சந்திரா என்றொருத்தி இருந்தாள்நீண்ட நாவலின் இறுதிப்பக்கங்கள் நகர மறுக்கின்றன. இதுவரை எழுதிய வார்த்தைகள் எல்லாம் புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்று விளக்குக்குமிழியில் முட்டிமோதிக்கொள்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்துவதா? அல்லது நாவலை எழுதி முடித்துவிடுவதா? என் செய்வேன்?

கதைகளைச் சொல்லாமல் விட்டால் என்ன என்று எக்கணம் தோன்றுகின்றது. இது ஒரு அபாயகரமான சமிக்ஞை என்று தெரியும். ஆனாலும் நான் இதுவரை சொல்லாத கதைகளே என் சிறந்த கதைகள் என்று தோன்றுகின்றது. சொல்லியபின்னர் பருவமெய்திய பறவைகள்போல கதைகள் என்னை விட்டுப் பிரிந்துபோகின்றன. அவை திரும்பி வருவதேயில்லை. அவ்வப்போது கடந்து செல்கையிலும் ஒரு வழிப்போக்கர்போலக்கூட அவை என்னை இனம்கண்டு சிரித்துவைப்பதில்லை. கதைகளை எழுதாமல் இனி நம்மோடேயே கூட வைத்திருக்கலாம் என்று சந்திராவிடம் சொன்னேன். அவளும் அது சரியே என்று ஒப்புக்கொண்டாள்.

“வாழ்க்கையை நீ எப்படி எழுதுவாய்? உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்?” என்று ஒருநாள் அம்மா கேட்டார். "அப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" என்று திருப்பிக் கேட்டேன். அம்மா எதுவுமே பேசவில்லை.

அம்மாவும் அப்பாவும் பிரியும்போது எனக்கு பதினோரு வயது இருக்கும். இனிமேல் அப்பா வீட்டுக்கு வரமாட்டார் என்று என் தலையைத் தடவிவிட்டவாறே அம்மா சொல்லியது இன்னமும் ஞாபகம் உள்ளது. ஏன் என்று நானும் கேட்கவில்லை. அம்மாவும் சொல்லவில்லை. அன்று பகல் முழுதும் நான் அம்மாவுடனேயே இருந்தேன். அம்மாவின் மடியில் குந்தியிருந்து சித்திரக்கதைகள் படித்தேன். அம்மாவும் ஏதோ படித்தார். அடிக்கடி புத்தகத்தை மூடிவைத்து அழுதபடியிருந்தார்.

புத்தகங்களை வாசித்து அழும் பழக்கம் எனக்கு அம்மாவிடம் இருந்தே தொற்றியிருக்கவேண்டும்.

வசந்தகாலத்தின் முதற்பகலை வெயில் எரித்தது. கிளைகளை மாத்திரமே கொண்ட மரங்களிலிருந்து இலைகளை முந்திக்கொண்டு பூக்கள் வெளிவரத்தொடங்கின. இரண்டே நாளில் மழை கொட்ட ஆரம்பித்தது. அடுத்தநாள் மழை வடிந்தபின் பூக்கள் எல்லாம் தெருவில் சிதறிக்கிடந்தன. என் சப்பாத்துக்கடியிலும் ஒரு பூ நசுங்கிக் கிடந்தது. இத்தனை பருவங்களும் காத்துக்கிடந்து, மொட்டுவிட்டு, அடுத்தநாளே என் சப்பாத்துக்கடியில் சிக்குப்பட்டதன் தாற்பரியந்தான் என்னவோ? குளிர் மீண்டும் பரவலாயிற்று. உதறல் எடுத்தது. மரத்தில் ஓரிரு பூக்கள் இன்னமும் எஞ்சியிருந்தன. எனக்குச் சந்திராவின் ஞாபகம் வந்தது.

எதுவுமே அவை எழுதப்படும்வரையிலும் எனக்கு நிஜமில்லை. மரணங்கூட. நான் கடைசியாக அழுதது சந்திராவின் மரணத்தின்போது. 

நான் சந்திராவின் கன்னங்களை வருடினேன். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கொடுகளை வரைந்தன. அவளுடைய தலையைத் தூக்கி மடியில் கிடத்தினேன். “என்னையுங் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே”. அவளின் கழுத்தில் தலை புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டேயிருந்தேன். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின. 

“அம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும், அவர்தானே உன்னைத் தனியராகத் தாங்கி இப்படி வளர்த்துவிட்டவர், அம்மாவின் மரணத்தைப் பற்றி ஏன் எழுதவில்லை?” என்று எல்லோரும் கேட்டார்கள். இதுதான் காரணம். அழுதுவிடுவேன். அம்மா வாசிக்கும்போது மாத்திரம் அழுவார். நான் எழுதும்போதே அழுதுவிடுவேன்.

பட்டமளிப்புவிழாவின்போது அப்பாவைச் சந்தித்ததை நான் அம்மாவிடம் கூறவில்லை. “உனக்கு என்ன பிடிக்கும், வாங்கித்தருகிறேன்” என்று அப்பா கேட்டார். “ஒரு பறவைகள் சரணாலயம் வேண்டும்” என்றேன். அப்பா என்னை விசித்திரமாகவே பார்த்தார். “நீயும் புத்தகங்கள் வாசிக்கிறாயா? அம்மாவைப்போல கெட்டுப்போய்விடாதே. புத்தகங்களை எந்நேரமும் வாசித்து நிஜ நண்பர்களை இழந்துவிடாதே” என்றார். “எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு” என்றேன். “ஒருவரைச் சொல்லு” என்று அவர் கேட்டார். நான் “பலீனா” என்றேன். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அவள் என்னை ஒரு புழுவிலும் கேவலமாக, அடிமை வீட்டு அடிமையென நடத்துகையில் என் உள்ளம் பூரிக்கிறது என்றேன். அப்பா கோபத்துடன் சென்றுவிட்டார். எனக்கும் கோபம். அன்றிரவே அப்பாவைப்பற்றி ஒரு கதை எழுதினேன். அப்பா கதையாக விரிந்து வானத்தில் கூழைக்கடாப்போலப் பறந்து ஐரோப்பா திரும்பியதைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

அப்பா சொன்னது என்னவோ உண்மைதான். நான் இன்னமும் இவ்விடந்தான் இருக்கிறேனா என்று எவரும் அறிவரோ அறியேன். புத்தகங்கள் என்னைக் கைவிட்டுவிட்டன. என் நண்பர்கள் எவரும் தங்கவில்லை. பலீனா விரைவிலேயே ஒரு ரூசியப்பிரபுவைத் திருமணம் முடித்துக்கொண்டாள்.

“உனக்கு எல்லாமே புத்தகங்கள்தானா?” என்று சந்திரா கேட்டாள். “புத்தகங்களில் இல்லாதது என்று ஒன்றில்லை” என்றேன். “மூடிவைத்துவிட்டுப் பார், தெரியும்” என்றாள். 

சந்திராவைப் பார்க்கும்போதெல்லாம் மனம் சஞ்சலமடைகிறது. இவள் எனக்கு முன்னமேயே இறந்துவிட்டால் என்னிலை என்னாகும் என்று கவலை பிறக்கிறது. எனக்குப்பின்னேயே இவள் என்றால் இவள் நிலை என்னாகும்?

திரவுபதி துகிலுரியப்படுகையில் அருச்சுனனின் மனநிலையை எண்ணிப்பார்க்கிறேன். இதற்காகவா சுயம்வரத்தில் வென்றேன்? இதற்காகவா இவள்மீது மையல் கொண்டேன்? இவளை நான் உண்மையிலேயே காதல் புரிகிறேனா? ஒரு கையாலாகாத அண்ணனுக்காகக் கட்டிய மனைவியை எவனும் காவு கொடுப்பானா? என் தோள்கள் என்னைவிட்டுப் பிரிந்துசென்று துச்சாதனனை மோதித்தள்ளாதா? என் கைகள் அவள் கரங்கள் பற்றி யாருமேயில்லாத குருசேத்திரத்திடலுக்கு இப்போதே ஓடிச்செல்லாதா? உதிட்டிரன்மீது கோபம் பொத்துக்கொண்டுவந்தது. தானே காதலித்து, சுயம்வரத்தில் வென்று அவளைத் திருமணம் முடித்திருந்தால் அவன் இப்படி கட்டிய மனைவியை பணயம் வைப்பானா? தன் மனைவியை பணயம் வைக்கையில் தம்பி மனைவிதானே என்று எண்ணினானோ? என்னைப்போல ஒரு ஏமாளி ஏழுலகத்திலும் இருக்கமுடியுமா? என் கால்கள் என் அண்ணனின் மார்பில் உதைந்து அவனைப் பிய்த்து எறியாதா? எது தடுக்கின்றது? ஏன் என் உடலும் என்னைப்போலவே வாளாவிருக்கின்றது? எப்போதிருந்து பாவியானேன்? அல்லது எப்போதுமே நான் பாவியேதானா?

என் பயணங்கள் மரங்களுக்குப் பிடிப்பதில்லை. நான் செல்கையில் சாலையோர மரங்கள் அனைத்தும் எதிர்த்திசை நோக்கியே செல்கின்றன. என் பக்கத்து இருக்கை எந்நேரமும் காலியாகவே இருக்கிறது. சந்திரா ஏன் என்னோடு கூடவரவில்லை?

தூங்கலாம்தான். ஆனால் தூங்கினால் கனவு வருகிறது. கனவில் வாழ்க்கை இனிக்கிறது. அந்த வாழ்க்கைக்காக உழைக்கவும் தொலைக்கவும் வேண்டியிருக்கிறது. கனவின் கொடும்பாரம் நெஞ்சை அழுத்துகிறது. தூங்கமுடியவில்லை. மகிழ்ச்சியான கனவுகள் கொடுமையானவை.

நேரத்தை எப்போதிருந்து தொலைக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. வேலைப்பளு என்றைக்குக் கனக்க ஆரம்பித்தது என்றும் ஞாபகமில்லை. நட்சத்திரங்கள் இன்னமும் கண் சிமிட்டுகின்றனவா? யாராவது ரசிக்கிறீர்களா? அவ்வப்போது தட்டிச் சொல்லுங்களேன்.

ஒரு ஞாயிறு அதிகாலைப்பொழுதில் கண்விழித்தபோது அலுவலக மேசை முன்னிருந்தேன். அன்றே வேலையைத் துறந்துவிட்டேன்.

வார்த்தையில் வடிக்கமுடியாதது என்று ஒன்று உள்ளதா என்ன? எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்?

பிறந்தவுடனேயே அவனைக் கையிலேந்தினேன். கட்குழிகள் இன்றி. கைகள் சோகையாய். சுவாசிக்கச் சிரமப்பட்டபடி அவனிருந்தான். உடல் முழுதும் நடுங்கியது. பிறந்தவுடனேயே அவன் பறக்கத் தயாராயிருந்தான். ஆனால் அவனுக்கு இறக்கைகள் முளைத்திருக்கவில்லை. சந்திரா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். நான் செய்த காரியத்துக்காக அவள் என்னை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

மெல்லியநீலத்தில் சிறுகோடு வரைந்த சட்டையினையே நான் அதிகமாக அணிகிறேன். எத்தனை புதுச் சட்டைகள் வாங்கினும் இதுவே என்னுடைய முதன்மைத் தெரிவாயிருக்கின்றது. இதுவே என்னுடலுடன் ஒட்டி அளவாகத் தெரிகின்றது. அழுக்காயிருந்தாலும் இதனையே மனம் நாடுகிறது. சிறு கந்தல் விழுந்தும் எனக்கு அதனை விட்டுவிட மனமில்லை. ஒருநாள் சந்திரா அதை எடுத்து ஒளித்துவைத்துவிட்டாள். 

நான் கோபப்படுவேன் என்று சந்திரா நினைத்தாளோ என்னவோ. சட்டை எங்கே போனது என்று கத்துவேன் என்று அவள் நினைத்திருக்கலாம். நான் சட்டையே பண்ணவில்லை. மெல்லிய ஊதாவில் வெள்ளைக்கோடு வரைந்த இன்னொரு சட்டையும் எனக்கு நன்றாகவே பொருந்தியது. முன்னொருபோதுமில்லாவண்ணம் அச்சட்டை அச்சொட்டாகப் பொருந்தியது. நிறையச் சட்டைகள் நமக்கென நெய்யப்பட்டு காத்திருக்கின்றன. நாம்தான் அவற்றை அணிவதில்லை.

என் மொழியையும் சந்திராதான் ஒளித்துவைத்திருப்பாள் என்று உணர்கிறேன். ஆனால் அவள்மீது எனக்கு கோபம் இல்லை. என் மொழி கந்தலாகிவிட்டது. மெல்லிய ஊதாவில் வெள்ளைக்கோடு வரைந்த புதுமொழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நாவலை எப்படி முடிப்பேன் நன்னெஞ்சே?

என் ரயில் பெட்டிக்குள் நிறையக் கதைப்புத்தகங்கள். ஒருத்தி அழுதபடி உடகார்ந்திருந்தாள். பறவைகள் வானில் பறந்துகொண்டிருக்கையில் அழுவதுண்டா? பறவைகளின் சோகந்தான் மழையாய்ப்பொழிவதுண்டா?

ஏன் தேடவேண்டும்? அறிவை வளர்க்கவேண்டும்? மற்றவர்க்கு உதவவேண்டும்? நல்லவராய் இருத்தல் வேண்டும்? ஒரு ரூபாய் போதாதா? விழுந்தால் ஒலி கேட்காதா?

குளிர்கிறது. ஒரு போர்வை போதும். வேண்டுமானால் புத்தகம் வாசிக்கலாம். சிரிக்கலாம். அழ விருப்பமில்லை எனில் மூடி வைத்துவிடலாம். எதற்கு நிஜத்தில் வாழ்ந்து கழிக்கவேண்டும்?

பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்.

நான் செல்லவிருந்த ஆகாய விமானம் வெடித்துச் சிதறுவதைக் கண்டேன். பயணப் பொதிகள் வானில் மின்னிடக் கண்டேன். கரடிப்பொம்மை ஒன்று கருகிய நிலையில் என்னருகில் வந்து விழுந்தது. அது விமானத்தில் இருந்த குழந்தையுடையதா? பெண்ணுடையதா? அல்லது யாருக்கேனும் பரிசாகப் பயணித்ததா? 

பொம்மையை உடனேயே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன். சந்திரா வந்தால் அவன் எங்கே என்று கேட்பாள். சந்திராவுக்குத் தெரியவேண்டாம்.

சந்திராவின் அருகாமை இல்லாமல் கதைகளைத் தனியே சுமப்பது இப்போதெல்லாம் கனக்கிறது. பட்டென்று போட்டுவிடவும் மனமில்லை. கட்குழிகள் இன்றி. கைகள் சோகையாய். சுவாசிக்கச் சிரமப்பட்டு. கதைகள் பறக்க ஆசைப்பட்டாலும் அவற்றுக்கு வலு இல்லை. நடுவழியில் கழுகுக்கு இரையாகிவிடும். கதைகள் என் வயிற்றினுள்ளேயே இருக்கட்டும்.

நூலகத்துக்குச் சென்றிருந்தபோது யாருமே இருக்கவில்லை. ஹெமிங்வேயை தூக்கிக்கொண்டு தரையிலேயே உட்கார்ந்தேன். சுற்றிவர புத்தக அலுமாரிகள். பறவைகள் கீச்சுகீச்சு என்று கூடுகளுக்குள் உட்கார்ந்திருந்து கத்திக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் யார் யாரெல்லாம் வாசித்திருப்பார்கள்? எங்கிருந்தபடி வாசித்திருப்பார்கள்? கட்டில், வரவேற்பறை, ரயில், மலையுச்சி, ஆற்றங்கரை. வானம். எத்தனை கதைகள்.

ஹெமிங்வே என் நாவலுக்கு வார்த்தைகளை உபாசம் செய்வான் என்று அவனைத் திறந்தேன். அட்டைப்படத்தில் அவனுடைய முகம் அதீத உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. இறுதிக்காலத்தில் வலி தாளாமல் அவன் தற்கொலை செய்தானா? எந்த வலி? பறக்குந்திறனை இழந்துவிட்ட ஒரு வயோதிபப் பறவையின் வலியாய் இருக்குமா? தன்னுடைய வானத்தில் ஏராளம் பறவைகள் சிறகடிப்பதைப் பார்த்துத் தாங்கொணாத பெருந்துயரா? ஊர்ந்து ஊர்ந்து மலையுச்சி சென்று அங்கிருந்து பாய்ந்து விழுந்திருப்பானா? அல்லது அவனும் ஒரு கதையென வானின் எல்லை கடந்து சென்றிருப்பானா? 

என் அப்பா ஏன் மீண்டும் தென்துருவம் திரும்பவில்லை? என்னைப்பார்க்க வரவில்லை? அம்மாவின் மரணச் செய்தியைக் கேட்ட சமயம் அழுதிருப்பாரா?

நூல்கள் என்னை மிரட்டுகின்றன. கை விடுகின்றன. நண்பர்கள் என நான் நினைத்தவர்களுக்கு நான் ஒரு கணக்கேயில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. சந்திரா ஒருத்திதான் இருந்தாள். 

அவளும் வெறுங்கதைதானோ என்ற சந்தேகம் எழுகிறது. “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” என்ற வரியிலேயே கதை தொடங்கி முடிந்து பறந்தும் போய்விடுகிறது. ஒவ்வொருமுறையும் அழுது அழுது கண்கள் முகிழ்ந்துவிட்டன.

நகர முடியவில்லை. பேசாமல் இறந்துவிட்டால் என்ன? ஒன்று புதிதாய் எதுவாவது காணக்கிடைக்கும். இல்லை, இதுவே முடிவேயாயினும் குடியா மூழ்கிவிடப்போகிறது?

தற்கொலை செய்பவர்கள் பாக்கியசாலிகள்.

இறுதியாக என் மரணத்தை மட்டுமேனும் எழுதிவிடவேண்டும். அது கதையாகப் பறந்து என்னைவிட்டுப் பிரியட்டும். அவ்வப்போது வழிப்போக்கராக வாசல் கடக்கையில் வாசிக்கலாம். 

என் மரணத்தை வாசித்து நானே அழுதுதீர்க்கலாம்.

பறந்தபடி.

&&&&&&&&&&&&&

இச்சிறுகதை ஆக்காட்டி இதழ் 13இல் வெளியாகியது.

2 comments :

  1. "நிறைய சட்டைகள் நமக்காக நெய்யப்பட்டு காதிருக்கின்றன.... நாம்தான் அணிவதில்லை..." இதில் ஏதோ எனக்கொரு செய்தி இருக்கிறது. இந்த கதை என் மனைவியை இன்னும் அதிகம் நேசிக்க வைக்கிறது...

    ReplyDelete
  2. நட்சத்திரங்கள் இன்னமும் கண்சிமிட்டுகின்றன தான் என்று சொல்வதை கேட்பதட்கு கூட யாருக்குமே நேரம் இல்லை. தாமாக தலை உயர்த்தி அறிந்து கொண்டால் மட்டுமே கழுகிட்கு இரையாகாமல் உயிர் வாழ்ந்து பல வண்ண சட்டைகளை அணிந்து திருப்த்திப்படலாம். இதனால் என்ன குடியா மூழ்கிவிட போகின்றது.

    ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே