என் கொல்லைப்புறத்து காதலிகள் : சந்திரிகா!

Nov 12, 2011

 

1994ம் ஆண்டு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி, யாழ்ப்பாணம் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து புன்னகையுடன் பத்திரிக்கை படித்துகொண்டு இருந்தது. அன்று தான் சமாதான பேச்சு வார்த்தை குழு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் யாழ் பல்கலைக்கழக மைதானம், அங்கே தான் ஹெலிகாப்டர் இறங்குகிறது. பக்கத்து காணியில் ஒரு 50கலிபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு. ஆனால் இம்முறை எனக்கு பயம் இல்லை. அது தான் சமாதானம் வரப்போகிறதே! இரவு முழுதும் தூங்கவேயில்லை. தூதுக்குழுவின் அத்தனை உறுப்பினர் விவரமும் மனப்பாடம். அதன் தலைவரான பாலபட்டபெந்தி, ஜனாதிபது ஆலோசகர், லயனல் பெர்னாண்டோ என ஒரு ஐந்து பேர். புலிகள் குழுவில் கரிகாலன், இளம்பரிதி உட்பட ஒரு ஐந்து பேர். பேசப்போகிறார்கள். பிரச்சனையை தீர்க்க போகிறார்கள்.

 

president-chandrika-kumaratunga-ltte-peace-talks-1994-1995அன்றைக்கு பாதுகாப்பு கடும்பிடி. இராமநாதன் வீதியை மூடிவிட்டார்கள். எனக்கென்றால் ஹெலியை பக்கத்தில் இருந்து ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ஆர்வம. அதிலும் ஹெலியின் கதவருகே துப்பாக்கியுடன் இருக்கும் ஆர்மியை நேரில் பார்க்கவேண்டும். ஒருமுறை இந்த ஹெலி தாழ்வாக சுட்டுக்கொண்டு செல்லும்போது அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே, பங்கரில் இருந்து கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். ஹெலியின் துப்பாக்கி தெரிந்தது. சன்னங்கள் பறந்தன. ஆனால் ஆர்மி முகம் தெரியவில்லை. எப்படியும் இன்றைக்கு பக்கத்தில் இருந்து பார்த்து விடவேண்டும்.ஒரே வழி, வீட்டு கூரையில் ஏறி நின்று பார்ப்பது தான். ஒரு மிகப்பெரிய அட்டையில் இன்றைய காதலியின் பெரிய சைஸ் படத்தை ஓட்டி, கையில் பிடித்துக்கொண்டு கூரையில் நின்ற போது, துப்பாக்கி ஹெலியில் நன்றாகவே தெரிந்தது. உள்ளே வெள்ளையும் சொள்ளையுமாக தூதுக்குழு. ஆர்மியையும் கண்டுவிட்டேன். எப்படியும் சுடமாட்டான்! கையில் வைத்திருந்த அந்த சந்திரிகா படத்தை தூக்கி வைத்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டினேன். ஹெலி கவனிக்கவில்லை.

 

ஆம் இந்த வாரம் என்னுடைய கொல்லைப்புறத்து காதலி, 94ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த அநேகமான பதின்ம வயது இளைஞர், சிறுவர்களின் மனம் கவர்ந்த ஒரே காதலி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரணதுங்க!!!

 

Chandrika18_0

சந்திரிகா பிரதமர் ஆன சமயம், இலங்கையில் சண்டை உச்சத்தில் நடந்துகொண்டு இருந்தது. மண்டைதீவு தாக்குதல், பூநகரி, ஆனையிறவு என்று போர் போர் போர், எங்கு பார்த்தாலும் இரத்தம். இது போதாது என்று கொழும்பில் வேறு அடுத்தடுத்து தற்கொலை தாக்குதல்கள். அந்த வயதில் சத்தியமாக எனக்கு இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை. அட, இன்றைக்கும் அது தெரியவில்லை என்பது வேறு விடயம். என் வயதினர் ஈழத்தில் கண்டது எல்லாமே போரை தான். போரை மட்டும் தான். எதை இழந்தோம், அதை அடைவதற்கு என்பது எமக்கு புரியவில்லை, ஏனெனில், இழக்கும்போது நாம் பிறக்கவில்லை. பிறந்த போது இழப்பதற்கும் ஒன்றும் இருக்கவில்லை!

 

12709_NpAdvSinglePhotoஅப்போது போர் போரடித்து எல்லோருக்கும் ஒரு மாற்றம் வேண்டியிருந்தது. அந்த மாற்றம் தரும் மீட்பராய் சந்திரிகா தெரிந்தார். நீலப்புடவையில், கொஞ்சமே இடுப்பு தெரிய (கீர்த்தி அதை அடுப்பு என்பான், அது வேறு), அவர் வலம் வரும்போது, அடடே இவரே தான், இவரே தான் எமக்கு சமாதானம் கொண்டுவருவார் என்று தோன்றியது.  94ம் ஆண்டு நல்லூர் தேர் திருவிழாவுக்கு இரண்டு ஹெலிகள் தாழ்வாக பறந்து பூக்கள் தூவின. கூட்டம் ஆர்ப்பரித்தது. முருகன் பச்சை சாத்தி அங்கும் இங்கும் ஆடினார். அடுத்தடுத்து கடித போக்குவரத்துகள் சந்திரிகாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்தது. அவரின் மாமன்காரன் வேறு வவுனியாவில் நின்று எல்லை தாண்டுபவர்களிடம் எல்லாம் எண்ணை, பட்டரி என தடை செய்யப்பட்ட பொருட்களை அனுமதிக்க, யாழ்ப்பாண வீடுகளில் விளக்கு ஒளி பிரகாசிக்க ஆரம்பித்தது.

ஆனால் அப்பா மட்டும் என் காதலை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவில்லை.

“இவளிண்ட அப்பன்காரனும், இப்பிடி தான் எங்கள எமாத்தினவன், இவங்கள் உண்மையிலேயே பிரச்சனைய தீர்க்கோணும் எண்டு நினைச்சா, கொஞ்சம் பெரிய ஆக்களை எல்லோ குழுவில போடோணும், பாரு, பாலபட்ட்பெந்தியும் கரிகாலனும் … அங்காலயும் சரி, இங்காலயும் சரி, மூத்திரம் போறதுக்கும் பெர்மிஷன் கேட்கிறவன் தான் உட்கார்ந்து பேசறான், இவங்கள் எப்படி டிசிஸியன் எடுக்க போறாங்கள்? அன்டன் இல்லாட்டி இவரால ஒரு முடிவும் எடுக்க ஏலாது. அவ சும்மா ஷோவுக்கு தான் இது செய்யிறா, நீ சின்ன பெடியன், உனக்கு இந்த காதல் எல்லாம் வேணாம், சும்மா படி!”

 

696080நான் அப்பாவை நம்பவில்லை. காதலிக்கும் போது இது ஒன்றும் புலப்படாது. அம்மா அப்பாவுக்கு என்னுடைய காதலியை பற்றி என்ன தெரியும்? சந்திரிகா நல்லதே செய்வார். இவ்வளவு செய்தவர் இன்னமும் செய்வார் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். சந்திரிகா படம் போட்ட குட்டி கலண்டர் என்னுடைய பென்சில் பாக்ஸில் எப்போதும் இருக்கும். ஈழத்து புன்னகை இளவரசி  என்ற ஒரு பட்டம் கொடுத்து இருந்தேன். யாழ்ப்பாணத்தில் சந்திரிகா காப்பு, சேலை என்று குஷ்புக்கு இருந்தது போல ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிக்கொண்டு இருந்தது. சந்திரிகா பை என்று ஒரு பை இருக்கிறது. அத்தனை பெரும் அதில் தான் சாமான் வாங்குவார்கள். இன்றைக்கும் சந்திரிகா பாக் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் இருக்கிறது. நிறைய தேங்காய் கொள்ளும் பை அது. அவரின் பெயரில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் அந்த பை ஒன்று தான்!

 

சந்திரிகாவை நான் விரும்பியதற்கு மூன்று காரணங்கள். Vijaya_Chandrika_TC_0318

ஒன்று: என்றைக்கும் இல்லாத சமாதான சூழ்நிலை இவர் வந்தவுடன் உருவாகி இருந்தது. அவர் France இல் படித்தவர். வெளிநாட்டில் படித்தபடியால் சிங்களவனின் வழமையான குணம் இருக்காது.

இரண்டு: அவரிடம் இருந்த வசீகரம். நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் குத்து விளக்காட்டம் இருக்க, இந்திய சஞ்சிகைகளில் வரும் பெண்கள் படங்களின் கழுத்து முதல்  கால் நுனி வரை புலிகள் கறுப்பு மை பூசி மறைக்க, சந்திரிகா தான் கொஞ்சம் கூட பார்த்து ரசிக்க கூடிய பெண்ணாக தெரிந்தார்!

மூன்று: Third one … lemme see, I can’t .. sorry … Oops!!

 

நாட்கள் கடந்து கொண்டு இருந்தன. மூன்று சுற்றுகள் முடிந்துவிட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக infatuation போய் காதலர்களுக்கிடையே ஊடல் தலை தூக்கி விட்டது. தலை போகும் ஊழல். ஆமாம் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குட்டி என்பவரில் தலையை வெட்டி வேறாக போட்டு விட்டனர். அப்போதே புரிந்து விட்டது என்ன ஆகபோகிறது என்று.

 

ஆறே மாதங்கள் தான், ஒருநாள் வழமை போல உதயன் தலைப்பு செய்தியில் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக செய்தி வர, பகீர் என்றது எனக்கு. நாளும் பொழுதும் காதலித்த பெண் நாம் நினைத்தது போல இல்லையே என்று ஏக்கம். அப்போதும் அவளை குற்றம் சொல்ல மனம் வரவில்லை. புலிகளுக்கு எப்போதும் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் இருந்ததே இல்லை என்று எண்ணிக்கொண்டேன். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை. பிரிவது என்று ஆன பின் பேசுவதில் என்ன ஆகபோகிறது? என்று அவர்களும் நினைத்தார்களோ தெரியாது!

 

Chandrika1999அப்புறம் சாந்தசொருபியாய் இருந்த சந்திரிகா பத்திரகாளி உருவம் எடுத்தார். சமாதானத்துக்கான நூதன போரில், இறந்தது கொஞ்சநஞ்ச மக்கள் இல்லை. நவாலி தேவாலயத்தில் இருந்த அகதிகள் மீது தாக்குதல். நாகர்கோவிலில் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல். மாறி மாறி சண்டைகளும் உயிர் இழப்புகளும். போதாது என்று புலிகளும் மக்களை இடம்பெயர சொல்ல, ஒரு மனித அவலம் 1995ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்புறம் சந்திரிகா மீதும் தாக்குதல் நடக்க, கண் போனது என்னுடைய முன்னால் காதலிக்கு. கண்போன போக்கிலே இப்போது நடக்க ஆரம்பித்தார். அவளுக்கு கோபம் தலைக்கு இன்னும் ஏறிவிட, பின்னர் வந்த பேச்சு வார்த்தைகளை கூட வெற்றிகரமாக முறித்துவைத்தார். அவருடைய மிகப்பெரிய சாதனை தான் இந்த ராஜபக்ச என்பதையும் குறிப்பிடவேண்டும்.

 

 

அன்று சொன்னது …

"I have studied and acquired considerable knowledge on guerrilla warfare wheapr07cn I was a student in Paris, and we knew how they would behave. We conducted talks on the basis that the LTTE would not agree to any peaceful settlement and lay down arms." President Kumaratunga, Sri Lanka Sunday Times, 20 August 1995

இன்று சொல்வது

"I sincerely tried to reach a political consensus to solve the ethnic question, and tried to introduce a pluralistic constitution that would cater to the political aspirations of the Tamil people without dividing the country" -- Kumaratunga noted recently in 2007

 

-22அண்மைக்காலங்களில் தன்னை ஒரு intellectual diplomatic  ஆக காட்டிகொள்கிறார். இந்த மாதம் கிளிண்டனுடன் விருந்து, அப்புறம் ஹார்வார்டில் “‘Inclusive Development and Shared Societies” என்ற கருத்தில் ஒரு சொற்பொழிவு. சாத்தான் ஹார்வர்ட் வரை வேதம் ஓதுகிறது.  நான் கூட சிலவேளைகளில் நினைப்பதுண்டு, அவருக்கு உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்து, ஆனால் கூட இருந்தவர் சேர்க்கையால் இப்படி நடந்திருக்கலாம் என்று. ஆனால் ஒரு தலைவர் நல்லவராக இருப்பது மட்டும் முக்கியம் இல்லை. ஆனால் நல்லதை செய்ய வேண்டும். புரட்சி பேசி நேர்மையாய் இருந்து பிரயோசனமில்லை. அதன் விளைவுகள் பாசிடிவாக இருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை. அங்கேயே முழுதும் தோல்வி. அந்த தவறை அவர் மட்டும் செய்ய வில்லை. இலங்கையின் முன்னணி தலைவர்கள் எல்லோருமே செய்தார்கள். அது தமிழர் தரப்பில் செல்வா, அமிர்தலிங்கத்தில் ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்கிறது. சிங்கள தரப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே. இதை சொல்ல உனக்கென்ன தகுதி என்று எப்போதுமே கேள்வி கேட்போர் கேட்கலாம். நான் அதை செய்யாமல் விட்டது தான் எனது தகுதி. அது கிடக்கட்டும் விடுங்கள்.

 

navali-church-boming

 

எல்லா மரங்களும் பூப்பதில்லை. எல்லா பூக்களும் காய்ப்பதும் இல்லை. காய்ப்பதில் சில தான் பழமாகி, பரவி, வித்தாகி வேர் பரப்பும். என்னுடைய இந்த காதலி மொட்டு மலரும் தருணத்திலேயே வாடி வதங்கிவிட்டாள். சந்திரிகா வந்தார், மனதை வென்றார், மண்ணெய் தந்தார், மண்ணையும் எம்மையும் தின்று விட்டு மாறிவிட்டார். காதலை தேடி அலையும் நாம் தாம் பாவம். ஏமாறிக்கொண்டே இருக்கிறோம்.

 

காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா?

கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா?

 

---------------------              அடுத்த வாரம் இன்னொரு காதலியுடன்  ---------------------

காதலி நம்பர் த்ரீ : உதயன்

காதலி நம்பர் டூ : மணிரத்னம்

காதலி நம்பர் ஒன் :கம்ப வாரிதி இ.ஜெயராஜ்

Contact Form