கௌஷல்யா அக்கா, பெரியம்மாவின் மகள். அத்தான் இன்ஜினியர். 80களிலேயே யாழ்ப்பாணத்தில் கம்பியூட்டர் வைத்திருந்தவர். நான் அறிந்த இன்ஜினீயர்களில், அந்த திறமையை வீட்டிலும் பயன்படுத்துபவர். அவர் வீட்டில் அழுக்குத்தண்ணி போகும் குழாயும் கிடங்கும் கூட ஒரு இன்ஜினியரிங் டச்சுடன் இருக்கும். பத்து வயசிலேயே அவர் மகன் சின்ன circuit இல் LED எல்லாவற்றையும் இணைத்து எனக்கு காட்டுவான். பளிச் பளிச் என்று ஒவ்வொரு கொமாண்டுக்கும் ஒவ்வொரு வரிசை காட்டும். நான் சொல்வது 88ம் ஆண்டு கதை. அப்போது தான் கணனியில் கேம் விளையாட பழக்கினார். போர் விமானம் ஒன்றை ஒரு குறுகலான கரடுமுரடான வழியில் செலுத்தவேண்டும். கல்லு விழும். மற்ற விமானங்கள் குண்டு பொழியும். தப்பவேண்டும். ஓடவேண்டும். அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள்! நான் ஆஸ்திரேலியாவில்!
1999 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எடுத்தாயிற்று. இனி என்ன செய்ய என்று அக்காவிடம் கேட்ட போது அடுத்த முறைக்கும் இப்போதே தயாராகு என்று சொன்னா! என் ரிசல்ட்டை பற்றி வீட்டில் அவ்வளவு நம்பிக்கை! ரிப்பீட்டுக்கு டே கிளாஸ் எல்லாம் எப்போது ஆரம்பிக்கும் என்று Science hall சென்று விசாரித்ததை பார்த்த சிவத்திரன் மாஸ்டர் ஓடிவந்து திட்டினார். பேசாம போய் கம்பியூட்டர் படி என்றார். அட அக்காவாவது ரிப்பீட் ட்ரை பண்ணு என்று சொல்ல, இவர் ஆணியே புடுங்க வேண்டாம் என்று சொல்லுறாரே என்று நினைத்துக்கொண்டு நேரே பிரியா வீட்ட போனேன். மேகலாவும் Informatics ல தான் படிக்கிறாள். நாங்களும் ஜாய்ன் பண்ணுவோம் என்றான். போய் கேட்டோம். Diploma in Computer Science என்று ஒன்றை படிக்க சொன்னார்கள். பக்கத்தில் இருந்த லாப்பில் எட்டிப்பார்த்தேன். யாரோ ஒருத்தன் கையில் ஒரு டென்னிஸ் பாலை உருட்டிக்கொண்டு இருந்தான். பிரியாவிடம் கேட்டபோது மச்சி அது தான் ரிமோட் கன்ட்ரோல் என்றான். கம்பியூட்டருக்கு எங்கேயடா ரிமோட் என்றேன். டிஸ்ப்ளே இருக்கும் போது ரிமோட் இருக்ககூடாதா என்று டிப்பிக்கல் யாழ்ப்பாணத்து ஜோக் அடிச்சான். நானும் கம்பியூட்டர் படிச்சன்.
அப்போது எல்லாம் கம்பியூட்டர் லாப் போவதென்றால் சிலிப்பர் கழட்டி வெளியில் வைக்கவேண்டும். முதல் முதல் மௌஸ் பிடிக்கும் போது சனியன் ஒரு இடத்தில நிற்க மாட்டேன் என்றது. பக்கத்தில் இருந்த மேகலா தான் எப்படி என்று சொல்லித்தர தாங்க்ஸ் என்றேன். டோன்ட் மென்ஷன் என்றாள். இரண்டு கதிரை தள்ளி உட்கார்ந்திருந்த ப்ரியா உடனே ஓடிவந்து தன்னுடைய C++ ப்ரோக்ராம் compile பண்ணுதில்ல என்று மேகலாவிடம் அட்வான்ஸ் டவுட் கேட்க, windows media player இல் “ஒ வெண்ணிலா இரு வானிலா”?
2000ம் ஆண்டு கொழும்பு. ஆன்ட்டி வீட்டில் விபிதன் கம்பியூட்டரில் எப்படி CD ப்ளே பண்ணுவது என்று சொல்லித்தந்தான். Solitaire கேம் விளையாடிப்பார்த்தேன். துரும்பே இல்லாமல் எப்படி கார்ட்ஸ் விளையாடுவது புரியவில்லை. மூடிவைத்துவிட்டேன். பல்கலைக்கழகத்தில் என்ன பிரிவு என்று தெரியவேண்டும். சுபாகரன் அண்ணா கேட்டார். நான் ஸ்ரீதர் போல வரப்போகிறேன் என்றேன். யாரது என்று கேட்டார். A R Rahman இன் sound engineer என்றேன். electronics செய்யப்போகிறேன் என்றேன். விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் விழுந்த திட்டை விட மோசமாக திட்டினார். கொலைவிழும்! எல்லோரும் எதை போடுகிறார்களோ நீயும் அதைப்போடு என்றார்! நாறும் என்று தெரிந்தே கணணி பிரிவுக்கு போனேன். ரகுமான் தப்பினார்!
கணணி படித்துக்கொண்டு வீட்டில் கணணி இல்லை என்றால்? அப்பாவிடம் கேட்டேன். கேட்டுக்கேள்வி இல்லாமல் அறுபதினாயிரம் எடுத்து வைத்தார். இன்றைக்கு நான் ஐம்பது டாலர் எடுத்து வைக்கவே யோசிக்கிறேன். தகப்பன் எப்போதும் தகப்பன் தான். கணணி வாங்கவேண்டும். யாரைப்பிடித்து வாங்குவது! கொழும்பிலே படிச்சு வளர்ந்த ஜெயரமணன் தனியா ஒரு கம்பனி நடத்துறான். நேர்மையானவன் என்று கஜன் சொன்னான். கேட்டேன். வாங்கித்தந்தான். கூடவே இரண்டு கேம் போட்டுத்தாந்தான். கேம் விளையாடி கீபோர்ட் தேய்ந்தால் வாரண்டி இல்லை என்றான். எவ்வளவு என்றேன். மற்ற ஆக்களுக்கு அறுபது. உனக்கு அம்பத்தாறு என்றேன். யாரு அந்த மற்ற ஆக்கள் என்றேன். யாரும் இல்லை என்றான்!
40GB Hard Disk
256MB RAM
Windows 2000
15 Inch CRT Monitor
56000 Rupees (~650 Dollars)
முதல் கணனி. முதல் காதலி! தொட்டவுடன் கரண்ட் டர்ர்ர் என்று அடித்தது. பயந்துவிட்டேன். ரமணன் ஏமாற்றிவிட்டான் பாவி. கால் போட்டேன்.
மச்சான் கரண்ட் அடிக்குது. இது என்னைய சாகடிச்சிடும் போல இருக்கேடா.
பயப்படாத. உங்க வீட்டில எர்த்த்திங் லிங்க் ப்ராப்ளம். எதுக்கும் ஸ்லிப்பர் போட்டுக்கொண்டு கம்பியூட்டர் யூஸ் பண்ணு
ஸ்லிப்பர் போட்டேன். கொஞ்சகாலம் கரண்ட் அடிக்கவில்லை. DSL மூலம் இன்டர்நெட் கனெக்ட் பண்ண அஜீத்தன் பாஸ்வோர்ட் தந்தான். முதலில் பார்த்த வெப்சைட் globaltamil.com. அப்போது அது பேமஸ். ஷக்தி எப்எம் க்கு என்ன பாடல் வேண்டும் என்று மெசேஜ் எல்லாம் அனுப்பினேன். கொஞ்சநாளில் வைரஸ் அடித்துவிட்டது.
2004ஆம் ஆண்டு. Software company வேலை புது அனுபவம். சும்மா ஒரு கலக்கு கலக்கவேண்டும் என்ற வெறி. ஆபீஸ் டைம் போதாது. வேலையை வீட்டுக்கும் கொண்டு வரவேண்டும். லாப்டாப் ஒன்று வாங்கினால் சனி ஞாயிறும் அதிலேயே வேலைசெய்து Tech Lead ஐ இம்ப்ரெஸ் செய்யலாம். தேடத்தொடங்கினேன். செந்தில் அண்ணா தான் DELL இல் offer போடுவதாக லிங்க் அனுப்பினார். எனக்கு எந்த லேப்டாப் சரிவரும் என்றும் சொன்னார். கருப்பாக, ஸ்லிம்மாக அலைபாயுதே ஷாலினி போன்று வெப்சைட்டில் லாப்டாப் சுழன்று அடிக்க வாங்கினால் இதை தான் வாங்குவது என்று தீர்மானித்தேன். நான் வாங்கும் சம்பளம் போதாது. அக்காதான் நீ அப்புறம் தாடா என்று சொல்லி காசு போட்டு சிங்கப்பூரில் இருந்து வாங்கி அனுப்ப என் தேவதை வந்தாள்.
Dell Celeron
1.1 GHz
512 MB RAM
80GB Hard Disk
14Inch Screen
1099 சிங்கப்பூர் டாலர்கள்
2006ம் ஆண்டு சிங்கப்பூருக்கு மாற்றல் ஆகிறேன். சம்பளம் எடுத்தவுடன் என்ன செய்யபோகிறாய் என்று அக்கா கேட்க லாப்டாப் வாங்கபோகிறேன் என்றேன். இப்போது DELL எனக்கு போதவில்லை. ஹீட் அதிகம். புதுசு தேடுகிறேன். அப்போது எல்லாம் SONY VAIO பிரபலம். FZ series.
1.2GHz Processor
1GB RAM
100GB Hard Disk
15Inch Screen
2000 சிங்கப்பூர் டாலர்கள்
Sony ஒரு சுப்பர் லேப்டாப். ஹீட் அதிகம் இல்லை. வைட் ஸ்க்ரீன். வேலை செய்வது இலகு. டிஸ்ப்ளே கூட நல்லது தான்.
2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு படிக்க போகிறேன். இரண்டு வருடங்களில் SONY அலுத்துவிட்டது. திடீர் திடீர் என்று பவர் ஓப் ஆகிறது. திருத்தமுடியவில்லை. மேகலாவைப்போல unpredictable. என்னை விட்டு விடேன் என்று கெஞ்சியது. வேறு ஆள் தேட ஆரம்பித்தேன். டேபிலேட் கணணி கண்ணில் மாட்டியது. ஆய்வு செய்ய தொடங்கினேன். HP Tablet சிறந்தது என்றார்கள். Pen பாவிக்கலாம். லெக்சர் நோட்ஸ் எடுக்கலாம். மடியில் வைத்து அழகாய் கொப்பியில் எழுதுவது போல எழுத அது தானே word document இல் ஆங்கிலத்துக்கு மாறும். அட நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கினேன்.
1.2GHz
2GB RAM
100GB Hard Disk
13Inch Screen
1650 சிங்கப்பூர் டாலர்கள்
கொஞ்ச காலம் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது. நான் அப்போது படித்துக்கொண்டு இரவு நேரங்களில் ரிமோட்டாக வேலையும் செய்துகொண்டிருந்த காலம். ஒரு நாள் திடீரெண்டு நின்றுவிட்டது. அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விட, HP சப்போர்ட்டுக்கு கால் பண்ணினேன். ஒரு பெண் தான் எடுத்தாள். அழகாக பேசினாள். சிஸ்டம் போர்டு ரிப்ளேஸ் செய்யவேண்டும் என்றேன். பெங்களூரில் இருந்து பேசியிருக்கவேண்டும். ஓவர் த போனிலேயே கழட்ட சொன்னாள். RAM ஐ மாற்றிப்பார்க்கசொன்னாள். அவள் சொன்னதெல்லாம் செய்தேன். இறுதியில் சிஸ்டம் போர்டு மாற்றவேண்டும் என்று கண்டுபிடித்தாள். அதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன் என்றேன். சாரி சார் என்று கலகலவென சிரித்தாள். கவிதைகள் படித்தது. குளு குளு தென்றல் காற்றும் வீசியது. கோபம் வரவில்லை. அடுத்தநாள் அவர்களே வீடு தேடி வந்து எடுத்துச்சென்றார்கள். ஒருவாரம் தாமதமாகும் என்றார்கள். பத்து நாளில் வந்த லாப்டாப் மீண்டும் பிரச்சனை கொடுக்க, மீண்டும் பெங்களூர் காரி. மீண்டும் கழட்டினேன். பூட்டினேன். ஆனபாடில்லை. மீண்டும் சிரித்தாள். அடுத்த நாள் வந்து எடுத்தார்கள்.
இப்போது எனக்கு லேப்டாப் வேண்டும். ஒருவாரம் வேலைசெய்யாமல் இருக்கமுடியாது. எதை வாங்குவது. அப்போதெல்லாம் நான் Steve Jobs ஐ தீவிரமாக follow பண்ணிக்கொண்டு இருந்த நேரம். 2009. Mac வாங்கவேண்டும் என்பது நீண்டநாளைய விருப்பம். உடனடியாக போய் JB HIFI இல் Macbook ஒன்று வாங்கினேன்.
1.2 GHz
2G RAM
100G Hard Disk
14 Inch Screen
1700 Australian Dollars
அழகாய் இருந்தது. OS Ubuntu போல இருந்ததால் அடித்து ஆடலாம் என்று நினைத்தேன். முதல் அடி அது! UNIX ஐ அடிப்படையாக கொண்டு இருந்தாலும் ஆப்பிளுக்கே உரிய க்ளோஸ் கான்செப்ட். அதாவது நீங்கள் நினைத்தமாதிரிக்கு சிஸ்டம் லெவல் செட்டிங் செய்யமுடியாது. VMWare போட்டு Virtual Box இல் Ubuntu பாவிக்கதொடன்கினேன். அதற்கு எதற்கு ஆப்பிள் என்று நண்பன் கேட்க ஆமாமில்ல என்றேன். இரண்டு நாள் ஆராய்ந்த பிறகு தான் delete button ஏ ஆப்பிளுக்கு கிடையாது என்றுகூட தெரிய, கொஞ்சம் பீதி கிளம்பியது.
இப்போது service க்கு போன HP லாப்டாப் திரும்பிவிட்டது. கைவசம் இரண்டு லாப்டாப் கள். மீண்டும் சிங்கப்பூர் திரும்புகிறேன். iPad ரிலீஸ் ஆகிறது. Steve Jobs ஓய்யாசாமாய் சோபாவில் இருந்து internet browse பண்ணியது அட! Singapore இல் release ஆகவில்லை. Black market இல் 900 டாலர்கள். என் Macbook ஐ ஆபீஸ் காரன் ஒருவனுக்கு விற்றுவிட்டு ஓடிப்போய் வாங்கிவிட்டேன்.
Wi-Fi Only Model
900 Dollars
iPad வந்தது ஒரு கை வந்தது போல. கட்டிலில், couch இல், train இல் எங்கேயும் பாவிக்கலாம்! வீடியோக்கள் பார்க்கலாம். ஒன்றிரண்டு ப்ளாக் கூட அதிலிருந்து எழுதியிருக்கிறேன். இன்றைக்கும் இரண்டு வருடங்களாக iPad1 ஐ தேய தேய பாவிக்கும் ஆள். காலையில் தூங்கி எழும்போது கண் மூடியபடிய கை iPad ஐ தான் நாடும். என் ப்ளாக்கில் என்னென்ன கமெண்ட் வந்து இருக்கு என்று பார்க்கும். smh.com.au உலாவும். Shave எடுக்கும் போது குளியல் அறையில் “ஆகாய வெண்ணிலாவா, தரை மீது வந்ததேனோ” என்று என்னோடு சேர்ந்து பாடும். She is a great companion.
இந்த நேரம் தான் ஆபீஸில் ஒரு லாப்டாப் தந்தார்கள்.
Dell XPS
2.2 GHz Dual Core
4G RAM
120GB Hard Disk
2100 Dollars
இது ஒரு சூப்பர் கம்பியூட்டர். எத்தனை சேர்வர்களும் கூட ரன் பண்ணலாம். Gun போல கம்பியை பிடிக்காமலே பஸ்ஸில் நிற்கும். இரண்டு வருடம் இதோடு குடும்பம் நடத்தியாச்சு. மீண்டும் ஆஸ்திரேலியா போகவேண்டும். வேலையை விட்டாயிற்று. லாப்டாப் வாங்கவேண்டும். Singapore IT show ஒன்று நடந்தது. நானும் அஜீத்தனும் விரைந்தோம். அப்போது வாங்கியது தான் இந்த லாப்டாப். நான் இப்போது இந்த பதிவு எழுதும் லாப்டாப். மீண்டும் Dell XPS.
Dell XPS,
i7 Intel Core 2GHz Processor
6G RAM
120G Hard Disk
1600 Dollars
இப்போது ஆபிசிலும் ஒரு லாப்டாப் தந்து இருக்கிறார்கள். High End சிஸ்டமும் தந்து இருக்கிறார்கள். பத்து கம்பியோட்டர்கள் பத்து வருடங்களில். 2000ம் ஆண்டு Mouse என்றால் என்னவென்று தெரியாது. இப்போது கணனியில் நான் புடுங்கும் ஆணி எல்லாமே தேவையில்லாதது தான் என்று ப்ரோஜக்ட் மனேஜர் முகத்தில் கரி! கணணி வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு நாளைக்கு பதினாலு மணிகள் கணணியோடு இருக்கிறேன். எழுதும் நாட்களில் அது இன்னும் கூடும். இந்தத்துறை மட்டும் இல்லை என்றால் சோற்றுக்கு சிங்கி தான். நன்றி Steve Jobs. நன்றி Bill Gates. இருவரும் தான் இதை இத்தனை பெரிய துறை ஆக்கியவர்கள்.
2010 Wimbledon, internet இல் மூன்று மேட்ச்கள் மூன்று சிஸ்டம்களில் ஒரே நேரத்தில் பார்த்த படம் இது.
இந்த பதிவு என் வழமையான காதலி இல்லை. உங்களுக்கு பிடிக்க வேண்டிய தேவையும் குறைவு தான். ஆனால் எழுதும் போது எனக்கு ஆச்சரியாமாய் இருக்கிறது. பத்து வருஷங்களில் நிறைய பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கணணியம் ஒவ்வொரு நினைவை சுமந்து வந்திருக்கிறது. இந்த பதிவு மீண்டும் கடந்த பத்து வருட nostalgic memories க்குள் கொண்டு போய்விட்டது.
பிடிச்சிருக்கா?
கொஞ்சம் நீளமான பதிவு தான். ஆனாலும் சுவாரஸ்யமாக தொடர்ந்து படிக்க முடிந்தது. கம்யூட்டர்கள் பத்தினதாச்சே.நன்றி.
ReplyDeleteநன்றி ஹாலிவுட் ரசிகன். கொஞ்சம் நீண்டு போய்விட்டது. ஆரம்பத்தில் இன்னும் நீளம் அதிகம். நிறைய technical விஷயம் இருந்தது. இந்த பதிவுக்கு தேவையில்லை என்று தோன்றியது. தூக்கிவிட்டேன். அப்படியும் நீண்டு விட்டது. இனி வரும் பதிவுகளில் editing இல் கவனிக்கவேண்டும்.
ReplyDelete// விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் விழுந்த திட்டை விட மோசமாக திட்டினார். //
ReplyDeleteசெம நக்கல்...
வணக்கம் ஜேகே சார்,
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
கம்பியூட்டருக்கு எங்கேயடா ரிமோட் என்றேன். டிஸ்ப்ளே இருக்கும் போது ரிமோட் இருக்ககூடாதா என்று டிப்பிக்கல் யாழ்ப்பாணத்து ஜோக் அடிச்சான். நானும் கம்பியூட்டர் படிச்சன்.//
ஆகா..என்னா ஒரு வில்லத் தனம் உங்கள் நண்பன் பிரியாவிற்கு.
அவ்வ்வ்வ்
உண்மையிலே ஆச்சரியப்பட வைத்திருக்கிறீங்க. அந்தக் காலத்தில் கம்பியூட்டர் கண்ட கதை சொல்லி.
நாம எல்லாம் 2002ம் ஆண்டில் தான் கம்பியூட்டரை தொட்டதே..
மச்சான் கரண்ட் அடிக்குது. இது என்னைய சாகடிச்சிடும் போல இருக்கேடா.
ReplyDeleteபயப்படாத. உங்க வீட்டில எர்த்த்திங் லிங்க் ப்ராப்ளம். எதுக்கும் ஸ்லிப்பர் போட்டுக்கொண்டு கம்பியூட்டர் யூஸ் பண்ணு//
ஆகா..என்னா ஒரு வில்லத்தனம் சார் உங்களுக்கு
அப்படியே ஊர் பாசையில பின்னுறீங்க.
நல்ல வேளை கம்பியூட்டருக்குள்ள உள்ள ஏசிக்கு தண்ணி மாத்த சொல்லி உங்க நண்பர் சொல்லவில்லை.
நினைவுகளை மீட்டிய விதம் அருமை,
ReplyDeleteகடந்து வந்த பாதையினை இன்றும் மறக்காது வட்டார மொழியோடு நினைவு கூர்ந்திருப்பது எளிமையை உணர்த்துகிறது.
ஹா ஹா !! உங்களை மாதிரியே நானும் பல கணணி மாற்றி இருக்கிறேன் ஆனால் கணணி அறிவு எனக்கு குறைவே. இப்போ கடைசியா ஐபாட் 2 வாங்க ரை பண்ணுறன் மனிசிதான் ஏன்யா உனக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு கண்டிக்கிறாள்.. நான் நினைக்கிறேன் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லைன்னு..?
ReplyDelete//1999 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை // அவசரப்பட்டு ஆண்டை அம்பலப்படுத்திடீங்களோ..... Lenovo try பண்ணினதே இல்லையா ? குறைந்த விலையில் நிறைந்த தரம்....
ReplyDeleteInteresting one, bro
ReplyDeleteநல்ல பதிவு மச்சான். பப்பால ஏத்திற மாதிரியே ஒரு பீலிங். நீ பரவாயில்ல கரண்ட் அடித்ததுக்கு கால் பண்ணினாய். 15GB Hard Disk வாங்கி 13.8GB தான் இருக்கு எண்டு சண்டைக்கு வந்தவன் எல்லாம் இருக்காங்க. (By the way he is one of 4 tronics Guys). பத்து வருசத்தில பத்து கம்ப்யூட்டர். நான் பன்னிரண்டு வருசத்தில 2 கம்ப்யூட்டர்.
ReplyDeleteநன்றி பிரபா வருகைக்கு!
ReplyDelete@தாங்க்ஸ் நிரூபன் .. நீங்க வேற .. இப்பவே டமில் உணர்வாளர்கள் நான் ஈழத்தமிழ், இலங்கைத்தமிழ், இந்தியத்தமிழ், மெட்ராஸ் தமிழ், வடிவேல் தமிழ் எல்லாம் மிக்ஸ் பண்ணுறன் எண்டு கொலைவெறியா இருக்கிறாங்க! வர்ற flow ல எது வருதோ அத எழுத வேண்டியது தான் ...
ReplyDeleteநன்றி காட்டான்! மனிசி வாங்குவமா iPad வாங்குவமா என்று யோசிச்சுப்பார்த்ததில iPad கொஞ்சம் usefull ஆ இருந்துது வாங்கிட்டன்.மனிசி கடல்லயும் இல்லையாம்! அது வலி, வேற டிபார்ட்மெண்ட்!!
ReplyDeleteவாலிபன் சார்,
ReplyDeleteமற்றவன் நோட் பண்ணாட்டியும் கோர்த்து விடுவீங்க போல!
ThinkPad வாங்கோணும் எண்டு விருப்பம். எப்ப Lenova சீனாவுக்கு போச்சுதோ அப்பவே I made up my mind not to buy. ஆனா மத்த computers உம் சீனாவில் தான் தயாராகுது. இது ஒரு mental blockade.
தாங்க்ஸ் greatB!
ReplyDeleteமுதல் காதலிட அப்பன் அவர்களே!
ReplyDeleteநன்றி மாமா! பொண்ணு சுகமா? மாப்பிள சுகமா?!!
Computer உனக்கு கொல்லை புறத்து காதலியா? அது தாலி கட்டின பொண்டாட்டி இல்ல? It's amazing that 10 வருஷத்துக்கு முன்னால அறிமுகமான ஒண்ணை தொழிலாக்கி அது போடுற சோத்தில வாழுறது.. Imagine what would a 10 year old kid in Jaffna with ipad would do in 20 years. Yarl IT Hub கெதியா உள்ள போகணும். தீயா வேலை செய்யணும் பாஸு
ReplyDeleteஒரு பெரிய கதையே எழுதிவிட்டீர்கள். முழுவதையும் வாசித்தேன். நன்றாக இருந்தது. எனக்கும் ஒரு inspiration வருது, என் அனுபவங்களை எழுத :-)
ReplyDelete>ஜேகே சொன்னது…
முதல் காதலிட அப்பன் அவர்களே!
நன்றி மாமா! பொண்ணு சுகமா? மாப்பிள சுகமா?!!
--------------------
comments இற்குக் comments போடுவதில்லை என்ற என் வீர சபதத்தை (அப்படி ஒரு சபதம் போட்டேனா??) உடைத்துவிட்டீர்கள். குசும்பை ரசித்தேன்.
கணணியை சீதனம் (காசு) கொடுதல்லவா வாங்கி இருக்ரியாள். அப்ப கணணி தான் மாப்பிளை.
ReplyDeleteஇப்ப ஏன் கேக்க மாட்டாய் சுகமா எண்டு?
பாவி ஜேகே, மகனை 2002ல வாங்கீட்டுபோனான். இப்ப, 2012. பாவி பத்து மாப்பிள்ளை மாத்திடாள். அதுவும், Apple, Orange, Dell, Mac என்டு டிசைன் டிசைனா. இதை எல்லாம் கேக்க யாரும் இல்லையா? இன்னும் எத்தனை பெடியள்ட வாழ்க்கை சீரளியப்போகுதொ...
கிச்சா ..
ReplyDelete//Computer உனக்கு கொல்லை புறத்து காதலியா? அது தாலி கட்டின பொண்டாட்டி இல்ல? //
பொண்டாட்டிய கொல்லைப்புறத்தில வச்சு லவ்வக்கூடாதா?
// It's amazing that 10 வருஷத்துக்கு முன்னால அறிமுகமான ஒண்ணை தொழிலாக்கி அது போடுற சோத்தில வாழுறது.. //
Isn't it amazing ஐஞ்சு வாரத்துக்கு முன்னால அறிமுகமான ஆணையோ, பெண்ணையோ கலியாணம் கட்டுறது .. ரிஸ்க்கு தான் பாஸ். எனக்கு வேலை அமைஞ்சுது!
நன்றி சக்திவேல் :)
ReplyDeleteமுதல் காதலிட அப்பன்
ReplyDeleteநான் ஜகா வாங்கிக்கிறன். இத்தொட நிறுத்திக்குவோம். நானும் கோட்ட தாண்டமாட்டேன். நீயும் தாண்டக்கூடாது. பேச்சு பேச்சா இருக்கணும்!!!
256 mb ram is a good startup...
ReplyDelete@thaya
ReplyDeleteIt was .. and we were mostly happy and tolerable for getting stuck and reboot at times. Those days I remember had to use ctrl alt del many times which is a rare event these days! Thanks buddy.
:) windows is quite good in always loading the system to marginally perform after a month.... Whether it be windows 98 or windows 7. The first time I saw "illegal operation" I felt like I had committed the first serious crime in my life... :)))) good times though..!!
ReplyDeleteநாறும் என்று தெரிந்தே கணணி பிரிவுக்கு போனேன்......
ReplyDeletechat server assignment copy அடித்து பிடிபட்டு, ftp server programme one week இல submit பண்ணனும் எண்டு lecturer order போட மதனிண்ட காலில நாங்க எல்லோரும் போய் விழுந்தத எழுத மறந்து போனாய் மச்சி :)
இந்த பதிவு பழைய நினைவுகளை மீட்ட செய்தது... அந்த கம்பஸ் காலத்தில் கம்ப்யூட்டர் வாங்குவதென்றால் கான்பிகுரஷனுக்கு ஜெயரமணன், உதயனன் ... அஜித், விஜய் மாதிரி ... கால் சீட் வாங்குவதெண்டால் அவர்கள் விடும் பீலாக்களை கேட்டுதான் ஆக வேண்டும் ..
ReplyDelete10 வருசத்துல 12 computer super bro
ReplyDelete