படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின் இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது. தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை மீன்கள் ஆற்றின் படுக்கையடியில் இருந்த கற்களுக்குள் ஒளிந்திருந்தன. கர்ணனின் கவச குண்டலங்களை கவர்ந்து சென்ற நாளது போன்று இன்றைக்கும் சூரியன் தயங்கித்தயங்கி வெளிவரலானான். அவனோடு இழவுவீட்டில் ஊடல் கொண்டன தாமரைச்செடிகள். என்றுமே இணை பிரியாத மகன்றில் பறவைகள் தன் துணைகளைக்காணாமல் தென்திசை தேடி பறந்துகொண்டிருந்தன. இராமன் காடேகிவிட்டான்.