என் கொல்லைப்புறத்து காதலிகள் : உதயன்

Nov 6, 2011 8 comments

 

1991ம் ஆண்டு, மே மாசம் 22ம் தேதி, காலையிலேயே எழும்பி முகம் அலம்பிவிட்டு சைக்கிளை வேகமாக வெளியே எடுக்கிறேன். பரமேஸ்வரா சந்திக்கு போகிறேன், இது தினமும் நடக்கும் விஷயம் தான், ஆனால் அன்று மட்டும் உதயன் பத்திரிகை காலையிலேயே தீர்ந்து போய் எல்லோரும் வெறுங்கையுடன் திரும்பிக்கொண்டு இருந்தார்கள். பதட்டத்தில் உள்ளே சென்று பேப்பர் கேட்க, கடை முதலாளி சிரித்துக்கொண்டே எனக்கென இரகசியமாக ஒளித்து வைத்து இருந்த ஒரு பேப்பரை எடுத்து தந்தார், முன்னைய தினம் தான் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டு இருந்தார். தலைப்பு செய்தியை பார்த்தவுடன் அதிர்ந்தேன்.  இப்போது வீடு சென்றால் அப்பா பேப்பரை பறித்து விடுவார். நடுப்பக்கம் பிரித்து தருவதேல்லாம் அப்பாவுக்கு பிடிக்காத விஷயம். எனவே வீட்டுக்கு வெளியே நின்று வரி வரியாக அந்த செய்தியை படித்துவிட்டு தான் உள்ளேயே சென்றேன்!

 

uthayan_logo

 

2010ம் ஆண்டு, மாபெரும் அவலம் முடிந்து ஓராண்டாகிறது. மாவீரர் தினம் நெருங்கும் சமயம் வேறு. அதை அனுஷ்டிப்பது தெரிந்தால் அடி உதை, கைது என்ற நிலை. சிலர் சற்று மறந்தும் போய் இருந்த நேரம். உதயன் தலைப்பு செய்தி

“நாளை மாவீரர் வாரம் ஆரம்பிக்கிறது, மாவீரர்களை நினைவு கூற வேண்டாம் என படையினர் கட்டளை!”

மறந்திருந்த பலரும் இந்த செய்தி பார்த்த பின்னர் இரகசியமாக விளக்கு ஏத்தி அந்த ஆண்டு அதை அனுஷ்டித்தார்கள் என்றால் அதற்கு உதயனின் அந்த புத்திசாலித்தனம் தான் காரணம்.

 

An-elderly-person-eagerly-reads-the-Uthayan-Tamil-newspaper-in-the-morning

25 ஆண்டுகளுக்கும் மேலாக, யாழ் மக்களுக்கு ஒரு இன்டர்நெட் போல இருந்து வெளியுலகை படம் பிடித்து காட்டிய, உள்ளூரிலேயே ஊரடங்கு நேரங்களிலும் செய்தி காவிக்கொண்டு திரிந்த, சமயங்களில் சர்வதேசத்துக்கு யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டிய உதயன் பத்திரிகை தான் இன்றைய என் கொல்லைப்புறத்து காதலி. எனக்கென்று இல்லை, யாழில் வாழ்ந்த எவருமே இவளை காதலிக்காமல் தாண்டி வந்திருக்க முடியாது!

 

90களில் என்னைப் போன்ற பதின்ம வயது இளைஞர்களுக்கு ஊடகங்கள் என்பது உதயனும் இந்திய மற்றும் இலங்கை வானொலிகளும் தாம். மின்சாரம் இல்லாத காரணத்தால் தொலைகாட்சி என்ற வஸ்து அரிதாக எப்போதாவது திருமண நிகழ்வுகளில் மாத்திரம் காணக்கிடைக்கும். உதயன் இந்த பொறுப்பை நன்றாகவே கையாண்டது. வெறுமனே யுத்த செய்திகள், வீரச்சாவு அறிவித்தல்கள் மட்டும் இல்லாது, பிராந்திய, உலக செய்திகளுக்கும் அது அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

 

நேசப்படைகளுக்கும் ஈராக்குமான 90களில் நடந்த வளைகுடா யுத்தம் பற்றிய உதயன் செய்திகள் இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. இராக்கின் ஸ்கட் ஏவுகணைக்கு நேட்டோவின் பட்ரியாட் பதில் ஏவுகணை விண்ணில் சந்தித்து மோதி அழிந்தன போன்ற குருஷேத்திரம் வகை செய்திகள் எனக்கு ஏதோ பிரம்மாஸ்திரம், அக்னிஅஸ்திரம் போல உருவம் கொடுத்து இருந்தன. கிளிண்டன் 1993 இல் ஜனாதிபதியாகி, man of the year ஆக தேர்வு செய்யப்பட்டதும், அவரைப்பற்றிய exclusive செய்திகளும் தான், பின்னாளில் என்ன தான் அவர் சர்ச்சைகளில் சிக்கிய போதும் என்னுடைய ஒருவித சிறு வயது ஐடலாக அவர் மாறியதற்கு காரணமாகியது. அது அவருடைய மிகக் கடினமான நடையில் இருந்த சுயசரிதையை வாசிப்பதற்கும் தூண்டியது.

 

uthayan_06_02_06_front (1)அந்த காலத்தில் உதயன் அவ்வப்போது வெளியிடும் விசேட பதிப்புகள் பிரபலம். ஆனையிறவு மோதலா? போர்க்கின் மாங்குளம் யுத்தமா? மண்டைதீவு தாக்குதலா? காமினி திசநாயக்க மரணமா? டோரா யுத்தபடகு மூழ்கடிப்பா? எந்த முக்கிய செய்தி என்றாலும், அன்று மாலை ஒரு விசேட பதிப்பு வரும், மூன்று அல்லது ஐந்து ரூபாய்கள் தான். சிலவேளைகளில் மிகவும் சிறிய A5 பேப்பரில் கூட வந்தது உண்டு. மாட்டுத்தாள் பேப்பர் தெரியுமா?ஒரு பிரவுன் கலர் பேப்பர், தட்டுப்பாடு காரணமாக அதில் கூட வெளிவந்தது, கண்களை கசக்கி கசக்கி வாசிக்க வேண்டும். இது ஏன், ஒரே தாள், இரண்டு பக்கங்களில் கூட பத்திரிக்கை வரும். அது அந்தந்த நேரத்தில் இருந்த பொருளாதார நிலைமைக்கு ஏற்ற மாதிரி … என்ன ஒரு வாழ்க்கை … இப்போது நினைக்கையில் கொஞ்சம் பெருமையாக கூட இருக்கிறது!

 

என் வயது இளைஞர்களுக்கு(இன்னும் கொஞ்ச காலம் தான் இதை சொல்ல முடியுமோ!), “லப்பாம் டப்பாம்” ஞாபகம் இருக்கிறதா? உதயன் ஷப்ரா நிறுவனத்துடன் இணைந்து கொஞ்ச காலம் அர்ச்சனா என்ற ஞாயிறு சஞ்சிகை வெளியிட்டு வந்தது. பத்து பக்கங்களுக்கு மேல் வரும். சரியாக சொல்ல போனால் 88ம், 89ம் ஆண்டுகளில் என்று நினைக்கிறேன். அந்த சிறப்பு சஞ்சிகை மிகப்பிரசித்தம். அதிலே “லப்பாம் டப்பாம்” என்ற இரண்டு குறும்பு சிறுவர்களின் கோமாளிச்சேட்டைகள் நிறைந்த தொடர் வாரம் தவறாமல் நான் வாசிப்பது உண்டு. இன்னமுமே,  அவர்கள் “பொரல்ல” பகுதிக்கு போகும் பஸ் பெயர் பலகையை பார்த்து அந்த பஸ் போகாது என்று நினைத்தது, நிப்பொன் டவர் உயரமாய் நிற்பதால் தான் அந்த பெயர் வந்தது என்று சொன்னது  போன்ற சுவாரசியங்கள் மறக்க முடியாதவை. அவர்களின் ஒரு துப்பறியும் கதையை வாசித்து விட்டு, நானும் எனது சின்ன வயது நண்பன் விநோதனும் சேர்ந்து ஒரு துப்பறியும் நிறுவனம் ஆரம்பித்து, பாடசாலையில் களவு போன மணிக்கூடு ஒன்றை கண்டுபிடிப்பதென முடிவெடுத்ததும், எங்கள் நிறுவனத்துக்கு(!) JV என்று எம்மிருவரின் முதல் இரு எழுத்துக்களை சேர்த்து லோகோவாக மாற்றியதும் … அடடா ஒன்பது வயதில் என்னென்ன சேஷ்டைகள்! … மீண்டும் 89க்கு போக வேண்டும் போல இருக்கிறது. சுஜாதவாக இருந்திருந்தால் இன்னொரு ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதியிருப்பார்!

 

1992ம் ஆண்டு உலகக்கோப்பை ஸ்கோர் விவரங்கள் நாங்கள் அறிந்ததே உதயன் மூலமாகத்தான். முன்பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அட்டவணை போடப்பட்டு அணி நிலவரங்கள் இருக்கும். நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் முன்னணியில் ஆரம்பத்தில் இருந்தாலும் இறுதியில் பாகிஸ்தான் தான் வென்றது. சினிமா தகவல்களை அதிகம் உதயன் அந்த காலத்தில் பிரசுரிப்பதில்லை. தேவையும் இருக்கவில்லை. தணிக்கை வேறு இருந்தது. ஆனால் இலக்கிய நிகழ்வுகள், சச்சரவுகள் எப்போதும் நடுப்பக்கத்தை அலங்கரிக்கும். ஜெயராஜுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும் இடையேயான சண்டைகள் அந்நாளில் பிரசித்தம்.

 

உதயனில் எமது பெயர்கள் வெளிவருவது என்பது ஆஸ்கார் கிடைப்பது போல. அந்த பாக்கியம் எனக்கு கடைசி வரை கிடைக்கவில்லை! சாதாரண தர பரீட்சையிலும், உயர்தர பரீட்சையிலும் மயிரிழையில் ஒவ்வொரு பாடங்களில் கோட்டை விட்டதால் அந்த டாப் லிஸ்ட் பெயர்களில் வரவே முடியாமல் போய் விட்டது. அடடே, ஒரு முறை எனது பெயரும் வந்தது. எனது மாமா ஒருவர் காலமான போது இன்னாரின் அன்பு மருமக்கள் என்று ஒரு பத்து பெயர்களில் எனது பெயரும் ஒரு மூலையில் இருந்தது. அந்த கட்டிங்கை பலகாலம் வைத்திருந்தேன். ஒரு இடம்பெயர்வில் அதுவும் தொலைந்து போனது!

 

14May_Uthayanஉதயன் பத்திரிகை ஆரம்பித்தது 1985ம் ஆண்டு.  யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு ஆரம்பித்த, ஓரளவுக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ளாத பத்திரிகை என்றும் அதைச்சொல்லலாம். 90களிலும் பின்னர் 2000ம் ஆண்டுக்குப் பின்னரும் கொஞ்சம் லிபரல் சிந்தனை கொண்ட பத்திரிகையாகவே அது தன்னை காட்டிக்கொண்டது. குறிப்பாக, சமகாலத்து யாழ்ப்பாண பத்திரிகைகளான ஈழநாடு, ஈழநாதம், முரசொலி, ஈழமுரசு, வலம்புரி போன்ற பத்திரிகைகளில் நம்பகத்தன்மை அவை நடத்தப்பட்ட நிறுவனங்கள், இயக்கங்கள் சார்ந்தே நிறுவப்பட்டது. ஆனால் உதயன் மக்களின் பத்திரிகையாகவே பார்க்கப்பட்டது. அக்காலத்தில் ஒரே செய்தியை மூன்று பத்திரிகைகள் பிட்ச் பண்ணும் விதத்தில் இருந்து அதை அறிந்து கொள்ளலாம். அந்த கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருந்த நடுவுநிலைமை தான் இன்றைக்கு வரைக்கும் இத்தனை தடைகள் கடந்தும் அது வெளிவந்து கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

 

uthayanஉதயன் எப்போதுமே துணிச்சலுக்கு பெயர் போன பத்திரிகை. புலிகள் காலத்திலேயோ, பின்னர் படையினர் கட்டுப்பாட்டு காலத்திலேயோ, தான் சரியென நினைத்ததையே தன்னுடைய நிர்ப்பந்தங்கள் அடிப்படையில் நீக்குப்போக்காக எழுதிக்கொண்டு இருந்தது. கேள்வி கேட்பதே சாத்தியம் இல்லாத புலிகள் காலத்தில் கூட, தன்னளவில் எந்த அளவு குட்ட முடியுமோ அந்த அளவுக்கு குட்டி சில விஷயங்களை சொல்லவும் அது தவறியதில்லை.90களின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தின் பத்திரிகை தணிக்கை வலுவாக இருந்த காலங்களில், உதை பந்தாட்ட போட்டி வர்ணனை போல போர் செய்திகளை அது வெளியிட்டு வந்ததை அரசாங்கம் கையை பிசைந்து பார்த்துகொண்டு இருந்தது. பின்னாளிலே அது ஒரு பாரம்பரியமான போர்க்கால செய்தி சொல்லும் உத்தி என்று எனக்கு தெரிய வந்தபோது.  உதயனின் தன் துறை சார்ந்த அறிவை யோசித்து வியந்தேன். அதற்கு உதயன் கொடுத்த விலை மிக அதிகம், பல பத்திரிகையாளர்களின் உயிர்கள், நிறுவன அலுவலகம் மீது குண்டு மழை, வகை தொகை இல்லாத கைதுகள்!

 

ஒரு சின்ன கவலை என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை கலாச்சாரம் என்ற பெயரில் உதயன் promote பண்ணிக்கொண்டு இருந்தது தான். எந்த புதுமையான முயற்சிகளையும், முக்கியமாக பெண்களின் உடை சார்ந்த நாகரீக மாற்றத்தையும் உதயன் போன்ற பத்திரிகைகள் ஒரு பாவ செயலாகவே அல்லது கேலியாகவோ பார்த்தன. ஒரு பத்திரிகை ஒரு கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பேணுவதை ஆதரிக்க கூடாது. மாற்றங்களை நல்ல முறையில் உள்வாங்கி உருமாறும் கலாச்சாரமே ஆக்கபூர்வமானது என்று நான் நினைக்கிறேன். மற்றயவை எல்லாம் அப்படியே தேங்கி அழிந்து விடும். இந்த விஷயத்தில் உதயனுக்கும், அநேகமான யாழ் மக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இப்படியான குணாதிசயங்கள் ஒரு வித bubble நிலையை அடைந்து ஒரு கலாச்சார வெடிப்புக்கு வழிகோலும். அப்படியான ஒரு மோசமான நிலைமைக்கு தான் யாழ்ப்பாணம் போய்க்கொண்டு இருக்கிறதோ என்று இப்போது எண்ண தோன்றுகிறது. இதை உணர்ந்தாலும் அதில் இருந்து விடுபட முடியாத அளவுக்கு எம்மில் அது ஆழமாக வேரூன்றி விட்டது என்பது facebook இல் அடிக்கடி நாம் போடும் தகவல்களில் இருந்தும் தெளிவாகிறது!

 

இப்போதும் காலை எழுந்து டீ குடிக்கும்போது www.uthayan.com தளத்துக்கு சென்று செய்திகளை வாசித்து விட்டே வேலைக்கு கிளம்ப ஆயத்தமாவேன்.  அன்றைக்கு வெறும் சிறிய தாளில் வெளிவந்த பத்திரிகையை களவாய், அப்பாவிடம் கொடுக்கும் முன்னரே வாசித்த அந்த எக்ஸ்சைட்மென்ட், இன்று ஐபாடில் ஓய்யாசமாய் இருந்து வாசிக்கும்போது இல்லை, ம்ம்ம் .. ஒரு சின்ன வயது காதலியை இப்போது பார்த்தால் எப்படி இருக்குமோ அது போல !!!

 

---------------------              அடுத்த வாரம் இன்னொரு காதலியுடன்  ---------------------

காதலி நம்பர் டூ

காதலி நம்பர் ஒன்

Comments

 1. மன்மதகுஞ்சு11/07/2011 12:48 am

  உதயன் பத்திரிகை பற்றிய நினைவலைகளை கண்முன் கொண்டு வந்து சென்றமை சிறப்பாக இருந்தது.
  சின்ன முன்மொழிவு உதயன் பத்திரிகையின் ஆரம்ப கால அர்ச்சனா பத்திரிகை பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்,
  அத்துடன் இன்றைய ஆனந்த விகடனின் வலைபாயுதே போல அன்றைய ஞாயிற்றுக்கிழமைகளில் படத்துக்கு கவிதை என்ற பகுதி
  எம்மை போன்ற பல இளைஞர்களை எழுத தூண்டியதை மறக்க முடியாது.
  சின்ன கொசுறுத்தகவல் ரோட்டறக்ட் கழகத்தால் நாங்க செய்த நல்ல மக்கள் நலத்திட்டங்களை
  பாராட்டி திட்டகுழுவினராகிய எமது படங்கள் அன்றைய காலத்தில் மாதம் ஒன்றாவது வந்துவிடும்,
  படம் வரவேண்டும் என்பதற்காகவும் பலர் எம்முடன் இணைந்து பணியாற்றியதுண்டு.
  அந்த விடயத்தில் மக்கள் நலத்திட்டங்களில் உதயனின் பஙகு அளப்பரியது,
  1995 வரை யாழ்ப்பணத்தின் அனைத்து பஸ் தரிப்பு நிலையங்களிலும் சைக்கிள் காற்று அடிக்கும்
  பம் வைத்த யாழ் ரோட்டரி கழகம்,யாழ் நகர மைய கழகங்களின் திட்டங்களுக்கு
  உதயனின் பங்கு மிகவும் பக்கபலம்.

  ஆனால் சின்ன சந்தேகம் 1995 வரை
  அதிகமாக "ஸ்பெசல் பேப்பர்" வெளியிட்டது " ஈழநாதம் பத்திரிகை மட்டுமே என்பது என் நினைவு.
  உதயன் மேல் எனக்கு சின்ன மன வருத்தம் என்றுமே உண்டு,விளம்பரமும்,வியாபாரமும்,பிரதேச ஆதிக்கமுமே உதயன் பத்திரிகையின்
  முதல் நோக்கமாக இருந்ததுதான்,ஏனெனில் மிகவும் நெருக்கமான
  உறவு எனக்கும் உதயனுக்கும் உண்டு,5 மாதககாலம் உதயனில் வேலை செய்ததால் மட்டுமல்ல,யாழ் நகர மைய ரோட்டறக்ட் கழகம் மூலமாக
  நிறவன டிரக்டர்,செய்தி ஆசியர்கள் வரை நெருக்கமான
  பழக்கம் 2002 இல் ஏற்பட்டது,சின்ன உதாரணம் சொல்லலாம் கோப்பாயில் உள்ள சனசமூக நிலையத்துக்கு கொழும்பு ரோட்டரக்கழகத்தின் மூலமாக
  நன்கொடை பெற்று வறுமைகோட்டு மகளிருக்கா தையல் மெசின் கொண்டுவந்து இலவச பயிற்சி செய்வதற்காக நான் ஒழுங்கு செய்து அனைத்தையும் கொழும்பில் வாங்கியாயிற்று
  ஆனால் ஏறத்தாள 5 தையல் மெசின்களையும் யாழ் கொண்டு வர வழி தெரியாமல் இருந்தபோது என் நினைவில் வந்தவர் நிறுவனர் சரவணபவான் தான், உடனடியாக கொழும்பில் அவரிடமே
  சென்று விடயத்தை கூறியடுவுடன் சரி எங்களுக்கு கொஞ்ச பேப்பர் ரீல் கொண்டு போகணும் அதோட மெசினையும் கொண்டு போய்ட்டு வா
  உன்ர பொறுப்பிலேயே வாகனத்தை கொண்டு போய்ட்டு கொண்டு வந்து விடணும் என்று பெருந்தன்மையோடு அவர் சொன்னது இன்றும் நினைவில் நிற்கின்றது.(ஆனால் அது ஒருகல்லில்
  ரெண்டு மாங்காய்)
  ஒருதடவை கூட்டத்தில் எமக்கு சொல்லப்பட்டது எந்த ஏரியாவில் பிரச்சினை நடந்தாலும்
  அது சரியோ தப்போ உடனே பேப்பரில் வந்தாகணும்.அத்துடன் சில நாட்கள் அடுத்த பத்திரிகைகளில்
  வந்து இந்த பத்த்ரிகையில் வராது போன செய்தி ஏரியா செய்தி நிருபர்கள் பட்ட பாடு அப்பாபா..
  .. முக்கியமான விடயம், எம் ஈழத்து அண்ணன் "தங்களது பேப்பரை" பார்த்துக்கொண்டிருப்பது போல் படத்தை
  போட்டதால் நிர்வாகம் பட்ட பாடு இருக்கே...ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா சொல்லி மாளாது. இன்றும் கூட ஒரு விடயத்தை எழுத நினைத்தும் தவிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்
  அந்த பத்திரிகையினர். அது "தனது இறுதிக்காலத்தில் திரு அன்ரன் பாலசிங்கம்"
  அவர்கள் ஆசிரியர் சொல்லிவிட்டு சென்ற பல அரசியல்
  அந்தரங்கங்களை",இறுதியாக உதயன் பத்திரிகை இன்றுவரை பல சவால்களை,
  பல இழப்புக்களை கடந்துதான் இந்த நிலைமை அடைந்துள்ளதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
  ஆனால் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஷப்றா நிறுவன இழப்பீடூ
  இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  ReplyDelete
 2. மன்மதகுஞ்சு11/07/2011 12:51 am

  2002 ஜீலை செப்டம்பர் மாசம் இரவு 10 மணியளவில் பொற்பதி வீதியில் ராணுவத்திற்க்கும் சமாதான
  நேர அரசியல்துறை போரளிகளுக்கும் முறுகல் ஏற்பட்டுவிட்டது, என்னையும் கூட்டிக்கொண்டு
  பிரதம ஆசிரியர் குகநாதன் மோட்டர் சைக்கிளில் போய்ச்சேர்ந்தபோது துப்பாக்கி வெடிச்சத்தம்
  ஆரம்பிக்க தொடங்க மோட்டர் சைக்கிளை போட்டுவிட்டு ஓடிப்போய் நாங்கள் அந்த அம்பட்டன் பாலத்துக்குள்ளே
  30 நிமிடமா விழுந்து படுத்துகிடந்தது மறக்கமுடியாது..

  ReplyDelete
 3. ஹாய் அண்ணா,
  பத்திரிகையின் வரலாற்றை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திட்டீங்க... நான் அந்த பத்திரிகையை வாசிக்கும் வாய்ப்பு அக்காலங்களில் கிடைக்காவிடினும், நானும் சிறுவயதில் இருந்தே வாசித்திருப்பேனோ என்ற ஐயத்தினை உங்கள் பதிவு என் மனதில் தோற்றுவித்துவிட்டது.. மிகவும் ரசித்தேன்..

  //
  அன்றைக்கு வெறும் சிறிய தாளில் வெளிவந்த பத்திரிகையை களவாய், அப்பாவிடம் கொடுக்கும் முன்னரே வாசித்த அந்த எக்ஸ்சைட்மென்ட்,
  இன்று ஐபாடில் ஓய்யாசமாய் இருந்து வாசிக்கும்போது இல்லை,
  //

  சூப்பர் முடிவு.. 100% உண்மை :)

  ReplyDelete
 4. @கீர்த்தி ... அனுபவங்களை மீட்டுவது ஒரு சுகம் தான் .... உதயனில் நீ வேலை செய்தது பெருமையான விஷயம்.

  லப்பாம் டப்பாம் அர்ச்ச்னாவில் தான் வந்தது. நான் மறந்து விட்டேன். இப்போது திருத்தியாச்சு. நன்றி..

  விசேட பதிப்பு ஈழநாதம் தான் அதிகம் வெளியிட்டது. ஆனால் எங்கள் வீடு எப்போதுமே உதயன் தான் வாங்குவார்கள்..

  நன்றி அனுபவங்களை பகிர்ந்தமைக்கு ....உன்னால் இந்த பதிவு முழுமையானது!

  ReplyDelete
 5. விமல் சிறுவயதில் பத்திரிகை என்பது எம் போன்றவருக்கு தவிர்க்க முடியாதது. நீங்கள் நிச்சயம் வாசித்து இருப்பீர்கள்!

  ReplyDelete
 6. என் வயது இளைஞர்களுக்கு(இன்னும் கொஞ்ச காலம் தான் இதை சொல்ல முடியுமோ!), “லப்பாம் டப்பாம்” ஞாபகம் இருக்கிறதா? உதயன் ஷப்ரா நிறுவனத்துடன் இணைந்து கொஞ்ச காலம் அர்ச்சனா என்ற ஞாயிறு சஞ்சிகை வெளியிட்டு வந்தது. //
  ஒரே வயசுக்காரர் :)அதில கவிதைப்போட்டியொன்று வரும். ஒரு கவிதையைத்தந்து அதே சந்தத்தில் கவிதைகளை எழுதச் சொல்வார்கள்.

  மற்றது உதயனைப் பற்றி சொன்ன நீங்கள் - தலைவர் உதயனுக்குச் செய்த விளம்பரத்தை குறிப்பிட மறந்து விட்டீர்கள் :)

  ReplyDelete
 7. @நன்றி சயந்தன் .. மறந்தே போனேன் ..... அதுவும் அந்த தலைவர் மேட்டர் கட்டாயம் போட்டு இருக்கணும் .. சரி இப்ப நீங்க தான் போட்டிட்டீங்களே ... ஒரு பதிவு அதன் கமெண்ட்ஸ் உடன் சேர்ந்து தானே முழுமையடைகிறது!

  ReplyDelete
 8. கிளிநொச்சி வைத்தியசாலை தாக்கப்பட்ட போதும் , கிளாலியில் படகில் வந்தவர்களை வெட்டிய போதும் மறுநாள் உதயன் பேப்பரை நடுக்கத்துடன் வேண்டியது தான் ஞாபகம் வருகிறது. திலீபனின் உண்ணாவிரத கூட்டத்தில் இருந்தவர்கள் படத்தையும் சேர்த்து முதல் பக்கத்தில் போட்டு பின் இந்தியன் ஆர்மீ தேடித்திருந்ததும், ஆனையிறவு அடிபாடு விசேட பதிப்பு, பிக் மேட்ச் ஹீரோக்களின் படங்கள்,தலைவர் வாசித்த உதயன் என்று மறக்கமுடியாதது.

  ReplyDelete

Post a comment

Contact form