Skip to main content

Posts

நிரோஜன்

முதற்பாகம் : அருண்மொழி இரண்டாம் பாகம் : பார்த்திபன்   ‘வானம் திறந்தால் மழை இருக்கும்…’ என்று பாடிக்கொண்டிருந்த சித்ராவை அப்பிள் மப்ஸ் பெண் இடைநடுவில் குறுக்கிட்டாள். “உங்கள் பாதையில் நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்றுப் பாதையில் ஒன்றில் மூன்று நிமிடங்கள் சீக்கிரமாகவே செல்லலாம். மாற்றப்போகிறீர்களா?” நிரோஜன் ‘நோ’ என்று சொல்லவும் அந்தப்பெண் எந்தச் சுழிப்புமில்லாமல் நன்றி சொல்லி மீண்டும் சித்ராவுக்கு வழிவிட்டாள். ‘என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்’ என்று அவர் குரல் உருகி வழிந்தது. எத்தனை அழகான பாட்டு இது. எதைப்பற்றியும் சட்டை செய்யாமல் அந்த இடத்திலேயே காரை வீத்யோரம் நிறுத்திவைத்து, பாட்டை முழுதாய் ரசித்துக் கேட்டால் என்ன? ஜெயச்சந்திரனின் காந்தக்குரல் தொடர்ந்து தாலாட்டியது. “இரவைத் திறந்தால் பகல் இருக்கும். என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய். என் மேல் …” படக்கென்று சுயநினைவு வந்து கண்களைத் திறந்தவன், சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்ததை இறுதிக் கணத்திலே கவனித்துச் சடுதியாக பிரேக் போட, கார் ஒருமுறை தூக்கிக் குலுங்கி நின்றது.

பார்த்திபன்

முதற்பாகம் : அருண்மொழி பார்த்திபன் மறுபடியும் டொய்லட்டுக்குள் அவசரமாக ஓடினான்.  சிறுவயதிலிருந்தே அவனுக்கு இதுவொரு பெரும் பிரச்சனை. ஏதாவது பரீட்சை என்றால். மேடையில் ஏறிப் பரிசு வாங்குவது என்றால். வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும்போது அடுத்த பெயர் அவனது என்றால். தவமணி வாத்தி ரவுண்ட்ஸ் வந்தால். யாரேனும் வீடுகளுக்கு விஸிட் சென்றால். விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால். வீதியில் செல்லும்போது தெரிந்தவர்கள் எதிர்ப்பட்டால். தூரத்தே பொலீஸ் வாகனம் நின்றால். டெண்டுல்கர் சேஸிங் செய்தால். டெலிபோன் அடித்தால். இப்படி எந்தச் சின்ன டென்சன் என்றாலும் எங்கிருந்தோ ஒரு பூரான் நுழைந்து குடல்வழியே ஊர ஆரம்பித்துவிடுகிறது.  ஒவ்வொரு தடவையும் அவன் புதிதாகக் காதல் வயப்படும்போதும் வயிற்றைக்குழப்பி, ‘இந்தா இப்போதே கலக்கி அடிக்கிறேன்’ என்று அது பாவ்லா காட்டும். ஆனால் உள்ளே போய்க்குந்தினால் சனியன் பூரான் சருகுக்குள் போய்ப்பூந்துவிடும். சிறிதுநேரம் முக்கிவிட்டு இது வேலைக்காகாது என்று முடித்து வெளியே வந்தால் திரும்பவும் பூரான் மெதுவாக ஊர்ந்து வெளியேவரும். பார்த்திபன் இந்தச் சிக்கலுக்கு வைத்தியரிடம

அருண்மொழி

குளித்து முடித்துத் தலையைத் துவட்டியவாறே அருண்மொழி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். ஐபோனிடம் மெல்பேர்ன் நேரத்தைக் கேட்டாள். பத்தரை. கூடவே அங்கு வெப்பநிலை எட்டு டிகிரி செல்சியஸ் என்றது. அவளுக்குப் புழுக்கமாக இருந்தது. ‘சனியன் குளித்து ஐஞ்சு நிமிசங்கூட ஆகேல்ல, அதுக்குள்ள அவியுது’ என்று புறுபுறுத்தாள். ஏனோ எட்டு டிகிரி மெல்பேர்ன்மீது எரிச்சலும் கோபமும் வந்தது. குளிர் மனிதர்களைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறது என்று முணுமுணுத்தாள். பதினொரு மணிக்குப் பார்த்திபன் ஸ்கைப்கோல் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறான். நேரம் இருந்தது. ஒரு கிரீன்டீ போடலாம் என்று குசினிக்குள் நுழைந்து கேத்திலை ஓன் பண்ணினாள்.  யார் இந்தப் பார்த்திபன்?

யாழ்ப்பாண நண்டு

என் சக யாழ்ப்பாண நண்டு ஒன்றை அண்மையில் தற்செயலாகச் சந்திக்கவேண்டிவந்தது. கவனித்திருக்கவே மாட்டேன். தூர்ந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் எல்லாம் இப்போது அடியோடு போய்விட்டது. ஆனால் உள்ளிருந்த நண்டுக்கு என் காலடித்தடம் கேட்டிருக்கவேண்டும். “ஆரது,  நம்மட தம்பியா போறது” குரல் வந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தேன். குப்பைகள். சிகரட் பெட்டிகள். அணைந்த எச்சம். பியர் போத்தல்கள். கொக்ககோலா, பன்ரா, ஷொப்பிங்பாக் என இன்னபிற பிளாத்திக்குகள். சிறு நண்டும் ஒன்று. கிணற்றுத்தரை முழுதும் நண்டுகள் ஊர்ந்து திரிந்ததில் பக்கங்கள் பல நிறைந்திருந்தன. “என்னைஸே இப்பெல்லாம் எழுதுறது குறைஞ்சுபோச்சு” அது கேட்ட தொனியில் மெல்லிய சந்தோசமும் இழையோடியது. இப்படியே தொடர்ந்தால் இவன் எழுதாமலேயே நிறுத்திவிடுவான். ஒரு நண்டு, அதுவும் வெளியில் உலாவும் நண்டு எழுதாமல் விடுவதில் கிணற்று நண்டுக்குத்தான் எத்தனைப் பேரின்பம். என்றோ ஒருநாள் எதேச்சையாக அந்த நண்டு என்னை வாசித்திருக்கலாம். அந்த ஒரு வாசிப்பையே என் எழுத்தாகப் பிரமாணம் செய்து அது வாழ்நாள்பூராகவும் கழித்துவிடும். கேட்டால், ஒரு சோறு, ஒரு பதம் விளக்கம்

உடல்களின் துயர்

மரணவீடுகளுக்கு துக்கம் பகிரச்செல்வது என்பது மிகச்சங்கடமானது. நுழையும்போதே அந்த வீட்டுக்காரர்களஒ எப்படி எதிர்கொள்வது என்று மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அனேகமான சந்தர்ப்பங்களில் இறந்தவர் நமக்கு அதிகம் பரிச்சயமானவராக இருந்திருக்கமாட்டார். சமயத்தில் அவரை நாம் நேரில் சந்தித்திருக்கவே மாட்டோம். தெரிந்தவரின் தந்தையோ, தாயோ, தாத்தாவோ, பாட்டியோ. முகத்தை எப்படி வைத்திருப்பது? எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது? அல்லது தவிர்க்கத்தான்வேண்டுமா? நம்மைக் கண்டதும் நண்பரோ, உறவினரோ அழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வது? பதிலுக்கு நாமும் அழுவது என்பது அபத்தம். வலுக்கட்டாயமாக, இல்லாத சோகத்தை வரவழைப்பதும் போலித்தனமே. இந்தச் சூழலை எப்படி நேர்மையுடன் சமாளிப்பது?