Skip to main content

வெற்று முரசு

                                                             
        

அதிகாரம் என்ற சொல் ஆலமரங்களில் ஒட்டுண்ணியாகப் படரும் குருவிச்சைத் தாவரம் போன்றது. அது தான் அடையாகும் மொழியையே தனது விருந்து வழங்கியாக்கி முழுங்கிவிடவல்லது. மொழியின் எந்தச்சொல்லோடும் பொருந்திவர வல்லது.

அதிகாரம் போதை. அதிகாரம் நஞ்சு. அதிகாரம் அகங்காரம். அதிகாரம் மமதை. அதிகாரம் கோபம். அதிகாரம் மடமை. அதிகாரம் மாயை. அதிகாரம் அவசரம். அதிகாரம் அரைவேக்காட்டுத்தனம். அதிகாரம் கவர்ச்சி. அதிகாரம் காமம். அதிகாரம் அடிமைத்தனம். அதிகாரம் வீழ்ச்சி. அதிகாரம் கீழ்மை. அதிகாரம் துஷ்பிரயோகம். அதிகாரம் இறை. அதிகாரம் மையம். அதிகாரம் போலி. அதிகாரம் பண்பாடு. அதிகாரம் இனம். அதிகாரம் மனிதம். அதிகாரம் மொழி.

ஆனால் தனியராக அதிகாரத்தின் அர்த்தம்தான் என்ன?

000

லியோ டோல்ஸ்டாய் எழுதிய வெற்று முரசு (The Empty Drum) என்றொரு சிறுகதை உண்டு.

எமில்ஜாண் ஒரு ஏழைத் தொழிலாளி. ஒருநாள் காலை அவன் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் அழகிய பெண்ணொருத்தியை வழியில் எதிர்கொள்கிறான். தன்னைத் திருமணம் முடிக்குமாறு அப்பெண் எமெல்யானை வேண்டுகிறாள். அவளைப் பிடித்திருந்தாலும் தன் வறுமையை எண்ணித் தயங்கிய எமெல்யானிடம் “கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செய்து, தூங்கும் நேரத்தையும் குறைத்தால் நமக்குத் தேவையான உடையும் உணவும் கிடைக்கும்” என்று அப்பெண் நம்பிக்கையூட்டும்வண்ணம் கூறவும் அவனும் திருமணத்துக்குச் சம்மதிக்கிறான். இருவரும் திருமணம் செய்து, நகரத்துக்குச் சென்று, புறநகர்ப்பகுதியில் சிறு குடிசைபோட்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.

ஒருநாள் அவர்கள் இருந்த புறநகர்ப்பகுதிக்கு அந்நாட்டு மன்னன் நகர்வலம் வருகிறான். வந்தவன் அக்குடிசையில் வாழ்ந்த அப்பெண்ணைக்கண்டு அதிசயப்படுகிறான். “இத்தனை அழகான பெண் நம் நாட்டிலும் உண்டா? போயும் போயும் இப்படி ஒரு ஏழை வீட்டிலா இப்படியொரு அழகி வாழ்வது? நீ அரசியாக அல்லவோ இருக்கவேண்டியவள்” என்று ஆசை வார்த்தைகள் கூறி அரசன் அவளை தன்னோடு அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான். அவளோ தான் விவசாயியோடு நிறைவாக வாழ்வதாகக் கூறி அரசனின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாள்.

அரண்மனை திரும்பிய அரசனுக்கு அன்று முழுதும் தூக்கமே வரவில்லை. எந்நேரமும் அந்தப்பெண் நினைவாகவே இருந்தான். அவளை எப்படித் தன்னுடைய சொந்தமாக்கிக்கொள்வது பற்றியே அவன் சிந்தனை இருந்தது. தன்னுடைய மந்திரிகளை அழைத்து எப்படி அந்தப்பெண்ணைத் தான் அடையமுடியும் என்று அரசன் ஆலோசனை நிகழ்த்தினான். அவர்களும் எமில்ஜாண் அரண்மனையில் வேலை போட்டுக்கொடுக்கலாம் என்றும், அதிக வேலைகொடுத்து அவனைச் சிரமப்படுத்தினால் அது முடியாமல் அவன் வேலைப்பளுவால் இறந்துவிடுவான் என்றும், அதன்பின்னர் அவனுடைய விதவை மனைவியை அரசன் திருமணம் செய்யலாம் என்றும் கூறினார்கள். அரசனும் அவ்வாறே செய்யலாம் என முடிவு செய்தான்.

எமில்ஜானுக்கு அரண்மனையில் வேலை, உடனடியாக வரவும் என்று தகவல் பறந்தது. கூடவே மனைவியையும் அழைத்துவரும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமக்கென்று ஒரு வீடு உள்ளது என்று சொல்லி அவள் அரண்மனைக்கு வருகை தர மறுத்துவிட்டாள். எவ்வளவு வேலை என்றாலும் பரவாயில்லை, மாலையில் நீ வீடு திரும்பிவிடவேண்டும் என்று எமில்ஜானுக்கு மனைவி அன்புடன் கட்டளை போட்டாள்.

அரண்மனையில் எமில்ஜானுக்கு அளவுக்கதிகமான வேலைகளைச் செய்யுமாறு பணித்தார்கள். எவ்வளவு கடினமான வேலை என்றாலும் பொழுது சாய்வதற்குள் அவற்றை முடித்துவிட்டு அவன் வீடு திரும்பிவிடுவான். அவன் அப்படி வீடு திரும்பும்போது, அவன் மனைவி வீட்டை மிக நேர்த்தியாகச் சுத்தம் செய்து, இரவு உணவினைத் தயார் பண்ணிவைத்து, இவனுக்காக காத்துக்கொண்டிருப்பாள். இவன் வேலைச்சுமை பற்றி ஏதும் புறுபுறுத்தால், அவள் நம்பிக்கையோடு சொல்லுவாள்.

“வேலையைப்பற்றிக் கவலையே படாதே. முன்னம் எவ்வளவு வேலைகளை செய்து முடித்தாய் என்று எண்ணிப்பார்க்காதே. இன்னும் இவ்வளவு வேலை இருக்கிறதே என்றும் அங்கலாய்க்காதே, அக்கணம் எந்த வேலையை செய்கிறாயோ, அதில் மட்டும் கவனமாயிரு. என்ன ஆனாலும் மாலை வீடு வந்து சேர்ந்துவிடு, நான் உனக்காய்க் காத்திருப்பேன்”

அவனும் அங்கனமே அடுத்துவரும் நாள்களைக் கழித்தான். அரண்மனையில் தினமும் அவனுக்கு மேலும் மேலும் வேலைகளை ஏற்றினார்கள். அவனோ எல்லாவற்றையும் முடித்துவிட்டு பொழுதுசாய்வதற்குள் வீடு திரும்பிவிடுவான். அவர்கள் அவனுக்குத் துறைசார்ந்த, திறன் தேவையான பல வேலைகளைக் கொடுத்தாலும் அவன் அவற்றை உடனடியாகப் பழகி செய்தும் முடித்தான். அரசனுக்கு இதனைப்பார்த்து மந்திரிகள் மீது கோபம் கோபமாக வந்தது. செய்துமுடிக்கவே இயலாத கடினமான ஒரு வேலையை எமில்ஜானுக்குக் கொடுக்குமாறு அரசன் பணித்தான். அவர்களும் யோசித்துவிட்டு எமில்ஜானை அழைத்து “அடுத்தநாள் பொழுது சாய்வதற்கு முன்னம் நகர மத்தியில் ஒரு அழகிய தேவாலயத்தை நிர்மாணிக்கவேண்டும், இல்லாவிட்டால் அவன் தலை துண்டாடப்படும்” என்று கூறினார்கள்.

எமில்ஜானுக்கு இவையெல்லாமே தன்னைக்கொல்வதற்கான சதி என்று தெரிந்துவிட்டது. அன்றிரவு வீட்டுக்குப்போனதும் மனைவியிடம் “நாமிருவரும் இரவோடு இரவாக வீட்டைவிட்டு ஓடிவிடலாம்” என்று கூறினான். அவளோ மறுத்தாள். அவர்கள் எங்கு ஓடினாலும் அரசனின் படைவீரர்கள் எப்படியும் தேடிக்கண்டுபிடித்துவிடுவார்கள். பேசாமல் சொன்னபடி தேவாலயத்தைக் கட்டிக்கொடுத்துவிடு என்கிறாள். எப்படி ஒரே நாளில் தேவாலயத்தைக் கட்டி முடிப்பது என்று கேட்க, “எல்லாம் முடியும், இப்போது சாப்பிட்டுவிட்டுத் தூங்கு, வேலையை அதிகாலையில் ஆரம்பித்தால் பொழுது சாய்வதற்குள் முடித்துவிடலாம்” என்று கூறியது மாத்திரமல்லாமல் அடுத்தநாள் பொழுது விடியுமுன்னமேயே அவனை எழுப்பிக், கையில் சுத்தியல் ஆணி கொடுத்து அனுப்பியும் வைத்தாள்.

அதிகாலையில் நம்பிக்கையில்லாமல் நகர மத்திக்கு வந்த எமில்ஜான் அங்கே ஏற்கனவே கட்டி முடிக்கும் நிலையில் ஒரு தேவாலயம் இருந்ததைக் கண்ணுற்று அதன் மீதமுள்ள வேலைகளைச் செய்துமுடிக்கலானான். மாலைக்குள் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதைப்பார்த்த அரசன், அடுத்தநாள் அரண்மனையைச் சுற்றி ஒரு ஆற்றினை உருவாக்குமாறு இன்னொரு உத்தரவு போட்டான். முன்னம் இடம்பெற்றதுபோலவே இந்தத்தடவையும் அதிகாலை வேலைக்கு வரும்போது எமில்ஜானுக்கு ஆறு தயாராக இருந்தது. கப்பல்கள்கூட ஓடிக்கொண்டிருந்தன. சிறு மண்கும்பியை கிண்டி அகற்றிவிடுவதுதான் அவன் வேலையாக இருந்தது. ஆற்று வேலை அந்தி சாய்வதற்குள் முடிந்துவிட்டது.

கடின வேலைகள் கொடுத்து எமில்ஜானைக் கொல்லமுடியாது என்று தெரிந்ததும் அரசனும் மந்திரிகளும் புத்தியை வேறுவிதமாகத் தீட்டினார்கள். அரசன் எமில்ஜானை அழைத்து “எவ்விடம் என்று சொல்லமாட்டேன், எப்பொருள் என்றும் சொல்லமாட்டேன், ஆனால் நீ அவ்விடம் சென்று அந்தப்பொருளைக் கொண்டுவரவேண்டும், அந்தப்பொருளைக் கொண்டுவராவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்கிறான். “அவன் எங்கு சென்று வந்தாலும் அவ்விடமல்ல, எப்பொருளைக் கொண்டுவந்தாலும் அதுவல்ல தான் நினைத்தது” என்று சொல்லி எமில்ஜானைக் கொன்றுவிடலாம் என்பதுதான் அவர்களின் திட்டம். இதை அறிந்த எமில்ஜானின் மனைவி, தொலைதூரத்தில் வாழ்கின்ற மூதாட்டி ஒருவரே இச்சிக்கலுக்கு வழி சொல்லக்கூடியவர் என்று சொல்லி அவனை அங்கே அனுப்பி வைக்கிறாள். எமில்ஜானும் புறப்பட்டுப் போகிறான்.

போகும்வழியில் எமில்ஜான் படைவீரர்கள் சிலரைக்கண்டு தன்னுடைய பிரச்சனையைக் கூறுகிறான். அவர்களோ தாமும் எங்கென்று தெரியாமலேயே, எதை அடைகிறோம் என்று அறியாமலேயே இத்தனைகாலமும் போரிட்டுவருவதாகக் கூறி தம்மால் எமெல்யானுக்கு உதவமுடியாது என்று கைவிரிக்கிறார்கள். எமில்ஜான் பயணத்தை மேலும் தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் சென்றடைகிறான். அம்மூதாட்டி எந்நேரமும் அழுதுகொண்டே இருந்தார். நூல் நூற்கும்போது விரல்களை ஈரமாக்க வாயில் வைக்காமல் கண்ணீரிலேயே வைத்து எடுத்தார். விசாரித்ததில் அந்தப்படைவீரர்கள் சிலரின் தாயும் அவரே என்று தெரியவந்தது. எமில்ஜான் தனக்கு நிகழ்ந்தது எல்லாவற்றையும் கூறி அரசன் தன்மீது சாத்தியமில்லாத சுமைகளை ஏற்றுகிறான் என்றான். இதைக்கேட்ட மூதாட்டியும் அழுகையை நிறுத்திவிட்டு “எல்லாவற்றையும் முடிவுகட்டும் வேளை வந்துவிட்டது” என்று சொல்லி எமில்ஜானிடம் ஒரு நூல் உருண்டையைக் கையில் கொடுக்கிறார். “இதை உருட்டிக்கொண்டே செல். இது போய் முடிவடையும் இடத்தில் ஒரு கடலோர நகரம் இருக்கும். நகரத்தின் எல்லையில் உள்ள வீட்டில் இரவு தங்கு. அடுத்தநாள் நீ எதைத்தேடுகிறாயோ அது கிடைக்கும்.” என்கிறார். “அதைப்பார்த்தவுடன் நான் தேடிவந்த பொருள் அதுதான் என்று எப்படி கண்டறிவது?” என்று இவன் கேட்கிறான். அதற்கு மூதாட்டி இப்படிச் சொல்கிறாள்.

“பெற்ற தாய் தந்தையைவிட எதற்கு மனிதர்கள் அதிகம் மதிப்புக் கொடுக்கிறார்களோ அதனை எடுத்துக்கொண்டு அரசனிடம் செல்லு. அதனைப்பார்த்ததும் அரசன் தான் தேடிய பொருள் அது இல்லை என்பான். அப்படியென்றால் அதனை உடைத்து எறிந்துவிடலாம் என்று கூறி, நீ அதை அடித்துக்கொண்டே ஆற்றங்கரைக்குச் செல்லு. அதனை துண்டு துண்டாக உடைத்து ஆற்றில் போட்டுவிடு. இப்படிச் செய்தாயேயானால் உன் பிரச்சனைகள் எல்லாமே தீர்ந்துவிடும்”

எமில்ஜானும் நூல் பந்தை உருட்டிவிட்டு பின்னாலே நடக்கலானான். கடலோர நகரத்தை அடைந்து அன்றிரவு எல்லையில் ஒரு வீட்டில் தங்குகிறான். அடுத்தநாள் காலை அந்த வீட்டின் வயோதிபர் தன் மகனை எழுப்பிக் காட்டில் விறகு பொறுக்கிவருமாறு பணிக்கிறார். மகனோ முடியாது என்று சொல்லி, புறுபுறுத்தபடி தொடர்ந்து தூங்கலானான். சற்று நேரத்தில் நகரவீதியில் பெரும் ஓசை எழுந்தது. உடனேயே அந்த மகன் விருட்டென்று என்று எழுந்து வீதிக்கு ஓடினான். பெற்றோர் சொன்னதையும் கேளாமல் தூங்கியவன் வீதியில் எழும் ஓசைக்குப் பின்னே ஓடுகிறான் என்றதும் துணுக்குற்ற எமெல்யான் அவனைப் பின் தொடர்ந்தான். தெருவில் ஒருவன் வயிற்றோடு ஒரு பொருளைக்கட்டி இரண்டு குச்சிகளால் ஓங்கி ஓங்கி அடித்தவாறு சென்றான். அந்தச்சத்தம்தான் இடியோசைபோல ஊரெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டு மகனும் அந்த ஓசைக்கு மயங்கியே பின்னாலே ஓடுகிறான் என்றறிந்த எமில்ஜான் , தானும் பின்னாலே தொடர்ந்து ஓடினான். அது என்ன பொருள் என்று விசாரிக்க, சூழவிருந்தவர்கள் முரசு என்றார்கள். அந்த முரசுக்குள்ளே என்ன உள்ளது என்று கேட்கையில், “ஒன்றுமில்லை, உள்ளே வெறும் வெற்றுத்தான்” என்கிறார்கள்.

பின்னாலேயே தொடர்ந்து, அந்த முரசு ஒலிப்பவன் அசந்து தூங்கிய சமயத்தில், எமில்ஜான் அதனை எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பி ஓடிவந்தான். “எவ்விடம் என்று தெரியாத அவ்விடத்துக்குச் சென்று, எப்பொருள் என்று அறியாத அப்பொருளைக் கொண்டுவந்துள்ளேன்” என்று அரசனுக்கு செய்தி அனுப்புகிறான். அரசனும் வந்து அந்த வெற்று முரசைப் பார்த்துவிட்டு “இதுவல்ல நான் சொன்ன அந்தப்பொருள்” என்கிறான். உடனே எமில்ஜான் “அப்படியானால் இதனை அடித்து உடைத்து ஆற்றில் போட்டுவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டு சத்தமாக அந்த முரசை முழங்கியபடி ஆற்றங்கரைக்குச் செல்கிறான். முரசுச் சத்தத்தைக் கேட்ட அந்த நாட்டு படைவீரர்களும் மக்களும்கூட எமில்ஜானுக்குப் பின்னாலே செல்லத் தலைப்படுகின்றனர். அச்சமுற்ற அரசன் எமில்ஜானிடம், அவன் மனைவியைத் தான் இனித்தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவதாகவும் தயவுசெய்து அந்த முரசை கொடுக்குமாறும் இறைஞ்சுகிறான். அதனை மறுத்த எமில்ஜான் முரசை அடித்து நொறுக்கி ஆற்றில் போட்டுவிடுகிறான். இதைப்பார்த்த படைவீரர்களும் மக்களும் சிதறுண்டு தத்தமது பாதையில் கலைந்து சென்றுவிடுகிறார்கள். அன்றிலிருந்து அரசன் எமில்ஜானுக்கும் அவன் மனைவிக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டான்.

000

இந்த “வெற்று முரசு” என்ற சிறுகதை டோல்ஸ்டோய் எழுதியதென்றாலும்கூட இதன் மூலக்கதை வொல்கா பிராந்தியத்தில் நாட்டார் வழக்காகச் சொல்லப்பட்டுவந்ததொன்று என்கிறார்கள். அதிகாரத்துக்கெதிரான மக்கள் புரட்சி என்பது ஒன்றும் இந்த நூற்றாண்டு எழுச்சி அல்ல. அது மனித நாகரிகம் உருவாகிய நாள்தொட்டு உள்ள ஒருவிடயம்தான். எப்போது மனித நாகரிகத்தில் அதிகாரத்தின் கொடுங்கோன்மை தலையெடுத்ததோ அப்போதே அதிகாரத்துக்கெதிரான மக்கள் உணர்வும் உருவாகியிருக்கவே செய்யும். அந்த மக்கள் உணர்வு எப்படி எழுச்சியடைந்து புரட்சி வடிவமாகி அதிகாரத்தை கவிழ்க்கும் என்பதற்கான பாடமூலம்தான் இந்த “வெற்று முரசு” என்ற சிறுகதை.

இந்த வெற்று முரசு என்ற சிறுகதையின் அரசன் மக்களை மறந்தவன். மக்களுக்கும் அரசுக்கும் தேவையான விடயங்களை கவனிக்கத் தவறுபவன். நாட்டுக்குத் தேவையான ஆற்று நிர்மாணம், மக்களின் மத நம்பிக்கைக்குப் பாத்திரமான தேவாலயங்கள் என்று எதனையும் கவனிக்காமல் காமத்துக்கும் தனிமனித இச்சைக்கும் அடிமையாகிக் கிடப்பவன். தன்னுடைய நலனுக்காக ஏன், எதற்கு என்றுகூட விளக்கம் கொடுக்காமல் படைவீரர்களை யுத்தத்துக்கு அனுப்பிக்கொண்டிருப்பவன். அப்படியான படைவீரர்களின் குடும்பங்களை அவனுடைய அரசு கவனிப்பதே இல்லை. இப்படி ஒரு கொடுங்கோல் அரசுக்கேயுரிய இலக்கணத்தோடு அந்த ஆட்சியை அந்த அரசன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறான்.

சாதாரண மக்களின் வாழ்க்கை இயல்பானது. யானைகளின் சச்சரவுக்கு மத்தியிலும் சிறு எறும்புகள் தம்பாட்டுக்கு உணவு சுமந்து புற்றுக்கு அலைவதுபோல, இங்கேயும் மனிதர்கள் தம் தொழில், காதல், குடும்பம் என்று எளிமையாக வாழ்கிறார்கள். என்றைக்கு ஒருநாள் அவர்கள் வீட்டுக்கதவை அதிகாரம் தட்டுகிறதோ, என்றைக்கு அதிகாரத்தின் அசுரக்கரங்கள் அவர்கள் அந்தரங்கத்தைத் தொடுகிறதோ அன்றைக்கே அவர்களின் சமநிலை குழம்புகிறது. அப்போதும்கூட சச்சரவில்லாத கீழ்ப்படிதலுக்கே அவர்கள் உடன்பட முனைவார்கள். எதிர்ப்புக்குரல்கள் எளிதில் அவர்களிடமிருந்து வருவதில்லை. அதிகாரத்தோடு முரண்படும் துணிச்சலும் விவேகமும் பலமும் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே இருப்பதில்லை. எமெல்யானுக்கும் சரி, அவன் மனைவிக்கும் சரி, அந்த நாட்டு படைவீரர்களுக்கும் சரி, அந்த மூதாட்டிக்கும் சரி, அதிகாரத்தின் மீது விசனம் இருந்தாலும் அதனை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவேயில்லை.

ஆனால் அதிகாரம் தன் இரும்புப்பிடியை பேராசையில் மேலும் மேலும் இறுக்கிக்கொண்டே செல்லும். அந்த கொடும் பிடியின் இறுக்கத்தை தாங்கமுடியாமல் ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் அதற்கெதிராக ஒருங்கிணைவர். வரலாற்றில் புரட்சியாளர்கள் ஒருபோதும் புலிக்கூட்டத்திலிருந்தும் சிங்கக்கூட்டத்திலிருந்தும் உருவாகியிருக்கமாட்டார்கள். மாற்றாக அவர்கள் செம்மறிக்கூட்டத்திலிருந்தும் பசுக்கூட்டதிலிருந்துமே உருவாகிறார்கள். தம்முடைய இடையர்களின் அதிகாரப்பிடியிலிருந்து வெளியேறவே அவர்கள் வெளிக்கிளம்புகிறார்கள். அப்படிக்கிளம்பும்போது அவர்களுக்கென்று ஒரு தத்துவ ஆலோசகர், ஒரு தொடர்பாளர், ஒரு மீட்பர், அவர் வழி பின்பற்றும் படையணி என்று புரட்சிக்கு ஆதாரமான பாத்திரங்கள் எல்லாமே தானாகவே உருவாகும்.

“வெற்று முரசு” சிறுகதையிலும் அதுவே இடம்பெறுகிறது. சாதாரண எமில்ஜான் ஒரு புரட்சிக்கே இறுதியில் தலைமை வகுத்தது அதிகாரத்தின் கொடும்பிடி காரணமாகத்தான். எல்லோருமே அந்த ஒரு கணத்துக்காகக் காத்திருந்தார்கள். ஏன் எதற்கு என்று தெரியாமல் காடு மலை எல்லாம் அலைந்து திரிந்த படைவீரர்கள், தன் பிள்ளை எங்கு போனானோ என்று தெரியாமல் சதா அழுதுகொண்டிருந்த ஒரு வயோதிப மூதாட்டி, ஊர் மக்கள், எமில்ஜானின் மனைவி எனப் பாதிக்கப்படும் எல்லோருமே ஒரு மீட்பருக்காகக் காத்துக்கிடந்தார்கள். முரண்நகையாக அந்த மீட்பரை அதிகாரமே இனங்காட்டிவிடுகிறது. எமில்ஜானுக்கு தேவாலயமும் ஆற்றுப்படுக்கையும் கட்டிக்கொடுத்ததை இயற்கையின் துணை என்றுகூடக் கொள்ளலாம். மீட்பர் என்று முடிவாகிவிட்டால் அப்புறம் இயற்கையே அவருக்கு உறுதுணையாகிவிடவேண்டும் அல்லவா! வசுதேவருக்கும் கண்ணனுக்கும் யமுனையாறு வழிவிட்டதுபோல. இது ஒருவிதத்தில் டோல்ஸ்தாயின் புரட்சிக்கான தூண்டுதல்தான். “புரட்சி உங்களை அழைக்கிறது” என்கின்ற ஒருவித மதபோதனையாகக்கூட இதனைப்பார்க்கலாம். அதுவும் ஒரு ஏழை விவசாயியை புரட்சியின் தூதர் ஆக்கி அவருக்கு இயற்கையின் சகல உதவிகளையும் அளித்தது என்பது மத்தியூவின் “ஒரு செல்வந்தன் கடவுளின் சொர்க்கத்துக்குள் நுழைவதைவிட ஒரு ஒட்டகம் ஊசித்துளைக்குள் நுழைவது இலகுவானது” என்ற வாக்கியத்தின் வழி வந்ததொன்றாகும். ஏழைகளே கடவுளை அடையும் பாக்கியசாலிகள் என்பது டோல்ஸ்டாயின் ஆதார நம்பிக்கையாகும். டோல்ஸ்டாயின் பைபிள் என்றுகூட பைபிள் வடிவங்கள் பல இருக்கின்றன.

புரட்சி என்பது எப்போதுமே வன்முறையால் கட்டமைக்கப்படவேண்டியதல்ல. அது அகிம்சையால்கூட அடையப்படக்கூடியது என்ற சிந்தனையை விதைத்தவர்களுள் டோல்ஸ்டாய் முக்கியமான ஆரம்பகர்த்தா. அவருடைய “The Kingdom of God is Within You” போன்ற நூல்கள் காந்தி, மண்டேலா போன்றவர்களின் ஒத்துழையாமை போராட்டங்களுக்கான ஆரம்ப விதையை விதைத்தது எனலாம். தென் ஆபிரிக்காவின் காந்தி ஆசிரமம் ஒன்றுக்கு டோல்ஸ்டாய் கொலனி என்று பெயர்கூட இருக்கிறது.


“வெற்று முரசு” சிறுகதையின் அதிகார மையம் என்பது வெறும் மாயைகளால் கட்டமைக்கப்பட்டது. அரசு என்பதும் அரசக்கட்டமைப்பு என்பதும் மாபெரும் அதிகார மையங்கள் என்பது காலம் காலமாகக் குடிமக்களுக்கு ஊட்டப்பட்டு வந்த ஒன்று. அதிகாரத்தைக் கேள்விகேட்க முடியாது என்பதும் அதன்வழி வந்த மரபுதான். ஆனால் அதிகாரம் என்பது வேறு ஒன்றுமேயில்லை. அது கவர்ச்சியாக ஒலி எழுப்பி மக்களைக் கவரக்கூடிய, உள்ளே ஒன்றுமில்லாத வெறும் தோற்கருவி மட்டுமே. அதை யார் அடிக்கிறார்களோ அதன் பின்னால் மக்கள்கூட்டம் செல்லும். அதனை யார் அடிக்கிறார்களோ அவர்களிடமே அதிகாரமும் போய்ச்சேரும். அதனை உடைத்துப்போட்டுவிட்டால், அதன் வெற்று ஒலி நின்றுபோனால், அதிகாரமும் காணாமல் போய்விடும்.

மொழியின் அடையோடும் ஓட்டிவாழக்கூடிய அதிகாரம் என்ற சொல்லிற்கு மிகப்பொருந்திவரும் அடை.

அதிகாரம் வெற்று முரசு. 

-- இக்கட்டுரை நடு இதழில் வெளியானது

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக