"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே.
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே"
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே"
இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள்.
அட ஒருவர் செய்த பிழைக்கு ஏன் ஊரை நொந்து கொள்கிறீர்கள் என்று கேட்கவேண்டாம். நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வப்போது கிள்ளுக்கீரையாய் பயன்படுத்தும் போது வலிக்கிறது. கமலை கேரளா கொண்டாடியது என்பதற்காக டாம்999 படத்தை நீங்கள் அனுமதித்தீர்களா? இல்லை தானே. அது போல முத்துக்குமார்களுக்கு சிரம் தாழ்த்தினாலும் நீங்கள் அடிக்கடி எம்மை வைத்து வியாபாரம் செய்யும் போது வலியோ வலி. யாரிடம் போய் அழமுடியும் சொல்லுங்கள்? அடித்தவனை திருப்பி அடித்து, பின் அவன் காலிலேயே விழுவது ஒன்றும் எமக்கு புதியது இல்லை. என்ன ஒன்று, நாம் அதை ஒரு போதும் ஏற்று கொள்ளமாட்டோம். அவ்வளவே. எங்களுக்கு எப்போது மீசையில் மண் ஒட்டியது?
“யாருமில்லாத தீவு ஒன்று” வேண்டும் என்ற பாடலில் “ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை பூப்பூத்து நீ சூட தர வேண்டுமே” என்று எழுதியபோது, அது உறுத்தவில்லை. அதில் ஒரு நம்பிக்கை இருந்தது. “இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து, காதல் வந்ததே” என்று பாடிய போதும், நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தெனாலியை கூட நகைச்சுவை என்றே கொண்டாடினோம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மணிரத்னம் ஈழத்து போரை ஆயுத வியாபாரிகளின் போர் என்று சொன்னபோதும், அவருக்கு புரியவில்லை என்று ஒரு சால்ஜாப்பு சொன்னோம். அப்போதே புன்னகை மன்னனில் பாலச்சந்தர் நடுவுநிலைமை என்று சொன்ன போது கூட, சரி, கலைப்படைப்பு தானே என்று விட்டு விட்டோம். ஆனால் இப்போது ஏனோ வலிக்கிறது.
யுகபாரதியை குறை சொல்லவில்லை. அவர் பாவம், புதுசாக எழுதவேண்டும் என்று எழுதிவிட்டார். ஈழத்தை பற்றி எழுதினால், யார் கண்டது, இதுவும் கொலைவெறி பாடல் போல youtube இலும் வலம் வரலாம். கோல்ட் விருதும் கிடைக்கலாம். அவர் எண்ணத்தில் தப்பு இல்லை. அது வியாபாரம். எங்களுக்கு புரிகிறது.
ஆனால் இந்த விஷயம் எங்களுக்கு அப்படிப்பட்டது இல்லை. ஈழம் என்ற விஷயம் நிறைய பதிவுகளை எமக்குள் கொண்டது. சிலர் அழுவார்கள். சிலர் உணர்ச்சிவசப்படுவார்கள். சிலர் வைவார்கள். சிலர் தம்மைப் தாமே நோந்துகொள்வார்கள். ஒரு திரி போல, தூண்டிவிட்டால் மீண்டும் போராட வேண்டும் போலவும் இருக்கும். அது வேண்டாம். புரட்சி பேசி நிறைய இழந்துவிட்டோம். பேசவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பேசி விட்டு அடுத்தது என்ன என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுவிட்டு பேசுங்கள். போகிற போக்கில் பேசிவிட்டு அடுத்த ஐட்டத்துக்கு போவதாக இருந்தால், எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள். நாங்கள் இழந்தது ஊண், உணர்வு கொண்ட மனிதர்களை, எம்மோடு கூடித்திரிந்தவர்களை, நாம் வாழ்ந்த வாழ்க்கையை. எங்கள் அடுத்த தலைமுறை அந்த வாழ்க்கையை தொலைத்துக்கொண்டே பிறந்து கொண்டிருக்கிறது, கடவுளை அறியாத மனிதர்கள் போல. வலிகள், ரணங்களாகி நாளடைவில் வடுக்களாகுமா என்று நாளையை யோசிக்க பலர் ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் எது செய்தாலும் கொஞ்சம் அதிகம் கவனத்துடன் தான் செய்கிறோம். செய்கிறார்கள். நீங்களும் ப்ளீஸ் செய்யுங்கள்.
இன்னமும் நீங்கள் தான் என்று நினைத்துகொண்டிருக்கும் பேதை இனம் நாங்கள். நீங்கள் அவ்வப்போது ஜாலியாக அருவாளை பாயச்சும்போது, திருப்பி பாய்ச்சவும் பயமாக இருக்கிறது. ஊமையாய் அழுகிறோம். இது ஒன்றும் புதுசு இல்லை எமக்கு. நீங்கள் அடுத்தமுறை பாய்ச்சும்போது தயவுசெய்து நெஞ்சில் பாயச்சுங்கள். வலிக்காது. அடிக்கடி அங்கே ஏறியதால் மரத்துபோயவிட்டது.
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்று அம்மா சொல்லும். ஒளிந்து கொள்ள ஒரு பொந்து கூட இல்லாத சுண்டெலிகள் நாங்கள். அடித்து ஆடுங்கள்.
------------------------------------