வியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்

Jul 18, 2012

அதிர்ச்சி!

வணக்கம். நான் நலம். தங்களின் நலமறிய அவா. தாங்கள் பரிந்துரை செய்த "A Thousand Splendid Suns" புத்தகத்தை கடந்த இரு வாரங்களாக வாசித்து, இப்போதுதான் முடித்தேன்.கடைசி நாற்பது பக்கங்களில் மரியம் மற்றும் லைலாவுக்காக கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்லதொரு நாவலை அறிமுகம் செய்தமைக்கு, என் நன்றிகள்!
முருகேசனின் இந்த ஈமெயிலை வாசிக்கும்போது சந்தோஷப்படமுடியாத அளவுக்கு இந்த நூலில் மரியத்துக்கு நடந்த ஒரு சம்பவம் போலவே ஒன்று ஆப்கானில் ஈமெயில் வந்த தினத்தன்று நடந்தது. மனைவிக்கு யாருடனேயே தப்பான உறவு என்று தெரிந்ததால், பொது இடத்தில் வைத்து, யாரோ ஒரு நாதாரி நீதிபதி ஆணையிட, கணவனே அவளை சுட்டு சாகடிக்கிறான். கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

Enter video caption here

அவ்வப்போது, Facebook இலே, ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறவேண்டும், அமெரிக்கா தன்னுடைய சுயநலத்துக்காக ஒரு நாட்டையே சூறையாடுகிறது, வெஸ்டர்ன் இம்பீரியலிசம் அது இது என்று சொல்லுவார்கள். அவர்களின் செவிட்டை பொத்தி அறைய வேண்டும் போல இருக்கும். என்ன இம்பீரியலிசம்? தலிபான் ஈவு இரக்கம் இன்றி காட்டு தர்பார் செய்கிறது. நேட்டோ நுழைந்த பின்னர் தான், ஏதோ அந்த நாடு கொஞ்சமேனும் மூச்சுவிடமுடிகிறது. அவர்களும் அடுத்த வருடம் வெளியேறினால், தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் … நாய் கூட அம்மணமா அவசரத்துக்கு காலை தூக்கமுடியாத அடக்குமுறை வரும்.
சிரியாவிலும் இதே விஷயம் தான். இன்றைக்கு சிரிய அரசாங்கம் தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்குகளை தாங்கள் தாக்கியதாகவும், பலரை கொண்டுவிட்டதாகவும் சொல்லுகிறது. ஆனால் பொதுமக்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவற்றை வாசிக்கும் பொது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன செய்திகள் கேட்ட ஞாபகம் வருகிறது. அமெரிக்கா மீது பலருக்கு கோபம் இருக்கலாம். கம்யூனிஸ்ட் என்று பீத்திக்கொள்வதில் சில திடீர் தத்துவஞாநிகளுக்கு பெருமையும் இருக்கலாம். ஆனால் உண்மை நிலை அறியவேண்டும். அமெரிக்கா தன் சுயலாபத்துக்காகவே செய்வதாக இருக்கட்டும். ஆனால் ஒரு பெண் தனியனாக வீதியால், தான் விரும்பிய உடையை அணிந்துகொண்டு போக முடியுமென்றால், அமெரிக்கா தாராளமாக ஆக்கிரமிக்கட்டும்!

கம்பன் விழா

“இன்றைய இளைஞர்கள் கம்பனிடம் பெறவேண்டியவற்றுள் முதன்மையானது” என்ற சுழலும் சொற்போர் நிகழ்ச்சியில் தொண்டு, காதல், தியாகம், சகோதரத்துவம், ஒழுக்கம் என்று தலைப்புக்கள். நான் தியாகத்தை பற்றி பேசவேண்டும்! பார்த்தீர்களா? நானோ தியாகம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் ஆள். இளைஞனும் கூட! சுற்றிப்பார்த்தால் எல்லோரும் விலை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! ஆக பேசிடலாம் என்று ஒரு தைரியம் வந்துவிட்டது. வந்தீர்கள் என்றால் அது இன்னமும் கூடும்! எங்களுடையது காலை அமர்வு!

540906_202336559894223_17316373_n
மாலை அமர்வில் “யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது? என்ற தலைப்பில் கைகேயிடமா? இலக்குவனிடமா? கும்பகர்ணனிடமா? என்று பட்டிமன்றம். தலைப்பை பார்த்தபோது ஆச்சர்யமோ ஆச்சர்யம். இருபது வருடங்களுக்கு முன், குட்டிச்சிறுவனாக, நல்லை ஆதீனத்தில் கேட்டு ரசித்த பட்டிமன்றத்தின் தலைப்பு இது. கொல்லைப்புறத்து காதலிகளில் வந்திருக்கிறது. அன்றைக்கு அது இரண்டு அமர்வு மன்றம். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது, கீழ் நீதிமன்றில் இலக்குவன் அணி விலக்கப்பட, கும்பகர்ணனா, கைகேயியா என்று மேல்நீதிமன்றத்தில் வாதிட்டார்கள். ஜெயராஜ் அனல் கக்கியபடி விவாதித்தாலும் கைகேயி அணியே வென்றது. என்னடா இது, ஜெயராஜ் தோற்றுவிட்டாரே என்று, பில்லா2 படுதோல்வியில் துவண்டு போய் கிடக்கும் அஜித் ரசிகர்களை போல கண் கலங்கிவிட்டது. பத்துவயது.
அப்படி தன்வசமிழந்து இலக்கியத்தை ரசிக்கும் சிறுவர்களை அண்மைக்காலத்தில் காணமுடியவில்லை. தமிழன் எத்தனையாம் நூற்றாண்டில் முதன் முதல் ஒண்ணுக்கு போனான் என்று யாரோ ஒரு ஓணான் போட்ட ஸ்டேடசை ஷேர் பண்ணிக்கொண்டு ம்கூம் ..ஆனாலும் கம்பன் விழாவுக்காகவே விமான டிக்கட் எடுத்து சுகிந்தன் அண்ணாவும், வைகுந்தனும் சிட்னி வருகிறார்கள். ரசனை!
ஓரளவுக்கேனும் தமிழை, இலக்கியத்தை, நாலு வரிக்கவிதையை ரசிக்க முடிகிறது என்றால் அதற்கான பொறி ஏற்படுத்தியது அகில இலங்கை கம்பன் கழகம் தான். இன்றைக்கு ஆஸ்திரேலியாவில், குளிரில், கம்பன் விழாவில் தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா, ராமலிங்கம் என்றெல்லாம் பலர் பேசப்போகிறார்கள். ஆனாலும் டியூஷன் முடிஞ்சு வீட்ட போய், அவசர அவசரமாக வீட்டுப்பாடம் செய்துவிட்டு, வேட்டியை சுத்தியும் சுத்தாமலும் சிவன் கோயிலுக்கு ஓடி, சாமி வசந்தமண்டபத்துக்கு போன பிறகு, ஜெயராஜ் சுத்திக்கும்பிட்டுவிட்டு ஆரம்பிப்பார்.
“எல்லாம் வல்ல, எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற்கொண்டு வணங்கி”
ப்ச்.. யார் என்ன பேசினாலும், அந்த இளம் வயதில், இரவு தன்மையான சுடுமணலில் இருந்து, ஜெயராஜ் பிரசங்கம் கேட்பது போல வருமா என்ன? ... யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் ..போ!
உடல் பனிவிழும் தேசத்தில் என்றாலும்
மனமின்னும் முற்றத்து மாமரத்தை சுற்றியே
அந்தரிப்பதை அறிந்துகொண்டேன்
- புதுவை இரத்தினதுரை!

கந்தசாமியும் கலக்ஸியும்!

கதையில் பல லொஜிக்குகள் இடிக்குது, இப்படியெல்லாம் வீதி போடுவார்களா? மனிதர்களுக்கு தெரியாமல் போகுமா? பிரபஞ்சத்தில் இவ்வளவு விஷயங்கள் நடக்கும்போது நமக்கும் கொஞ்சமேனும் தெரியாமல் இருக்குமா? அட ஒளியை விட வேகமாக போகமுடியுமா? என்று கேட்பவர்களுக்கு, அப்படி ஒரு வரம்புக்குள் யோசித்திருந்தால் இன்றைக்கு அணுவை அவ்வையார் மட்டுமே துளைத்திருப்பார் பாய்ஸ்!
இந்த Flash வீடியோ, பிரபஞ்சத்தில் நாங்கள் எத்துனூண்டு மொக்கை மாட்டர் என்பதை கோடி காட்டும். நகர்த்தி பாருங்கள்.சிங்களத்து சிந்துகள்!

சிங்கள இசை என்பது படு மோசமாகவே பல ஆண்டுகளாக இருந்துவந்தது. ஆ ஓ என்றால் பைலா போட ஆரம்பித்துவிடுவார்கள். “கள்ளுக்கடை பக்கம் போகாதே” தான் இலங்கையின் தேசியகீதம் என்று நினைத்து சந்தோஷமாக பாடிக்கொண்டு வேறு இருந்த காலம் அது. அப்புறம் சுராங்கனி. சிங்களத்தில் ஓரளவுக்கு கஸல் சார்ந்த அமரதேவா பாடல்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் எனக்கு கர்ணகொடூரம் அது! மிக ஸ்லோவாக தமிழில் இல்லாத வA சத்தத்தில் அவர்கள் பாடும்போது தாங்கேலாது.
இந்த சூழ்நிலையில் தான் 2000ம் ஆண்டளவில் பாத்தியாவும் சந்தொஷும் அறிமுகமாகிறார்கள். கிட்டத்தட்ட புயல் தான். கொஞ்சமே ரகுமானின் nuances களை புரிந்து தந்ததோ என்னவோ, இவர்கள் அல்பங்கள் அடுத்தடுத்து ஹிட். ஹிட்டுக்கு முக்கிய காரணம் இவர்களின் கொம்போசரும் தான். ஸ்ரீ சியாமளங்கன். பிரபலமான கர்னாடக இசைப்பாடகி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் மகன். இவரின் இசை கோர்ப்பில் ஒரு நேர்த்தி இருக்கும்.
உடனே நினைவுக்கு வரும் ஈழத்து இசையமைப்பாளர்கள் பிருந்தன், நிரு மற்றும் சியாமங்களன் போன்றவர்களில் பொதுவாக ஒரு ஒற்றுமை. இவர்கள் பியானோவையும், வயலினையும் தனித்து தெரியும்படியான ரொமான்டிக் நோட்ஸ்களில் பயன்படுத்துவார்கள். அங்கே ஹார்மனியோ, கோரசோ இருக்காது. வசதி குறைவு கூட காரணமாக இருந்தாலும், கிளீனான ஒலியமைப்பும் சேர, பாட்டு DSLR macro lens இல் படம்பிடிக்கப்படும் தண்ணீர் துளி போல துல்லியமாக கேட்கும். ரம்மியமும் தான்!
கிரி கோடு தான் சிங்கள இசையை இன்றைக்கு மற்றைய மொழிக்காரரும் திரும்பி பார்க்க வைத்த பாடல். புல்லாங்குழல், கிட்டார், பியானோ … துளியளவு சோகத்துக்கு மெல்லிய வயலின் … கடந்த பத்துவருடங்கள் சிங்கள இசையின் பொற்காலம்!

விடியவில்லை!


art-353-Bikini-Burqa-Beach-300x0


எதை எடுக்க? எதை மறைக்க?
தெரியவில்லை
அவை உடைக்க, அது உரைக்க
உறைக்கவில்லை
வலு பிறக்க கழு இறக்க
முடியவில்லை
கரை உடைக்க, தளை அகற்ற
விடியவில்லை


There is one more thing!

வியாழமாற்றம் சற்றே தேங்குவதாக தோன்றுகிறது. ஒரே பாணியிலான எழுத்து. நல்லதல்ல. அண்ணே வர வர மொக்கையாக போகுது என்று கேதா சொல்ல தொடங்கிவிட்டான். மீறியும் அழகாக பொப் டிலானை அறிமுகப்படுத்தினால், ஆடியமாவாசைக்கு அப்பளம் எடுக்க கூட ஒரு காக்காவும் காணோம். அயர்ச்சி!
சயந்தன் சொல்லாவிட்டாலும், Yarl IT Hub விஷயங்களில் என் பங்களிப்பு போதாது என்பது தினமும் உறுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர், மிகவும் மதிக்கும் நண்பி ஒருவரின் பிறந்தநாள். மறந்துவிட்டேன். நேற்று ஜூலை பதினேழு, எனக்கு அவன் மகன் முறை. ஒருபோதும் மிஸ் பண்ணியதில்லை. பண்ணிவிட்டேன். அக்கா படிச்சு படிச்சு சொல்வது தான், ஆனால் எதுக்குமே ஒரு ஆஸ்திரிய இளவரசன் சம்பவம் தானே Tip of the iceberg. இன்று கஜன், எப்படி மிஸ் பண்ணலாம் நீ? என்று கேட்ட கணம்.
வியாழ மாற்றம் இந்த வாரத்துடன் இடை நிறுத்தப்படுகிறது!


Contact Form