கலியபெருமாள் இந்திரன்! கலியபெருமாள் சந்திரன்!

Nov 18, 2011

 

முற்குறிப்பு
இந்த பதிவு எனக்கும், என்னுடைய நண்பரும் கவனிக்கத்தக்க ஈழத்து இலக்கியவாதியுமான உதயாவுக்குமிடையேயான “ஏழாம் அறிவுடை நம்பிகள்” என்ற சிறுகதை சம்பந்தமான வாத பிரதி வாதங்கள். இந்த வாதத்தில் எங்களுக்கு நடுவரின் தேவை ஏற்படவில்லை என்பது பெருமைக்குரியது!

 

 

ஜேகே!

எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை உண்டு பண்ணி ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு -இங்கு நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன் , நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c.


பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு குணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது.


நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும் எண்டோ; சினிமா நடிகர்களின் நடிப்புக்கும், மேடை நடிகர்களின் நடிப்புக்கும் உணர்விளக்கும் கூட்டம் (உணர்ச்சி வசப்படல் என்பது வீறு வகை) எங்கள் 'நாளையை' வடிவமைக்கும் எண்டோ நான் நினைக்கவில்லை. ஆயினும் பெரும்பான்மை ஆகி நிற்கும் அந்த தமிழ் பேசும் (எழுதும் வாசிக்குமா எண்டு தெரியேல்லை) நல்லுலகம் (?) நாளையை இன்றைய ஜனநாயகத்தில் தீர்மானிக்கிறது என்பதே நிஜம். தமிழ்நாட்டின் அரசியல் நாளை - தமிழினது நாளையிலும். ஈழதமிழர் நாளையிலும் ஒரு முக்கிய செல்வாக்கு காரணி எண்டு நான் நினைக்குறன்.
ஒரு entertainer + உணர்வாளன் தன் எல்லைகளுக்குள், தன் கொள்ளளவுக்குள், தன் உணர்வை பதிந்திருக்குறான் எண்டே நான் எழாம் அறிவை பார்க்கிறேன்.


வாழ்வு முழுவதையும் அறிவு கொண்டு வாழ்ந்திடலாமா - முடியுமா ? + தேவையா ?, உணர்வாதல் பிழையா - என் சுழல்கள்.


என் நண்பன் ஒருவன் சொல்வது மாதிரி, போர் முனைகளில் புத்தனையும் காந்தியையும் தேடுதல் செரியா, போரை புத்தத்தையும் காந்தியத்தையும் கொண்டு ஆராய்தல் முறையா - என் சுழல்கள்.
களத்திற்கு தேவையான போது, கத்தி செய்து குடுக்காத நான், கத்தி எடுத்து களம் போகாத நான், கத்தி ஊரைக் கூட்டாத நான், கடமையே கண்ணா படிச்சுக் கொண்டிருந்த நான், கெட்ட பின் சூரிய நமஸ்காரமா, சந்திரனுக்கு அபிசேகமா, ஜடாயுவுக்கு அருச்சனையா எண்டு ஆராயலாமா தெரியேல்லை. நானும் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் தவறில் நியாயம் சொல்ல எனக்கு அருகதை இல்லை எண்டே நம்புகிறேன். என்னுடைய நியமங்கள் எனக்கு மட்டும், உங்களையும் அந்த வட்டத்துக்குள் வாருங்கள் எண்டு அழைக்க என் வட்டம் பற்றி எனக்குள் ஒரு தெளிவு இன்னமும் வரவில்லை.


என் அறிவும் தர்க்கமும் கொண்டு என்னால் ராமனுக்கு சூற்பனைகயை கூட கட்டி வைச்சிட முடியும். அதனால் 'இறந்த'-காலத்தை ஒரு மௌன சாட்சியாக பார்த்தபடி, தொலைந்து போன நித்திரையில் அடிக்கிற மாதிரி துடிக்கிற இதயத்தில் பனிக்கிற கண்களால் கனவொன்றை கட்டி வைச்சிருக்குறன், தவிர்க்க முடியாமல் அதன் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள். அத கனவு நனாவாக்க 'நாமார்க்கும் குடியல்லோம்' எண்ட என் கிழவனின் உரப்புக்காய் வேண்டுகிறேன்.


இது ஒரு வாக்கு மூலம், யாரையும் எடை பார்க்கும் எண்ணமோ, கொள்கைப் பிரச்சாரமோ கிடையாது. எழுதுவதும் அதை வாசிப்பதும் கூட உணர்ச்சி வசப்படுதலும் எண்டுதோடு நிண்டுவிடுகிறேன் (இந்தக் கதையில் வாற குமரன் மாதிரி) எண்ட என் நண்பன் கோபியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடச்ச பிறகு நானும் இதுதான் எண்டு ஒண்டை இது பற்றி சொல்லுவன் - அதுவரை கனவுகளும் அதை நனவாக்கும் கனவுகளும் நானும்.

அன்புடன்

ஏதென்ஸ் நகரத்து வாலிபன்

 

அன்புள்ள உதயா,

பதில் எழுதுவது கொஞ்சம் பதட்டமாகவே இருக்கிறது. பொதுவாக கதைகள் எழுதும் போது ஒரு 250px-Pied_Piper2கருத்தியல் தளம் அல்லது அனுபவ தளத்தை எடுத்து, அதிலே உயிரும் உணர்வும் உண்மையும் கலந்து கட்டமைக்கும்போது வாசகர்களும் அந்த கட்டுக்குள் நின்று கலவி கொள்வர். வாசகரை நாம் போகும் போக்கில் இழுத்து செல்லலாம், “Pied Piper Of Hamelin” போல! என்னுடைய முன்னைய கதைகள் கொஞ்சம் அந்த ரகம். அனுபவங்களை புனைந்து பிறந்த குழந்தைகள் அவை. ஆனால் “ஏழாம் அறிவுடை நம்பிகள்” நீங்கள் சொன்னது போல வேறு ரகம். சம்பவங்களுக்கு ஒரு நூல் கோர்த்து கொடுத்தது மாத்திரமே என் வேலை. அதை சட்டையாக தைக்கிறோமா, அல்லது சாக்குத்துணி செய்து போடுகிறோமா அது அவர் அவர் தளத்தை பொறுத்தது. எனக்கு தொப்பி தான் செய்யத்தோன்றியது!

 

இந்த மாதிரி சுயவிமரிசனம், மனதிலே நீண்ட நாட்களாய் இருந்தது தான். சில மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உரையாடி இருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் பேசுவதில்லை. எம்மில் பலருக்கு சிந்தனை பைனரி வடிவத்தில் அமைந்திருக்கிறது. 1 அல்லது 0. அந்த இரண்டு இலக்கங்களுக்குமிடையே முடிவற்று நீளும் தசம எண்களை நாம் சிந்தித்து பார்ப்பதில்லை. அதனால் 1 என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நபரிடம் 0.9 என்று சொன்னால் எம்மை 0 குழுமத்தில் சேர்த்துவிடுவார். பின்னர் நாமும் துரோகி தான். அதனாலேயே வாளாவிருந்தேன். ஆனால் பதிவு எழுதும்போது சிலவேளை அது என்னுடன் நானே உரையாடுவது போல! அதில் ஒரு சௌகரியம் என்னவென்றால் என்னோடு நான் முரண்பாட்டாலும் சண்டை போட மாட்டேன். அதனால் தோன்றியது தான் “ஏழாம் அறிவுடை நம்பிகள்”! 

இதிலே நகைச்சுவை என்னவென்றால், பலர் நினைத்தது நான் “ஏழாம் அறிவு” என்ற படத்தை விமர்சிக்கிறேன் என்று. என்னத்த சொல்ல! நான் அந்த படமே இன்னும் பார்க்கவில்லை. பார்த்தாலும் கூட ஒரு திரைப்படம் அரசியல் கருத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதை பார்த்து உணர்ச்சி வசப்படும் அளவுக்கு நான் இன்னும் மாற்றப்படவில்லை என்றே நம்புகிறேன். சொல்லும் விதத்தை ஒருவேளை ரசிப்பேன். கருத்து? ஒருவேளை ஹேராம் போல் சொல்வன திருந்தச்சொன்னால் ரசிப்பேன்!

ஆனால் எனக்கு இந்த “துரோகம்” பற்றிய கருத்து தேவையாய் இருந்தது. நாம் எப்போதும் தப்பே செய்வதில்லை இல்லையா! ஆச்சரியம் என்னவென்றால் நம் கடவுள்கள் கூட தப்பு செய்வதில்லை! அதற்காகவே நாம் நாரதர் என்ற பாத்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். நம்மில் தப்பு இல்லை, எல்லாமே நாரதர் கலகம் தான்! நாம் என்று இல்லை, ஆங்கிலேயே சட்டத்திலும் “Act Of God” என்று ஒரு ஷரத்து இருக்கிறது. தப்பை ஏற்றுக்கொள்ளாமல் விடும் கூறு, மனித இனத்தின் survival instinct என்று நினைக்கிறேன்.

அந்த survival instinct தான் நமக்கு “சிங்களம், இந்தியா, துரோகம், சர்வதேசம்” என்ற நான்கை  போராட்டத்தின் தோல்விக்கு காரணிகளாய் கூற வைத்தது. நம்பவும் வைத்தது. இதில் இலகுவாக ஒன்றை மறந்து விட்டோம். இந்த நான்கு தூண்களை நம்பியா போராட்டம் தோன்றியது. இல்லையே. நாம் பரீட்சைக்கு படிக்காமல் சென்று விட்டு பரீட்சை தாள் கடினமென்றால்? மற்றவன் பாஸ் பண்ணுகிறான் தானே! சரி பரீட்சை தான் கஷ்டம். நமக்கும் படிப்பு ஓரளவுக்கு பின் ஏறவில்லை.என்ன செய்யவேண்டும்? வேறு மார்க்கம் தேட வேண்டும் இல்லையா? கொஞ்சம் இலகுவான பரீட்சையை பார்க்க வேண்டும்! பரீட்சையே இல்லாமல் ஏதும் இருக்கிறதா? பார்க்க வேண்டும். ஏழு முறை கடந்து எட்டாம் முறை வெற்றி பெற்றது யாரு? நெப்போலியனா? மறந்து விட்டது. அவனுக்கு கூட “Water Loo” காத்திருந்ததே. "எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்று வள்ளுவர் கூறியதை தப்பாக புரிந்து வைத்திருக்கிறோமா? சரி இதை எல்லாம் ஆலோசிக்கமுதல், நம்மிலும் தப்பு இருக்குமோ என்று முதலில் யோசிக்க வேண்டும். யோசிக்க வைக்க எழுதியது தான் “ஏழாம் அறிவுடை நம்பிகள்”. என்னிடமும் வலுவான பதில் இல்லை. ஆனால் யோசிக்கவாவது செய்கிறேன். அவ்வளவே!

 

இப்போது இது எதற்கு? வலிகளை கிளறி என்ன ஆகப்போகிறது? என்று ஒரு கேள்வி. ஆபத்தான கேள்வி. கிளராதே வலிக்கும் என்றும் சொல்லும் உணர்வு. ஆனால் கிளரவேண்டும். செம்மணி தோண்டும் போது நாம் ஒன்றும் புதையலை தேடவில்லையே. வலிகளை தானே தேடினோம். ஆனாலும் தோண்டினோமே? தோண்டினால், தோண்டி அதை தோல் உரித்தால், மீண்டும் செம்மணி தொன்றிவிடாது என்ற ஒரு நப்பாசை. நம்பிக்கை. அதை தோண்டியே இருக்காவிடில் யாழ்ப்பாணம் முழுதும் கிருஷாந்திகள் சைக்கிளில் சென்று இருப்பார்கள். தோண்டியதால் ஒருத்தியாவது இன்றைக்கு கண்ணம்மாவை கொஞ்சிக்கொண்டு இருப்பாள். அவளுக்கு தெரியாது அது ஏன் என்று!

 

இதை தான் நான் செய்ய முயற்சிக்கிறேன். எனக்கு ஒரு இலேசான பயம். நாம் இன்னும் நீக்குப்போக்கு இல்லாதவராகவே இருக்கிறோம். அப்படி இருப்பவர் இலகுவில் துரோகி ஆக்கப்பட்டு இன்னொரு தூணாக்கப்படுகிறார். இதிலே இந்த நீக்குப் போக்கின் எல்லை எது? எது வரை போகலாம்? முக்கியமாக வெளிநாட்டு வாழ் மக்கள். நம் இருப்பு கேள்விக்குறி இல்லை, நாளை நம் வாசலில் வெள்ளை வான் இல்லை என்ற நம்பிக்கையில் எதுவும் பேசலாம். அதை தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். இந்த உணர்ச்சி வசப்படும் தன்மை ஆக்கபூர்வமா? மீண்டும் மீண்டும் விடை ஒன்றும் சொல்வதாயில்லை. எனக்கு தெரியாது. எனக்கு சரி என்று தோன்றுவதோ, அந்த எல்லையோ உங்களுக்கு சரியாக தொன்றவேண்டியதும் கிடையாது. எனக்கு என்ன தேவை என்றால், இங்கே நம்மை நாமே கேள்வி கேட்டு சுயவிமரிசனம் செய்து கொள்வது மாத்திரமே. விடைகள் வேண்டாமே! அது பின் அரசியல் ஆகிவிடும். இதுவரைக்கும் அது ஆகவில்லை என்றே நினைக்கிறேன்!!

 

உனக்கென்ன உரிமை இருக்கிறது என்று ஒரு கட்ட பொம்மன் கேள்வி. எனக்கும் தான்! நானே கேட்டுக்கொண்டேன். எனக்கு ஒரு உரிமையும் கிடையாது. வலியை அனுபவித்து இருக்கிறேன். அவ்வளவே. ஆனால் உதயா சொன்னது போல, அங்கே ஆயுதம் சங்காரம் செய்யும் போது நான் கம்பன் பிரசங்கம் கேட்டுக்கொண்டு இருந்தேன். கோணேஸ்வரியின் பெண் உறுப்பில் கிரனைட் புகுத்திய போது நான் படையப்பா முதல் ஷோ பார்த்துக்கொண்டு இருந்தேன். எனக்கென்ன உரிமை இருக்கிறது. நான் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறேன்? “ஏழாம் அறிவுடை நம்பிகள்” பதிவின் அடிப்படை நாதமே இது தானே!!

 

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? செய்யா விட்டால் தான் தப்பு! கண் நமக்கு தானே கெட்டது. சூரியன் அப்படியே அங்கேயே தானே இருக்கிறது. நமக்கு தெரியவில்லை என்பதற்காக சூரியனே இல்லை என்றா சொல்வது?

இது நான் சூரியனை நமஸ்ரிக்கும் தருணம்!

Contact Form