் அங்கியோகிராம் செய்த ஒருவர் பூட்பால் விளையாடி கொண்டு இருப்பார்.

   நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேனோ தெரியாது; அடிப்படையில் இங்கே அமேரிக்கவில ஒருவரும் உந்த ஓவரோல் வேலை செய்ய விரும்பவில்லை. இப்பவும் சில பல இடங்களில் இருக்கிறது ஆனால் ஊரில சொல்லுவோமே “ஒழிகடை” என்று அந்த நிலையில்தான் பல இடங்களில் இருக்கிறது. ஒன்று தலை வெடிக்கிற வேலை, மற்றது மிக முக்கிய பிரச்சனை சம்பளம்; Obama கொஞ்சம் கூட்டுகிறது என்று சொல்லி இருக்கிறார், ஆனால் அது ஒரு பெரிய அளவு அல்ல . இன்னுமொன்று இன்றைய காலத்தில் ஒருவரே எல்லா வியாதிகளையும் கவனிப்பது என்பது இயலாத காரியம். அதனால் நிபுணர்களின் சேவை தேவைபடுகிறது, ஆனால் அவர்களின் சேவைகளை ஒழுங்கு படுத்தும் ஆரம்ப வைத்தியருக்கும், நிபுணர்களுக்கும் இடையே பாரிய வெளி மருத்துவ அறிவிலும் , அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்திலும் இருக்கிறது.
   Gopalan

   Delete
  3. Thanks Anna .. I would like to consolidate this and publish as a separate post, with your kind permission.

   Delete
 3. என்ன செய்வது வலிகளும் அழுத்தமும் சேர்ந்தே வாழ்க்கை!

  ReplyDelete
 4. வலிகளும் வேதனைகளும் சேர்ந்தது தானே வாழ்க்கை!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தனிமரம்.

   Delete
 5. was reading in the train. Very touching. Added a literary value to her life. Apt example of Kamban.

  ReplyDelete
  Replies
  1. Thanks Aiya .. I was so down yesterday and day before yesterday. This is the only way I know to offer my condolences.

   Delete
 6. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வேலைக்கு வந்து முதல் வேலையாக உங்கள் பதிவு ஏதாவது இருக்காவென்று பார்த்து வாசிப்பேன் - அந்த நாளும், வார இறுதியும் நன்றாக இருப்பதற்காக - ஆனால் இன்று!! :(...
  உங்கள் எழுத்து எப்போதும் போல் அருமை. அண்மையில் எனது நண்பன் அனுபவித்த அதே கதை!
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. This story is written loosely based on a incident happened this week. I am equally down before, while and after writing it :(

   Delete
 7. பிறக்க நினைக்காத குழந்தை, பிறக்காத குழந்தை, இறந்தே பிறந்த குழந்தை, ஒவ்வொரு வயதுவரை வாழ்ந்தே மரணித்த மனிதன் எல்லோருமே ஆகக் குறைந்தது எவரோ ஒருவரை சந்தோசப்படுத்தியிருப்பர். மரண வலி இறந்தவரை சுற்றியுள்ள அத்தனைபேரையும் வாட்டி வதைக்கும்.................................

  இப்படியான சம்பவங்கள் எங்களை வாளும் வரை சரியாக வாழ செய்யும்..............

  அஜந்தன்............

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜந்தன் அண்ணா .. //வாழும்வரை சரியாக வாழ செய்யும்// இந்தக்கதை சொல்லும் ஆதாரமான செய்தியும் அதுவே.

   Delete
 8. I have seen my close people had to use morphin. u have used this in this story ver well. That comparision of pains (the day they married and now) is classic.
  Very good .

  Siva

  ReplyDelete
  Replies
  1. Thank you Siva .. writing something of this kind is very painful too.

   Delete
 9. நோய் வந்து மரணப்படுக்கையில், நோயாளி படும் அவஸ்தை மிகக் கொடிது. அதுவும் நமது பிரியத்திற்கு உரியவர்கள் மரணப்படுக்கையில் படும் வேதனையை காண்பது மிகவும் கொடுமை.

  ஒரு நோயாளியின் மரணப்படுக்கை வேதனையை லியோ டால்ஸ்டாய் " The Death of Ivan Ilich" இல் மிகவும் நுண்மையாக சொல்லியிருப்பார்.

  சூப்பர் தல.

  ReplyDelete
 10. dear JK. this is amazing.after a long time it touches my mind. thanks.

  ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே