வியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே

Dec 20, 2012

தண்ணியோ கிணற்றினிலே!
399720_476429895720561_448173863_nவெண்ணை போல் உடல் உனக்கு.
வெளி உலகு துயில் கிடக்கு.
தண்ணியோ கிணற்றினிலே! தாகமோ,
தனிமையிடை போய்த் துயின்றால், போகுமோ?
கொஞ்சம் சறுக்கினால் கூசிழிவாக போய்விடக்கூடிய கவிதை. கவிதையின் அடுத்தபக்கம் சறுக்கியே விட்டது! இறுதியில்!


வரவு எட்டணா செலவு பத்தணா!
இன்றைக்கு மதியம் நிம்மதியாக சாப்பிடலாம் என்று ப்ரேக் ஏரியாவில் போய் இருந்தால் பீட்டர் ஹாய் என்றவாறே ஹெரால்ட் சன்னை தூக்கியவாறு முன்னே வந்து உட்கார்ந்தான். புட்டும் மாசிக்கருவாட்டு சம்பலும், “நாறுமோ” என்ற பயத்தில் கரண்டியால் மெதுவாக எடுத்து ஒரு வாய் உள்ளே வைத்திருக்கமாட்டேன். “அது என்ன பிஸ்கால் கிளிப்? சொல்லேன்” என்றான். கிழிஞ்சுது. எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவனுக்கு புரியும்படியாக இதை விளங்கப்படுத்துவது சீவன் போற வேலையாயிற்றே என்று கரண்டியை கீழே போட்டுவிட்டு ட்ரை பண்ணினேன். தமிழில்.
images
Fiscal cliff என்ற பதம்(அர்த்தத்தோடு தமிழ்படுத்தினால் ‘பொருளாதார குத்துகரணம்’?)  தற்போதைய அமெரிக்க பொருளாதார வட்டாரங்களில் கடித்து துப்பப்படும் வார்த்தை. அந்த விஷயத்துக்கு போக முதல் surplus(மிச்சம் பிடிப்பு), deficit(பற்றாக்குறை), recession (பொருளாதார மந்தம்) போன்ற பதங்களை கொஞ்சம் பழக்கப்படுதிக்கொள்வோம். ஒன்றுமில்லை, செலவை விட வருவாய் அதிகமென்றால் அது surplus. இல்லையா? சோக்காளியா? வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனாவா? அந்த துந்தனாவை தான் வெள்ளைக்காரன் deficit என்கிறான்.
அரேபியா நாடுகள், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி எல்லாமே surplus உள்ள நாடுகள். பணம் மிஞ்சிப்போய் கிடக்கிறது. அதற்கு பல காரணங்கள். அளவுக்கதிகமான வருவாய் (எண்ணெய் வளம், நிலக்கரி, உற்பத்தி திறன்),  அல்லது குறைந்த செலவுகள்(அரேபிய நாடுகள்), சனத்தொகை குறைவு(ரஷ்யா, சுவிட்சர்லாந்து), பணத்தை சரியான வழியில் பயன்படுத்த தெரியாமை(ரஷ்யா). ஆனால் பெரும்பாலான பணக்கார நாடுகளின் பட்ஜெட்டுகள் பற்றாக்குறையிலேயே போய்க்கொண்டிருக்கின்றன. பிரான்ஸ், இங்கிலாந்து, அமேரிக்கா .. எல்லா நாடுகளுமே. முக்கிய காரணம், மக்கள் தொகை அதிகம், வாழ்க்கைதரம் அதிகம், அதற்கேற்ற வருவாய் இப்போது இல்லை. அகலக்கால் + வாழ்ந்து கெட தயாரில்லை. விளைவு நிலைமை இன்னமும் மோசமாகிறது.
இப்போது deficit அதிகமாக அதிகமாக, அரசிடம் பணம் இருக்காது. அங்கே பணம் இல்லை என்றால், மக்களிடமும் இருக்காது. கொம்பனிகளிடமும் இருக்காது. வேலைவாய்ப்பு அம்போ. சாமான் வாங்க காசு இராது. நேற்றுவரை மியூசிக் சிடி வாங்கியவர்கள், ஓஸியில் டவுன்லோட் பண்ண ஆரம்பிப்பார்கள். அப்பிள் வாரம் பத்து வாங்குபவர்கள் மூன்றாக குறைப்பார்கள். மோர்ட்கேஜ் கட்ட முடியாமல் வீடு விற்பார்கள். வீடுகள் விலை குறையும். விற்றாலும் இலாபமில்லை. வீட்டின் பெறுமதி குறைந்து வங்கிக்கு பணம் கட்டவேண்டி இருக்கும். கொம்பனியில் கோஸ்ட் கட்டிங். வேலை போகும். மனைவி பணம் உள்ள மேலதிகாரியை பார்த்து பல்லிளிப்பாள். ட்ரக் டிரைவர்கள் ஐம்பது டொலர்காரியை விட்டுவிட்டு பத்து டொலர்காரியுடன் படுப்பார்கள். எய்ட்ஸ் பெருகும். வியாபாரம் படுக்கும். குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும்.  எல்லாமே சீட்டுக்கட்டு போல குலையும்… விளைவு? chapter 11, bankruptcy, recession என்று பல ஆங்கில வார்த்தைகள் நாட்டிலே சரளமாக புழக்கத்தில் வரும். கலாஸ்!
4a684f71aa16e4c361f0d1977b42e2c8
அமெரிக்கர்களுக்கு இந்தப்பயம் கடந்த இரண்டு வருடங்களாக பரவ ஆரம்பித்துவிட்டது. Deficit ட்ரில்லியன்கள் கணக்கில் இருக்கிறது. கிளிண்டன் காலத்தில் surplus இல் இருந்த நிதி நிலைமை, புஷ் வந்து நாசப்படுத்தினார். காரணம் குடியரசு கட்சியின் கொள்கைகள். அவர்கள் எப்படி வருவாயை அதிகரிக்கலாம் என்று பார்ப்பார்களே ஒழிய செலவை குறைக்கமாட்டார்கள்.  கம்பனி வரியை  இல்லாதொழிப்பார்கள்.  எல்லா வசதியும் செய்கிறேன். நீ பிஸ்னஸ் நடத்து என்பார்கள். ஆனால் செப்டம்பர் 11, சீன, யூரோ, ஆசிய பொருளாதாரங்கள் என்று எல்லாமே கழுத்தை திருக, வருவாய் குறைந்தது. புஷ் என்ன செய்தார் என்றால், மேலும் மேலும் பெரும் நிறுவனங்களின் வரிகளை குறைத்தார். முதலாளிகள் வளர்ந்தால் தொழிலாளி தானாக வளர்வான் என்ற கோட்பாடு. ஈராக் மீது படையெடுத்து ரெண்டு மூன்று எண்ணெய் கிணறுகளை நிறுவனங்களுக்கு தாரைவார்த்தார். முதலாளிகள் அனுபவித்துக்கொண்டு, தொழிலாளியை சீனாவிலும் இந்தியாவிலும் குறைந்த சம்பளத்துக்கு தேட, வருவாய் அதிகரிக்கமாட்டேன் என்று அடம் பிடித்தது. யுத்தம் அது இது என்று செலவுகள் வேறு தன்பாட்டுக்கு அதிகரிக்க, விளைவு மோசமாகிக்கொண்டு இருந்தது.
ஒபாமா இவற்றை எல்லாம் பார்த்து இவ்வளவு நாளும் கையை பிசைந்து கொண்டிருந்தார். காரணம் புஷ் கொண்டுவந்த அந்த வரிச்சலுகைகள் எல்லாம் 2012 இறுதியில் தான் காலாவதியாகிறது. அதற்கு பின்னர் தான் ஒபாமா ஏதாவது செய்யலாம். ஆட்சிக்கு வந்த மறுநாளே சட்டசபையை வைத்தியசாலையாகவும், இலவச தொலைக்காட்சியை மிக்ஸியாகவும் மாற்றமுடியாது. கொங்கிரஸ் தடுப்பு போடும். ஆக ஒபாமா முன்மொழியும் புதிய சட்டமூலங்கள் அடுத்தவருடம் முதல் தான் அமுலுக்கு வரும். அது வந்தால் தான் சிக்கல். குத்துக்கரணம். fiscal cliff. எப்படியா?
ஒபாமாவின் திட்டம் இந்த பற்றாக்குறையை எப்படியாவது குறைக்கவேண்டும்.  இதற்கான ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் கொள்கைகள் சாதாரணமாக எங்கள் வீடுகளில் அம்மாமார் கடைப்பிடிக்கும் கொள்கைகள் தான். வீண் செலவை குறைத்தலும் புதிதாக வரிவிதித்தலும். இதை செய்தால் அடுத்த பத்துவருடங்களில் அமெரிக்க பற்றாக்குறை மிகவும் குறைந்துவிடும். கிரீசுக்கோ, இத்தாலிக்கோ இன்றைக்கு இருக்கும் நிலைமை வராது. கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அது நீண்டகால தீர்வு தான். நாளையை நினைக்க பயங்கரம் தான். என்ன ஆகும்? உங்கள் சம்பளத்தில் அதிகம் வரி பிடிக்கப்போகிறார்கள். கொம்பனிகள் அதிக வரிகள் கட்ட போகின்றன. வாங்கும் சக்தி குறைய போகிறது. பொருட்கள் விலை அதிகமாக போகிறது. மருத்துவம், கொம்யூனிட்டி சேர்விஸ் என்று எல்லா நலத்திட்டங்களிலும் கை வைக்கப்போகிறார்கள். deficit குறையும் தான், GDP அதிகரிக்கும் தான். ஆனால் வாங்கும் சக்தி இருந்தால் தானே வாங்குவார்கள். வாங்க கூடிய விலையில் விற்றால் தானே பொருளும் வில்படும். இரண்டுமே இப்போது தகிடுதத்தம். விளைவு மீண்டும் ரிசஷன். நாடு அதலபாதாளத்துக்கு போகலாம். அது தான் fiscal cliff! உச்சிக்கு போனால் குத்துக்கரணமாக விழவேண்டியது தான். வந்தவழி திரும்பமுடியாது. அதற்கு மேலும் போக முடியாது. Its a cliff!
அப்படி என்றால் ஏன் இதை அமரிக்கா செய்யவேண்டும்? செய்யாவிட்டால் பத்துவருடங்களில் அமெரிக்கா சீனாவிடம் சம்பளம் கொடுக்க கூட கூட பிச்சை எடுக்கவேண்டும். சீனா நிலைமை ஒன்றும் அவ்வளவு பெட்டர் இல்லை(இன்னொடு வி.ம வில்). ஆனால் recession வந்தால் சீனாவில் ஷங்காயும் பெய்ஜிங்கும் தான் கஷ்டப்படும். அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் இருக்கும் வாலிபன் கூட வருங்கால மனைவியோடு பேச போன் கார்ட்டுக்கு பத்து டொலர் செலவழிக்கவேண்டுமா இல்லை ஸ்கைப் போதுமா என்று யோசிப்பான்!
இரகசியமாக யாராவது குடியரசுகட்சியினரிடம் கேட்டுப்பாருங்கள். Deficit பற்றி கவலையே பட தேவையில்லை என்பார்கள். அப்படி ஒரு பஞ்சம் வந்தால் இரண்டு அணுகுண்டை ஈரானில் போட்டுவிட்டால் அத்தனை எண்ணெய் வளமும் கைவசம் வந்துவிடும் என்பார்கள். Survival of the fittest. இதற்கு பயந்து தான் ஒபாமாவுக்கு அவசர அவசரமாக நோபல் பரிசையும், அடுத்தடுத்து man of the year விருதும் கொடுக்கிறார்கள்.
மோரல் எதிக்ஸ், தார்மீக நெறிகள் எல்லாம் எங்கே என்கிறீர்களா? கறி அரைக்கிலோ ஈரலோட போட்டு கட்டுங்க அண்ணே.

கமரா கவிஞன்
Yarl IT Hub இணையதளத்துக்கு சில படங்கள் தேவை என்றபோது கேதா ரெக்கமண்ட் பண்ணிய புகைப்பட கவிஞன். என்னுள்ளே ஒரு கல்லை சாதாரணமாக நகர்த்திய படம்.
SAIN_2012_5890நான் இரண்டாயிரம் வார்த்தைகளில் எழுதி இரண்டு லைக்குகள் வாங்கும் கதைகளை ஒரே கிளிக்கில் சொல்கிறான். பொறாமையாய் இருக்கிறது. வீட்டில் கன்வாஸ் பண்ணி மாட்டவா? என்று கேட்க தாரளாமாக செய்யுங்கோ அண்ணே என்று அனுமதி தந்தான். An artist in the making.
மேலும் படங்களுக்கு http://www.facebook.com/ssainthan/photos_stream. பயன்படுத்த அனுமதியும், அவன் தந்தால் நன்றியும் சொல்லுங்கள். 

நீதானே என் பொன் வசந்தமும் … விஐபியும்!
“திருடா திருடா”, “காதலன்” வந்த சமயம் ரகுமானிடம் உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டபோது ரஞ்சித் பரோட் என்றார். ரகுமானின் ட்ரம்ஸ் ப்ரோகிராமர். அவர் இசையில் ஒரு படம் வருகிறது என்றவுடன், சிடி வெளியான முதல்நாளே பார்த்தி ஓடிப்போய் சன் ரெக்கோர்டிங்கில் வாங்கிவிட்டான். என்னிடம் பிளேயர் இல்லை. ஒரே ஒரு மோனோ ரேடியோ, லொக்கு லொக்கு என்று டைனமோவில் உருட்டினால், கசட் போட்டு கேட்கலாம். ஒன்றை விட்ட ஒருநாள் ஆர்மிக்காரன் ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை கரண்ட் தருவான். மொத்த ஒழுங்கையும் அந்தநேரம் பார்த்து தான் வோட்டர் பம்ப், அயர்ன் பொக்ஸ் என்று எல்லாமே போட, ஆங்காங்கே லைட் போஸ்ட்களில் மாட்டியிருக்கும் பியூஸ் எல்லாம் லோட் தாங்காமல் வெடித்து சிதறும். கசட் ப்ளே பண்ணினால் தில்லானா தில்லானா பாட்டு விடுகதையா சோகத்தில் தர தர என இழு இழுவென இழுக்கும். இந்த லட்சணத்தில் இரவில் பாட்டுக்கேட்க முடியாது. அதிகாலை ஐந்து மணியில் இருந்து ஆறரை மட்டும் இன்னொரு தவணை. அநேகமானோர் நித்திரையில் இருப்பார்கள். லோட் இருக்காது. அம்மாவுக்கு காலமை எழும்பி படிக்கபோறன் என்று அல்வா கொடுத்து ப்ளேன்டீ வாங்கி குடித்துவிட்டு ரேடியோ போட்டு கேட்டது தான் விஐபி படப்பாடல்கள்.
அது ஒரு சனிக்கிழமை. காலையிலேயே சயன்ஸ் ஹோல் வாசலில் கெமிஸ்ட்ரி மணியத்தாரின் வகுப்பு முடிந்து வெளியே வந்தால், கீர்த்தி(மன்மதகுஞ்சு) இன்றைக்கு செல்வாவில் “விஐபி” என்றான். நான் வெக்டருக்கு வேட்டு வைத்துவிட்டு சைக்கிள் எடுக்க, ஜெகன் பொட்டனி simran1அலுப்படிக்கிறது என்று எம்மோடு இணைந்து கொள்ள, ஐந்தாவது நிமிடம் மூவரும் செல்வா மினி அரங்கினுள். ஸ்டான்லி ரோட்டில் இருக்கிறது. பெரிதாக சனம் இல்லை. டவுன் கடைகளில் வேலை செய்பவர்களும், நம்மள போல வெட்டியா கொட்டிலுக்கு பீஸ் கட்டி படம் பார்ப்பவர்களும் தான். படம் தொடங்கியது. 
ஒருத்தி, படக் படக் படக்கென்று பாஸ்கட்போலை உதைத்த படியே குலுங்க குலுங்க ஓடிவந்து சூட் பண்ணிவிட்டு அப்படியே திரும்புகி…. எல்லாமே அழகாக அளவாக படைத்த கடவுள் முகத்தை மட்டும் வஞ்சம் செய்திருக்கமாட்டான் என்று குருட்டு நம்பிக்கை. கடவுள் கைவிடவில்லை, அந்த முகம். கொன்று போட்டது. அவ்வளவு அழகு. தேவதை. வாயில் ஏதோ சுனைத்தது போல தோன்ற, பார்த்தால் மூன்று இலையான்கள் ஏற்கனவே புகுந்திருந்தன. பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் ஜெகன் வாயில் இன்னமும் இலையான்கள் வரிசையாக நுழைந்துகொண்டிருந்தன. யாரடா இது? என்று கீர்த்தியிடம் கேட்டேன். சாதகமே சொன்னான். பெயர் சிம்ரன் என்றான். பெயருக்கு விளக்கம் கூட கொடுத்தான். ஞாபகம் இல்லை. படத்தில் யார் யாரோ வந்தார்கள்.  பிரபுதேவா, அப்பாஸ், மணிவண்ணன், ரம்பாவின் தொடைகள் எல்லாமே வந்தது. நத்திங் டூயிங். சிம்ரன் சிம்ரன் சிம்ரன்.
மின்னல் ஒரு கோடி ஆளை தூக்கிப்போட்டது. அன்றிரவு தூக்கமில்லை. “உலகை தழுவும் நள்ளிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே” என்றேன்.  “ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்” என்று சிம்ரன் பதிலுக்கு சொல்ல, பாட்டு தான். அடுத்தநாள் காலை சைக்கிள் தானாகவே செல்வா மினிசினிமாவுக்குள் நுழைந்தது. கீர்த்தி எனக்கு முன்னமேயே வரிசையில் நின்றிருந்தான். கண்கள் இரண்டும் குழி விழுந்து புகைந்து வீங்கியபடி. “உன் கனவிலும் வந்தாளா?” என்று கேட்டேன். சேர்ந்து பாட்டு கூட பாடினாள் என்றான். ஜெகன் காலையிலேயே சுண்டுக்குளியில் ஏதோ பாஸ்கட்போல் கோச்சிங் காமப் என்று போய்விட்டானாம். அந்த சிம்ரன் இப்போது கனடாவில். இன்றைய சிம்ரன் உருவத்தில்!
samantha-29
மதுபாலா, ஐஸ்வர்யாராயுக்கு பின் சிம்ரன் அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து, “நேருக்கு நேர்”, “நட்புக்காக”, “கண்ணெதிரே தோன்றினாள்”, “ஜோடி”, “12B”, “கமல் படங்கள்”, “கன்னத்தில் முத்தமிட்டாள்” என்று நரேந்திரமோடி கணக்காக வெற்றி மேல் வெற்றி. அதற்கப்புறம் யார் யார் வந்தாலும் ப்ச் .. சிவ சிவா சிமரன் போல வருமா? பத்து வருடங்கள் கழித்து வந்தது! சமந்தா உருவில்!
நீ தானே என் பொன் வசந்தம் சமந்தா அந்த ஜாதி.  விஐபி போலவே பாடல்கள் கேட்டு, பரிதவித்து, பார்த்தே ஆகவேண்டும் என்று முதல்நாள் ஷோ போனேன். சமந்தாவை பார்த்ததும் எல்லாமே மறந்தேன். படம் முழுக்க முழுக்க சமந்தா தான். ஜீவா சந்தானம், இளையராஜா ரீ-ரெக்கோர்டிங், கௌதம் மேனன் .. all can go to hell. சமந்தா யாதுமாகி நின்றாள்! சிரிப்பு, முறைப்பு, காதல், அழுகை .. சமந்தாவுக்காக படம் எவ்வளவு மொக்கை என்றாலும் பார்க்கலாம் போல தோன்றியது. தேவதை. ஐ மீன் வுமன்!
படம் பார்த்துவிட்டு அவசர அவசரமாக அன்றிரவே கீர்த்திக்கு கோல் போட்டேன்.
“டேய் நீதானே என் பொன் வசந்தம் பார்த்தன்”
“எப்பிடி மச்சி படம்?”
“சமந்தா சுப்பர்டா … உனக்கு ஞாபகம் இருக்குதா? .. விஐபி படத்தில ..சிம்ரனை பாத்திட்டு நாங்க நித்திரை கொள்ளாம .. அடுத்த நாளும் போய் சிம்ரனை …”
“மச்சான் ஸ்பீக்கர் மோட்ல கதைக்கிறன் .. கிளியர் இல்ல .. வை நான் பிறகு அடிக்கி…”
கட் பண்ணமுதல் அவன் முதுகில் பளீர் என்று ஒரு அடி விழுந்த சத்தம் கேட்டது. பாவம். ஏற்கனவே புண்பட்ட இலங்கை வேந்தன்!

கண்மணியாள் காதை

ஆரம்பத்தில் தந்த கவிதை. தமிழின் பாரதி கண்ணதாசன் அப்துல்ரகுமான் கியூவில் சத்தம் போடாமல் நிற்கும் எங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை. அவரின் “கண்மணியாள் காதை” என்று அறுபதுகளில் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்வை, அந்த காலத்து சாதிய, அடக்குமுறை தொழில், கலாச்சாரம் சார்ந்து சொல்லும் காவியம். ஒரு முழு வாழ்க்கை, போரின் சுவடுகள் படாத காலத்தில் யாழ்ப்பாணத்து சிற்றூரான கலட்டியை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். அவர் கவிதையை புளகாங்கிதம் செய்வது “நிற்பதுவே நடப்பதுவே” சூப்பர் கவிதை என்று சொல்வது போல. சரி விடுங்கள்.
220px-Mahakaviவெண்ணை போல் உடல் உனக்கு.
வெளி உலகு துயில் கிடக்கு.
தண்ணியோ கிணற்றினிலே! தாகமோ,
தனிமையிடை போய்த் துயின்றால், போகுமோ?
எண்ணெயோ முடிகிறதே!
எரி விளக்கோ அணைகிறதே!
புண்ணியம்-பழி அறிவாய்! போ, அம்மா!
புள் எழுப்பி நின்றனன்; போய்த் தாவம்மா!

இறுதிவரியில் கூசிழிவின் fiscal cliff இல்  முடியும் இந்த கவிதை செல்லையன் தன் மனைவியை கூடலுக்கு அழைக்கும் படலத்தில் வருகிறது. அதற்கு பிறகும் சுவாரசியம் தொடர்கிறது. வாங்கி அனுபவியுங்கள்!
இது வெண்பாவா? சீர் தளை விடுபடுகிறதே. பஃறொடை வெண்பாவாக இருக்குமோ? என்று ரிசெர்ச் பண்ணியதில் ம்ஹூம் விதி தப்புகிறது. தலைவர் தவறு செய்யமாட்டார் என்று நினைத்து மேலும் ஆய்வு செய்ததில் ஆச்சர்யம்.
இது வில்லுப்பாட்டுக்கு எழுதியதாம். சின்னமணி பல கோவில்களில் கூட பாடியிருக்கிறார் என்கிறார்கள். “புள் எழுப்பி நின்றனன்; போய்த் தாவம்மா!” என்று துணிச்சலாக கோயில் மண்டபத்தில் வில்லுப்பாட்டு பாடுவதென்றால் நிச்சயம் தர்மகர்த்தாவுக்கு தமிழிலக்கியம் சுத்த சூனியமாக தான் இருந்திருக்கும்!
&&&&&&&&&&
.


Contact form