“படிச்சதென்ன? பிடிச்சதென்ன?” -- “ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்”

Nov 19, 2011

நீண்ட காலம் ஆகிவிட்டது சந்தித்து! இன்றும் இது எழுதுவதாய் இல்லை. ஆனால் இந்த  ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்  இன்று எழுத தூண்டிவிட்டான். நண்பனின் கதை என்ன தான் எழுதி இருக்கிறான் என்றே வாசிக்க சென்றேன்.  சில கதைகள் உணர்ச்சி வசப்பட வைக்கும். சில கதைகள் சிந்திக்க வைக்கும். சில கதைகள் இலக்கியத்தனமாய் இருக்கும். கம்பன் பாடல் போல, வாசிக்க வாசிக்க புது புது அர்த்தங்கள் தோன்ற வைக்கும். இந்த கதை தோன்ற வைத்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் கிடைக்ககூடிய கதை. அது தான் இலக்கியம். கம்பவாரிதி வீட்டு கட்டுத்தறி இல்லையா! என் அர்த்தம் இங்கே!
கதையை வாசிக்க இந்த லிங்க்!

ஏதென்ஸ் தோட்டத்து ராஜகுமாரா!!!!!
ஷேக்ஸ்பியரின் “Merchant Of Venice” தான் உங்கள் பெயரை வாசிக்கும் போது ஞாபகம் வரும்! ஐரோப்பிய இலக்கியம் அழகாக காதலிக்கும்.  அதிலும் இளவரசர்கள் இன்னும் அருமை, நீங்கள் அந்த பெயரில் உலாவுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை .. அது கிடக்கட்டும்!!
இந்த கதைக்கு,  எனக்கு ஒரு interpretation இருக்கிறது. அது நிச்சயம் உங்களதாய் இருக்க வேண்டிய தேவை இல்லை.
பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான Robert Browning இடம் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு Browning சொன்ன பதில், 
"இதை எழுதும் போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!" 
“இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே” என்ற தலைப்பு ஆரம்பத்திலேயே கட்டியம் கூறிவிட அந்த பாணியிலேயே வாசித்தேன். இரு துருவங்கள் இணைந்த காதல். ஆரம்பம். அவனை அவளும் அவளை அவனும் நன்றாக புரிந்திருக்கிறோம் என்று நம்புவதும், அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் என்றே பிறந்திருக்கிறோம் என்று நம்புவதும் அந்த தொண்ணூறு நாட்களில் நிச்சயம் நடக்கும். ஆனால் நிஜத்தில் அவனும் அவளும் வேறு வேறு.  அவன் எதிலும் கவிதை தேடும் (கணணி மேசையை கூட கலைத்து போட்டு அழகு பார்க்கும் ஆண் அவன், அப்புறம் அந்த சமையல் ரசனை) ரசிகன். பாவம் அவளுக்கு அது புரியவில்லை. அவன் மனம் போல வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அது “சிந்து பைரவி” படத்தில் ஜெகேபியின் மனைவி பைரவி, இசை படிக்கும் போது, வடகம் காயப்போட்ட சிந்தனை அவளுக்கு வரும் இல்லையா அது போல இருக்கிறது. பாவம் தொண்ணூறு நாட்களின் பின் நிஜம் உறைக்கும் போது இருவருமே உடைந்து விடுவார்கள். Brilliant Thinking!

“உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை கடுகு சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும் மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.”
செங்கை ஆழியான் பெருமைப்பட போகிறார். அவரின் ஞாபகம் வருகிறது. அவருக்கு பின் யார் என்ற அச்சம் கொஞ்சம் குறைந்தது போல. கமல் “மைனா” படத்துக்கு சொன்னது போல, இன்றைக்கு நிம்மதியாக தூங்கலாம்!! கொஞ்சம் ஓவரா போயிட்டமோ? Winking smile 
எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால். ஒருவனை நன்றாக புரிந்து கொள்ளமுடியாத பெண் எப்படி அந்த உணர்வை இத்தனை தெளிவாக தெரியப்படுத்துகிறாள்?
“இண்ட கதை வாசி எண்டு நாசரித்து எடுதிட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் ஏண்டா சொர்க்கமோ , இல்லை இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? இங்கை ஆழத்த்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை.”
Narration அவள் சிந்தனையாக போகிறது. ஆனால் அதிலே அவனின் எண்ண அலைகள் தலை தூக்குகின்றன. அட அவனே அதை வாய் விட்டு சொல்லியதாய் வாதத்துக்கு எடுத்து இருந்தாலும், அதில் சின்ன சறுக்கல், பாத்திரத்துக்குள்ளாலே எழுத்தாளர் எட்டிப்பார்த்து விட்டார் போல தோன்றுகிறது. ஆனால் இது என்னுடைய interpretation தானே. இதுவே அவனின் hallucination எண்ணங்களாக இருந்தால் (அதுவும் அழகான வடிவம் தான்), இது தவறு கிடையாது.
தலைவரே கொஞ்சம் எழுத்து பிழைகள். எனக்கும் அது ஒரு பிரச்சனை. கொஞ்சம் கவனிப்போம்.
இப்படியான கதைகளில், இது தான் எழுதுகிறேன் என்று எழுத்தாளர் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். கதையும் ஒரு நேரிசையாக சென்று கொண்டிருக்கும். புரியாவிடில், வெறும் பெண்ணொருத்தியின் உணர்வெழுச்சிகள் என்று அந்த கதை பார்க்கப்பட்டு விடும். அதையும் தாண்டி அந்த இரு துருவங்கள் அடையப்போகும், நீங்கள் சொல்லாமல் தவிர்த்த ஏமாற்றம் இருக்கிறதே.. அது தான் இந்த கதை இலக்கிய வட்டத்துக்குள் நுழைய காரணமாகிறது.

நீங்கள் புரிந்து தான் எழுதுவீர்கள். அதனால் சொல்ல மாட்டீர்கள். எனக்கு புரிந்து விட்டது என்று நான் சொல்லும் போது உங்களுக்கு ஒரு புளகாங்கிதம் ஏற்படும். சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!

முன்னைய பதிவுகள்
“The Spirit Of Music”
தொடர் அறிமுகம்!

Contact Form