வெள்ளி - 5

 

அத்தியாயம் 5

8232536932_e06f2b1db2_z

அந்த ஆற்றிலே ஒரு கெண்டை மீன் மட்டும் தனியே எம்பி எம்பி குதித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த தாமரை பூக்களில் நின்றும் எட்டிப்பார்த்தது. ஒரு அடி  அளவுக்கு உயரப்பாய்ந்து பின்னர் ஆற்றிலேயே திரும்பவும் விழுந்தது.  எத்தனை முறை முயன்றும் அதனால் மேலே உயரமாக பாய முடியவில்லை. அந்தவழியால் சென்ற தவளையொன்றை மறித்துக் கேட்டது.

“என்னை அந்த வானம் வரைக்கும் அழைத்துச்செல்ல முடியுமா?”

தவளை ஏன் என்று வினவியது.

“அதோ தெரிகிறதே கெண்டை மீன், அதன்மீது எனக்கு காதல் வந்துவிட்டது”

வானத்திலே ஒளிர்ந்த துருவ நட்சத்திரத்தை கெண்டை கை காட்டிச்சொன்னது. “சரி என் முதுகில் ஏறிக்கொள்” என்று தவளை கெண்டையை சுமந்தபடி தாமரை இலையிலிருந்து துருவ நட்சத்திரத்தை நோக்கி தானும் பாய்ந்து பார்த்தது. பாய்ந்த வேகத்திலேயே இரண்டுமே சமனிலை தவறி புளுக்கென ஆற்றில் விழுந்தன. கெண்டைக்கு கோபம் வந்துவிட்டது.

“வானம் ஏறி கெண்டை பிடிக்க முடியாதவன், ஆனா வைகுண்டம் வரைக்கும்  கேட்கும்வண்ணம் உவாக்கு உவாக்கு என்று சத்தம் போடத்தெரிகிறது”

என்று அது தவளையை திட்ட, தவளை கோபத்துடன் மீண்டுமொருமுறை எம்பிக்குதித்து, முடியாமல், அவமானத்தோடு அப்பால் போய்விட்டது. கெண்டைக்கு இப்போது இயலாமை. அந்தப்பக்கம் வந்த ஒரு படகை மறித்து நிறுத்தியது.

படகிலிருந்த வெள்ளி கேட்டாள்.

“உனக்கு என்ன வேண்டும்?

கெண்டை வெள்ளியையும் கூடவிருந்த கோடனையும் வெறித்துப்பார்த்தது. அதற்கு அந்தக்காட்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. படகின் தலைப்புறம் கோடன் அமர்ந்திருக்க, அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தபடி வெள்ளி மெதுவாக படகின் துடுப்பை பற்றிக்கொண்டிருந்தாள். அவள் தோள்களை ஆரத்தழுவியவண்ணம் கோடன், வெள்ளியின் கைகளைப்பற்றி துடுப்பை மெதுவாக வலித்துக்கொண்டிருந்தான். கெண்டைக்கு கொஞ்சம் கோபமும் வந்துவிட்டது.

“நான் என் துணையை அடையமுடியாமல் பிரிந்து அழுங்குகிறேன்… உங்களுக்கு காதல் வேண்டிக்கிடக்கிறதா?”

“உன் துணைதான் யாரோ?”

வெள்ளி கேட்க, கெண்டை துருவ நட்சத்திரத்தைக்காட்டியது. கோடன் புரியாமல் ஆச்சரியமாகக்கேட்டான்.

“அந்த துருவ நட்சத்திரமா உன் துணை?”

“ஆமாம், இந்த ஆற்றிலேயே அதுதான் தன்னிலை மாறாத ஒரே கெண்டை மீன். என்னோடு எப்போதுமே கதைகள் பேசி இரவினை கழிக்கும். ஆனால் காதல் சொல்லி கட்டியணைப்போம் என்றால் அருகிலேயே வரமாட்டேன் என்கிறது. பிடித்து தருகிறாயா?”

கெண்டை கேட்க கோடன் செய்வதறியாது திகைத்தான். வெள்ளி படகை நிறுத்துமாறு கோடனுக்கு சைகை செய்துவிட்டு அந்தக் கெண்டையை கையில் பிடித்தாள். எந்தவித சலசலப்புமில்லாமல் ஆறு நிர்மலமாயிருந்தது. அங்கே நட்சத்திரமெல்லாம் மிதந்துகொண்டிருந்தன.

துருவ நட்சத்திரமும் ஸ்பஷ்டமாக ஆற்றில் ஜொலித்தது.

“பார்த்தாயா … உன் துணை உன்னைத்தேடி இங்கே வந்துவிட்டது. நீயானால் அங்கே போகவேண்டுமென்று அடம் பிடிக்கிறாய்”

கெண்டைமீன் துருவ நட்சத்திரத்தின் நிழலைக்கண்டு ஆச்சரியப்பட்டது. மகிழ்ச்சி தாளாமல் துருவ நட்சத்திரத்தின் நிழலை நோக்கி ஆற்றில் குதித்தது. துருவ நட்சத்திரத்தை காணவில்லை. சில கணங்களுக்கு கெண்டையையும் காணவில்லை. வெள்ளியும் கொடனும் அது குதித்த இடத்தையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். சில கணங்கள் கழிந்தன. திடீரென்று கெண்டை வேகமாக நீரிலிருந்து பாய, அதற்குப்பின்னால் இன்னொரு கெண்டையும் சோடி கட்டிப்பாய்ந்தது. இரண்டுமே மகிழ்ச்சியோடு ஆற்றிலே விளையாட ஆரம்பித்தன.

கோடன் புரிந்துகொண்டவனாய் வெள்ளியை காதருகின் முணுமுணுத்தான்.

“என்னருகில் நீ.
நீலமாய் தெரிவது,
வானமா?
பூமியா?”

***************

"Time up Godan... Up. Up. Up."

கோடன் திடுக்கிட்டு எழுந்தான். iHome காலை பத்து மணி என்று நேரம் காட்ட அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஓ மை கோட். பதினாறு மணித்தியாலங்கள் தூங்கியிருக்கிறான். கொன்டக்ட் லென்ஸ் மொத்தமாக சார்ஜ் ஏறி, பச்சை லைட் மின்னியது. கடவுளே, எப்படித்தூங்கிப்போனேன்? வெள்ளி இப்போது எங்கிருப்பாள்? கோடனுக்கு உடல் முழுதும் பதட்டம் தொற்றிக்கொண்டது. என்ன காரியம் பண்ணிவிட்டேன். அவள் என்ன செய்வாளோ.

யோசிக்க சமயமில்லை. அவசர அவசரமாக கொன்டக்ட் லென்ஸை அணிந்துகொண்டான். iHome மீது எரிந்து விழுந்தான்.

“Why the hell didn't you wake me up?”

“It was a much needed sleep, you haven't been sleeping well for the last..

Shut up and go to www.kathavu.com

"சங்கநாட்டுக்கு மீண்டும் வருகை தந்திருக்கும் கோடனுக்கு நன்றிகள். நீங்கள் பலமுறை சங்கநாட்டுக்கு வருகை தந்திருந்தாலும், இவ்வறிவித்தல்களை மீண்டுமொருமுறை கேட்பது..."

"வெள்ளி … வெள்ளியை சந்திக்கவேண்டும்..எங்கிருக்கிறாள் என்று தெரியுமா? கொல்லன் அழிசியின் மகள். கவிப்பித்தர் கொல்லன் அழிசி.. தொண்டை மன்னனிடம்.."

"மன்னிக்கவும், சங்கநாட்டு தளத்தில் தேடல் பொறி இன்னமும் வடிவமைக்கப்படவில்லை. நீங்கள் தேடும் நபரை சங்கநாட்டிலேயே விசாரித்து அறிந்துகொள்ளலாம்"

"கறுமம்….தாமதிக்காமல் என்னை குடவாய்க்கரைக்கு இட்டுச்செல்லவும்"

"நல்லது... இன்னும் சற்றுநேரத்தில்.."

சங்கநாடு சுழல ஆரம்பிக்க, கோடன் நகத்தினை கடிக்க ஆரம்பித்தான்.

***************

குடவாய்க்கரை வெறிச்சோடிப்போய்க்கிடந்தது.

தூரத்திலே புன்னை மரம் வெறுமனாக தனியே நின்றது தெளிவாகத் தெரிந்தது. நேற்று இந்த இடத்திலேதான் லென்ஸின் பட்டரி தீர்ந்துபோனது. கோடன், புன்னை மரத்தை நோக்கி மூச்சிரைக்க ஓடினான். வெள்ளியை காணவில்லை. சுற்றிவரப்பார்த்தான். மனிதர்களே இல்லை. இந்திரா விழா நடந்ததற்கான தடயமாக காய்ந்த பூக்களும், ஓலைகளும், உடைந்த மட்கலயங்களும் ஆங்காங்கே விரவிக்கிடந்தன. படகுத்துறையில் ஒரு காகம், குருவிகூட இல்லை. ஆற்றின் அக்கரையிலிருந்த குடிசைகளைக் காணவில்லை. நடுவே நாட்டப்பட்டிருந்த இந்திரக்கொடியையும் காணவில்லை. முந்தையதினம் ஆறு முழுதும் நிறைந்திருந்த பூக்களையும் காணவில்லை. ஆங்காங்கே தாவும் வாளைகளும், கரையோரத்தில் பூத்திருந்த ஆம்பல்களுமே எஞ்சியிருந்தன. ஆறு தெளிந்து இருந்தது. எதையோ இழந்ததுபோல அவ்வப்போது மட்டும் குறு அலைகளால் கண்ணீர் சிந்தியது.

“வெள்ளி...”

கோடனின் கத்தல் குடவாய்க்கரை முழுதும் எதிரொலித்தது. அவன் கூச்சலில் புன்னை மரத்திலிருந்த சில பறவைகள் சிறகடித்துவிட்டு அமைதியாகின. கண்ணுக்கெட்டியதூரம்வரை மனித நடமாட்டமே இல்லை. எங்கே, எந்தத்திசையில் போய்த்தேடுவது? மலையிலிருந்து கீழிறங்கி சித்திரைத்தெருவுக்கு போனான். பட்டறை இருந்த அடையாளத்துக்கு சில வெட்டிப்போட்ட இரும்புகளும் கரித்துண்டுகளும் சிதறிக்கிடந்தன. என்ன செய்யலாம்? வெள்ளி ஊருக்கு சென்றிருப்பாளோ? அவள் ஊர் பெயர்கூட என்னவோ … ஆ கருவூர்.

கோடன் அங்கிருந்து வெளியேறி, சங்கநாட்டு முகப்புக்குச்சென்று தன்னை கருவூர் அழைத்துச்செல்லுமாறு பணித்தான். தேடி விசாரித்து கொல்லன் அழிசியின் குடில் கண்டுபிடித்தான். மூடிக்கிடந்தது. இந்திரவிழா பயணிகள் திரும்பி வருவதற்கு பல வாரங்கள் எடுக்குமென்று அயலவர்கள் சொன்னார்கள். அவர்களிடமிருந்து  குடவாய்க்கரையிலிருந்து கருவூர் வந்தடையும் பாதையை கேட்டறிந்தான். . அந்தப்பாதையிலுள்ள ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் மறுபடி மறுபடி சென்று பார்த்தான். ம்ஹூம் எங்கேயும் அவர்கள் சென்றடைந்தமைக்கான அடையாளமே இல்லை. மடங்களுக்குச் சென்று பரதேசிகளிடமும் பாணர்களிடமும் கேட்டுப்பார்த்தான். ம்ஹூம். தேர்ப்பாகர்களிடம் விசாரித்தான். எவருக்கும் தெரியவில்லை.

அவள் எங்கே போனாள்? தேடித்தேடிக்களைத்துப்போய் மீண்டும் குடவாய்க்கரைக்கு திரும்பினான். வெள்ளி வெள்ளி என்று பிதற்றிக்கொண்டே புன்னையிடம் வந்து கேட்டான்.

“உன் அக்காள் எங்கே போயிருக்கிறாள் என்று தெரியுமா?”

புன்னை ஆடாமல் அசையாமல் கோபத்தோடு நின்றது.

“நீயாவது என்னைப்புரிந்துகொள்ள மாட்டாயா? உன் அக்காளை நான் உயிருக்குயிராய் விரும்புகிறேன் … அதை சொல்லப்போகும் தறுவாயில்தான் விபரீதம் விழைந்தது. அவள் எங்கே போனாள் என்று சொல்லேன்?”

புன்னை இப்போது இலேசாக காற்றில் அசைந்து கொடுத்தது. அப்போது பூ ஒன்று அவன் காலடியில் உதிர்ந்து விழுந்தது. இந்தப்பூவைத்தானே அவள் இறுதியாக தன் கூந்தலில் சூடிக்கொண்டாள். கோடனுக்கு மீண்டும் முந்தைய மாலைப்பொழுது ஞாபகங்கள் வந்து சேர்ந்தன. நான் வருவேன், காதல் சொல்வேன் என்று எவ்வளவு நாழிகை காத்திருந்தாளோ? என்ன மனிதன் நான்? சொர்க்கமே கையில் கிடைத்த சமயத்தில் கண்ணைக்குத்திக்கொண்ட பாவியானேனே. கோடன் தனக்குத்தானே புலம்பினான்.

புன்னை மீண்டும் ஒரு பூவை அவன் காலடியில் உதிர்த்தது. கோடன் அப்பூவை எடுக்கவென்று குனிந்தான். அப்போதுதான் கவனித்தான். புன்னையின் அடிமரத்தணடில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. கோடன் நன்றாக தட்டிவிட்டு வாசித்தான்.

“நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிப்
பான்மலி கடலில் பரந்துபட் டன்றே
ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிதொகுபு ஈண்டிக்
கலிகெழு மறுகின் விழவய ரும்மே
கானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறும்
தாம்அமர் துணையொடு வண்டிமி ரும்மே
யானே, புனைஇழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு
கனையிருங் கங்குலுங் கண்படை இலனே 
அதனால், என்னொடு பொருங்கொல்இவ் வுலகம்
உலகடு பொருங்கொல்என் அவலமுறு நெஞ்சே”

எழுதிய தடத்தில் இன்னமும் ஈரம் கசிந்து கொண்டிருந்தது. அண்மையில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும். கோடன், திரும்ப திரும்ப அதனை வாசித்துப்பார்த்தான்.  எதுவுமே விளங்கவில்லை.  அவலமுறு நெஞ்சே என்றால் நெஞ்சம் வருந்தியிருக்கிறாள் என்றர்த்தம். நிச்சயம் வெள்ளிதான் எழுதியிருக்கிறாள். எனக்காக காத்திருந்து, நொந்து எழுதிவைத்துவிட்டு போய்விட்டாள். இதன் முழு அர்த்தம் என்ன? கண்டுபிடிக்கிறேன். என்னை மன்னித்துவிடு வெள்ளி. நீ சங்கநாட்டில் எந்த மூலையிலிருந்தாலும் உன்னை கண்டுபிடிக்காமல் ஓயமாட்டேன். இது சத்தியம். 

****************

“Hang on … what’s that song again?”

“நிலவே நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிக் ..”

“Shit…”

iHome முதன்முறையாக சிறு அதிர்வுணர்ச்சியை காட்டியது. கோடனுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

“What’?”

Is the next line பான்மலி கடலில் பரந்துபட் டன்றே , ஊரே….?”

“Yes, how do you know?”

iHome மொத்தக்கவிதையையும் கடகடவென பாடி முடித்தது. கோடனின் கண்கள் விரிந்தன.

“இது எப்படி உனக்கு தெரியவந்தது?”

ஐந்துநாட்கள் சங்கநாட்டு வாசத்தால் கோடனுக்கு பதட்டத்திலும் தமிழே வாயில் நுழைந்தது.

“இந்தப்பாட்டு சங்க இலக்கியத்தில் இருக்கிறது, குறுந்தொகை .. நெய்தல் திணை..”

“என்ன சொல்கிறாய்? நேற்று வெள்ளி எழுதிய பாட்டு எப்படி ஏலவே குறுந்தொகையில் வந்திருக்கமுடியும்?”

“அதைவிட ஆச்சரியம் இதை எழுதிய கவிஞரின் பெயர்?”

“என்ன பெயர்?”

“வெள்ளி வீதியார்”

“வெள்ளி வீ … ஓ மை கோட், அப்போ கொல்லன் அழிசி என்ற பெயர் ..”

“காமம் காமம் என்ப …”

iHome சொல்லத்தொடங்கமுன்னரே கோடன் குறுக்கிட்டான்.

“கடவுளே .. இதே கவிதையைத்தான் அவர் முந்தைய இரவு எனக்கு சொன்னாரே..”

கோடன் வெள்ளி பாடிய அத்தனை பாட்டுக்களின் முதல் வரிகளையும் ஞாபகப்படுத்திப்பார்க்க அதன் வரிகள் எல்லாவற்றையுமே iHome புட்டு புட்டு வைத்தது. அதற்கே குழப்பமாக இருந்தது. என்னவகை அல்கோரிதம் இது?

“எல்லாமே சங்க இலக்கியம் … Even I am confused now

கோடனுக்கோ அவசரம்.

“இதில் குழம்புவதற்கு ஒன்றுமேயில்லை. முதலில் இந்த “நிலவே நீல்நிற ” பாட்டு என்ன சொல்கிறது என்று சொல்லு.”

“நிலவு நீல நிற வானத்தில் கதிர் பரப்பி பால் நிறைந்த கடல்போல காட்சியளித்தது. ஊரிலே மக்கள் ஒன்று கூடி விழா களியாட்டங்கள் புரிகிறார்கள். வண்டுகள் துணைகளோடு அழகிய மலர்கள் கொண்ட காட்டினிடையே ஓடித்திரிகின்றன, எல்லோருமே மகிழ்ச்சியாய் இருக்கையில் நான் மட்டும் தனிமையோடு போராடிக்கொண்டிருக்கிறேன். என் தலைவன் எங்கே?”

பாட்டை சொல்கையில் iHome இன் குரலிலும் ஒருவித கவலை தொக்கிநின்றது. கோடனுக்கு அந்த பாடல் விளக்கத்தை கேட்டதும் தாளமுடியவில்லை. என்ன வேலை பார்த்துவிட்டேன். எனக்காக காத்திருந்த தேவதையை இப்படி தவிக்க விட்டுவிட்டேனே.

iHome கரகரத்த குரலில் கூறியது.

“கோடன் வெள்ளிவீதியாரின் பெரும்பாலான பாடல்களும் பிரிவுத்துயர் பற்றியதுதான். ஏங்கி ஏங்கி உன்னை நினைத்து அழுங்கியிருக்கிறாள். தமிழ் வரலாற்றில் இப்படியொரு பெண் பிரிவுத்துயரில் வெந்து எழுதியதில்லை. ஆண்டாளுடையதுகூட இறை பக்திதான். ஆனால் வெள்ளியுடையது தன்னிகரொத்த தலைவன்மீதான காதல் என்று பேராசிரியல் சிவசண்முக..

“நாங்கள் எப்படியும் அவளை கண்டுபிடிக்கவேண்டும் .. எங்கேயிருக்கிறாள் என்று கண்டறியவேண்டும் .. ஏதாவது க்ளூ .. அந்தக்  கவிதைகளில் ஏதாவது இடப்பெயர்கள் இருக்குமா?

“ம்ஹூம் .. எதுவுமில்லை.… எல்லாமே அகத்திணை பாடல்கள் .. விவரங்கள் இராது …தேடி அலைந்திருக்கிறாள். பாணர்களிடம் தலைவனை விசாரித்திருக்கிறாள். ஆனால் ஊர் பெயர் இல்லை. உன்னுடைய ஊர் எதுவென்று சொன்னாய்?”

“வேம்பையூர்..”

“அங்கு போயிருப்பாளோ?”

“அதுநான் சும்மா சொல்லியது .. சங்கநாட்டு அப்ளிகேஷனில் அப்படி ஒரு ஊரே இல்லை. பார்த்துவிட்டேன்”

“ஆனால் அவளுக்கு அது தெரியாதே!”

கோடன் துணுக்குற்றான். வெள்ளி வேம்பையூரைத்தேடி சென்றிருப்பாளோ? அவ்வூரை விசாரித்து அலைவாளோ? இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. பிரச்சனை இடியப்பச்சிக்கல் ஆகிவிட்டது. iHome இடம் கேட்டான்.

“மீண்டும் வெள்ளி புன்னை மரத்தில் எழுதி வைத்திருந்த கவிதையை ஒருமுறை சொல்லு?”

iHome பாடலை முழுமையாக வாசித்துக்காட்டியது. கோடனுக்கு அதிலே ஏதோ நெருடியதுபோல ..

“அதென்ன கனையிருங் கங்குலுங் கண்படை இலனே?”

“நீண்ட இரவில் கண் துயிலாமல் இருந்தேன்”

“அப்படியென்றால் … அவள் இரவு முழுதும் புன்னையடியிலேயே விழித்திருந்திருக்கிறாள்”

கோடன் சொல்ல இப்போது iHome துணுக்குற்றது.

“ஓ . ஆக அவள் குடவாய்க்கரையிலிருந்து அதிக தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை”

“ஆனால் நான் சுற்றுப்புறம் முழுதும் நன்றாக தேடிப்பார்த்துவிட்டேன்.  குடவாய்க்கரையை அண்டிய இடங்களில் ஒரு காகம் குருவி கூட இல்லை .. எப்படி இது சாத்தியம்? அவள் என்னைக்கண்டு எங்காவது மறைந்திருப்பாளோ?”

iHome அமைதியாகி யோசிக்க ஆரம்பித்தது. கோடனுக்கு குழப்பம் தீரவில்லை. வெள்ளி எங்கு போனாள்? கணவனைத்தேடி அலைந்து திரிந்து அவள் பாடிய பல கவிதைகள் இருக்கின்றன. ஆனால் பிரிந்து சில மணிநேரங்கள்தானே. அப்படியென்றால் அத்தனை சங்க இலக்கிய பாடல்களும் சங்கநாட்டுத்தளத்தில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? வெள்ளி வெறும் இலத்திரனியல் வித்தையா? அவள் ஒரு கணணி ஜாலம் என்பதை கோடானால் ஏற்றுக்கொள்ளவேமுடியவில்லை. அவளோடு பழகிய கணங்கள் அவ்வளவு நிஜமாக இருந்ததே. She felt so real. அவளுடைய சிரிப்பு, குறும்பு, தொடுகை, காதல் சொன்ன கண்கள் … எதுவுமே பொய் சொல்லவில்லையே. இது எப்படி சாத்தியம்?

கோடன் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே iHome விழித்தெழுந்தது. குதூகலமாக பாட்டொன்றை விசிலடித்தது.

“கண்டுகொண்டேன் … கண்டுகொண்டேன்”

“என்ன சொல்கிறாய்?”

iHome உற்சாகம் மாறாமல் கூறியது.

“ஏன் வெள்ளியும் உன்னைப்போலவே சங்கநாட்டுக்குள் நுழைந்த ஒருத்தியாக இருக்கக்கூடாது?”

அதைக்கேட்ட கோடனின் கால் சிறு விரலிருந்து சிர்ர்ர்ர்ரென்று ஒரு மின்சாரம் பாய்ந்தது.

“என்னது? Come again?

“ஏன் வெள்ளியும் உன்னைப்போலவே சங்கநாட்டுக்குள் நுழைந்த ஒருத்தியாக இருக்கக்கூடாது?”

அப்பிடியென்றால்… வெள்ளியும் என்னைப்போல … You mean she is real?”

Why not, உன்னைப்போலவே கனவு காண்பவளாக, கவிதை எழுதுபவளாக .. அதுவும் குறுந்தொகைப்பாடல்களில் காதலுற்று, அந்த வாழ்க்கையிலேயே தன்னை ஆட்கொண்டு …”

iHome சொல்லச்சொல்ல, கோடனுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. அப்படியானால் வெள்ளி உடலும் உள்ளமும் சேர்ந்த நிஜ மனுஷிதானா. என் கனவெல்லாம் நிஜமாகுமா …கடவுளே இதை மட்டும் பொய்யாக்கிவிடாதே…. இப்போது வெள்ளியை .. வெள்ளி எங்கே இருப்பாள் .. தாத்தாவுக்கு கோல் போடவேண்டும்.

கோடன் அலற, iHome சோர்வாய் சொன்னது.

“அவரை தொடர்புகொள்ள இரண்டுமுறை முயன்றுவிட்டேன் .. கிடைக்கவில்லை..”

Damn, இப்போ என்ன செய்வது? ஏதாவது செய்யவேண்டும் … This is unbelievable."

iHome யோசித்தது.

“கோடன் … இந்த தாத்தா அனுப்பிய அந்தக் கடிதத்தை  நாங்கள் இன்னமுமே வாசித்து முடிக்கவில்லை. வாசித்துப்பார்ப்போமா? ஏதாவது ஐடியா கிடைக்கலாம்”

கோடனுக்கு  கடிதத்தை வாசிகக்கச்சொன்னான். iHome அந்தக்கடிதத்தை விட்ட இடத்திலிருந்து மீண்டும் வாசிக்கத்தொடங்கியது.

“………………….லென்ஸை கண்களில் செருகிவிட்டு, www.kathavu.com ற்கு சென்றாயானால் உனக்கு ஒரு புதிய உலகத்துக்கான கதவு திறக்கும். என்னுடைய ஐந்தாண்டு உழைப்பு இது. வேர்ச்சுவல் ரியாலிட்டியில் அடுத்த கட்டம். இது. என்னுடைய சிருஷ்டி. பயன்படுத்திப்பார். பின் விடவேமாட்டாய்.

நிற்க!

கோடன், இறுதியாக முக்கியமான விடயம் ஒன்று.

இப்போது நீயிருக்கும் மன நிலையில் இதை உன்னிடம் சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் இந்தச்சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டால் இனி சொல்லமுடியாமல் போய்விடுமோ என்றும் அச்சமாகவிருக்கிறது.

கோடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். iHome இன் குரலிலும் ஒருவித பதட்டம் தொற்றிக்கொண்டது.

நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன். எனக்கு உதவியாக ஆய்வில் ஈடுபடும் அழகேசனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். படு சுட்டி. சிறுவயதுமுதல் அடிக்கடி தகப்பனோடு என் நிறுவனத்துக்கு வருபவள். எனக்கு பேத்தி போன்றவள். அவளைப்பார்க்கும்போதெல்லாம் எனக்கு உந்தன் ஞாபகம்தான் வருவதுண்டு. அவளும் உன்னைப்போலத்தான். கனவுகளில் வாழ்பவள். நவீன உலகத்தின் அபத்தங்கள் எவற்றோடும் ஒத்துப்போகாதவள்.  இங்கே யாழ்ப்பாணத்தில் அத்தனைபேரும் விஞ்ஞானம், அறிவியல், கணனி என்று பறக்கையில், அவளோ தமிழ் தமிழ் என்று மொழியோடேயே படுத்துக்கிடப்பவள். அதுவும் அவளுக்கு சங்க இலக்கியம் என்றால் போதும்..சாப்பாடு தண்ணி…

Jesus Christ...இதெல்லாவற்றையும் விட்டுவிட்டு அவளுக்கு என்ன பெயர் என்று ஒருக்கா வாசி..”

“Wait... I am too excited and not sure what to do..”

iHome, பதட்டத்தில் ஸ்டக்காகி, தடுமாறியபடி கடிதத்தை தொடர்ந்து வாசித்தது.

கோடன் எனக்குத்தெரியும், உனக்கு நிச்சயத்திருமணங்களில் நம்பிக்கையில்லை என்று. தற்போதைய மனநிலையில் இனி துணையே வேண்டாமென்றும் முடிவேடுத்திருகக்கூடும்.  ஆனால் தாத்தா ஒன்று சொல்கிறேன். உனக்கு அவளைப்போல பொருந்தக்கூடிய பெண் கனவிலும் கிடைக்கமாட்டாள். அவளும் பாவம், இவ்வளவு சிந்தனைத்திறனுள்ளவள் வெறும் அன்றாடப்பணங்காய்ச்சி மரமொன்றிடம் சிக்கிச் சீரழியவேண்டாம். Think about it. You guys will make a good couple. அதிகம் வேண்டாம். அவளோடு ஒருமுறையேனும் பேசிப்பார். விளங்கும். அவ்வளவுதான். உனக்கு ஓகே என்றால், நான் அவளிடமும் உன்னைப்பற்றி சொல்லிப்பார்க்கிறேன்.

அடுத்தவரியை வாசிக்கப்போன iHome டென்ஷனில் அப்படியே ஸ்டக்காகிப்போனது. சிறிது நேரம் காத்திருந்த கோடன் பொறுமையில்லாமல் அதனை ரீபூட் பண்ணினான்.

“என்னாச்சு? Why did you get stuck?”

I can't believe what's going on here...”

“அலம்பாம விஷயத்தை சொல்லு.”

iHome தட்டுத்தடுமாறி கடிதத்தை தொடந்தது. இவ்வளவு இமோஷனல் லோடை தாங்கும் சிபியு பவர் அதனிடம் கிடையாது. அடிக்கடி ஹங் பண்ணியது.

கோடன் வாழ்க்கையில் இருள் என்ற விசயம் எப்போதும் நிலைத்திருக்காது. இருளின் ஆட்டமெல்லாம் விடிவெள்ளி முளைக்கும்வரைதான். அதற்குப்பின்னர் இருள், மறைவதற்கு இடம்தேடி அடர்காட்டுக்குள் ஓடித்தப்பிவிடும். இந்தப்பெண் வெள்ளியும் உன் வாழ்க்கையின் இருளை அகற்றுவாள் என்ற நம்பிக்...

கோடன் விக்கித்துப்போனான்.

அது வெள்ளியேதான். என்னைப்போலவே அவளும் லொகின் பண்ணி சங்கநாட்டில் உலா வந்திருக்கிறாள். நான் யார் என்று தெரியாமலேயே பேசிப்பழகி, கவிதை சொல்லி, இந்திரவிழா முழுதும் சுற்றி... தாத்தா சொன்னது எவ்வளவு உண்மை, வெள்ளியை மட்டும் நான் சந்தித்திருக்காவிட்டால்...

கோடன்போல iHome ஆல் யோசித்துக்கொண்டிருக்கமுடியவில்லை. அது களத்தில் இறங்கியது.

“Damn, I tried to call Thaaththaa again, couldn't get him online. messaged him too.”

அதீத அவசரத்தில் அது ட்ரான்ஸ்லேட்டரை மறந்து ஆங்கிலத்துக்கு தாவிவிட்டது. கோடனைவிட அதற்கு டென்ஷன்.

“Do you want to book a ticket now?  There is a charter flight available to Jaffna in 30 minutes... Actually I just bought it. Can't hold my emotions. ..”

கோடன் தயங்கினான். iHome பொறுமை இழந்துவிட்டது.

“What the hell are you thinking, leave, just leave now. Make sure you login to me from iWatch there. I can't wait to hear! Go and find her.”

கோடன் நிதானமாக சொன்னான்.

“வேண்டாம் … பிளைட்டை கான்சல் பண்ணு”

“What are you talking?”

“வெள்ளி காதலித்தது கோடனை. நீயும், நானும் யாரென்றே தெரியாது, உன் தந்தையும் என் தந்தையும் சொந்தமில்லை. நம் தாயார் முன்னப்பின்னே அறிந்ததேயில்லை. ஆனாலும் நான் உன்னோடு காதல் கொண்டேன் என்று நான் நேற்று அவளிடம் சொன்னபோது அவள் கண்களில் தெரிந்த ஒளியை நீ பார்த்திருக்கவேண்டும். தேக்கிவைத்திருந்த காதலை கட்டுற இயலாமல் அவள் கண்கள் விரிந்துகொண்டேபோனது. இமை மூடும்போதும் உள்ளே துடித்தது. அந்தக்கணம் உண்மை என்று என் உள் மனது எப்போதுமே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தச்சமயமே அவளை நான் பிரியநேரிட்டது. மடையன் நான், சார்ஜ் போடாததும், அசதியில் தூங்கிப்போனதும் என் தவறு. ஆனால் என் காதல் தவறில்லை. அவள் காதலும் தவறில்லை. காதலர் தவறாகலாம், காதல் தவறாகுமா என்று சொல்லி, அவளே என்னை புன்னை மரத்தடியில் ஆட்கொண்டாள். அவள் காதலரை தவறாக்க நான் அனுமதிக்கப்போவதில்லை.  இப்போதும்கூட அவள் என்மேல் கோபம்கொண்டிருந்தாலும் உள்ளூற நான் வரமாட்டேனா என்றுதான் காத்திருப்பாள்.”

“I get it, but what's wrong in meeting her in a coffee shop and tell her?”

“நிச்சயம் செய்வேன். ஆனால் இந்தச்சூழ்நிலையில் யாழ்ப்பாணம்போய் நான்தான் கோடன், சங்கநாட்டில் உன்னைக்காதலித்தவன் என்று எந்த முகத்தோடு சொல்வது? முதலில், வினை எங்கே விதைத்தேனோ அதனை அங்கேயே அறுக்கவேண்டும்”

Mate, you are such a loser

கோடன் சிரித்தான். முதல் வேலை வெள்ளி இப்போது எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடிக்கவேண்டும். வெள்ளிவீதியார் பாடல்களை எல்லாம் தேடிப்பார்த்தாயிற்று. வெள்ளி விரும்பினால் சங்க நாட்டில் எங்கேயும் போகலாமே? இப்போது எப்படி தேடுவது?

iHome சிறிது யோசித்துவிட்டு கேட்டது.

“வெள்ளி பற்றி என்னெல்லாம் தகவல் உண்டு?”

“பெரிதாக இல்லை .. கூடப்பிறந்தவன் படையில். இவளும் தந்தையும்தான் பட்டறையில்.. அவ்வளவுதான்”

iHome இன் புரோசசர் வேகமாக தொழிற்பட்டது.  வெள்ளியே இதையெல்லாம் தனக்கு பிடித்தமானதாக சிருஷ்டித்திருக்கிறாள். சங்க இலக்கிய கவிஞரான கொல்லன் அழிசியை தந்தையாக்கி, புறநானூற்று சகோதரனை உருவாக்கி, புன்னையை தங்கையாக்கியதுகூட குறுந்தொகை கற்பனைதான் … அப்படியென்றால்..There is something fishy out there.

“தாயைப்பற்றி ஒன்றும் சொன்னதில்லையா?”

“அதிகம் சொன்னதில்லை ..வெறுமனே … கருவூரிலிருந்து கொஞ்சம் தள்ளி ஏதோ தினைப்புலம் காப்பதாக ..”

iHome கடுமையாக சிந்திக்கதொடங்கியது. “தினைப்புலம் காத்தல்”, Again சங்க இலக்கியம். குறிஞ்சித்திணை. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உருவாக்கப்பட்ட திணை. தனக்கு நெருக்கமானவருடன் உணர்வைப் பகிர்ந்து, தினை காக்கும் தலைவி, தனித்து வேட்டைக்குச் செல்லும் தலைவனோடு காதலுற்று ஒன்றுபடும் நிலைக்களம். வெள்ளிக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும். வேம்பையூர் தேடி அது இல்லை அறிந்ததும் வேறு வழியில்லாமல், கோடன் தன்னைத்தேடி தினைப்புலத்துக்கு வருவான் என்று அங்கு காத்திருக்ககூடும். அப்படித் தலைவனுக்காக தினைப்புலத்தில் காத்திருக்கும் தலைவி பாடல் இருக்கிறதா?  iHome வேகமாக பாடல்களை தேடியது.

“Bingo!”

“வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு
‘அழாஅல்’ என்று நம் அழுத கண் துடைப்பார்
யார் ஆகுவர்கொல் தோழி! சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும்
அரும் பனி அச்சிரம் வாராதோரே”

கோடனுக்கு எதுவுமே புரியவில்லை.

“இது என்ன பாட்டு? .. என்னர்த்தம்?”

“இன்றைக்கு, மலைப் பக்கத்தில், பெரிய தினை வயலில், குறவன் அறுத்த சிறிய தினைக் கதிர் மீண்டும் முளைக்கிற மறுகாலில், அவரைக் கொடி பூக்கிற முன்பனிக் காலம் வந்துவிட்டது. குளிர் வாட்டுகிறது. ஆனால், அவனைப் பிரிந்து நான் வருந்துவேன் என்று தெரிந்தும் அவன் வரவில்லை. ஏன் அப்படி?”

கோடன் ஏதோ கேட்க விழைந்தான். iHome விடவில்லை. இவனுக்கு விளங்கவைக்க நேரமில்லை.

“ … இதைப்பாடியதும் வெள்ளி வீதியார்தான். யோசித்துப்பார் கோடன், வெள்ளியின் தாய் தினைப்புனம் காக்கிறாள் என்பதே வெள்ளி உருவகித்ததுதான்.. அத்தோடு இந்தப்பாட்டையும் பொருத்திப்பார் ..  There is a 72% chance of Velli being  …  ”

iHome சொல்லிக்கொண்டிருக்கையிலேயே கோடன் கொன்டக்ட் லென்ஸை அணிந்துவிட்டான்.

******************

கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் தினைப்பயிர்கள் பட்டு விரிப்புபோல வியாபித்துக்கிடந்தது. எங்கெங்கோ தூர தேசங்களிலிருந்தெல்லாம் கிளிகள் சாரி சாரியாக பறந்து வந்துகொண்டிருந்தன. வந்தவை எந்தவித பயமுமில்லாமல் தினைக்கதிர்களை பதம்பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு பக்கம் காட்டுப்பன்றிகளும் தினை வேர்களை பிடுங்கித்தின்ன, இந்த சரசரப்புகளுக்கு மத்தியில் யானைக்கூட்டம் வேறு தூரத்தே பிளிர்ந்துகொண்டிருந்தது. இவை எவையும் தினைப்புனத்தில் ஒரு காவல் பரண் இருந்ததையோ, அதில் ஒருத்தி நாகமணிக் கவணுடன் காவலுக்கு இருக்கிறாள் என்பதையோ சட்டை செய்ததாக தெரியவில்லை.

சுற்றிவர நடப்பது பற்றிய பிரக்ஞ்ஞையே இல்லாமல், வெள்ளி கிழக்குத்திசையையே வெறித்துப்பார்த்தபடி அந்தப்பரணிலே அமர்ந்திருந்தாள்.

இரண்டே இரண்டு நாட்களில் ஒருத்தன் இவ்வளவு அடித்துப்போடுவானா? சங்க இலக்கியத்தலைவன் என்பதற்காக இப்படியா? ஏன் அத்தனை தலைவிகளும் காதலனுக்காக ஏங்கியே செத்தார்கள் என்று இப்போதல்லவா புரிகிறது. இதெல்லாம் கனவா? அப்படி கனவிலும் எனக்கு தலைவன் கை கூடவில்லையே. வெள்ளி என்று பெயர் கொண்டதால் எனக்கும் வெள்ளிவீதியாருக்கு நிகழ்ந்ததுபோலவே நிகழ்கிறதே. “கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காகும்” வெள்ளி வீதியாரின் நிலையே எனக்குமாகிப்போனதே, இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என்று வெள்ளி பல்வேறு எண்ணச்சுழலில் வீழ்ந்து கிடந்தாள். கோடனின் பிரிவை அவளால் தாங்கவே முடியவில்லை. ஏன் பிரிந்தான்? எங்கிருந்தோ வந்தான், என் மீது காதல் கொண்டான். செம்புலப்பெயல்நீரனாரே அவளைத் தேடிவந்து காதலை சொல்லுவான் என்று வெள்ளி நினைத்துப்பார்த்திருப்பாளா? இப்படியொரு வாழ்க்கையை காட்டிவிட்டு, இதோ வருகிறேன் என்று சொல்லி, பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதிலேயே மறைந்துபோனானே. படு பாவி. நான் உண்மையிலேயே ஈரமுள்ள மனம் படைத்தவள் என்றால் என் கோடன் என்னைத்தேடி வருவான். வரட்டும். அவன் மட்டும் என் கையில் சிக்கட்டும் .. என்ன செய்கிறேன் பார்.

வெள்ளி கோபத்தில் கொஞ்சம் உரக்கவே முணுமுணுத்தாள்.

“என்ன செய்வாய் வெள்ளி? என்னை சம்மட்டியால் அடிப்பாயா? … அடி”

வெள்ளி கோடனின் குரல் கேட்டு சிலிர்த்துப்போய் எழுந்தாள்.

முன்னே கோடன் தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டி, தலையை கொஞ்சம் சரித்து இவளைப்பார்த்து சிரித்தபடி நின்றான். அவ்வளவுதான். வெள்ளியின் கோபம் எல்லாம் தினை தின்னவென கிளிகளோடு பறந்துபோனது.

“பாவி .. வந்துவிட்டாயா … உன்னை என்ன செய்கிறேன் பார்”

அவன் தன் இரு கைகளையும் அகல விரிக்க, ஓடிப்போய் அவன் மார்புகளில் விழுந்தாள் வெள்ளி. ஏன் எது என்ற கேள்வியும் தோன்றாத அணைப்பு அது. இருவருக்கும் ஊடலுறவே தோன்றவில்லை. எதுவுமே பேசாமல் மகன்றில் பறவைகளே நானும் வண்ணம் இறுக்கி அணைத்தபடி இருந்தார்கள். இளையராஜாவும் ரகுமானும் கூட்டாக பின்னணி இசைத்தார்கள்.  இவர்களைப்பார்த்த கிளிக்கூட்டமும் தினைகளை பதம்பார்ப்பதை நிறுத்திவிட்டு மகிழ்ச்சியில் கீச்சிட்டபடி வானிலே சுற்றிப்பறக்க ஆரம்பித்தன.

அவன் மெதுவாக வெள்ளியின் முகத்தை உயர்த்தினான். அதே கண்கள் .. அதே கன்னம்.. அதே நெற்றி .. அதே உதடு …அதே கருமம் பிடித்த லென்ஸ் மூன்றாவது தடவையாக  மீண்டும் அவள் அழகில் ஸ்டக் ஆனது. கோடன் பட்டரி லெவலை கவனித்தான். பச்சை சிக்னல்!

கோடன் உதடுகளை அவளருகே கொண்டுசெல்ல வெள்ளி கண்களை கிறக்கமாக மூடிக்கொண்டாள்.

*************

Wow … It feels so warm

வேளை தெரியாமல் iHome முணுமுணுத்துவிட்டது. கோடனும் வெள்ளியும் அவசர அவசரமாக அணைப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டார்கள். இடம் யாழ்ப்பாணம். அண்ணா கோபி ஷொப்பில் அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை. கோடன் சலிப்போடு சொன்னான்.

“ஷிட் .. நீயா .. வேறு யாரோ என்று நினைத்தேன்”

“Sorry .. did I disturb you guys?”

வெள்ளி கோடனின் மணிக்கூட்டில் கையை வைத்து அழுத்தினாள்.

“Wow .. its so warm”

வெள்ளி மெல்லிய புன்னகையோடு அதனிடம் கூறினாள்.

“உன்னிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தது … கோடனுக்கு நீ கடைசியாக சொன்ன தினைப்புனம் சார்ந்த பாடலை எழுதியது வெள்ளிவீதியார் இல்லை”

I know… அதை எழுதியது கடுவன் மள்ளன்..I just took a gamble!”

கோடன் கோபத்தில் மணிக்கூட்டில் ஒரு தட்டு தட்ட, iHome “Ouch”  என்றது. வெள்ளி கலகலவென சிரித்தாள். அவள் சிரிப்பதை கோடன் கண் வெட்டாமல் பார்த்தான். டைட் டெனிம் ஜீன்ஸ், சிம்பிளான சிவப்பு பூ எம்ப்ரோய்டரி செய்யப்பட்ட டொப், அவ்வப்போது காஷுவலாக தழையவிடும் சுருள் முடி என்று முன்னாலிருக்கும் வெள்ளியை பார்க்க கோடனால் இன்னமும் நம்பமுடியவில்லை. கிள்ளிப்பார்த்துக்கொண்டான். இது நிஜம். இந்த வெள்ளி நிஜம். இந்தக்காதல் நிஜம். காலத்துக்கேற்ப ஆடையும் கோலமும் மாறியிருக்கிறது. அவ்வளவே. ஆனால் அதே கண்கள். அதே கன்னம், அதே அழகு. அதே காதல். அதே குறும்பு. எதுவுமே மாறவில்லை.

கோடன் அவளைப் பார்ப்பதை கவனித்த வெள்ளி, Whats up? என்று தோள்களை குலுக்கியவாறு கேட்டாள். கன்னத்தில் குழி விழுந்தது. அதே! கோடன் கண்களை கொஞ்சம் கீழே இறக்கினாள். சுனைப்பூமாலையால் ஓரளவுக்கு மறைக்க முடிந்ததை எம்ப்ரோய்டரி மட்டீரியரால் மறைக்க இயலவில்லை. திமிறியது. கோடனுக்கு அவனையறியாமலேயே சிரிப்பு வந்துவிட்டது. அவன் பார்த்ததையும் சிரித்ததையும் வெள்ளி கவனித்துவிட்டாள். சங்க இலக்கியப்பெண் கொபி ஷொப்பிளும் வெட்கப்பட்டாள்.

“கோடன், You so bad

கோடன் பதில் சொல்லாமல் மீண்டும் அவளை நெருங்கினான்.

“Jeez, they gonna kiss again!”

“இது இண்டைக்கு எங்களை கிஸ் பண்ண விடப்போவதில்லை, இதற்கு வேறு வழி இருக்கிறது”

கோடனும் வெள்ளியும் ஏகோபித்த குரலில் சொல்லிக்கொண்டே கொன்டக்ட் லென்ஸை எடுத்து அணிந்துகொண்டனர்.

புன்னை சந்தோஷத்தில் இருவரையும் மலர்தூவி வரவேற்றது!

 

*********** முற்றும் ************


அத்தியாயம் 1  

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3     

அத்தியாயம் 4

அத்தியாயம் 5                                                      

 

 

படம் : ashish thakur


32 comments :

  1. எங்களையும் சங்ககாலம் கொண்டு சென்றெ விட்டது அண்ணா ! அருமை !

    ” நான் இன்னும் சங்ககாலத்தில் இருந்து மீண்டு வரவில்லை ”

    ReplyDelete
    Replies
    1. நன்றி .. இதென்ன பெயர் :D

      Delete
  2. மிக மிக அருமை.

    ReplyDelete
  3. First, I thought kodan will close.but the ending is supper.you didn't create another "Mehala " story.

    ReplyDelete
  4. இதுவரையிலான தங்களின் எழுத்துப் படைப்புகளில், இந்தச் சிறுகதைதான் தங்கள் படைப்பின் உச்சம் என்பதாகப் படுகிறது எனக்கு. அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முருகேசன்!

      Delete
    2. I agree with same. please extend it as a novel

      Delete
  5. அன்பின் ஜெயக்குமரன்!,
    இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பின்னிய வண்ணத்தை சொல்வதோ?
    இரு வகைக் காலத்திற்கும் சுற்றுலா கூட்டிச் சென்று கதை மாந்தருடன் உருக வைத்ததை சொல்வதோ?
    சொல்லி வேலையில்லை!
    ஒன்று மட்டும் நிச்சயம் சங்கப்பாடல்களையும், எதிர்காலத்தின் விண்ணாணம்(விஞ்ஞானம்) காட்டும் அதிசயங்களையும் உங்களிடம் விரும்பி,இரசித்துப் படிக்கலாம்.
    இன்னும் வேணும்! இன்னும் வேணும் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி குணபாலன் அண்ணே.

      Delete
  6. வரிகளோட வாழ்ந்திட்டன்.....
    அண்ணா அடுத்தது எப்ப???

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந்த் .. ஒரு சின்ன பிரேக் விட்டு அடுத்தத யோசிப்பம்!

      Delete
  7. ஒரு சிறந்த சினிமா படம் பார்த்த மாதிரி இருக்கிறது...
    கவனமா இருங்க யாராவது கதையைத் திருடி படம் எடுத்தாலும் எடுத்து போடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவசங்கர் :)

      Delete
  8. சொல்லி வேல இல்ல ஐயா.. என்ன ஒரு கிளைமாக்சு.. சீட் நுனில இருந்து வாசிச்சன். பின்னி எடுத்திட்டீங்க..

    ReplyDelete
  9. அண்ணா செமையா இருக்கு

    ReplyDelete
  10. ஒரே மூச்சில் படித்தாயிற்று.. ஏதாவது சொல்ல வேண்டும் போல...ம்ஹும் அனுபவிக்க மட்டும் முடிந்த ஒன்று....அற்புதம் அண்ணா

    ReplyDelete
  11. அருமை அண்ணா...! எங்களையும் கொண்ரக்ட் லென்ஸ் அணிய வைத்து பாத்திரங்களோடு பயணிக்க செய்ய வைத்து விட்டீர்கள்..!

    ReplyDelete
  12. பிரமாதம் அண்ணை... நீங்கள் எழுதினதில உங்கட சிறந்த நாவல் எண்டா இதுதான். Keep writing.
    - Anojan

    ReplyDelete
  13. சிறுவனாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் மொழிபெயர்ப்பில் சில சயின்ஸ் fictions வாசித்திருக்கிறேன். பின்பு சுஜாதா அதன் பின்பு ஆங்கிலத்தில் ஆர்தர் சி கிளாக். உங்களது நடை முற்றிலும் வேறு பட்டதாய் AI , VR , IT , சங்க இலக்கியம் , அரசியல் ( TNA ஜோக் ) எல்லாம் கலந்து எங்களை பரவசப்படுத்தி இருக்கிறீர்கள் . நாடான் கோடான் ஆன கவிதை ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  14. Amazing! We are very proud of your creativity! You deserve more than a comment. Best wishes!

    ReplyDelete
  15. மொழி மறந்துவிட்டது. சொல்ல வார்த்தைகள் இல்லை. ......

    ReplyDelete
  16. Thank god... Just read all parts. I couldn't think about the waiting between two episodes... Excellent work Anna... Velliveethiyar patri ippadi oru writing??? Kana kooda kaana mudiyella...

    ReplyDelete
  17. மிக அருமை ஐந்து அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் முடித்தகியது. எல்லாம் சேர்ந்த ஒரு கலவை I've t recommend it to my son too............. படலையின் ரசிகன் ஆனால் நேரம் போதாமையால் வாசிக்க முடிவதில்லை . ஆனால் வெள்ளி........தாமதிக்க விடவில்லை ஒரே தடவையில் முடிக்க தூண்டும் நடை. மிக்க நன்றி இவ்வாறான படைப்புக்களுக்கு. நான் புரிந்து கொண்ண்டது இக்கலவை நடையில்தான் சங்க இலக்கியமும் சாவில்லாமல் சந்ததி தாண்டி பயணிக்கும். தொடருங்கள்............

    ReplyDelete
  18. காலை எழுந்ததும் பல வேலைகள் யோசித்து வைத்திருந்தேன். வாசிக்க தொடங்கியதும் நிறுத்த முடியவில்லை. ஒரே மூச்சில் 5 அத்தியாயங்களும் வாசித்தாயிற்று. சங்க இலக்கியங்கள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர். விளங்குமோ தெரியேல. இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  19. சங்ககாலத்தில் வாழ்ந்து என் பிறவிப்பயனை கண்டேன் தலைவரே.நானும் அண்ணா லிங் அனுப்பியதும் ஒரே மூச்சாய் அங்கே நானும் கோடானாகி விட்டேன்.அருமை ஜே.கே.
    எனக்கொரு சங்ககாலத்தின் காதலரை தெரியும்..இதை அவருக்கும் பரிந்துரைக்கப்போகிறேன்.

    ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே