ஏழாம் அறிவுடை நம்பிகள்!

Nov 15, 2011

 

அரவிந்த், இப்ப நாம எந்த நிலைமைல இருக்கோம்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். வீரம் வீரம்னு தானே சண்டை போட்டாங்க நம்ம பக்கத்து நாட்டுக்காரங்க. ஜெயிக்க முடிஞ்சுதா? செத்து தானே போனாங்க?

 

----------------------------------------------------------------------

 

என்னை வாழவைத்த தமிழக மக்களே.

இலங்கை தமிழர்களை நான் நெறைய தடவ சந்திச்சிருக்கேன். அவங்க திட்டினா கூட நாதம் மாதிரி இருக்கும். இங்க நாம பேசறது definetely ராஜபக்ஸ காதுக்கு போய் சேரும். அந்த தைரியத்தில நான் ஸ்ரீலங்கா கவுர்மண்டுக்கு ஒண்ணு மட்டும் சொல்ல விரும்புறேன். தமிழ் மக்கள் உரிமைக்காக போராடினாங்க, நீங்க யுத்தத்த அனவுன்ஸ் பண்ணீங்க. ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா, முடியல .. முப்பது வருஷமா உங்களால அவங்கள ஒழிக்க முடியலையேன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்? ஆம்பளங்களா நீங்க? ஒத்துக்க ஒனக்கு ஈகோ இடம் கொடுக்கல .. பாரு உதிரம் கொட்டுது எங்க .. அந்த பொணங்கள எல்லாம் புதைக்கல, விதைக்கிறாங்க. நாளைக்கு அதுக எழுந்து வந்து ஒங்கள தூங்க விடாது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டிடு என்னா அது எப்பிடி? செத்தவங்க வந்து வாழ்றவங்கள விட்டிடுவாங்களா? இந்த விஷயத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது போதாது. என்னுடைய சார்பில ஒரு பத்து லட்சம் ரூபா பணம் கொடுக்கிறேன்.. நன்றி.வணக்கம்!

 

டிவியில் சூப்பர்ஸ்டாரின் அண்ணாமலை பாணி வசனங்களை கேட்ட குமரனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

மச்சான் போத்தில உடை, தலைவர் பின்னி எடுத்திட்டார்..

மெல்போர்ன் எட்டு டிகிரியில் குளிர்ந்துகொண்டு இருந்தது.

 

----------------------------------------------------------------------

 

அண்ணை கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க

நடராசாவின் மாட்டு வண்டில் கிளிநொச்சி, ஹட்சன் ரோட்டில் ஏறும்போது வீதியில் நின்ற போராளி ஒருவன் அவர்களை மறித்தான். வண்டியில் நடராசா, அவரின் மனைவி கனகம்மா, சின்ன மகள் வானதியுடன் ஒரு பெரிய பெட்டி மற்றும் வண்டில் கொள்ளாத வேறு சாமான்கள். மாடுகள் இழுக்கமுடியாமல் இழுத்தன.

எங்கால பக்கமா போறீங்க?

இங்கால இராமநாதபுரம் பக்கம் போய் கொஞ்சநாள் இருந்திட்டு அப்புறம் முல்லைத்தீவு போலாம்னு..

உங்கள அப்பவே எழும்ப சொல்லியாச்சு, ஏன் இவ்வளவு நாளும் போகேல்ல?

வசதி இல்ல தம்பி, மாடு தேங்காய் இல்லாட்டி எங்களுக்கு வருமானம் இல்ல ..

அதெல்லாம் தெரியாது, சொன்னா சொன்ன மாதிரி போயிடணும், உங்களுக்காக தானே சொல்றோம்..

சரி தம்பி

இது உங்க பொண்ணா?

ஆமா

வயசு?

ஆவணிக்கு பத்து

பொய், பார்த்தா பதினேழு வயசு இருக்கும் போல

தம்பி, அது இன்னும் பெரியபிள்ளை கூட ஆகேல்ல

ம்ம ம்ம .. வேற பசங்க இல்லையா?

ஒரு மகன், அவன் சண்டைல நிக்கிறான்..

ஆர்ட குரூப்?

தெரியாது தம்பி

அண்ணை போராட்டம் முக்கிய கட்டத்துக் நெருங்கிக்கொண்டு இருக்கு, நாங்கள் உயிரை கொடுத்து போராடினா தான் அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழும். பயப்படாதீங்க. இந்தியாவில எங்களுக்கு நல்ல ஆதரவு வந்து கொண்டு இருக்கு. வெளிநாட்டு தமிழரும் எங்களுக்கு நிகரா போராட்டத்தில குதிச்சு இருக்கினம்.. எப்படியும் மீட்டிடலாம், நீங்க கவனமா போங்க

சரி தம்பி

என்று சொல்லிக்கொண்டே நடராசா மெதுவாக வண்டில் காளைகளை விரட்டினார். கனகம்மாவும் நடராசவும் ஒன்றும் பேசவில்லை. வானதி சற்று பேயறைந்த முகத்துடன் தாயின் தோளை பற்றிக்கொண்டு இருந்தாள். வண்டி ஒரு நூறு மீட்டர் சென்று இருக்கும்.

“அண்ணை நிப்பாட்டுங்கோ.. அண்ணை உங்கள தான்”

அந்த போராளி வேகமாக ஓடி வந்தான். கனகம்மா வன்னி வெயிலிலும் கொஞ்சம் நடுங்க ஆரம்பித்திருந்தாள். நடராசாவின் புருவங்கள் சுருங்கின.

“என்ன தம்பி..”

“குறை நினையாதீங்க…. அந்த பெட்டில என்ன கொண்டு போறீங்க?”

“அது .. வந்து .. உடுப்பும் சட்டி பாத்திரங்களும் ..வேற ஒண்டுமில்ல”

“இல்ல அண்ணை, எல்லாத்தையும் செக் பண்ண சொல்லி ஆர்டர்”

“வெறும் உடுப்பு தான் தம்பி, ஷெல் அடிக்க தொடங்க முதல் நாங்க போகணும்”

“அண்ணை எல்லாரும் முதல்ல வண்டியவிட்டு இறங்குங்க, அந்த பெட்டிய செக் பண்ணோனும்”

கனகம்மாவுக்கு இதற்கு மேல் பொறுக்கமுடியவில்ல

“என்ர பிள்ளைய பிடிச்சுக்கொண்டு போக நான் விடமாட்டன், ஐயோ அம்மா, என்ர கடவுளே .. நான் விடமாட்டேன்”

கனகம்மா அந்த பெரிய பெட்டியை இருக்கப்பிடித்து கொண்டு கதறினாள்

“அம்மா, நீங்களா விட்டா ஒரு பிரச்சனையும் இல்ல, இல்லாட்டி நிலைமை மோசமாகும், நான் பொறுப்பாளி இல்ல”

கனகம்மா தொடர்ந்து பெட்டியை மறைத்துக்கொண்டு நிற்க அவனுக்கு இன்னும் கோபம் வந்தது.

“இல்லை அண்ணை, நானே வாறன், அம்மா அப்பாவை ஒண்டும செய்யாதீங்க..”

பெட்டிக்குள் இருந்து தான் அந்த குரல். நடராசாவின் மூத்த மகள் மேகலா மெதுவாக அந்த டிவி பெட்டியை திறந்து கொண்டு வெளியே தலை நீட்டினாள், வியர்த்து விறுவிறுத்த படியே.

“ஐயோ, பெடியனை முதலில பிடிச்சாங்க, இப்ப பொம்பிள பிள்ளைய கொண்டு போறாங்க, ஐயோ ஐயோ, என்ர அம்மாளாச்சி”

அம்மா, கவலை படாதீங்க, அப்பா, வானதிய வடிவா பார்த்து கொள்ளுங்க, நான் எப்பிடியும் திரும்பி வருவன்

மேகலா தயக்கத்துடன் மெதுவாக வண்டியில் இருந்து இறங்கி நடராசாவிடம் சென்றாள். நடராசாவின் கண்கள் இரண்டும் நீர் முட்டி இருந்தது. செய்வதறியாமல் திகைத்து போய் நின்றார்.

அப்பா, அம்மாவை கவனமா பாத்துக்குங்க.. அப்புறம் ..வந்து..

சொல்லம்மா

குமரன் … குமரன் தொடர்பு கொண்டா, இந்த மேகலா எப்பிடியும் அவனிட்ட திரும்பி வருவா எண்டு சொல்லுங்கோ அப்பா

விக்கித்து போய் நின்றார் நடராசா

ஐயோ ஐயோ … ஆசையா வளர்த்த பிள்ளை .. கொல்ல கொண்டு போறாங்களே .. ஐயோ.. ஐயோ

கனகம்மா அரட்டிக்கொண்டு அழுது புரண்டாள். வன்னி வெயில் அனல் அடித்தது.

 

----------------------------------------------------------------------

மச்சி சும்மா இந்த ஷிவாஸ் ரீகலையும், ப்ளாக் லேபிளயும் அடிச்சு அடிச்சு அலுப்பு தட்டுது. ஒரு சேஞ்சுக்கு டிம்பிள் அடிச்சு பார்ப்போம்

சொல்லிக்கொண்டே குமரன் தன்னுடைய நான்கு நண்பர்களுக்கும் டிம்பிள் சாராயத்தை உடைத்து ஆளுக்கொரு பெக் ஊத்தினான்.

இனி மச்சான், இந்தியா பிக் அப் பண்ணிடும். ரஜனி கமல் இப்பிடி பேசினா பிறகும் கருணாநிதி சும்மா இருப்பார் எண்டு நான் நினைக்க இல்ல. இங்கால ஜெயலலிதா வேற ப்ரெஷர் கொடுக்கிறா. நீ இருந்து பாரு, 87ம் ஆண்டு மாதிரி இந்தியா வன்னில பருப்பு போட்டாலும் போடும்

சியர்ஸ்..

மச்சி, ஒண்ட நீங்க எல்லோரும் புரிஞ்ச கொள்ள வேணும்,  எங்கட தலைவர் இந்தியாவையோ இல்ல நோர்வேயையோ நம்பி இந்த போராட்டத்த ஆரம்பிக்க இல்ல. இது எங்களால எங்களுக்கு எண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாங்க எப்பிடியும் இத வெண்டு காட்டுவோம்

எப்பிடி மச்சி … டேய் கீர்த்தி, அவன்னில வச்ச சிக்கின் அவிஞ்சிட்டா எண்டு பாரு .. இல்லாட்டி கொஞ்சம் திருப்பி விடு

உண்ணாவிரதம் தான் ஒரே  வழி, காந்தி  திலீபன் எல்லாம் நத்திங் மச்சான். நாங்க எல்லாரும் கான்பெராவில போய் ஒரு பத்து நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தா எப்பிடியும் சர்வதேசம் அடிபணியத்தான் வேணும் மச்சி

கஷ்டம்டா

பத்து நாள் கஷ்டம்னா ஒரு அஞ்சு நாள் இருப்பமா? கொம்பனில “நோ பே” போட தேவை இல்லை

கருமம், நான் அத சொல்ல இல்ல, நாங்க எத்தனை நாள் இருந்தாலும் சர்வதேசம் அசையாது பாஸ்.

அசைய வைப்போம், வெளிநாட்டு தமிழர் எல்லாம் ஸ்டெடியா இருந்தா, யாரும் எங்கள அசைக்க முடியாது.

சரியா சொன்னாய் மச்சி, இன்னொரு கிளாஸ் ஊத்து

… குமரன் தள்ளாடினான்!

 

----------------------------------------------------------------------

 

ஐயோ அம்மா, விடுங்கடா என்னை .. அம்மா

மேகலா குற்றுயிராய் முனகிக்கொண்டு நிலத்திலே கிடந்தாள். நல்லவேளை சரியான நேரத்தில் சயனைட் அருந்தி விட்டாள். எல்லாமே ஒரே மயக்கமாய் இருந்தது. சுற்றிலுமே சிங்கள உரையாடல்கள். புரிந்தும் புரியாமலுமாய் இருந்தது. உடம்பு முழுதும் அடித்துப்போட்டால் போல ஒரே வலி.  அடி வயிற்றில் பிராணன் போகிறது. உடல் முழுதும் ஒட்டு துணி இல்லாதது, உயிர் போகும் வேளையிலும் அவமானமாய் இருந்தது. மேகலா அந்த நிமிடத்திலும் குமரனை நினைத்துக்கொண்டாள்.

முகத்த காட்டு

ஆ இந்த பொண்ணு தான், இன்னும் முனகிக்கிட்டு கிடக்கு

சயனைட் குடிச்சிட்டு போல

பாடிய தூக்கி ட்ராக்டர் பெட்டில போடு

இன்னும் முனகுது பொண்ணு

இந்தா பிடி

இண்டைக்கு தூக்கினதுக்குள்ள இது தான் மாற படு

ஆ?

சுப்பர் பாடிடா இது

இதுவா இதுவா …

கேட்டுக்கொண்டே சப்பாத்து கால்களால் அந்த சிப்பாய் மேகலாவின் அடி வயிற்றை உதைக்க உதைக்க, மேகலா முணுமுணுத்தபடியே மூர்ச்சை ஆனாள்

“சாரிடா குமரன், என்ன மறந்திடு”

 

---------------------------------------------

வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ, ஒரு தமிழன ஒன்பது நாடு  சேர்ந்து கொன்னதுக்கு பேரு வீரம் இல்ல… அது துரோகம்!

கைதட்டல் விசில் தியேட்டரில் காதை பிளக்க குமரன் சற்று பெருமையுடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கீர்த்தியை பார்த்தான்.

மச்சி சூரியா கலக்கீட்டான்ல, விஜய் கதி அதோ கதி தான்

 

-------------------------------------- முற்றும் --------------------------------------------

 

முடிவுரை

நண்பர்களே, இந்த கதையை மேலோட்டமாக வாசிக்கும் போது ஒரு தப்பான புரிதலுக்கு இடமளிக்க கூடும் என சில நண்பர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அது கதையின் மூலத்தை பாதித்து விட கூடாது என்பதால் இதை எழுதுகிறேன். இதிலே நடந்த மேகலா குமரன் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை. நான் கடந்த வருடம் வன்னி சென்ற போது நேரில் கேட்டு அறிந்தது. எனக்கு தெரிந்த பெண் கூட.. இதை பற்றிய நல்ல ஒரு கலந்துரையாடல் “கருத்துகள்” பகுதியில் இடம்பெறுகின்றன. என்னுடைய ஒரு பதிலை கீழே உள்ள சுட்டியில் பார்க்கவும். சிறுகதையில் தொக்கி நிற்கும் சில விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளேன். எழுத்தாளர் இந்த விளக்கத்தை ஒரு போதும் கொடுக்க கூடாது. ஆனால் நான் அமெச்சூர் என்பதால் செய்யலாம் என்று நினைக்கிறேன்!!

http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_15.html?showComment=1321434695295#c7713364138847510834

Contact Form