வெள்ளி - 4

 

அத்தியாயம் 4

01bebf3b431cb76ad119d4773775883c

நிலவு மிகவேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. வழியில் கடந்துபோகின்ற எந்த முகிலுக்கும் வணக்கம் வைக்காமல், அவற்றுக்குள்ளே மூழ்கி, எழுந்து, மறைந்து, வெளியேறி, என்ன அவசரமோ, யாரையோ தேடி ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சத்தூரம் அப்படி ஓடிய நிலவு திடீரென்று அசையாமல் நின்று சுற்றும் முற்றும் பார்த்தது. அட தன்னைச்சுற்றி எதுவுமேயில்லை. ஓடி ஓடி கடைசியிலே தனியனாக வானத்திலே நிற்கிறேனே என்று வருந்தியது.. நிலவுக்கு இப்போது தான் எதற்காக இதுவரையும் ஓடினேன்  என்பதுகூட மறந்துவிட்டது. நான் எங்கிருக்கிறேன்? என்று சத்தமாகவே கேட்டது.

“எங்கேயும் போகவில்லை, இங்கேயேதான் இருக்கிறாய். ஓடினது முகில்தானே ஓழிய நீயல்ல. அதுபுரியாமல் மூச்சுக்கூட உனக்கு இரைக்கிறது பார்”

கோடன் நிலவைப்பார்த்து சொல்ல, அது மூச்சிரைப்பதை நிறுத்திவிட்டு முகில்களை தேடத்தொடங்கியது.

நேரம் அதிகாலை மூன்று ஆகியிருந்தது. குடவாய்க்கரை முழுதும் தூக்கம் வியாபித்துக்கிடந்தது. தூரத்தே அள்ளூர் ஆற்றின் மெல்லிய சலசலப்பை தவிர்த்து எங்கெனும் நிசப்தமே குடிகொண்டிருந்தது. கோடனுக்கு தூக்கம் வரவில்லை. பாயை முற்றத்து வெளியிலே விரித்து, வானத்தை அளந்தபடி மல்லாந்து படுத்திருந்தான். உள்ளே குடிசைக்குள்ளிருந்து கொல்லன் அழிசியின் மெல்லிய குறட்டைச்சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டிருந்தது. இந்தச்சத்தத்தில் வெள்ளி எப்படி தூங்குவாள்? அவள் மட்டும் இப்போது அருகிலிருந்தால் எத்தனை அழகாக இருக்கும்?

கோடனுக்கு அன்று நடந்தது எல்லாமே கனவுபோல இருந்தது. வெள்ளியைக்கண்டது. அவளோடு பட்டறைக்கு வந்தது. அவள் தந்தை கொல்லன் அழிசையை சந்தித்துப்பேசியது. மாலை பட்டறையை சாத்திவிட்டு மூவரும் கூத்து பார்க்கப்போனது. மீண்டும் பட்டறைக்கு திரும்பி, வெள்ளி அவித்த தினைப்புட்டினை சர்க்கரையோடு கலந்து உட்கொண்டது. பின்னர்  அள்ளூர்க்கரையில், ஒரு ஒதுக்குப்புறம் பார்த்து உட்கார்ந்து மூவரும் பேசிக்கொண்டிருந்தது என்று எல்லாமே அவனுக்கு ஞாபகம் வந்தது. அதுவும் கொல்லன் அழிசி கவிதை படித்த பொழுதை கோடன் திரும்ப திரும்ப நினைத்தபடியிருந்தான்.

அப்போது மூவரும் ஆளுக்கொரு பிழாவில் நறவு அருந்திக்கொண்டிருந்தனர். மூன்றாவது பிழா உள்ளிறங்கும்போது கோடனே ஆரம்பித்துவைத்தான்.

“நீங்கள் ஒரு கவிதை பாடுங்களேன்.”

அவன் கேட்பதற்காகவே காத்திருந்ததுபோல அழிசி குரலைச்செருமிக்கொண்டார்.

“காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்”

வெள்ளி குறுக்கிட்டாள்.

“தந்தையே, இந்தப்பாட்டு வேண்டாம். அதுவும் என்னை வைத்துக்கொண்டு..”

“ஏன் என் பாட்டிலே என்ன தவறு கண்டாய்?

அழிசிக்கு நறவு தலைக்குள் நன்றாகவே எறிவிட்டிருந்தது.

“இல்லை தந்தையே, கவிதையில் குற்றமில்லை. பொருள்தான் சங்கோஜமானது”

“அதனாலென்ன … இவர் நம்மவர்தானே”

அழிசி கோடனின் தோளிலே தட்டிவிட்டு கவிதையை தொடர்ந்தார். 

“காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதைவந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே”

கோடன் புரியாமல் விழித்தான்.

“இதற்கு பொருளென்ன வெள்ளி?”

“அதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்? கவித்தலைவரிடமே கேட்டறிந்துகொள்ளுங்கள்… மனைவி தினைப்புலம் காக்க, தலைவனுக்கு விருந்து கேட்கிறது .. ஊர் போகட்டும் .. சொல்லிவைக்கிறேன் ”

வெள்ளி பேசியது எதுவும் கோடனுக்கு புரியவில்லை. நறவு மூவருக்குமே ஏறிவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.

“பெரிய தோள் கொண்டவனே .. காமம் காமம் என்று சொல்கிறார்களே, அது நோயோ, இறை சாபமோ கிடையாது. மேட்டு நிலத்தில் முளைத்த இளம்புல்லை பல்போன பசு சப்பிப்பார்ப்பது போன்ற தீரா விருந்தாகும் இந்தக்காமம்”

கோடனுக்கு கொல்லன் அழிசி ஏன் திடீரென்று காமத்தைப்பற்றி பேசுகிறார் என்று புரியவில்லை. என்ன சொல்கிறார்? யாருக்கு சொல்கிறார்? யார் புல்? யாருக்கு பல் இல்லை? அவன் வெள்ளியையே உற்றுப்பார்த்தான்.

“வேம்பையூர்க்காரரே.. விபரீதமாக ஏதும் எண்ண வேண்டாம், இது அந்தப்பாடலின் விளக்கம்”

அவள் சொல்லும்போதுதான் கவனித்தான். அய். வெள்ளி கொஞ்சமாக வெட்கப்படவும் செய்கிறாள். அவள் அப்படி வெட்கப்படுவதைப்பார்த்து ஆற்றங்கரையில் அலர்ந்திருந்த ஆம்பல்களும் வெட்கத்தால் சுருங்கின. கள்ளி. எல்லாம் தெரிந்தவள். ஆனால் எதுவும் தெரியாதவள்.

“ஏன் எல்லா முகில்களும் என்னை விட்டு விலகி ஓடுகின்றன?” 

நிலவு சோகமாய் கேட்டது. பாவம், கடைசியாக வந்த திரள் முகில்கூட சிறிதுநேரம் பேசிவிட்டு நகர்ந்துவிட்டது. நிலவிற்கு தன்மேலேயே கழிவிரக்கம். அதற்கு என்ன பதில் சொல்வது என்று கோடன் யோசித்தான்.

“வேம்பையூர்க்காரரே… நடுச்சாமத்தில் நிலவுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது?”

கோடன் சுடு இரும்பு பட்ட தண்ணீராட்டம் சிலிர்த்தெழுந்தான். அவள் வந்துவிட்டாள்.

“வெள்ளி வருவதற்கு வேளை வரவில்லையா, அதுதான் நிலவோடு பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்”

“என்னவாம் …”

வெள்ளியின் குரலில் கொஞ்சம் பொறாமை தென்பட்டது.

“தன்னை விட்டு ஏன் எல்லா முகில்களும் ஓடுகின்றன என்று கேட்கிறது”

“அவளிடம் சொல்லுங்கள், முகில்கள் எல்லாம் பூமிக்கு சொந்தமானவை என்று. நெஞ்சிலே ஈரம் இருப்பவர்களிடம்தான் முகில்கள் தங்கும். பூமியிடம் இருக்கிறது. தங்குகின்றன. இவளிடம் துளி கூட கிடையாது, அதனால் தப்பி ஓடுகின்றன.”

நிலவுக்கு வெள்ளியின் பேச்சை கேட்டதும் கோபம் வந்துவிட்டது. தூரத்தே நின்ற வேம்புக்கு பின்னாலே போய் ஒளிந்துகொண்டது.

“என்ன இந்நேரம்? நித்திரை வரவில்லையா வெள்ளி?”

வெள்ளி அமைதியாகவிருந்தாள்.

“நாங்கள் ஏன் சந்தித்தோம் கோடன்?”

கோடன் துணுக்குற்றான். இவளும் அப்படித்தான் எண்ணுகிறாளா?

“என்ன சொல்கிறாய்?”

நிலவு வேப்பம் பூக்களுக்குள்ளால் கூர்ந்து பார்த்தபடி ஒட்டுக்கேட்க காதுகளை தீட்டிக்கொண்டது.

“இல்லை கோடன் … இன்றுதான் பேசிப்பழகினோம் .. ஆனாலும் சிறுவயதுமுதல் பழகிய பரிச்சயம்போன்று  … ”

கோடன் வெள்ளியின் கண்களை எதிர்கொண்டான்.

“ சொல்லு வெள்ளி … இந்த .. இக்கணத்தில்  நீ என்ன நினைக்கிறாய்?”

வெள்ளி சமாளித்தாள்.

“ஆ … தந்தையின் குறட்டைச்சத்தம் நின்றுவிட்டதே, புதல்வி ஆடவன் ஒருவனோடு தனித்திருந்து அளாவுவது தெரிந்தால் தவறாக நினைத்துவிடுவாரே என்று நினைக்கிறேன்”

கலகலவென சிரித்தாள். நிலவுக்கு சீ என்று போய்விட்டது. எதுவும் நடக்கவில்லை. அந்தவழியால் வந்த முகிலோடு மீண்டும் பேச்சுக்கொடுக்கத்தொடங்கியது.

“இல்லை வெள்ளி …நான் சொல்வது அதுவல்ல .. ”

“ஒரு கவிதை சொல்லவா?”

“ம்ம்ம் சொல்லு..”

“நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”

“புரியிறமாதிரி சொல்லு வெள்ளி”

வெள்ளி அவனுக்கு புரிந்த தமிழிலேயே பாடினாள்.

“ஆழமது, கடலிலும் ஆழமாம்

அகலமது, புவியிலும் அகலமாம்

நெடியதிது, வானிலும் நெடியதாம்

கோதையது, கோடனொடு நட்பு”

கவிதையை கேட்ட கோடன் வெள்ளியை ஆழமாகப்பார்த்தான்.

“வெறும் நட்புத்தானா வெள்ளி?”

“வெறும் நட்பில்லை … ஆழமது கடலிலும் ..”

அவனது முகத்தை எதிர்கொள்ளாமல் மீண்டும் கவிதையை சொல்லப்போனவளின் கைகளை கோடன் பற்றினான்.

“வெள்ளி .. நான் உன்னை ..”

அவள் உஷ்ஷ் என்று அவனது வாயை வெள்ளி பொத்தினாள்.

“குடிசைக்குள் அரவம் கேட்கிறது ..தந்தை எழுந்துவிட்டார் என்று நினைக்கிறேன் .. உங்களை காலையில் சந்திக்கிறேன் ..”

வெள்ளி எழுந்து ஒடினாள். குடிசை வாசல் வரையும் ஓடியவள், நின்று ஒருமுறை தலை சாய்த்து திரும்பிப்பார்த்து சின்னதாக புன்னகைத்து உள்ளே மறைந்தாள்.

அவன் அவளை பார்த்துக்கொண்டேயிருந்தான்.

“I think I am in love.”

கோடன் தனக்குள்ளே எண்ணிக்கொண்டதை அறிந்தோ என்னவோ நிலவும் வெட்கப்பட்டு முகில் ஒன்றுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டது

***************

“I can’t believe it.”

கோடன் நூடில்ஸ் சட்டியில் உப்பு சேர்த்தான்.  iHome தனக்குள் ஏதோ புறுபுறுத்தது. அதனால் நடந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு பேசாமலிருக்கமுடியவில்லை.

“You think you are in love?”

“கோடனுக்கு அதனுடைய டோன் எரிச்சலை வரவழைத்தது.”

“So what? Is it wrong to be in love?”

“Of course not.”

“Then what's your problem?”

“It's.. It's just that... It's the seventh teaspoon of sugar into that poor noodles bowl.”

கோடன் அதனை சட்டை செய்யாமல் நூடில்ஸை ஒரு வாய் வைத்தான். இனித்தது. ஆகா. வெள்ளி உன் நினைவில் நூடில்ஸ் கூட இனிக்கிறதே.

“Look Kodan, you been literally on your bed in the last five days, barely moved, didn't even take shower and now all of a sudden you are in love. Hilarious. You been so dead mate.”

“That's right. She is a killer. I know.”

iHome அமைதியானது. அதனுடைய இத்தனை வேர்ஷன் அப்கிரேடுகளில் அது படித்தது ஒன்றே ஒன்றுதான். காதலிப்பவனுக்கு அட்வைஸ் பண்ணப்போகாதே. எந்த மெஷின் சொன்னாலும் கேட்கவே மாட்டான். அவன் எப்போதுமே முடிவை எடுத்துவிட்டுத்தான் பின் அட்வைஸ் கேட்பவன்.

கோடனுக்கு iHome இன் அமைதி சங்கடமாகவிருந்தது.

“What's up?”

“Nothing.”

“Just tell, don't you like Velli?”

“It's not the point, the point is, she doesn't exist. She is not real.”

“Neither you!”

“Ouch.”

iHome மீண்டும் அமைதியானது. கோடன் அவசர அவசரமாக நூடில்ஸை உண்டான். நிலைக்கண்ணாடியில் முகம்பார்த்து முடி சரி செய்தான். இன்றையநாள் வாழ்நாளின் முக்கியநாள். iHome இன்னமும் அமைதியாக இருந்தது. அதனை வீணாக திட்டிவிட்டோம் என்று அவனுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.

“I am sorry.. I didn't mean to..”

“It's alright, after all I am just a damn machine. not real anyway.”

அதற்கு இன்னமும் கோபம் தீரவில்லை என்று விளங்கியது.

“Look, I Love Velli and it feels so real. Look at the Goosebumps. It's like...I really think..”

“I know, you think, you are in love.”

“Not that. I am going propose to her today.”

“Holy shit.”

“I know.”

இவனை அறைந்தால்தான் திருந்துவான். iHome முதன்முதலாக தனக்கொரு கை இல்லையே என்று கவலைப்பட்டது. அதற்கு தேவையில்லாமல் மெமரியில் கோடனின் தாத்தாவைப்பற்றிய எதிர்மறை தகவல்கள் வந்து சேர்ந்தன. அந்த தாத்தா ஒரு சாவுகிராக்கி. உருப்படாத ஒரு அப்ளிகேஷனை செய்துவிட்டு, இந்த வள்ளலில் என்னுடைய டிரான்ஸ்லேஷனில் தவறு பிடிக்கிறாராம். புறுபுறுத்தது.

“Wish me luck.”

“God bless you.”

“Alright, I am ready, go to www.kathavu.com... “

“You haven't slept the whole night .. two in a row.”

“Thats ok, do I look good?”

“It doesn't matter. You are screwed up anyway.”

முணுமுணுத்தபடியே iHome சங்கநாட்டை லொகின் பண்ணிக்கொடுத்தது.

***************

இந்திரவிழாவின் இறுதிநாள் கொண்டாட்டங்கள் அதிகாலையிலேயே ஆரம்பித்துவிட்டிருந்தன. மன்மதக்கொடியை இறக்கும் பூசைக்காக குடவாய்க்கரை தயாராகிக்கொண்டிருந்தது. நாளைக்கு இவ்விடத்தில் மனிதர்கள் நடமாட்டமே இருக்காது என்பதை கோடனால் ஜீரணிக்கமுடியவில்லை. வருடம்பூராகவும் இந்திரவிழாவை கொண்டாடினால்தான் என்ன?

கோடன் புன்னை மரத்தடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான். நேரம் எட்டு மணியாகியிருந்தது. இந்நேரம் வெள்ளி பட்டறையில் இருப்பாள். கடைசிநாள், அத்தனை வண்டிகளும் இரும்புப்பட்டம் அடிக்கவென வரிசையில் நிற்கக்கூடும். அவள் வருவதற்குள் நேரமாகிவிடும். தானே சித்திரைத்தெருவுக்கு சென்று அவளை சந்திக்கலாமா என்ற நினைப்பை ஒத்திப்போட்டான். பொறுமையில்லாமல் நேரத்தைக்கடத்தலாமென இந்திரவிழாவை சுற்றிப்பார்க்க மலையிலிருந்து இறங்கி நடக்கத்தொடங்கினான்.

அடிவாரத்தில் யாத்திரிகள் தங்களது தற்காலிக கொட்டகைகளை கழட்டத்தொடங்கியிருந்தார்கள். போட்டிகளும் ஓய்ந்திருந்தன. மல்யுத்த திடலில் யாருமேயில்லை. பாணர்களும் காணாமல் போயிருந்தார்கள். யாரோ ஒரு ஏழைப்பாடி மட்டும் யாழ் மீட்டியபடி ஓலை விரித்திருந்தான். அன்னதான மடங்களில் அடித்துப்பிடித்து வரிசையில் நிற்கும் பரதேசிகள் இரவோடு இரவாக காணாமல்போயிருந்தார்கள். களியாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் எல்லோர் முகங்களிலும் இந்திரவிழா இன்றோடு முடிந்துவிடப்போகிறதே என்கின்ற கவலை தொக்கியிருந்தது.

மூன்று தடவைகள் விட்டேத்தியாக குடவாய்க்கரையையே சுற்றிவந்த கோடனின் கால்கள் நான்காவது தடவை சித்திரைத்தெருவை நோக்கி விரைந்தன.

அவன் வாசலை நெருங்க, வண்டில் சில்லை ஒன்றை உருட்டிவந்த கொல்லன் அழிசி எதிர்ப்பட்டார்.

“வாருங்கள் தம்பி. என்ன அதிகாலையே கிளம்பிச்சென்று விட்டீர்கள்? தூக்கம் வரவில்லையா?

குரலில் சின்ன சந்தேகம் தெரிந்தாற்போல் இருந்தது.

“இல்லை, விழா கடைசிநாள், காலையிலேயே முருகக்கடவுளை தரிசிக்கலாமென்று சென்றுவிட்டேன். திரும்பும்வழியில் அப்படியே உங்களையும் பார்த்து சொல்லிவிட்டு போகலாமென்று ...”

கோடன் பேசிக்கோண்டே உள்ளே எட்டிப்பார்த்தான். பட்டறையில் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை. உள்ளே டொங், டொங்கென்று இரும்படிக்கும் சத்தம் கேட்டது.

“வெள்ளி உள்ளே பட்டறையில்தான் வேலையில் இருக்கிறாள். பாவம், இந்தப்பெண்ணை அளவுக்கதிகமாக வேலை வாங்குகிறேன்”

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு உள்ளே சென்றவனை, வேலையில் கவனமாகவிருந்த வெள்ளி கவனிக்கவில்லை. சம்மட்டியடி பலமாக இரும்பின்மேலே விழுந்தது. குறிதவறாமல் அடிப்பதும், பின் திருப்பி வைப்பதும், காற்றழுத்தியை கால்களால் அமுக்கி தணலை ஊதுவதுமாக மூன்றுபேர் செய்யவேண்டிய வேலையை தனியாளாக இலாவகமாக கையாண்டுகொண்டிருந்தாள். கூந்தல் அள்ளி முடியப்பட்டிருந்தது. இறுக்கமான மார்புக்கச்சை அணிந்திருந்தாள். அரைக்கு கீழே கால்களோடு ஒட்டியதான நீண்ட பருத்தி ஆடை. நெற்றி முழுதும் வியர்வைத்துளி முத்துப்பூத்திருந்தது.  அதை கைகளால் துடைத்து எறிந்துவாறே அவள் ஒவ்வொருமுறையும் ஓங்கி அடிக்கும்போது கோடனின் இருதயமும் டொங் டொங் என்றது.

"வேம்பையூர்க்காரரே, எப்படிப்பார்த்தாலும் உம்மால் நல்ல கவிதை எழுத முடியப்போவதில்லை. பிறகேன் வீண் கற்பனை?"

"சிக்" என்று கோடன் பல்லைக்கடித்தான். பாவிப்பெண், நான் வந்திருப்பது தெரிந்துதான் பேசாமல் இருந்திருக்கிறாள். அவள் வழிக்கே செல்லவேண்டியதுதான்.

"இல்லை, பேசாமல், அந்த இரும்புச்சட்டத்தை தூரப்போட்டுவிட்டு நானே வந்து படுக்கலாமா என்ற எண்ணம் வருகிறது, கொடுத்துவைத்தது"

"ம்ஹூம், எந்தப்பயனுமில்லை, இரும்புக்காவது சூடு சுரணை உண்டு. இங்கிதம் தெரியும் .. ஆனால் சொல்லிக்கொண்டு விடைபெறும் இங்கிதம்கூட தெரியாதவர்களை எப்படி செப்பனிடுவது? "

"என்ன கோபமா?"

“சொல்லிவிட்டு போயிருக்கலாமல்லவா .. என்னமோ ஏதோவென்று பயந்துபோனேன்”

“அதுதான் வந்துவிட்டேனே .. இன்னும் என்ன கோபம்?”

"ஒருத்தி மாடு மாதிரி மாய்ந்து மாய்ந்து சம்மட்டி போடுகிறாள். ஒரு கை கொடுக்கவேண்டும் என்கின்ற எண்ணம்கூட வேம்பையூர்க்காரர்களிடம் இல்லையே"

சொல்லிக்கோண்டே அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சம்மட்டியை கொண்டுவந்து அவன் கைகளில் வைத்தாள். கோடன் முதல்போடு போட்டான். தவறியது. இரண்டாவது போடு, பட்டத்தில் கரையில் பட்டு உதறியது. மூன்றாவது டொங்கென்று விழுந்தது.

"பரவாயில்லையே... அடுத்தமுறை நீங்களும் ஒரு பட்டறை திறக்கலாம்போல"

"என்ன தம்பி, உங்களையும் வேலைக்கு சேர்த்துவிட்டாளா, என்ன பழக்கம் இது வெள்ளி? விருந்தினரிடம் வேலை வாங்கலாமா?"

"வாங்காவிட்டால் வெள்ளி பார்க்கிறார் அப்பா!"

அவள் அவனைப்பார்த்து கண்ணைச் சிமிட்டியபடியே சொன்னாள். கோடனுக்கு சங்கடமாகப்போய்விட்டது, அடப்பாவி, இப்படி போட்டுக்கொடுக்கிறாளே. கொல்லன் அழிசி சிரித்துக்கொண்டே கோடனிடம் சம்மட்டியை வாங்கிக்கொண்டு அவனை காற்றழுத்தியை மிதிக்கச்சொன்னார். மூவரும் இணைந்து அடுத்தடுதுது பதினைந்து பட்டங்கள் அடிக்கவும் மதியம் தாண்டிவிட்டது.

"வெள்ளி, நீ கோடனையும் அழைத்துக்கொண்டு இறுதிநாள் விழாவை தரிசித்துவிட்டு மடத்திலேயே உணவருந்திவிட்டு வா இனி அதிகம் வேலையிருக்காது. நான் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கத்தொடங்குகிறேன்"

வெள்ளி தான் குளித்து உடைமாற்றி வரும்வரையிலும் அவனை காத்திருக்கச்சொல்லிவிட்டு உள்ளே போனாள். கோடனுக்கு எப்படி வெள்ளியிடம் காதலை சொல்லுவது என்று தெரியவில்லை. இன்றைக்குவிட்டால் நல்லதொரு சந்தர்ப்பம் வரப்போவதில்லை. விழா முடிந்ததும் இவர்களோடு கூடப்போகவும் முடியாது. இன்று எப்படியும் வெள்ளியிடம் காதலை சொல்லிவிடவேண்டும். எப்படி சொல்லுவது? அவள் மாட்டேனென்றால் என்ன செய்வது? மாட்டேன் என்பாளா? அவள் கண்களில் காதலும் பிரியமும் அப்படியே வழிகிறதே.

வெள்ளி குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தாள். கொன்டக்ட் லென்ஸ் மறுமுறையும் ஸ்டக் ஆனது. நேற்றுப்பார்த்ததை விட ஒரு சுற்று சோடனை அவளிடம் அதிகம் தென்பட்டது. வாகைப்பூக்களை உச்சியில் செருகி கூந்தலை தழைய விட்டிருந்தாள். பட்டறை வேலைக்கென அணிந்திருந்த கச்சை அகன்று அங்கே இப்போது குருந்தைப்பூமாலை குடியிருந்தது. அரையில் பட்டாடை அணிந்து மெலிதான தாழைப்பட்டி அணிந்திருந்தாள். என்னை கவிழ்க்கவென்றே முடிவெடுத்துவிட்டாள்போல என்று கோடன் மனதுக்குள் எண்ணிச்சிரித்தான்.

“என்ன சிரிப்பு?”

“இல்லை .. போயும் போயும் பூக்களோடு யுத்தம் செய்யவேண்டிய நிலைக்கு ஆகிவிட்டேனே என்று சிரித்துக்கொண்டேன்”

வெள்ளி அதனை கவனியாதவள்போல தந்தையிடம் விடைபெற்றுவரச்சென்றாள். இரண்டுபேரும் அன்னதான மடத்திலே உணவருந்திவிட்டு மாலை முழுதும் குடவாய்க்கரை ஏங்கும் அலைந்து திரிந்தார்கள். அவளே அதிகம் பேசினாள். கோடன் அவள் பேசுவதையே வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தான். நேரம் போனதே தெரியவில்லை.

“பார்த்தீர்களா? பேச்சு சுவாரசியத்தில் மறந்தே போய்விட்டேன். இன்று இந்திரவிழா இறுதிநாள். புன்னையை பார்க்க போகவேண்டாமா?”

புன்னை மரம். கோடனுக்கு அப்போதுதான் உறைத்தது. ஆம். புன்னை மரமே காதல் சொல்ல தகுந்த இடம். இருவரும் மரத்தடியை நோக்கி ஏறிச்சென்றார்கள். வெள்ளி புன்னை மரத்தை கட்டியணைத்து கதை பேசிவிட்டு ஒரு பூவை கொய்து தலையில் செருகிக்கொண்டவாறே மரத்தடியில் உட்கார்ந்தாள்.

“பாவம் புன்னை, நானில்லாமல் தனிக்கப்போகிறாள் …. இனி அடுத்த இந்திரவிழாவில்தானே இவளை சந்திக்கமுடியும்..”

“தனிக்கப்போவது புன்னை மட்டுமல்ல வெள்ளி..”

கோடன் அவளை ஆழமாக பார்த்தாள். சொல்லுவோமா? வெள்ளி இவனின் பார்வையை தாங்கமுடியாமல் அள்ளூர் ஆற்றை நோக்கி திரும்பினாள். இறுதி நாளன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக படகுகளில் சோடிகள் இருந்தன. கோடனுக்கு கொஞ்சம் துணிவு வந்துவிட்டது.

"மன்மதக்கொடிவரை படகில் சென்று வருவோமா? அதற்கு பூ தூவினால் நாம் மனதுள் விரும்பும் துணை கிடைக்குமாம்"

வெள்ளி அவன் பக்கம் திரும்பாமலேயே சொன்னாள்.

"அதற்கு முதலில் மனதில் ஒரு துணையை நீங்கள் விரும்பவேண்டுமல்லவா?"

கோடன் விடவில்லை.

“விரும்புவதால்தான் கேட்கிறேன்”

அவள் இப்போது திரும்பி அவனை தீர்க்கமாக பார்த்தாள். அந்தக்கண்கள். கோடனிடம் கைவசமிருந்த அத்தனை உவமானங்களும் இந்த இரு நாட்களிலும் தீர்ந்துவிட்டன. அந்தக் கண்கள். இவள் என்ன சொல்ல வருகிறாள்? அவள் மனதில் இருக்கிறேனா? இல்லையா? கோடன் மீண்டும் கேட்டான்.

"சரி வேண்டாம், வாருங்களேன் படகில் வெறுமனே ஒரு உலா சென்று வருவோம். மரத்துக்கு கீழேயே சதா அமர்ந்திருந்து கதைத்து அலுப்படிக்கிறது.. "

அவள் விடவில்லை.

"அது யாரென்று நீங்கள் சொல்லவில்லையே?”

கோடன் யோசித்தான். இதுதான் சந்தர்ப்பம்.

"மேகம் கருக்கட்டி மழை நீர் பொழிய தயாராகவே இருக்கிறது. ஆனால்.."

"ஆனால்.."

"செம்புலம்தான் யாயும் ஞாயும் யாராகியதோ என்று இன்னமும் யோசிக்கிறது"

“அட கற்பனை பின்னுகிறதே”

“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

கோடன் முழுக்கவிதையும் சொன்னான். அவள் அவனை ஆச்சரியமாகப்பார்த்தாள்.

"பரவாயில்லையே வெண்பா கூட எழுதி நிஜக்கவிஞர் ஆகிவிட்டீர்கள். செம்புலப்பெயல் நீர். அழகு உவமை. எங்கே உங்களை "செம்புலப்பெயல் நீரனார்" என்று இன்று முதல் அழைத்துவிடப்போகிறார்கள்"

கோடன் சிரிக்கவில்லை.

"செம்புலப்பெயல் நீரனாருக்கு என்ன யோசனை?"

"அன்புடை நெஞ்சம் ஏன் இன்னமும் தயங்குகிறது என்றே யோசனை"

கோடன் அவள் கண்களைப்பார்த்தே சொன்னான். முந்தைய இரவு வெட்கம் அவள் கண்களில் எட்டிப்பார்த்தது. என்ன அழகுடா இது. கண்களால் சிரித்தாள். குறும்பு எல்லாம் தொலைந்து மிருதுவாக காதல் எட்டிப்பார்க்கும் வெள்ளியின் முதல் புன்னகை அது. ஐயோடா, இது அப்ளிகேஷன் இல்லை என்று காதில் சொல்லுங்கோவன். என்று கோடன் மனதுக்குள் வேண்டிக்கொண்டான். அவனுக்கு அடிவயிற்றிலிருந்து ஜிவ்வென்று ஏதோவொன்று தொண்டைக்குழிக்குள் வந்து அடைத்துக்கொண்டது. திடீரென்று சகலதும் கலங்கியது. வழமையாக நடக்கும் லென்ஸ் ஸ்டக் என்று நினைத்து தலையை ஒருமுறை சிலுப்பினான்.

"கோடனுக்கு அவ்வளவு அவசரமா?"

வெள்ளி நிலத்தில் பிறை வரைந்தபடி கேட்டாள்.

"இன்றோடு இந்திரவிழா முடிகிறதே... "

சொல்லும்போதே கோடனுக்கு மீண்டுமொருமுறை கண்கள் கலங்கின. சடக்கென்று அவனுடைய படுக்கையறை பிரேமிலே வந்துபோனது. என்னாயிற்று? ஏன் தடுமாறுகிறேன்?

“எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை …. என் அன்னைமடியில் சாய்ந்து இது பற்றி ..”

வெள்ளி ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, கோடனுக்கு சரியாக எதுவும் விளங்கவில்லை. மீண்டும் கலங்கியது. திடீரென்று iHome திரையில் வந்து how was it?” என்றது. கோடன் மீண்டுமொருமுறை தலையை குலுக்கினான். வெள்ளி அவனைப்பார்த்து சிரித்தாள்.

“சரி சரி நான் வருகிறேன்… வேம்பையூர்க்காரருக்கு படகு ஓட்டத்தெரியுமா?”

வெள்ளி நிமிர்ந்துவிட்டாள். சங்கடப்புன்னகையில் மீண்டும் குறும்பு எட்டிப்பார்க்கிறது. கோடனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. எழ முயன்றான். மீண்டும் தலை கலங்கியது. அப்போதுதான் கொன்டக்ட் லென்சின் பட்டறி சமிக்ஞையை அவதானித்தான். சார்ஜ் சிவப்பாக மின்னியது. கடவுளே. அந்திப்பொழுது சூரிய வண்ணத்தில் அதனை கவனிக்க மறந்துவிட்டான். இப்போதுதான் ஞாபகம் வந்தது. லென்ஸை ஐந்து நாடகளாக சார்ஜ் போடவில்லை. இப்போது இன்னமும் அரை மணிநேரம்தான் மீதி இருக்கிறது. ஷிட்.

அதற்குள்ளேயே கனவுலகத்துக்கு போயாச்சா?

வெள்ளி கேட்டதுக்கு பதில் சொல்லாமல், கோடன் அவசரமாக லென்ஸை பட்டரி சேவருக்கு மாற்றினான். சூழலே அபத்தமாகவிருந்தது. இந்திரவிழா அமைதி, புன்னைமரம், முன்னே பதிலை எதிர்பார்த்து நிற்கும் வெள்ளி, சென்ற கணம் வரையும் சொர்க்கமாக தெரிந்தது இப்போது  எவ்வித உணர்ச்சியையும் கொடுக்கவில்லை. மீண்டும் செட்டிங்கை செக் பண்ணினான். பட்டரி சேர்வர் ஹோர்மோன்களை தூண்டும் அப்ளிகேஷனை டிசேபில் பண்ணியிருந்தது. உணர்ச்சியில்லாத காதலா? கோடன் பட்டரி சேர்வரை ஓப் பண்ணினான். இருபது நிமிடங்கள். கடவுளே ஏனிந்த சோதனை?

கோடனின் தயக்கத்தை அவளே மீண்டும் கலைத்தாள்.

"தெரியாதென்றால், கவலை வேண்டாம், நானே நன்றாக படகு ஓட்டுவேன். நீங்கள் வெறுமனே பேசிக்கொண்டிருங்கள், போதும்"

இப்போது முழுக்க முழுக்க குறும்பு. உரிமையோடான குறும்பு. கோடன் சுதாரித்தான்.

"படகில்லை, புட்பக விமானமே ஓட்டுவதற்கு அனுமதி வைத்திருக்கிறேன், ஐந்தே நிமிடங்கள்தான். படித்துறையில் படகொன்றை வாடகைக்கு எடுத்துவருகிறேன். காத்திருங்கள்"

"சீக்கிரமாக வாருங்கள். தகப்பனார் தேடப்போகிறார்"

"வந்துவிடுவேன், எங்கேயும் ஓடிப்போய்விடாதீர்கள். உங்களை நம்பவும் முடியாது. பேசாமல் இந்த சுணைமரக்கொடியால் உங்களை மரத்தில் கட்டிப்போடவா?"

"திரும்பவுமா?"

வெள்ளி கூடவே ஏதோ ஒரு பாடல் சொன்னாள். ஆனால் கோடனுக்கு சரியாக அது விளங்கவில்லை. அவனுக்கு படகு பிடிக்கும் அவசரம். படித்துறைக்கு ஓடினான். கால்கள் சிறிதுதூரத்தில் தள்ளாடத்தொடங்கின. பதினைந்து நிமிடங்கள். திரும்பிப்பார்த்தான். தூரத்தில் புன்னைமரம். கீழே மங்கலாக வெள்ளி நிற்பது தெரிந்தது. படகோடு திரும்பமுடியுமா? பேசாமல் ஓடிப்போய் அவளிடம் விசயத்தை சொல்லுவோமா? என்னவென்று சொல்வது? பதட்டத்துக்காக அடரினலனை அதிகமாக சுரக்கச்செய்ததில் சார்ஜ் வேகமாக இறங்கி இப்போது ஐந்து நிமிடமே காட்டியது. இனித்திரும்பிப்போவதும் சாத்தியமில்லை. அவள் காத்திருக்கப்போகிறாள். முழுதாக சார்ஜ்பண்ண ஆறு மணித்தியாலம் எடுக்கும். கொஞ்சமாக  சார்ஜ் பண்ணிக்கொண்டு திரும்பலாம். அரை மணிநேரம் கிடைத்தால்கூட போதும். இன்றைக்கு இந்திரவிழா இறுதிநாள், எப்படியும் … கோடன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பார்வை கலங்கி, கலங்கி, கலங்கி,

படுக்கையறை முழுமையாகத்தெரிந்தது.

"Did she say yes?"

iHome அவனிடம் வேளை தெரியாமல் விடுப்புக்கேட்டது. கோடன் நிஜ உலகுக்கு வந்துவிட்டான். அதே அறை. அதே கட்டில். அதே iHome. தானே குளிருக்கு ஹீட்டர் போட்டு அறையை வெம்மையாக வைத்திருந்தது. கோடன் லென்ஸை சார்ஜிங் கப்சியூலுக்குள் வைத்தான். சார்ஜ் கொஞ்சமேனும் ஏறுவதற்குள் அள்ளூர்க்கரை இருட்டிவிடும். வெள்ளி காத்திருப்பாள். பத்துநிமிடத்தில் படகோடு வருகிறேன் என்பவன் எங்கே போனான் என்று தேடுவாள். படகுத்துறையிலும் தேடக்கூடும்.

எப்படியொரு சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டுவிட்டேன். படகை ஆற்றுக்கு நடுவே கொண்டுசென்று, ஆம்பல்பூ கொடுத்து, அவளின் பழுத்துக்காய்த்த கைகளை காதலுடன் பற்றி, காதலிக்கிறேன் என்று சொல்லி, அவளை வெட்கப்படவைத்து, கட்டியணைத்து, முத்தம்கொடுத்து, அவளது கறுப்புக்கன்னங்களை சிவக்க வைத்து, அவள் மார்பு மாலை பூவிடைவெளிகளில் திண்டாடித்திணரும் டிவைன் கணங்களை இழந்துவிட்டேன். இனி கிடைக்காது. வெள்ளி இப்போது கோபத்தில் சிவந்திருப்பாள். நான் திரும்பிப்போகும்போது இந்திரவிழாவே முடிவடைந்திருக்கும். ஊருக்கு வண்டி கட்டியிருப்பார்கள். தேடவேண்டும். கொல்லன் அழிசி, கவித்தலைவர், விசாரிக்கவேண்டும். வெள்ளியின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கவேண்டும். மடையன் நான். நேற்றிரவே சார்ஜ் பண்ணியிருக்கலாம். இந்தக்கழுதை iHome க்கு விடுப்பு கேட்கத்தெரிந்த அளவுக்கு வேலை செய்யத்தெரிவதில்லை.

கோடன் தனக்குள் முணுமுணுத்தது iHome க்கு கேட்டுவிட்டது.

“I did constantly remind you,  but you hardly removed it. You didn't even sleep properly in the last three days.”

கோடனுக்கு அந்த  அறையே பிடிக்கவில்லை. iHome பிடிக்கவில்லை. அவனை வெள்ளியே பூரணமாக ஆக்கிரமித்திருந்தாள். புன்னைமரமும், குடவாய்க்கரையும், இந்திரவிழாவும், பட்டறையும் அவன் நினைவுகளை நிரப்பியிருந்தன. வெள்ளி. இவளை மிஸ் பண்ணிவிடுவேனா? இன்னமும் ஒரு மணிநேரம் சார்ஜ் ஏறிவிட்டாலே போதும். சித்திரைத்தெருவுக்கு ஓடி, விசாரித்து, வண்டி பிடித்து அவள் ஊர்ப்பக்கமாக தேடிப்போய் கண்டுபிடித்துவிடலாம். என்ன ஆனாலும் பரவாயில்லை.

கோடன் கொண்டக்ட் லென்ஸ் சார்ஜ் ஏறுவதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். பட்டரி லெவல் ஒரு வீதம். வெள்ளி இப்போது எங்கேயிருப்பாள்? இரண்டு வீதம். அழுதுகொண்டே சித்திரைத்தெருவுக்கு நடந்து போயிருப்பாளா? கோடனுக்கு கண்களை தூக்கம் சுழற்றியது. திரும்பிபோகையில் வெள்ளி என்னோடு முன்னேமாதிரி பழகுவாளா? மூன்று வீதம். என்ன சொல்லி சமாளிப்பேன்? வெள்ளி எனை மன்னித்துவிடு என்றா? நான்கு வீதம் … வெள்ளி .. வெள்ளி .. என்னை மன்னித்துவிடு.. பட்டரி லெவலை பார்த்தவாறே அரற்றிக்கொண்டிருந்த கோடன்,

அயர்ச்சியில் அப்படியே தூங்கிப்போனான்.


அத்தியாயம் 1  

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3     

அத்தியாயம் 4

அத்தியாயம் 5    

               

படம் : www.onadaurada.com


7 comments :

 1. இண்டைக்கு sixer :) இந்த பாவி கோடன் எப்ப குடவாய்கரைக்கு திரும்பப் போவான்.

  ReplyDelete
 2. கந்தசாமியும் காலக்ஸியும் அதன் பின் அமுதவாயன் இப்போது வெள்ளி என்று உங்களது எழுத்து மெருகேறிக்கொண்டேயிருக்கிறது. வாழ்த்துக்கள். இதை படிக்கும் போது, செல்வராகவனின் இரண்டாவது உலகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மோகன், உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு.

   Delete
 3. "வெள்ளி" இந்த வெள்ளியோடை முடிஞ்சுபோகுமா ............??????????????

  அஜந்தன்

  ReplyDelete
  Replies
  1. முடிஞ்சுட்டு!

   Delete
  2. இனியேதாவது "சனி" வருமா சாரே .......................... இனிதான கதை ....வித்தியாசமான சிந்தனை...வாழ்த்துக்கள்


   அஜந்தன்

   Delete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே