நான்கு வருடங்களாக இப்படி பிடித்ததையும் பிடிக்காததையும் தொகுப்பது தொடர்கிறது. இப்போது பழையதை வாசித்துப்பார்க்க ஒரு வித சுவாரசியம்; 2008 இன் சிறந்த படமாகவும், இசை அல்பமாகவும் கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படத்தை குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு “பிரிவோம் சந்திப்போம்” தமிழில் ஹேராமுக்கு பின்னர் வந்த சிறந்த படம் என்று தோன்றுகிறது. Best emerging application என்று 2009 இல் Google Wave ஐ சொல்லியிருந்தாலும் அது பின்னர் டிஸ்கன்டினியூ ஆகிவிட்டது. 2010 இல் man of the year விருது அசாஞ்னேக்கு குடுத்திருந்தேன். தல ஈகுவடோர் எம்பசிக்குள் படுத்து கிடக்கிறார். சென்ற வருடம் Yarl IT Hub ஒரு சிறந்த தொழில்நுட்ப முயற்சி என்று சொல்ல, நினைத்ததற்கு மேலாக அது யாழ்ப்பாணத்தில் பல செயற்பாடுகளையும் நெட்வோர்க்கிங்கையும் உருவாக்கியது. இதை யார் யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, எனக்கொரு பெர்சனல் தொகுப்பு தான். 2012 எனக்கும் மிகவும் அமைதியாக சிம்பிளாக எந்த சிக்கலுமில்லாமல் கடந்து போன வருடம். ஒருவேளை சிக்கல்களை சிம்பிளாக எடுக்க பழகிவிட்டேனோ தெரியாது. All is well.
அரசியல்
முக்கிய சம்பவம் : சிரிய உள்நாட்டு யுத்தம்
சிரிய உள்நாட்டு யுத்தமும், அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஆயுதக்குழுக்களை அங்கீகரித்ததும் மிகமுக்கிய திருப்பம். இப்போது பஷாரின் வீழ்ச்சி என்பது just a matter of time. அதற்காக சிரிய எதிர்காலம் ஒன்றும் அவ்வளவு நம்பிக்கை தருமொன்றாக தோன்றவில்லை. ஆயுத குழுக்களுக்கிடையே சாதிய, இன, அதிகார வேறுபாடுகள் தலை தூக்கிவிட்டன. இருந்தாலும் பஷாரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரேபிய வசந்தம் எகிப்தில் தோற்றுக்கொண்டிருந்தாலும், பஷார் ஆட்சி கவிழ்ந்தால், சீன, ஈரானிய, இலங்கை போன்ற ஏனைய சர்வாதிகார நாடுகளுக்கு ஓரளவுக்கு கலக்கம் வரும். மியான்மர் அரசுக்கு அந்த கலக்கம் ஏற்கனவே வந்து கொஞ்சம் இறங்கி வந்திருப்பது சந்தோஷம்.
சிறந்த அரசியல்வாதி : ஆங் சாங் சூகி
எப்போதோ பெற்றுக்கொண்ட நோபல் பரிசுக்கான உரையை இந்த வருடம் அவர் வழங்கியபோது உதிர்த்த பக்குவம் அலாதியானது. மியான்மர் இடைத்தேர்தல்களில் மக்களின் அங்கீகரிப்பு மீண்டும் ஒருமுறை. ரோஹிங்கயா மக்கள் விஷயத்தில் சர்ச்சையான கருத்தை இவர் தெரிவித்தாலும், கத்தியின்றி யுத்தமின்றி மண்டேலாவுக்கு பிறகு ஒரு காந்தியவாதி என்று தயக்கமில்லாமல் இவரை சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக தன் புத்திசாலித்தனத்தால் ஆட்சியாளர்களை அரித்து, உலகை தன் பக்கம் எப்போதும் வைத்திருந்த அதிசயப்பெண். இவரைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஆச்சர்யப்படுத்துவார். What a woman.
துன்பியல் சம்பவம் : பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறைகள்
எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகையாளர்களின் ஒருவரான பிரெடெரிக்கா ஜோன்ஸ், கோத்தபாயாவின் மிரட்டலை அடுத்து நாட்டைவிட்டு தப்பி ஓடிய ஆண்டு இது. நடுவுநிலை பத்திரிகையான சண்டேலீடரை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தியதும், பிரெடெரிக்காவை பன்றி, அது இது என்று கெட்ட தூஷணத்தால் ஒரு நாட்டின் பாதுகாப்பு செயலர் பொதுவெளியில் சொல்லியும் கூட யாருமே எந்த கேள்வியும் கேட்காததும், ஜர்னலிசம் எந்த அளவுக்கு இலங்கையில் வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதற்கு பலத்த உதாரணம். ஈழத்தவரோடு மிகவும் நெருக்கமான மேரி கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டதும் இன்னொரு அடி. அசாஞ்னே (அவர் பத்திரிகையாளர்?) ஈக்குவடோர் எம்பஸியில் சிக்கிக்கிடப்பது இன்னொரு துன்பியல் நிகழ்வு.
கேவலமான அரசியல்வாதி : ஆத்தா அம்புட்டுதேன்!
விளையாட்டு
மிகச்சிறந்த விளையாட்டு சம்பவம் : ஒலிம்பிக்ஸ்
நேர்த்தியாக நடந்து முடிந்த விளையாட்டுகள். சுவாரசியம் குறையாத போட்டிகள். ஆஸ்திரேலியா கொஞ்சம் பின் தங்கியது வருத்தம் தான் என்றாலும் இங்கிலாந்தின் எழுச்சி சிறப்பானது.
விளையாட்டு வீரன் : ரோஜர் பெடரர்
ஓய்வு பெறவேண்டும் என்று அத்தனை வெற்று வெத்துகளும் ஆளாளுக்கு கூவிக்கொண்டிருக்கும்போது அநாயசமாக விம்பிள்டன் வென்று மீண்டும் நம்பர் வன்னுக்கு முன்னேறி அத்தனை பேர் முகத்திலும் கரியை பூசிய என் ஆதர்ச நாயகன். சல்யூட்.
விளையாட்டு வீராங்கனை : சாலி பியர்சன்
சென்ற வருடத்து என்னுடைய வீராங்கனையும் கூட! அவுஸ்திரேலிய நீச்சல் வீரர்கள் சொதப்பிவிட, மொத்த தேசமே இவரைத்தான் ஒலிம்பிக்ஸில் நம்பியிருந்தது. அத்தனை கனவுகளின் சுமையையும் தாங்கியபடி கேர்டில்ஸில் சும்மா டக் டக் டக்கென்று பாய்ந்து தங்கம் வென்ற மங்கை. 2008 ஒலிம்பிக்ஸில் சில்வர் வென்ற போது அவர் குதித்த குதியை பார்த்த நாள் முதல் நான் அவர் ரசிகன்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
சிறந்த கண்டுபிடிப்பு : ஹிக்ஸ் பொஸான்
எங்கிருந்து இந்த திணிவு வந்து சேர்ந்தது என்று எல்லா விஞ்ஞானிகளுக்கும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த மாட்டர்! இப்போது இது இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டதால், இதிலிருந்து குழப்பமில்லாமல் அடுத்தகட்ட ஆராய்ச்சிகளை செய்யலாம். எதிர்காலத்தில் சின்னதாக பூமி போன்ற ஒரு மாதிரி செய்வதற்கு கூட இந்த கண்டுபிடிப்பு பயன்படலாம். நாமெல்லாம் துள்ளிக்குதித்து கொண்டாடவேண்டிய ஆச்சர்ய விஞ்ஞானம். அலுவலகத்தில் நிஜமாகவே குதித்தார்கள். இங்கே எழுதியிருக்கிறேன்.
சிறந்த ஐடி தொழில்நுட்பம் : Windows 8 (RT and Pro)
மைக்ரோசாஃப்ட் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டத்தில் இணைந்திருக்கிறது. அற்புதமான டைல்ஸ் டிசைன் எங்களுக்கு புதுசு. Surface ஐ பார்க்க ஆசையாய் இருக்கிறது. இப்போது Surface ஐ Windows 8 pro வில் கொண்டுவரப்போவதாக சில உள்வீட்டு தகவல்கள். நிஜமானால பி.சி தலைமுறை முடித்துவைக்கப்பட்டு எல்லாமே டப்லட்டில் செய்யக்கூடியதாக இருக்கலாம். Eagerly waiting.
காமெடி விருது : Apple Maps
இப்படி ஒரு அரை அவியல் ஐட்டத்தை perfection க்கு பெயர் போன அப்பிள் வெளியிட்டது ஆச்சர்யம். இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும் இடத்தை ஐம்பத்தாறு கிலோமீட்டர் தூர பாதையில் காட்டிய அபூர்வ மென்பொருள்! மெல்பேர்ன் சிட்டி ஏரியாவில் ஒரு முகவரியை தேடியவரை எண்பது கிலோமீட்டர் தள்ளி இருந்த பூங்கா ஒன்றுக்குள் இது அனுப்ப, அடுத்தநாளே போக்குவரத்து போலீசார் வோர்னிங் குடுக்கவேண்டி வந்தது. To add injury to the wound, கூகிள் இந்த மாதம் அதன் iOS Google Maps மென்பொருளை வெளியிட, டிம் குக் கையை பிசைந்துகொண்டிருக்கிறார். 2013 இல் அப்பிளின் டிவி வெளிவராவிடில் ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் பங்குகள் படுத்துவிடும்.
திரை விருதுகள்
இந்த வருடம் வெளியான படங்களில் “நண்பன்”, “நான் ஈ”, “பிட்ஸா”, “நடுவில கொஞ்ச பக்கத்த காணோம்”, “துப்பாக்கி”, “நீ தானே என் பொன் வசந்தம்” என்று ஆறு தமிழ் படங்கள் பார்த்தாயிற்று. சென்ற வருட எண்ணிக்கையை விட இது ஒன்று அதிகம்! ஆங்கில படங்கள் ஒரு தொகை, எல்லாமே டிவிடி தான் . இந்த ஆண்டு வெளியாகிய எதுவுமே பார்க்கவில்லை. SBS புண்ணியத்தில் பல பிரெஞ்ச், ஸ்பெயின், அரேபிய படங்கள் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
சிறந்த இயக்குனர் : பாலாஜி தரணிதரா (நடுவில கொஞ்ச பக்கத்த காணோம்)
சுவாரசியமான ஸ்கிரீன் ப்ளே. பலே நடிப்பு. ஒரு சின்ன knot ஐ வைத்துக்கொண்டு திரைக்கதையை நகர்த்திய புத்திசாலித்தனம். பாலாஜி யாரென்று தெரியாது. ஆனால் கலக்கியிருக்கிறார். ஹட்ஸ் ஒப்.
சிறந்த படம் : நடுவில கொஞ்ச பக்கத்த காணோம்
சிறந்த நடிகர் : விஜய் (நண்பன்)
அழகான “Five point someone” நாவலை கடித்து குதறிய திரைக்கதை என்று த்ரீ இடியட்ஸ் மீது எனக்கு ஒரு கடுப்பு கொஞ்சம் இருந்தது. தமிழில் இது ஏற்கனவே தெரியுமென்பதால் பார்க்கும்போது உறுத்தவில்லை. சச்சின் விஜயை காணாமல் கிடந்த என் போன்றவர்களுக்கு here you go என்று அவர் கலக்கிய படம். அதே பழைய ரொமாண்டிக் மானரிசம். மைக் மோகன் போல தானும் போய்விடக்கூடாது என்பதற்காக காதல் படங்களை விஜய் கைவிட்டது எமக்கு தான் இழப்பு என்பதை படம் பார்க்க மீண்டும் புரிந்தது.
சிறந்த நடிகை : சமந்தா (நீ தானே என் பொன் வசந்தம்)
தனியாக வியாழமாற்றத்தில் ஜொள்ளிவிட்டேன். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. தேவதை.
பிடிக்காத படம் : பிட்ஸா
பேய்ப்படங்கள் பொதுவாகவே பிடிப்பதில்லை. நிஜ வாழ்க்கையில் நிறைய பேய்களை பார்த்ததோ என்னவோ, படத்தில் பார்க்கும்போது சனியன் பயமே வரமாட்டேங்குது. பார்த்துக்கொண்டிருக்கும்போது கொட்டாவி. கிளைமக்ஸில் அது வெறும் ஜோடிக்கப்பட்ட கதை தான் என்று சொன்னது எப்படி இருந்தது என்றால், பாட்ஷா படத்தின் முடிவில் ரகுவரனும் ரஜனியும் திடீரென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு நாங்க சும்மா ஒளிச்சுப்பிடிச்சு விளையாடினோம். நல்லா ஏமாந்தீங்களா என்று சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது.
ஆங்கில படங்கள் : Down Fall, Midnight in Paris
Down Fall, ஹிட்லரின் இறுதிக்காலத்தை வெளிப்படுத்திய படம் . தோற்கும் நிலையில் உள்ள அணி எப்படியான உளைச்சல்களுக்கு ஆகும் என்று சொன்ன விதம் ஏதேதோ எல்லாம் ஞாபகப்படுத்தியது . எல்லோரும் பார்க்கவேண்டியது. Midnight in Paris பற்றி விரிவாக இங்கே எழுதிவிட்டேன்.
இசை விருதுகள்
சிறந்த பாடகர் : ஏ ஆர் ரகுமான் (ஏலே கீச்சான்(கடல்), கியா ஹாய் மொகாபட், (ஏக் தீவான தா))
தல ஏதோ ஒரு ஜொலி மூடில் முதலாவதையும் பக்கா பீலிங்கோடு இரண்டாவதயும் பாடியிருக்கும். மீண்டும் மீண்டும் ஆச்சரியங்களை மாத்திரமே தந்துகொண்டிருக்கும் இசை அதிசயம்.
சிறந்த பாடகி : ஸ்ரேயா கோஷல் (சின்ன சின்ன, உருமி)
ஒரே சொல் அற்புதம். என்ன ஒரு இனிமை. இப்படி உணர்வோடு யாரால் பாட முடியும். சுசீலா, சித்ரா வரிசையில் ஜம்மென்று மூன்றாவதாக இடம்பிடிக்கும் தேன் குரலாள். கேதாவும் வீணாவும் சேர்ந்து கேட்டுப்பாருங்க அண்ணே என்று சொன்னபோது, அதிலேயே கேட்டு சொக்கிப்போய் இரண்டுநாளாய் அலையவிட்ட பாடல். Genius.
சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (நீதானே என் பொன் வசந்தம்)
தனியாக பதிவு எழுதவைத்த பாடல்கள். ராஜாங்கம் மீண்டுமொருமுறை. ரீரெக்கோர்டிங்கில் அதிசயமாக சொதப்பினாலும், பாடல்கள் அத்தனையும் முத்துக்கள். கேட்க கேட்க புதுசு புதுசாக நோட்டுகள் எட்டிப்பார்க்கின்றன. சற்றுமுன்பு எல்லாம் மீண்டும் கேட்க மண்டை விறைக்கிறது.
சிறந்த பாடல் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி (மூன்று பேர் மூன்று காதல், யுவன்)
இந்த பாடலை பற்றி ஏற்கனவே வியாழமாற்றத்தில் எழுதிவிட்டேன். எனக்கென்றே யுவன் இசையமைத்தது போல ஒரு மெலடி. உருகி உருகி கேட்க கிடைத்த தேன்.
சிறந்த பாடல் வரிகள் : சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக (நா.முத்துகுமார், நீதானே என் பொன் வசந்தம்)
அதிக தடவை கேட்ட தமிழ் பாட்டு : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
அதிக தடவை கேட்ட ஆங்கில பாட்டு : From this moment on.
அதிக தடவை கேட்ட ஹிந்தி பாட்டு : Shining in the shade in sun like a pearl.
புத்தகங்கள் & இலக்கியம்
வாசித்த புத்தகங்கள்
- வாடைக்காற்று - செங்கை ஆழியான்
- பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் - புதுவை இரத்தினதுரை
- கற்றதும் பெற்றதும் – சுஜாதா
- விடிவதற்குள் வா – சுஜாதா
- நகரம் – சுஜாதா
- கோபல்லகிராமம் - கீ ரா
- கோபல்லபுரத்து மக்கள் - கீ ரா
- காட்டாறு - செங்கை ஆழியான்
- கனக துர்கா - பாஸ்கர் சக்தி
- Hitchhikers Guide to galaxy – Douglas Adams
- Restaurant at the end of universe – Douglas Adams
- Mostly Harmless – Douglas Adams
பிடித்த புத்தகம் : Mostly Harmless, ஜே ஜே சில குறிப்புகள்
பிடித்த கவிதை : காற்றில் ஒடிந்த தளிர்கள் (கேதா)
பிடித்த சிறுகதை : துப்பாக்கி(ஜி, அந்த முடிவுக்காக!), கதையல்லாத கதைகள்(யோ.கர்ணன்)
எழுதியதில் பிடித்த சிறுகதை : காடு திறந்து கிடக்கிறது
எழுதியதில் பிடித்த கொல்லைப்புறத்து காதலிகள் : கடவுள்
எழுதியதில் பிடித்த இசைப்பதிவு : என் பதின்மத்து இளையராஜா!
ஏண்டா எழுதினோம் என்று நினைத்த பதிவு : வாரணம் மூன்று!
இந்த வருடத்து சிறந்த புகைப்படங்கள்
கீழே தந்திருக்கும் மூன்று படங்கள் பார்த்தவுடன் அடித்துப்போட்ட படங்கள். கையில் DSLR வைத்திருந்தும் ஒரு படம் கூட நான் Facebook இல் போடாததற்கு இவர்கள் தான் காரணம். மிரட்டுகிறார்கள்!
இது சயந்தன் எடுத்த படம். யாழ்ப்பாணத்து வெங்காய முளை ஒன்று. என் வீட்டில் கன்வாஸ் பண்ணி மாட்டி இருக்கும் கதை சொல்லும் படம்.
இது கேதா எடுத்த படம், நேஷனல் ஜியோகிராஃபிக் வெப்சைட்டில் போட்டிக்காக அனுப்பினான். அருமையான படம். இதற்கு ஹைக்கூ கூட எழுதினோம்.
தூண்டில் வீசும் சிறுவன்.
விண்மீன் எல்லாம் கடலில் விழுந்து
மண்புழு தேடி அலைகிறது!
இது இன்னொரு சயந்தனின் படம். கந்தசாமியும் கலக்ஸியும் தப்பித்தவறி நூலுருப்பெற்றால் அட்டைப்படமாக போடுவேன் என்று அனுமதி வாங்கி வைத்திருக்கும் படம். Thoughtful photographer.
Person Of The Year
(இம்முறை ஆளுக்கில்லை, மாட்டருக்கு)
Higgs Boson
&&&&&&&