வியாழ மாற்றம் 17-05-2012 : பாலூட்டி வளர்த்த கிளி

May 17, 2012

 

ஒரே கேள்வி ஒரே பதில்!

sakuntlaமேகலா, இதயனூர்
ஒன்று கவனிச்சியா? தமிழ் நாட்டில் சிலர் மீண்டும் டெசோவை ஆரம்பித்திருக்கிறார்கள். Facebook இல் கூட ஈழத்தில் நடக்கும் சம்பவங்களை பார்த்து மீண்டும் இளைஞர்கள் வெகுண்டு எழுந்திருக்கிறார்கள் என்றும் இப்படியே போனால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று சிலர் அறைகூவல் விடுக்கிறார்களே?
இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆடிய ஊழிக்காத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை. மே18 இறந்த மக்களுக்கு கண்ணீர் விடுக்கும் நாள். வருடம் ஒரு முறை, ஒரு வெள்ளைக்கார அம்மா தன் கையில் குழந்தையை வைத்திருக்கும் படத்தை போட்டு அன்னையர் தினத்துக்கு லைக் வாங்கும் விஷயம் இல்லை இந்த மே18. ஈழத்தில் எந்தவகையான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்ற தீர்மானத்தை அங்கிருப்பவர்கள் நிலைமைக்கேற்ற மாதிரி முன்னெடுப்பார்கள். வெளிநாடுகளில் இருந்துகொண்டு, பாடசாலைக்கு போன மகனும் மகளும் அசந்து தூங்கும் சமயம் பார்த்து Facebook இல் வந்து புரட்சி பேசக்கூடாது. அரசியல் ரீதியான கருத்துக்கள், வாதப்பிரதிவாதங்கள் என்பது வேறு. அதையும் கூட தமிழில் எழுதாமல் இயலுமானவரை ஆங்கிலத்தில் எழுதுங்கள். சிங்களவனுக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று புரியட்டும். அதனால் நல்ல கருத்துக்கள் பரவவும், சில விழிப்புணர்ச்சிகள் வரகூடியதாகவும் இருக்கலாம். ஆனால் புரட்சி பேசி இளைஞர்களை இலகுவாக தூண்டிவிடும் சிலரின் போக்குகளை கொஞ்சம் கவலையோடு பார்க்கவேண்டியிருக்கிறது. நாம் தூண்டிவிட்டு. ஒருத்தனுக்கு சின்னவிரல் கீறுப்பட்டால் கூட நாங்கள் தான் அதற்கு பொறுப்பு என்பதை மறந்துவிடவேண்டாம். ஏற்கனவே சனத்தொகையில் நாங்கள் 4% ஆகிவிட்டோம் என்று ஒரு பேச்சு. இப்படியொரு இக்கட்டான நிலைமையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? முதலில் இந்த போர், புரட்சி, பூசணிக்காய் என்று பேசுபவன் யோக்கியனாய் டிக்கட் வாங்கி ஊருக்கு போகவேண்டும். அப்படி இல்லையா? அரசியல் ரீதியாக வெளிநாடுகளில் என்னமாதிரியான நடவடிக்கைகள் செய்யலாம் என்றோ அல்லது ஊருக்கு என்ன செய்யலாம் என்றோ யோசித்து செயலாற்றவேண்டும். ஆளாளுக்கு மெழுகுதிரி படம் போடுபவன், ஒரு நாளைக்கு மட்டும் profile photo மாத்தி காந்தள் பூ போடுபவன், அதிகம் வேண்டாம், ஒரு நூறு டொலராவது மாதம் ஊருக்கு உங்கள் சுற்றம் முற்றம் முகம் தெரியாதவன் கூட பயன்பெறக்கூடிய ஒரு விஷயத்துக்கு உதவ, உதவ என்ற சொல்லே தவறு, திருப்பிக்கொடுக்க தயாராக இருக்கவேண்டும்.

எழுத்தாளர் விழா (மக்களே இது விமர்சனம் இல்ல, கோர்த்து விட்டுடாதீங்கப்பா)

morepic_6083643இங்கே பிறந்து வளர்ந்த பத்து பிள்ளைகளின் பேச்சோடு ஆரம்பிக்க, சுட சுட கோ`ப்பி நாங்களே ஊற்றிக்குடித்தோம். அப்புறமாக கவியரங்கம் ஆரம்பித்தது. அதுவும் ஒரு பத்து பேர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரன் தொட்டு கல்லோடைக்கரன் என்று பலரும் வாசித்தார்கள்! இடைநடுவில் என் பின்னால் இருந்த “மேல்பேர்னின் முக்கிய பத்திரிகையாளர்”, “அடடே சந்தைக்கு சாமான் வாங்க எழுதி வச்ச துண்டை கொண்டு வந்து இருக்கலாமே, நானும் கவிஞர் ஆகியிருப்பேனே” என்று கடி ஜோக் விட, பின் வரிசை முழுவதும் கொல்லென்று சிரித்தது. திடுக்கிட்டு விழித்தேன்! கேதா தப்பினான்!
அடுத்தது நம்ம ஏரியா. “புலம்பெயர்ந்தவர் இலக்கியம் தமிழுக்கு வளம் செர்க்கின்றதா?” என்ற தலைப்பில் வலைப்பூக்கள் பற்றி பேசவேண்டும். என்னளவில் இது ஒரு மொக்கை தலைப்பு! அதிலே நான் வேறு எக்ஸ்ட்ரா மொக்கை போடுவேன் என்பதால் பாலா ஆல்ரெடி பாய் தலையணையுடன் தான் வந்திருந்தான். மாத்தளை சோமு வேறு, “ஊர் எரியும் போது பிடில் வாசிக்கக்கூடாது. ஈழத்தவர் போர் பற்றியே எப்போதும் இலக்கியம் படைக்கவேண்டும்” என்று முழங்கிக்கொண்டிருக்க “கக்கூஸ்” பற்றி எழுதும் எனக்கு கலக்கியது!
எனக்கு முன்னம் பேசின மூன்று பேரு, உள்ளூர் வானொலி அரசியலை பிரிச்சு மேய, தப்பான இடத்தில் மாட்டிவிட்டேன் என்று தோன்றியது. ஆரம்பத்தில் பத்து நிமிஷம் என்று சொன்னவர்கள் இப்போது ஐந்து நிமிஷம் தான் பேசலாம் என்றார்கள். ஐஞ்சு நிமிஷம் பேசக்கூட புலம்பெயர் இலக்கியத்தில் ஒன்றும் இல்லை என்ற முடிவை ஒரு கவியரங்கத்தை மாத்திரமே வைத்துக்கொண்டு முடிவெடுத்தது சர்ப்பரைஸ் தான்!
MAY-201200057சுஜாதாவுக்கும் ஜெயராஜுக்கும் நன்றி செலுத்திகொண்டு ஆய்வுக்கட்டுரையை கவியரங்கம் போல ஆரம்பித்து பைபிளுக்கும் ஷாலினி சிங்கிற்கும் தாவினேன். அவ்வப்போது, உமா வரதராஜன், ஜெயபாலன், முத்துலிங்கம் மானே தேனே போட்டு இன்டர்வெல் சீன் டூயட் முடித்து யூனிகோடுக்குள் போவதற்குக்கு கோடு கீறினார் மாத்தளை சோமு. பத்து நிமிஷம் தாண்டிவிட்டதாம். அப்புறமாக ஆறு பந்திகளை ஸ்கிப் பண்ணி வலைப்பூக்கள் பற்றி சொல்லும்முதலேயே பதினைந்து நிமிஷம் ஆகிவிட்டது. என் பேச்சு தாலாட்டு போல இருந்ததாக பாலா கொட்டாவி விட்டவாறே வந்து சொன்னான்!
அப்புறம் கோகிலா மகேந்திரன் பேசினார். அழுத்தம் திருத்தமான ஆணித்தரமான பேச்சு. சில இடங்களில் என்னையறியாமலேயே கைத்தட்டினேன். பக்கத்தில் இருந்தவன் உடனே சேர்ந்து கைதட்டினான். தக்காளி நிறைய இங்கிலீஷ் படம் பார்க்க தியேட்டர் போயிருப்பான் போல!
இதிலே சோகம் என்னவென்றால், தேர்ந்த பேச்சாளர்கள் கோகிலா மகேந்திரன், திருநந்தகுமார், மாத்தளை சோமு போன்றவர்கள் பேசியது சொற்ப நிமிடங்களே. விழாவில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்து பேசவேண்டியவர்களை பேச வைக்காமல் விட்டதில் சுவாரசியம் மிஸ்ஸிங். தமிழ் வளர்ப்போம் என்று எத்தனை நாளுக்கு தான் கூட்டம் கூடும்? சுவையாக நிகழ்ச்சிகள் படைத்தால் தானே நம்மை தேடிவருவார்கள்? சரி நீயும் செய்யாத! செய்யிறவனுக்கும் ஏதாவது சொல்லு! விளங்கிடுவடா ஜேகே!
பின்னர் “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்று ஒரு நாடகம். வேற யாரு? கோகிலா மகேந்திரன் தான். அருமை! தாயும் மகனும் ஒரே நாடகத்தில் … 
morepic_7400935மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர்ஏறாது காளை இழுக்காது,
எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன் விளைப்பான்
என் ஊரான்
ஆழத்து நீருக் ககழ்வான்
நாற்று
வாழத்தான் ஆவி வழங்குவான்
ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்
நன்னெல்லு.
mahakaviஎன்ற மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதையை நாடகமாக்கும் துணிச்சலும் திறமையும் கோகிலா மகேந்திரன் ஒருவருக்கே உண்டு. பயிர் நாடுகிறார்கள். இடையில் மழை வந்து பயிர் அழிய, திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து நாற்று நட தொடங்குகிறார்கள். Are you getting it? ஆனால் திரும்பவும் மழை வந்தால்? உருவகத்தில் விடை இல்லை.
“அந்த பையனை சந்திக்கவேண்டும்” என கோகிலா மகேந்திரன் யாருக்கோ சொல்லி எனக்கு வந்து சொல்ல, அடித்து விழுந்து ஓடினேன். சின்னவயதில் எட்ட நின்று ரசித்த ஆளுமை அல்லவா! “வாரும் தம்பி, பேச தொடங்கி அஞ்சு நிமிஷத்திலேயே கண்டு பிடிச்சிட்டன், உமக்குள்ள ஏதோ இருக்கு. உம்மட வாசிப்பு தான் பலம். விட்டிடாதேயும். எப்போதும் தொடர்பில இருக்கோணும், நம்பரை தாரும்” என்று சொல்ல, எனக்கு நடுங்க தொடங்கியது. எவ்வளவு பெரிய அங்கீகாரம் இது! “உங்கள சின்ன வயதில இருந்தே ரசித்துக்கொண்டு வாறன் அம்மா” என்று நடுங்கி நடுங்கி சொன்னேன். ஆனாலும் எனக்குள் இருக்கும் விமர்சகன் விழித்துக்கொள்ள, “ஆனால் திரும்பவும் மழை வந்தால்?” என்ன contingency plan வச்சிருக்கிறீங்க? என்று என்று நாடகத்தில் குறுக்கு கேள்வி கேட்டேன். “அது மகாகவி கவிதை, கருத்தில் தான் கைவைக்கவில்லை” என்றார். மேன்மக்கள் மேன்மக்களே!
220px-Kokila-3சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மாத்தளை சோமு வந்து இடையில் பேச்சை குறைக்கசொல்லி சொன்னதுக்கு வருத்தம் தெரிவித்தார். நீங்க சிட்னிக்கு வந்து பேசணும் என்றார். குழந்தை போல பரவசத்துடன் பேசினார். “வீரகேசரில உங்கட கதை வந்தால், நான் தான் வீட்டில முதலில வாசிப்பன் அய்யா” என்று சொல்ல சிரித்தார். அரைமணி நேரம் என்னோடு பேசினார் என்றால் பாருங்களேன். ஷோபாசக்தி மீதும் ஜெமோ மீதும் சோமுவுக்கு பயங்கர கடுப்பு. முத்துலிங்கம் எங்கட வாழ்க்கையை இன்னும் எழுதோணும் என்றார். எஸ்போ மீது மரியாதை வைத்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களில் 40% மலையகத்தவர். அதை வைத்து ஒரு நாவல் எழுதப்போகிறேன் என்றார். அடுத்த வாரம் எழுதப்போகும் “வண்ணாத்தி பூச்சி” என்ற ஒரு அழகான சிறுகதையை சொல்லி, எப்படி இருக்கிறது? என்று கேட்டார். புத்தகங்கள் வாங்குகிறார்கள் இல்லை என்றார். “Facebook, twitter ல வாசகர் வட்டம் கொண்டு வாங்க” என்றேன். “கம்பியூட்டர் என்ற வஸ்து புரியுதில்லை” என்றார்!
இந்த விமர்சனத்தை ஒரு வித அங்கதத்துடன் எழுதியமைக்கு யாரையும் நோகடிக்கும் நோக்கம் இல்லை(தக்காளி அடுத்த மேடைக்கு கூப்பிடமாட்டாங்க அப்புறம்). ஆனால் தமிழ் விழாக்களை ஒரு வித stereotype உடன் எல்லோரையும் திருப்திபடுத்த மேடையேற்றினால், சிறப்பு விருந்தினராக வரும் வெள்ளைக்காரி மாத்திரமே மிஞ்சுவார்! கம்பன் விழாக்கள் போன்று நிகழ்ச்சி பார்க்கவென்றே கூட்டம் வரவேண்டும். இந்த “புலம்பெயர்”, “அம்மாவா அப்பாவா”, “தமிழ் இருக்குமா சாகுமா” என்ற டப்பா விஷயங்களை விடுத்து அரங்க நிகழ்ச்சிகளில் கொஞ்சம் பின்நவீனத்துவம் கொண்டுவரவேண்டும். “வைரமுத்து கவிதைகளில் கம்பன் பாடல்கள்”. “சமையலறையில் சங்க இலக்கியம்”. "இது பெண்ணானால்” என்ற கவியரங்கத்தில் “கம்பியூட்டர், கோடாலி, அணு குண்டு, என்ற பல பாடுபொருட்களுடன் கடைசியில் ஒருத்தன் “பெண் பெண்ணானால்” என்றும் கவிதை பாடினால் அது பின்நவீனத்துவம். செய்ய ஆசை தான். சாவி எங்கள் கைக்கு வரவேண்டும். தாருங்கள் ப்ளீஸ்!
சொன்னாப்ல, என்னுடைய “கனகரத்தனம் மாஸ்டர்” சிறுகதை இந்த விழாவில் வெளியிடப்பட்ட ஜீவநதி இதழில் வெளியாகி இருக்கிறது!

பாலூட்டி வளர்த்த கிளி! (வயது வந்தவர்களுக்கு மட்டும்!)

சிலவிஷயங்களை உணர்வு பூர்வமாக அணுகாமல் என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று புரிவதற்காக அறிந்துவைத்திருத்தல் வேண்டும். தீயவற்றை பார்க்காமலும், கேட்காமலும் பேசாமலும் இருப்பதற்கு எது கொடியது என்று தெரியவும் வேண்டும். சில விஷயங்களை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதற்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. என்னடா பீடிகையா? எழுதும் விஷயம் விவகாரமானது. வயசுக்கு வந்திருந்தால் மாத்திரம் வாசியுங்கள். டவுட் என்றால் வந்தாச்சா என்று கூகிளில் தேடிவிட்டு வாருங்கள் ப்ளீஸ்!
600-01540750w“கடவுளே பாழாய் போன மீன்குழம்பும் புட்டும் திறக்கும்போது நாறக்கூடாது” என்று கும்பிட்டுக்கொண்டே சாப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் திறப்பதுண்டு. பக்கத்தில் எவனாவது கிங்பெங் இருந்தால் ஓகே. அவன் சாப்பாடு இன்னமும் நாறும்! இல்லாவிட்டால் ஜெனிபரும் கித்மனும் என்னோடு சாப்பிட வரமாட்டாள்கள்(தம்பி போன் வயர் அறுந்து நாலு வாரமாச்சு!). நல்லகாலம் இன்று யாருமே இல்லை என்று துணிச்சலாக பெட்டியை திறந்தேன். கும்புளா மீனில அப்பா நேற்றிரவு நல்ல தடிப்பாக வச்ச குழம்பு. கப்பென்று … ஜெனிபர் ஓடிவந்தாள் அவசர அவசரமாக மூடினேன் .. பெட்டியை.
“ஜேகே .. இந்த முறை டைம்ஸ் மாகசீன் பார்த்தியா?”
“இல்லையே .. ஏன் என்னை பற்றி எழுதியிருக்காங்களா?’
“அய் .. ஆசைய பாரு .. அதிண்ட அட்டைப்படம் பார் … உன்னுடைய டமில் ப்ளாக்கில் போடு .. ஹிட்ஸ் அள்ளும்”
உடனேயே போய் எடுத்துப்பார்த்தேன். முன்பக்க அட்டைப்படம் ஏதோ தொந்தரவு செய்தது. அன்னையர் தினத்து ஸ்பெஷல் எடிஷன். ஐந்து வயது வரைக்கும் கூட தாய்ப்பால் கொடுக்கலாம் என்று ஒரு தாய் சொல்லுவதை கவர் பண்ணியிருந்தார்கள். அந்த தாயுடைய மூன்று வயது மகன் அவளிடம் பால்  குடிப்பது போட்டோ.
600
இங்கே ஆஸ்திரேலியாவில் இந்த போட்டோ பெருத்த சண்டையை மூட்டிவிட்டிருக்கிறது. எத்தனை வயது மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று பெண்கள் எல்லாரும் குடுமிச்சண்டை. எங்கள் அலுவலகத்திலும் இதே பிரச்சனை தான். இந்த வாரம் முழுக்க சாப்பாட்டு நேரம் எல்லாம் இதே விஷயம் தான். அப்போது தான் பீட்டர் ஒரு குண்டை தூக்கிப்போட்டான்.
கிரேக்க கவிஞர் ஹோமரின்(ஓஎல் வரலாற்று பாடத்துக்கு முக்கி முக்கி பாடமாக்கின பெயர்) கதைகளில் ஓடிபஸ் கதை என்று ஒன்று இருக்கிறது. பிறக்கும் போதே அசரீரி ஒன்று, இந்த குழந்தை வளர்ந்த பின் தன் தந்தையை கொன்றுவிட்டு அம்மாவை திருமணம் செய்யும் என்று சொல்கிறது. இதை கேட்ட தமிழ் சினிமாவில் வரும் தகப்பன் ராஜா ஓடிபசை ஒரு தோணியில் குழந்தையாய் ஆற்றில் விட பல ஊர் தாண்டி கர்ணன் வளர்ந்து ஷோபனாவை லவ் பண்ணி பானுப்பிரியாவை கைப்பிடிக்கிறான். ஓடிபசுக்கு தான் வளர்ப்பு மகன் என்று தெரியாது.
ஒரு நாள் பாரில் கள்ளு குடிச்சுக்கொண்டு இருக்கும் போது தான் மீண்டும் அந்த அசரீரி வந்து நீ உன் அப்பாவை கொன்று அம்மாவை மணம் முடிப்பாய் என்று திருவாய் மொழிய, ஓடிபஸ் என்னடா இது நாதாரி அசரீரியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இரவோடு இரவாக வளர்ப்பு தாய் தந்தையை விட்டு ஓடித்தப்புகிறான்.
vlcsnap-246923போகும் வழியில் தகராறு. சண்டையில் ஒருவரை இவன் கொன்றுவிட .. yeah you right! அவர் தான் அவனின் அப்பன். அது தெரியாமல் விக்கிரமன் தொடர்ந்து பயணிக்க ஒரு ஊரில் வேதாளம் ஒன்று எல்லோரையும் கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணிக்கொண்டு இருந்தது. கேள்வி கேட்டு பதில் சொல்லாவிட்டால் மேலோகம் தான். யாராலும் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் யாருமே அந்த ஊரில் அம்புலிமாமாவோ படலையோ வாசிப்பதில்லை. கேள்வி இதுதான்,
“காலைல நாலு காலில நடக்கும். மத்தியானம் ரெண்டு காலில நடக்கும். இரவு மூன்று காலில நடக்கும். அது எது?”
சரியான பதிலை ஓடிபஸ் சொல்லிவிட வேதாளம் ஊரை விட்டு ஓடீட்டுது., மக்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஓடிபசை தலையில் தூக்கி கொண்டாடுகிறார்கள். அவன் தான் இனி எங்கள் மன்னன் என்று அந்த ஊரின் ராணிக்கு அவனையே மணம் முடித்து கொடுக்கிறார்கள். yeah you righ! அந்த ராணி தான் அவனின் பயோலஜிகல் அம்மா! WTF என்று சொல்லத்தோன்றுகிறதா? பாவம் அவனுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்து நாளைடைவில் வறட்சி , பிளேக் அது இது என்று வந்து ஊரே அழிந்துபோக அசரீரி சாபம் நிஜமாகிறது.
225px-IngresOdipusAndSphinxஇந்த கருமாந்திர கதைக்கும் அன்னையர் தினத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பீட்டரிடம் கேட்டேன். சைக்கோலாஜியில் ஓடிபஸ் மனப்பான்மை(கொம்பிளக்ஸ்) என்று ஒன்று இருக்கிறதாம். தன்னையறியாமலேயே ஒவ்வொரு ஆணுக்கும் அவனுடைய தாய் மீது ஒரு ஒப்செசஷன் இருக்கும். அது சிலவேளைகளில் எல்லை தாண்டி, விகாரமான மனம் என்றால் போசசிவ்னஸ் அதிகமாகி தந்தையை கொல்ல கூட துணிவானாம். இது பற்றி இன்னமும் விவகாரமான விஷயம் எல்லாம் இருக்கிறது. எழுதவேண்டாமே!
அதனால் பிள்ளைக்கு நினைவு தெரியும் வயது வரமுன்னமேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டும். வளர்ந்த பிள்ளைக்கு சின்னவயதில் தாய்ப்பால் குடித்த ஞாபகம் இருக்ககூடாது என்பது தான் பீட்டர் சொல்லவந்த கருத்து! 
இப்போது டைம்ஸ் அட்டைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் ஓவர் தான் இல்ல?

இந்த வார பாடல்

எனக்கு இப்போதெல்லாம் திருவிழா என்றால் அது ரகுமான் அல்பம் வெளிவரும் நாள் தான். விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டுகள் வரும் டைம்மில் கிட்டத்தட்ட ஹிஸ்டீரியா பேஷன்ட் போல ஆகிவிட்டேன். சயந்தன் கோல் பண்ணி, கண்டியில் யாரோ ஒருத்தன் ஹோஸான்னா பாட்டு வச்சிருக்கிறான் என்று சொல்ல, எப்பிடியாவது வாங்கித்தா என்று அவன் காலில் விழுந்து, அவன் போய் நண்பன் காலில் விழுந்தும் கிடைக்கவில்லை. ஒருவழியாக எல்லாப்பாட்டுகளும் கைக்கு வந்தவுடன் ஐபோடில் போட்டுக்கொண்டு சைனீஸ் கார்டனுக்கு போய், புல்வெளியில் அமர்ந்துகொண்டு திரும்பி திரும்பி திரும்பி திரும்பி … ரகுமானும் இளையாராஜாவும் எம்எஸ்வியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப்பார்த்தால் … ஏன் ரேகாவும் கமலும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு குதித்தார்கள் என்று புரிகிறது... காதலில் ஜெயிக்கவைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி!
யுவராஜ் வந்தபோதும் இதே நிலை தான். அதுவும் இந்த சிந்தகி பாட்டு. கொன்று புதைக்கும் பாட்டு. ஸ்ரீனிவாஸ் குரலில் .. எவ்வளவு லவ் இருந்தால் இப்படியெல்லாம் பாடல் உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? ரகுமான் கிட்டார் எடுத்தாலே இது தான் கதி!
ஒரு முறை விஜய் டிவியில் ஸ்டீபன் பியானோவுடன் ஸ்ரீனிவாஸ் unplugged. சிந்தகி என்று ஆரம்பிக்க கையில் சாப்பாட்டுகோப்பை இருந்தது தெரியாமல் எழுந்து கைதட்டிவிட, சாப்பாடு சோபாவில் கொட்டி…. அன்றிலிருந்து அக்கா, சாப்பிடும்போது பாட்டு கேட்க கூடாது என்று தடா!
இடையிலே ஷங்கர் எக்ஸாத் லாயின் இசையில் டெகோ பாட்டு. அதை கொண்டு போய் முடிக்கும் போது தொடங்கும் பாருங்கள் அடுத்த பாட்டு. ச்சே … பேசாம வியாழ மாற்றத்தை நிறுத்திவிட்டு உஊமபதபமா எழுத தொடங்கலாம் போல!.

சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில்- பலர்
சொல்லிப்போன ஒரு பொருள் இருக்கும்
சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள் – பல
கோடி கோடி பொருள் குடி இருக்கும்.....


படமும் கவிதையும்

கேதா ஊருக்கு போய்விட்டு வந்தவுடனேயே “தொதல் கொண்டுவந்தியா? பருத்தித்துறை வடை கொண்டுவந்தியா?” என்று கேட்காமல், நல்ல போட்டோ எடுத்துக்கொண்டு வந்தியா? என்று தான் கேட்டேன். எல்லோர் கையிலும் இருக்கும் அதே கமரா தான், அவன் எடுக்கும் போது மட்டும் கவிதை பாடும். விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை பார்த்து “நீ அழகா இருக்கே, நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே” என்று கேட்க பதிலுக்கு அவள் “ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னை பாக்கலியோ என்னவோ” என்பாள்.
கேதாவின் கமரா கண்கள்!
படம் கவிதை சொல்லுது. பதில் கவிதை சொல்ல, படலையின் அரசவைக்கவிஞரும் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடும் மன்மதகுஞ்சுவுக்கு அழைப்பு விடுத்தேன். தல ஐந்து நொடியில் கவிதை ஒன்றை துப்பினார். வைரமுத்து கூட “வெட்டி வேரு வாசம்” எழுத ஆறு நாள் எடுத்தாராம்!
IMG_9197மலை அளவு கருமேகம்
அலை அலையா வரு நேரம்
கருவறுத்த கறுப்புத்தாலி
எழவெடுத்த கருங்காலி
கட்டியவனை தேடி ஓடி வாடி வதங்கி
கருவறையில் போய் தேடும் தமிழ் சாதி!
மலர்  படர தேர் கொடுக்கும் பாரி வேந்தன்
சமர் இல்லை என்றபின் டொலர் கொடுத்தானில்லை!
தேர் வேண்டாம் மரம் போதும் படர்வோம் என்றால்
மரம்கொத்தி பறவைகள் வருமாம் என்று
தார் ரோட்டில் பேர் எடுக்கும் ஜாரிசாந்தன்!
இனியில்லை வழியொன்று
வலியெல்லாம் கழியென்று
கொடியொன்று வேர்விட்டு மரமாகுது
மரம் வெட்டி விறகெடுத்து விலைபெசுது

Contact form