வெள்ளி – 3

 

அத்தியாயம் 3

orange20suneset

அள்ளூர் ஆற்றின் குடவாய்க்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்திரவிழாவுக்கென மாதீர்த்தம், பொன்னாகரம், ஒக்கூர் என்று சுற்றியுள்ள ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வண்டிகட்டி சாரை சாரையாக இன்னமும் வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு ஊர் பாணர்களும் தமக்குள் கூடி  இசைப்போட்டி நடத்திக்கொண்டிருக்க, இன்னொருபுறம் மல்யுத்தத்திடலில் வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். சிறுவர், சிறுமியர் குறுக்கும் நெடுக்கும் ஓடித்திரிந்து விளையாடினார்கள். ஒரு வேங்கை மரத்தடியில் திண்ணை அமைத்து விறலியர்கள் நாட்டிய நிகழ்வுகள் செய்தனர். கூட்டம் ஒன்று நறவு அடித்தபடி சீட்டாடிக்கொண்டிருந்தது. அன்னதான மடத்தில் பரதேசிகள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று வயிற்றை நிரப்பி ஏப்பம் விட்டுக்கொண்டு மீண்டும் வரிசையில் இடம் பிடித்தார்கள். இடையிடையே காவல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அவ்வப்போது வந்துபோகும் பல்லக்குகளின் ஆரவாரத்துக்கு கூட்டம் திரும்பிப்பார்த்து, தேவை என்றால் எழுந்து மரியாதையும் செய்துவிட்டு மீண்டும் திருவிழாக்கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தது.

அள்ளூர் ஆறும் தன் பாட்டுக்கு திருவிழாவில் பங்கெடுத்திருந்தது.

ஆற்றுநீர் முழுதும் பூக்களால் நிறம் மாறியிருக்க, ஆங்காங்கே வாளை மீன்கள் எட்டித்தாவி இந்திராவிழா அமளியை வேடிக்கை பார்க்க முயன்றன. ஆற்றின் நடுவில் இந்திரனுக்காக மிக உயரமான மன்மதக்கொடி ஒன்று நாட்டப்பட்டிருந்தது. ஏராளமான படகுகளில் பெண்களும் ஆண்களும் சோடிகட்டி, உடல்கள் உரச, மிக நெருக்கமாக அமர்ந்திருந்து, துடுப்பு வலித்து, ஆற்றின் மையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள். சென்றவர்கள்  பூக்களையும் ஆற்று நீரையும் கலந்து மன்மதக்கொடிக்கு தூவித்தெளித்தார்கள். கொண்டுசென்ற மாலைகளை மாற்றிக்கொண்டார்கள். ஏதோ வேண்டுதல் செய்தார்கள். பின்னர் இக்கரை திரும்பாமல் அத்தனை படகுகளும் அக்கரை நோக்கி தொடர்ந்து பயணித்தன. அக்கரையில் நிறைய குட்டி குட்டி குடிசைகள் போடப்பட்டிருந்தது. காலையில் சென்ற படகுகள் மதியம் கழிந்து அக்கரையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தன. அப்படி வந்த எல்லா படகுகளிலும் சோடிகள் இருக்கவில்லை. இருந்த படகுகளிலும் செல்லும்போதுவிருந்த நெருக்கம் தொலைந்துபோயிருந்தது.

குடவாய்க்கரையின் சிறு குன்றின் உச்சியிலே நின்றிருந்த புன்னைமர நிழலில் உட்கார்ந்திருந்த கோடன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த இடத்திலிருந்து மொத்த இந்திரவிழாவையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவன் சங்கநாட்டுக்குள் பிரவேசித்து இன்றோடு சரியாக மூன்று நாட்கள் ஆகின்றன.

இளவேனில் காலமென்பதால் குளிர் இன்னமும் சிறிது எஞ்சியிருந்தது. வெறும் மேலுடனும், வேட்டியுடனும் அமர்ந்திருந்த கோடனுக்கு தன்னைப்பார்க்க சிரிப்பு சிரிப்பாய் வந்தது. நுழையும்போது மேலுடையையும் தெரிவு செய்திருக்கலாம். ஒரு ஆர்வத்தில் வேட்டிமட்டும்போதும் என்று சொல்லிவிட்டான். குளிர்கிறது.

மூன்று நாட்களும் சங்கநாடே கதியென்று கோடன் சுற்றிவருகிறான். இந்திரவிழா ஓயும்வரையும் குடவாய்க்கரை முழுதும் உலாத்தி, இங்கேயே சாப்பிட்டு, தூக்கம் வரும்போதும், வெளியேற மனமில்லாமல் ஆற்றங்கரையிலேயே கூதக்காற்றில் படுத்து தூங்கி, நடு இரவில் நிஜமாகவே பசி எடுத்து, “போயிட்டுவாறன்” சொல்லி வெளியேறி, நூடில்ஸ் போட்டு சாப்பிட்டு, பாத்திரத்தை டிஷ் வோஷரில் போடக்கூட நேரமில்லாமல், அவசரமாக, மீண்டும் சங்கநாட்டுக்குள் நுழைந்து … நடப்பவைகளை அவனால் நம்பவேமுடியவில்லை. எல்லாமே நிஜம்தானா? சங்கநாடு கோடனை முழுதாக ஆட்கொண்டுவிட்டது.

கோடன் மீண்டும் அக்கரையையே கூர்ந்து கவனித்தான். ஒவ்வொரு குடிசைகளுக்கு வெளியேயும் ஒவ்வொரு சோடி. குடித்து கும்மாளமிட்டுக்கொண்டிருந்தது. இக்கரை மாந்தர் பார்ப்பார்களே என்ற சின்ன கூச்சமும் இல்லை. தமக்குள் முத்தம் கொடுத்தனர். நறவு அருந்தினர். தழுவிக்கொண்டனர். பின் திடீரென்று அவசர அவசரமாக குடிசைக்குள் ஒதுங்கிக்கொண்டனர். வெளியே வரும்போது அவன் ஆடையை அவள் அணிந்திருக்கிறாள். அவள் ஆடையை அவன் அணிந்திருக்கிறான்.  ஆளாளைப்பார்த்து நகைத்துகொள்கின்றனர். 

கோடனுக்கு உதட்டோர சிரிப்போடு சின்னதாக கவிதையும் சேர்ந்துகொண்டது.

“மாதரும் கண்டேன்.
மாலைகள்
மாறின கண்டேன்.
நாணங்கள் விட்டு
கானங்கள் பாடி
போதையில் ஊறி
ஆடினர் கண்டேன்.

கோதையில் கட்டுண்டு
மட்டினை விட்டுண்டு
கொண்டதை விண்டவர்
கொட்டமும் கண்டேன்.

கவிதை பாடிக்கொண்டிருந்தவன் ஏதோ ஆளரவம் கேட்டவனாய் துணுக்குற்றான். இந்த புன்னை மரத்தடியில் வேறு யாராவது ஒளிந்திருக்கிறார்களா? சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமேயில்லை. வெறும் பிரமைதான். கவிதையைத் தொடர்ந்தான்.

குடில் கண்டேன்.
கூடிய கூடலும் கண்டேன்.
கூடலின் ஈடலில்
ஆடைகள் மாறிய
கோலமும் கண்டேன்.

அக்கரைப்  பசுமை
வெம்மையில் குளித்து
இக்கரை யாவும்
கருகிடல் கண்டேன்.

மீண்டும் சலசலப்பு. அவன் கவிதையை நிறுத்தினான். இப்போது தெளிவாகக் கேட்டது. நிச்சயம் யாரோ இருக்கிறார்கள்.

“யாரது?”

குரல் செருமும் சத்தம். அட, இது பெண் குரல் அல்லவா. கோடன் குரல் வந்த திசை திரும்பினான். புதருக்கு அப்பாலிருந்த ஒற்றையடிப்பாதையிலிருந்து வருகிறது சத்தம்.

“யாரது?”

“துணைப் புணர்ந்த மடமங்கையர்

பட்டு நீக்கித் துகில் உடுத்து,

மட்டு நீக்கி மது மகிழ்ந்து,

சங்கக்கவிதை. புரியவில்லை. கோடன் அந்த ஒற்றையடிப்பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான். யாரது?

“மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,

“மகளிர் கோதை மைந்தர் மலையவும்..”

கோடன் ஆர்வம் தாங்கம் எழுந்தோடிப்போய் பார்த்தான். அவ்வளவுதான்.

கோடனின் கூகிள் லென்ஸ் அவளை பார்த்த மாத்திரத்திலேயே ஸ்டக் ஆகிப்போனது. மூன்று செக்கன்கள் முழுதாக பிளக் அவுட்டாகி அப்புறம்தான் அதற்கு உயிர் வந்தது. அவளை மீண்டும் நன்றாக பார்த்தான். அவள் உதடு இன்னமும் கவிதையை உச்சரித்துக்கொண்டிருந்தது. இவனுக்கு எதுவுமே கேட்கவில்லை. கொண்டகட் லென்ஸ்கூட அவள் அழகை அளவெடுப்பதில் அத்தனை சி.பி.யூ பவரையும் விரயம் செய்ததாலோ என்னவோ, கோடனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

அழகின் தொல்காப்பியமே முன்னே வந்து கவிதை சொன்னால் யார்தான் மயங்கமாட்டார்கள்?

நெடிய முகம். நிறைந்த கன்னம். அவள் தோள்களை குலுக்கினாலும் கன்னங்களில் குழி விழுகிறது. அறல் கூந்தல், அதே நீளத்துக்கு சுனைப்பூக்களும் சோடிகட்டிக்கிடந்தன. பிறை நெற்றி. புருவம் வில். எ டிபிக்கல் சங்க இலக்கியத்தலைவி. கோடன் முன்னே அவள் யாவுமே கறுப்பாகி நிற்கிறாள். மேனி கறுப்பு. மின்னும் கன்னம் கறுப்பு. கண்ணிமை கறுப்பு. கண்மணி கறுப்பு. அமாவாசை இரவே பயந்து நடுங்கிடும் கூந்தல் கறுப்பு. கறுப்பிலேயே இத்தனை நிறங்களை அன்றுதான் கோடன் கவனித்தான்.  “பிரம்மன் என் டேஸ்ட்டெல்லாம் அறிந்து கஸ்ட்டம் பில்ட் செய்ததுபோல அப்படி வார்த்திருக்கிறான்”.

“நீங்களுமா?”

அவன் சிந்தனையோட்டத்தை அவளே தடுத்து நிறுத்தினாள். கோடன் புரியாமல் விழித்தான்.

“இல்லை … பெண் என்று சொல்லி பெருச்சாளியை காட்டினாலே, “ஆழி சூழ் ஆளி கண்டேன், அண்டம் கண்டேன்” என்று இந்த ஊரில் கவிஞர்கள் சம்பந்தமேயில்லாமல் வர்ணிக்க தொடங்கிவிடுவார்கள். உங்களைப்பார்த்தால் வேற்றூர் என்று தெரிகிறது. நீங்களும் அந்த வகையோ என்று யோசித்தேன்..”

கோடன் சுதாரித்தான். ரூட்டை மாத்து. நிலைமை புரிந்து கொடகட் லென்ஸும் விவரணத்தின் பிரயோரிட்டியை குறைத்துக்கொண்டது.

“இல்லை … நான் சொன்ன கவிதையை நீங்கள் அப்படியே சங்கக்கவிதைக்கு மாற்றினீர்களே .. அதுதான் கொஞ்சம்..”

இவன் சொல்லும்போதே அவள் நக்கலாக சிரித்தாள்.

“என்ன சிரிப்பு? என் கவிதையில் என்ன தவறு கண்டீர்கள்?”

அவள் சிரிப்பில் கவிழ்ந்தாலும் கோடன் கோபம் வந்ததுபோல நடித்தான்.

“நீங்கள் சொன்னது கவிதையா? கவிதையில் தவறிருந்தால் தளை தட்டலாம். உங்களுடையதில் தட்டுவதற்குகூட எதுவுமில்லை. நீங்கள் சொன்னதையே கொஞ்சம் இலகு தமிழில் ஒரு ஆசிரியப்பா அமைத்தேன். அவ்வளவுதான்”

இலகு தமிழா? சுத்தம். ஆசிரியப்பா என்றால் என்ன? அச்சமயம் iHome இல்லாததற்கு கோடன் வருத்தப்பட்டான். சங்கநாட்டு ட்ரான்ஸ்லேட்டர் வேறு ஆங்கிலக்கவிதையை தமிழில் புதுக்கவிதையாக்குகிறதே ஒழிய, வெண்பாவாக மாற்ற அதற்கு தெரியவில்லை. தாத்தாவிடம் ரிப்போர்ட் பண்ணவேண்டும். இவள்வேறு சங்கக்கவிதையைப்போய் புதுக்கவிதை என்கிறாள். தயங்கியபடி பதிலளித்தான்.

“மன்னிக்கவும் .. என்னது புதுக்கவிதை”

அவள் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“புதுக்கவிதையா? இலக்கணமே இல்லாமல் பழந்தமிழர்கள் பேசும் பேச்சுப்போல இருக்கிறது. இது புதுக்கவிதையா?”

சரிதான் போ. இது இருபத்தொராம் நூற்றாண்டு புதுக்கவிதை என்று சொன்னால் இவள் மிரண்டுவிடுவாள். சமாளிக்கவேண்டும். ஒரு தேவதையோடு கேவலம் வெறும் கவிதைக்காக சண்டை பிடிப்பதா? கவிதைகள் எழுதுவதே தேவதைகளுக்காகத்தானே.

“மன்னிக்கவும், நான் இப்போதுதான் கவிதை சமைக்கப்பழகுகிறேன். ஒரு சிறந்த ஆசிரியை அமைந்தால் ஆசிரியப்பா பயிலலாம் என்பது என்னுடைய நீண்டநாள் ...”

“மிகப்பழைய உத்தி”

இது இரண்டாவது தடவை. அவளின்  நேரிய பார்வையின் நக்கலை எதிர்கொள்ள முடியாமல்  கோடனின் கண்கள் கீழிறங்கின.

அப்போதுதான் கவனித்தான். அவள் மார்புக்கச்சை அணிந்திருக்கவில்லை. வெட்சிப்பூக்களை இலைகளோடு தொடுத்த சரத்தாலே தன் வெற்று மார்புகளை மறைக்க முயன்றிருந்தாள். அவற்றின் தொடுகை தந்த கிறக்கத்திலோ என்னவோ வெட்சிப்பூக்கள் வேறு வெட்கப்பட்டு சுருங்கியிருந்ததால் மேகமூட்டம் ஆங்காங்கே வெளித்திருந்தது. செந்நிறப்பூக்களுக்கிடையில் தெரிந்த அவளது கருநிற மேனி அவனை கடுமையாக தொந்தரவு செய்தது. எது மார்பு? எது பூ? தீர்வு எட்ட முடியாமல் கோடனின் கண்கள் மேலும் தாழ்ந்தன. அங்கே தணக்கம் பூ ஒன்று அவள் இடையை சூடி மகிழ்ந்திருந்தது. பூக்களையே சுயம்வரம் வைத்துத்தான் தேர்வு செய்வாள்போல.

மீண்டும் அவள் செருமல் கோடனை சுயநிலைக்கு கொண்டுவந்தது. அவசரமாக நிமிர்ந்தான். அவளே பேசினாள்.

“நீங்கள் யாரோ? இரண்டு மூன்று நாட்களாக இந்த புன்னை மரத்துக்கு கீழேயே வாசம் செய்கிறீர்கள். உங்கள் ஊர் எது? உங்களை இதற்குமுன்னர் குடவாயக்கரைப்பக்கம் நான் கண்டதே இல்லையே?”

கேள்விகளை அடுக்க, கோடனுக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை.

நான் .. வந்து.... வேம்பையூர்க்காரன் .. இங்கிருந்து இருநூறு காததூரம் ..இந்த இந்திரவிழாவை கேள்விப்பட்டு இவ்வளவுதூரம் பயணம் செய்து ..”

“அவள் பிரிந்திருப்பாள். வேம்பையூர் கசந்திருக்கும். ஓடி வந்துவிட்டீர்கள். அப்படித்தானே?”

நறுக்கென்று கேட்டாள். கோடனுக்கு புளோரா ஞாபகத்துக்கு வந்து தொலைத்தாள்.

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்”

“மூன்று நாட்களாக கவனிக்கிறேன், ஆற்றில் காதல் ஜோடிகளைப்பார்த்து பெருமூச்சு விடுகிறீர்கள். பயனில்லாத கவிதைகள் படிக்கிறீர்கள். இம்மரத்தைவிட்டு அப்பால் போனதில்லை. இந்திரவிழாவில் பங்கெடுப்பதில்லை… காதலில் தோற்றவன்தான் இப்படி மரத்துக்கு முண்டுகொடுத்து  விழாமல் காப்பாற்றுவான்”

கோடன் சடக்கென்று நிமிர்ந்தான். அதற்குமொரு சிரிப்பு. இவ்வளவு வெளிப்படையாக உள்ளதை உள்ளபடி புட்டுவைக்கிறாளே. களங்கமற்ற பெண். இவள் சிரிப்பைப்போலவே. அவன் திருப்பிக்கேட்டான்.

“என்னை நோட்டம் விடுவதுதான் உங்களின் இந்திரவிழாவா?”

அந்தச்சிரிப்பு இருக்கிறதே … கோடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் குறும்பு மாறாமல் சொன்னாள். 

“இல்லாமலா? உங்களை நம்பி எப்படி என் சகோதரியை தனியே விடுவது?”

கோடன் திடுக்கிட்டுப்போனான்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“வேம்பையூர்காரரே, இந்த புன்னை மரம் என்னுடைய சகோதரியாவாள். இது நான் பிறந்த ஆண்டு என் அன்னையால் நாட்டப்பட்ட புன்னை. என் தங்கை. சிறு வயதுமுதல், இந்திரவிழாவுக்கு வரும்போதெல்லாம் மரத்தடியில் வந்திருந்து இவளோடு அளவளாவிக்கொண்டிருப்பேன்.  மரத்தண்டிலே கவிதைகூட எழுதியிருக்கிறேன்… கொஞ்சம் எழுந்திருங்களேன்”

கோடன் விழித்தான்.

“அட, சும்மா எழுந்திருங்களேன்..”

கோடன் எழுந்து விலக, அவள் அவன் உட்கார்ந்திருந்த இடத்தை கைகளால் துடைத்து அகற்ற, அடிவேரிலே ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தது.

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே”

கோடன் கவிதையை வாசித்துப்பார்த்தான். புரியவில்லை. விளக்கம் கேட்டால் விடிந்துவிடும்.

“தங்கையின் பெயர் எழுதியிருக்கிறது.. ஆனால் இன்னமும் அக்காவின் பெயர் இதில் இல்லையே”

“வேம்பையூர்க்காரருக்கு கவிதை விளங்கவில்லை… கதையை மாற்றுகிறீர்கள்”

தொல்காப்பியம் திரும்பவும் சிரித்தது. குற்றியலுகரம் தெறித்தது. கோடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“இல்லை … புன்னையின் அக்காவின் பெயரை சொல்லுங்களேன்”

“அதுதான் ஆரம்பம் முதலே பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே?”

“என்னது? .. புரியவில்லை”

“ஆவென்று மனிதர்கள் அப்படி என்னத்தை அண்ணாந்து பார்ப்பார்கள்?”

“ஆவென்று …அண்ணாந்து .. வெள்ளி பார்ப்பார்கள்..அப்படியென்றால் ”

“வெள்ளி ”

“வெள்ளி … சிரிக்கும்போதெல்லாம் உங்கள் பெயரை சொல்லுவீர்கள்போல”

அதற்கும் சிந்தினாள். கோடன் அவள் பெயரையே மீண்டும் மீண்டும் மனசுக்குள் சொல்லிப்பார்த்தான்.

“வெள்ளி ..வெள்ளி ..  நீங்கள் ..  இந்த ஊர்தானா?”

“ம்ஹூம், நாங்கள் கருவூர்க்காரர்கள். இந்திரவிழாவுக்கு நாங்கள் வருடந்தோரும் இங்கு வருவோம். சித்திரைத்தெருவில் பட்டறை போட்டிருக்கிறோம். வெகு தொலைவிலிருந்து வரும் தேர்களின் தேய்ந்த சில்லுகளுக்கு பட்டம் அடிப்பது எங்கள் வேலை. என் கைகளைப் பார்த்தீர்களா?”

வெள்ளி இரண்டு கைகளையும் விரித்துக்காட்டினாள். அவை இரும்படித்து பழுத்து காய்த்திருந்தன. அப்போதுதான் அவள் நீண்ட கைகளையும் கவனித்தாள். கறுத்து மின்னும், வஞ்சிரம் ஏறிய கைகள். பொருத்தமாக வெள்ளி வளையல்கள் மாட்டியிருந்தாள். சம்மட்டி அடிக்கும்போது கழட்டமாட்டாள்போல. வளையல்கள் சற்று நெளிந்திருந்தன.

“அப்பாவுக்கு துணை நீங்கள்தான்போல?”

“வேறு யாருண்டு? ஆனால் இப்போதெல்லாம் அப்பாவுக்கு நான் பட்டறையில் வேலை செய்வது விருப்பமில்லை. திருமண வயது வந்துவிட்டதாம். இனி இந்த வேலைகள செய்யக்கூடாதாம். எனக்கு கோபம். அவர் மட்டும் காலம்பூராக பட்டறையில்தானே கிடக்கிறார். சொல்லுங்கள். ஒரு பெண் கொல்லராக கூடாதா.. வேண்டுமானால் பாருங்கள், ஒருநாள் இல்லை ஒருநாள், இதே இந்திரவிழாவில் அப்பாவுக்கு போட்டியாக பட்டறை திறக்கப்போகிறேன்.”

“பொன் கொல்லர் போன்று பெண் கொல்லர்.”

“ஆமாம். பெண் கொல்லர். என் வளையலை நானே செய்துபோடுவேன். தலைவனின் பிரிவுத்துயரில் கைகள் மெலிந்தாலும் சரி செய்யலாம் பாருங்கள்!”

இருவரும் சிரித்தார்கள்.

“குடும்பத்தில் நீங்கள் மட்டும்தானா?”

“ஒரே தம்பி, தொண்டை மன்னரின் காலாட்படையில் பணி புரிகிறான். அம்மா தினை காக்கவென ஊரிலேயே தங்கிவிட்டாள். இங்கே, நானும் அப்பாவும் கொஞ்சம் இரும்பும் நிறைய கவிதைகளும்தான்.”

“கவிதைகளா?”

“ம்ம்ம்... என் அப்பா ஒரு கவிதைப்பித்தர். கொல்லன் அழிசி. கேள்விப்பட்டிருப்பீர்கள். தொண்டை மன்னர் அவருக்கு கவித்தலைவன் என்று பட்டமும் ஒரு தங்கக்காசும் கொடுத்திருந்தார். “

அவள் கழுத்திலிருந்த சங்கிலியை தொட்டுக்காட்டி பெருமிதப்பட்டாள்.

“கொல்லன் அழிசி....அழகான பெயர்”

“அப்போ வெள்ளி அழகில்லையா?

“இல்லை, வெள்ளிக்கு அழகு என்ற உவமையே போதாது. அழகை வேண்டுமானால் வெள்ளிக்கு ஒப்புவமை செய்யலாம்”

“வேம்பையூர்காரரே இதெல்லாம் வெள்ளியிடம்  செல்லாது … அதுசரி  தங்களைப்பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டீர்களோ?”

கோடன் தயங்கினான். என்னவென்று சொல்ல? அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டார்கள் என்றா? அம்மா ஒரு மாசிடோனியனோடு குடும்பம் நடத்துகிறாள். அப்பா நைஜீரியாவில். புளோரா என்று காதலி, ஒரு செஸ் கேமோடு கோபித்துக்கொண்டுபோய்விட, வீட்டில் நானும் ஒரு மெசினும்தான் என்றால் வெள்ளி சம்மட்டியை எடுத்துவந்து ஒரே போடாக போடமாட்டாளா?

“வேம்பையூர்க்காரரே, ஊர்ப்பெயரால் அழைத்து வாய்க்கசப்பு தாங்கமுடியவில்லை, பெயரைக்கூட சொல்லமாட்டீர்களோ?”

“கோடன்”

“கோடன் … வெறுங்கோடனா?”

“என் பெயர் குறுங்கோடனார்... எந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர்… தாயார் வேம்பையூரிலிருந்து மேற்கே ஆறுகாதம் தள்ளியுள்ள மாந்தையில் வாழ்கிறாள். தொடர்பில்லை. தாத்தா மட்டும் அவ்வப்போது வந்துபோவார்.”

“வேம்பையூரில் தனியாகவா வசிக்கிறீர்கள்?”

அவள் குரல் சற்று தணிந்திருந்தது.

“சொல்வதற்கென்ன, நன்னாகை என்ற ஒரு பெண். ஒரு நாழிகை பகடை விளையாட்டில் பகிடி தெரியாமல் பிரிந்துபோய்விட்டாள். அவ்வளவுதான்.. பிரிந்துபோய்விட்டாள்.”

“காதலா?”

வெள்ளி கேட்டதுக்கு பதில் சொல்லாமல் கோடன் அள்ளூர் ஆற்றின் அக்கரையை நோக்கித்திரும்பினான். ஒரு சோடி குடிசையின் வெளிப்புறத்தை உள்புறமென்று நினைத்தோ என்னவோ, பிரக்ஞை இன்றி பிணைந்து கிடந்தது. ஆண் யார், பெண் யார் எதுவும் விளங்கவில்லை. கோடனுக்கு சுக்ரீவனும் வாலியும் கட்டிப்பிணைந்து சண்டையிடும் காட்சி ஞாபகம் வந்தது. யார் எது என்று கண்டறிய ஒரு மாலையாவது அணியக்கூடாதா?

கோடன் மெதுவாக வெள்ளியிடம் திரும்பினான்.

“அந்த சோடிகள் செய்வது காதலா வெள்ளி?”

அவள் அந்தப்பக்கம் பார்க்காமலேயெ மெல்லிய குறும்புடன் சொன்னாள்.

“ஏன் இருக்கக்கூடாதா?”

“இல்லை வெள்ளி, இது வெறுங்காமம். தொடுகை கொடுக்கும் உந்துதல். துகிலுக்குள் ஒளிந்துகிடக்கும் உடலின் விசித்திரங்களை அறிந்துகொள்ளும் தேடல். அது கலவியோடு தொலைந்துபோய்விடும். இந்த அள்ளூர் ஆறும் இந்திரவிழாவும்போல.  ஆறு முழுதும் பூக்களால் நிறைந்திருக்கிறதே, கூட்டம் கூட்டமாக படகுகள், சலசலப்புகள், அவை கொடுக்கும் இந்த ஈர்ப்பு. எல்லா அமளியும் இரண்டு நாட்களுக்குத்தான். பின்னர் ஆறு தெளிந்துவிடும். நாளை எந்தப்பூவையும் காணக்கிடைக்காது. மன்மதக்கொடியைக்கூட ஆறு கோபத்தில் அடித்துச்சென்றுவிடும். இதில் காதல் எங்கிருக்கிறது?”

“ஆனால் இந்திரவிழா முடிந்தாலும் அந்த வாளை இதே ஆற்றில்தானே தாவி விளையாடப்போகிறது. ஆம்பலும் இதே ஆற்றில்தானே பூக்கப்போகிறது. ஆறு தன்பாட்டில் ஓடும். ஆம்பல் தன்பாட்டுக்கு பூக்கும். வாளை அதுபாட்டுக்கு தாவும். ஆனாலும் மூன்றுக்குமிடையிலான உறவு மாறாதல்லவா? ஐந்துநாள் விழாவையும் அனிச்சம்பூ சரத்தையும் மன்மதக்கொடி ஆர்ப்பரிப்பையும் சாசுவதம் என்று நம்பியது ஆற்றின் தவறல்லவா? காதலர் தவறாகலாம், காதல் தவறாகுமா?”

காதலர் தவறா, காதல் தவறா, கோடன் தனக்குள்ளேயே சொல்லிப்பார்த்தான். அதானே? என் அன்பில் என்ன தவறு கண்டேன்? புளோராவால் என் அன்பை புரிந்துகொள்ளமுடியவில்லை. அவள் ஒரு..வேண்டாம். என் காதலி தவறு. காதல் அல்லவே. ஆம்பல் எதுவென்று அறியாதது ஆற்றின் தவறல்லவா.

வெள்ளி கோடனின் மனநிலை அறிந்து பேச்சை மாற்றினாள்.

"நம் பட்டறைக்கு வாருங்களேன், என் அப்பா உங்களைக்கண்டால் மகிழ்ச்சியடைவார். அப்படியே இரவு உணவையும் அருந்தலாம். உங்களுக்கு கவிதை இலக்கணம் தெரியாது என்பதை அறிந்தால் இன்னமும் மகிழ்வார். அவர் கவிதையை எடுத்துவிடலாமல்லவா?"

"ஏன் உங்களுக்கு சொல்லமாட்டாரா?"

"மூச்சே விடமாட்டார். நான் அறப்படிச்சவளாம். தளை இலை என பிழை பிடிப்பேனாம், பின்னே, பிழைக்கு யாரும் குடை பிடிப்பார்களா? மழைக்குத்தானே பிடிப்பார்கள்! சொல்லுங்களேன்”

கள்ளங்கபடமில்லாமல் இவ்வளவு இயல்பாக பழகுகிறாளே. பேசாமல் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிடலாமா? கண்டு ஒரு நாழிகைகூட இல்லை. காதலா? ஒரு பெண் சிரித்துப்பேசினால் உடனே காதல் என்று அர்த்தம்கொள்வதா? கோடன் தன்னைத்தானே மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டான்.

“வேண்டாம் வெள்ளி, உங்களுக்கு வீணான சங்கடம்”

“சங்கடம் எல்லாம் ஒன்றுமில்லை, தினைப்புட்டு அவிக்கிறேன். மறுக்காமல் வாருங்கள்”

வெள்ளி கோடனின் கையைப்பிடித்து இழுத்தாள். கோடனால் மறுக்க முடியவில்லை. புன்னைமரம் மெல்லிய தென்றலில் சிலிர்த்து மலர்களை அவர்கள்மேல் உதிர்த்துவிட்டது. வெள்ளி ஒரு புன்னைப்பூவை எடுத்து கூந்தலில் சூடினாள். அந்திசாய்ந்து இருள் கவியத்தொடங்கியிருந்தது. ஆற்றின் அக்கரையில் குட்டி குட்டியாய் விளக்குகள் பூக்கத்தொடங்கிஇருந்தன.

இருவரும் மலையடிவாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.


அத்தியாயம் 1  

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3     

அத்தியாயம் 4

அத்தியாயம் 5


6 comments :

 1. வரலாற்று நவீனம் ஒன்று வாசிக்கிற உணர்வைத் தருகிறது கதையின் நடுநடுவே வரும் வர்ணனைகள்... முதல் பகுதி தந்த உணர்வுக்கிளர்ச்சியை குறைக்காமல் சென்றிருக்கின்றன பகுதி 2ம் 3ம். அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 2. எப்பிடி அண்ணை உங்களால மட்டும் முடியிது!!! அடுத்த அத்தியாயத்துக்கு பாத்துக்கொண்டிருக்கிறன்.... (Y)

  ReplyDelete
 3. அண்ணே ..... சாண்டிலயனும் சுஜாதாவும் சேர்ந்து எழுதியிருந்தால் இப்பிடி தான் இருக்குமோ.... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி வீணா ... முழுமையான உங்கட பார்வைக்கு வெயிட்டிங்!

   Delete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே