வியாழமாற்றம் 27-12-2012 : Island of Blood

Dec 27, 2012

“முதலிரவில் அறைக்குள் நுழைந்தவுடன் அவசர அவசரமாக படுக்கையில் போய் வியாபித்து கிடந்தபடி ஏக்கத்துடன் பார்க்கும் மனைவியிடம் ஒரு ஐரிஷ் கணவன் என்ன சொல்லியிருப்பான்?”
Island of Blood

ஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.
109612-M
இப்படியான சூழ்நிலையிலேயே அனிதாவும் சியாமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். இந்திய இராணுவத்துக்கு தெரியாமல் களவாக யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை பேட்டி எடுக்கும் உயிரை பணயம் வைக்கும் பயணம். அன்றிரவு இந்திய இராணுவத்தின் நடமாட்டம் அதிகம் என்று அவர்களை புலிகள் அங்கேயே தங்க வைக்கிறார்கள். சாப்பாடு? மீனவனின் மனைவி, இருந்த காற்சுண்டு அரிசிக்குள் குட்டி கிளாக்கன் மீன் இரண்டையும், பின்பத்தியில் கிடைத்த நான்கைந்து கீரைத்தண்டையும் ஆய்ந்து போட்டு ஒரேயடியாக சோறாக்கி கொடுக்கிறாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட, அந்த பெண்ணோ அன்றிரவு பட்டினி.
The ability to share often decreases with rising wealth என்று தன்னோடு அந்த மீனவ மனைவியை ஒப்பிட்டு அனிதா எழுதும் பத்தி பல கற்களை எம்முள்ளே நகர்த்தும். யாரென்றே தெரியாமல் வீட்டுக்குள் அழைத்து, சாப்பாடு போட்டு இரண்டு வருடங்கள் பெற்றபிள்ளைகள் போல என்னையும் அக்காவையும் கொண்டாடிய வட்டக்கச்சி குடும்பம் கண்முன்னே வந்து கனக்கும். இப்படி நூலின் ஒவ்வொரு வரிகளும் பதைபதைக்கவைத்து ஆயாசப்படுத்தி ஆணவப்படுத்தி அப்புறம் எம்மை ஒரு நிலைப்படுத்தி .. Thanks a lot அனிதா.
“Island of Blood” என்ற நூலுக்கு அறிமுகம் தேவையில்லை. ஈழத்து போராட்டத்தில் சிறிதேனும் ஆர்வம் கொண்ட எவருமே படித்திருக்ககூடிய புத்தகம் தான் இது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகிய புத்தகம். கொஞ்சநாளிலேயே யாரோ ஒரு புண்ணியவான் அதை தமிழில் மொழிபெயர்த்து வீரகேசரியிலோ, தினக்குரலிலோ எழுதி வாசித்திருந்தேன். பின்னாளில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஒருமுறை கண்ணில் மாட்டியது. அந்த புத்தகத்தை பெய்ட்டாக வைத்து யார் வாசிக்கிறாங்கள் எண்டு கண்டுபிடிச்சு உள்ள போடப்போறாங்களோ என்ற பயத்தையும் ஒதுக்கிவிட்டு வாசித்து முடித்தபுத்தகம். பின்னர் இங்கே வந்து ஈபேயில் வாங்கி கட்டியணைத்துக்கொண்டு வாசித்த,  எ ஜெம்.
anita_prathap_005ஊடகவியலாளராக தான் கண்டு உள்வாங்கிய அனுபவங்களை அனிதாபிரதாப் எழுதுகிறார். இலங்கையில் தான் சந்தித்த, 83 கலவரம், ஜேவிபி கிளர்ச்சி பின்னர் நடந்த ஈழப்போர்கள், பிரபாகரனை பல்வேறு சந்தரப்பங்களில், சென்னை, டெல்லி, யாழ்ப்பாணம் என பல இடங்களில் சந்தித்து கண்ட பேட்டிகள் என 2000ம் ஆண்டுவரையான ஈழப்போராட்டத்தை ஒரு தீர்க்கமான பார்வையில் எழுதி ஆச்சர்யப்படுத்தியிருப்பார். இதே அனிதா ஆப்கானில் தலிபானோடு தலிபானாக, பர்தா அணிந்து அந்த சண்டையை கவர் பண்ணியவர். அயோத்தி மதக்கலவரத்தை பக்கத்தில் நின்று ரிப்போர்ட் பண்ணி, பால் தாக்கரேயை இன்டர்வியூ பண்ணி, பின்னர் பங்களாதேஷில் நடந்த பாரிய புயல் சேதங்களையும் உலகுக்கு நேரில் கண்டு விவரித்தவர். தேசியவிருது பெற்று மூன்றே நாட்களில் தற்கொலை செய்த சோபாவின் குடும்பத்தின் ஹளூசினேஷன் சூழலையும் பாலுமகேந்திராவின் வண்டவாளத்தையும் புட்டு புட்டு வைத்தவர். இவ்வளவு விஷயத்தையும் ஒரே மூச்சில் விவரித்திருக்கும் புத்தகம் தான் Island of Blood.
அனிதாபிரதாப் எங்கள் போராட்டம் எந்த நிலையை அடைய போகிறது என்ற ஊகத்தை அப்போதே சொல்லிவிட்டார். பிரபாகரனுடனான சந்திப்பு ஒன்றில் அவர் சொல்லிய வசனம் இது.
“If eelam finally dawned, expatriate Tamils would rejoice but by then, most Tamils in their homeland would be six feet under”
ஈழப்போராட்டத்தின் நிகழ்வுகளை பக்கச்சார்பில்லாமல் பதிந்த, நான் வாசித்த ஏனைய இரு புத்தகங்களான “முறிந்த பனை” மற்றும் “The Cage” இற்கும் “Island of Blood” க்கும் உள்ள வித்தியாசம், அனிதா ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட தமிழர் சார்பில் இருந்து உணர்வுபூர்வமாக இதை பதிவு செய்தது தான். ரஜனியின் எழுத்தில் தகவல்களின் கோப்புகளே முக்கியத்துவம் பெறுகிறது. கோர்டன் விஸ் கொஞ்சம் சாட்சியமாக பயன்படக்கூடிய தகவல்களை ஊர்ஜிதப்படுத்தி எழுதியிருப்பார். அனிதா இருபதாண்டு ஈழத்தோடு தான் கண்டு கேட்டு உய்த்து அறிந்ததை பிறழாமல் எழுதியிருக்கிறார்.
அனிதா என்ற ஊடகவியலாளரின் ஆளுமை புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கிறது. ஒரு பெண், அதுவும் துணிச்சல் நிறைந்த பெண், அவளுக்கே உரிய உணர்வுகளுடன் போராட்டங்களை பதிவு செய்யும்போது அந்த நூலுக்கு இரத்தமும் சதையும் உணர்வும் தானாகவே வந்துவிடுகிறது. நான் மிகவும் கொண்டாடும் ரசிக்கும் சமகாலத்து பெண் ஐடல்களான ஜூஹும்பா லாகிரி, மிச்சல் ஒபாமா வரிசையில் எப்போதுமே முன்னணியில் இருக்கும் லெஜெண்டரி ரிப்போர்ட்டர் இந்த அனிதா பிரதாப். தலை சாய்த்து வணங்குகிறேன்.
Island of Blood ஐ வாசிக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது.

சொதிக்கவிதை!
சும்மா சகட்டுமேனிக்கு ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கும்போது தான் திடீரென்று ஏதாவது  வைரங்கள் அகப்படும். சென்றவாரம் நண்பர்கள் சேர்ந்து ஒரு ஈமெயிலில் மாறி மாறி லொள்ளு பண்ணிக்கொண்டிருந்ததில் திடீரென்று ஒரு வைரம் வந்து விழுந்தது. எறிந்தவர் சக்திவேல் அண்ணா. கலியாணம் முடித்தாலும் தனக்கு ஸ்டில் கவிதை வரும் என்று ப்ரூவ் பண்ணுவதற்கு ஒன்றை (கலியாணத்துக்கு முன்னர் எழுதியதை!) எழுதி அனுப்பினார்!
methai-movie-pictures0151
ஆறாம்வகுப்பு தமிழ் வாத்தியார். தினமும் காலையில் மனைவி அவருக்கு சொதியும் இடியப்பமும் தான் கொடுத்துவிடுவார். அதை வகுப்பில் நன்றாக குழைத்து அடித்துவிட்டு மிச்ச சொதியை மத்தியானமும் ஊற்றி சாப்பிடுவாராம். இதால காலப்போக்கில் அவரின் நிஜப்பெயர் மறைந்து சொதியர் என்ற பெயர் அவரோடு தொங்கிவிட்டது.
ஒருநாள் சொதியர் வகுப்பில் குற்றியலிகரம் படிப்பித்துக்கொண்டு இருக்கிறார். “நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும்” என்கிறார். எங்கட சக்திவேல் அண்ணைக்கோ ஒரு அறுப்பும் விளங்க இல்ல. டவுட் கேட்கிறார். வாத்தி “நாடு + யாது = நாடியாது” என்று உதாரணத்தோடு விளக்க அப்பிடி ஒரு சொல்லு தமிழில் இருப்பதே நம்ம தலைவருக்கு தெரியாது. சோ அவரே இரண்டு சொல்லை சேர்த்து கேட்கிறார். “சேர் அப்பிடியெண்டா குண்டு + யானை சேர்த்தா எப்பிடி வரும்?”. வாத்தியும் பெடியன் இலக்கணம் பிடிச்சிட்டான் என்ற புளுகத்தில சேர்த்து சொல்ல, மொத்த வகுப்பே கொல்லென்று சிரிக்க, அவமானத்தில் சொதியர் நம்மாளை அடி பின்னி பெடலெடுத்துவிட்டார். சொதியர் மேலிருந்த அந்த கடுப்பில் அண்ணன் எழுதிய கவிதை.
"கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே
நித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்
காட்டுவாய் உன் கொதியை எம் மீது
முறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்?"
ஒருமுறை வியாழமாற்றத்தில் வெண்பா பற்றி பேசி காக்கா குருவி கூட மழைக்கு ஒதுங்காமல் போன சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் டோன்ட் கேர். மீண்டும் பார்க்கலாம்.  எனக்கு இப்போதைக்கு தெரிந்தது நேரிசை வெண்பா தான். நாற்சீரடிகள் மூன்றும், இறுதியாக முச்சீரடியும் வரவேண்டும். அதென்ன சீரடி? அடியில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரேவித அசையில் இருக்க வேண்டும்.  நேரிசை என்ற பெயர்காரணம் அதுதான். வெண்பாவில் பொதுவாக இந்த அசை ஈரசையாக(சிலர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கி சீர்வரிசை போதுமென்கிறார்கள்) இருக்கலாம். ஏனைய விதிகள் இலகுவானவை. வரிகளின் முதல் சொற்கள் எதுகையில் இருக்கவேண்டும்(AAAA அல்லது ABAB). இரண்டாம் அடியில் ஒரு தனிச்சொல், இதுவும் முதற்சொல் எதுகையோடு பொருந்தவேண்டும் .. to distract the flow. கவனக்கலைப்பான். இப்போது சக்திவேல் அண்ணாவின் கவிதையை நேரிசை வெண்பாவுக்கு மாற்றபார்ப்போம்.
“கொக்கு மூக்கனே குதிரைச் செவியனே
செக்குமாடாய் நித்தமுனக்கு சொதியாக்கும்– லொக்காவுக்கு
முன்னால காட்டாத பிரம்பை எம்
பின்னால காட்டியென்ன பயன்?
இதில் இரண்டாவது வரியில் ஈரசை தளை உட்பட பல விதிகள் பிறழ்கின்றன. திருத்த தெரியவில்லை. இதையே கொஞ்சம் புதுக்கவிதை ஆக்கலாம் என்று ட்ரை பண்ணினேன். பெண்ட் எடுத்துவிட்டது. யாராவது ட்ரை பண்ணுங்களேன்.

இந்த வார பாடல்
கிறிஸ்மஸ் சீசன் என்னும்போது ஞாபகம் வரும் விஷயம். ஆறு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் அலுவலக கிறிஸ்மஸ் பார்ட்டி. அப்போது எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் லியம் ஹேனிஸ்ஸி என்ற ஐரிஷ்காரர்.  பார்ட்டியில் அவர் தள்ளாடிக்கொண்டிருக்கும்போது நான் கேட்ட இரண்டு விஷயங்களில் ஒன்று(முதலாவது கேள்வி ஆரம்பத்திலும் பதில் இறுதியிலும்) இந்த ஐரிஷ்காரரின் இசைத்திறமை பற்றியது. அவர் சொல்ல சொல்ல ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு ஐரிஷ்காரர் வீட்டிலும் தப்பாமல் பியானோ இருக்குமாம். இசையும் சேர்ச்சும் சேர்ந்த வாழ்க்கை. இசையுலகின் ஜாம்பவான்களான U2, Boyzone, Corrs, Tenors, Westlife என பல கலைஞர்களும் குழுக்களும் அந்த தேசத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களில் முதன்மையானவர் என்று நான் கருதுவது என்யாவை. பின்னாளில் புகழின் உச்சிக்கு போன செலின் டியோனின் பாடல்கள் அநேகமானவற்றில் என்யாவின் பாதிப்பு இருக்கும். மைக்கல் ஜாக்சனின் Heal the world இல் கூட கொஞ்சமே என்யாவின் இசை தொட்டு தொட்டு. அது ஏன், ரகுமான் “Dreams on fire, Sajna” போன்ற பாடல்களை கொம்போஸ் பண்ணும்போது என்யா ஞாபகத்துக்கு வராமல் இருந்திருக்கமாட்டார். அப்படி ஒரு வற்றா ஊற்று போன்ற இசை என்யாவுடையது. ஜீனியஸ்.
இந்த பாடலை இரவு பதினோரு மணிக்கு பின்னர், மெல்லிய சத்தத்தில் தலைமாட்டில் இசைக்கவிட்டு தலைவியின் “Unaccustomed Earth” அல்லது தலைவரின் “பிரிவோம் சிந்திப்போம்” வாசித்தால் கிடைக்கும் உணர்வு அலாதியானது. கேட்டுவிட்டு அழாக்குறையாக என்னோடு வந்து சண்டை பிடிக்ககூடாது!
தேவாவை ஈயடிச்சான் கொப்பி என்று நாங்கள் எல்லோருமே நக்கல் அடிப்பதுண்டு இல்லையா. இந்த பாடலில் தேனிசைத்தேன்றல் என்யாவின் இசையை உள்வாங்கி அதை அப்படியே தமிழுக்கு மிக அருமையாக மாற்றித்தந்திருப்பார். மாற்றிய சுவடே தெரியாது. ஹரிகரனும் அனுராத ஸ்ரீராமும் பாடும்போது அதே மூட் கிரியேட் ஆகும்.  தேவா என்யாவை தான் கொப்பி பண்ணுகிறார் என்றால் அந்த தவறை திரும்ப திரும்ப செய்யலாம். ஆனால் செய்வன இதுபோல திருந்தச்செய்யவேண்டும்.

படம் இனியவளே. அனைத்து பாடல்களும் இம்மை மறுமை இல்லாத சொக்கத்தங்கங்கள். கேட்கும்போது 90களை மிஸ் பண்ணுகிறேன். ரகுமான், ராஜா, தேவா, வித்தியாசாகர், ராஜ்குமார், சிற்பி, கார்த்திக்ராஜா என்று மெலடி மேல் மெலடியா அள்ளிக்குவிந்த காலம் அது. ப்ச்!

சச்சின்
சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸ் வந்தவுடன் உடனேயே கண்ணாடி முன்னாலே ஓடிப்போய் நின்று என்னைப்பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது. பதினாறு வயதில் சச்சின் பாகிஸ்தான் போகும்போது எனக்கு ஒன்பது வயசு. தூர்தர்ஷனில் மேட்ச் போகும். ஸ்ரீகாந்த் கப்டின். மொத்த குடும்பமும் இந்தியா இந்தியா என்று அலறும். இலங்கை அணியை கண்ணாலே காட்டமுடியாது எமக்கு. அதுவும் அக்காமார்கள் எல்லாம் யாராவது இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினால் செருப்பால் அடிப்பார்கள். அவ்வளவு கோபம். ஒருமுறை கபில் தலைமையில் இலங்கை வந்த இந்திய அணியை அலாப்பி வென்றது இலங்கை. சும்மா சும்மா காலில படாமலேயே எல்பி குடுப்பாங்கள். போகும்போது கபில், நியூட்றல் அம்பயர் இல்லாதவரைக்கும் இலங்கையை இலங்கையில் வெல்லவே முடியாது என்று சொல்லிவிட்டு போனார். Irony என்னவென்றால் ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் மட்சில் இந்தியா தோற்றுவிட எங்கே தமிழர்கள் இந்தியர்களின் தோல்வியை கொண்டாடுவார்களோ என்ற கடுப்பில் இந்தியன் ஆர்மி பலாலியில் இருந்து குடியிருப்புகளை நோக்கி செல் அடிக்க தொடங்கியது! அதில கூட யாரோ ரெண்டு மூண்டு பேரு செத்துப்போயிற்றினம். மரணங்கள் மலிந்த பூமி.
3427817981_b57850fc47_z
96 உலககிண்ண ஆட்டத்தில் சச்சின் ரன் அவுட் என்றவுடன் முகம் கறுத்துவிட்டது. அப்போது நாங்கள் இருந்தது வன்னியில். மொத்த வன்னிக்குடும்பங்களும் அப்சட். கடைசியில் கல்கத்தாகாரர் ஸ்டேடியத்தை எரித்து எல்லாமே ஏறுக்கு மாறாய் நிகழ்ந்தது. 96 உலக கிண்ணத்துக்கு பின்னர் வந்த ஈழத்து தலைமுறைகள் இலங்கை அணியை ரசிக்கதொடங்கியதை ஒருவித பதட்டத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரே நிம்மதி, இந்த தலைமுறை விளையாட்டையும் அரசியலையும் என் தலைமுறையை போல போட்டு குழப்புவதில்லை! அதுவரைக்கும் ஒகே.
சச்சினின் உச்சம் 98/99/2000 காலப்பகுதிகளில். அதிலும் ஒரு ஆட்டத்தில் ஹென்றி ஒலங்கா சச்சினை ஷோர்ட் போல் போட்டு தடுமாறவைத்து ஆட்டமிழக்கசெய்வார். இறுதி ஆட்டத்தில் சச்சின் கதை அவ்வளவு தான் என்று நினைக்க, தல ஒரு ருத்திர தாண்டவத்தை ஆடிவிட்டு நிற்கும். மெய் சிலிர்க்க பார்த்த ஆட்டம் அது.
சச்சினின் பல செஞ்சரிகள், 2003 உலக கிண்ணம், அண்மையில் ஆஸியுடன் அடித்த 141, ஷேன் வோர்ன்-சச்சின் ஷார்ஜா ஆட்டங்கள், 99 உலககிண்ண கென்யா ஆட்டம். அண்டி காடிக்குக்கு அடித்த ஹூக் சிக்ஸர் என்று பலரும் அறிந்த ஆட்டங்களை விடுங்கள். பங்களாதேஷ் இண்டிபெண்டென்ஸ் கப் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் 314 ரன்கள். சேஸ் பண்ணவேண்டும். தல வந்து முதல் ஐந்தாறு ஓவர்கள் அடித்து துவைத்துவிட்டு ஆட்டமிழக்க பின்னர் கங்குலியும் ரொபின்சிங்கும் நின்று விளையாடி வென்று குடுப்பார்கள். மறக்கமுடியாத ஆட்டம் அது.
சென்றவருட boxing day டெஸ்ட் மட்சில் சச்சினின் அருமையான இன்னிங்சை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இனி கிடைக்காது. இருபத்து மூன்று வருடங்கள் சச்சின் என்ற பெயர் கூட வந்த, வளர்ந்த பெயர். அவர் ஓய்வுபெறுவது டேய் உனக்கு வயதாகிறது, ஒன்றுமே நீ இன்னும் சாதிக்கவில்லையே என்று கடவுள் சொல்லுவது போல இருக்கிறது. இப்போது ஸ்டீவ் ஜொப்ஸ் இல்லை, பில் கேட்ஸ் இல்லை, மைக்கல் ஜாக்சன் இல்லை. இளையராஜா நாங்கள் போடும் ஜல்லியில் போங்கடா போக்கத்தவங்களா என்று போய்விடும் அபாயம். முப்பதுகளுக்குள் நுழையும் எந்த இளைஞனும் கடக்கவேண்டிய கடின பாதை என்று நினைக்கிறேன். விவியன் ரிச்சர்ட்ஸ் ரிட்டையர் பண்ணும்போது அண்ணா பீல் பண்ணியது ஞாபகம் வருது.
ஆனால் வாத்தியார் சுஜாதா மாத்திரம் எப்படி இறக்கும் வரைக்கும் இளமையாகவே இருந்தார்? … தேடல்.
&&&&&
அந்த ஐரிஷ் கணவன் சொல்லியிருக்ககூடிய பதில் .
நீ மட்டும் கட்டில் முழுக்க  பிடிச்சிட்டா நான் எங்க தரையிலயா படுத்து நித்திரை கொள்ளுறது? தள்ளிப்படு சனியனே!

Contact form