வியாழமாற்றம் 08-03-2012 : தென்கச்சி பக்கம்

Mar 8, 2012

டேய் ஜேகே

இந்த வாரம் அறிமுகமாகும் “டேய் ஜேகே” பகுதி, தபால் அட்டை, கடிதங்கள் மற்றும் தந்தி மூலம் தொடர்புகொண்ட வாசகர்களின் கேள்விகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதில் அளிக்கப்படுகின்றன.  இது ஹாய் மதனின் காப்பி என்று சொன்னால், ஆமா சார் காப்பி தான்! இப்பா என்னாங்கிறீங்க?

imagesசீமான், சென்னை
ஈழத்தமிழருக்கு ஆதரவாக கியோ முய்யோ என்று கவிதை பாடிய கவிதாயினி தாமரை இறுதியில் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஜெனிவாவில் போய் பேசியிருக்கிறாரே? தாமரையின் கவிதைகளை இன்று முதல் புறக்கணிப்போமா?
அடக்கடவுளே! இது வேற தாமரை பாஸ். அவ தாமரையா இல்லை தாமரவாவா என்றே இலங்கையருக்கு ஒரு டவுட்டு! ஆனால் அப்பா தமிழ் தான். 1980 இலேயே ஒஸ்லோ போய் ஏதோ மனித உரிமை ஆராய்ச்சி எல்லாம் செய்தவாவாம். அப்புறமா ஊர்ப்பக்கம் திரும்பவேயில்லை. இப்ப கதிர்காமரின்ர தங்கச்சி போல கிடக்கு. இவ கவித எழுதியிருந்தா புறக்கணிப்போம். புறக்கணிக்கிறது புதுசா என்ன? செய்திடுவோம் தல!

rajavarothayam-sambanthan-2009-3-26-7-1-45சம்பந்தன், திருகோணமலை
ஜெனீவாவுக்கு நாங்கள் போகவில்லை என்று எல்லோரும் என் வேட்டியை உருவுகிறார்களே, நான் என்ன செய்ய?
ஜீன்ஸ் போட்டு பாருங்கள், இலேசில் உருவமுடியாது! அல்லது வேட்டி தான் கட்டப்போகிறீர்கள் என்றால் சுமந்திரன் பேச்சை கேட்பதை நிறுத்துங்கள்! உங்கள் gentleman டிப்ளோமடிக் அரசியல் என்பது சேர் பொன் ராமநாதன் காலத்து பெயிலியர்!. போராடவேண்டும். அரை நிர்வாண பக்கிரியை கேள்விபட்டிருக்கிறீர்களா? எல்லோருமாக சேர்ந்து நடுரோட்டில் தர்ணா இருக்கவேண்டும். உண்ணாவிரதம் மனிதசங்கிலி என்று பழைய மாட்டர்ஸ் இருக்கு. உள்ளே தூக்கி போடுவான். போட மற்றவன் பின் தொடரவேண்டும். அது தான் ஒரே வழி. ஆனால் இந்த வழிக்கு நாங்கள் யாருமே தயாராக இல்லை. நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் இளைஞர்கள் வரமுடியாது. மற்றவர்களும் யாராவது செய்வார்கள் என்று வெயிட் பண்ணி வெயிட் பண்ணி…. விதி விலக்காக “அவர்” மட்டும் ஏதோ முயற்சி செய்தார். அதுவும் புகைஞ்சு போச்சு. இதில் உங்களை நொந்து பயனில்லை. நீங்கள் அரசியலுக்கு ஒரு டிப்ளோமாட்டாகவே வந்தீர்கள். அது உங்களுக்கு ஒரு துறை. அடி பட்டு, வேதனை பட்டு, இதை எப்பாடு பட்டாவது தீர்க்கிறேன் பார் என்று ஈழத்தில் அரசியலுக்கு வந்தவர்களை எல்லாம் கடைசியாக வெள்ளைக்கொடி பிடித்தது  பற்றி யாருமே பேசமுடியாது. என்ன ஒன்று மக்களுக்கு உங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. கடவுள் போல! உங்களை நொந்துவிட்டு மீண்டும் மீண்டும் உங்களையே நம்பி வருகிறார்கள். கை விட்டு விடுவதை பற்றி அஞ்சாதீர்கள். கடவுள்கள் எப்போதுமே கைகொடுத்ததில்லை. எனக்கென்னவென்றால் மக்களும், அதுவும் புதிய தலைமுறை,  காசு தாறான் என்று வேறு கடவுள்களை தேர்ந்தெடுத்துவிடுவார்கள். சிலர் தாங்களே கடவுளாக மாறி தாண்டவமும் ஆடலாம். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்! இங்கே இருந்து கொண்டு எவ்வளவு பீலாவும் விடலாம். ஆனால் ஒரு துரும்பு தூக்கி போடமாட்டேன்! ஆனால் எனக்கு ஒரே ஒரு அற்ப சந்தோஷம், நான் கடவுள் என்று  கடவுள்களை போல இன்னமும் மக்களை ஏமாற்றாமல் இருக்கிறேன்!

image 004ஆடிவேல், சிட்னி,
வாசகர் இல்லை, கமெண்ட்ஸ் இல்லை, என்ன எழவுக்கடா எழுதுகிறோம் என்று அடிக்கடி  தன்னை தானே எழுத்தாளர் என்று அழைத்துக்கொள்ளும் ஜேகே நொந்துகொள்கிறாரே?
அது இயல்பானது. புதியவர் இல்லையா? ஆர்வக்கோளாறு. வந்தவுடனே நாளு பதிவு எழுதினா தலையில் வச்சு ஆடிடுவோமா? நல்லா இருக்கு கதை!  ஆனானப்பட்ட கி.ரா வுக்கே 1991 இல தான் சாகித்திய அக்காடமி எட்டியது. சுஜாதா,  வெறும் உரைநடை எழுத்தாளர் என்கிறார் ஜெமோ! முப்பது வருஷமா எழுதும் சாருவின் புத்தக வெளியீட்டுக்கு மேடையில் இரண்டு பேர். எஸ்ரா வை கொண்டாட கூட தமிழ் வாசிக்க தெரியாத சூப்பர்ஸ்டார் தேவை. பேசாமல் “நான் எனக்காகவே எழுதுகிறேன், வாசகர் கருத்தெல்லாம் who cares” என்று பக்குவப்பட்டு நிற்கும் வாலிபனாக மாறினால் தேவலாம்!

gorbi620_1861401bகொர்ப்பச்சேவ், மாஸ்கோ
டேய் ஜேகே, நான் கஷ்டப்பட்டு கொண்டுவந்த சனநாயகம் இப்படி ரஷ்யாவில் கெட்டு போய் கிடக்கிறதே? இதற்கு யார் காரணம்? என்ன செய்யலாம்?

நீங்கள் கொண்டு வந்ததா? சூப்பர் காமெடி! அது றேகன் கொண்டுவந்தது!  சனநாயகத்துக்கு சரியாக தயார்படுத்தாமல், அமெரிக்க வலையில் விழுந்து, ரஷ்யாவை இரவோடு இரவாக கம்யூனிசத்துக்கு மாற்றினீர்கள். இந்துவாக இருப்பவனை கிறிஸ்தவனாக ஒரே நாளில் மாற்றிவிட்டாலும் அவன் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் போகும்போது அப்பனே விநாயகா என்று தான் கும்புடுவான். சனநாயகத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது. இங்கே ஆஸ்திரேலியாவில் இன்னமும் சிலர் தாம் ரிப்பளிக்கன் தகுதிக்கு தயார் இல்லை என்று சொல்லுகிறார்கள். கம்யூனிசத்தை கூட ஒரு இரவில் கடைப்பிடிக்க தொடங்கலாம். ஆனால் சனநாயகம் அப்படி முடியாது. முடிந்தால் இப்படி தான். இப்போது பாருங்கள் உங்கள் ஊரிலும் ஒரு ஓ. பன்னீர்செல்லம், ஜெயலலிதா கூட்டம் உருவாகிவிட்டது!  ஆம் .. புடினையும் டிமிட்ரியையும் தான் சொல்கிறேன்!

Apple iPadடிம் குக், கபுடீனோ, சிலிக்கன் வாலி
இன்றைக்கு ஐபாட் ரிலீஸ் பண்ணினோம் .. எப்பூடி? வாங்க போறியா? iWork ல ப்ளாக் எல்லாம் எழுதலாம்!


எனக்கு யூஸ் இல்லை! 4G இங்கே வேலைக்காகாது. quad core graphics உம் retina display உம் கலக்கல் தான்.   multi touch editing இருப்பதால் நான் ப்ளாக் ஈசியாக எழுதலாம். ஆனால் SIRI இல்லை.  AppleTV setup box integrate ஆகி இருந்தால், இருக்கும் ஐபாடை அக்காவின் மகளிடம் கொடுத்துவிட்டு புதுசு வாங்குவதாக இருந்தேன். ஆனால் ம்கூம். என்னிடம் இருக்கும் iPad1 போதும். ஆனால் வீட்டில் டாப்லாட் இல்லாதவர்கள் நிச்சயம் வாங்கலாம். ஐபாட் பாவிக்கும் வரை அது அர்த்தமில்லாத ஒன்றாக தான் தெரியும். பாவித்து பாருங்கள். அருமை!

sakuntlaமேகலா, இதயனூர்!
பங்கர் போன்ற பதிவுகள் பலாரால் சிலாகிக்கப்பட்ட பின்பாவது பாழாய் போன இந்த வியாழமாற்றத்தை விட்டுத்தள்ளுவீயா? அப்பா ஒருமுறை பார்த்துவிட்டு, ஜேகே இப்படி எழுதுகிறானே, இவனையா போயும் போயும்…? கேட்கிறார்… என்ன சொல்ல?
ஆகா, மாமா தப்பாக எண்ணிவிட்டார் போல! வியாழ மாற்றம் தான் எனக்கு புது வாசகர்களை கொண்டுவருகிறது. லக்கியதனமாக மட்டும் எழுதினால் நானும் வாலிபனும் மாறி மாறி முதுகு சொறியவேண்டியது தான். ஒரு புத்தகத்தையும், இனிமையான பாடலையும் அரசியலையும் இங்கே ஹன்சிகா இல்லாமல் சொல்லமுடியாது. சொன்னாலும் அவற்றின் கதி திகார் ராசா நிலை தான். சீண்ட மாட்டார்கள்!  அப்பா சொல்கிறார் ஆட்டுக்குட்டி சொல்லுது என்று ஒன்றும் யோசிக்கவேண்டாம்! வழமை போலவே பிடிக்கலை என்று சொல்லிவிடு! எனக்கு ராஜாவும் ரகுமானும் .. சில சமயம் கஜனும் இருக்கிறார்கள்! சமாளிப்பேன்!

nayantara110811நயன்தாரா, சென்னை
டாட்டூவை அழிக்கும்போது வலிக்குமா?
ரொம்ப வலிக்கும் என்றால் அப்படியே விட்டு விடலாம். என் பேரை வேண்டுமானால் பிரபு என்று மாற்றுகிறேன்! எப்பூடி வசதி?

Swami_Vivekananda_191விவேகானந்தர், நைரோபி!
Yarl IT Hub மீட்டிங் எப்படி போனது? தகவல் ஒன்றுமில்லையே?

நிகழ்ச்சி மாபெரும் வெற்றி (தோல்வி அடைந்த நிகழ்ச்சி என்று ஒன்று இருக்கிறதா என்ன?). வியாழ மாற்றம் குப்பை என்பதால் சீரியசான Yarl IT Hub போன்ற விஷயங்கள் வேண்டாம் என்று சயந்தன் ஆர்டர் பண்ணியிருக்காரு. சோ உஷ்…..!, தனிப்பதிவு போடுகிறேன்!

18539மஹிந்த, கொழும்பு
கிரிக்கட்டில் ஜேகேக்கு ஏன் இலங்கை அணியை பிடிப்பதில்லை?
அதுக்கு கூட போட்டு தள்ள மாட்டீர்கள் என்றால் சொல்கிறேன்! பிடிக்கமுடியவில்லை. அவர்களை பார்க்கும்போது பழசு ஞாபகம் வருகிறது. தங்கள் சம்பளத்தை பாதுகாப்பு படைக்கு கொடுத்ததும், லார்ட்சில் சங்கக்காரா படையினர் வெற்றியை சிலாகித்ததும், இதையெல்லாம் தாண்டி விளையாட்டுக்காவேணும் ஆதரிப்போம் என்றால், சனியன் பிடிச்ச  அந்த பக்குவம் மட்டும் வருதில்லை. தென் ஆபிரிக்காவை இனவெறி என்று அப்போது விளையாட்டில் இருந்து புறக்கணித்தார்கள். எனக்கு புரியவில்லை. எல்லோருக்கும் இருக்கும் பெருந்தன்மை எனக்கில்லாதது கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது! Go Aussie Go!!

actress.madhumitha.arai-en-305-il-kadavul-movie-stills-020 (1)கடவுள், கைலாயம்
நீங்கள் என்னை நம்புகிறீர்களா?
கடவுளாக இருங்கள் … நம்புவதென்ன? கோயில் கட்டி கும்பிடவும் செய்வேன்! அதிகம் வேண்டாம் .. அட்லீஸ்ட் மனிசனாகவாவது இருங்கள்! ரொம்ப நாளா கல்லாவே இருக்க போரடிக்காது?
நேரக்கொடுமை காரணமாக ஒபாமா, மிட் ரோம்னி, டிராவிட்,  ஹன்சிகா போன்றவர்களின் பதில்கள் வரும் வாரம்!

இந்த வார புத்தகம் :  Mort!

Mort ஒரு நோஞ்சான் இளைஞன். இவன் வீட்டிலும் வேலை செய்கிறான் இல்லை என்று அப்பா ஒருநாள் சந்தைக்கு கூட்டி சென்று யாருக்காவது கூலி வேலைக்கு கொடுக்கலாம் என்று நிறுத்திவைக்க, அவன் உருவத்தை பார்த்தே எல்லோரும் விலகிபோகிறார்கள். இருட்டிய பிறகு ஒருவர் வருகிறார். அவனை வேலைக்கு எடுக்கிறார். யார் அவர்?
Mort-coverஇறப்பு! Death … எமன்!
இப்படி நிமிர வைத்த Terry Prachchet முடியும்வரை புத்தகம், ஓயவில்லை. இறப்பிடம் உதவியாளராக சேரும் Mort. இறப்புக்கு என்று ஒரு வீடு வேறு உலகத்தில் இருக்கிறது. அங்கே காலம் ஓடாது. வயது போகாது. எங்கள் கடவுள்களுக்கும் வயது போவதில்லை! ஆக அவர்கள் பிறந்து வளரவில்லை. ஒன்று அவர்கள் பொய். அல்லது அவர்கள் அப்படியே தோன்றியிருக்கிறார்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளாய் இளமையாய் இருக்கும் இசபெல்லா அறிமுகம். அவ்வளவு அழகு இல்லை அவள். மெல்லிய மார்பு, அதிகம் நீளம் இல்லாத முடி, நீட்டு முகம். அவளை பார்த்தால் பிடிக்காது. ஆனால் புத்திசாலி. ஆண்களுக்கு எரிச்சல் வர வைக்கும் புத்திசாலி! அவளுக்கு அவன் மீது மெல்லிய காதல்!  அவனுக்கு பூமியில் இருக்கும் இளவரசி மீது … இதற்குள் ஒரு மந்திரவாதி ... சுஜாதாவின் விறுவிறுப்பு இருக்கும். Awesome!
ஒருகட்டத்தில் Mort ஒரு இளவரசியை எமன் லீவில் இருக்கும் சமயம், தானே போய் காவு கொள்ளவேண்டும். இவன் கொள்ளவில்லை. கொல்லவில்லை! விளைவு இயற்கை சமநிலை குழம்ப, இளவரசிக்கே தான் உயிரோடு இருப்பது சந்தேகம்! அதென்ன உயிரோடு இருப்பது என்ற கான்செப்ட்? அடுத்த கேள்வி!!
இப்படி ஆச்சரியம் மேல் ஆச்சரியம். ஒரு fantasy கதையில் எத்தனை விஷயங்கள்? இன்னும் விவரிக்கலாம். ஆனால் வாசிக்கும் போது அந்த பரவசநிலை போய்விடும். ஒன்று மட்டும் சொல்கிறேன். ஆரம்பத்து இருபது பக்கங்கள் வாசிக்கும் போது மண்டை காயும். பொறுமை வேண்டும். சில வேளைகளில் நான்கு தடவைகள் கூட சில பக்கங்களை மீண்டும் மீண்டும் வாசித்து விளங்கியிருக்கிறேன். அப்படி ஒரு நான் லீனியர் அமைப்பு. கொஞ்சம் உள்ளே இறங்கி விட்டீர்கள் என்றால், சான்ஸே இல்லை.  எப்போது இப்படியெல்லாம் தமிழில் வரப்போகிறது? வரவேண்டும். வரும்!
Mort,Don’t miss it! சாம்பிளுக்கு இரண்டு வரி தருகிறேன்.
Reannuals are plants that grow backwards in time. You sow the seed this year and they grow last year.Mort's family specialized in distilling the wine from reannual grapes. These were very powerful and much sought after by fortune-tellers, since of course they enabled them to see the future. The only snag was that you got the hangover the morning before, and had to drink a lot to get over it.
கிறுகிறுக்கிறதா! சும்மா வாசியுங்க பாஸ்!

தென்கச்சிபக்கம்

படிக்கும் காலத்தில் தென்கச்சி கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலுடன் காலையில் எழுந்து இரவில் படுப்பதுண்டு. ஒரே விஷயம் தான், ஆனால் நாளுக்கு இரண்டு தடவைகள் அலுக்காமல் கேட்பேன்.  சிலவேளை எழுத்தாளர் கி ராஜநாராயணன் தான் தென்கச்சியோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு அவர் பேச்சுக்கும் கீரா எழுத்துக்கும் அவ்வளவு ஒற்றுமை.
01476438004768217768நகைச்சுவையை எங்களில் பலர் ஈஸியான விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். அட அவன் கீர்த்தியா? சும்மா வேலையில்லாம லொள்ளு பண்ணுவானே? என்று என் நண்பர்களே மன்மதகுஞ்சுவை பற்றி சொல்ல கேட்டு இருக்கிறேன். வியாழ மாற்றத்தில் காமடி இருப்பதாலேயே அது குப்பை பதிவு என்று நினைப்பவர்கள் பலர். மைக்கல் மதன காமராஜனையும் மகாநதியையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பவன் நான். ஒரு வகையில் மைமகாரா உசத்தியும் கூட. அழவைத்து விடலாம். சிரிக்க மாட்டாங்கள். எங்களுக்கேவா? நீயா? என்பார்கள். வடிவேல் அடிமேல் அடிவாங்கினால் நம்மாள் கொஞ்சம் சிரிப்பான்! அன்பே சிவம் போன்ற ஒரு அருமையான படத்துக்கு ஏன் தேவையில்லாமல் காமடி என்று கேட்ட ஒரு புத்திசாலியை பார்த்து இருக்கிறேன்!
இந்த பேச்சை வாலிபன் அனுப்பியிருந்தான். சில இடங்களில் எனக்கு கம்பவாரிதியை ஞாபகப்படுத்தினார். என்ன ஒரு பேச்சு!
தென்கச்சியின் பேச்சு கிளிக்குங்க!

இந்த வார பாடல்

சிங்கப்பூரில் சனிக்கிழமை பின்னேரம் என்றால் எனக்கு அமுதா வீடு தான். நான்கு மணிக்கு டபாஸுடன் ஸ்குவாஷ். முடிந்து அங்கேயே குளித்துவிட்டு பரேஷ்ஷாக அமுதா தரும் கோப்பியுடன் உட்கார்ந்தால் மூன்று பேரும் பேசும் விஷயங்களுக்கு அளவு கணக்கு இல்லை.  கோல்கட்டாவில் இருந்து டபாஸ் எப்படி கான்பூருக்கு IIT படிக்க போனதில் இருந்து அவர் அமுதாவை சிங்கப்பூரில் சந்தித்து திருமணம் செய்தது வரை, கிட்டத்தட்டு ஐந்தாறு சிறுகதைகள் தேறும். அவ்வப்போது வரும்!
ஒருநாள் ரொமாண்டிக் காமடிகளில் எனக்கு மிக பிடித்தது எது என்று கேட்டார்கள். உடனே பதில் சொல்லமுடியவில்லை. மௌனராகம் சொல்லலாம். ஆனால் அது ரொமாண்டிக் காமடியா? சந்தேகம். ரோஜாவில் இருக்கும் ரொமான்ஸ் தான் எனக்கு பிடித்தது. காதல் கோட்டை சொல்லலாம். யோசித்துவிட்டு நான் சொன்னபடம் சீனிகம்! ஹாலிவூடில் எது என்று கேட்க, எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. Music and Lyrics தான் என் all time favourite. அப்படியென்றால் உனக்கு இந்த படம் பிடிக்கும் என்று DVD தந்தார்கள். படம் Notting Hill.
Notting-Hills-notting-hill-13614203-500-333notting hill-saidaonlineNotting-Hills-notting-hill-13614201-431-300
சாதாரண காதல் கதை தான். ஜூலியா ராபர்ட்ஸ், ஒரு அமெரிக்க celebrity நடிகை. Hugh Grant சாதாரண புத்தகக்கடைகாரன். இருவருக்கும் வரும், ஆனால் வராத காதல். ஜூலியா, அழகான வாழ்க்கைக்கு ஏங்கும், கொஞ்சம் “சுமதி என் சுந்தரி” ஜெயலலிதா! Hugh Grant, ஒரு pessimistic loser! “உன்னுடன்” முரளி! இவர்களுக்கு நடுவே வரும் காதல். அவன் விசரன், இவளுக்குள் இருக்கும் காதலை புரிந்துகொண்டாலும், எட்டாது என்று விலக, இறுதியில் சுவாரசியமான முடிவு. Typical காதல் கதை தானே என்றும் சொல்லலாம். “அண்ணலும் அவளும் எப்போது நோக்கினாலும் காதல் காதல் தானே. அதுவும் அந்த ஜூலியா ராபர்ட்ஸ். அட போங்கப்பா! எழுதி எழுதி … ம்கூம்

இந்த பாட்டு. சானியா ட்வைன் பாடியது. கனேடிய பாடகி. அவர் மெலடிகளில் ஒரு நூலிழை இந்திய தன்மை இருக்கும். “I gotta say- you really got a way” என்ற இடங்களில் எல்லாம் குரல் ஏக்கத்துடன் குழையும். கரகரக்கும். வாவேண்டா ப்ளீஸ் .. புரியலையா என்று கேட்கும் காதலி!  மரியா கிரே, செலான் தியோன் போன்றவர்கள் பாணி பாடல்.
பாடலை கேட்கும் முன் ஒரு சின்ன அட்வைஸ். இரவில் கேட்காதீர்கள். மழை இருட்டு,  சட சட வென்று மழை தூறல் வீட்டு யன்னலில் அடிக்கும் நேரம் இரவு பத்து மணி, இப்படியான சூழ்நிலையில் தனிமையில் தயவுசெய்து கேட்டு விடாதீர்கள். கேட்டுவிட்டு ஏண்டா ஜேகே இந்த பாடலை படலையில் போட்டாய் என்று திட்டினால் .. பாவம் நான்! யாரை போய் திட்டுவேன்?
இசை ரசிகர்கள்,  என் ♫உ.. ஊ.. ம ப த ப மா♪ பார்த்து பிடித்திருந்தால் சானியாவை தேடி தேடி ரசியுங்கள். பொறுமை இல்லையா? அடுத்த ♫உ.. ஊ.. ம ப த ப மா♪ வரை வெயிட் ப்ளீஸ்!

ஹாட் நியூஸ்

மகளிர் தினத்தில் கவர்ச்சி படங்கள் வேண்டாம் என்று பட்சி சொல்லுது. சந்திரா அக்கா வேறு பிரான்சில இருந்து தொலைபேசினார். தம்பி, நல்லா எழுதுறீர், உமக்கேன் காதல், கவர்ச்சி, ஹன்சிகா எல்லாம்? தேவையா என்று காப்பில் காதலையும் செருகினார்!
அதனால் இன்றைக்கு மகளிரை பெருமைப்படுத்தும் விஷயம் ஒன்று எழுதப்போகிறேன். மதர் தெரேசா என்று ஒருவர் .. ஆஆஆ….வ் .. ! தூக்கமா? ஆணியே வேண்டாம் போ!
சுஜாதாவின், “படிப்பது எப்படி” என்ற கட்டுரை! (சுஜாதாவை விட்டு வெளியே வாங்க ஜேகே, உலகம் பெருசு--வாலிபன்) கவிதையில் சொல்லாப்பொருள் தான் ஹைலைட்டே. இங்கே மெல்பேர்னில் எழுத்தாளர் விழா வருகிறது.  எழுத்தாளர் வரிசையில் அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு போய் நின்றால், நீ கவிதை எழுது என்கிறார்கள்.  ஒருமுறை நான் எழுதியதை இங்கே பலர் கவிதை என்று ஏற்றுக்கொள்ள கேதா இனிமேல் கவிதையே எழுத மாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டான். புரியாமல் எழுதினால் புரிந்தது ஆகா என்பார்கள்! புரியும்படி எழுதினால், உரைநடை என்பார்கள். வாலிபன் எல்லாம் முழுநீள கட்டுரை கூட கவிதையில் தான் எழுதுவான். புரியாது. நமக்கு ஏன் வீண் சோலி?
எப்போதோ புதிய பார்வையில் வந்த கவிதை. தலைவரிடம் இருந்து சுட்டேன். சுடுதா என்று பாருங்கள்!
11கனவு அங்காடி
காம ஜெபமாலை
அழகின் வங்கி
ஆனந்த காற்று
சிந்தனை மையம்
சிரபுஞ்சி மூலம்
அன்பின் அரிச்சுவடு
ஆணின் அரிதாரம்
பங்கு மார்க்கட் பத்திரம்,
பாரிஜாத சித்திரம்
எழுதாத காவியம்
எட்டாவது அதிசயம்
துக்க வித்து
தூரிகையின் பரிமாணம்!
கவிதைக்கு தலைப்பு “மங்கை” என்று வைத்துக்கொள்ளும் கவிஞர்கள் இருக்கும் வரை மகளிர் தினத்தின் தேவை இருந்துகொண்டே இருக்கும்!
மன்மதகுஞ்சு: என்ன மச்சி, எழுதுற எல்லாம் எழுதுவ, கடைசில பெண்ணுரிமை பற்றி பஞ்ச் டயலாக்கா? கேட்டுக்குங்க மக்களே, இவரு பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கிறாராம்! நாட்டுல கொசுத்தொல்லை தாங்க முடியலைடா சாமி!

Contact form