வியாழமாற்றம் 15-03-2012 :டெரர் கும்மி விருது

Mar 15, 2012

டேய் ஜேகே

இந்த பகுதி ஆரம்பித்த பின்னர் இலங்கை போகும் எண்ணத்தை நான் அறவே விட்டு விட்டதால் “ஏர் போட்டில்” தூக்கிடுவாங்க என்று சக்திவேல் அண்ணே பயப்பட தேவையில்லை!!


sakuntlaமேகலா, இதயனூர்
சனல்4 வீடியோ பார்த்தியா? உனக்கு அரசியல் தெரியாது அது இது என்று சால்ஜாப்பு சொல்லி எழுதாமல் விட்டிடுவியா?
பார்த்துவிட்டு தான் வியாழமாற்றம் எழுதவே ஆரம்பிக்கிறேன். வேண்டாம் என்று தான் நினைத்தேன்.  நேற்றிரவு  கேதாவும் வீணாவும் வீட்டுக்கு வந்தார்கள். இரவு பதினொரு மணி. அப்பா அவர்களை போக விடாமல் புலம்பிக்கொண்டே இருந்தார். எழுபது வயசு. எவ்வளவோ கண்டவர்.  சக்திவேல் அண்ணே எழுத மறுத்த ஆச்சி சொன்ன  தூஷணம் முழுக்க சிங்களவன் மேல் விழுந்தது. இதை கூட எழுத மறுத்தால், அம்மா எனக்கு உப்புக்கு பதிலாக விஷம் தான் சாப்பாட்டில் கலப்பார்.  அது கிடக்கட்டும்.
வீடியோவில் காட்டப்படும் காட்சிகள் அவ்வளவாக அதிர வைக்கவில்லை. அது தானே பிறந்ததில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் ஒரு இடத்தில் இப்படியொரு அநியாயம் நடக்கிறது. எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்று தகவல் அனுப்புகிறார்கள். ஆனால் ஒரு மயி….  செய்யப்போவதில்லை. சிங்களவர்கள் சிலருடன் பேசும்போது சொன்னார்கள் இப்போது தானே சமாதானம் வந்துவிட்டதே. ஏன் பழசை பேசுகிறீர்கள் என்று. முன்னர் எல்லாம் இந்த வீடியோவை போலி என்றனர். இப்போது அதை கூட சொல்லுவதில்லை. “ஏன் அமரிக்க செய்யவில்லையா? என்று மறுகேள்வி. மடக்கிவிட்டார்களாம்! அட நாதாரிகளே,  கொஞ்சமாவது வெட்கம் வேண்டாம்? இதை கண்டிச்சு ஒரு வசனம்? ஒரு இனம் ஒட்டு மொத்தமாக தார்மீக உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன? sundayleader.lk ஒன்று தான் அப்பப்போ ஏதாவது உருப்படியாக எழுதும். அது கூட அடக்கி வாசிக்கும் நிலைமை. மோரல், எதிக்ஸ் எனற விஷயங்களே அடிபட்டுபோய்விட்டது. நான் தப்பு செய்தேன் … நீயும் தப்பு செய்தாய் சரியாக போச்சுது!

karunanidhi-glasslessகருணாநிதி, அறிவாலயம்
வீடியோ பார்த்து வடிய ஆரம்பித்த கண்ணீர் இன்னும் நின்ற பாடில்லை ஜேகே என்ன செய்ய?
ஆரம்பிச்சாச்சா? ஏன் பாஸ் எங்களை பார்த்தா கே.கு, எ.த. மு.கே, மு.க போலதெரியுதா? நாங்கள் செய்த எத்தனையோ பாவங்களில் ஒன்று, உங்கள் நடிப்பை இன்னும் பார்த்துகொண்டு இருக்கவேண்டிய நிலைமை. எவ்வளவோ பார்த்துவிட்டோம் இதை பார்க்கமாட்டோமா?
என்ன ஓன்று, உங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை தொலைத்துவிட்டீர்கள். மகள் ஜெயலில் இருந்த போது கூட வாபஸ் பெறாத ஆதரவை ஈழத்தவருக்காக வாபஸ் வாங்கினேன் என்று தம்பட்டம் அடித்திருக்கலாம். ஒன்றும் குடி மூழ்க போவதில்லை. எப்படியும் அடுத்த தேர்தலில் கூட்டணி அம்போ, அப்போ முறிக்காமல் இப்போ முறித்தால், பொத்தல் உள்ள ஜட்டியாவது மிஞ்சும். ஆனால் எனக்கென்னவோ இந்திய அரசு ராஜபக்சவிடம் அனுமதி கேட்டுவிட்டு, ஜெனீவா பிரகடனத்துக்கு ஆதரவளிக்கவே சாத்தியம் அதிகம். அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும்.  அந்த முடிவு உங்களுக்கு திருப்தி அளித்து அதற்கும் சந்தோசத்தில் கண்கள் பனிக்கும். எதையும் மறக்காமல் இருப்பது ஈழத்தமிழரின் பெரிய வியாதி! அவ்வளவு இலகுவில் ஏமாற்றமுடியாது.

nelson-mandelaநெல்சன் மண்டேலா, ஜோஹன்னஸ்பர்க்
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா சீனா இந்தியா போன்ற நாடுகளின் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீங்க?
இந்த நாடுகளுள் ஓரளவுக்கு நேர்மையான நாடு பிரிட்டன் மாத்திரமே. அமரிக்காவுக்கு இருப்பது ஒருவித குற்ற உணர்வும், சீனாவோட  முத்து மாலை திட்டத்தின் மீதான கண்ணும் தான். அத்தோடு ஏனைய பிராந்தியங்களிலும் அக்கறை காட்டுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொள்கிறது. அதற்கு மேல் ஏதாவது செய்யும் என்று நம்புவதற்கு இலங்கை ஒன்றும் மத்திய கிழக்கில் இல்லையே. சீனா நிச்சயமாக எதிர்க்கும். இலங்கை சீனாவின் வியாபார திட்டத்துக்கு முக்கிய மையம். சான்ஸே இல்லை. ரஷ்யா ஆதரிக்கவோ அல்லது பங்கெடுக்காமல் தவிர்க்கவோ செய்யும். ரஷ்யாவுக்கு, தான் சிரியாவுக்கு செய்யும் ஆயுத ஏற்றுமதியில் இவர்கள் கை வைத்துவிடுவார்களோ என்ற பயம். அதற்காக ராஜபக்ஸவை கைவிடவே சான்ஸ் அதிகம். அடுத்தது இந்தியாவா? இந்திராகாந்திக்கு பிறகு இந்தியாவின் வெளிநாட்டு அரசியல் என்பது வெறும் குள்ளநரித்தனம் மட்டுமே. தார்மீக கடமை என்பது கிஞ்சித்தும் கிடையாது. ராஜீவ்காந்தி சம்பவம் தான் இந்த காழ்ப்புணர்வுக்கு காரணம் என்று சென்ற ஆண்டு வரை நம்பியிருந்தேன். அது கிடையாது என்பதை சென்ற வருடம் நான் டெல்லியில்(கலைஞர் மட்டும் போகலாம், நான் போக கூடாதா?) இந்திராவின் வாஸத்தலத்துக்கு போன போது அறியமுடிந்தது. சீக்கியர்களால் அவர் கொல்லைப்பட்ட அந்த இடம் செப்பனிடப்பட்டு நினைவு சின்னம் எழுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அதே காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் ஒரு சீக்கியர் . பிரச்சனை அதுவல்ல. இது ஆரியர் திராவிடர் பிரச்சனை.  நான் சந்தித்த எல்லா திராவிட நண்பர்களும்(தெலுங்கர், மலையாளி, கன்னடிகா உட்பட)  ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி ஓரளவுக்கு கரிசனை கொண்டிருக்க, வட இந்தியர், They don’t give a shit about it. ஒருமுறை Arpan என்ற டெல்லிக்காரனுடன் பேசிய போது அவன் புலிகளை தமிழ்நாட்டில் இயங்கும் தீவிரவாதிகள் என்றான்! விளங்கிடும்!

252404_10150199276626415_624696414_7269776_8118695_nபயந்தன், பிரபல தமிழ் பேச்சாளர், கண்டி
Apple நிறுவன டிசைனர் ஜோனதன் ஐவுக்கு ‘சார்’ பட்டம் கிடைத்திருக்கிறதே?
சரியான தெரிவு. ஜோனாதன் பிரிட்டிஷ்காரர். ஸ்டீவ் ஜாப்சின் வலதுகை. ஆப்பிளில் இன்றைக்கு அவர் அளவுக்கு சக்திவாய்ந்த நபர் வேறு எவரும் இல்லை. டிம் குக் கூட இரண்டாம் பட்சம் தான். ஆப்பிளின் அழகான, புதுமையான் டிசைன்களின் சொந்தக்காரர். iPod, iPhone, iPad என எல்லாவற்றிலும் இவர் கைவண்ணம். நூறு சாம்பிள் காட்டினால் அதை ரிவியூ பண்ணுவது ஸ்டீவ். அண்மையில் அவர் கொடுத்த இந்த இன்டர்வியூ சூப்பர். இவருக்கு கிடைத்த விருது நம்பிக்கையூட்டுகிறது. அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளில் திறமைகளை தலையில் வைத்து கொண்டாடுவது திறமைகள் இப்படி சாரை சாரையாக வருவதற்கு ஒரு காரணம். எப்போது நாங்கள் பக்கத்தில் இருக்கும் திறமைகளை அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது தான் உருப்படுவோம்.
It is so important to be light on your feet, inquisitive and interested in being wrong – Jonathan Ive

image 004ஆடிவேல், சிட்னி
உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மேகலா யாரு? தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருக்கிறதே?
தெரியும் வரைக்கும் தான் அவள் மேகலா!  தெரிந்தபோது நானே தலை வெடித்து தான் எழுதவே வந்தேன்! இதற்கு மேல் எழுதினால் ஷெல் வரும்!!

Sachin-Tendulkar-Best-Pictures-5சச்சின், மும்பை
ட்ராவிட் ஓய்வு பெற்றுவிட்டாரே? இப்போது நான் என்ன செய்ய?
ஓய்வு பெறுவது என்பது  நீங்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம். எவனாவது நான் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று எனக்கு அட்வைஸ் பண்ணினால், செருப்பு பிஞ்சிடும்! கிரிக்கட் என்பது ஒரு தொழில்முறை விளையாட்டு. நன்றாக விளையாடினால் முதலாளி அணியில் வைத்திருக்கபோகிறான். இல்லையா? மீண்டும் திறமையை நிரூபித்து உள்ளே வரவேண்டும். இளைஞர்களுக்காக இடம் விடுவது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். திறமை இருப்பவன் பிச்சுக்கொண்டு வருவான். அப்படி தான் நீங்கள் வந்தீர்கள். மஞ்ரேகர், சித்துவை தூக்கி சாப்பிட்டுக்கொண்டு தான் ட்ராவிட், கங்குலி வந்தார்கள். நீங்கள் சரியாக விளையாடாவிட்டால் உங்களை தூக்க வேண்டியது BCCI இன் வேலை. அவர்களுக்கு திராணி இல்லை என்றால் அது உங்கள் பிரச்சனை கிடையாது. நான் ஒருபோதும் மற்றவர்களுக்காக ஓய்வுபெறமாட்டேன். ஒன்று என்னை வேலையில் இருந்து தூக்கவேண்டும். அல்லது எனக்கு தோன்றவேண்டும். கத்துறவன் கத்தட்டும்!!

Anmoe7gCQAEVYYjநடிகர் சூரியா, விஜய் டீவி
எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். நான் என் ரேஞ்சில கேட்கிறேன். தமிழை தாய் மொழியாக பேசும் மக்களை இவற்றுள் எந்த பெயர் கொண்டு அழைப்பார்கள்.
1) சிங்களவர்        2) மச்சான்ஸ்
3) கன்னடர்கள்    4) ஏமாந்த சோணகிரிகள்
பாஸு .. ரொம்ப கஷ்டமா இருக்கே .. நண்பருக்கு கால் போடலாமா? கருணாநிதிக்கு ஒரு கால் போட்டு கொடுங்க ப்ளீஸ்!

டெரர் கும்மி விருது

சென்ற ஆண்டுக்கான சிறந்த புதுமுக பதிவர் விருது கிடைத்து இருக்கிறது. நேற்று முன்தினம் விருது அறிவித்தபோது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எழுத வந்து ஆறு மாசம் ஆகிறது. எண்பதுக்கு மேல் பதிவுகள் எழுதியாச்சு. “எனக்கு திருப்தியில்லாமல், பஞ்சதந்திரன் ஸ்டூடியோவில் இருந்து எந்த பாடலையும் வெளியே அனுமதிக்கமாட்டேன்” என்று எப்போதோ ஏ ஆர் ரகுமான் ஒரு பேட்டியில் சொன்னது. என்னடா இது ரகுமானை எடுத்தாள்கிறேனே, எனக்கென்ன தகுதி? நல்ல விஷயங்களை ட்ரை பண்ணுவதில் தப்பில்லை.  அதுபோல, எழுதி திருப்தியை தந்தால் மாத்திரமே பதிவில் இடுகிறேன். எழுதி பதிவிடாமல் இருக்கும் குப்பைகள் ஏராளம். பதிவிட்டது கூட உங்களுக்கு குப்பையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாத வரைக்கும் எனக்கு அவை பொன் குஞ்சுகள் தான்!
sample
அடிக்கடி முக்கி முக்கி எழுதுகிறேனே ஏன் சீண்டமாட்டேங்கிறீர்கள் என்று புலம்புவேன் அல்லவா? இல்லையடா உன்னை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறோம், நீ சும்மா உன் பாட்டுக்கு எழுது என்கிறார்கள் இந்த டெரர்கும்மிகாரர்கள். அந்த அங்கீகாரம் கொடுத்த டெரர்கும்மி நண்பர்களுக்கு நன்றி.  இந்த பிரிவில் நடுவர்களாக இருந்த கேவிஆர் மற்றும் விந்தைமனிதனுக்கும் நன்றிகள்.

இந்த வார புத்தகம் : கடல் கோட்டை

Sengai Aaliyan“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்தவர் பொன்னுச்சாமி தமிழ் மாஸ்டர்!  கம்பவாரிதி ஜெயராஜ் ஸ்டைலில அங்கே இங்கே ஏறி இறக்கி பேசினதில் முதலிடம் கிடைத்தது. தமிழ்த்தின விழா பரிசு போட்டியில் ஆறேழு புத்தகங்கள் தந்தார்கள். தந்ததில் பிடித்தது கடல் கோட்டை!

DSC00706சாண்டில்யன் பாணி சரித்திர நவீனம்! மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு! இப்போது ஒல்லாந்தருக்கு எதிராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா?).  இவன் வீட்டுக்கு விசிட் அடித்தான் என்ற ஒரே காரணத்தால் படித்த மிதவாதியான பூதத்தம்பி தூக்கில் இடப்பட(அங்கேயும் பொறாமை, காட்டிக்கொடுப்பு) .. இப்படி ஈழத்து தளத்தில் ஒரு வரலாற்று கதை. நிஜக்கதையை கொஞ்சம் பூடகாமாக செங்கை ஆழியான் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருந்தது. வெறும் அரசனின் பார்வையில் இல்லாமல் ஒரு படைத்தலைவன் பார்வையில் வந்த கதை.  இதிலே தான் புகழ்பெற்ற “சிவ சிவா இயேசுவை மறப்பேனா” வசனமும் வருகிறது. நாமறியாத இருநூறு வருஷம் பழமையான ஈழமும் அறிந்த ஈழமும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்பதை மிக செடேட்டிவாக சொல்லாமல் சொல்லி, இயல்பாக தன் பாணியில் எழுதியிருப்பார் செங்கை ஆழியான்.

DSC00707செங்கை ஆழியான் அளவுக்கு ஈழத்தவர் வாழ்க்கையை படம் பிடித்து வேறு யாரும் காட்டியிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. எங்கள் இலக்கியங்களில் போரும், சுய பச்சாதாபமும், அளவுக்கதிகமான வீரமும், வெறுப்பும், எம்மை விட்டால் யாரும் இல்லை என்ற திமிரும் இருக்கும். செங்கை ஆழியான் இதில் விதிவிலக்கு. வாழ்க்கையை அப்படியே தந்தவர். அதிலே எந்த பகட்டும் இல்லை. வெறுப்பும் இல்லை. வீராவேசமும் இல்லை.  செங்கை ஆழியானை நான் எப்போதும் ஒரு லிபரல் எழுத்தாளர் என்று சொல்லுவேன். தனக்கென்று ஒரு அரசியல் பார்வை, அஜெண்டா வைத்துக்கொள்ளாமல் தன் போக்கில் எழுதுவதால் அவர் எழுத்துக்கள் மிகவும் உண்மையாகவும் மிகைப்படாமலும் இருக்கும். அவரை இனி வரும் தலைமுறை வாசிக்காமல் தவிர்த்துவிடுமோ என்ற அச்சத்தில் சொல்லுகிறேன். உங்கள் வீட்டு லைப்ரரியில் அட்லீஸ்ட் அவருடைய யானை, கிடுகுவேலி போன்ற புத்தகங்களையாவது நிச்சயம் வாங்கி அடுக்குங்கள்.

இந்த வார பாடல் :  “பிரிவோம் சந்திப்போம்”

2008ம் ஆண்டு பொங்கல். வேலைக்கு லீவு போட்டுவிட்டு நானும் கஜனும் முதல் நாள் ஷோ பார்க்க போன படம் இது.  கருபழனியப்பன் இயக்கம். “பார்த்தீபன் கனவு” வசனங்களுக்கு பின்பு நான் இவரின் ரசிகன். படம் ஆரம்பிக்கும் வரை கஜனுக்கு நம்பிக்கையில்லை.  ஒரு சில படங்களை பார்த்துக்கொண்டு இருக்கும் போது சிலவேளைகளில் கால்கள் தன்னையறியாமல் தள்ளாடும் இல்லையா? இது அந்த மாதிரி படம். நிஜத்தை முகத்தில் அடிக்கும் வசனங்கள். எம்மை எம்மில் இருந்து அப்பால் போய் எம்மையே பார்க்கவைக்கும் படம்.  சினேகாவின் பாத்திரம் சாதாரணமாக தான் ஆரம்பித்து போக போக அதை மெருகு படுத்தும் அழகு. படத்தில் பழனியப்பனுக்கே உரித்தான நச்சென்ற வசனங்கள். புத்திசாலித்தனமான காட்சிகள். அந்த மாத்திரை காட்சி ஒரு சின்ன சாம்பிள் தான்.
படம் முடிந்து, தலையில் யாரோ கல்லை கட்டி வைத்தாற்போல இருக்க, கஜனிடம் கூட சரியாக பேசாமல் நேரே அக்காவிடம் போய் மணிக்கணக்காக புலம்பி, அக்காவும் அத்தானும் படத்தை அடுத்த நாளே பார்த்து, நாட்கணக்கில் டிஸ்கஸ் பண்ணி, எல்லோருமாக மலேசியாவுக்கு ஐந்து நாள் டூர் போனதற்கு கூட காரணம் “பிரிவோம் சந்திப்போம்”! புத்தகங்களில் “The Namesake” எப்படியோ அதுபோல படங்களில் எனக்கு “பிரிவோம் சந்திப்போம்”.
எனக்கு பிடித்த சிறந்த பத்து தமிழ் படங்களில் இதற்கு இடம் உண்டு. இந்த படத்தை சாதாரணமாக ரசிக்க முடியாது. அதை அனுபவிக்கவேண்டும். அந்த வாழ்க்கை உங்களை காய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் அது வெறும் ஸ்லோவான போர் தான்.
கரு பழனியப்பன், முக்கியமான இயக்குனர். மந்திரப்புன்னகையிலும் மிரட்டியவர். அகத்தியன், சேரன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு பின்பு நம்பிக்கை தந்த அறிமுகம்.  முன்னைய மூவரும் இப்போது ஏமாற்றுகிறார்கள். பார்ப்போம் இவர் என்ன செய்ய போகிறார் என்று.
வித்தியாசாகர் இசை. “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்துக்கு பின்பு வந்த மிகச்சிறந்த மெலடி அல்பம் “பிரிவோம் சந்திப்போம்” என்று சொல்லலாம். Undoubtedly இது வித்யாசாகரின் பெஸ்ட் ஆல்பம் என்பதில் இந்த பாடல்களை “கேட்ட” யாருக்கும் மாற்று கருத்து இருக்க சான்ஸ் இல்லை. இப்படி கட்டு கட்டாக மெலடிகளை எவன் ஒரே படத்தில் போடுவான்? கோயில் கட்டி கும்பிடோனும்.

கண் கலங்க வைக்கும் பாடல்கள். “கண்டேன் கண்டேன்”, “இரு விழியோ”, “மெதுவா மெதுவா”, “கண்டும் காணாமல்”, “நெஞ்சத்திலே”, “சொல் சொல் என் அன்பே“ என எல்லாமே மெலடி தர்பார் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கியம். நெஞ்சத்திலே பாடல் ஒரு ஈற்றடி முதலடி வகையறா. நான்கு கவிஞர்கள் மாறி மாறி எழுதியது. எதை எடுக்க எதை விட? “கண்டேன் கண்டேன்” ஒரு கிளாசிக். மீன் குஞ்சு ஸ்வேதா மேனன் “ரெட்டைகிளி அச்சத்திலே,  நெஞ்சுக்குழி வெப்பத்திலே, சுட்டித்தனம் வெட்கத்திலே” என்று பாடும்போது “அடடா அடடா அடடா அடடா”!
வரிகளில் இலக்கிய நயம். சந்தம். என்ன வகை பா இது என்று கேதாவிடம் கேட்கவேண்டும்.
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..
பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன்
நான் வாலிபனுக்கு சொன்னது போல, வீக்கான தருணங்களில் கேட்டால் … கலங்கும். எதையாவது அடித்து உடைக்கவேண்டும் போல …
உடைத்திருக்கிறேன்!
 

ஹாட் நியூஸ்

படம் பார் கவிதை படி தான் இன்றைய ஹாட் நியூஸ். அட்லீஸ்ட் ரெண்டு பேராவது இந்த கவிதை ட்ரை பண்ணுங்கள். புதுக்கவிதை, வெண்பா என்ன கர்மம் என்றாலும் பரவாயில்லை.
நான் சும்மா ஒன்று முயற்சி செய்தேன். இடை நடுவில் சிக்கலாகி கைவிட்டு விட்டேன்! வாசிக்கும் போது வாமிட் வருகிற கவிதை! ஆனாலும் தருகிறேன். இதை பார்த்தாவது “அட நாங்கள் எவ்வளவு பெரிய கவிஞர்கள்?” என்று ஒரு சிலர் ட்ரை பண்ணலாம்.
07
 

கண்டாங்கி சேலையாக மாறவா? – உன்
கண்ணாடி மேனி போர்த்து மூடவா?
பாவத்தோடு பாடினேன்
பாவமாய் சிரித்தது
கந்தல் துணி!Contact form