வெம்பிளி ஓஃப் ஜாப்னா - இறுதிப்பாகம்


இறுதிப்பாகம் 

உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை. 

வரலாற்றின் இந்த நியதிக்கு எங்கள் குச்சு ஒழுங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?

000

விடுமுறை முடிந்து வெள்ளையன் அங்கிளின் குடும்பம் லண்டன் திரும்பிப்போகும் காலமும் வந்தது.

தேவநேசன் லண்டன் போவதற்கு முன்னர் இடம்பெற்ற கடைசி புட்போல் ஆட்டத்துக்கு அவனோடு சுதா அக்காவும் வந்திருந்தார். அதுவரை வெம்பிளிப்பக்கம் தலையே காட்டாமல் இருந்த சுதா அக்கா, திடீரென்று அப்படி வந்திருந்தது புதினமாக இருந்தது. அந்த இரண்டு மாதங்களில் சுதா அக்காவில் நிறையவே மாற்றம் தெரிந்தது. அவருடைய சுருட்டை மயிரைத் தன்னுடைய லண்டன் அண்ணியைப்போலவே அவரும் ஸ்றெயிட் பண்ணியிருந்தார். பேசியல் செய்த அவரது முகம் அன்று பிறந்த எலிக் குஞ்சுகளுடைய தோல்போலக் காட்சியளித்தது. விளையாடுவதற்கு எப்போதும் பஞ்சாபி போட்டு வருபவர் அன்றைக்கு இறுக்கமாக ரீசேர்ட்டும் முழுங்கால் நீளத்துக்குக் காற்சட்டையும் அணிந்திருந்தார். ரீசேர்ட் மார்பில் ‘ஐ லவ் லண்டன்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. டெனிஸ் சப்பாத்து அணிந்திருந்தார். ஆச்சரியமாக அன்றைக்கு அக்கா எதுவுமே பேசாமல் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தேவநேசனும் அன்றைக்கு நல்ல மூடில் இருந்தான். எல்லோருக்கும் அபிராமி விலாசிலிருந்து கிழங்கு ரொட்டி வாங்கிக்கொடுத்தான். எங்கள் எல்லோரையும் லண்டனுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தன்னுடைய புட்போலை ‘வெம்பிளி ஓஃப் ஜப்னா’வுக்கு அன்பளிப்பாகத் தருவதாகச் சொல்லி பந்தை சுதா அக்காவின் கையில் கொடுத்தான். சுதா அக்காதான் லிவர்பூலின் புதிய தலைவர் என்றும் அறிவித்தான். அதனையே எதிர்பார்த்திருந்ததுபோல  லிவர்பூல் கோஷ்டி அந்த அறிவிப்பைக் கைதட்டி வரவேற்றது. செல்சிக்குத் தலைவரை எங்களையே தேர்ந்தெடுக்கச்சொன்னான். 

ஆட்டம் முடிந்து விடைபெறும்போது தேவநேசன் எல்லோருக்கும் கைலாகு கொடுத்துவிட்டுச் சொன்னான்.
‘நவ் யூ பீப்பிள் கான் மனேஜ் எலோன். குட் லக்’
000 

வெள்ளையன் அங்கிள் குடும்பம் திரும்பிப்போனபின்னர், கோயில் திருவிழா, பரீட்சை, மழை என்று அடுத்தடுத்த வாரங்களில் எம்மால் புட்போலைத் தொடரமுடியாமல் போனது. விளையாடாமைக்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்களில் ஒரு சிலர் மீண்டும் பிள்ளையார்பேணியை பழையமாதிரியே ஆடத் தொடங்கலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். இல்லை, தொடர்ந்து புட்போல்தான் ஆடவேண்டும் என்று ஒரு குழு அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தது. அரசல் புரசலாகத் தொடங்கிய சண்டை இரண்டொரு நாளில் பெரிதாகியது. ஒரு கோஷ்டி சில பேணிகளுடன் வெள்ளனவே வந்து வெம்பிளிக்குள் பிள்ளையார் பேணி ஆட ஆரம்பித்ததும், அதனைச் சுதா அக்கா கோஷ்டி புகுந்து இடைநிறுத்தி பேணிகளைத் தூக்கி எறிந்ததும் நிகழ்ந்தது. இப்படிப்பட்ட அமளி ஒன்றின் உச்ச வாக்குவாதத்தின்போதுதான் வெம்பிளி வளவை வெள்ளையன் அங்கிளின் குடும்பம் சுதா அக்காவின் பெயரில் மொத்தமாக வாங்கிவிட்ட விடயம் தெரியவந்தது. 

வளவு சுதா அக்காவுடையது என்றாகியபின்னர் பிள்ளையார்பேணி கோஷ்டி மெதுவாகப் பின்வாங்கிவிட்டது. எங்களில் பலருக்கும் அதில் சந்தோசம்தான். புட்போல் எம்மை முற்றாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது. நின்றால், இருந்தால், படுத்தால், சதா எந்நேரமும் புட்போல் பற்றிய சிந்தனைதான். அதனால் பிள்ளையார் பேணிக்கு எதிராக நாங்களும் மறைமுகமாக ஆதரவுகொடுத்தோம். தவிர காணியும் அவருக்கென்று ஆகி, பந்தும் அவர் கையில் போனபின்னர் எதிர்ப்பதில் எந்தப்பலனும் இல்லை என்றும் புரிந்தது. புட்போலில் சுதா அக்கா தலைமையிலான லிவர்பூல் அணியைத் தொடர்ச்சியாக வென்று ஆக்கிரமிப்பது ஒன்றே எங்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஒரே சிக்கல் யார் செல்சிக்குத் தலைவர் என்பதுதான். வளர்மதியும் சுட்டாவும் ஆளாளுக்கு ஆள் சேர்த்து செல்சி அணியில் தமது பலத்தை நிறுவப்பார்த்தார்கள். சுட்டாவுக்குத்தான் அணிக்குள் அதிகம் சப்போர்ட் இருந்தது. ஆனாலும் சுதாக்காவோடு வளர்மதிக்கு வாரப்பாடு அதிகம் என்பதால் அவளையே தலைவராக்கச்சொல்லி சுதா அக்கா அறிவுறுத்திவிட்டார். இப்படித்தான் செல்சிக்கு வளர்மதி தலைவியானாள். 

நாங்கள் தொடர்ந்து புட்போல் விளையாட ஆரம்பித்தோம். 

கொஞ்ச நாள்களிலேயே சுதா அக்கா தன்னுடைய பிறவிக்குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆட்டத்தில் புதிதாக ஆள்கள் இணைத்துக்கொள்ளப்படுவதும் பழையவர்கள் கொழுவிக்கொண்டு விலகுவதும் இடம்பெற ஆரம்பித்தது. இரண்டு ஆட்டங்களிலேயே சுட்டா வளர்மதியோடு பிரச்சனைப்பட்டுக்கொண்டு விலகிவிட்டான். லிவர்பூலில்தான் புதிதாகப் பலர் வந்துகொண்டிருந்தார்கள். சுதா அக்கா எங்கிருந்தோ எல்லாம் அறிமுகம் இல்லாத ஆள்களை விளையாடுவதற்குக் கூட்டிவருவார். அநேகமானோர் சோல்ட் அங்கத்தவர்களாக இருப்பர். சமயத்தில் இயக்க மோட்டர் சைக்கிள்கள் பலவும் அங்கு வரும். வெம்பிளிமீதான சுதா அக்காவினுடைய பிடி வரவர இறுகிக்கொண்டே போனது. அவர் சொல்வதே சட்டமானது. தேவநேசனும் சட்டாம்பித்தனம் காட்டியவன்தான். ஆனால் அவன் ஆங்கிலத்தில் சொன்னதாலோ அல்லது அவன் காட்டிய விதமோ தெரியாது, அவன் சட்டம் போட்டபோது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் சுதா அக்கா சொல்லும்போது எரிச்சல் எரிச்சலாகவே வந்தது. சுதா அக்கா விளையாட வரும் நாட்களில்தான் நாமும் விளையாடமுடியும். சுகமில்லாமல் அவர் வீட்டில் நிற்கும் நாள்களில் விளையாடுவதற்கு எமக்குப் பந்தையும் கொடுத்தனுப்ப மாட்டார். விளையாடும்போது நடுவராகவும் அவரே தொழிற்படுவார். புதிது புதிதாக எல்லாம் ரூல்ஸ் உருவாகும். சில நாள்களில் ஓஃப்சைட் ரூல் இருக்கும். சில நாள்களில் இருக்காது. பந்து எங்கள் கையில் பட்டால் ஹாண்ட்போல். அவர் கையில் பட்டால் அது தற்செயல். நாங்கள் உள்ளுக்குள்ளே எவ்வளவு கறுவினாலும் பந்தும் மைதானமும் அவர் பெயரில் என்பதால் எதுவுமே பேசமுடியாது திணறினோம். சுதா அக்கா தான் சப்பாத்து போடுவது மாத்திரமல்லாது லிவர்பூல் அணியினர் அனைவரும் சப்பாத்துபோடவேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆண்கள் எல்லோரும் காற்சட்டை போடவேண்டும் என்பது இன்னொரு விதி. பெண்களுக்கென்று தனியாக எந்த விதியும் கிடையாது. காரணம் பெண்கள் எவரும் விளையாட இப்போது வருவதில்லை. வந்துகொண்டிருந்த ஓரிருவரையும் அவர்களது பெற்றோர் ‘சுதா கெடுத்திடும்’ என்று போகவிடாமல் தடுத்து நிறுத்தினர். நல்ல ஒட்டாக இருந்த வளர்மதிக்கும் சுதா அக்காவுக்குமே ஒருநாள் கீசிவிட்டது. சொல்லப்போனால் பிள்ளையார்பேணி விளையாடியவர்களில் பலரும் இப்போது வெம்பிளிக்கு வருவதேயில்லை. எங்கள் வீட்டிலும் அம்மா என்னை விளையாடவிடாமல் தடுத்திருப்பார்தான். ஆனால் சென்ற தீபாவளிக்குச் சுதா அக்கா வீட்டில் அம்மா இரண்டாயிரம் ரூபா கடன் வாங்கியிருந்தார். இந்தா, அந்தா என்று அடுத்த தீபாவளி வரப்போகிறது. இன்னமும் அதை நாங்கள் திருப்பிக்கொடுக்கவில்லை. முன்வீட்டு நிலைமையும் அதுவே. நமசிவாயத்தார் வீட்டிலும் இதே நிலைதான். சுதா அக்காவின் தகப்பன் அடைவு பிடிப்பவர். எங்கள் ஒழுங்கையில் பல தாலிக்கொடிகளும் காணிப்பத்திரங்களும் அவர்கள் கையில்தான் இருந்தது. அடைவு வைத்து மீட்க முடியாததால்தான் வெம்பிளி வளவுகூட சுதா அக்காவின் பெயருக்கு மாறியிருக்கவேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தார். அதனால் எவருக்குமே சுதா அக்காவை எதிர்ப்பதற்குப் பயம். தவிர அக்காவுக்கு இயக்க சினேகிதங்கள் இருந்ததும் பலரின் வாயை அடைத்தது. 

எல்லாவற்றுக்கும் மேலே, சொல்லவே தேவையில்லை,  கப்பித்தான் அண்ணருக்கு நடந்த கதி. 

000 

அந்த வருடத்துத் தீபாவளி நாள் ஆட்டம் வந்தது. 

அதுவரை சுதா அக்கா காட்டியது வெறும் சுயரூபம் என்றால், அன்றைக்குக் காட்டினாரே, அது விசுவரூபம். 

தீபாவளியன்று பின்னேரம் ‘வெம்பிளி ஓப் ஜப்னா’வில் லிவர்பூலுக்கும் செல்சிக்குமிடையே மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி இடம்பெறும் என்று சுதா அக்கா எல்லோருக்கும் அறிவித்தார். வெற்றி பெறும் அணிக்குக் கேடயமும் இருநூறு ரூபாய் பணமும் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. போட்டியைப் பார்வையிட வருமாறு அக்கம்பக்கத்தவருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டது. சந்தியிலிருந்த சிவன் ஸ்டோர்ஸிலும் கண்ணன் லொட்ஜிலும் விளம்பர அனுசரணை பெறப்பட்டது. உதயனில் ஒரு துணுக்குச்செய்திகூட வந்தது. நிகழ்ச்சி நிரல் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. கொடியேற்றம், மாவீரருக்கு அஞ்சலி, எழுச்சிப் பாடல் என்று ஒரே அமர்க்களம். எல்லா ஏற்பாட்டையும் சுதா அக்காவே மேற்கொண்டார். 

இதுதான் சந்தர்ப்பம், தீபாவளி வெற்றிக்கிண்ணத்தை எப்படியும் வென்றுவிடவேண்டும் என்று செல்சி அணி திட சங்கல்பம் பூண்டது. இருநூறு ரூபாய்கூட அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் சுதா அக்கா தலைமையிலான லிவர்பூல் அணியை ஊருலகத்துக்கு முன்னாலே வைத்து அடித்துத் துவைக்கவேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருந்தது. பிய்ந்ததோ, பிய்யாததோ பரவாயில்லை, ஆனால் ஆட்டத்துக்கு செல்சி வீரர்கள் அனைவரும் சப்பாத்து அணியவேண்டும் என்று முடிவெடுத்தோம். போட்டிக்கு இரண்டு நாள்கள் முன்னமேயே கடுமையான பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்தோம். என்ன ஒன்று, இருந்த ஒரே பந்து லிவர்பூல் வசமாகிவிட்டதால் டெனிஸ் பந்திலேயே செல்சி அணி பயிற்சி எடுக்கவேண்டிய நிலைமை. யார் யார் எல்லாம் டிபென்ஸ், யார் யார் எல்லாம் ஸ்றைக், கோல் காப்பாளர், யார் யார் எல்லாம் சுதா அக்காவைக் கவனிப்பது என்று பக்காவாகப் பிளான்போட்டுப் பயிற்சி செய்தோம். எல்லோரும் ஒருநாள் பாஷையூருக்குச் சென்று சென் அன்ரனீஸ் கலிஸ்டர் அண்ணையிடம் உத்திகள் கேட்டு வந்தோம். லிவர்பூல் என்ன உச்சு உச்சினாலும் விடுவதில்லை என்று முடிவு செய்தோம். ஒன்றரை மணி நேர ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க பணம் சேர்த்து குளுக்கோஸ் பக்கற்றுகளை வாங்கிச் சேர்த்தோம். யார் வீட்டிலோ இருந்து முட்டை மா வந்தது. செய் அல்லது செத்துமடி நிலைமை. என் கால்களில் எப்போதும் ஒரு டெனிஸ் பந்து உருண்டுகொண்டேயிருந்தது. சாமியறையிலிருந்து குசினிவரை பந்தை உச்சி உச்சி விரட்டியபடி கொண்டுசென்று பின் பத்திக் கதவை நோக்கி கோல் அடிக்க ஆரம்பித்தேன். எங்கள் முன்னெடுப்புகளைப் பார்த்தோ என்னவோ, எங்களது வீடுகளிலும் ஆட்டத்தின்மீதான சுவாரசியம் தொற்றியிருக்கவேண்டும். ஒருமுறை நான் அடித்த பிரீகிக் புட்டுக்குழைத்துக்கொண்டிருந்த அம்மாவின் சுளகில் போய் விழுந்தது. அம்மா அகப்பக்காம்பு எடுக்கப்போறா, துலைஞ்சுது கதை என்று நினைத்தேன். ஆச்சரியமாக அம்மா பந்தை எடுத்து என்னிடம் திருப்பி எறிந்துவிட்டுச் சொன்னார். 
‘அந்தத் திமிர் பிடிச்ச சுதாவுக்கு மட்டும் நீங்கள் தீத்தி அனுப்பினிங்கள் எண்டால் உங்கட சிலிசிக்கு நானே ஒரு புட்போல் வாங்கித்தருவன்’
000 

தீபாவளி மாலையும் வந்தது. 

எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே அப்படியொரு கூட்டம் முன்னமும் வந்ததில்லை. பின்னேயும் வரப்போவதில்லை. அவ்வளவுக்குக் கூட்டம் அள்ளி எறிந்தது. கந்தர்மடம், மணத்தரை, ஆத்திசூடி, தபால்பெட்டியடி, பழம் றோட்டு, கலட்டி, கொக்குவில், பொற்பதி றோட்டு, தின்னவேலி, கல்வியங்காடு என்று நாலா பக்கத்திலிருந்தும் கூட்டம் வந்திருந்தது. இயக்க மோட்டர் சைக்கிள்கள் ஒருபுறம். சைக்கிள் வரிசை ஒழுங்கைதாண்டி பிரதான வீதியை எட்டியது. மைதானத்தின் ஒரு கரையில்  சின்ன மேசையில் ஒரு பக்கம் தண்ணிப்பந்தல். பெட்டி ஐஸ்பழம், ஜூஸ் விற்பவர்கூட வந்திருந்தார். அம்மாமார்கள் எல்லாம் சோட்டியிலும் சேலையிலும் வந்து நின்றார்கள். கொஞ்சம் படித்த அப்பாமார்கள் வீட்டிலிருந்தே எட்டிப்பார்த்தார்கள். எங்களோடு கொழுவிக்கொண்டுபோன முன்னாள் பிள்ளையார்பேணி கோஷ்டியும் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தது. வெம்பிளிக்குள் நிற்க இடமில்லாமல் ஆள்கள் மதில்களிலும் மரங்களிலும் 
ஏறிக்குந்தியிருந்தார்கள். பலர் மதிலுக்கு வெளியே சைக்கிள்களைச் சரித்து நிறுத்தி, சீற்றில் ஏறிநின்று பார்த்தனர். வளவின் ஒரு மூலையில் மேசை போட்டு, பெட்சீட் விரித்து, மேலே கேடயமும் கடித உறையில் பணமும் வைக்கப்பட்டிருந்தது. பிரதம விருந்தினராக, சுதா அக்காவின் பஜனைக்கோஷ்டி நண்பியான அரச அதிபரின் மனைவி வருகைதந்து புலிக்கொடியை ஏற்றிவைத்தார். மௌன அஞ்சலி, எழுச்சிப்பா முடிந்து, ‘வெம்பிளி ஓஃப் ஜப்னா’ ஸ்தாபகர் தேவநேசனுக்கு நன்றி கூறி சுதா அக்காவே ஆட்டத்தை ஆரம்பித்துவைத்தார். எதிர்பார்த்ததுபோலவே, ஆட்டத்தின் நடுவராகவும் அவரே செயற்படப்போவதாக அறிவித்தார். 

ஆட்டம் ஆரம்பித்தது. 

எப்படி என்று தெரியவில்லை. விசில் ஊதிய கணம்முதலே செல்சி அணி கலை வந்ததுபோல படு ஆக்ரோசமாக விளையாடியது. ஆட்டம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடமே ஒரு கோல். பன்னிரண்டாவது நிமிடம் இன்னுமொன்று. கால் மணிநேரத்திலேயே ஆட்டத்தின் போக்கு நம் கைக்குள் வந்துவிட்டதால் எமக்கு இன்னமும் சுதி ஏறிவிட்டது. எங்கள் அணியில் தவக்களை என்றொருத்தன் இருந்தான். பெயருக்கேற்றபடியே ஆள் மூன்றடித் தவ்வல். ஆனால் விளையாட்டில் பயங்கர விண்ணன். அண்ணர்தான் செல்சியின் பிரதான ஸ்றைக்கர். ஆட்டத்தின் முப்பதாவது நிமிடம் சுதா அக்கா பந்தை விரட்டிக்கொண்டு வரும்போது தவக்களை அதனை இலாவகமாகப் பறித்தெடுத்து, படுவேகமாக எதிர்ப்பக்கம் விரட்டிக்கொண்டுபோய் நான்கு பேர்களை அடுத்தடுத்து உச்சியபடி, தனியாளாக கோல் ஒன்றைப் போட்டான். போட்டவன் சனியன் போட்டகையோடு பேசாமல் திரும்பியிருக்கலாம். ஆனால் புளுகம் அதிகமாகி தவக்களை தன் டீசேர்ட்டை கழட்டி சுழட்டு சுழட்டென்று சுழட்டிவிட்டான். அதுதான் பிரச்சனையாகிவிட்டது. ஏற்கனவே இரண்டு கோல்களைப்போட்டு செல்சி முன்னிலையில் இருந்ததைத் தாங்கமுடியாமல் கறுவிக்கொண்டிருந்த சுதா அக்காவை தவக்களை செய்த வேலை மேலும் உரு ஏற்றிவிட்டது. அக்கா காளியாட்டம் உக்கிரத்தோடு விளையாடத்தொடங்கினார். ஒவ்வொருமுறையும் அவர் ஓர்மத்தோடு பந்தை விரட்டிக்கொண்டு எங்கள் பக்கம் வருவார். ஆனால் செல்சியோ மூன்று கோல்கள் அடித்த தைரியத்தில் ஒரு டிபெண்டரை எக்ஸ்றாவாகப்போட்டு பாதுகாப்பான ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டது. அதனால் ஓரிரு தடவைகள் லிவர்பூல் அணி கோல் அடிக்க முனைந்தபோதிலும் அந்த முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இடைவேளைக்கு ஒரு நிமிடம் இருக்கையில் சுதா அக்கா எப்படியோ பந்தை விரட்டிக்கொண்டு எங்கள் பெனால்டிப் பெட்டிக்குள் வந்துவிட்டார். அவரைச்சுற்றி நான்கு செல்சிகாரர்கள். அக்கா அங்கு பார்க்கிறார். இங்கு பார்க்கிறார். ம்ஹூம். பந்தை எந்தத் திசையிலும் உச்ச முடியவில்லை. ஒரு நிமிடம் கடந்துவிட்டது. ‘ஹாப் டைம், ஹாப் டைம்’ என்று நாங்கள் கத்தினாலும் அக்கா விடுவதாக இல்லை. அவர் எங்களை உச்சுவதிலேயே குறியாக இருந்தார். திடீரென்று அவர் தன் காலை எதிரில் நின்ற செல்சிக்காரனின் கால்களுக்கிடையில் செருகி வேண்டுமென்றே தடக்கி விழுந்தார். பின்னர் கோபத்துடன் எழுந்து பவுல் என்று கத்தியபடி விசில் ஊதினார். அந்த செல்சி வீரனுக்கு ரெட் கார்டும் செவிட்டில் அறையும்கூடக் கிடைத்தது. இது எல்லாமே நாங்கள் சுதாகரிப்பதற்குள் நடந்துமுடிந்துவிட்டது. என்ன ஏது என்று கேட்பதற்குள் அவரே பெனால்டி கோலையும் அடித்து, ஹாப் டைம் விசிலையும் சேர்த்து ஊதினார்.


ஸ்கோர்: செல்சி 3 - லிவர்பூல் 1 

இடைவேளையின்போது கூட்டத்தினரிடையே சிறு சலசலப்பு ஆரம்பித்திருந்தது. புட்போல் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்குக்கூட சுதா அக்கா அலாப்புகிறார் என்பது விளங்கியிருக்கவேண்டும். பழைய பிள்ளையார் பேணிக் கோஷ்டி நின்ற பக்கமிருந்து சுதா அக்கா மீது ஒரு வசை வந்து விழுந்தது. அதன்பின்னர் அந்தக் கூட்டத்துக்குள் யாரோ புகுந்து வசை சொன்னவனைத் தேடித் தாக்கியிருக்கவேண்டும். சிறு அமளிக்குப்பின்னர் அந்தப்பகுதி மொத்தமாக அடங்கியது. அதைப் பார்த்ததாலோ என்னவோ, நமக்கேன் சோலி என்று ஏனைய திசைகளில் ஏற்பட்ட முணுமுணுப்புகள் எல்லாமே அடங்கிவிட்டன. 

இடைவேளையின்போது செல்சி அணியின் பேச்சு எல்லாமே ஒன்றைப்பற்றியே இருந்தது. ரெட் கார்ட் வாங்கி பத்துப்பேரோடு விளையாடுவதுகூடப் பிரச்சனையில்லை. ஆனால் வெற்றிபெறவேண்டும் என்பதற்காகச் சுதா அக்கா செய்யப்போகும் அலாப்பல்களை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. இயலுமான அளவு அவருக்கு மிக நெருக்கமாகப் போகாமல் பார்த்துக்கொள்வது என்று முடிவானது. அவரிடமிருந்து பந்தை ஆரம்பத்திலேயே தட்டி எடுத்துவிடவேண்டுமென்பது இன்னொன்று. பெனால்டி கட்டத்துக்குள் வந்துவிட்டால் பவுல் சொல்லியோ ஹாண்ட்போல் சொல்லியோ எப்படியும் அவர் கோல் அடித்துவிடுவார் என்பது தெரிந்திருந்ததால் மேலும் அவரிடமிருந்து தள்ளியே இருக்கவேண்டுமென்பதும் முடிவானது. 

இரண்டாம் பாதி ஆட்டம். 

செல்சி அணி முன்னரைவிட முனைப்போடு விளையாடினாலும் இம்முறை கோல் போடுவது கடினமாக இருந்தது. எமக்கு வரவேண்டிய இரண்டு கோர்னர் கிக்குகளை அக்கா கொடுக்க மறுத்தார். அடித்த ஒரு கோலும் ஓஃப் சைட் என்று தடுக்கப்பட்டது. நேரம் கடந்துகொண்டிருந்தது. மூன்றுக்கு ஒன்று என்ற அளவில் செல்சியின் கையே இன்னமும் ஓங்கியிருந்தது. சுதா அக்காவும் லிவர்பூலும் என்னதான் முயற்சி செய்தபோதிலும் அவர்களும் ஒரு கோல்கூட அடிக்கமுடியாமற் திணறினார்கள். வந்திருந்த கூட்டமும் கொஞ்சம் துணிச்சலடைந்து செல்சி அணிக்கு ஆதரவாகக் கரகோசம் எழுப்ப ஆரம்பித்தது. ஆட்டம் முடிவதற்கு இன்னமும் பதினைந்து நிமிடங்களே இருந்தன. எங்களது ஒரே நோக்கம் லிவர்பூலை மற்றொரு கோல் அடிக்காமல் தடுப்பதுதான். செல்சியில் அத்தனை வீரர்களும் இப்போது தற்காப்பு ஆடடத்திலேயே முனைப்பு காட்டினார்கள். லிவர்பூல் இம்மியளவுக்குக்கூட உள்ளே நுழையமுடியாதவாறு தடுப்பாட்டம். ஒவ்வொரு தடவையும் சுதா அக்காவோ ஏனைய லிவர்பூல் வீரர்களோ பந்தை உள்ளே கொண்டுவரும்போது யாராவது செல்சிக்காரன் அதனை வெளியே உதைத்துவிடுவான். திரும்பி அவர்கள் அதை விரட்டிக்கொண்டுவருகையில் இன்னொருவன் அதனை உதைத்துவிடுவான். இப்படி சுவற்றில் அடித்த பந்துபோல அவர்களது அடிகள் எல்லாம் திரும்பிச்சென்றுகொண்டிருந்தன. லிவர்பூலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆட்டமோ முடிவடையும் தறுவாயில் இருந்தது. எம் எல்லோருக்குமே நம்பிக்கை வந்துவிடடது.  எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே முதன்முதலாக செல்சி அணி லிவர்பூலை வெற்றி கொள்ளப்போகிறது. 

அப்போதுதான் யாருமே எதிர்பாராதவகையில் சுதா அக்கா அந்த வேலையைச் செய்தார். 

வழமைபோல பந்தை செல்சியின் பக்கம் விரட்டிக்கொண்டுவந்த சுதா அக்காவை நாங்கள் மறிக்கத் தயாரானபோது, திடீரென்று கால்களால் விரட்டிவந்த பந்தை அக்கா தன் கைகளால் தூக்கினார். செல்சி அணிவீரர்கள் அனைவரும் ‘ஹாண்ட் போல். ஹாண்ட் போல்’ என்று கத்தினோம். சுதா அக்கா எம்மைச் சட்டை செய்யாமல் பந்தைக் கைகளால் கட்டிப்பிடித்துக்கொண்டே செல்சி அணிவீரர்களை உச்சிக்கொண்டு ஓடினார். செல்சி வீரர்கள் எல்லோருமே என்ன நிகழ்கிறது என்பதே விளங்காமல் திகைத்து நின்றோம். நாம் மட்டுமல்ல, லிவர்பூலும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஆச்சரியமாகப் பார்த்தது. வந்திருந்த கூட்டத்துக்கும் எதுவும் புரியவில்லை. சுதா அக்கா வேகமாக ஓடிப்போய்ப் பந்தை எங்களது கோல் போஸ்டுக்குள் எறிந்துவிட்டு கோல் என்று கத்தியபடியே கைதட்ட, அதுவரை அதிர்ச்சியில் ஆடிப்போயிருந்த லிவர்பூல் வீரர்களும் சுதாகரித்து அவரோடு சேர்ந்து கைதட்டினார்கள். செல்சியால் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. சிலர் ‘பவுல் பவுல்’ என்று கூக்குரலிட்டனர். சிலர் ‘அலாப்பல்’ என்று கத்தினர். ஆனால் சுதா அக்கா செல்சியை உடனேயே செண்டர் பண்ணச்சொன்னார். நாங்கள் இல்லை, இது சேப்பில்லை என்று கத்திக்கொண்டேயிருந்தோம். கூட்டத்திலிருந்து ‘டேய் சண்டை பிடிக்காமல் விளையாடுங்கடா’ என்று ஒரு குரல் வந்தது. ’ஒழுங்கு மரியாதையா விளையாடப்போறீங்களா இல்லையா?’ என்று அக்காவும் எம்மை மிரட்டினார். சரி இன்னமும் எங்கள் கைதானே ஓங்கியிருக்கிறது என்று நினைத்து, வேறுவழியில்லாமல் செல்சி மீண்டும் செண்டர் பண்ணியது. 

ஸ்கோர்: செல்சி 3 - லிவர்பூல் 2 

இம்முறை செல்சி பந்தை இரண்டு பாஸ்கள் பண்ணமுதலேயே மீண்டும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தத் தடவை  இன்னொரு லிவர்பூல்காரன் பந்தைக் கைகளால் தூக்கினான். இதை இப்படியே விட்டால் சரிவராது என்று அவனை நாங்கள் உடனே பிடிக்க ஓடினோம். அவன் உடனே பந்தை சுதா அக்காவை நோக்கி எறிந்தான். நாங்கள் இப்போது சுதா அக்காவைப் பிடிக்கப்போனோம். அவர் உடனே பந்தை இன்னொரு லிவர்பூல்காரனிடம் எறிந்தார். இப்படி பந்தைக் கைகளால் மாறி மாறி பாஸ்பண்ணிக் கொண்டுபோய் லிவர்பூல் மேலுமொரு கோல் போட்டது. நாங்கள் அதை அலாப்பல் என்று மீண்டும் சொல்லிப்பார்த்தோம். தேவநேசன் சொல்லித்தந்த விதிகளில் இப்படி எதுவுமில்லை என்று விளக்கிப்பார்த்தோம்.  ‘தேவநேச னுக்கு என்ன தெரியும்?’ என்று சுதா அக்கா கேட்டார். ‘லண்டன், அமெரிக்கா, ஒஸ்ரேலியா என எல்லா இடங்களிலும் இப்படித்தான் புட்போல் விளையாடப்படுகிறது’ என்று அக்கா கூறினார். கைகளால் பந்தைக் கொண்டு சென்று எதிரணி எல்லையைத் தாண்டிவிட்டால் கோல் என்பதுதான் உண்மையான விதி என்றார். கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் இது புட்போல் இல்லை ரக்கர் என்று கத்தியதை எவருமே கணக்கிலெடுக்கவில்லை. விளையாட்டைப் புறக்கணிக்கப்போவதாக நாங்கள் மிரட்டிப்பார்த்தோம். புறக்கணிப்பவர்கள் காணிப்பக்கமே இனி வரமுடியாது என்று சுதா அக்கா திருப்பி எங்களை மிரட்டினார். இந்த அமளியில் ஆட்ட நேரம் வேறு முடிந்துவிட்டது. ‘பஜனைக்கு நேரமாகிறது, வெள்ளன முடியுங்கள்’ என்று அரச அதிபரின் மனைவியும் சுதா அக்காவிடம் வந்து சொன்னார். ஆனால் சுதா அக்கா விடாமல்,  'ஐந்து நிமிடங்கள் எக்ஸ்றா டைம்' என்று அறிவித்து மீண்டும் எங்களைச் செண்டர் பண்ணச் சொன்னார். 

ஸ்கோர்: செல்சி 3 - லிவர்பூல் 3 

இனிமேல் இது சரிப்பட்டு வராது என்று சுட்டா செண்டர் பண்ணும்போதே பந்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டான். எடுத்தவன் அதை இன்னொறு செல்சிக்காரனுக்கு எறிந்தான். அவன் இன்னொருவனுக்கு. இப்படி நாங்களும் லிவர்பூல் வழியிலேயே ஆட்டத்தை ஆட ஆரம்பித்தோம். செல்சி பந்தை மாறி மாறி கைகளால் பாஸ் பண்ணியபடி லிவர்பூல் வீரர்களை உச்சிக்கொண்டு முன்னேறியது. லிவர்பூல் காரர்கள் செல்சியின் சட்டையை, பனியனை, கலிசானை, தலைமயிரை என்று ஒவ்வொன்றாக இழுத்து விழுத்தப்பார்த்தார்கள். ஒவ்வொருமுறையும் விழும்போதும் விழுபவன் பந்தை அடுத்த செல்சி வீரனுக்கு எறிவான். பந்தைப்பிடிப்பவன் அதை அப்படியே கட்டியணைத்துக்கொண்டு முன்நோக்கி ஓடுவான். அவனையும் இழுத்து விழுத்துவார்கள். அவன் மற்றவனிடம் எறிவான். இப்படி ஆளாளுக்கு பந்து கைமாறி கடைசியில் தவக்களையிடம் போய்ச்சேர்ந்தது. தவக்களை பந்தை அவுக்கென்று பிடித்தபடி எல்லோருக்கும் தண்ணிகாட்டியபடி ஓடினான். செல்சி அணியின் ஏனைய வீரர்கள் எல்லோரும் இழுத்து விழுத்தப்பட்டதால் தவக்களைக்கு இப்போது துணைக்கு எவருமில்லை. ஆனால் அவன் தனியாளாகவே எல்லோரையும் உச்சினான். அவனிடமிருந்து பந்தைக் கைப்பற்றுவது என்பது லிவர்பூலுக்கு இயலாத காரியமானது.  

இந்தா அடுத்த உச்சில் தவக்களை கோல் எறிந்துவிடுவான் என்று நாம் நினைத்தபோதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 

தவக்களை ஓடிக்கொண்டிருக்கும்போது அவனுக்குப் பின்னாலேயே வேகமாக ஓடிய சுதா அக்கா, அவனை விரட்டிப்பிடித்து, அவனது கழுசானை இழுத்து கீழே விழுத்தினார். தவக்களை ‘அம்மோய்…’ என்று கத்தியபடியே தடக்கி விழுந்தான். விழுந்தவனை எழ விடாமல் சுதா அக்காவும் அவன்மேலேயே ஏறி விழுந்தார். அதைப்பார்த்த மேலும் இரண்டு லிவர்பூல்காரர்களும் சுதா அக்காவோடு சேர்ந்து தவக்களைமேல் விழ, தவக்களை ஈனக்குரலில் கத்தியபடி உள்ளே நசிந்துகொண்டிருந்தது. வழமைபோலவே செல்சிக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. எல்லோரும் தவக்களையைக் காப்பாற்றவென ஓடினோம். இந்தச்சமயம் பார்த்து அவன் கையிலிருந்த பந்தைப் பறித்து எடுத்த இன்னொரு லிவர்பூல்காரன் வேகமாக ஓடிப்போய் செல்சியில் கோல்போஸ்டுக்குள் அதை எறிந்துவிட்டான். உடனே மிதியை விடுவித்தபடி எழுந்த சுதா அக்காவும் ஆட்டம் முடிந்தது என்று விசில் ஊதவே, லிவர்பூல்காரர்கள் எல்லோரும்  மகிழ்ச்சியில் வளையம் அடித்துத் துள்ளினார்கள். செல்ஸி அணி அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நின்றது. தவக்களை சப்பளிந்துபோய் எழமுடியாமல் அப்படியே கிடந்தது. 

இறுதி ஸ்கோர் செல்சி 3 - லிவர்பூல் 4 

லிவர்பூல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வந்திருந்த பார்வையாளர் கூட்டம் எந்த அறுப்பும் விளங்காமல் திகைத்து நின்றது. ஆனால் அங்கு நின்ற சுதா அக்காவின் ஆள்கள் கைதட்ட ஆரம்பிக்க, மெதுவாக மீதிக்கூட்டமும் சேர்ந்து கைதட்ட ஆரம்பித்தது. செல்சி அணி வீரர்கள் சிலர் சுதா அக்காவிடமும் வந்திருந்த அரச அதிபரின் மனைவியிடமும் ஆட்டவிதிமீறல்பற்றி முறைப்பாடு செய்தார்கள். தேவநேசன் சொல்லித்தந்த விதிகளில் கைகளால் ஆடும் விதி இல்லை என்று எடுத்துச்சொன்னார்கள். ‘அவனுக்கு ஒன்றும் தெரியாது, இங்கிலாந்தில் கைகளாலும் ஆடுவார்கள்’ என்று சுதா அக்கா திரும்பவும் பழைய கதையையே சொன்னார். வேண்டுமானால் அவனுடைய முகவரி தருகிறேன், கடிதம் எழுதிக் கேட்டுப்பாருங்கள் என்றார். அங்கிருந்த அத்தனை பெரியவர்களிடமும் நாம் முறைப்பாடு வைத்தோம். ‘ஊருலகத்தில மனுசருக்கு இதைவிட எத்தினை பிரச்சனையள் இருக்கு. உங்கட விளையாட்டுப் பிரச்சனையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று அவர்களும் கைவிரித்து விட்டனர். இறுதியில் சுதா அக்காவின் பேச்சே அங்கு எடுபட்டது. அரச அதிபரின் சிறப்பு உரை முடிந்ததும் சுதா அக்கா தலைமையிலான லிவர்பூல் அணிக்குக் கேடயம் வழங்கப்பட்டது. 

செல்சி அணி பரிசளிப்பு நிகழ்வைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்துவிட்டு, நாரி முறிந்த தவக்களையை நேர்சிங்கோமுக்கு தூக்கிக்கொண்டுபோனது. 

000 

அன்றைய தீபாவளி நாள் ஆட்டத்திற்குப்பின்னர் செல்சி அணி வீரர்கள் எவரும் ‘வெம்பிளி ஓஃப் ஜாப்னா’ மைதானத்தில் விளையாடப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள். எவருமே சுதா அக்காவோடும் ஏனைய லிவர்பூல் அணியினரோடும் இனிமேல் சகவாசமே வைப்பதில்லை என்று சபதம் பூண்டார்கள். தவக்களைதான் அதில் கடும்பிடியாக நின்றான். ஒவ்வொருத்தரிடமும்  ‘அம்மாணை’ சத்தியம் வாங்கினான். அதற்குப்பிறகு செல்சியின் பல வீரர்கள் பணிக்கர் வளவில் கிரிக்கட் விளையாடப்போனார்கள். சிலர் ஒழுங்கைக்குள்ளேயே பிள்ளையார்பேணி விளையாட ஆரம்பித்தார்கள். சிலர் ஏ-போல் விளையாடிப்பார்த்தார்கள். ஆனாலும் வெம்பிளியும் புட்போலும் லிவர்பூலும் இல்லாததால் எங்கள் செல்சி அணி மொத்தமாகவே உடைந்துபோனது. அதேசமயம் லிவர்பூல் வீரர்கள் தொடர்ந்து அந்த மைதானத்தில் கைகளால் பந்து விளையாடி வந்தார்கள். செல்சிக்குப் பதிலாக ஆர்சனல் என்று ஒரு அணி அங்கே உருவானது. விளையாட்டில் அவ்வப்போது அடிபாட்டுச்சத்தங்களும் கூச்சல்களும் வெம்பிளிப்பக்கமிருந்து கேட்பதுண்டு. ஆட்டங்களைப்பார்க்கவென்று கூட்டமும் திரள ஆரம்பித்தது. கொஞ்சநாள்களிலேயே எமக்கு இருப்புக்கொள்ள முடியவில்லை. பழைய செல் சி அணியின் வீரர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக மீண்டும் வெம்பிளியில் போய் இணைந்துகொண்டோம். இம்முறை சுதா அக்கா எங்களை ஒரே அணியில் இணைந்து ஆடவிடாமல் லிவர்பூலிலும் ஆர்சனலிலும் பிரித்துவிட்டார். சுட்டாவை சேர்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். தவக்களை செத்தாலும் வெம்பிளிக்கு வரமாட்டேன் என்று வீம்புக்கு நட்டுப்பிடித்துக்கொண்டிருந்தான். வெம்பிளியில் ஆட்டம் சூடாகவும் சுவாரசியமாகவும் போய்க்கொண்டிருந்தது. ஆள்களைப் பிடித்து இழுப்பதும் விழுத்துவதும் உச்சுவதும் ஓடுவதுமாக தேவநேசன் சொல்லிக்கொடுத்த புட்போல் முற்றாகவே மறக்கப்பட்டு புதியதொரு ஆட்டம் அங்கே விளையாடப்பட்டுக்கொண்டிருந்தது. 

அதுவும் கொஞ்சக்காலம்தான். 

சில மாதங்களிலேயே இயக்கத்துக்கும் அரசுக்குமிடையில் மீண்டும் போர் ஆரம்பிக்கவும்,  இரண்டு தடவைகள் வெம்பிளிக்கு அருகில் பொம்பர் குண்டு போட்ட கையோடு அங்கு விளையாட்டு நிறுத்தப்பட்டது. சுதா அக்கா மீண்டும் மாணவர் அமைப்பில் தீவிரமாக இயங்கி ஆட்சேர்ப்புப் பிரசாரங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார். வீதி நாடகங்களில் முகத்தில் கரிபூசி நடித்தார். தவக்களையின் சப்பளிந்த நாரி விரைவில் சரியாகிவிட்டது. ஒருநாள் டியூஷனில் நடந்த பிரசாரத்தோடு அவனும் சில நண்பர்களும் இயக்கத்தில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். வளர்மதி பின்னாளில் ஒரு வங்கியாளராகிவிட்டாள். அவள் கலியாணம் கட்டியது அந்த சுட்டாவை. தவக்களைதான் பாவம், தவறுதலான ஒரு வெடிவிபத்தில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகி ஈழநாதத்தின் ஒருநாள் பத்திரிகைச் செய்தியோடு காணாமல் ஆக்கப்பட்டான். 

ஒருநாள் திடீரென்று சுதா அக்கா உட்பட்ட வெள்ளையன் அங்கிளின் மொத்தக் குடும்பமும் இரவோடு இரவாகச் சத்தமில்லாமல் இந்தியாவுக்கு ஓடிவிட்டதாகச் செய்தி பரவியது. எப்படிப்போனார்கள் என்றே ஒருவருக்கும் தெரியவில்லை. அடுத்த ஆண்டே சுதா அக்காவுக்கு லண்டனில் திருமணம் நடந்துவிட்டதாக ஒழுங்கையடியில் பேசிக்கொண்டார்கள். ‘வெம்பிளி ஒப் ஜப்னா’ மைதானத்தையும் அதற்குப்பக்கத்திலிருந்த வெள்ளையன் அங்கிளின் காணி வளவையும் இயக்கம் கையகப்படுத்திக்கொண்டது. ஆரம்பத்தில் அங்கே தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு அலுவலகம் ஒன்று இயங்கியது. வெம்பிளியில் விதம் விதமான நாற்றுப்பாத்திகள் எல்லாம் வைத்து வளர்த்து விற்பனையும் செய்தார்கள். யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்ததும் அந்த இடம் ஈ.பி.டி.யின் காம்ப் ஆனது. பின்னர் அங்கே ஒரு ஐடி நிறுவனம் அமைக்கப்பட்டது. போர் ஓய்ந்தபின்னர் வெள்ளையன் அங்கிளின் குடும்பத்தினர் மீண்டும் தங்கள் காணியை மீட்டெடுத்தார்கள். வெம்பிளியில் ‘விஷ்ணு மஹால்’ என்ற பெயரில் திருமண மண்டபம் ஒன்றை கட்டிக்கொண்டார்கள். அதன் பின்னர் எங்கள் குச்சு ஒழுங்கைக்கு என்று தனியாக ஒரு பெயரும் வந்துவிட்டது. 

விஷ்ணுமகால் வீதி.

000 

சென்றமுறை நல்லூர்த்திருவிழாவுக்கென நான் ஊருக்குச் சென்று தங்கியிருந்த சமயம் வெள்ளையன் அங்கிளின் குடும்பமும் லண்டனிலிருந்து வந்திருந்தது. தேவநேசன் ஒரு சைனீஸ்காரியைத் திருமணம் முடித்திருந்தான். இரண்டு பிள்ளைகள். சுதா அக்கா குடும்பமும் வந்திருந்தது. சுதா அக்காவின் கணவர் லண்டனில் டைல்ஸ் கடை வைத்திருக்கிறாராம். மூன்று பிள்ளைகள் ஆகியிருந்தது. அம்மாதான் இந்த விடுப்புகளை எல்லாம் சொன்னார்.  
‘அவள் சைனீஸ்காரி இவரை சிட்டிசனுக்காகத்தான் மடக்கியிருக்கிறாள். நீ வேணுமெண்டாப் பாரேன், லண்டன் சிட்டிசன்சிப் கிடைச்சதும் அவள் ஒரு வெள்ளையோட தொத்திடுவாள்,  இவர் பிள்ளையளை பாக்கேலாம, இஞ்ச வந்து பேப்பர்ல மணமகள் தேவை எண்டு விளம்பரம் போடுவார் ... ஒரு அறுந்த குடும்பம்’ 
எங்கள் ஒழுங்கை வரலாற்றிலேயே மாறவே மாறாத ஒன்று என்றால் அது என் அம்மாவின் விடுப்புக்கதைகள்தான்.

வந்து நின்ற சமயத்திலேயே, சுதா அக்காவின் மூன்றாவது மகளின் சாமத்திய சடங்கையும்  அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கும் அழைப்பு வந்திருந்தது. அம்மா மட்டும் போனால் போதும்தானே என்றபடி நான் அழைப்பிதழைத் திறந்து பார்த்தேன். இடம்  விஷ்ணுமகால் என்றிருந்தது. அட,  எங்களது ‘வெம்பிளி ஒப் ஜப்னா’. 
‘நானும் வாறன் அம்மா’ 
அன்று காலையிலேயே ஒழுங்கை முழுதும் நாதஸ்வரமும் தவிலும் சுதி கலக்கியது. நாங்கள் விஷ்ணு மகாலுக்குள் நுழையும்போது ஒரு பாண்டு இசைக்குழுவும் வந்திறங்கிக்கொண்டிருந்தது. கொண்டாட்டத்திற்கு வந்திருந்தவர்கள்  எல்லோருமே புதியவர்களாக இருந்தார்கள். எனக்கு அங்கு மண்டபத்துக்கு அடியில் கிடந்த வெம்பிளி மாத்திரமே பரிச்சயமாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட வாசற்கதவு இருக்குமிடத்தில்தான் பெனால்டி பொக்ஸ் இருந்தது. சுதா அக்கா வேண்டுமென்றே இடறிவிழுந்து பெனால்டியில் முதல் கோல் அடித்த இடம். அலங்கார மேடைக்கு இடதுபக்கம்தான் தவக்களை சப்பளிந்து கிடந்தான். வரலாற்றில் கொஞ்சம் பின்னே போனால், நாதஸ்வர கோஷ்டி இருந்த இடத்தில்தான் நாங்கள் பிள்ளையார்பேணி அடுக்கியிருப்போம். எவ்வளவு சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்த ஆட்டம் அது. எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல். எப்போது இந்த சுதா அக்கா வந்து சேர்ந்தாவோ அப்போதே தரித்திரமும் கூட வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. ச்சைக்.

தேவநேசன் தூரத்தில் யாரோடோ கதைத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கையில் பொது நிறத்திலே ஒரு சீனக் குழந்தை எல்லோரையும் விழுங்கிவிடுவதுபோலவே பார்த்தது. தேவநேசன் என்னைக் கவனித்திருப்பானா என்று தெரியவில்லை. கவனித்திருந்தாலும் மட்டுக்கட்டியிருக்கச் சாத்தியமில்லை. அவன் எத்தனையோ நாடுகளுக்குப் பயணம் செய்து எத்தனையோ பேர்களுடன் புட்போல் ஆடியிருப்பான். வெம்பிளியில் பத்தோடு பதினொன்றாக விளையாடிய என்னை எப்படி ஞாபகப் வைத்திருக்கப்போகிறான்? சுதா அக்காவைத்தான் மட்டுக்கட்டவே முடியவில்லை. மூன்று லிவர்பூல் சுதா அக்காக்களைச் சுற்றிக்கட்டியதுபோல உப்பியிருந்தார். இந்த சைசில் மாத்திரம் தவக்களைமேலே அவர் விழுந்திருந்தால், சீமான் அந்த இடத்திலேயே செத்துப்போயிருப்பான்.  பாவம் தவக்களை.
‘வாங்கோ தம்பி, எப்பிடி இருக்கிறீங்கள்?’ 
சுதா அக்கா என்னை அடையாளம் கண்டுகொண்டாரா இல்லை சும்மாதான் வரவேற்றாரா என்று சந்தேகமாயிருந்தது. தயக்கத்துடன் கேட்டேன். 
‘என்னை ஞாபகம் இருக்கா அக்கா?’ 
‘உம்மை எல்லாம்  மறப்பனா? தம்பி எங்கட செல்சிண்ட  டிஃபெண்டர்தானே?’ 
அக்கா கண்ணடித்தபடியே சிரிக்கவும், நானும் பதிலுக்கு அபத்தமாகச்  சிரித்தேன். 

வெளியே விஷ்ணு மகால் வீதியில் பாண்டு வாத்தியம் ஆர்ப்பரிப்புடன் முழங்க ஆரம்பித்தது . 

-- முற்றும் --

1 comment :

  1. ரொம்ப இயல்பான கதை தலைவா. எல்லா யாழ்ப்பாண ஊரிலும் 80-90 காலத்தில் சிறுவர்களாக இருந்தவர்களுக்கு நினைவை மீட்ட வைக்கும் ஒரு காவியம் என்றால் மிகையாகாது.

    அது சரி பாஸ் ஒரு சின்ன doubt கதையின் போக்கில் பலரை போட்டு தாக்கு தாக்கு என தாக்கியிருக்கிறீர்கள். சும்மா safety க்கு சொந்த அம்மாவையும் வறுத்து எடுத்திருக்கிறியள். எப்பிடி இந்த ஆட்களை இனி real life ல face பண்ணுவியள்?

    ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே