யாழ்ப்பாணத்தில் திமுக தலைவர்!

Jan 18, 2012

 

இராமசாமி தண்டவாளத்தடியில் ஒன்றுக்கு போய்விட்டு வந்து சொன்னார்.

“வெங்காயம் வெங்காயம்! தமிழனுக்கு யாரிட்டையாவது ஏமாறிக்கொண்டு இருக்காட்டி பத்தியப்படாது. யாராவது இன்சூரன்ஸ்காரன் பல்சரில வந்து ஏமாத்துவான்! இல்லாட்டி கொழும்புல பிளாட் கட்டலாம் எண்டு உறுதியில்லாத காணிக்கு காசு குடுப்பியல், அதுவும் இல்லாட்டி பிள்ளையார் கோயிலுக்கு தங்கத்தில மணி மகுடம் வைப்பியல் .. விளங்காம தான் கேட்கிறன் கடவுள் ஆரடா?”

“சாமியண்ணே, கதைய விட்டிட்டு மேசைய பார்த்து விளையாடன! விசுக்கொப்பன் துரும்பு, மசிர்.. அத பிடிக்க ஏலாதே? அடுக்கி விளையாடுற தாள், இத்தினி வருஷமா விளையாடுற, இன்னும் துரும்பு பிடிக்க மாட்டியாம், கடவுள் இல்லையெண்டு கண்டுபிடிக்க வந்திட்டார் பேராசிரியர் சிவத்தம்பி!”

உங்களோட  தாள் விளையாடுற என்ன போய் செருப்பால அடிக்கோணும், சிவத்தம்பிக்கும் கடவுளுக்கும் என்னடா சம்பந்தம்?

மத்தியானம் சாப்பாட்டு நேரம் தாண்டிக்கொண்டு இருந்தது. இராமசாமி பேசியதை மற்றவர்கள் கணக்கெடுத்ததாக தெரியவில்லை. எல்லோரும் ஒத்த வயதுக்காரர்கள். “ஹிட்லர் சாகிறதுக்கு முதல் கலியாணம் முடிச்சது”, “ஜி ஜி பொன்னம்பலம், பிரிட்டிஷ் மகாராணிக்கு chapman படிப்பிச்சது” காலத்தவர்கள்!  கிழமை நாள் எண்டால் பத்து மணிக்கு நந்தாவில் அம்மன்கோயில் வேப்பமரத்தடிக்கு ஒவ்வொருத்தராக வருவினம். ஆளுக்கு ஒரு பேப்பர். உதயன், வீரகேசரி, வலம்புரி. இராமசாமி பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் கொண்டுவருவார். “Western bureaucracy is bullshit” என்பார்.  “Putin should go” என்று ரஷ்யா பக்கம் திரும்புவார். “இந்த சுமந்திரனுக்கு யாழ்ப்பாணம் தெரியுமே?” “அம்பேத்கர் மதம் மாறினது கடவுள் இருக்கிறார் எண்டத ஆக்சாப்ட் பண்ணினமாதிரி போயிட்டுது” பலதும் சொல்லுவார்.  பதினொரு மணிக்கு சீட்டாட்டம் ஆரம்பிக்கும். ஆறுபேர் ஆட்டம். எட்டுத்தாள், பன்னிரெண்டு துரும்பு. அரசியலும் கார்ட்ஸ் ஆட்டமும், யாழ்ப்பாணத்து கள்ளும் சூடு கிளப்பும்.

நயினாதீவு தபாற்கந்தோரில் வேலை பார்த்த இராமசாமி அந்த காலத்து பெரியார் தொண்டன்.  நயினாதீவு அம்பாள் கோவில் தர்மகர்த்தா சபையில் மச்சான் குணரத்தினம் இருப்பதால் இராமசாமிக்கு இடம் இல்லை.  ஒருமுறை இந்தியாவுக்கு ஸ்தல யாத்திரை சென்றபோது தான் பெரியார் புகழ் கேள்விப்பட்டார். திரும்பி வந்தபோது யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் மற்ற சாதிகளை அடிமைப்படுத்துவதை கண்டு மனம் வெதும்பிப்போனார்.  வெள்ளாளர் கொட்டத்தை அடக்க “திமிலர் முன்னேற்ற கழகம்” என்று ஒரு கழகத்தை 1974ம் ஆண்டு  அமைத்தார். நயினாதீவு அம்மாள் கோயிலுக்கு முன் வளவில் இருந்த பொட்டல் காணியில் ஒரு சின்ன கொட்டில் போட்டு அதில் அம்மாள் கொடியேற்றம் அன்றே திராவிட கொடியேற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

“என் மதிப்பிற்குறிய திமிலர் பெருமக்களே! நான் வெள்ளாளனாக இருக்கலாம். ஆனால் உங்களில் ஒருவன். பெரியார் யாரு என்று தெரியுமா? நாயக்கர். ஆனால் அவர் தலித்துகளுக்காக தன்னையே அர்ப்பணித்த்தார். நோர்வே முதல் சவுத் ஆபிரிக்கா வரை, வெள்ளைக்காரன் தான் மீன் பிடிக்கிறான்! ஆனா யாழ்ப்பாணத்தில் மட்டும் திமிலன் பிடிக்கவேண்டுமா? தமிழன் சிந்திக்கவேண்டிய தருணம். வெள்ளாளனுக்கு பெண் சிக்கும் போது மீன் சிக்காதா? உங்களுக்கு தேவை ஒரு பெரியார். இதோ உங்கள் முன்னால்!”

பெரியார் யார் என்றே தெரியாத கூட்டம் இராமசாமியை பெரியார் என்று சொல்ல ஆரம்பித்தது. இராமசாமியின் முதல் டார்கட், அம்பாள் கோயில் தான். அம்பாள் கோயில் தர்மகத்தா சபையில் திமுகவும் உறுப்பினர் ஆகவேண்டும். எல்லா சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் என்று போராடினார். கழகத்தின் முன்னே ஒரு வாங்கு போட்டு கீமாயிண பிரசங்கம் திருவிழா பதினைந்து நாளும் செய்வார். அந்த நேரத்தில் தான் முத்தவேளியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி விழா ஆரம்பித்தது. ஜனவரி பத்தாம் திகதி மாநாட்டில் குழப்பம், குண்டுவீச்சு. ஒன்பது பேர் பலி. இதெல்லாம் தெரிஞ்ச விஷயம். ஆனால் அடுத்தநாள் இரவு, நயினாதீவு மகாவித்தியாலயத்துக்கு பக்கத்தால இராமசாமி நடந்து வந்துகொண்டிருந்த போது, பத்து எருமைமாட்டு தடியன்கள் வந்து இருட்டு அடி அடிச்சாங்கள். வந்தவங்கள் சிங்களத்தில கதைச்சதால இராமசாமி பொலிசில கம்ப்ளைன் பண்ணேல்ல. மச்சான் குணரத்தினம் தான் நேவியை செட் பண்ணி தன்னை அடிச்சுப்போட்டதா இராமசாமி புலம்பிக்கொண்டு இருந்தார். திமுகவின் நிர்வாக சபை கூட்டம் ஒரு வாரத்தில் நடப்பதாக இருந்தது. அடுத்த நாள், நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் வெட்டி துண்டு துண்டாய் போடப்பட்டு  கிடக்க. இராமசாமி அதற்கடுத்த நாளே, யாழ்ப்பாணம் கொக்குவிலில் வெள்ளாளர் கொட்டத்தை அடக்க நிரந்தரமாக மூவ் பண்ணிவிட்டார்!  

இராமசாமி கவிதையும் எழுதுவார். குடியரசு பத்திரிகைக்கு “வெள்ளாளனே வெளியேறு” என்று ஒரு உணர்ச்சிக்கவிதை அனுப்பியிருந்தார். பிரசுரமாகவில்லை. இண்டைக்கு கேட்டாலும் தான் குடியரசுக்கு கவிதை எழுதியதாக சொல்லிக்கொள்வார்!

துரும்பு விசுக்கோப்பன். மணலோட நாலு துரும்பு. இரண்டடுக்கு தாள்.

“இவன் எடுபட்ட சுந்தர், எங்கட பிரின்சிபல் ஆறுமுகத்தின்ர மூத்தது, முந்தநாள் சுவிஸ்க்கு போன கையோட அவருக்கு பக்தி வந்திட்டாம். வைரவருக்கு தங்கத்தில் சூலம் செய்து போடப்போறாராம். பேப் புடுக்கர், அந்த காலததில கோவிலுக்கு பின்னாலே ஒன்னுக்கு அடிச்சிக்கொண்டு இருந்தவர், இப்ப யாருக்கு படம் காட்டுறார் எண்டு தெரிய இல்லை”

“இராமசாமி, அவன் என்னத்த செய்தா உனக்கென்ன, அவனிட்ட இருக்குது செய்யிறான், நீயும் இருந்தா செய்யன்?”

என்று வேலாயுதம் இன்னும் ஏத்திவிட்டான்

“சனம் அந்த பாடு படேக்க இவங்கள் என்னத்த செய்தவங்கள்? இந்த கோயில் குளத்துக்கு கொட்டுற நேரம் ஒவ்வொரு வன்னி குடும்பத்தை சுவீகரிச்சு வளர்த்துவிடலாம். வெங்காயம் தமிழருக்கு கடவுள் இப்ப என்னத்துக்கு வேணும் என்று கேட்கிறன்? காணியும் போலீசுமே இல்லையாம்? கடவுள் இருந்து மட்டும் …”

இராமசாமி கெட்டவார்த்தையால் கடவுளை திட்டத்தொடங்கினார். ராமசாமிக்கு சலரோகம் இருக்குது. அடிக்கடி தனியே போய் தண்டவாளத்தடியில் ஒதுங்குவார்.

இராமசாமிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ஆனையிறவு அடிபாட்டில் செத்துப்போனான். பிரேதம் கிடைக்கேல்ல. பகுத்தறிவால இராமசாமி மகனுக்கு கிரியை ஒண்டும் செய்யேல்ல. கமலாம்பிகை, அவரின்ட மனைவிதான் தம்பிக்காரனை வச்சு களவாக அம்பாள் கோயிலில் அபிஷேகம் செய்தாள். இண்டைக்கு வரைக்கும் இராமசாமிக்கு இந்த விஷயம் தெரியாது.  இரண்டு வருஷத்துக்கு முன்னால கமலாம்பிகையும் செத்துப்போனா. இராமசாமி இப்போது மகளோட தான் இருக்கிறார்.  நயினாதீவில் ஐஞ்சு பரப்பில தோட்டக்காணி இருக்குது. அதையும் திமிலர் பெடியன் ஒருத்தனுக்கு எழுதிக்கொடுக்கப்போறதா சொல்லிக்கொண்டு இருந்தவர். மகள் வீட்டை விட்டு துரத்திப்போடுவன் என்று சொன்னதால பம்மிக்கொண்டு இருக்கிறார். வேலை ஒன்றும் செய்யிறதில்ல. பென்ஷன் வருது.  எட்டு மணிக்கு பேரனை பள்ளிக்கூடம் கூட்டிப்போவார். ஒரு மணிக்கு திரும்பி கூட்டிவருவார்.  

“சும்மா எதுக்கு எடுத்தாலும் கடவுள குற்றஞ் சொல்லாத சாமி, கடவுளும் தான் எவ்வளத்த எண்டு கவனிக்கிறது?”

“என்னத்த கவனிக்கிறார்? அவ்வையாருக்கு வெட்டியா நாவல் பழம் புடுங்கி குடுக்க டைம் இருந்திருக்கு … இப்ப பத்து நூறு வருஷமா ஒண்டையும் புடுங்கினதா கதை இல்ல .. நல்லா சம்பந்தர் மாதிரி ஆக்கள் பாடி  ரீல் விட்டு இருக்கிறாங்கள், நீங்களும் அவங்களிண்ட பாட்ட பாடுங்க, தோடுடைய செவியன்! அவன் பார்த்து தான் வெள்ளைக்காரன் காதில தோடு போடுறான் போல”

“நீ மகன் போன சோகத்தில கடவுள் இல்லை எண்டு சொல்லிறாய், வெள்ளைவத்தல விசா பிள்ளையார் தெரியுமே? ஒரு தேங்காய், ஆயிரம் ரூவா அர்ச்சனை தான், எண்ட சின்னவனுக்கு அவுஸ்திரேலியா  ஸ்டுடண்ட்  விசா அடுத்த கிழமையே கிடைச்சிட்டு, போய் இறங்கின உடனே கையை தூக்கிட்டார், நல்ல பொம்பிள பார்க்கோணும் இப்ப!”

மகனை இழுத்தது இராமசாமிக்கு கோபம் கோபமாய் வந்தது. கார்ட்ஸ் தாள்களை விசுக்கென்று சுழற்றி எறிந்தார்.

“டேய், யாழ்ப்பாணத்திலேயே பகுத்தறிவு இருக்கிறது எனக்கு மட்டும் தாண்டா! நீ எல்லாம் ஸ்ரீமாவுக்கு கொடி பிடிச்ச காலத்திலயே நான் திராவிட கொடி பிடிச்சவண்டா! அந்தகாலத்தில நான் மேடையில பேசினா, ஆயிரம் பேர் பின்னால வருவாங்கடா! வெங்காயம், போங்கடா நீங்களும் உங்கட கள்ள தாள் விளையாடும்”

“அதான் அடிக்கடி மூத்திரத்துக்கு தனியே தண்டவாளத்துக்கு போறாய் ஆக்கும்? உண்ட பகுத்தறிவு பம்மாத்து எங்களுக்கு தெரியாதா ராமசாமி! வாளி தூக்க கூட ஒரு ஆள் கிடையாது!”

இராமசாமி எதுவும் பேசாமல் தண்டவாளத்தடிக்கு ஒன்றுக்கடிக்க விரைந்தார்.

தனியாக!

Contact Form