நாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்

 

Vandhiya-thevar-azhwarkadiyan

பண்டைய தமிழ் வரலாற்றில் ஒரு வழக்கம் உண்டு. ஏதாவது திருவிழா, கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டம் கூடினால், அங்கே அறிஞர்கள் பலர் கூடி தமக்குள்ளே வாதப்போர்களில் ஈடுபடுவர். எப்படி? என்றால் வாதப்போர் செய்ய விரும்புபவர் ஒரு நாவல் மரக்கிளையை தனக்கு முன்னே நட்டுவைத்துக்கொண்டு “நாவலோ நாவல்” என்று கூவுவார். உடனே அவரோடு வாதப்போர் செய்யவிரும்புவர் முன்னே வருவார். வாதப்போர் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். சைவ, வைணவ, சமண, பௌத்த விவாதங்களாக இருக்கலாம். கடவுள் இருக்கிறார் இல்லை என்ற வாதமாக இருக்கலாம். அறிவியல் வாதமாக இருக்கலாம். அல்லது மூல வியாதிக்கு காரணம் சோழ மகராசனா? என்ற அபத்தமான டொபிக் கூட பேசப்படும். ஏதோ ஒரு வாதம். வாதத்தில் தோற்பவர், தான் உடுத்தியிருக்கும் துணியைத்தவிர மிச்ச எல்லாவற்றையும் இழக்கவேண்டும். இறுதியில் வெல்பவர் அந்த நாவல் கிளையை பிடுங்கி உயர்த்தி “நாவலோ நாவல்” என்று கூவிவிட்டு மீண்டும் தனக்கு முன்னே நாட்டுவார். கிட்டத்தட்ட WWF கணக்கில் இந்த வாதப்போர் நடைபெறும்.

அதென்ன நாவலோ நாவல்? என்று கொஞ்சம் ஆராய்ந்தால் பதில் முத்தொள்ளாயிரத்தில் இருக்கிறது.

"காவல் உழவர் களத்(து) அகத்துப் போர்ஏறி
நாவலோஓ! என்றிசைக்கும் நாளோதை, காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால்ப் போலுமே
நல்யானை கோக்கிள்ளி நாடு"

அறுவடைக்காலத்தில் நாற்று வெட்டி பெரும் போராக போட்டுவைத்திருப்பார்கள். அதைப்பின்னர் சுற்றி சுற்று சூடு மிதிப்பர். அந்த நெல்லுப்போர், விளைச்சல் பெருகிய காலங்களில் ஒரு மலைக்குன்று அளவுக்கு உயர்ந்துவிடுமாம். அதில் ஏறி உயரத்தில் நின்றபடி உழவன் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் “நாவலோ” என்று கூவுவானாம். அது அந்த பிரதேசம் முழுதும், அந்த விவசாயியின் வெற்றியை எதிரொலிக்கும்.

கோழியூர் வேந்தன் கிள்ளியின் யானை மெதுவாக ஆடி ஆடி வருகிறது. அந்த யானை எப்படி ஆடி அசைந்து வருகிறது என்பதை ஒருகால் ஈழத்திலும் மறுகால் தஞ்சையிலும் என்று விவரிக்கும் பாடலே இருக்கிறது. இப்போது வேண்டாம். அந்த யானை மீதிருந்து பகைவர்களை பார்த்து அரசன் வீரகோசம் போடுவான். அப்படி எழுப்பும் வீரகோசம் உழவனின் “நாவலோ” என்ற கூவலுக்கு இணையானது என்கிறார் கவிஞர்.

இந்தக்கூவலை நெல்லுப்போர், மல்லுப்போர் முதற்கொண்டு அறிவுசார் வாதப்போர்கள் வரை தமிழர்கள் பாவிக்கத்தொடங்கினார்கள்.

பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் வட காவேரியில் “நாவலோ நாவல்” என்று கூவிக்கொண்டிருப்பான். அவனிடம் வாதப்போர்செய்து தோற்றால் அரையில் கட்டியிருக்கும் துணியைத்தவிர மிகுதி எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைக்கவேண்டும். அவனிடம் தோற்றவர்களின் உடைமைகள் எல்லாம் நாவல் கிளையருகே சிதறிப்போய்க் கிடக்கும். தீபம் நா.பார்த்தசாரதி எழுதிய, “மணி பல்லவம்” வரலாற்று நாவலில் வருகின்ற புத்த பிக்குவான விசாகையும், பாளி மொழியில் வாதப்போர் செய்து நாவலோ நாவல் என்று கூவியிருக்கிறாள்.

முகநூல் நிலைத்தகவல்கள் பலவற்றில் இவ்வகை “நாவலோ நாவல்” ரக கூவல்களைப் பார்க்கலாம். “எனக்கு உன்னைவிட அதிகம் தெரியும்” என்று காட்டிக்கொள்ளும் கூவல்கள். “நான் மற்றவனைப்போல இல்லை, சிந்திக்கத்தெரிந்தவன், வித்தியாசமானவன்” என்பதற்காக அப்படி ஒரு சீனை ஒருவன் போடுவான். உடனே அப்படி அவனை விட்டுவிட முடியுமா? இன்னொருவன் அதை மறுத்து ஒரு கருத்துப்போடுவான். மீண்டும் கருத்து. இறுதியில் ஒருவன் கோவணத்தோடு எஸ்கேப்பாக, வென்றவன் மகிழ்ச்சிப்பெருக்கில் இன்னொரு “நாவலோ நாவல்” ஸ்டேடஸ் போடுவான்.

இந்தவகை விவாதங்களில் யார் வெல்பவர்? யார் தோற்பவர்? என்பதை தீர்மானிப்பது கடினம். அனேகமாக வாதம் செய்பவர்கள் வாதத்தின் இறுதியில் தமது நிலையையோ கருத்தையோ மிக அரிதாகவே மாற்றிக்கொள்வார்கள்.  தம்முடைய நிலையை மேலும் இறுக்கிப்பிடித்தும், மற்றவனின் வாதத்தில் தவறு கண்டுபிடித்து அதன்மூலம் தம்முடையது சரி என்றும் நிரூபிப்பார்கள். சாதாரண இலங்கை அணி, இந்திய அணி கிரிக்கட் சண்டைகள் முதற்கொண்டு, புலி எதிர்ப்பாளர், புலி ஆதரவாளர் சண்டைகள் வரை எல்லாமே அப்படிப்பட்டவை.

புலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் என்ற இந்த இரண்டு குழுக்களுக்குமிடையே காலம் காலமாக வாதப்போர் வெளிநாடுகளில் நிகழ்ந்துவருகிறது. உள்நாடுகளிலும் நிகழ்ந்தது. ஆனால் வாதங்களில் ஆயுதங்களும் பங்கேற்றமையால் அவை பெரிதாக நீடிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வாதங்கள் இன்றைக்கும் நீடிக்கிறது. ஆரம்பத்தில் ஆளுக்கொரு பத்திரிகை அடித்து வெளியிட்டார்கள். பின்னர் மதுபானக்கடைகளில், சம்மர் என்றால் ஆற்றங்கரை, அவ்வப்போது இலக்கிய கூட்டங்கள் என்று இந்த சண்டை நடந்தது. இணையம் வந்தபிறகு இது உலக மயமானது. ஆனால் இந்த விவாதங்கள் ஏதாவது கல்லை நகர்த்தியதா? என்றால் ஒரு ஆணியும் இல்லை.

எனக்குத்தெரிந்து எழுத்தாளர் ஷோபா சக்தி புலிகளை விமர்சித்தே இதுவரை எழுதிவந்திருக்கிறார்.  எத்தனையோ பேர் இன்றைக்கு வரைக்கும் அவரோடு முண்டிப்பார்க்கிறார்கள். ம்ஹூம். பரணி கிருஷ்ணரஜனி புலி ஆதரவாளரே. கலையரசன் கம்யூனிசம் சார்பாக எழுதுபவர். மைந்தன் சிவா விஜய் ரசிகர். லோஷன் இலங்கை அணி ரசிகர், என்னதான் விவாதம் செய்தும் அவரவர் நிலை, அபிப்பிராயங்கள் இன்றைய தேதிக்கு எள்ளேனும் மாறியிருக்கிறதா? என்றால் ஒரு மண்ணும் கிடையாது. மாறுகின்ற சிலமன் எதுவுமில்லை. மாறவேண்டிய தேவையுமில்லை. ஜெயமோகனுக்கு எதிராக சிலர் கொடி பிடித்தார்கள். சிலர் குடை பிடித்தார்கள். பலர் சும்மா மழையில் நனைந்தார்கள். ஜெயமோகனோ, பெண்ணியவாதிகளோ இறுதிவரை தம் கருத்துகளிலிருந்து மாறவில்லை.  ஆனாலும் வாதப்போர்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அது ஒருவித இருப்புக்கான யுத்தமே.

அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். மெல்பேர்னில் எழுதுபவர்கள் ஓன்று கூடி “எழுத்தாளர் சங்கம்” ஒன்று நடத்தி வருகிறார்கள். அதில் நானும் ஒரு உறுப்பினர். இந்த சங்கம் ஒரு விழா நடத்தியது. “கலை இலக்கிய விழா”. சங்கத்தின் ஒரு உறுப்பினருக்கு பாடுவதற்கு கொள்ளை விருப்பம். ஒருமுறை இலக்கிய ஆய்வரங்கில் இவர் ஒரு கட்டுரை சமர்ப்பித்தார். இடை நடுவில் டிஎம்எஸ் வந்துவிட்டார். எழுத்தாளருக்கு பாடுவதென்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அவர் பாடினால் கேட்கமுடியாது. ஏ ஆர் ரகுமானால் கூட அவர் குரலில் எந்த ஈரத்தையும் கண்டுபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு கர்ணகொடூரமாக(அதென்ன கர்ண கொடூரம்?) இருக்கும். அன்றைக்கு விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியே இசை நிகழ்ச்சிதான். எழுத்தாளர் தொடர்ச்சியாக பாடிக்கொண்டிருக்கிறார். சுருதி தாளம் என்ற வஸ்துகள் நாயுரு அகதிகள் காப்பகத்துக்கு ஓடிவிட்டன. இடை நடுவில் அவர் ஆடவும் செய்தார். அவர் பாடிக்கொண்டிருக்கும்போதே கூட்டம் வெளியேறத் தொடங்கிவிட்டது.  கதிரைகளை அடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசிப்பாட்டு அவர் பாடுகையில் இரண்டே இரண்டுபேர்கள் மாத்திரம் இருந்தார்கள். மற்றவர்கள் தாமும் தங்கள்பாடும்.

ஒரு ஆங்கில வாசகம் இருக்கிறது.

"The first principle is that you must not fool yourself and you are the easiest person to fool."
“நான் ஒருபோதும் என்னை முட்டாளாக்க முயலக்கூடாது. இன்னொன்று என்னைத்தான் நான் மிக இலகுவில் முட்டாளாக்கலாம்”

அந்த எழுத்தாளர் தன்னை அவையோர் முன்னிலையில் மிக இலகுவாக முட்டாளாக்கினார். ஆனால் பரிதாபம், இறுதிவரை அவர் அதை உணரவேயில்லை. டீ ஆர் நிலைமைதான். டீ. ஆரின் திறமைகளுக்கு முன்னால் நம்மில் பலர் பிச்சை எடுக்கவேண்டும். ஆனாலும் டீஆர் தன்னைத்தானே இலகுவாக அடிக்கடி முட்டாளாக்குவார்.

வாதப்போர்களும் அப்படியே. குறிப்பாக முகநூல் வாதப்போர்களில் யாரோ ஒருவன் இறுதியில் முட்டாளாக்கப்படுகிறான். மிக அரிதாகவே தப்பை உணர்ந்து பதில் கருத்துக்கு நன்றி சொல்லும் generosity முகநூலில் காணப்படுகிறது. பொதுவாக “என்ன கையைப் பிடித்து இழுத்தியா?” ரகம்தான். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான் உட்பட.

எந்த வாதப்போரிலும் அவரவர் பார்வையில் ஒருவன் வெல்கிறான். இன்னொருவன் தோற்கிறான். ஆனால் யார் அறிகிறான்? வாதங்கள், தர்க்கங்கள் மூலம் நன்மை யாருக்கு? என்றால் அந்த தர்க்கங்களை சத்தம்போடாமல் அவதானிக்கும், கூட நிற்கும் கூட்டத்திற்குத்தான். அவர்களுக்குத்தான் தம்மை சரி என்று நிரூபிக்கும் தேவையில்லை. அதனால் திறந்த மனத்தோடு இருவரது வாதங்களையும் அணுகுவார்கள். இரண்டுபக்கத்திலும் உள்ள சரிகளையும் பிழைகளையும் கண்டறிந்து ஒரு தீர்க்கமான நிலையை எய்துவார்கள். ஆனால் அந்த தீர்க்கமான நிலையை எடுப்பதற்கு எங்களுடைய சில இயல்புகள் தடுத்துவிடுகின்றன. உதாரணத்துக்கு கடவுள் இருக்கிறார், இல்லை என்கின்ற தீர்க்கமான நம்பிக்கை, இரண்டுபக்க வாதங்களிலும் இருக்ககூடிய தகுந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ள தடையாக இருந்துவிடும்.

பெரியவர்கள் நிகழ்த்தும் பட்டிமன்றங்களில் தீர்ப்பு எப்போதும் விவாதம் செய்பவர்களின் வாதப்புள்ளிகளை வைத்து வழங்கப்படுவதில்லை. நடுவர் தன்னுடைய பார்வை ஒன்றை தீர்ப்பில் புகுத்தி முடிவு வழங்குவார். அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று சிறப்பாக ரசிக்கும்படியாக விவாதம் செய்வதால் மாத்திரமே விவாதப்புள்ளி சரியாக அமைந்துவிடவேண்டிய தேவை இல்லை. மற்றையது நடுவர் வேறு ஒரு கோணத்தை அறிமுகப்படுத்துவதன்மூலம் பார்வையாளனுக்கு புதிதான ஒரு தளம் விரிகிறது.

ஆங்கிலத்தில் Fallacy என்கின்ற ஒரு வார்த்தை இருக்கிறது. தமிழ்படுத்தினால் “தப்பான வாதங்கள்” என்று வரும். விதண்டாவாதம் என்றும்  சொல்லலாம். இதனை மிகைப்படுத்தாத அளவிலே நாங்கள் தினமும் செய்துகொண்டிருக்கிறோம்.  வாதங்களுக்கு இது ஒரு சத்துரு. இந்த fallacy களை ஓரளவுக்கு இனம் கண்டுகொள்ள பழகினோமென்றால், எந்த ஒரு வாதத்தினுடைய ஆதார நோக்கை புரிந்துகொள்வது இலகுவானதாக இருக்கும். அது ஒரு மேடைப்பேச்சு, பட்டிமன்றமாக இருக்கலாம். பத்திரிகை செய்தியாக இருக்கலாம். கட்டுரையாக இருக்கலாம். முகநூல் சண்டைகளாக இருக்கலாம். அல்லது வீட்டுப்பிரச்சனையாக கூட இருக்கலாம்.

இந்த “நாவலோ நாவல்” தொடரில் அடுத்த ஏழு நாட்களும் ஏழு குட்டிக்கதைகள் வெளிவரும். ஏழு கதைகளும் ஏதாவதொரு fallacy யை, நாம் தினமும் வாதங்களில் பயன்படுத்தப்படும் தப்பான அணுகுமுறைகளைப் பற்றிப்பேசும்.

நாளை நமசிவாயமும் சூரியனும்.

 

இந்த தொடரின் ஆதார செய்திகள் "Bad Arguments" என்ற நூலை வாசித்த பாதிப்பில், அதிலிருந்து தழுவி எழுதப்பட்டது. தொடரின் இறுதியில் நூலைப்பற்றிய அறிமுகம் வெளிவரும்.


6 comments :

 1. வருகின்ற கிழமை நாட்கள் மிகவும் அருமையாக இருக்கப்போவதாக உணர்கின்றேன் - காலநிலை உட்பட - can't wait :)
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. நன்றி உதயன் அண்ணே

   Delete
 2. Replies
  1. Hope the wait for the first post is over :)

   Delete
 3. இதுபற்றி ஷோபாசக்தியின் கருத்து.

  அய்யா! "ஷோபாசக்தி அன்றுமுதல் இன்றுமுதல் புலி எதிர்ப்பாளரே தனது கருத்துகளை மாற்றிக்கொள்ள முடியாதவர்" என்ற சாரப்பட நீங்கள் எழுதியிருப்பதை நான் மென்மையாகக் கண்டிக்கிறேன்.

  நான் ஆரம்பத்தில் புலிகள் இயக்க உறுப்பினர். அதன் பின் புலிகளை விமர்சிப்பவன். எனவே நான் ஆரம்பம் முதலே புலி எதிர்ப்பாளன் அல்ல என்பதும் பலமான இயக்க விசுவாசத்திலிருந்து விலகி அவர்களை எதிர்த்தவன் என்பதால் நான் கருத்துகளை மாற்றிக்கொள்ளக் கூடியவன் என்பதும் உள்ளங்கை கிரனைட். Please note this point.

  ReplyDelete
  Replies
  1. ஷோபா சக்தி அவர்கட்கு, நீங்கள் புலி எதிர்ப்பாளர் எண்டதும் அந்த நிலையில் இருந்து இதுவரை மாறவில்லை என்பதும் உங்கள் எழுத்துகளை வாசித்ததன் மூலம் (முகநூல் மாத்திரம் அல்ல, Traitor பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னமேயே குறிப்பிட்டிருக்கிறேன்) மட்டும் அறிந்தவன். அதுதான் நான் அறிந்த எழுத்தாளர் ஷோபா சக்தி. நீங்கள் சொன்னதை இணைத்தி கட்டுரையை திருத்துகிறேன்.

   "எனக்கு தெரிந்து ஷோபா சக்தி அன்றுதொட்டு இன்றுவரை புலி எதிர்ப்பாளரே."

   என்றதை

   "எனக்குத்தெரிந்து எழுத்தாளர் ஷோபா சக்தி புலிகளை விமர்சித்தே இதுவரை எழுதிவந்திருக்கிறார்."

   என்று மாற்றிவிட்டேன்

   Delete