வியாழமாற்றம் 13-12-2012 : யாழ்ப்பாண கம்பஸும் அரசியலும்

Dec 13, 2012

யாழ்ப்பாண கம்பஸும் அரசியலும்!
நவம்பர் இருபத்தேழு, யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி, விளக்கீடு எல்லாமே முடிந்து மூன்று வாரங்கள் ஆகி எங்கள் கவனமும் பாரதி, சூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு திரும்பிவிட்டது. நடந்த களேபரத்தில் பலர் கைது செய்யபட்டு இன்னமும் நான்கு மாணவர்கள் உள்ளே இருக்கிறார்கள். மாணவர்கள் இவ்வாறு அரசியலில் இறங்குவது தேவையில்லாத விளைவுகளை உருவாக்கும் என்றும் படிக்க வந்தவர்கள் படிப்பை மாத்திரமே பார்க்கவேண்டும், போராட்டங்களில் இறங்க கூடாது என்றும் ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு புறம் சாதாரணமாக மாவீரரை நினைவுகூர்ந்து மெழுகுதிரி ஏற்றியதை புரட்சியின் முதல் வெளிச்சம் என்று கதை கட்டி துலாவி தொங்கலாமா என்று நுங்கெடுப்பவர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். கலங்கிய குட்டையில் ஏதாவது மீன் அகப்படுமா என்ற ஆர்வம் தான்.

இருக்கும் சூழ்நிலையில் கைது செய்யப்படுவோம், அடி வாங்குவோம், டேஞ்சர் என்று தெரிந்தும் எந்த சக்தி இந்த மாணவர்களை இயக்குகிறது?
559758_10151275107071037_1463359766_n
1987/1988 இருக்கலாம். நாங்கள் வாழ்ந்த வீடு யாழ்ப்பாண கம்பசுக்கு நேர் முன்னே இருந்தது.  அப்போது கம்பஸ்காரருக்கு இந்திய இராணுவத்தோடு ஏதோ ஒரு முரண்பாடு. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக கூடி ஊர்வலம் போகிறார்கள். நான் சின்ன பெடியன். அம்மா “உள்ளே போய் புத்தகத்தை எடுத்து படி” என்று திட்டியதையும் பொருட்படுத்தாது மதில்புறமாக கதிரையை வைத்து எட்டி நின்று விடுப்பு பார்த்தேன். பரோல் அணி குவிக்கப்பட்டு ஒரே பதட்டம். கொஞ்ச நேரத்தில் எங்கிருந்தோ இரண்டு சல்லிக்கற்கள் பறந்துவர, துவக்குச்சூடு, சல்லிக்கற்கள் பாறைக்கற்கள் ஆகி, கூட்டம் கலைந்து ஓட, எங்கள் ஒழுங்கை வழியாக அண்ணாமார்கள் தலை தெறிக்க ஓடுவதும் மீண்டும் திரும்பி வந்து கல் எறிவதும், அம்மா உள்ளே இருந்து கத்த, நாங்கள் எல்லோரும் கக்கூஸ் ப்ளட் கீழே போய் ஒளிந்துவிட்டோம். அடுத்த நாள் காலைப்பத்திரிகையில் சத்தியேந்திரா அண்ணா சுடப்பட்ட தலைப்புச்செய்தியோடு முதற்பக்கத்தில் அவரின் போஸ்டல் ஐடெண்டிகார்ட் படம் வந்தது, இரெண்டே நாளில் நான்கு அஞ்சலிக்கவிதைகள், பகிஷ்கரிப்பு ஹர்த்தால், இன்னொரு ஐம்பது மாணவர்கள் தத்தமக்கு பிடித்த இயக்கங்களில் இணைய,  அடுத்த இருபத்ததைந்து வருடங்களுக்கு இதே கதை. பெயர் தான் ரஜனி திரணகம, சிவரமணி, தர்ஷாந்த் என அவ்வப்போது மாறும். நானும் கக்கூஸ், பங்கர், கட்டிலுக்கடியில் என்று மாறி மாறி ஒளிந்து ஒளிந்து பார்த்து வளர்ந்துவிட்டேன்.
vasuki jeyasankar_evolution of manhood
என்னைக்கேட்டால் மாணவர்களின் தீவிர சிந்தனையை கட்டுப்படுத்த முடியாது என்றே சொல்வேன். கம்பஸுக்குள் நுழைந்தவுடன் எங்கிருந்தோ இருந்து ஒரு ஜிவ்வு ஏறிவிடும். கம்பஸ் எடுபட்டு விட்டதால், நமக்கும் சமூகப்பொறுப்பு வந்துவிட்டது என்ற சிந்தனையாக இருக்கலாம். மற்றவர்களை விட நாங்கள் அறிவாளிகள் என்ற சிந்தனை, இருபதுகளுக்குள் நுழைந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களை பரீட்சிக்கும் எண்ணம், கூட்டமாக இருப்பதால் கிடைக்கும் சக்தி என பல காரணங்கள். அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதும், எல்லோருக்குமே இருக்கின்ற தோற்றுப்போய்விட்டோமே என்ற உணர்வும் இலகுவில் ஜுவாலையாக கூடியது. முன்னமும் கூடியது. இப்போதும் கூடுகிறது. தடுக்கமுடியாது. ஆனால் பொறுப்பானவர்கள் நெறிப்படுத்தலாம் அவ்வளவே. நிஜமான கவலையுடன் தத்தம் அறைகளில் விளக்கேற்றியவர்களை நடு இரவில் புகுந்து அடித்தது முட்டாள்தனமான காரியம். சொன்னாபோல, அன்றைக்கு எந்த தமிழனின் சாமியறைக்குள் நுழைந்திருந்தாலும் அடிக்கவேண்டியே வந்திருக்கும். சில ஆதாரமான உணர்வுகளை ஆயுதங்களோ, தார் வீதிகளோ, கிரிக்கட்டோ மாற்றிவிட முடியாது…. சுயத்தை.
நான் மொறட்டுவவில் படிக்கும்போது இந்த ஜிவ்வு வந்ததா என்று கேட்டால். ம்ஹூம். கட்டுநாயக்கா தாக்குதல் சமயம் ஹொஸ்டலில் பாத்ரூம் போவதற்கு கூட தனியாக போகாமல் கஜனோடு போனவன் நான். போராட்ட உணர்ச்சியெல்லாம் வெளிநாடு போன பின்னர் சாவகாசமாக பார்த்துக்கொள்ளலாம் என்று என் ஜிவ்வுகளை ஒத்திவைத்துவிட்டேன். அதனால் தானோ என்னவோ அந்த நான்கு மாணவர்களை பார்க்கும் போது பதட்டமாக இருக்கிறது. மற்றும்படி சரி பிழை சொல்லும் தகுதி கிடையாது. சொன்னாலும் கேட்கமாட்டார்கள். கேட்டிருக்கவும் மாட்டேன்.

சீதையும் மனீஷா கொய்ராலாவும்
சென்ற வியாழமாற்றத்தில் கம்பன் விழாவில் பேசப்போவதாக சொல்லியிருந்தேன் இல்லையா. ஆமாம் பாஸ், ஆறு மாசத்துக்கு முன்னர் தான்! பேச்சின் நடுவில் சீதை அசோகவனத்தில்  இருந்து மீண்டு யுத்தத்தின் பின் இராமனை காணும் காட்சி. விளக்கவேண்டும். கம்பர் கவிதை. நானெல்லாம் எம்மாத்திரம்?
“போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து”
என்று ஓரிடம். தன்னைவிட்டு போன உயிரை பார்த்த பொய் உடலானது எப்படியும் அந்த உயிரை திரும்பி பற்றிவிடவேண்டும் என்று துடிக்குமாம். அப்படியே லக்கி ப்ரைஸ் அடித்து பற்றிவிட்டால் அந்த உடலின் முகத்தில் ஒரு மலர்ச்சி வருமாம்.. சிக்கென பிடித்தேன், எங்கெழுந்தருளுவதினியே என்பார் மாணிக்கவாசகர். சீதையின் முகம் இராமனை போர்க்களத்தில் பார்த்தபோது அப்படி இருந்தது என்கிறான் இந்த கம்பன்.  ஜீனியஸ்.
sita-requests-rama-to-fetch-illusory-golden-deer-CH74_l
மேடையில், இதை விளக்கும்போது ஏதோ குறைவது போல. சபை வேறு “அப்பிடியா தம்பி .. சீதை ரொம்ப பீல் பண்ணீட்டாப்ல?” என்று வானிலை அறிக்கை பார்ப்பது போல ரியாக்ட் பண்ணிக்கொண்டிருக்க .. எங்கிருந்தோ எனக்கு ஸ்ட்ரைக் பண்ணி, பம்பாய் படத்தில் அரவிந்தசாமியை பார்க்கவென ஓடிவந்த மனீஷா கொய்ராலா போல சீதை இராமனை பார்க்க ஓடிவந்தாள் என ஒரு பிட்டு போட்டேன். கைதட்டு விசில் பறந்தது. மூன்றாவது வரிசையில் இருந்த தாத்தா ஒருவர் பக்கத்தில் இருந்த பாட்டி முறைத்ததையும் கவனிக்காமல் தட்டிக்கொண்டிருந்தார். நடுவர் “உனக்கு வேறு உதாரணமே கிடைக்க இல்லியா?” என்று லொள்ளு பண்ண, தாத்தா இன்னமும் வேகமாக தட்டினார்.
kuchi
நான் சொன்னது கொஞ்சம் லொள்ளு என்றாலும் சொன்ன காட்சியின் படலம் என்னவோ ஒன்று தான். மனீஷா தன் பர்தா நங்கூரத்தில் சிக்கிவிட, அதை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு ஓடிவருகிறார்.  அந்த உணர்வை வைரமுத்து சொல்லும் விதம் இருக்கிறதே.


நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே..
நான் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே..
 
 
 
இது சீதைக்கும் பொருந்தும். சினிமா உதாரணம் கூட்டத்துக்கு புரியும் என்றதாலேயே அந்த பிட்டை போட்டேன். ஆனால் கூட்டம் கைதட்டியதுக்கு காரணம் சீதையோ அந்த உணர்வோ அல்ல. ஒரே காரணம் ஓடிவரும்போது குலுங்கிய மனீஷா மார்புகள் தான்.  நானும் அதை நினைத்திருக்காவிட்டால் அந்த இடத்தில் சொல்லியிருப்பேனோ என்பது கூட சந்தேகம் தான். இதே கூட்டம் சம்பந்தரின் “செப்பிள முலைநன் மங்கை ஒருபாகம் ஆக  விடையேறு செல்வன் அடைவார்” என்ற பதிகத்தை பாடும்போது கோயிலில் என்ன யோசித்திருக்கும் என்று நினைக்கும்போது … தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. நாவுக்கரசராலோ, சுந்தரராலோ இத்தகைய பதிகங்களை பாட முடியவில்லை. முடிந்தது சம்பந்தருக்கு தான். அவர் சிறுபிள்ளை.

இந்த வார புத்தகம் : iWoz
அப்பிள் நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியாக்கின் சுயசரிதம்.  இங்கே அவுஸ்திரேலிய நூலகம் ஒன்றில் வெட்டியா நேரம் போக்காட்டாலாம் என்று நுழைந்த நேரத்தில் கண்ணில் பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்கவைத்த புத்தகம்.
images
ஸ்டீவ் ஜொப்ஸ், வோஸ்னியாக் இருவரும் நண்பர்கள் என்பதையே நம்ப முடியவில்லை. நேர் எதிரானவர்கள். May be that’s why it worked well. வோஸ்னியாக் நேர்மையான, introvert IT geek. தந்தை பனிப்போர் காலத்து அமெரிக்க விண்வெளியியல் நிபுணர்.  நான்கு ஐந்து வயதிலியே இலத்திரனியல் பொருட்களோடு விளையாடும் சந்தர்ப்பம். பதின்ம வயதில் HP வேலை. ஸ்டீவ் ஜொப்ஸ் சந்திப்பு, குட்டி குட்டி ப்ரொஜெக்ட்களில் இருந்து ஆரம்பித்து, மைக்ரோ ப்ரோஸசர், இன்டர்கிரேட்டட் ப்ரோஸசர். PROM என ஆச்சர்யங்களை செய்து Apple I கணணி மூலம் பணம் பார்த்து Apple II மூலம் மில்லியனையர் ஆனாலும் வோஸ்னியாக்குக்குள் இருந்த, இலத்திரனியல் பொருட்களை ஆர்வத்தோடு விளையாடும் குழந்தை இறுதிவரை வளர்ந்து பெரியவனாகவேயில்லை. அதனால் உயர் பதவிகளை மறுத்து தொடர்ந்து எஞ்சினியராக வாழுந்து ஒரு கட்டத்தில் மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியராக போய் … இன்றைக்கும் எஞ்சினியராகவே இருப்பது, ஆளாளுக்கு passion எப்படி மாறுபடும் என்பதை புரிந்து கொள்ள உதவியது.
Yarl IT Hub, எப்படிப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒரு இடத்தில் அட்வைஸ் பண்ணுகிறார்.
733384-20120514woz2"Most inventors and engineers I've met are like me--they're shy and they live in their heads. They're almost like artists. In fact, the very best of them are artists. And artists work best alone--best outside of corporate environments, best where they can control an invention's design without a lot of other people designing it for marketing or some other committee."
வாழ்க்கை முழுதும் ப்ரோகிராமிங் செய்ய தான் எனக்கு விருப்பம். ஒரு ப்ரோப்ளத்தை தனியனாக ஜாவாவில் எழுதி தீர்ப்பது கொடுக்கும் சந்தோசம் எந்த மானேஜ்மென்ட் வேலையிலும் கிடைக்காது என்று நான் சொல்லும்போதெல்லாம் அலுவலகத்தில் ஆச்சர்யத்துடன் ஐந்துவை பார்ப்பது போல பார்ப்பார்கள். சம்பளம் முக்கியம் தான். ஆனால் முழித்திருக்கும் வாழ்நாளில் அரைவாசி நேரம் செய்யும் வேலை, மனதுக்கு சந்தோஷமாக முதலில் இருக்கவேண்டும். “என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?” என்று சுசீலாவும் சீர்காழியும் பாடுவதை இயர்போனில் கேட்டுக்கொண்டு ஜொலியாக செய்யும் ப்ரோகிராமிங் வேலை அப்படிப்பட்டது. டிவைன்.
மனம் ஓரிடத்தில் நிலைக்காது பலவித சிந்தனைகளிலும் போலிகளிலும் நிஜங்களிலும் அலை பாய்வதேன்? நான் ஏன் “காடு திறந்து கிடக்கிறது” என்றெல்லாம் எழுதுகிறேன் என்ற சிக்கலான கேள்விகளுக்கும் ஓரிடத்தில் வோஸ்னியாக் வோர்ட்ஸ்வோர்த்தை மேற்கோள் காட்டி பதில்சொல்கிறார்.
"A mind forever voyaging through strange seas of thought...alone."
Ouch!

இந்த வார பாடல்
டிசம்பர் மாதம் என்றாலே இசை சீசன் தானே. “உன்னைக்காணாது நான் இன்று நான் இல்லையே” என்று கோபியர் ஏக்கத்தை சங்கர் மகாதேவன் சொல்ல, “நீ விழுவேன்னு வெளக்கென்ன ஊத்திகிட்டு முழிச்சிருக்கேன் நான் அரைகிறுக்கன்” என்று ரகுமான் ஆச்சர்யப்படுத்துகிறார். “வாங்கிப்போன என் இதயத்தின் நிலைமை என்னடா? தேங்கிப்போன ஒரு நதி என இன்று நானடா!” மெட்டின் ஓர்மம் இப்போது தான் எனக்கு புரியவே ஆரம்பிக்கிறது.  இது எல்லாமே இருக்கிறது என்று நான் பேசாமல் விட்டிருக்கலாம். விஷயம் தெரியாமல் ஒரு பாடலை நேற்றிரவு கேட்க ஆரம்பித்தது சிக்கலாக்கிவிட்டது.

 
வசந்த் படம், கண்ணை மூடிக்கொண்டு பாட்டை நம்பி கேட்கலாம் என்று ஆரம்பித்தது. “ஆகா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே” என்று ஆரம்பிக்கும் பெண் குரல் என்னத்த சொல்ல?
ஏதோ ஒரு படத்தில் ஒரு பேய் தோளிலேயே இருந்து ஒருத்தனை நச்சரித்துக்கொண்டு இருக்குமாம். அவன் போகுமிடமெல்லாம் சுமையாய் அதுவும் கூட போனதாம். இன்றைக்கு அப்படி இருந்தது. ரயிலில், காரில், அலுவலகத்தில், நடக்கும்போது, டீ ஊற்றும்போது, இப்போது எழுதிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி தோளை திரும்பிப்பார்க்க வைக்கிறது. கஜனிடம் கேட்டால் அது “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்” என்கிறான். எனக்கென்றால் “மேகம் வந்து போகும்” போல தோன்றுகிறது. எது எப்படியோ தயவு செய்து ஐந்து தடவைக்கு மேல் கேட்டுவிடாதீர்கள்.
 

உஷ்ஷ்!
3613722863_4181c9180e_zயாருமே இல்லாத தருணங்களில்
பேசிப்பேசியே கொல்கிறது
மௌனம்!


&&&&&&&&&&&&&&&&Contact form