Skip to main content

Posts

வட்டக்கச்சி மகா வித்தியாலயம்

காலை எழுந்தபோது மின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது.  “வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்” லிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்?’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.

தமிழ் ஊக்குவிக்குப்போட்டிகள்

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது.  போட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்

மடுல்கிரிய

வார இறுதியில் மெல்பேர்னில் இடம்பெற்ற எழுத்தாளர் விழாவைப் பார்க்கச்சென்றிருந்தேன். விழாவுக்கு மடுல்கிரிய விஜேரத்ன வந்திருந்தார். மடுல்கிரிய என்ற பெயர் ஈழத்து வாசகர்களுக்கு மிகப் பரிச்சயமானது. அவர் ஒரு மொழியியல் நிபுணர். ஏராளமான தமிழ் நூல்களை சிங்களத்துக்கும், சிங்கள நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்த்தவர். சரளமாகத் தமிழில் உரையாடக்கூடியவர். அவருடைய பேச்சைக்கேட்பதற்காகவே ஏழு கடல், ஏழு மலை தாண்டி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். 

"ஜெயக்குமரன்" என்கின்ற...

என் அக்காமார்களுக்கு அம்மா தனக்குப் பிடித்தமாதிரியே பெயர் வைத்துக்கொண்டார். அறுபதுகளின் இறுதியில் வீரகேசரியில் ரஜினி என்றொரு எழுத்தாளர் தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரின் பெயரையே எங்கள் மூத்த அக்காவுக்கும் வைத்ததாக அம்மா சொல்வார். அந்த எழுத்தாளர் ரஜினி இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் நாவலை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியாது. ஆனால் எப்படியோ அக்காவின் பெயரில் ஏறிக்குந்திவிட்டார். இப்படி எழுத்தாளர்களின், இலக்கியப்பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. லாகிரியின் “The Namesake” அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான். “லாகிரி”யே ஒரு அழகான பெயர்தான். பொன்னியின்செல்வனிலிருந்தும் பலர் பெயர் எடுப்பதுண்டு. வர்மன், அருண்மொழி, குந்தவை, குந்தவி, நந்தினி, மணிமேகலை என்று பல பெயர்களைக் கவனித்திருக்கிறேன். இரண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தம் பெயரை கதைப்பாத்திரங்களிலிருந்து வைத்திருக்கிறார்கள். சுஜாதாவின் வசந்த் ஒன்று. தாஸ்தாவஸ்கியின் மிஷ்கின் இன்னொன்று.

கொட்டக் கொட்ட விழித்திருத்தல்

மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.

காற்று வெளியிடை

எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம். நீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர்  வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடும். நீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீரு

ஸ்டூடியோ மாமா

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழமாற்றத்தி்ல் “ஸ்டூடியோ மாமா” பற்றி எழுதியிருந்தேன். சென்றவாரம் கோபி அண்ணாவும் அவரின் நண்பர்களும் பேபி ஸ்டூடியோவுக்குப் போனசமயத்தில் மாமாவைக் கண்டிருக்கிறார்கள். கூடவே நான் எழுதியதும் ஞாபகம் வந்து அவருக்கு இதை வாசித்துக் காட்டியிருக்கிறார்கள். “I met the baby studio owner and told him about the blog. When I showed him he was in tears. Especially when he heard that he was like Ilayaraja” வட்ஸ்அப் மெசேஜை வாசித்தபோது சிரிப்பு, நிறைய அந்தரம், பயங்கர சந்தோசம் ஏற்பட்டது. கோபி அண்ணாவுக்கு நன்றி. இளையராஜாவின் இரண்டு படங்களையும் அண்ணர் எடுத்து அனுப்பியிருந்தார். அந்தப்பதிவு மீண்டும்.

வெற்று முரசு

                                                                        அதிகாரம் என்ற சொல் ஆலமரங்களில் ஒட்டுண்ணியாகப் படரும் குருவிச்சைத் தாவரம் போன்றது. அது தான் அடையாகும் மொழியையே தனது விருந்து வழங்கியாக்கி முழுங்கிவிடவல்லது. மொழியின் எந்தச்சொல்லோடும் பொருந்திவர வல்லது. அதிகாரம் போதை. அதிகாரம் நஞ்சு. அதிகாரம் அகங்காரம். அதிகாரம் மமதை. அதிகாரம் கோபம். அதிகாரம் மடமை. அதிகாரம் மாயை. அதிகாரம் அவசரம். அதிகாரம் அரைவேக்காட்டுத்தனம். அதிகாரம் கவர்ச்சி. அதிகாரம் காமம். அதிகாரம் அடிமைத்தனம். அதிகாரம் வீழ்ச்சி. அதிகாரம் கீழ்மை. அதிகாரம் துஷ்பிரயோகம். அதிகாரம் இறை. அதிகாரம் மையம். அதிகாரம் போலி. அதிகாரம் பண்பாடு. அதிகாரம் இனம். அதிகாரம் மனிதம். அதிகாரம் மொழி. ஆனால் தனியராக அதிகாரத்தின் அர்த்தம்தான் என்ன?

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

நேற்று இடம்பெற்ற “அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது” ஒன்றுகூடல் மிகுந்த மனத்திருப்தியோடு நடந்து முடிந்தது. வாசிப்பின் உந்துதலில் தூரத்தையும் பொருட்படுத்தாது பன்னிரண்டுபேர் இணைந்திருந்தார்கள். எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் சம்மணமிட்டு, சுற்றி உட்கார்ந்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் என்பது ஒரு நீண்டகாலக் கனவு. சாத்தியமாக்கியதற்கு அனைவருக்கும் நன்றிகள்.

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

அது என்னவோ தெரியாது, கடந்த ஒரு சிலமாதங்களாகவே அசோகமித்திரன் புராணம்தான். ஒலிப்புத்தகத்தில் அவருடைய சிறுகதைகளைக் கேட்டு, அது பற்றிப் பேசுவதற்குத் துணை வேண்டுமென்று சொல்லிக் கேதாவையும் கேட்கவைத்துப் பின்னர் நித்தமும் காலையில் வேலைக்குப்போகையில் ஒரு மணிநேரம் தொலைபேசியில் அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம்.

இக்கரைகளும் பச்சை 4: பஹன

“வரேக்க சிங்களப்பேப்பர் கொஞ்சம் எடுத்தாறீங்களா? மரக்கறி சுத்திவைக்க ஒண்டும் இல்லை” தமிழ்க்கடை வாசலில் மெல்பேர்ன் நகரத்து இந்திய, இலங்கை இலவசப் பத்திரிகைகள் ஒருபக்கமாகச் சிதறிக்கிடந்தன. அநேகமானவை ஆங்கிலப் பத்திரிகைகள். சிலது சிங்களத்தில். பக்கத்திலேயே விளம்பரக்கட்டுகள். லைக்கா மொபைல் தொட்டுப் பரதநாட்டிய வகுப்புவரை அச்சடிக்கப்பட்ட விளம்பரங்கள். எல்லாவற்றிலும் பெண்கள் தெரிந்தார்கள். இந்தியப்பத்திரிகைகளில் பொட்டு வைத்திருந்தார்கள். லங்கா டைம்ஸ் முகப்புப்பக்கத்தில் திருமணவுடையில் ஒரு அழகான சிங்களத்துச் சின்னக்குயில் சிரித்துக்கொண்டிருந்தது. மெல்லிய தங்கநிறத்தில் ஸீத்ரூ சேலை அணிந்து, கழுத்தில் ஆரம், நெற்றிச்சுட்டி, நிறைந்த சிரிப்பு, சிங்களத்திகளுக்கேயுரிய மேல்நோக்கி எறியும் கண்கள் என்று, இன்னமும் சில நிமிடங்களில் புட்டவிக்கும் நீத்துப்பெட்டியைத் தலையில் அணிந்தபடி தோன்றப்போகும் கண்டிய இளவரசனுக்காகக் காத்திருக்கும் மணமகள். தூசி படிந்து, கட்டுக்குலைந்து, கால்களுக்குள் மிதிபட்டு.  எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாய்ப் பொறுக்கி கார் டரங்கில் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.

சோமப்பா சொன்ன கதை

விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களைக் கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாகக் கமம் செய்து வருபவர்கள். பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும்தான் அவர்கள் வாழ்வு. அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைத்தே ஆகவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும் உழைப்பார்கள். பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்குப் போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளைகளில் வெள்ளம் பயிரை மேவிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. அவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றது. அடிக்கடி பஞ்சப்பாடு. ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை தவறாமல் அரசனுக்கு திறை செலுத்துவார்கள். மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள்.  விருத்தேஸ்வரம் நல்லவர்களைக் கொண்ட தேசம்.

வழிகாட்டிகளைத் தொலைத்தல்

ஒரு மழை நாள் இரவில் வேதாளத்தைத் தோளில் போட்டவாறு வீடு திரும்புகையில் அது கேட்ட கேள்வி இது. இலக்கியம் என்பது சமூகத்தினுடைய வழிகாட்டி, அது மானுடத்தை மேம்படுத்துகிறது. இலக்கியமே அகவயமான ஈடேற்றங்களுக்கு வழிகோலுகிறது. நம்மைச் செழுமைப்படுத்துகிறது. காலவோட்டத்தில் அறம் என்பதன் புறவரைவினை மீள்பார்வை செய்து சீர்திருத்துவதும் அதுவே. இவையெலாம் உண்மை எனின் இத்தகைய அற்புதமானதொரு சமூகக்கருவி ஏன் பொதுப்புத்தியில் அதிகம் தாக்கம் செலுத்தத் தவறுகிறது? இலக்கியங்களின் இருப்புக்கு மத்தியிலும் எப்படி நம் சமூகம் இப்படி வன்முறைப்போக்கோடு முழித்துநிற்கிறது? பொதுப்புத்தியைக்கூட விலத்திவைப்போம். இலக்கியம் அதனைப் படைப்பவரைக்கூடச் செழுமைப்படுத்துவதாகத் தெரியவில்லையே? போட்டியும் பொறாமையும் கோபமும் வன்மமும் பொய்யும் இகழ்வும் இன்னும் பல தீக்குணங்களும் இலக்கியவாதிகள் உட்பட எல்லோர் மத்தியிலும் வியாபித்து நிற்கிறதே? அறத்தின் உபாசகர்கள் பலரிலும் அறம் பொய்த்து நிற்பது பரவலாக இடம்பெறுகிறதே? இது முரண் அல்லவா? இலக்கியத்தின் நோக்கம் மீதான பிம்பம் அதன் உபாசகர்களால் அவர்களுடைய இருத்தலுக்காக அபரிமிதமாகக் கட்டமைக்கப

ஊக்கி

“Yarl IT Hub” நிறுவனத்தினர் “ஊக்கி” என்கின்ற மென்பொருள் எழுதும் பயிற்சி நெறி ஒன்றுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இக்கரைகளும் பச்சை 3 : மினோஸா

“அடுத்த திங்கள்கிழமை முதல் எங்களுடைய அலுவலக நண்பர் மினோஸ் ஹென்றிக்பெண்ணாக அறியப்படுவார்” மனிதவள முகாமையாளரிடமிருந்து வந்திருந்த அந்த மின்னஞ்சலை நம்பமாட்டாமல் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன். வெள்ளி மாலை அலுவலக நாள் முடிவடையும் சமயத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. நம்மோடு கூட வேலை செய்பவன் ஒருவன் பெண்ணாக மாறுகிறான் என்ற செய்தியை எப்படி சீரணம் செய்வது என்று தெரியவில்லை. ஒருவனை இனி ஒருத்தி என்று விளிக்கவேண்டும். அவன் இனிமேல் அவள். எப்படி முடியும்? இதெல்லாம் சாத்தியந்தானா? ஒரு மின்னஞ்சலிலேயே செய்து முடித்துவிடலாமா? 

இக்கரைகளும் பச்சை 2 – கொண்டாட்டங்களின் நகரம்

Credit : Shane Bell மெல்பேர்னில் எனக்கு மிகப்பிடித்த விடயம், இந்நகர மையத்தின் இரவுகள்தான். இதன் இரவுகள் எப்போதுமே பன்முகப்பட்ட கலை அடையாளங்களால் நிரம்பியிருக்கும். நகரம் முழுதும் வரலாற்றின் பலவிதமான கலைவடிவங்களுக்காக மையங்களையும் நிலையங்களையும் திறந்துவைத்து உலகம் யாவிலுமிருந்து கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமைகளை வருடம் முழுதும் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். எம்முடைய குட்சொட் பார்ட்டிகளையும், அரங்கேற்றங்களையும், வெறுப்பையும் சோர்வையும் உமிழும் தமிழ் விழாக்களையும் வாராவாரம் வெளியாகும் சிங்கம்3 வகையறாக்களையும் சற்றுப் புறந்தள்ளி, வெளியே எட்டிப்பார்த்தோமானால் மெல்பேர்னின் குளிர் இரவு அவ்வளவு அழகாகத் தெரியும்.

ஜல்லிக்கட்டு - கடிதம்

ஜேகே, அதிக பணிச்சுமையில் இருப்பது போல் தெரிகிறது, அப்படியென்றால் இந்த ஈமெயிலுக்கு பதிலெழுத வேண்டாம். கீழே நீங்கள் எழுதியது: "ஒரு இனம் அடிமைப்பட்டுக் கிடந்தால் உடனே "புறப்படு, பொங்கியெழு, புரட்சி" என்று கோபாவேசத்தோடு முகநூல் எனும் பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் போடுவார்கள். ...............ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையைப் போடவும், ரோட்டிலே சிதறிக்கிடக்கும் பழைய குப்பைகளை எல்லோரும் மறந்துவிடுவார்கள். .............................கேட்டால் சமூக வலைத்தளம் என்பார்கள். குப்பை தொட்டிகளிலேயே பூமிக்கிரகத்தின் அத்தனை புரட்சிகளும் எழுச்சியும் வீழ்ச்சியும் இடம்பெறுகின்றன." இப்படியெழுதிட்டு, தமிழ்நாட்டில் நடந்த தன்னெழுச்சி போராட்டத்தை பற்றி (ஆதரித்தோ/எதிர்த்தோ) எதுவும் சொல்லாமல் விட்டது ஏன்? கேட்கனும் நினைச்சேன் கேட்டுவிட்டேன். மோகன்

புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்

சொல்வனம் இணையத்தில் வெளிவந்துள்ள அ. முத்துலிங்கம் சிறப்பிதழில் நான் எழுதிய "புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்" என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. //தமிழில் ஒரு உதாரணத்தை எடுத்துப்பார்க்கலாம். சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.// மேலும் வாசிக்க.. http://solvanam.com/?p=48404

கிடுகுவேலி விசாகன் - அஞ்சலி

இன்று காலை இன்னுமொரு மரணம் எதிரே வந்தது.  நண்பர் விசாகன் சமூக வலைத்தளங்களினூடு அறிமுகமான ஒரு நண்பர். நேரிலும் சந்தித்திருப்போமே தெரியாது. சந்தித்திருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்திருக்கமாட்டேன். விசாகன் என்றால் அவருடைய என்றைக்கும் மாறாத, சிரித்த முக, புரபைல் பிக்சரும் கிடுகுவேலியும் அவர் இடும் பதிவுகளும்தான் ஞாபகம் வரும். சின்னமணியின் வில்லிசையையும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியையும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டையும் கம்பன் விழாக்களையும் நானும் அவரும் வெவ்வேறு மண் கும்பிகளில் இருந்து ரசித்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கடைகளில் நாங்கள் அருகருகே நின்று கச்சானோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கியுமிருக்கலாம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் “நிலாக்காயும் நேரம்” பாடலை அவரவர் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறோம். நான் வடக்குவீதியில் பார்த்துரசித்த ஹால்ப்சாரியை அவர் தேரடியில் கண்ணுற்றிருக்கலாம். என் கொல்லைப்புறத்துக் காதலிகள் அவருக்கும் கொல்லைப்புறத்துக் காதலிகள். அருண்மொழிவர்மனுக்கும் காதலிகள். பாலாவுக்கும் காதலிகள். சயந்தனுக்கும் அதே. நிலாவை அவரவர் முற்றங்களிலிருந்தும் வியந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வொருவ

இக்கரைகளும் பச்சை 1 – பருப்புக்கறி வாங்கிய பெண்

மெல்பேர்னின் புறநகர்ப்பகுதியான எப்பிங்கில் இருக்கும் “தமிழ் பலசரக்குக் கடை” ஒன்றுக்கு “மட்டன் ரோல்ஸ்” வாங்கச் சென்றிருந்தேன். மட்டன் ரோல்ஸ் தாச்சியில் பொரிந்துகொண்டிருந்ததால் கடைக்காரர் என்னைச் சற்றுநேரம் காத்திருக்கும்படி கூறினார். பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றால் அந்தப்பத்து நிமிடங்களுக்குள் நான் கடையை இரண்டுதடவை சுற்றிபார்க்கவேண்டிவரும், ஆங்காங்கே சில பொருட்களை எடுக்கலாம், இரண்டு ரோல்சுக்கு வந்தவன் இருபது டொலர்களுக்கு சாமான்கள் வாங்குவான் என்று கடைக்காரர் எதிர்பார்த்திருக்கக்கூடும். நான் உள்ளே சுற்றாமல் வாசலிலேயே நின்று விடுப்புப்பார்க்க ஆரம்பித்தேன்.