வெள்ளி - 2

 

அத்தியாயம் – 2

 

contact_lens

 

"Its from Thaththa"

பத்து நிமிடத்திலேயே தாத்தா பதில் அனுப்புவார் என்று கோடன் எதிர்பார்க்கவில்லை.

"Great, read it"

"It's in Jaffna Tamil, do you want to translate in English?"

"No, just read it as it is"

iHome கடிதத்தை வாசிக்கத் தொடங்கியது.

அன்புள்ள கோடனுக்கு,

இப்போதாவது தாத்தாவுக்கு கடிதம் எழுதத்தோன்றியதே!. நல்லது.

என் நாட்கள் நலமே கழிகின்றன. உனக்கும்தான். கூடியவிரைவிலேயே உனக்கது விளங்கத்தொடங்கும்.

கோடன், அப்பா அம்மாவின் பிரிவு உன்னை வருத்துவது விளங்குகிறது. ஆனால் ஒன்றைப்புரிந்துகொள். உன் அம்மாவும் அப்பாவும் பிரிந்தது அவர்கள் நன்மைக்கே. உன் அம்மா ஒரு நிலை கொள்ளாதவள். பருவக்காற்றோடு சுற்றித்திரிபவள். தனக்குள் அடையாளக் குழப்பங்களை ஏற்படுத்தி தன்னைத்தவிர்த்து பிறர்போல வாழ முயன்றவள். தன்னை பெரிய கோடாக்கவே கொஞ்சம் சிறிய கோடாக உன் அப்பாவை பார்க்க முயன்றாள். அவளுக்கு ஏதோ ஒரு விடுதலை தேவைப்பட்டது. ரெபெலியன் என்ற சொல்லின் அர்த்தத்தை அவசர அவசரமாக புரிந்துகொண்டு, அவசர அவசரமாக புரட்சி செய்து, அவசர அவசரமாக துணையை தேடி, அவசர அவசரமாக உன்னைப்பெற்று, அவசர அவசரமாக அப்பாவை தூக்கியெறிந்து என்று அவள் உலகம் எப்போதுமே அவசரமாகவிருந்தது.

உன் அம்மாவின் சமீபத்திய அவசரம் இந்த பொப்போவிக். இந்தக்காற்றும் சுழன்று அடங்கும். அவள் மீண்டும் தனித்துப்போவாள். அப்போது அந்த வீடு அவளுக்குத்தேவை. அதில்லாவிட்டால் புயல் அவளை சீரழித்துவிடும். கோடன், நீ உன் அம்மாவிடம் கோபப்படாதே.  அவள் உன்னிடம் தேடிவந்தால் உச்சியில் ஒரு சின்ன முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொல்லு. அவளுக்கு அது போதும். உன் அப்பாதான் பாவம். அவரால் உன் அம்மாவின் அவசரங்களுக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. இருவரும் சேர்ந்ததன் ஒரே நன்மை நீதான். பிரிந்ததன் நன்மையும் உனக்கே என்று நினை.

புளொரா விசயம் கேட்டு நான் அதிர்ச்சியடையவில்லை. அவள் உனக்கானவள் இல்லை கோடன். உன் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக வந்தவள். உன் கற்பனைகளுக்கான வடிவத்தை புளோராவிடம் நீ உருவகித்தாய். அவள் வெறும் பிம்பம் மட்டுமே. நீ நினைத்து வாழ்ந்த புளோராவும் நிஜ புளோராவும் வேறு வேறு. பிம்பம் உடைந்தவுடன் உனக்கு எல்லாமே விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

கோடன் நீ தெளிவாகவே இருக்கிறாய் என்பது என் எண்ணம். எளிமையான அடையாளச் சிக்கல்களுக்குள் தொலைந்துபோகாமல் உன்னை நீ தேடிக்கொண்டிருக்கிறாய். என்னவொன்று, நீ கொஞ்சம் கனவு காண்பவன். சின்ன வயதில் உனக்கு நான் சொல்லித்தந்த சங்க இலக்கிய சித்திரங்கள் உன் ஆழ்மனதில் படிந்துவிட்டன. தேடுகிறாய். ஐந்திணைகளையும், தலைவியையும், தலைவனையும் ஆஸ்திரேலியே கொங்கிரீட் கிராமங்களுக்குள் தேடுகிறாய். புளோராவிடம்  குறிஞ்சி நிலக்கொடிச்சியை எதிர்பார்த்து ஏமாந்தாய். உன் அம்மா செவிலித்தாய்  வேடம் கட்டுவாள் என்று நினைத்தாய்.  ஏமாறுகிறாய். உன்னில் தவறில்லை. உன் தாத்தா ஐம்பது வருடங்களாக செய்வதை நீ இப்போது செய்கிறாய். இது எங்கள் குடும்பத்தின்  டி.என்.ஏ பிரச்சனை. உன் அம்மாவும்கூட  தேடினாள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை. ஆனாலும் தேடல்தான்.

கோடன் நீ வாழும் உலகே வேறு. உனக்கு இந்த வாழ்க்கையின் அபத்தங்கள் புரிவதில்லை. நீ ஒரு மிஸ்பிட். வெகுவேகமாக எல்லோரும் வாகனங்களில் பறக்கும்போது நீ மட்டும் வீதிக்கரையில் வாகனத்தை பார்க் பண்ணி, பறவையை ரசிக்கிறாய். உனக்கு அவுஸ்திரேலியா விரக்தி கொடுத்ததில் வியப்பில்லை.

நீ யாழ்ப்பாணம் வருவதாக சொல்லியிருந்தாய். பாவம். இன்னமும் யாழ்ப்பாணம் நான் சின்ன வயதில் விவரித்த கனவு ஊர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறாய். இங்கே எல்லாமே மாறிவிட்டது கோடன். உலகின் அவசரம் ஊரிலும் தொற்றிவிட்டது. நல்லூர்த்திருவிழா நான்கு நாட்கள்தான் நடக்கிறது. இங்கேயும் மொலிகியூலர் சமையல்கள் வந்து, பலர் வெறும் டியூபுகளையே உறிஞ்சிக்கொண்டு திரிகிறார்கள். நின்றால் நிதானித்து சிந்திப்பார்கள் என்று அரசாங்கம் எல்லோரையும் எப்போதும் ஏதோ ஒன்றுக்காக துரத்திக்கொண்டேயிருக்கிறது. மந்தைகள் பட்டிவிட்டு பட்டி மாறுவதுபோல எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடுகிறார்கள். ரசித்து வாழ்வது என்பதை நம்மிடமிருந்து பறித்துவிட்டார்கள். அன்றைக்கு களவாக பழஞ்சோறு ஒளித்துவைத்து, சிவத்த மிளகாய் சம்பல் அரைத்து, குழைத்து சாப்பிட்டேன். வீட்டின் செக்கியூரிட்டி சென்ஸர் ஹைஜீனிக் வயலேஷன் என்று சொல்லி தண்டம் அறவிட்டுவிட்டது. எல்லாமே மாறிவிட்டது கோடன். கூட்டமைப்பு மட்டும்தான் இன்னமும் தமிழ் மக்கள் ஒற்றுமையை பலப்படுத்தவேண்டும் என்று கோஷம்போட்டு வாக்கு கேட்கிறது. மற்றும்படி  எல்லாமே மாறிவிட்டது.

தமிழ் படிக்கப்போகிறேன் என்றும் சொல்லியிருந்தாய். நல்லது. ஆனால் தமிழை யாரும் இப்போது படிப்பதில்லை. எனக்கே தமிழ் எழுதுவது மறந்துவிட்டது. அன்றைக்கு ‘இ’னா எழுத முயன்றேன். முடியவேயில்லை. எல்லோரும் கணனிமொழியையே ஆர்வமாக படிக்கிறார்கள். இலக்கியம் எல்லாம் வசதிக்காக லிட் மொழியிலேயே படைத்துக்கொள்கிறார்கள். அதை பின்னர் எந்த மொழி வழக்கிலும் மாற்றக்கூடியதாக இருக்கிறது. அன்றைக்கு உமாஜீயின் சிறுகதை ஒன்றை வாசித்தேன். யாழ்ப்பாணத்து காதல் கதை. கதையை சென்னைக்களத்துக்கு கணனியே மாற்றுகிறது. வேந்தன், குமாராக மாறி மெட்ராஸ் தமிழ் பேசினான். கணனியே "கதை"ப்பதை "பேசு"வதாக மாற்றிக்கொள்கிறது. “குசினி”யை “சமையலறை” என்கிறது. யாழ் புகையிரத நிலையத்தை, சென்னை வேர்ஷனில் சென்றல் ரயில்வே ஸ்டேஷனாக மாற்றிக்கொள்கிறது. மொழி என்ற வஸ்துவை கணணி குத்தகைக்கு எடுத்துவிட்டது கோடன். நீ இப்போது வந்து தமிழ் படிக்கப்போகிறேன் என்கிறாய்.

நீ யாழ்ப்பாணம் வரும் எண்ணத்தையே விட்டுத்தள்ளு. உனக்கு நான் புதிய உலகம் ஒன்றை காட்டப்போகிறேன். அதற்கு முதல் உன்னுடைய iHome வேர்ஷனை அப்கிரேட் பண்ணு. அது பல வார்த்தைகளை இந்தியத்தமிழில் பேசுகிறது. தப்பு தப்பாக கவிதை டிரான்ஸ்லேட் பண்ணுகிறது. கவிதையை மொழிமாற்றம் செய்யும்போது அப்படியே வரிக்கு வரி மாற்றக்கூடாது. உன் கவிதையின் தமிழ் வேர்ஷனுக்கு “பேயே” தேவையே இல்லை. இப்போ பார்.

             ”நீள இரவு

              நீயும் நானும்

              களித்துக் கிடக்கையில்

              கடவுள் வருவான்.

              விரட்டிவிடு!”

கடிதத்தை வாசிப்பை இடை நிறுத்திவிட்டு iHome  புறுபுறுக்க ஆரம்பித்தது.

“I tried my best you know, I thought the referral of God to ghost was so ironical. That was the beauty of your poem. I think your Thaththa didn’t get it. “

“Its ok.”

“If you want, you can upgrade my version to 7.2. I don’t mind, but please remember to  ...”

“No,  its fine, just continue”

iHome தாத்தாவின் கடிதத்தை தொடர்ந்து வாசித்தது.

கோடன், நான் சில வருடங்களாகவே ஒரு அப்ளிகேஷனை டெவலப் பண்ணிக் கொண்டிருக்கிறேன். சங்ககால தமிழர் வாழ்க்கையை ஒரு வேர்ச்சுவல் உலகத்தில் வலம்வரச்செய்யும் அப்ளிகேஷன்.  கூகுளின் இலத்திரனியல் கொண்டகட் லென்ஸ் கருவியை அணிந்துகொண்டு பார்த்தால் அந்த வாழ்க்கை நம் கண் முன்னே விரியத்தொடங்கும். லென்ஸை கண்களில் செருகிவிட்டு, www.kathavu.com ற்கு சென்றாயானால் உனக்கு ஒரு புதிய உலகத்துக்கான கதவு திறக்கும். என்னுடைய ஐந்தாண்டு உழைப்பு இது. வேர்ச்சுவல் ரியாலிட்டியில் அடுத்த கட்ட …

Stop stop stop … what was it?

கோடன் கடிதத்தை இடை மறித்தான். iHome மீளவும் வாசித்தது.

கொண்டகட் லென்ஸை கண்களில் செருகிவிட்டு, www.kathavu.com ற்கு சென்றாயானால் உனக்கு ஒரு புதிய உலகம் ….

“Lets try it. “

“Don’t you want to continue the letter? “

“Its boring, let me get the Google Lens.

கோடன் தன் கூகிள் கொண்டகட் லென்ஸை தேடி எடுத்து அணிந்துகொண்டான். கட்டிலில் வாகாக சரிந்து படுத்தபடி “Go to www.kathavu.com என்ற ஆணையை பிறப்பித்தான். கண்களில் திரை விரிந்தது. நிறைய தமிழ் எழுத்துக்கள். பழம்தமிழர் படங்கள். கோடன் சுவாரசியமில்லாமல் வெளியேறுவோமா, விடுவோமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ஒரு பெண்குரல் பேசத்தொடங்கியது.

“சங்கநாட்டுக்கு வருகை தந்திருக்கும் அன்பருக்கு வணக்கம். உங்கள் மொழித்தெரிவை அறியலாமா?

“Welcome to the nation of Sangam. May I know your language of preference please?

ஆய்புவன்... ஒபவ சங்கம் தேஷிய சாதறயிங் பிலிகன்னே..“

"Tamil Please"

“அழகிய தெரிவு. நீங்கள் இருபத்தொராம் நூற்றாண்டு தமிழிலேயே சங்கநாட்டு மாந்தரோடு உரையாடலாம். பேச்சுமொழி தானாகவே மாறிக்கொள்ளும். சங்ககாலத்துக்கு ஒப்பாத விடயங்களை செய்தாலோ பேசினாலோ உங்கள் பிரசன்னம் மட்டுறுக்கப்படும். நீங்கள் சங்கநாட்டிலிருந்து வெளியேற விரும்பும் பட்சத்தில் "போயிட்டுவாறன்" என்று சொன்னால்போதுமானது. சங்கநாட்டிலிருந்து வெளியேறிவிடுவீர்கள்”

“போயிட்டுவாறன்”, கோடன் ஒன்றுக்கு இருமுறை மனதுக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டான்.

“உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?”

கோடன் எதையோ கேட்க நினைத்துவிட்டு பின் “நோ” என்றான்.  கண்முன்னே வட்டம் ஒன்று சுற்ற ஆரம்பித்தது.

“தயவுசெய்து காத்திருக்கவும். சங்கநாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. அதுவரையிலும் சுத்தமான பூக்கமழ் தேறல், நறவு என்பவை இருக்கின்றன. அருந்துகிறீர்களா?”

“நறவு என்றாலென்ன?”

“அது ஒரு வகை மது. நெல்லை அவித்து, நொதியப்படுத்தி .. பின்னர் அதற்குள் நான்கு நாட்கள் …. “

“எனக்கொரு பைண்ட் … பிழா கொடுங்கள்”

கோடன் ஆங்கிலத்தில் பைண்ட் என்று சொன்னது வாயில் பிழா என்று வந்து விழுந்தது. ஆச்சரியப்பட்டான். ஒரு பனையோலைப் பிழாவிலே நறவு தோன்றியது. கையை நீட்ட வந்தடங்கியது. "Augmented Reality. Thaththaa you are great." என்று கோடன் மனசுக்குள் ஆச்சரியப்பட்டான். கையிலிருந்த பிழாவினை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தான.

என்ன யோசிக்கிறீர்கள்? குடித்துப்பாருங்களேன். சங்கநாடு இன்னும் ஒரிரு கணங்களில் தயாராகிவிடும். அதுவரை..”

கோடன் பிழாவை வாயருகே கொண்டுசென்று குடிக்கமுயல, என்ன ஆச்சரியம் நறவு நர்க்கென்று அவனது நாவை நனைத்தது. வாவ். அப்ளிகேஷன் நாக்கின் கீமொரிசெப்டரை தூண்டுகிறது. பிழாவை கவிழுத்து குடிக்க, நறவு கலக்காத டக்கீலா ஷொட்போல தொண்டைக்குழிக்குள்ளால் இறங்கியது. வறட்டியது. ஆச்சரியம். நரம்புத்தொகுதிகளின் உணர்வு சமிக்ஞைகளை சந்தர்ப்பங்களுக்கேற்றபடி மூளைக்கு அனுப்பி, குடிக்காமலேயே குடிப்பதுபோன்ற உணர்வை இது கொடுக்கிறது. இது நிஜமான வேர்ச்சுவல் ரியாலிட்டி. தாத்தா, அற்புதம். கோடனுக்கு ஆர்வத்தால் இருப்புக்கொள்ளவில்லை. அப்படியென்றால் சங்கநாட்டுக்குள் பிரவேசிப்பது வெறும் பார்வை மட்டும் இல்லை, உணர்வும் சேரப்போகிறது. இலக்கி..

கோடனின் கண்கள் திடீரென்று பளிச்சிட்டன..

“சங்க நாட்டில் உங்கள் காலம் இனிமையாக கழியட்டும்”

கோடனுக்கு ஒரு கணம் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஒருகணம் எல்லாமே இருட்டி பின்னர் படக்கென்று வெளித்தது.

“இது எவ்விடம்?”


அத்தியாயம் 1  

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3     

அத்தியாயம் 4

அத்தியாயம் 5


4 comments :

 1. அருமையான பதிவு.. எங்கள் பலரிட மனக் குழப்பம் இதுதான்.. அடுத்தடுத்த பரம்பரையளுக்கு தமிழ் சொல்லித்தரப் போறதில்ல.. அதால அவங்கட அடையாளம் தொலைஞ்சு பிறகொரு காலத்தில எங்கள சபிப்பாங்க்களோ? எண்டு கிலேசமடைவதுண்டு. ஆனா பாருங்க, நான் சில மில்லியன் வருசத்துக்கு முன் ஆபிரிக்காவிலருந்து வெளிக்கிட்ட எங்க 200 சொச்சம் பாட்டட்டபூட்டட்டன, இப்ப நினைச்சி திட்டிரதில்லதானே, ஐயோ என்ட அடையாளத்த ஆட்டைய போட்டுட்டான் பாவி எண்டு.. அப்பிடி என்னயும் எவனும் திட்டமாட்டான் எண்டு ஒரு நம்பிக்கைதான்.
  ஆனா சும்மா கேக்கிறன்.. இது யாருக்கோ பதில் கடிதம் எழுதிற முயற்சியா அண்ணன்? ;)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி. இது நாவல். ரசிச்சு எழுதுறது. உங்களுக்கும் பிடிச்சது சந்தோசம்.

   Delete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே