வெம்பிளி ஓஃப் ஜாப்னா - முதற்பாகம்

எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே;

நிற்க.

அப்படியென்ன எங்கள் ஒழுங்கைக்கு ஒரு பெரிய வரலாறு என்ற கேள்வி இங்கே எழலாம். உண்மைதான். உலக வரைபடத்தில் எங்கள் ஒழுங்கை  ஒன்றும் அவ்வளவு முக்கியமானது என்று சொல்வதற்கில்லை. கனக்க வேண்டாம், யாழ்ப்பாணத்தில்கூட அது அவ்வளவு பிரசித்தம் இல்லை. அவ்வளவு போவான் ஏன்? இராமநாதன் வீதியில் வந்து நின்று எங்கள் ஒழுங்கையை விசாரித்தாற்கூட ஆள்கள் முழுசுவார்கள்.  பாவம், எங்கள் ஒழுங்கைக்கு என்று தனியாக ஒரு பெயர்கூட இல்லை. பிரதான வீதியின் பெயரையே தன்னுடைய பெயராகவும் வைத்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஒழுங்கை. யாராவது ஒரு பாங்கரோ, டாக்குத்தரோ, குறைந்தது ஒரு பரியாரியோ அங்கு வாழ்ந்திருந்தாலும் அவர்கள் பெயரால் அந்த ஒழுங்கை பிரபலமடைந்திருகும். அதுவும் கிடையாது. அவசரத்துக்கு அவனவன் மூத்திரம் பெய்யிறதுக்கும் காதலிக்கிறதுக்கும் ஒதுங்குவதோடு சரி. அவ்வளவுதான். வாழ்க்கையில் அந்த ஒழுங்கை ஆன தார் கண்டிராது. ஒரு கார் நுழைய இயலாது. இரண்டு சைக்கிள் நின்றால் உள்ளே ஓட்டோ வர முடியாது. அப்படியே வந்தாலும் திருப்பமுடியாது. யாரோ ஒரு பூர்வீக யாழ்ப்பாணத்தான் தன் தோட்டக்காணியைப் பிரித்து விற்பதற்காக மனமில்லாமல் போட்டுவைத்த ஒரு குச்சு ஒழுங்கை. ஆனாலும் என்ன, எங்களைப் பொறுத்தவரையில் அது நாம் வாழ்ந்த ஒழுங்கை அல்லவா. அதனால்தான் சொல்கிறேன். சின்னன் என்றாலும் சிறப்புகள் ஏதுமில்லை என்றாலும்கூட எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் ஒழுங்கையின் வரலாறு என்பது மிக மு க்கியம். 

இப்போது மீளவும் கதையை ஆரம்பிக்கிறேன். 

எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் என்று சொன்னால், அது வெள்ளையன் அங்கிளின் குடும்பம் லண்டனிலிருந்து விடுமுறையில் வந்துநின்ற அந்தக் கொஞ்சக்காலம்தான். 


000 

வெளிநாட்டுக்காரர்களின் வரத்து என்பது இப்போதுதான் மிகவுஞ் சாதாரணமான ஒரு விசயம். முதல் திருமணம் தொடக்கம் அறுபதாம் திருமணம்வரை இப்போது எல்லோரும் சொந்த ஊருக்குப்போய்த்தான் கொண்டாடுகிறார்கள். கோயில் திருவிழாக்களுக்கு பஜனைக்கோஷ்டி போவதுபோல கூட்டாக டிக்கட் எடுத்துச் செல்கிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர் படித்த பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டிக்கு யாரும் அழைக்காமலேயே மெனக்கெட்டுச் செல்கிறார்கள். பல்லுப்புடுங்குவதற்காகவென்றே சிங்கப்பூரிலிருந்து கொழும்பு சென்ற நண்பர் ஒருவரை அறிவேன். ஏனென்று கேட்டபோது அதிட்டப்பற்களை அங்கே சீப்பாகப் பிடுங்கிவிடுகிறார்கள் என்று சொன்னார். 


ஆனால் வெள்ளையன் அங்கிள் குடும்பம் வந்து நின்ற காலம் அப்படியல்ல. மிக அரிதாகவே அப்போது வெளிநாட்டுக்காரர் ஊருக்குத் திரும்புவார்கள். அம்மாவின் மரணம், அக்காவின் திருமணம் என்று எதற்கும் ஊருக்கு வரக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு இருந்ததில்லை. ஏன், தமது சொந்தத்திருமணத்துக்குக்கூட அவர்கள் வந்ததில்லை. பெண்ணுக்கு மாமியார் தாலிகட்டி வெளிநாட்டுக்கு அனுப்பிய கூத்து எல்லாம் அப்போது நிகழ்ந்தது. ஊர் திரும்புவதற்கு நம்மாட்களுக்கு ஒன்று விசா இருந்திருக்காது, மற்றது, கையில் காசும் மீதமிருக்காது. கிடந்ததை வழித்துத் துடைத்து, போதாததற்கு அறாவிலையில் சீட்டையும் கூறி எடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அந்தக்கடனையும் சேர்த்து அடைப்பதற்காகக் கூடுதலாக இன்னொரு ஷிப்டு வேலை ஆரம்பிப்பார்கள். சொந்த ஊருமே பணம் வராததற்குக் கவலைப்படுமளவுக்கு அவர்கள் வராமல் விடுவதையிட்டுக் கவலைப்படுவதில்லை. ‘நீ வந்தால் திரும்பிப்போக ஏலாது, இங்கே நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறோம்’ என்று கடிதம் எழுதி இரண்டு படங்களையும் சேர்த்து ஊரிலிருந்து அனுப்பிவைப்பார்கள். மறக்காமல் திருமண வீட்டு குடும்பப்புகைப்படங்களின் ஒரு கோடியில் நம்மாளின் புகைப்படம் ஒன்றை வெட்டி ஒட்டிவைத்துவிடுவார்கள். படத்தில்  எல்லோரும் வேட்டி சட்டையில் வியர்வை வழிய நிற்க, இவர் மாத்திரம் கோர்ட், சூட், குளிர்  கண்ணாடியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் போஸ் கொடுப்பார். 


அப்படியொரு காலத்தில்தான் வெள்ளையன் அங்கிளின் குடும்பம் லண்டனிலிருந்து ஊர் திரும்பியிருந்தது. குறிப்பாக எந்த ஆண்டு என்று ஞாபகம் இல்லை. இந்தியன் ஆர்மி திரும்பிப்போய், புலிகள்-பிரேமதாசா பேச்சுவார்த்தை நிகழ்ந்த காலமாக இருக்கவேண்டும். யாழ்தேவி, லக்சபானா மின்சாரம் எல்லாம் ஊர்திரும்ப ஆரம்பித்திருந்த காலம். அந்த டைமில் வெளிநாட்டுக்காரர் வரத்தும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. சுகமில்லாமல் கிடந்த வெள்ளையன் அங்கிளின் அப்பாவைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் வந்து நின்றதாக ஒரு ஞாபகம். உறுதிப்படுத்துவதற்காக அம்மாவிடம் கேட்டபோது சிரித்தார். 
‘அதுகளா? கசவாரக்கூட்டம், நல்லா வருத்தம் பாக்க வந்துதுகள். தேப்பனிண்ட காணியை எழுதிவாங்கிறதுக்குத்தான் வந்ததுகள்’


000 அந்த ஒழுங்கைக்குள் நுழையும்போது இடது பக்கம் உள்ள நான்காவது வீடு எங்களது. எங்கள் வீட்டிற்குத் தெற்குப்பக்கம் ஒரு தோட்டக்காணி இருந்தது. அதற்கு அடுத்ததாக இருக்கும் வீடு வளவு வெள்ளையன் அங்கிள் குடும்பத்துடையது. அதுவும் தோட்டக்காணிதான். காணியின் ஒரு கரையில் சீற்றுப்போட்ட வீடு ஒன்று இருந்தது. அங்கேதான் வெள்ளையன் அங்கிளின் பெற்றோரும் அவரின் கடைசித்தங்கையான சுதா அக்காவும் வசித்துவந்தார்கள். வெள்ளையன் அங்கிளுக்கு வேறுபல சகோதரங்களும் இருந்தார்கள். லண்டனிலிருந்து அங்கிள் குடும்பம் வந்துநின்ற சமயம் அவர்கள் எல்லோர் குடும்பங்களும் அங்கு வந்து இறங்கிவிட்டன. கூடவே அக்கம்பக்கத்தவர்களும் சேர்ந்துகொண்டார்கள். ஒரே அமளிதான். சங்க காலத்தில் யவனர்கள் வந்திறங்கும்பொழுதுகளில் பூம்புகார் எப்படி அல்லோலகல்லோலப்பட்டிருக்குமோ அப்படி எங்கள் ஒழுங்கையும் வெள்ளையன் அங்கிள் குடும்பம் வந்துநின்ற சமயம் பரபரப்பாகியிருந்தது. எல்லோர் வீடுகளிலும் அக்குடும்பத்தைப்பற்றியே பேச்சு. அவர்கள் இந்தமாதிரி வெளுத்திருக்கிறார்கள். அந்த உடுப்புப் போடடார்கள். வாசத்துக்கு செண்டு அடித்தார்கள். இங்கிலிஷ் பேசினார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். வீடியோ டெக் கொண்டுவந்திருக்கிறார்கள். கமராவில் படம் பிடிக்கிறார்கள்.  இப்படி எல்லாமே எங்கள் ஒழுங்கைக்குப் புதினமாகவே தெரிந்தது.


எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே கார் டக்ஸி பிடித்த முதற் குடும்பம் வெள்ளையன் அங்கிளின் குடும்பம்தான். அதுவும் சிவலிங்கத்தின் மொரிஸ் மைனர் டக்ஸிதான் பிடிப்பார்கள். அங்கிளின் குடும்பம் எதற்கெடுத்தாலும் டக்ஸிபிடித்தார்கள். சினிமாப்படம் பார்க்க. கோயிலுக்குப் போக. தெரிந்தவர் வீட்டுக்கு விசிட் அடிக்க. ஏன், சந்தைக்குப் போகக்கூட டக்ஸி பிடித்த குடும்பம் இந்த வெள்ளையன் அங்கிளின் குடும்பம். சந்தையில் செலவழிப்பதற்குமேல் ஐந்து மடங்கு டக்ஸிக்குக் கொடுக்கவேண்டும். அம்மாபுலம்பியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 
‘புதுப் பணக்காரர் … இப்பிடித்தான் சோக்குக் காட்டுவினம்.  இவை எல்லாம் எப்பிடி இருந்தவை எண்டு எனக்குத்தானே தெரியும்’


அம்மாவுக்குத்தான் பொறாமை. ஆனால் எனக்கென்றால் படு புளுகம். காரணம் என் போன்ற குஞ்சு குருமான்களைத்தான் அவர்கள் டக்ஸி பிடித்துவரச்சொல்லி அனுப்புவார்கள். நாங்கள் ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் சந்தியடியில் நிற்கும் சிவலிங்கத்திடம் சொல்லுவோம். அவர் டக்ஸியை ஒருமுறை துடைத்து சென்ட் அடித்து ஸ்டார்ட் பண்ணிக்கொண்டுவந்து ஒழுங்கை முகப்பில் நிறுத்துவார். அதற்குமேலே டக்ஸி உள்ளே வராது. டக்ஸி வந்துவிட்ட செய்தியை அங்கிளிடம் போய்ச்சொன்னால் ‘சரி வாறம்’ என்பார். அன்ரியிடம் போய்ச்சொன்னால் ஒரு சொக்கலட்டோ தேசிக்காய் இனிப்போ கிடைக்கும். டக்ஸியில் ஏறுவதற்கு ஒவ்வொருதடவையும் வெள்ளையன் அங்கிளின் குடும்பம் ஒழுங்கை முகப்புவரை நடந்து செல்லும் அழகைப் பார்க்கவேண்டுமே. அது ஒரு மிதிலைபயணம்.  வெள்ளையன் அங்கிள், அவர் மனைவி, அவர்களுடைய இருபது வயது மகள் நர்சிகா, பதினாலு வயதில் மகன் தேவநேசன். நால்வரும்தான் அந்தக்குடும்பம். எங்கு போனாலும் நால்வரும் ஒன்றாகவே போவார்கள், ஒன்றாகவே வருவார்கள். தம்மிடையே ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள். அதிலும் எதிர்ப்படுபவரோடு தமிழில் பேசிவிட்டு படக்கென்று தமக்குள் ஆங்கிலத்தில் மாற்றிப் பேசுவார்கள். ஒழுங்கைக்காரர்களில் கொஞ்சம் படித்தவர்கள் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசவும் முயன்றார்கள். குறிப்பாகப் பல்கலைக்கழக இளைஞர்கள் நர்சிகாவோடு ஆங்கிலத்தில் பேச முயன்று அது பதிலுக்குச் சொல்வது விளங்காமல் வழிந்தார்கள். நமசிவாயத்தார்தான் கிளாசிக். அவருக்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது. ஆனால் அவர் சிங்களம் நன்றாகப் பேசுவார். அதனால் அவர் வெள்ளையன் அங்கிள் குடும்பத்தோடு ஒருநாள் சிங்களத்தில் பேசி மொத்த லண்டனையும் திணறடித்தார். அப்போது நமசிவாயத்தார் கடைசியில் சொன்ன வார்த்தைகள் ஒழுங்கையில் வரலாற்றில் தங்க எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டியது.
'யு நோ இங்கிலிஷ். ஐ நோ சிங்கள. ரைட்?'


அங்கிளின் குடும்பம் ஆங்கிலம் பேசிக்கொண்டு போகும்போதெல்லாம் மதிலுக்கு இந்தப்பக்கம் ஒளிந்திருந்து அவர்கள் கதையை நான் ஒட்டுக்கேட்டிருக்கிறேன். எதுவும் விளங்கியதில்லை. அந்தச்சமயம் எல்லா வீட்டு மதில்களுக்கும் பின்னால் அப்படி ஆங்கிலம் புரியாத காதுகள் ஒட்டிக்கிடந்தன. எல்லா வீட்டு யன்னல்களுக்குள்ளாலும் பல சோடிக்கண்கள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன. விடுப்பு, பொறாமை, எரிச்சல், காக்கா, பந்தம், வழியல் என்கின்ற ஆதாரமான யாழ்ப்பாணத்துப் பனங்கொட்டைக் குணங்களை அந்தச்சமயம் எங்கள் மொத்த ஒழுங்கையும் ஒருசேர்ந்து கதிரியக்கிக்கொண்டிருந்தது. அங்கிளின் குடும்பம் எதிர்ப்படும்போது எல்லோரும் வளைந்து நெளிந்து குழைவார்கள். அவர்கள் அப்பாலே சென்றபிறகுதான் புறத்தாலே கதைகள் ஆரம்பிக்கும். வெள்ளையன் அங்கிள் லண்டனில் கக்கூஸ் கழுவுவதாகவும், அவரது மனைவி வீட்டில் அடங்கி இருக்காமல் எடுபட்டு வேலைக்கெல்லாம் போகிறார் எனவும், பிள்ளைகளுக்குப் படிப்பு ஏறவில்லை எனவும் பற்பல விடுப்புகள். அந்த நர்சிகா லண்டனில் யாரோடோயோ ஓடிப்போனது, அதனால்தான் பிடித்து ஊருக்குக் கூட்டிவந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அப்போதுகூட ஓடிப்போனது வெள்ளையோடு இல்லை, வெறுங் கறுவலோடுதான் என்று சொன்னார்கள். எல்லாமே ஊகங்கள்தாம். ஆனால் ஒழுங்கையில் வசித்த எந்த அம்மாமாரைக் கேட்டாலும் வதந்திகளைச் சத்தியம் செய்து உறுதிப்படுத்துவார்கள். 

000வெள்ளையன் அங்கிளின் காணிக்கு என்று தனியாகக் கிணறு ஒன்று இருக்கவில்லை. அவர்கள் குளிப்பதற்கும் முகம் கழுவுவதற்கும் ஒழுங்கையிலிருந்த பங்குக் கிணற்றுக்குத்தான் வரவேண்டும். அங்கிள் ஆக்கள் வந்து நின்ற சமயம் ஒழுங்கையில் எல்லா வீடுகளிலும் கிணறுகள் காணாமல் போயின. அத்தனைபேரும் பங்குக்கிணற்றுக்கே குடிக்கவும் குளிக்கவும் தோய்க்கவும் பாய்ச்சவும் வந்தார்கள். காரணம் அங்கிளின் மனைவி. அந்த அன்ரி நல்ல சிவலை. கூடுதலாக லண்டன் குளிரும் மழையும் அவரை மிகவும் வாளிப்பாக வைத்திருந்தது. எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே தலைமயிரை முதன்முதலாக ஸ்றெயிட் பண்ணிய பெண்மணி அவர்தான். எப்படி அவருடைய தலைமயிர் அங்கிங்கே பறக்காமல் நெசவு ஆலை நூல்வரிசைபோல சரி நேராகக் கீழே தொங்குகின்றது என்று பலருக்கும் ஆச்சரியம். அந்தத்  தலைமயிரை ரசிப்பதற்கே பின்னால் ஒரு கூட்டம் அவருக்கு எப்போதும் இருக்கும். அவர் முகம் கழுவ வந்தாலோ, குளிக்க வந்தாலோ அந்தச்சமயம் பார்த்துத்தான் ஒழுங்கைக்குள் இருக்கும் அத்தனை அப்பாமார்களும் பல்லு மினுக்கியபடி வெளியே வருவார்கள். துலாவில் தண்ணீர் பிடித்துக்கொடுப்பார்கள். அன்ரி குளிக்கும் சமயம் பங்குக்கிணற்றடியில் கூட்டம் நல்லூர்த் தீர்த்தத்திருவிழாக் கேணிபோல நிறைந்துவழியும். என்னதான் லண்டன் ரிட்டேர்ன் என்றாலும் அன்ரி குறுக்குக்கட்டோடுதான் கிணற்றடியில் குளிப்பார். பெண்கள் குறுக்குக்கட்டோடு நின்று கிணற்றடியில் குளிப்பது ஒன்றும் எங்கள் ஒழுங்கையைப் பொறுத்தளவில் பெரிய சீன் ஒன்றும் கிடையாது. ஆனால் தலைமயிர் ஸ்ரெயிட் செய்யப்பட்ட, கை கால் கமக்கட்டு மயிர் வழிக்கப்பட்ட, முகத்தில் இளமீசை இல்லாத, இமைக்கு மஸ்காரா அடித்த ஒரு சிவலைப் பெண்மணி, குறுக்குக்கட்டோடு நின்று, கிணற்றடியில் தண்ணி வார்த்துக்கொடுப்பவர்களுக்கு எந்த விகற்பமும் இல்லாமல் 'தாங்ஸ்' சொல்லிச்சிரிப்பது என்பது, எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே… 

000


வெள்ளையன் அங்கிளின் குடும்பத்துக்குப்பின்னாலே ஒழுங்கையே திரண்டு திரிந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் உந்த வெளிநாட்டுச்சாமான். வெள்ளையன் அங்கிள்தான் எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே முதன்முதலாக வெளிநாடு போன மனுசன். முதன்முதலாக வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்த மனுசனும் அவர்தான். அதனால் வெளிநாட்டுச்சாமானுக்காக மொத்த ஒழுங்கையும் அவர்கள் பின்னே அலையோ அலையாக அலைந்தது. எல்லோருக்கும் அங்கிள் வீட்டிலிருந்து ஏதாவது ஒன்று கிடைத்தது. நெருக்கமானவர்களுக்குச் சட்டை, ஹாண்ட் பாக். மற்றவர்களுக்குச் சோப்பு, சம்பூ, சவர பிளேட், லண்டன் படங்கள்கொண்ட போஸ்ட்கார்டு, கீ-டக், சார்ளஸ் டயானா ஸ்டிக்கர்கள் என எதுவோ ஒன்று. சைக்கிள்கடை ஜெகனுக்கும் பொன்னுக்கோனுக்கும் ரெட் லேபிள் சாராயப்போத்தல் கிடைத்தது. சிறுமிகளுக்கு ஹெட்பாண்ட், கிளிப், கவரிங் காப்பு, காதுக்குச்சி, செண்ட், மேக்கப் ஐட்டங்கள் என்று என்னென்னவோ. எனக்கு ஒரு டெனிஸ் பந்து கிடைத்தது. எனக்கென்றில்லை, என் வயதுப் பெடியள் எல்லோருக்கும் டெனிஸ் பந்து கிடைத்தது. எல்லோருக்குமே சொக்கிலேட் கிடைத்தது. முக்கிய விசயம், ஒவ்வொருதடவை அந்த வீட்டுக்குப்போனபோதும் ஒவ்வொரு ஐட்டம் கிடைத்தது. இரண்டாம் தடவை நான் போனபோது எனக்கு மீளவும் ஒரு டெனிஸ் பந்தைத் தந்தார்கள். அது ஏற்கனவே கிடைத்துவிட்டது என்று சொன்னதும், ஒரு பிளாஸ்டிக் முட்டையைக் கொடுத்தார்கள். முட்டைக்குக் கீழே ஒரு பட்டன் இருந்தது. அதை அழுத்தியதுதான் தாமதம், படாரென்று முட்டை பொரித்து உள்ளிருந்த குஞ்சு வெளியே வந்து செட்டையைப் படபடவென்று அடித்தது. 

மூன்றாம் முறை நான் போனபோது எலிசபத் மகாராணியின் படமொன்று கொடுத்தார்கள். எனக்குப் பெருமை பிடிபடவில்லை. அம்மாவிடம் கொண்டுவந்து காட்டினேன். அம்மாவுக்கு அவ்வளவுக்கு உலக அறிவு போதாது. படத்தைப்பார்த்ததும் சொன்னார். 
“உந்த சவத்தை வெள்ளையன் மட்டும் ஒழுங்கா இருந்தா இது ஏன் இப்பிடி எடுபட்டுத் திரியப்போகுது? அவாவும் அவவிண்ட சோட்டியும்”
000 அக்காலத்தில் அக்கம்பக்கத்து இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து தெற்குப்பக்கத்துத் தோட்டக்காணியைத் துப்புரவாக்கி அதில் பிள்ளையார் பேணி விளையாடி வந்தோம். 


பிள்ளையார் பேணி என்பது யாழ்ப்பாணத்தின் தேசிய விளையாட்டுகளில் ஒன்று. அதன் விதிமுறைகள் மிக எளிமையானவை. விளையாட்டுத்திடலின் நடுவில் பழைய ரின்கள், கிண்ணிகள் பலவற்றை ஒன்றின் மீது ஒன்றாகக் கோபுரம்போல அடுக்கி, இரண்டு அணிகளாகப் பிரிந்து, ரின் அடுக்கினைப் பந்தால் எறிந்து அடித்து விழுத்த முயற்சிசெய்வார்கள். கோபுரத்தை அடித்து விழுத்தும் அணி பின்னர் அதனை மீண்டும் ஒன்றன்மீது  ஒன்றாக அடுக்கி முடிக்கவேண்டும். மற்றைய அணி அவர்களை அடுக்கவிடாமல் பந்தை அவர்கள்மீது எறிந்து அவர்களை அவுட்டாக்க முயற்சிக்கும். பேணிகளை அடுக்கி முடித்துவிட்டால் அடுக்கிய அணி வெற்றிபெற்றதாகிவிடும். அதற்குமுன்னர் அந்த அணி வீரர்களை அவுட்டாக்கிவிட்டால் மற்றைய அணி வெற்றிபெற்றதாகிவிடும். இந்தப் பிள்ளையார்பேணி ஆட்டம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் முழுவதுமிருந்த வெறுங்காணி வளவுகள், ஒழுங்கைகள், றோட்டுகள், கோயிலடிகள் என்று எல்லாவிடங்களிலும் விளையாடப்பட்டுவந்த ஒரு ஆட்டம். ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு விதிகள் இருந்தாலும் ஆதாரமான ஆட்டம் ஒன்றுதான். அடித்து விழுத்திய கோபுரத்தை மீளவும் கட்ட ஒரு அணி முயற்சிக்கும். மற்றைய அணி அதனைத் தடுக்கும். இந்த ஆட்டத்துக்கும் பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஒருவேளை அடுக்கப்பட்ட பேணிகளைப்பார்த்தால் குத்துக்கல் பிள்ளையாராட்டம் தெரிவது காரணமாக இருக்கலாம். அல்லது முதன்முதலாக ஒரு பிள்ளையார்கோயில் திடலில் இந்த ஆட்டம் தோன்றியிருக்கலாம். அல்லது ஆனானப்பட்ட பிள்ளையாரே இந்த ஆடடத்தைக் கண்டுபிடித்திருக்கலாம். அது அவ்வளவு முக்கியமில்லை.

 


எங்கள் காலங்களில், பிள்ளையார் பேணிகளை அதிகம் ஆக்கிரமித்தது இந்தியன் ஆர்மியின் உபயங்கள்தான். அடியில் வைக்கப்படும் எண்ணெய் ரின் அவர்களோடது. முடியில் அடுக்கப்படும் பழ ரின்கள் அவர்களோடது. நடுவில் பிஸ்கட் ரின்னோ நெய் ரின்னோ, பால்மா ரின்னோ, அவையும் அவர்களிடமிருந்துதான் வந்திருக்கும். சில பேணிகள் கறல் ஏறியும் கிடக்கும். பேணிகள் கிடைக்கவில்லை என்றால் ஷெல் கப்பையும் தேங்காய்ச்சிரட்டையையும்கூட வைத்து விளையாடுவோம். யாரும் எம்மோடு விளையாட வரலாம். கன்னாதிட்டி, கந்தர்மடத்திலிருந்து கலட்டி கொக்குவிலிலிருந்தெல்லாம் விளையாட வருவார்கள். வரும் ஆள்களில் ஆண், பெண் பேதங்கள் இருப்பதில்லை. வயது வித்தியாசமும் இருப்பதில்லை. சாமத்தியப்படும்வரைக்கும் சிறுமிகளும் வெளிநாடு அல்லது இயக்கத்துக்குப்போகும்வரைக்கும் ஆண்களும் பொதுவாக நம்மோடு சேர்ந்து விளையாட வருவார்கள். 

சுதா அக்கா மட்டும் இதில் ஒரேயொரு விதிவிலக்கு. சுதா அக்கா வேறு யாருமில்லை. வெள்ளையன் அங்கிளின் சொந்தத் தங்கைதான் அவர். சுதா அக்கா எங்களோடு பிள்ளையார் பேணி விளையாட இணைந்தபோது அவருக்கு வயது இருபத்தைந்து இருபத்தாறு இருந்திருக்கும். 

சுதா அக்காவுடைய கதை ஒரு தனிக்கதை.


ஆரம்பத்தில் அவரும் நம் ஏனைய ஒழுங்கை இளம் பெண்களைப்போல தானும் தம்பாடுமாகத்தான் இருந்தார். எந்த ஒழுங்கை விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள மாட்டார். ஏ.எல் இரு தடவைகள் எடுத்து அது சரிவராததால், டைப்பிங் கிளாஸ் போனார். ஸ்டெனோக்குப் படித்தார். கலாலயாவில் கைவினைப்பயிற்சிக்குப் போனார். பக்கத்துத் தெருவில் வசித்த மாவட்ட அரச அதிபரின் மனைவி நடத்தும் சாயி பஜனைக்குப்போனார். கௌரி காப்பு கட்டினார். வழமைபோலவே அவருக்கு ஒரு வெளிநாட்டுப் பொருத்தம் தேடி வந்தது. ஹொலண்ட் மாப்பிள்ளை. ஒருநாள் மாப்பிள்ளை குடும்பம் டக்ஸி பிடித்து வந்து பொம்பிளை பார்த்தது. அந்தக்காலத்தில் தொலைப்பேசி வசதிகள் ஏதுமில்லை. சுதா அக்காவுக்கும் மாப்பிள்ளையோடு ஓரிரு கடிதப்போக்குவரத்துகள் ஆரம்பித்திருக்கவேண்டும். இந்தா இனிக் கலியாணம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ஏனோ அது குழம்பிவிட்டது. மாப்பிள்ளை ஒரு குடிகாரன் என்று ஒழுங்கைவாசிகளுக்குக் காரணம் சொல்லப்பட்டது. மாப்பிள்ளைக்குப் பேப்பர் கிடைக்கவில்லை என்பது இன்னொரு காரணம். அக்காவுக்கு ஹொலண்ட் போகப்பிடிக்கவில்லை என்று விருத்தமில்லாத ஒரு காரணம் வேறு. அக்காவுக்கு உள்ளூரில் ஒரு சினேகிதம் என்று ஒரு குரூப் சொல்லியது. கப்பித்தான் அண்ணர்தான் அந்த சினேகிதம் என்றும் ஒரு செய்தி. கப்பித்தான் அண்ணர் புதன்கிழமைகளில் மாத்திரம் எங்களோடு பிள்ளையார் பேணி விளையாட வந்துகொண்டிருந்தவர். அக்கா வீட்டு கேற்றடியில்தான் அவர் சைக்கிளை ஸ்டாண்ட் போடுவார். போகும்போது மறக்காமல் அக்காவுடன் ஏதாவது பேசிவிட்டுப்போவார். அக்கா அவருக்குத் தேசிக்காய்த்தண்ணி கரைத்துக் கொடுப்பார். மரவள்ளிக்கிழங்கு அவிச்சுக்கொடுப்பார். கப்பித்தான் அண்ணர் எங்களைப்போல இல்லாமல் கொஞ்சம் சிவலையாக இருப்பார். பூனைக்கண்கள். அண்ணர் பற்றி மேலும் சொல்லவேண்டுமானால் நாங்கள் போர்த்துக்கேயர் காலத்துக்குப் போகவேண்டும். அதுவும் லிஸ்பன் துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். ஆனால் அது தேவையில்லை. கப்பித்தான் அண்ணரை இயக்கம் இந்தியன் ஆர்மி வெளியேறமுன்னரேயே போட்டுவிட்டது என்ற செய்தி மாத்திரம் இங்கே போதுமானது. அத்தோடு அவர் கதை முடிந்தது. கப்பித்தான் அண்ணரின் எட்டுச்செலவுக்கு மறுநாள் அண்ணரின் தாய்க்காரி சுதா அக்காவீட்டு வாசலில் வந்து நின்று தாறுமாறாகக் கத்தினார். மண்ணை அள்ளிக்கொட்டி சுதா அக்காவைப் படு தூசணத்தில் திட்டினார். பெண்கள் தூசணம் கொட்டும்போதுதான் தூசணத்துக்கென்று ஒரு உண்மையான மதிப்புக் கிடைக்கிறது. ஆண்களின் தூசணத்தில் எப்போதுமே ஒரு எள்ளலும் அளவு கடந்த அன்பும் புதைந்திருக்கும். ஆனால் பெண்களது தூசணத்தில் வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டு எரியும். கப்பித்தான் அண்ணரின் தாய்க்காரி கொட்டிய தூசணத்தில் முக்கால்வாசி எனக்கு விளங்கவேயில்லை. ஆனால் அவற்றிலிருந்த வன்மத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சுதா அக்காவும் அன்றைக்கு ஒண்டிக்கு ஒண்டியாக அண்ணரின் தாய்க்காரியோடு மல்லுக்கு நின்று பதில் தூசணம் கொட்டினார். இவ்வளவு நடந்தும் ஒழுங்கைக்காரர் எவரும் அங்கு சென்று அவர்களை விலக்குப்பிடிக்கவில்லை. ஏன், வெளியிலேயே வரவில்லை. நாங்கள் எல்லோரும் சாமியறை யன்னலுக்குள்ளால் அவர்களது சண்டையை புதினம் பார்த்துக்கொண்டிருந்தோம். 

சண்டை முடிந்து புழுதி அடங்கியதும் அம்மா என்னைப் பார்த்துக் கோபமாகச் சொன்னார்.
‘இஞ்ச என்ன சோக்காட்டுறாங்களா? இந்தத் தரித்திரங்களுக்கு இதுவே வேலையாப்போச்சு. நீ கால் முகத்தைக் கழுவிட்டு வந்து கொப்பி புத்தகத்தை எடு’
000 


தற்செயலா அல்லது திட்டமிட்டதா என்று தெரியவில்லை. கப்பித்தான் அண்ணரின் சாவுக்குப்பின்னர் சுதா அக்காவின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தெரிந்தன. அதன்பின்னர்தான் அவர் பிள்ளையார்பேணி விளையாட எம்மோடு வந்து சேர்ந்தார். வெளிப்படையாகவே பரமேஸ்வராச்சந்தியில் இருந்த இயக்கத்தின் சோல்ட் காம்பில் செயற்பட ஆரம்பித்தார். இடையில் திடீரென்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இயக்கத்துக்குப் போனார். போய் இரண்டே மாதங்களில் பயிற்சி முகாமில் கொழுவுப்பட்டு, பணிஷ்மென்ட் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டார். வந்ததும் ஒரு ஸ்கூட்டர் வாங்கினார். சுதா அக்கா உத்தியோகம் எதற்கும் போனதாக நினைவில்லை. ஆனால் அவரின் கையில் காசு எப்போதும் புழங்கிக்கொண்டிருக்கும். லண்டன் டோல் காசு என்று எதிர்வீட்டு அன்ரி கறுவுவார். அந்தக்குடும்பம் யார் யாழ்ப்பாணத்தில் ஆட்சியில் இருந்தாலும் அவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்பம் என்று அம்மா சொல்லுவதுண்டு. இலங்கை இராணுவம் இருந்த காலத்தில் அவர்களோடு சினேகம். பின்னர் இந்திய இராணுவத்தினரின் சிவில் சமூக அமைப்பிலும் அவர்கள் இருந்தார்கள். இயக்கம் வந்தபின்னர் இயக்கத்தோடு நெருங்கிப்பழகினார்கள். ‘அவள் ஒரு ரெக்கிக்காரி, அவளோட ஒரு சேர்க்கையும் வேண்டாம்’ என்று அம்மா என்னை எச்சரித்தும் வைத்திருந்தார். 


சுதா அக்கா பிள்ளையார் பேணி விளையாட வந்தபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குரூப்பை தன் கைக்குள் கொண்டுவர ஆரம்பித்தார். புதிது புதிதாக ரூல் போட்டார். ஒருநாள் டெனிஸ் பந்தின் மேற் தோலை இழுத்தெறிந்துவிட்டு, பந்தைத் தாச்சியில் போட்டு வறுத்துக் கொண்டுவந்தார். அந்தப் பந்து எங்களது சட்டை அணியாத வெற்று மேலில் பட்டபோது சுள்ளியது. விளையாடும்போது பந்தைத் தலையில் படாதவண்ணம் எறியவேண்டுமென்பது ஒரு விதி. ஆனால் விளையாட்டுச் சூட்டில் அதை எவரும் பின்பற்றுவதில்லை. அதிலும் ஓரிரண்டு அலாப்பல்களுக்குப் பின்னர், வெல்வதைவிடத் தலையில் போடுவதே எமது நோக்கமாகவும் மாறுவதுண்டு. சுதா அக்கா எப்போதுமே மண்டையைக் குறிவைத்தே பந்தை எறிவார். அலாப்பலிலும் அக்கா ஒரு மாதா. பந்து அவர்மீது பட்டாலும் படவில்லை என்பார். அவரோடு வாக்குவாதப்பட்டு வெல்வது என்பது ஆகாத காரியம். எங்கள் குரூப்பிலிருந்த பலரை அவர் மடக்கி வைத்திருந்தார். அதனால் அவர் என்ன சொன்னாலும் சரி என்று வாளி வைக்கும் ஒரு கூட்டம் அவருக்கு இருந்தது. ஆட்டத்தில் பந்து சாதாரணமாகப் பட்டாலே போதும். அவுட்தான். ஆனால் அக்கா சின்னன் பெரிசு என்று பார்க்காமல் கண்டபாட்டுக்கு கண்ட கண்ட இடங்களில் வேகமாகப் பந்தை எறிவார். அதேசமயம் மிக அருகில் அவர் எம்மிடம் அகப்பட்டால் கைக்குள் வைத்திருக்கும் குறுமணலை எம் கண்களுக்குள் வீசிவிட்டு உச்சிவிடுவார். 

ஒவ்வொருமுறையும் அக்கா அலாப்பும்போதும் அந்த அலாப்பல் விளையாட்டின் புதுவிதியாக மாறிக்கொள்ளும். ஒரு கட்டத்தில் எங்கள் ஆட்டத்தில் ஆதார விதிகளைவிட அலாப்பல் விதிகளே மேலோங்க ஆரம்பித்தன. குரூப்பில் யார் யார் எல்லாம் வந்து சேரலாம் என்பதையும் அக்காவே தீர்மானித்தார். ஆர்வமாக வருபவர்களை அக்கா உடனேயே சேர்த்துக்கொள்ளாமல் பிகு பண்ணுவார். ஆண்களோ, பெண்களோ, அண்ணன்மார்களோ, அக்காமார்களோ, ஒரு குறிப்பிட்ட வீதிக்காரரோ அல்லது சாதிக்காரரோ எங்கள் குரூப்பை , குறிப்பாகச் சுதா அக்காவை ஆதிக்கம் செலுத்தமுடியாதவாறு அவர் குரூப்பைக் கொண்டுநடத்தி வந்தார். அணி பிரிப்பதிலும் கன்னை கூற்றுக்கு ஆள்கள் தெரிவதிலும்கூட அவரின் தனகல்கள் அதிகம் இருப்பதுண்டு. இப்படி எவ்வளவுதான் சுதா அக்கா விலாங்குக் குணம் காட்டினாலும் எதிர்த்து ஒரு வார்த்தை எம்மால் பேசமுடிவதில்லை. காரணம் விளையாடவருபவர்களுக்கு அவர் தேசிக்காய்த்தண்ணியும் மரவள்ளிப்பொரியலும் தாராளமாகக் கொண்டுவருவார். இந்தியன் ஆர்மியின் ரின்கள் எல்லாம் நெளிந்து கறல்பிடித்து அடுக்கப்பட முடியாமல் போனபோது உள்ளூர் நெஸ்பிரே, தேங்காய் எண்ணெய் ரின்களைக் கொடுத்தவரும் அவரே. கூடவே, விளையாடும் பந்து அவர் கையிலேயே இருந்தது. 


எல்லாவற்றுக்கும்மேலே முக்கிய காரணம் கப்பித்தான் அண்ணருக்கு நிகழ்ந்த கதியை யாருமே மறக்காமலிருந்ததுதான். 000 

இப்படியாக நாங்கள் கண்ணிவெடியில் மிதித்த காலை எடுக்கமுடியாமல் முழித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில்தான் எங்கள் நல்ல காலத்துக்கு வெள்ளையன் அங்கிளின் குடும்பம் ஊருக்கு வருகிறது. நல்லகாலம் என்றால், ஒன்று, அவர்கள் வந்தநாள் தொடக்கம் சுதாக்கா எம்மோடு விளையாட வருவதை நிறுத்திவிட்டார். 

இரண்டு, வெள்ளையன் அங்கிளின் கடைசிமகன் தேவநேசன். 

இந்த தேவநேசன் இருக்கிறானே. அவன் மெய்யாலுமே எங்களைத் தேடிவந்த ஒரு மீட்பன். ஆரம்பத்தில் தேவநேசன் எங்கள் ஒருவரோடும் பெரிதாகப் பேசிப்பழகவில்லை. அவனுக்குத் தமிழ் துண்டற விளங்காது. அவன் பேசுவதும் ஆங்கிலேயரின் ஆங்கிலம். எங்கள் எல்லோருக்கும் ஶ்ரீலங்கன் ஆங்கிலமே வயிற்றைக் கலக்கும், இதில் ஆங்கிலேயரின் ஆங்கிலத்தை நினைத்தே பார்க்கவேண்டியதில்லை. இதனால் நாம் எவருமே தேவநேசனோடு தனகுவதற்குப் போகவில்லை. அவனும் எம்மை அண்டுவதில்லை. எப்போதும் அவன் வெள்ளையன் அங்கிளோடும் தாய்க்காரியோடும்தான் திரிவான். அவர்களோடு மாத்திரம் புஸ்ஸு புஸ்ஸு என்று ஏதோ ஆங்கிலத்தில் பேசிக்கொள்வான். எப்போது பார்த்தாலும் சிறிய பாம்பு கேம் ஒன்றோடு விளையாடிக்கொண்டிருப்பான். சிலவேளைகளில் அவர்கள் வீட்டு முற்றத்தில் தனியனாக ஒரு புட்போலை சுவரில் அடித்து விளையாடுவான். நாங்கள் பிள்ளையார் பேணி விளையாடும் சமயங்களில் அவன் அவர்கள் காணி மதிலின் அந்தப்பக்கம் ஒரு கதிரையைப்போட்டு, அதில் ஏறி நின்று எம் விளையாட்டை வேடிக்கை பார்ப்பான். ஆனால் ஆட்டத்திற்கு வரமாட்டான். 


வழமைபோல ஒருநாள் மாலை நாங்கள் பிள்ளையார் பேணி விளையாடிக்கொண்டிருக்கையில் சுதா அக்கா இந்த தேவநேசனை திடலுக்கு அழைத்துவந்தார். வந்தவன் கையில் கூடவே புட்போலும் இருந்தது. சுதா அக்கா எங்கள் விளையாட்டை இடை நிறுத்தி, எல்லோரையும் ஒன்று கூட்டி அவனை அறிமுகப்படுத்தினார். எல்லோரையும் ‘ஹாய்’ சொல்லச்சொன்னார். வாழ்க்கையில் முதன்முதலாக நாம் ஒருவருக்கு ‘ஹாய்’ சொன்னது அன்றைக்குத்தான். சொல்லும்போது அந்தரமாக இருந்தது. அவனும் பரவிக்கிடந்த பிள்ளையார் பேணிகளை வெறித்தபடியே ‘ஹாய்’ என்று விழுங்கினான். ஒரே ‘ஹாய்’தான் என்றாலும் எவ்வளவு வித்தியாசம்.


‘இவரையும் சேர்த்து விளையாடுங்கடா’, சுதா அக்கா சொல்ல நாங்கள் சரியென்று தலையாட்டினோம். 
'தேவனுக்கு பிள்ளையார் பேணி விளையாடத்தெரியாதாம் … நீங்கள் எல்லாரும் இண்டைக்கு இவரோட சேர்ந்து புட்போல் விளையாடுங்கோ' 
முழித்தோம். எங்களுக்கு புட்போல் என்றால் பந்தை கால்களால் விரட்டிக்கொண்டுபோய் கோல் போடும் ஆட்டம் என்ற அளவுக்கு மாத்திரம் தெரிந்திருந்தது. மற்றபடி அதன் விதிகளோ, நுணுக்கங்களோ எதுவும் தெரியாது. சும்மா ஒழுங்கையில்கூட அதை விளையாடிய சரித்திரம் இல்லை. அப்படியே விளையாடியிருந்தாலும் அதை டெனிஸ் பந்தில்தான் விளையாடியது. இந்தப் பெரிய பந்தில், ஐயோ, சான்சே இல்லை. 

'அக்கா இதை எப்பிடி விளையாடுறது எண்டு எங்களுக்கு …. '

நாங்கள் தயங்கவும் தேவன் உற்சாகமானான்.
'டோண்ட் வொரி … ஐ வில் டீச் யூ'

அப்போதுதான் அந்த தேவநேசனுக்கும் தமிழ் விளங்கும் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. நாங்கள் அத்தனைபேரும் புட்போல் விளையாடப் பழகுவதைவிட அவன் ஒருத்தன் பிள்ளையார்பேணி விளையாடப் பழகுவது இலகுதானே என்று இயல்பாக நமக்குள் கேள்வி எழுந்தாலும் யாரும் அதைச் சுதா அக்காவிடம் கேட்கவில்லை. காலை எடுத்தால் கண்ணி வெடித்துவிடும். நாங்கள் மீண்டும் சரி என்று தலையாட்டினோம்.
'குட் ... லெட்ஸ் பிளே தென்'
000


நாங்கள் எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே முதன்முதலாக புட்போல் ஆட ஆரம்பித்தோம்.முதலில் அந்த வளவை தேவநேசன் துப்புரவாக்கச்சொன்னான். பிள்ளையார்பேணிக்கு சமதரை தேவையில்லை. மூலை முடுக்குகளில் புல் புதர் இருந்தால் பிரச்சனை கிடையாது. தவிர ஒளிவதற்கும், பாய்ந்துவந்து பேணிகளை அடுக்குவதற்கும் அதுதான் வசதியும்கூட. சமயங்களில் பந்து பற்றைக்குள் போகின்ற சமயங்களில் லபக்கென்று முழுக்கோபுரத்தையும் அடுக்கி முடித்துவிடவும் முடியும்.  ஆனால் இந்தக் கண்டறியாத புட்போலுக்காக முழுவளவையும் நாங்கள் செருக்கித் துப்புரவாக்கினோம். பிள்ளையார் பேணிகளை தேவநேசன் 'ரஸ்டி.. டேன்ஜரஸ்' என்று சொல்லி எறிந்துவிடச் சொன்னான். பின்னர் காணியின் இரு மருங்கிலும் கோல்போஸ்ட் சரிக்கட்டினோம். அவன் சொன்னதுபோலவே சுற்றிவர லைன் அடித்து, பெனால்டி பொக்ஸ் கீறி, நடுக்கோடு அடித்து என்று அந்தக்காணியை ஒரே நாளில் ஒரு உதைபந்தாட்ட மைதானமாக மாற்றினோம்.

அதுதான் 'வெம்பிளி ஒஃப் ஜாஃப்னா'

தேவநேசனே அந்தப் பெயரையும் வைத்தான். எம் எவருக்குமே  வெம்பிளி என்றால் என்ன என்று தெரியவில்லை. எப்படிக்கேட்பது என்றும் தெரியவில்லை. அப்புறம் தேவநேசனே லிவர்பூல், செல்சி என்று இரண்டு அணிகளை உருவாக்கினான். லிவர்பூலுக்கு அவனே தலைவன் ஆனான். செல்ஸிக்கு தலைமை யார் என்ற பிரச்சனை வந்தது. பிள்ளையார்பேணியில் எப்போதும் ஒரு கலக்கு கலக்கும் வளர்மதியை செல்ஸிக்குத் தலைவியாகப் போடலாம் என்று எம் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது. பெண்கள் தலைவர்கள் ஆகக்கூடாது என்று தேவநேசன் சொல்லவும், சிலர் சுட்டாவைத் தலைவன் ஆக்கலாம் என்றார்கள். கடைசியில் தேவநேசன் என்ன நினைத்தானோ தெரியாது, அணிக்குத் தலைவர் யாருமே தேவையில்லை, நாங்கள் எல்லோரும் ஆட்டத்தை ஒழுங்காகப் பழகும்வரைக்கும் செல்ஸியின் தலைமைப்பொறுப்பையும் தானே பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். அணிப்பிரிப்பும் அவன் இஷ்டப்படியே நிகழ்ந்தது. எல்லோருமே லிவர்பூல் பக்கம் நிற்கவே விரும்பினார்கள். தேவநேசன் ஓரளவுக்கு உயரமான, நன்றாக ஓடக்கூடிய, வயதுகூடிய பெடியங்களை லிவர்பூலில் சேர்த்துக்கொண்டான். சின்னப்பெடியள், நோஞ்சான், நுள்ளான், என் தரவழி எல்லாம் செல்சிப்பக்கம். வடிவான பெட்டைகள் லிவர்பூலுக்குப்போக வளர்மதியும் சகடையும் செல்சிப்பக்கம் வந்தார்கள். அணிப்பிரிப்பு நிரந்தரமானது என்றும் சொன்னான். தினமும் கன்னை பிரித்தால் அணியை ‘பில்ட்’ பண்ணமுடியாது என்றான். எல்லாவற்றுக்கும் தலையாட்டினோம். 


புட்போல் ஆடுவது கடினமாக இருந்தது.


ஆட்டத்தைவிட அதன் விதிமுறைகள்தாம் நமக்குப் பிடிபடுவதாகவே இல்லை. அதிலும் ஓஃப் சைட் விதியைக் கடைசிவரைக்கும் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. நாங்கள் கோல் அடிக்கும் சமயங்களிலெல்லாம் அதை தேவநேசன் ஓஃப்சைட் என்றான். ஆனால் அவன் அடிக்கும்போது எல்லாமே சரியாக இருந்தது. பெனால்டி, பவுல், பிரீகிக் என்று எந்த விதிகளையும் அவன் விளங்கப்படுத்துவதில்லை. அவ்வப்போது அவன் வசதிக்கமைய அவற்றைப் பயன்படுத்திக்கொள்வான். நாங்களும் விளக்கம் கேட்பதில்லை. கேட்கும் அளவுக்கு எங்கள் எவருக்கும் இன்னமும் போதுமான ஆங்கில அறிவும் துணிச்சலும் வந்து சேரவில்லை. அவனுக்குத் தமிழ் விளங்கும் என்றாலும் விளங்கியதுபோல அவன் காட்டிக்கொள்வதும் கிடையாது. தேவநேசனே எங்கள் செல்ஸி அணிக்கும் பொறுப்பு என்பதால் அவனை எதிர்த்துப்பேச எவரும் முன்வருவதில்லை. சுட்டாவும் வளர்மதியும் தங்களுக்குள்ளேயே யார் பெரியவர் என்று அடிபட்டுக்கொள்வதிலும் தேவநேசனிடம் நல்ல பெயர் வாங்கி யார் செல்சியின் தலைமைப்பதவியை பெற்றுக்கொள்வது என்பதிலுமே ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால் நாள்கள் போகப்போக எமக்கும் அந்த ஆட்டத்தின் சுதி பிடிபட்டுக்கொண்டது. ஒருவரே பந்தை உருட்டிக்கொண்டு செல்லாமல் மாறி மாறி பாஸ் பண்ணி ஏய்ப்புக்காட்டும்போது எதிரணி தடுமாறுவது புரிந்தது. செல்சி அணி ஒன்றைப்புரிந்துகொண்டது. தேவநேசனைச் சுற்றி வளைத்துவிட்டால் போதும், லிவர்பூல் மொத்தமாகவே படுத்துவிடும். அதனால் மூன்று பெடியளை நாங்கள் தேவநேசனைக் கவனிப்பதற்கென்றே செட் பண்ணினோம். தவிர கோல் காப்பாளருக்குத் துணையாக இரண்டுபேரைப் பின்னால் எப்போதும் நிறுத்திவைத்தோம். லிவர்பூலின் வீரர்கள் எல்லாம் தேவநேசனை வெள்ளி பார்த்துக்கொண்டிருக்கையில் பந்து அவனைவிட்டு எப்போதாவது விலகும் தறுவாயில் செல்ஸி படாரென்று அதனைப் பறித்துத் தள்ளிக்கொண்டு சென்று கோல் போட்டுவிடும். லிவர்பூலில் எப்போதும் தேவநேசன் மாத்திரமே கோல் அடித்துக்கொண்டிருந்தான். ஆனால் செல்சியில் அப்படியில்லை. வந்தவர் போனவர் எல்லாம் அந்த அணியில் கோல் அடிக்க ஆரம்பித்தார்கள். அப்படியிருந்தும் தேவநேசன் அடிக்கும் கோல்களின் எண்ணிக்கை எப்போதுமே எங்களதைவிட அதிகமாக இருந்தது. அல்லது அப்படி இருக்கும்போதே அவன் ஆட்டத்தை நிறுத்திவிடுவதுண்டு. இதனால் லிவர்பூலை வெற்றிகொள்வது என்பது செல்சிக்கு மிகக்கடினமாக இருந்தது. எனினும் நாள்கள் செல்லச்செல்ல, ஒருநாள் இல்லை ஒருநாள் புட்போலில் லிவர்பூலை வெற்றிகொண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை செல்சிக்கு வந்துவிட்டிருந்தது. 


புட்போல் சூட்டில் நாங்கள் எங்கள் பிள்ளையார் பேணியை முற்றாக மறந்துவிட்டிருந்தோம். அப்படி ஒரு ஆட்டம் அந்த வளவில் ஆடப்பட்டதற்கான தடயமே அழிந்துபோய்விட்டிருந்தது. எப்போதும் எங்கள் சிந்தனை புட்போல் பற்றியே இருந்தது. செல்சி அணியில் விளையாடியவர்கள் லிவர்பூல் அணியின் ஒழுங்கை நண்பர்களை விட்டு விலத்த ஆரம்பித்தோம். தேவநேசனுக்கு பந்தம் பிடிப்பவர்கள் என்று நாங்கள் அவர்களைக் கேலி செய்தோம். அவர்களும் எம்மை விட்டுவைக்கவில்லை. எந்நேரமும் அவர்கள் தேவநேசனோடு கூடவே திரிந்தார்கள். அவன் வாங்கிக்கொடுக்கும் கிழங்கு ரொட்டிக்கும் பலூடாவுக்கும் அலைந்தார்கள். அவனிடம் சில பிரித்தானிய ஆங்கிலத் தூசணங்களைக் கற்றுத்தேர்ந்து எம்மேலே கொட்டினார்கள். ‘பக்’ என்றார்கள். ‘பகர்’ என்றார்கள். 'நிகர்' என்றார்கள்.  ‘பிளடி பாஸ்டர்ட்ஸ்’, ‘கன்றி புரூட்ஸ்’ என்று என்னெல்லாமோ சொன்னார்கள். எங்களுக்கு வன்மம் மேலும் அதிகமானது. நாங்களும் அவற்றைத் திருப்பிச்சொல்ல ஆரம்பித்தோம். எங்களுக்குக் கோபம் அந்த தேவநேசன்மீதுகூட இல்லை. எங்களோடு இத்தனைகாலமும் இழுபட்டுத்திரிந்த இந்த லிவர்பூல் பரதேசிகள் திடீரென்று தேவநேசனுக்குக் கூஜா தூக்குவதைத்தான் தாங்கமுடியவில்லை. எங்களுக்கு லிவர்பூல் அணியை வெல்வது மாத்திரமே வாழ்வின் ஒரே நோக்கமானது. படிக்கும்போதும் சாப்பிடும்போதும் தூங்கும்போதும் எமக்கு புட்போல் நினைப்புதான். காலையில் பாடசாலைக்குப்போகும்போதும் அன்றைய மாலை ஆட்டத்துக்கான திட்டமிடல்களைச் செய்தோம். நூலகத்தில் புட்போல் பற்றிய மகசின்களைப் புரட்டினோம். எல்லோரும் மாலை நான்கரைக்கு விளையாட வருவார்கள் என்றால் செல்சி அணிக்காரர்கள் மூன்றரைக்கே ஒன்றுகூடி பயிற்சிகள் செய்வோம். பணம் சேகரித்து குளுக்கோஸ் வாங்கி எங்கள் அணிக்குள் மாத்திரமே பகிர்ந்துகொள்வோம். வீட்டினுள்ளும் ஒரு டெனிஸ் பந்தை விரட்டியபடி திரிவோம். தெருவில் ஒரு தென்னங்குரும்பையையோ பனங்கொட்டையையோ அடித்தபடி நடப்போம். ஆரம்பித்து மூன்றே வாரங்கள்தாம். புட்போல் எங்கள் மூச்சாகியது. புட்போல் புட்போல் புட்போல். எவராவது எப்போதேனும் பிள்ளையார் பேணியை ஞாபகப்படுத்தினால், 
'பக் பிள்ளையார் பேணி'
000 3 comments :

 1. ஆட்டம் செம ஜோர்

  ReplyDelete
 2. ரொம்பவே தாமதமாக வாசிச்சு இருக்கிறன். நனவிடை தோய்தலும் அரசியலும் என்று மூளை சொன்னாலும், அதைக் கேட்காமல் மனது பல்வேறு உணர்வுகளிலும் ஒரு வித ஏக்கத்துக்கும் ஆட்படுகிறது. இப்படி ஒரு வாசிப்பனுவம் அடிக்கடி கிடைக்கவாவது அடிக்கடி எழுதுங்கோ. ;)

  ReplyDelete

 3. இதில் அரசியல் இல்லை என்று சத்தியமாக நம்பிவிட்டோம்
  களவாக வந்து படலையை எட்டி பார்த்து விட்டு போகும் நான் மிக நீண்ட நாட்களின் பின் துணிவாக படலைக்குள் வந்திருக்கிறேன் ।காரணம் என்னவென்றால் உங்கள் காண்டாமிருகம் கவிதை தான்। மீண்டும் நீங்கள் பழைய மாதிரி பதிவுகளை தொடங்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் ।நாம் நாமாக இருக்கும் வரை சலிப்புகள் நம்மை அண்டுவதில்லை .
  ஆவலுடன்
  கீதா

  ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே