நாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்

 

Alice in a Flood of Tears

அப்போது சிவகாமிக்கு நான்கு வயது. ஒருநாள் பின்னேரம் அவள் அப்பாவோடு காலிமுகத்திடல் கடற்கரைக்குப் போனாள். வெள்ளவத்தையிலிருந்து நூறாம் இலக்க பஸ்ஸில் ஏறினால் அரை மணித்தியாலத்தில் காலிமுகத்திடலுக்கு போய்விடலாம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கடற்கரைக்கு ஐந்து நிமிட நடை. இறால்வடை வாங்கிச்சாப்பிட்டுவிட்டு, படிக்கட்டுகளால் கீழே இறங்கினால், மணல் கடற்கரை. அன்றைக்கு சிவகாமி தகப்பனோடு சேர்ந்து கடலில் குளித்தாள். அவள் கடலில் குளிக்கவென்று ஒரு பொம்மை பலூன் டயரை அப்பா வாங்கிக்கொடுத்திருந்தார். அதை இடுப்பில் கொழுவியபடியே தகப்பன் பிடித்திருக்க அவள் கடலில் மிதந்தாள். ஆனாலும் முதல் அனுபவம். தெரியாத்தனமாக கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட, தலையில் புரையேறிவிட்டது. 

“ச்சிக் கெட்ட உப்பு” என்று அன்று முழுக்க சிவகாமி சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் சிவகாமி அப்பாவின் மடியில்  இருந்து விளையாடிக்கொண்டிருக்கையில், திடீரென்று அவருடைய மூக்குக்கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டாள். “அது விளையாட்டுச் சாமான் இல்ல, இஞ்ச கொண்டா” என்று அப்பா சொல்லவும் கேட்காமல் இவள் கண்ணாடியை போட்டுக்கொண்டு குசினிக்குள் ஓடுகையில், தகப்பன் கோபம் தாங்காமல் அவளை இழுத்து முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

அவ்வளவுதான். சிவகாமி “வீல்” என்று அழத்தொடங்கினாள். அழுதுகொண்டே கோபத்தில் அவளுடைய அறைக்குள் நுழைந்து கதவைச்சாத்தி உள் தாழ்ப்பாள் போட்டாள். யாரும் அவளை பின்தொடர்ந்து வரவில்லை. அது தெரிந்து அவமானத்தில் மேலும் கத்தி கத்தி சிவகாமி அழ, கண்ணீர் கொல, கொலவென்று கொட்டத்தொடங்கியது. ஐந்து நிமிடம், பத்துநிமிடம், இருபதுநிமிடம், நேரம் போகிறதே ஒழிய அழுகை நின்றபாடில்லை.

ஆச்சரியாமாக “ஏன் அழுகிறாய்? அழாதே” என்று அம்மாவோ அப்பாவோ வந்து கதவைத்தட்டவிலை. சிவகாமிக்கு அழுகை மேலும் அதிகரித்தது.

“எல்லாருக்கும் நல்ல அப்பா அம்மா கிடைக்குது, முன்வீட்டு சௌமியாக்கு எப்போது பார்த்தாலும் அவள் தகப்பன் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுக்கிறார். எனக்கு கொடுக்கிறார்களா? இங்கிலீஷ் கிளாசுக்கு வரும் ரம்யா எந்தநேரமும் கண்ணாடி போட்டிருக்கிறாள். நான் ஒரு ரெண்டு நிமிஷம் போட்டால் பிழையா?எனக்கு மட்டும் ஏன் இப்பிடி கெட்ட அப்பா அம்மா?”

சிவகாமி தொடர்ந்து அழுதால். அழுது, அழுது, அழுது, அழுது ….. அறை முழுதும் கண்ணீர் பரவிவிட்டது. வெள்ளம் போல கண்ணீர். சிவகாமி கவனிக்கவில்லை. திடீரென்று கண்ணக்கசக்கிக்கொண்டு பார்த்தவளுக்கு கழுத்தளவு கண்ணீர் நிறைந்திருப்பதை கண்டதும் பயம் பிடித்துக்கொண்டது. கதவை நோக்கி இரண்டு அடி வைத்தவள், கண்ணீரில் வழுக்கி விழுந்து, தத்தளிக்கத்தொடங்கினாள்.

“அய்யய்யோ .. அளவுக்கதிகமாக அழுதுவிட்டோமே, இப்போது என்ன செய்வது?” என்கின்ற பதட்டம். நல்லகாலம், அவளுடைய பொம்மை டயரும் வெள்ளத்தில் மிதந்துவர அதைப்பிடித்துக்கொண்டாள். பிடித்துக்கொண்டு “ஐயோ அம்மா அப்பா” என்று கத்தத்தொடங்கினாள். கத்திய வேகத்தில் எசக்கு பிசகாக கொஞ்சம் கண்ணீர் குடித்துவிடவே, அது உப்புக் கரித்தது.

“ச்சிக் கெட்ட உப்பு” என்று மனதுக்குள் நினைத்தவளுக்கு திடீரென்று பொறி தட்டியது.

“அட உப்பா இருக்கிறதால இது கடலாக இருக்கோணும். கடல் எண்டா ஐஞ்சு நிமிஷம் கிழக்கால மிதந்தா எப்பிடியும் பஸ் ஸ்டாண்ட் வரும். நூறாம் நம்பர் பஸ்ஸில ஏறினால் வீட்டுக்கு போயிடலாம்”

சிவகாமி அழுகையை நிறுத்திவிட்டு, மிதவையை, கிழக்கு நோக்கி வலிக்கத் தொடங்கினாள்.

************************


அவசரக்குடுக்கைத்தனமான பொதுமைப்பாடு

சிவகாமியின் கதையில் கண்ணீர் வெள்ளமாக மாறியவுடனேயே ஊகித்திருப்பீர்கள். இது “Alice in Wonderland” இல் வருகின்ற சம்பவம்தான். அதில் வரும் புகையிரதநிலையம் இங்கே பஸ் ஸ்டாண்ட் ஆகிவிட்டது. அங்கே இங்கே காது மூக்கு வைத்து கதையை சரிப்பண்ணியாயிற்று. “Alice in Wonderland” ஆங்கிலத்தில் வெளிவந்த மிகச்சிக்கலான, நுணுக்கமான, எல்லா வயதினரும் வாசிக்ககூடிய, வாசிக்கவேண்டிய நவீனம். இந்த நாவல் போன்று கணிதத்தையும், விஞ்ஞானத்தையும், தர்க்கத்தையும், நான் அறிந்த வேறு எந்த நாவலும் எளிமையாக அலசவில்லை. இது பற்றி ஏற்கனவே இளிச்சவாய் பூனை என்று அலசியிருப்பதால் இதற்குமேல் வேண்டாம். விஷயத்துக்கு வருவோம்.

“Hasty Generalisation”. தமிழ்ப்படுத்தினால், “அவசரக்குடுக்கைத்தனமாக பொதுமைப்படுத்தல்” என அர்த்தம் இலகுவாகும். இருக்கிற கொஞ்சம் தரவுகளை வைத்துக்கொண்டு விசயங்களை பொதுமைப்படுத்துவது. சில கண்தெரியாத பேராசிரியர்கள் யானையின் ஒவ்வொரு பாகத்தையும் தடவி, ஒவ்வொரு ஊகங்களை கொடுப்பார்களே. The elephant and the blind philosophers. அதுதான் இந்த பொதுமைப்படுத்தல்.

ஒரு வெளிநாட்டவர் இலங்கை வருகிறார். வருபவரை “அய்புவன்” என்று சிங்களத்தில் வரவேற்கிறார்கள். உடனே இலங்கையர் அனைவரும் “அய்புவன்” என்றே வரவேற்பார்கள் என்று வேறு நாட்டவர்கள் முடிவுபண்ணிவிடுவார்கள். அது Hasty Generalisation. அவசர குடுக்கைத்தனம். அவனுக்கு இதற்குப்பின்னால் இருக்கும் அரசியல் புரியாது. அலுவலகத்தில் “ஸ்ரீ லங்கா” என்று சொன்னால், “அய்புவன்” என்பான். அவனுக்கு அந்த நாட்டில் “வணக்கம்”, “அஸ்ஸலாமு அழைக்கும்”, “ஹாய்”, “ஹலோ”, “வெள்ளை வான்”, “ரோட்டுக்கரை எச்சில்” என்று பலவித வரவேற்பு முறைகள் இருக்கிறது என்று சொல்லுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். 

சிவகாமியின் கண்ணீர், இந்தக்கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட அவசரக் குடுக்கைத்தனமான பொதுமைப்படுத்தல்களை சிவகாமி செய்கிறாள். முதல் பொதுமைப்படுத்தல் “சௌமியாவுக்கு அவள் தந்தை எப்போதும் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுப்பார்” என்பது. சிவகாமி, சௌமியா ஐஸ்கிரீம் குடித்த நாட்களை மாத்திரமே ஞாபகத்தில் வைத்திருப்பாள். மற்றைய நாட்களை அவள் ஞாபகம் வைத்திருக்கப்போவதில்லை. அது இயல்பு. அதனால் அவளுக்கு சௌமியா எப்போதும் அப்பாவிடம் ஐஸ்கிரீம் வாங்கிக்குடிப்பதே ஞாபகம் இருக்கும். சிவகாமியின் அடுத்த பொதுமைப்படுத்தல் மேலும் அபத்தமானது. “ரம்யா அப்பாவின் கண்ணாடியை போட்டுக்கொண்டு டியூஷனுக்கு வருகிறாள், ஆனால் சிவகாமிக்கு தன் அப்பாவின் கண்ணாடியை இரண்டு நிமிடம் கூட போட்டிருக்க அனுமதியில்லை”. தன் அப்பா மட்டுமே கண்ணாடி போட்டதை சிவகாமி அவதானித்திருந்ததால், ரம்யாவும் அவளுடைய அப்பாவின் கண்ணாடியையே விளையாட்டுக்கு போட்டுவந்திருக்கிறாள் என்று சிவகாமி நினைத்துவிட்டாள். Hasty Generalisation.

இறுதியான பொதுமைப்படுத்தல் இது எல்லாவற்றையும்விட அபத்தமானது. புரிதலுக்காக மிகைப்படுத்தப்பட்டது. உப்பு கரிப்பதால் கண்ணீரும் கடல் நீர்தான். கடல் நீரில் மிதப்பதால் பக்கத்திலேயே பஸ் ஸ்டாண்ட் இருக்கும். பஸ் ஸ்டாண்ட் இருந்தால் எப்படியும் நூறாம் நம்பர் பஸ் வரும். தப்பிவிடலாம். யோசிக்க யோசிக்க, வைகோ நெடுமாறன் முதற்கொண்டு யார் யாரோ எல்லாம் ஞாபகம் வருகிறார்கள்.

எங்களுக்கு சிவகாமியின் எண்ணங்கள் சிரிப்பாக இருந்தாலும் சிவகாமி சீரியஸாகவே அவற்றை நம்பினாள். காரணம் அவளுக்கு இருந்த குறுகிய வாழ்க்கை அனுபவம். சரியான விஷயத்தை உய்த்தறிய அவளது அனுபவம் போதவில்லை. அனுபவம் என்பது என்ன? மூளையில் சேமிக்கப்படும் பதிவுகள்தானே. அவை அதிகமாக அதிகமாக உய்த்தறியும் திறன் அதிகரிக்க சாத்தியம் இருக்கிறது. ஆராய்ச்சித்துறையில் இருப்பவர்கள் சாம்பிளிங் டேட்டா (sampling data) என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு பரம்பலான, அதிக எண்ணிக்கையிலான தரவுகளை எடுக்கமுடியுமோ, அந்த அளவுக்கு உய்த்தறிதல்கள் துல்லியமாக இருக்கும். நமது மூளையும் ஒருவித ஆராய்ச்சிசாலையே. அங்கே, அனுபவங்கள் என்கின்ற தரவுகளைக் கொண்டே உய்த்தறிதல்கள் நடக்கிறது. தரவுகள் போதாமல் போகின்றபோது உய்த்தறிதல்கள் பிழைத்துவிடும்.

“conventional wisdom can often be wrong”

என்று “Freakonomics” நூல் குறிப்பிடும். ஒரு சின்ன உதாரணம். நம் எல்லோருக்கும் விமானப்பயணம் செய்வதென்றால் ஒரு சின்ன “டிக் டிக்” அடி நெஞ்சில் அடித்தே தீரும். விமானத்தின் இருக்கையில் இருந்து, முன்னே பணிப்பெண் அவசர நேரத்தில் எப்படி ஊதுவது என்று விசில் அடித்துக்காட்டும்போது, அவள் அழகை பார்த்து விசில் அடிக்கத்தோன்றாது. தப்பித்தவறி விழுந்துவிட்டால்? இதை யோசிக்காமல் எவரும் விமானத்திலிருந்து இறங்கியிருக்கமாட்டீர்கள். ஆனால் உலகிலேயே விமான விபத்துகளை விட அதிகமாக வீதி விபத்துகளிலும், ரயில் விபத்துகளிலுமே மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு ஆதாரமாக பலவித புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. சும்மா பொதுவாக யோசித்துப்பாருங்கள். ஒரு வருடத்தில் மில்லியன் கணக்கில் விமானப்பயணங்கள் நடக்கிறது. ஆனால் ஆகக்கூடியது ஒன்றிரண்டு விமானங்களே வெடித்துச்சிதறுகின்றன. அதே சமயம் தினம் ஆயிரக்கணக்கில் உலகம் முழுதும் வீதி விபத்துகளில் மக்கள் பலியாகின்றனர். ஆனால் வீதியால் பயணிக்கும்போது அந்தப்பயம் எமக்கு வருவதில்லை. விமான விபத்துகளின் கோரக்காட்சிகளை கண்டோ, அல்லது அது அடிக்கடி பயணிக்காத ஒன்றாக இருப்பதாலோ, எமக்கு விமான விபத்துகள் மீதே பயம் அதிகம். இது ஒரு hasty generalisation.

ஐரோப்பிய நிறுவனம் ஒன்று ஆரியானே5 என்கின்ற விண்கலத்தை வடிவமைத்தது. பத்து ஆண்டுகள். ஏழு பில்லியன் டொலர்கள் செலவழித்து வடிவமைக்கப்பட்ட விண்கலம். வானில் பறந்து முப்பது செக்கன்களில் சுக்கல் நூறாக வெடித்துச் சிதறியது.

காரணம் ஒரு சாதாரண “அவசர பொதுமைப்படுத்தல்”.

இந்த விண்கலத்தை நிர்மாணிக்கையில், இதற்குரிய கட்டளைப்பீட மென்பொருளுக்கு, ஆரியானே4 விண்கலத்தில் பயன்படுத்தியதையே பயன்படுத்தினார்கள். அந்த மென்பொருள் நீண்டகாலமாக பாவனையிலிருந்து, பரிசோதிக்கப்பட்டதால், ஆரியானே5 இலும் அது பிரச்சனை இல்லாமல் வேலை செய்யும் என்று நினைத்திருக்கிறார்கள். அந்த புரோகிராமில் விண்கலத்தின் வேகத்தை கணிப்பிடும்போது எங்கேயோ ஓரிடத்தில் 64bit இலக்கத்தை 16bit க்கு ஒரு புண்ணியவான் மாற்றியிருக்கிறான். ஆரியானே4 இனுடைய வேகம் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால் இந்த மாற்றம் எவ்வித பிரச்சனையையும் முன்னர் கொடுத்திருக்கவில்லை. ஆனால் ஆரியானே5 இன் வேகம் மிக அதிகம். புறப்பட்டு சில செக்கன்களியே வேகம் பிடிக்க, அந்த குறிப்பிட்ட பெறுமதி 16bit உயர் பெறுமானத்தை தாண்டிவிட்டது. இது தெரியாமல் கணணி, 64bit இலக்கத்தை 16bit க்கு மாற்றமுயல, விண்கலத்தின் வேகமும், கணணி நினைக்கும் வேகமும் ஏறுக்கு மாறாக இருக்க, தானியங்கி கணணி, வேறு ஏதேதோவெல்லாம் செய்துபார்த்து, கடைசியில் வேலைக்காகாது என்று, விண்கலத்தையே வெடித்துச் சிதறவைத்துவிட்டது.

இதில் எங்கே தவறு நிகழ்ந்தது? “ஒரு சிஸ்டத்தில் வேலை செய்த மென்பொருள் இன்னொன்றிலும் வேலை செய்யும்” என்று நினைத்த அதே சிவகாமி உப்புத்தண்ணி ஸ்டைல் பொதுமைப்படுத்தல்தான், ஏழு பில்லியன் டொலர் துண்டு துண்டாகச் சிதற காரணம்.

பொதுவாக கருத்துக் கணிப்பீடுகள் அவசரக்குடுக்கை பொதுமைப்படுத்தல் முடிவுகளையே கொண்டுவரும். பிபிஸி சென்ற நூற்றாண்டின் சிறந்த பாடலுக்கான கருத்துக்கணிப்பீடை நிகழ்த்தியது. அதில் நான்காம் இடத்தில் இருக்கும் பாடல் இளையராஜாவின் “ராக்கம்மா கையத்தட்டு”. ஐந்தாமிடத்தில் எங்கட “பூவும் நடக்குது, பிஞ்சும் நடக்குது”. ஒன்பதாம் இடத்தில் ரகுமானின் “தையா தையா”. முதல் பத்தில் ஏழு பாடல்கள் தெற்காசிய நாடுகளின் பாடல்கள். மைக்கல் ஜக்சன், பீட்டில்ஸ் எவரும் உள்ளே இல்லை. காரணம் என்ன? கருத்துக்கணிப்பில் இரவு பகலாக வேலை மெனக்கட்டு வோட்டுப் போட்டவர்கள் நம்மாட்கள். ஒருத்தன் பத்து பதினைத்து வோட்டுக்கூட கொம்பியூட்டர் மாறி கொம்பியூட்டர், ஒரே நெட்கபேயில் போட்டிருப்பான். நாங்கள்தான் ராஜா ரகுமான் ரசிகர்கள் ஆயிற்றே. அவர்கள் புகழை உலகம் முழுதும் பரப்பவேண்டாம்? நம்மாளு தீயாக வேலை செய்ய, கருத்து கணிப்பீடே கேலிக்கூத்தாக மாறிவிட்டது.

விஜய் டிவி சுப்பர் சிங்கர் தெரிவும் அப்படிப்பட்ட அபத்தமே. முதலிடம் வரவேண்டிய சத்தியப்பிரகாஷ் மூன்றாமிடம் போனதற்கும், சரியாக சுருதியில் நின்று பாடாத சந்தோஷ் கார் வாங்கியதற்கும் இந்தவகை வாக்களிப்பு முறைகளே காரணமாயின. சுஜாதா, ஸ்ரீனிவாஸ், உன்னி கிருஷ்ணனைவிட, என்னைப்போன்ற குப்பனுக்கும், சுப்பனுக்கும், அன்னம்மாவுக்கும் இசை நன்றாக தெரியும் என்று விஜய் டிவி நினைத்ததற்கு எஸ்எம்எஸ் காசும் டிஆர்பியுமே காரணம்.

இலங்கையில் தேர்தல் என்றால் சக்தி டிவி கருத்துக்கணிப்பீடுகளில் ரணில் விக்கிரமசிங்கவே சிரித்துக்கொண்டிருப்பார். ஒரு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு 74வீத வோட்டுகள். மகிந்தவுக்கு இருபத்திச்சொச்ச வீதம். இறுதியில் சிங்களவர்கள் எல்லாம் வண்டி வண்டியாக மகிந்தவுக்கே வாக்களித்தார்கள். சக்தி டீவியின் பொதுமைப்படுத்தலில் அரசியல் இருந்தது. பொதுமைப்படுத்தல்களை அரசியலில் மிகச்சாதாரணமாக தமக்குச்சாதகமாக பயன்படுத்துவார்கள். 94ம் ஆண்டு யாழ்ப்பாண தேர்தலில் டக்ள்ஸ் தேவானந்தாவின் ஈபிடிபி ஒன்பது பாராளுமன்ற சீட்டுகளைப் பெற்றது. யாழ்ப்பாண பெருநகரம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தேர்தல் அங்கு நடைபெறவில்லை. அதை சாட்டாக வைத்து, ஈபிடிபி அத்தனை சீட்டுகளையும் தீவுப்பகுதிகளில், ஒரு சில நூறு வாக்குகளை வாங்கியும்/போட்டும் அள்ளிவிட்டது. அதனால் டக்ளஸ் தன்னைத்தானே தமிழினத்தின் பாதுகாவலன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்றைக்கும் அவர் அப்படியே தன்னை நினைத்துக்கொள்கிறார். டக்ளசை வைத்து தமிழர் அரசியலை சிங்களத்தலைமை செய்யவும் இந்த பொதுமைப்படுத்தலே காரணமாயிற்று.

அப்படியென்றால் தரவுகள், சாம்பிள்ஸ் அதிகமாக இருந்தால் உய்த்தறிதல் சரியாக அமையுமா? என்றால், இல்லை. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாடசாலைக்கு செல்கிறீர்கள். முதல் கட்டடத்தில் இசை வகுப்பு நடக்கிறது. எல்லா மாணவர்களும் நன்றாக பாடுகிறார்கள். உடனே அந்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் நன்றாக பாடுகிறார்கள் என்று சொல்லலாமா? இல்லைதானே. தரவுகளின் பரம்பல், பன்முகத்தன்மை இந்த இடத்தில் முக்கியம். இங்கே வேறு வகுப்பு, வேறு வயது மாணவர்களை தெரிவுசெய்து பாடச்சொல்லியிருக்கவேண்டும். தரவுகளில் பன்முகத்தன்மை இல்லாவிட்டால் பொதுமைப்படுத்தல்கள் படு அபத்தமாக முடிந்துவிடும். அதே சமயம் தப்பான பரம்பல் நம்மை வேறு திசையிலும் செலுத்திவிடும். உதாரணத்துக்கு மாணவர்களை வயது, வகுப்பு வாரியாக கணிப்பிடாமல், உயரம், நிற பரம்பல் அடிப்படையில்  கணக்கிட்டு விட்டோமானால், “வெள்ளையா இருப்பவன் நல்லா பாடுவான், கறுப்பு நிறத்தவனுக்கு சுருதி போகும், கட்டை ஆக்கள் தாளம் தப்ப மாட்டினம்” என்ற முடிவெல்லாம் எடுத்துவிடுவோம்.

அதே லைனில் ஜெயமோகனுடன் ஒரு சின்ன கற்பனைப் பேட்டி ஒன்றை செய்வோம்.

“ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாரதி, சுஜாதா, சுந்தராமசாமி, குட்டி ரேவதி, இந்த லிஸ்ட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“கவலையாக இருக்கிறது”
“ஏன் ஜெமோ?”
“தமிழில் மீசை வைத்தவர்கள் எப்போதுமே எழுதியே தம்மை நிரூபிக்கவேண்டிய தேவையில் இருக்கிறார்கள். ஜெயகாந்தன், ஜெயமோகன், சுந்தரராமசாமி, பாரதி எல்லோரும் தொடர்ந்து எழுதியதாலேயே கவனம் பெற்றார்கள். பாரதி அதிலும் பாவம் வாழும் காலத்தில் அவனை எவனும் சீண்டவில்லை. ஆனால் மீசை இல்லாதவர்களின் நிலை அப்படி அல்ல”
“ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?”
“சுஜாதா.. வெறும் உரை நடை பேர்வழி, எழுதவேயில்லை, ஆனால் காலையில் எழுந்தால் கிளீன் ஷேவ் எடுப்பார். மீசை இல்லாத ஹிந்திக்கார முகத்தைக்காட்டியே தமிழ் வாசகர்களை கவர்ந்தவர் அவர்”
“புதுமைப்பித்தன் கூடவா?”
“அவர் நிறைய இங்கிலிஷ் வாசிச்சிட்டு எழுதவந்தவர். புதுமைப்பித்தன் ஒரு கலக எழுத்தாளர். அவ்வளவே. அவருக்கும் மீசை இல்லை. இன்றைக்கு அவருடையதை கிளாசிக் என்கிறார்கள்”
“நம்ப முடியவில்லையே”
“ஏன் பெண் எழுத்தாளர்கள் எழுதாமலேயே புகழடைகிறார்கள் தெரியுமா?”
“தெரியலியே?”
”அவர்களுக்கும் மீசை இல்லை. உண்மை இதுதான் .. வேணுமென்றால் குட்டி ரேவதியை கவனியுங்கள், மீசை இல்லை. ‘எங்கபோன ராசா? சாயங்காலம் ஆச்சு’ என்று எழுதினா எழுத்தாளரா? .. மீசை இல்லை. புகழ் பெறுகிறார்கள்”
“நீங்க கூட அமேரிக்கா போனசமயம் கொஞ்சநாளா மீசை மழிச்சு இருந்தீர்களே?”
“என்னுடையது தனித்த குரல் .. இலக்கியம் என்பது தனித்து ஒலிக்கும் குரல் .. பொதுமைப்படுத்தக்கூடாது”
“அப்போ மற்றவர்கள் என்ன கூட்டமாகவே எழுதினார்கள்? அவர்களை எதற்கு மீசை உள்ள, மீசை இல்லாத எழுத்தாளர்கள் என்று பொதுமைப்படுத்தினீர்கள்? தனித்து தனித்தல்லோ விமர்சனம் செய்திருக்கோணும்?”
“தம்பி நீவீர் என் ஆழமான தளத்தில் பிரவாகித்து புரையேறி பெரிதினும் பெரிதைத்தேடும் …”
”எஸ்கேப்..”

இறுதியாக ஒருவிசயம். பொதுமைப்படுத்தல் கூடாது என்பதில்லை. அவசரமான, தீர ஆராயாமல் எடுக்கும் பொதுமைப்படுத்தல்களே ஆபத்தானது. மற்றும்படி பொதுமைப்படுத்தல் தவிர்க்க இயலாத ஒருவிஷயம்.  உதாரணத்துக்கு சில காப்புறுதி நிறுவனங்கள், இருபது வயதுகளில் உள்ளவருக்கும், ஆண்களுக்கும் அதிகமாக வாகன காப்புறுதி கட்டணத்தை அறவிடுகின்றன. காரணம் ஆண்களும், இளைஞர்களும் பொறுப்பில்லாமல் வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் என்கின்ற பொதுமைப்படுத்தல். பல விதிவிலக்குகள் இங்கே இருந்தாலும் இது ஒரு தவிர்க்க முடியாத வியாபார பொதுமைப்படுத்தல். மூன்றுமுறை பரீட்சையில் பெயில் விட்டவன் நான்காம் முறை பாஸ் பண்ணுவானா என்பது சந்தேகத்துக்கிடமானதே. இல்லை மூன்று முறையும் தற்செயலாகத்தான் பாஸ் பண்ணவில்லை. நான்காம் தடவை தள்ளிவிடுவான் என்று நினைத்தால் அது ஒருவித குருட்டு நம்பிக்கை. ஆங்கிலத்தில் Slothful Induction என்பார்கள்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.

முதலில் MH 370, எங்கேயென்று தெரியாது. பின்னர் MH 17, தீவிரவாத தாக்குதல். வேறு வேறுபட்ட காரணங்கள். தனித்துவ காரணங்கள். தற்செயல் சம்பவங்கள். அதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பானது என்று அந்த விமான நிறுவனம் சொல்லிக்கொள்கிறது. இது அவர்களின் ஒருவித Slothful Induction.

முதல் விமானம் எங்கே போனது என்பதற்கு ஐடியாவே இல்லை. அந்த சிஸ்டத்தை அப்டேட் பண்ணியிருந்தால் கறுப்புப்பெட்டியிலிருந்து கூடுதல் சிக்னல் கிடைத்திருக்கும் என்கிறார்கள். செய்யவில்லை. பல விமான நிறுவனங்கள் உகரெய்னுக்கு மேலே பறப்பதை தவிர்த்த வேளையில், மலேசியன் ஏர்லைன்ஸ் காசு போய்விடும் என்று குறுக்காலே ரிஸ்க் எடுத்து போயிருக்கிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் பல விஷயங்கள் புரிகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கவனமின்மை. பொறுப்பின்மை. அந்த நிறுவனத்தில் மலிந்திருக்கும் ஊழல். எல்லாம் சரியாக நடக்கும் என்கின்ற அசட்டு நம்பிக்கை. எப்போது ஒரு நிறுவனம் பொறுப்பில்லாமல், ஒரு தவறுக்கு தன்னைத்தவிர மிகுதி அத்தனை விஷயங்களையும் காரணப்படுத்த முயல்கிறதோ, அப்போதே அதன் நம்பகத்தன்மை இல்லாமல்போகிறது.

ஆகவே மலேசியா ஏர்லைன்ஸ் பாதுகாப்பான விமானம் இல்லை என்பது நியாயமான பொதுமைப்படுத்தலே.

நாளை “கந்தரோடை கலகம்”


நாவலோ நாவல் : ஏழு நாட்கள் ஏழு கதைகள்
நாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்


7 comments :

 1. நானும் நினைத்திருக்கிறேன் கண்ணாடி போட்டவர்கள் எல்லாம் படிப்பாளிகள் என்று நான் கண்ணாடி போடும் வரைக்கும் ...

  Gopalan.

  ReplyDelete
  Replies
  1. கண்ணாடி போட்டாக்கள் படிப்பாளிகளா எண்டுதெரியாது. ஆனா நீங்கள் அண்ணே படிப்பாளி எண்டு தெரியும்!

   Delete
 2. பொதுமைப்படுத்தல் என்பது ஒரு பொதுவான நோய். கடலாமைக்கும் கிணற்றுத்தவளைக்கும் இடையிலான உரையாடல் கூட ஒருவகை பொதுமைப்படுத்தல் பிரச்சினைதான். பொதுமைப்படுத்தல் பெரும்பாலும் முன்முடிபுகளை உருவாக்கி, முரண்பாடுகளுக்கு வழிசமைப்பதும் வழமை. பெண்கள் என்றால் இப்பிடித்தான், ஆண்கள் என்றால் இப்பிடித்தான் முதல் எல்லா இடங்களிலும் இந்த பொதுமைப்படுத்தல் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது. இந்த விடயத்தை ஒரு குட்டிக்கதை, அதை தொடர்ந்த அலசல், ஆய்வு விளக்கம் என்று அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். சிவகாமியை எனக்கு நாராக தெரியும். எனக்குள், எனக்கு நெருக்கமானவர்களுக்குள் சிவகாமியை கண்டிருக்கிறேன், காண்கிறேன். உப்பென்றால் கடல் என்றும், கடல் என்றால் கட்டாயம் பஸ் நிலையம் அருகில் இருக்கும் என்ற எண்ணம் எவ்வளவு அபத்தமாக தெரிந்தாலும் அது பல விடயங்களில் இலகுவாக வரக்கூடியது. மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் தற்கொலை முடிவுகளுக்கும், திடீர் காதல்களால் வீட்டை விட்டு ஓடிப்போய் வாழ்க்கையை தொலைப்பவர்களின் துயருக்கும் பின் இந்த எண்ணம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அணைப்புகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு இல்லை என்று எம் பிஞ்சுகளுக்கு சொல்லிக்குடுக்க வேண்டிய தேவையையும் இந்த கதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. அதிகாலை தூக்கம் கலைந்தவுடன் வாசித்தேன், ஏராளம் எண்ணங்களையும் கேள்விகளையும் இன்னும் மாறி மாறி எழுப்பிக்கொண்டிருக்கிறது. அவனுக்கென்ன எழுதிவிட்டு போய்விட்டான் அலைபாய்பவன் வாசகன் தானே என்று உங்கள் மீது கோபம் கூட வருகிறது. தேடி தொலைந்து தெளிந்து எழுதுவதால் இந்த எழுத்து இன்னும் இன்னும் மெருகேறிக்கொண்டே போகிறது. இந்த நாவலோ நாவல் நிச்சயமாக ஒரு நூலாக வேண்டும். வரப்புயர என்பது போல உங்கள் எழுத்தை பார்க்கிறேன். எழுதவேண்டும் என்பது ஆவல், ஆவலினால் வந்த தேடல், தேடலினால் வந்த தெளிவு, தெளிவினால் வந்த ஞானம், ஞானத்தினால் வந்த கருணை, கருணையினால் வந்த எளிமையான எழுத்து நடை, எளிமை சேர்த்துவிட்ட சுவை, சுவை தந்த வாசகர்கள், வாசகர்கள் தந்த உந்துதல், எழுதவேண்டும் என்கிற ஆவல் என்று ஒரு சந்கிலிபோல் தொடர்கிறது இந்த எழுத்துப்பணி.

  ReplyDelete
  Replies
  1. கேதா ... நாம் எல்லோருமே பொதுமைப்படுத்தலில் சிக்கியிருக்கிறோம். இது கொஞ்சம் தெரிந்தால் சிக்கும் எண்ணிக்கை குறையும். ஆனாலும் ஏதாவது ஒரு பொதுமைப்படுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.

   இதை நூலாக கொண்டுவரும் ஆசை/எண்ணம் சாதுவா வந்திருக்கு. முதலில் ஒரு புத்தகத்தை ரிலீஸ் பண்ணுவம். பிறகு மற்றவை எல்லாம்.

   இறுதிவரிகள் கொஞ்சம் ஓவரா இருந்தாலும், மலையேறி தண்ணி விடாய்க்குது. மழை பெஞ்சா பறுவாயில்லை!

   Delete
 3. உங்கள் எழுத்தை மட்டும் என்னால் பொதுமைபடுத்த முடியவில்லை - நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் வாசிக்க விரும்புவதை தவிர!
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. நன்றி உதயன் அண்ணே. உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியேல்ல.

   Delete
 4. சரியான உதாரணம் சூப்பர் சிங்கர் தான்
  உங்கள் பதிவுகள் மெருகேறிக்கொண்டே செல்வது சாதாரணம் ஆனால் வாசகர் ஆகிய நாங்கள்/ நான் வாசிப்பில் மெருகேறிக்கொண்டு செல்வது ஆச்சரியம் .மிகவும் அருமையாக உள்ளது .
  மேலோட்டமாக பார்த்து /வாசித்து அவசர பொதுமைப்படுத்தல்களை மேட்கொள்வது அதிகரித்திருந்த சமயத்தில் இந்த பதிவை வாசித்தது ஒரு பரிட்சை தான் .

  ReplyDelete