வியாழமாற்றம் 03-01-2013 : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

Jan 3, 2013

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
rani-bday-25ஏழு மணிக்கு அலார்ம் அடிக்க, அலுத்துக்கொண்டே சோம்பல் முறித்தவாறு விழித்தாள் மேகலா. கண்களை திறக்காமல் கைகளால் எட்டி படுக்கை விளக்குக்கடியில் இருந்த கொன்டக்ட் லென்ஸையும் ஹியரிங் எய்டையும் எடுத்து அணிந்தாள். பக்கத்தில் குமரன், அவன் தூங்கும்போது மேல்மூச்சின் ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் ஏதோ செய்தது. பத்து செக்கன்கள் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, “நீ பார்த்த பார்வைக்கு நன்றி” என்று ஹரிகரன் பாட்டு மெல்லிய சவுண்டில் திடீரென்று காதில் கேட்க ஆரம்பிக்கிறது. “கெட்ட ராஸ்கல்” என்று மனதுக்குள் திட்டியவாறே,
நன்றாக கண்ணை சிமிட்டி லென்ஸை சரிசெய்துகொண்டு நிமிர்ந்தால், முன்னே நல்லூர் கந்தசுவாமி கோயில் அதிகாலை பூசையில் ஐயர் தீபாராதனை காட்டுகிறார்.  காண்டாமணி சத்தம் மெல்பேர்ன் குளிருக்கு இதமாய் இருந்தது. ஓசை எழுப்பாமல் மெதுவாக எழுந்து தாறுமாறாக கிடந்த உடுப்புகளை அவசர அவசரமாக அணிந்துகொண்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்தால் SCG மைதானம் அல்லோகல்லப்பட்டுக்கொண்டிருந்தது. மைக்கல் கிளார்க்கின் இறுதி ஆட்டம். இந்த வயதிலும் கிளார்க்கின் புஃட்வோர்க் வேகம் அப்படியே இருக்கிறதே, இவன் ஏன் இவ்வளவு அவசரமாக ரிட்டையர் பண்ணுகிறான் என்று கவலைப்பட்டாள். சமயலறைக்குள் நுழைந்து கேத்திலை எடுத்து அடுப்பில் வைத்தாள். நல்லதாக இரண்டு ‘வீர’ விறகை அடுப்பில் செருகி தூண்டிவிட, நெருப்பு ஜுவாலை விட்டு எரிந்தது. கரி மண்டிக்கிடக்கும் புகைக்கூட்டை மீண்டும் ஒருமுறை ஆச்சரியமாக பார்த்த்துவிட்டு  திடீரென்று ஞாபகம் வந்தவளாக மேகலா…
வெயிட், இந்த கதையின் மிகுதியை முடிவில் பார்க்கலாம். இப்போது அடுத்த விஷயத்துக்குள் நுழைவோம்.

சிங்கமோ எண்டு பயந்து போனன்!
2தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து கோயில்களில் பூங்காவன திருவிழா என்றால் மூன்று நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும்.  முதலாவதாக மங்கள வாத்தியம். ஒரே மேடையில் ஆறு நாதஸ்வரம், ஆறு தவில் என்று எல்லோரும் சேர்ந்து தாக்கோ தாக்கென்று தாக்குவார்கள். ஆரம்பத்தில் ஏதாவது கீர்த்தனை, வர்ணம் என்று தொடங்கி, அரை மணித்தியாலயத்தில் “அழகன் முருகனிடம் ஆசை” வைப்பார்கள். எங்கள் திருநெல்வேலி சிவன் அம்மன் கோயில் என்றால் “மங்களம் தருவாள் மதுரைக்கரசி” என்பார்கள். அப்போது தான் சாமி வசந்தமண்டபத்துக்கு போயிருக்கும். இன்னமும் வெளிச்சம் இருந்தாலும் லைட்போஸ்ட்களில் கட்டியிருந்த டியூப்லைட் எல்லாம் கலர் கலராக மின்ன ஆரம்பித்திருக்கும். திருவிழாவுக்கு வந்த அக்கம்பக்கத்துகாரர்கள் எல்லாம் வீடு போய் அடக்கி வச்சிருந்ததெல்லாம் ரிலீஸ் பண்ணிவிட்டு, பொங்கல், வடை என்று பிரசாதத்தை தங்கள் வீட்டு முற்றங்களில் கூடி சாப்பிடுவார்கள். கூடவே ராசாத்தி அக்கா புதுசா போட்டிருந்த பென்டன், சரோவிண்ட அண்ணாமலை சீலை, அன்னலட்சுமி தெற்குவாசலில் தடக்கிவிழுந்தது என்று விடுப்பு சமாவும் தொடங்கும்.
இங்கே கோயிலடியில் நல்ல சோளகக்காற்று வீசும். அத்தியடியில் வொலிபோல் விளையாடிய பெடியங்கள் கை கால் முகம் அலம்பிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கூட தொடங்குவார்கள். சின்ன பெடி பெட்டைகள் அப்பாவின் வேட்டியை பிடித்துக்கொண்டு ஐஞ்சு ரூபாய் கச்சானுக்கும் தண்ணி துவக்குக்கும் அடம்பிடிப்பார்கள். திருவிழாக்களை இத்தோடு அடங்கிவிடும் என்று தானே நினைப்பீர்கள்? அது தான் இல்லை!
மேடையில் இருந்த வித்துவான்கள் இவை ஒன்றையுமே கவனிக்க மாட்டார்கள். அவர்கள் தம்பாட்டுக்கு “சங்கு முழங்கடா தமிழா” ட்ரை பண்ணிப்பார்ப்பார்கள். “நாகதேவன்துறை வேகப்படகுகள் நம் கையில் வந்ததடா” ராகம் பிசகி “வெள்ளி நிலா விளகேற்றும் நேரம்” ரேஞ்சில் அழும். எவருமே கவனிக்கமாட்டார்கள். ஒரு நாதஸ்வரக்காரர் எப்போதுமே சுருதி செக் பண்ணுகிறேன் பேர்வழி என்று தொங்குகின்ற ஒவ்வொரு பீப்பியையும்(சீவாளி) வாயில் வைத்து பீ பீ என்பார். இன்னொருவர் ஒப்பு(ஹார்மனி) ஊதுகிறேன் என்று கீழ் ஸ்தாயி பிடித்துக்கொண்டு இருப்பார். தவில்காரரில் சிலருக்கு தண்ணி வேறு கமகமக்கும். ஒரு சில குஞ்சு குருமான்கள் முன் வரிசையில், இன்னமுமே அடங்காத சுடுமணலில் செருப்பை போட்டு அதற்கு மேல் இருந்து ஆவென்று வாய் பார்த்துக்கொண்டு இருக்கும். சதாசிவத்தாரின் பெடி எப்போதுமே பத்மநாதன் நாதஸ்வரத்திலே தொங்கும் அத்தனை பதக்கங்களையும் எண்ணிக்கொண்டிருக்கும். “ஒண்டு எப்படியும் முக்காபவுண் வருமடா … வித்தா நல்ல கிடாயா ரெண்டு வாங்கி அடிக்கலாம்” என்பான்.
பஞ்சமூர்த்தி “மக்களெல்லாம் மக்களெல்லாம்” வாசிப்பார். சனம் அதே ரியாக்ஷன் கொடுக்கும். இதுக்கு மேல் சரிப்பட்டு வராது என்று கானமூர்த்தி “போவோமா ஊர்கோலம்” ஒருவழியாக தொடங்கத்தான் சுற்றுவட்டாரத்தில் ஒரு “களை” ஆரம்பிக்கும். ஆம்பிளைகள் எல்லோரும் ஜீன்ஸுக்கு அவசரமாக மாறுவார்கள். ஹோம் வோர்க் செய்யும் என் வயதுக்காரர்கள் வந்தது வரட்டும், கந்தசாமி வாத்தியை எப்படியும் சுத்தலாம் என்ற தைரியத்தில் தமிழ் கொப்பியை மூடிவைத்துவிட்டு காற்சட்டையை கொளுவுவோம். பெண்கள் பஞ்சாபி, அம்மாமார் மைசூர் சில்க் என்று சிம்பிளாக வெளிக்கிட்டு, கூட்டம் கோயிலை நோக்கி அலை அலையாய் வந்து சேரும்போது, நாயனார்கள் தில்லானா மோகனாம்பாள் பினிஷிங் கொடுக்கவும் நேரம் சரியாக இருக்கும்.
kampavaruthy_jeyarajஅடுத்து ஆரம்பிக்கும் கம்பன் கழகத்தாரின் பட்டி மன்றம். ராமனின் புகழுக்கு பெரிதும் காரணம் வில்லா? சொல்லா? இல்லா? என்று ஜெயராஜ் தலைமை வகிக்க, திருநந்தகுமார், செல்வவடிவேல், சிவகுமாரன் என்று மூன்று குரூப் பிரிந்து இராமனை பிரித்து மேய்வார்கள். கம்பவாரிதி தன் பங்குக்கு “தோசையிண்ட திறத்துக்கு ஆட்டுக்கல்லுக்கு வேற மாலையை போட்டிருக்கிறாங்கள்”  என்று ஒரு கிழமைக்கு முன்னாலே கலட்டியம்மன் திருவிழாவில் சொன்ன அதே பகிடியை விடுவார். கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கும். யாருமே எதிர்பார்க்காத கோணத்தில், இராமனின் சொல் தான் அவன் சிறப்புக்கு காரணம் என்று அவர் தீர்ப்பு வழங்கி முடிக்கும்போது ஆரம்பிக்கின்ற கைதட்டல், மேடையிலிருந்து இறங்கி அவர் காருக்குள் நுழையும்வரை தொடர்ந்துகொண்டிருக்கும். அப்போதைய சூப்பர்ஸ்டார் எங்கள் கம்பவாரிதி.
அடுத்து ஆரம்பிக்கும் வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு என்றால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குழுக்கள் தான். ஒன்று சின்னமணி கோஷ்டி. மற்றது ஸ்ரீதேவி கோஷ்டி. பொதுவாக வள்ளி திருமணம், தாட்சாயினி கதை என்று ஏதாவது போகும். என் காலத்தில் சின்னமணிக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. சொல்லும் பகிடி எல்லாம் ஏற்கனவே வாசித்ததாக இருக்கும். ஸ்ரீதேவிகாரருக்கு கொஞ்சம் வயசு குறைவு. காலத்துக்கேற்ற ஜோக் அடிப்பார்கள். டபிள் மீனிங் அனல் பறக்கும். ஒருமுறை பிரேமதாசா சாதியை இவர் வில்லுப்பாட்டில் இழுத்து, சபையில் இருந்த யோகி அந்த இடத்திலேயே நிகழ்ச்சியை நிறுத்தியதும், பின்னர் இவர் வேறு ஒரு சிக்கலில் மாட்டி  பங்கருக்குள் போனதும் அப்போது பிரபலமாக பேசப்பட்ட விடுப்பு!
villuppaattu
சபையில் உள்ள ஐயாமாரே, அம்மாமாரே, அண்ணன்மாரே,  அக்காமாரே என்று ஆரம்பிப்பார்கள். “தாழையாம் பூமுடிச்சு தடம்பார்த்து நடை நடந்து” என்பார் ஸ்ரீதேவி. உடனே “நடை நடந்து?” என்பார் ஆமாம் போடுபவர். “வாழையிலை போல வந்து பொன்னம்மா? என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?” என்று சும்மா ஆலாபனையில் இழுக்க, “கூப்பன்காரட்டில குடுத்த அரைக்கிலோ சீனிதான் அண்ணே” என்று கடி ஜோக் அடிப்பார் பின்னுக்கு இருக்கும் ஜிங் ஜக் காரர்.
வில்லுப்பாட்டு என்னும்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. 2001ம் ஆண்டு அது. அப்போது மொறட்டுவ பல்கலைக்கழகத்த்தில் நாங்களெல்லாம் அடியெடுத்து ஏழெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ராக்கிங் பீரியட் எல்லாம் முடிந்து அப்போது தான் பாட்டா சிலிப்பர், அரைக்கை சேர்ட், கட்டாய கள்ளு போன்ற விஷயங்களில் இருந்து எங்களுக்கு விடிவு வந்திருந்த நேரம். நவராத்திரிக்கு வாணி விழா செய்கிறார்கள். கட்டுவதற்கு ஏதாவது எக்ஸ்ட்ரா வேட்டி கிடைத்தால் லவட்டலாம் என்று ஹொஸ்டல் பக்கம் போகிறேன். அங்கே நண்பர்கள் கொஞ்சபேர், என்னடா வாணிவிழாவில் எல்லாம் சப்பை ப்ரோகிராமா இருக்கு. ஏதாவது போட்டு தாக்கோணும் என்றார்கள். இதை தான் விதி வலியது என்பார்கள். வேட்டி வாங்க போன என் வாய் சும்மா இருக்காமல் “மச்சான் ஒரு வில்லுப்பாட்டு போட்டு தாக்குவோமா?” என்று சொல்லி வாய் மூடமுதலே, ரங்கன் வில்லு சரிக்கட்ட பக்கத்தில இருந்த மரக்கொப்பை முறிக்க ஏறிவிட்டான். எழில் ஐந்தாறு A4 பேப்பரும் பேனையும் கொண்டுவந்து நீட்டினான். என்னடா என்றேன்? ஸ்கிரிப்ட் எழுது என்றான். “வள்ளி திருமணம்” செய்வோமா என்றேன்? பூக்களால் என்னை அர்ச்சித்து விட்டு, கரண்ட் டொப்பிக் வேணும்டா என்றான். அப்பவே எனக்கு சனியன் நாக்கில செட்டிலானதை கவனிக்காம சரி என்று சொல்லி “சரஸ்வதி சபதம்” என்று ஒரு ஸ்க்ரிப்ட் எழுதினேன். அங்கேயே.
8005529350_eccc6f2933_z
“சரஸ்வதி சபதம்” என்றவுடன் பழைய கதை என்று நினைக்காதீர்கள். சரஸ்வதி நிஜமாகவே மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு வந்தால் என்ன ஆகும் என்ற ஒரு அதகள ஸ்க்ரிப்ட். வாசலிலேயே சரஸ்வதியிடம் செக்கியூரிட்டி ஐடெண்டிகார்ட் கேட்கிறது முதல் பற்றைகளுக்குள் கொம்பைன் ஸ்டடி என்று கிஸ் அடிக்கும் ஜோடிகள் என சரஸ்வதிக்கு பல்கலைக்கழகத்தை பார்க்க பார்க்க கோபம் பற்றிக்கொண்டு வருகிறது. காதலன் செலவில் காதலி ஒருத்தி ப்ளேன்டீயும் வடையும் ஸ்டாஃப் கண்டீனில் வாங்கி சாப்பிடுவதை பார்த்த சரஸ்வதி “பொம்பளைங்க காதலை தான் நம்பிவிடாதே” என்று அவனுக்கு பாட்டில் அட்வைஸ் எல்லாம் பண்ணுவார். கடைசியில் “எல்லா மதத்துக்கும் கோயில் இருக்கு, ஆனா கல்விக்கு அதிபதி எனக்கு ஒரு படம் கூட இல்லையே, கோயில் எழுப்பும்மட்டும் நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” என்று சரஸ்வதி சபதம் போடுவதாக, அரசியலும் செருகி கோரிக்கையை வில்லுப்பாட்டு மூலம் வைக்க இந்திரலிங்கம் லெக்சரர் முகத்தில் ஈயாடவில்லை.
அந்த வில்லுப்பாட்டில் என்னோடு ஆமாம் போட நயினா என்று ஒருத்தன் இருந்தான். சாதாரணமாகவே மகா மொக்கை போடுபவன். வில்லுப்பாட்டு வேறா? மேடையில் இருந்து மரண மொக்கைகள் போட்டுக்கொண்டு இருந்தான். ஸ்கிரிப்டில் ஒரு காட்சி. சரஸ்வதி சுமனதாச விரிவுரை மண்டபத்தை கடக்கும் போது, ஒரு வகுப்பறைக்குள் இருந்து ஏதோ டர் டர் என்று சத்தம். என்னடா இது என்று சரஸ்வதி நெருங்கிப்போய் உற்றுப்பார்க்க .. அட ஒரு ஸ்டுடன்ட், லெக்சர் நடக்கும்போது நித்திரை அடித்துக்கொண்டு இருக்கிறான். குறட்டை சத்தம் காதைக்கிழிக்கிறது. அந்த சத்தத்தை பின்னால் இருந்து கடம் வாசித்த கஜன் கொர் கொர் என்று போட்டான். அதை கேட்ட நயினா தெனாலியில் கமல் சொல்லும் வசனமான “சிங்கமோ எண்டு பயந்து போனன்” என்பதை கமல் ஸ்டைலிலேயே சொல்ல, மொத்த கூட்டமும் கொல் என்று சிரித்தது.
சரி சாதா ஜோக்குக்கு ஏன் இப்பிடி சிரிக்கிறாங்கள் என்று நினைத்துக்கொண்டே அடுத்த விஷயத்துக்கு போகலாம் என்றால் கைதட்டலும் சிரிப்பும் நிற்பதாயில்லை. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் கடந்துவிட்டது. சிரிப்பு அடங்கவில்லை. மூன்று நிமிடம் ஆக, ஒரு செருப்பு பறந்துவந்து வில்லுக்கு முன்னால் விழுந்தது. அப்போது தான் இந்த மரமண்டைக்கு விஷயம் விளங்கியது. சிங்கம் என்ற புனை பெயரில் ஏற்கனவே ஒரு சீனியர், ராகிங் பீரியட்டில், கன்னத்தில் நாலு அறை, எட்டு கெட்ட வார்த்தைகளுக்கு பிறகே “என்னடா பெயர்” என்று கேட்பவர். அவரை தான் நாங்கள் நக்கல் அடிக்கிறோம் என்று அத்தனை பெடி பெட்டையளும் நினைத்து, இது தான் சந்தர்ப்பம் என்று செமையாக கைதட்ட, கடுப்பான சீனியர்கள் கோபம் வில்லுப்பாட்டு செய்துகொண்டிருந்த என்மீது பாய்ந்தது. எனக்கு மேடையிலேயே வயித்தை கலக்கியது. அப்புறம் நிகழ்ச்சி முடிந்து தகுந்த பாதுகாப்போடு வீடு போய் சேர்ந்தது, அடுத்தநாளே சீனியர் காலில் தெய்வமே என்று விழுந்தது என சமாளிச்சிட்டோம் என்று வையுங்களேன்.
Watch from 18:57 time frame
இன்றைக்கு கூட, என் நண்பர்கள் அந்த வசனத்தை நான் வேண்டுமென்றே ஸ்க்ரிப்டில் சீனியரை தாக்குவதற்காக செருகினேன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல, அந்த இடத்தில் தெனாலி வசனம் வந்தால் கதி கலங்கும் என்று நினைத்தேனே ஒழிய யாரையுமே மனதில் வைக்கவில்லை. சொன்னால் நம்பமாட்டார்கள்.
இப்படி எழுத்தை தவறாக நினைப்பது கிட்டத்தட்ட நூற்றைம்பது பதிவு எழுதியபிறகும் நடந்துகொண்டிருக்கிறது. நேற்றுக்கூட சயந்தனிடம் ஒருவர் சாட் பண்ணியிருக்கிறார். கொப்பி பண்ணி அனுப்பினான்.
“சயந்தன் டேய் .. இந்த ஜேகே முடிச்சிட்டாரா?”
“ஐ டோண்ட் திங் ஸோ”
“அப்ப மேகலா ரியல் இல்லையா?”
“நீங்க வேற … கேட்டா கடுப்பாயிடுவார் .. அது கடல்லயே இல்லயாம் பாஸ்”
முதலில் எழுதுபவனின் கற்பனைத்திறனில் கடுகேனும் நம்பிக்கை வையுங்கள். வாசிக்கும்போது எழுத்தாளனை மறக்க முயலுங்கள்! அதை செய்யாத வரைக்கும் மேகலா யார் என்று நீங்கள் தேடிக்கொண்டே இருக்கவேண்டிவரும் .. என்னைப்போல!

நனவில் ஒரு கனவு!
6a00d8341c562c53ef01543351f00e970c-320wiகடைசி பதினைந்து வருடங்களை யோசித்து பாருங்கள். ஒரு மேசையை நிரப்பிய கணணி சுருங்கி மடிக்கணணி ஆனதும், டப்லட் ஆனதும், ஸ்மார்ட் போஃனானதும் தற்செயல் அல்ல. ஒவ்வொரு பதினெட்டு மாதத்துக்கொருமுறை கணனியின் சைஸ் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இதை மூரின் விதி(Moor’s law) என்று ஐடிகாரர்கள் சொல்லுவதுண்டு. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இலத்திரனியல் பொருட்களின் ஆதார மூலப்பொருட்களின்(செமிகொண்டக்டர், ரெஸலியூஷன், சார்ஜ்) வீரியம் இரண்டுமடங்கால் அதிகரிக்கும் என்கிறார்கள். ஒரு வீடு பூராக இருந்த ENIAC கணனி, இலியானா இடையோடு போட்டிபோடும் ஐபோன்5 சைஸுக்கு போனது இந்த விதியோடு பொருந்துகிறது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு பிறகும் இந்த விதி உண்மை தான் என்று நிரூபிக்கிறது.
download
ஆனால் இதற்கு மேல் இலியானா இடுப்பையோ, ஐபோன் சைஸையோ குறைக்க முடியாது இல்லையா? இனி எப்படி தான் சுருக்குவது? ஐடி இப்போது புதிய பாதையில் பயணிக்கவேண்டும். அதற்கான ஆராய்ச்சிகள் தான் கடந்த சிலவருடங்களாக நடந்துகொண்டிருக்கின்றன. அது இந்த வருடம் உக்கிரம் பெறும் என்கிறார்கள். அப்படி அவர்கள் மாய்ந்து மாய்ந்து செய்யும் ஆய்வு augmented reality சம்பந்தமானது. பச்சையாக மொழிபெயர்த்தால் “மிகை யதார்த்தம்”. கவிதையாய் சொன்னால் “நனவில் ஒரு கனவு”. சரியான மொழிபெயர்ப்பை, கேதா, வாலிபன், சக்திவேல் அண்ணா போன்ற தமிழறிஞர்களிடம் விட்டுவிட்டு இடுப்புக்கு தாவுவோம்.
121217-science-matrix-7p.grid-6x2முதலில் எல்லோருக்கும் தெரிந்த வெர்ச்சுவல் ரியாலிட்டியை பார்க்கலாம். மேட்ரிக்ஸ் படத்தில் வருமே அது தான் வேர்ட்சுவல் ரியாலிட்டி. இதிலே உங்களை தவிர வேறு எதுவுமே நிஜம் இல்லை. உங்களுக்கான ஒரு கனவு உலகம் படைக்கப்பட்டு அதிலே சண்டை, சச்சரவு, கொலை என்று எல்லாமே நடக்கும். இங்கே நிஜமான, யதார்த்தமான உலகம் என்ற ஒன்றே கிடையாது. நீங்கள் செய்யும் விஷயங்கள் கூட நிஜமில்லை. நீங்கள் ஒரு கனவில் கிடப்பீர்கள். மிகுதி எல்லாமே சிமியூலேஷன் தான். நீங்கள் சுட்டால் வெர்ச்சுவல் ரியாலிட்டியில் முன்னாள் இருப்பவர் சாகலாம். திரும்பி உங்களை சுடலாம். நிஜத்தில் இருவருமே இரண்டு கதிரைகளில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அப்படியே இருப்பீர்கள். இலகுவாக சொல்லப்போனால் வெறும் கனவு தான். தூக்கம் கலைந்தவுடன் படுக்கையும் தலையணையும் மட்டும் தெரியும்.  கனவு வேர்ட்சுவல் ரியலிட்டி. கலைந்தபின் எல்லாமே மறைந்துவிடும், தண்ணீர் எடுத்து குடிப்பீர்கள். அதுமட்டுமே நிஜம். இது வெறும் சுவாரசியத்துக்கு நன்றாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் சாதிக்கமுடியாது. அதுவும் தினசரி சாதாரணனின் வாழ்க்கைக்கு அதிகம் பயன்படாது. அதனாலேயே இது கேமிங், சினிமா, மிலிட்டரி, விண்வெளி என்ற துறைகளுடன் தேங்கிவிட்டது.
Screen-Shot-2012-11-20-at-6.16.05-PM-770x424streetmuseum1
இப்போது ஒக்மெண்டட் ரியாலிட்டிக்கு வருவோம். இங்கேயும் சிமியுலேஷன் தான். கனவு தான். ஆனால் ஒரே வித்தியாசம் நீங்கள் தூங்க மாட்டீர்கள். நிஜத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி அழகாக காட்டுவது தான் ஒக்மெண்டட் ரியாலிட்டி.  நாம் நாளாந்தம் பயன்படுத்தும் கூகிள் மப்ஸ்(Google Maps) ஒருவித ஒக்மேண்டட் ரியாலிட்டி தான். காரில் போகும்போது செல்லும் திசை, வீதி, சிக்னல், வேகம் என்று எல்லாமே அது சொல்லும். பாதை தவறினால் யூடேர்ன் அடி என்று அலறும். பக்கத்தில் இருந்து ஒருவர் சொல்லுவது போல இருக்கும் இல்லையா.
இது இன்னும் விருத்தியடையும்போது, இதன்மூலம் நாம் பார்க்கும் சூழலின் தோற்றத்தை மாற்றலாம், தஞ்சை பெருங்கோயிலுக்கு போகும்போது உங்களை சுற்றி சோழர்காலமே தெரியவைக்கலாம். கண்ணில் படுபவர்கள் எல்லாம் வேட்டி கட்டியிருப்பார்கள். வைணவர்கள் நாமமும் சைவர்கள் பட்டையும் அடித்திருப்பார்கள். அவர்கள் பெயர், ஊர், மதம் என்று எல்லாமே இன்டர்நெட்டில் கிடைப்பதால் இது சாத்தியமே. நிஜமான, எங்களை சுற்றி உள்ள விஷயத்துக்கு கொஞ்சம் அழகு, அறிவு, பயன் மேலதிகமாக இது சேர்க்கிறது.  மற்றும்படி செய்யும் செயல்கள், உலாவும் இடம் எல்லாமே நிஜம். ரியல். யதார்த்தம். அதற்கு அண்மையில், ஆனால் கொஞ்சம் கனவுத்தன்மையோடு இருப்பதால் இது augmented reality!
google-glassesnew-yorkers-life-with-google-glass
கூகிள் இதில் முன்னோடி. கூகிள் கண்ணாடி(Google Glass) என்று ஒன்று செய்துகொண்டிருக்கிறார்கள். எடுத்து மாட்டினால் முன்னாள் வருபவரின் சரித்திரத்தை அது சொல்லும்.  அழகான பெண் ஒருத்தி ட்ரெயினில் உட்கார்ந்திருந்தால், அவள் பெயர், நாய்க்குட்டி பெயர், பிடித்த நடிகர் சூர்யவா? விஜயா? உங்கள் மனைவிக்கு நண்பியா?!, “In a relationship”  ஸ்டேடஸா? இல்லை சிங்கிளா? என்று ரிஷிமூலம் அறிந்துவிட்டு அடுத்த அடி எடுத்து வைக்கலாம்.  கவனம் அவளும் அதை செய்வாள். தயக்கம் என்றால் முதலில் friend request அனுப்பி, அவள் அக்ஸப்ட் பண்ணினால் அடுத்தகணமே யூ லுக் கியூட் என்று கொமென்ட் போட்டு அவள் அதை லைக் பண்ணினால், தைரியமாக நேராகவே சொல்லலாம்.
அடுத்த பத்து வருடங்களுக்கு இது தான் இனி ஆட்டம். இன்னும் சில வருடங்களில் புற்றீசல் போல பல மென்பொருள் நிறுவனங்கள் உருவாக போகின்றன. ஒரு சாதாரண வீட்டை கட்டிவிட்டு அதனை ஒக்மெண்டட் ரியாலிட்டி மூலம் அழகுபடுத்தலாம். அழகு படுத்த ஆரக்கிடெக்ட் இருப்பார்கள். பத்து டொலருக்கு ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணினால் உங்கள் வீடே பக்கிங்காம் அரண்மனை போல இருக்கும். ஆனால் இது கனவில்லை. உங்கள் சமையலறையில் நீங்களே சமைக்கவேண்டும். புட்டு கொத்தி அவிக்கவேண்டும். என்ன ஒன்று மெல்பேர்னில் இருந்துகொண்டே தின்னவேலி கரி அடுப்பில் சமைப்பது போன்ற உணர்வை உருவாக்கலாம். முருகன் படத்தை பார்த்தால் நல்லூரில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கலாம். முன்னுக்கு இருக்கும் பொருள் என்ன என்பதை அது கண்டுபிடித்து, அதற்கு உங்கள் செட்டிங் என்னவோ அதற்கேற்ப பார்க்கும் பொருளை மாற்றிக்காட்டும். மேகலா குமரனை பார்த்தபோது “நீ பார்த்தபார்வைக்கு நன்றி” பாட்டு கேட்டது அல்லவா? அது கூட செட்டிங் தான். சமையலறைக்குள் நுழைந்தபோது ஊரில் இருக்கும் சமையற்கட்டும் விறகும் புகைக்கூடும் தெரிந்ததல்லவா? அது கூட செட்டிங் தான். ஆனால் எரிந்தது என்னவோ காஸ் அடுப்பு, வராத புகையால் கரிப்பிடித்தது போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். இன்னும் ஐந்து வருடங்களில் இது சாத்தியமே என்கிறார்கள். 
augmented-reality-vibrant-graphics
சிலவிஷயங்கள் இந்த வருடமே நிகழும். நீங்கள் ஒரு புடவைக்கடைக்கு போகிறீர்கள். ஒரு புடவை பார்க்க அழகாக இருக்கிறது. இதே சேலை குமரன் சில்க்கில் என்ன விலை, உங்கள் நண்பிகளில் யார் யார் இதை வாங்கியிருக்கிறார்கள். வேறு எங்கேயெல்லாம் சேல் போகிறது, உங்களுக்கு அணிந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று எல்லாமே அந்த இடத்திலேயே செய்துபார்க்கலாம். ஐபிம் இந்த ஆராய்ச்சியை செய்து முடித்துவிட்டது. ரிலீசுக்கு ரெடி.
Bionic_contactsஆரம்பத்தில் சொன்ன மேகலாவின் கொன்டக்ட் லென்ஸ் கூட ஓரளவுக்கு ஆராய்ச்சியில் தேறிவிட்டது. பயோனிக் கொண்டக்ட்ஸ் என்று அழைக்கப்படும் இது கூகிள் கண்ணாடியின் அடுத்த கட்டம். இப்போதைக்கு, வயர்லஸ் கனெக்ஷன் கொடுக்குமளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். குரங்குகளில் டெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். இது தான் எதிர்காலம். இதில் இருக்கும் உபயோகமான விஷயம், இப்படிப்பட்ட அப்ளிகேஷனை நாங்களே எழுதலாம். Java, C# போல ஏதாவது ஒரு கணணி மொழி இதற்கென்று உருவாகும் என நினைக்கிறேன். தற்போதைக்கு பந்தய குதிரை அன்றோயிட் தான். இளைஞர்கள் இப்போதே முந்தவேண்டும். GPS, Android சார்ந்த டெவலப்மென்ட் செய்ய இப்பவே பழகலாம். “I will prepare, someday my chance will come” என்று ஏப்ரகாம் லிங்கன் சொன்னதை ஞாபகப்படுத்துங்கள்.
இப்போது அந்த சிறுகதையை முடித்து வைக்கலாமா?

பாவம் ராதா!
திடீரென்று ஞாபகம் வந்தவளாக, மேகலா நேற்றிரவு படலையில் வெளியான வியாழமாற்றத்தின் பக்கங்களை திறந்து, தேநீரை அருந்தியவாறே விறு விறுவென வாசித்து முடித்தாள். ஒரு கொமென்ட் போடுவோம் என்று நினைப்பதற்குள் இரண்டாவது நல்லூர் மணியும் அடித்தது. அவசரமாக பாத்ரூமுக்குள் சென்று ஷவரை திறந்தாள். நயாகரா குளிர்ந்தது. தூரத்தில் டிஎஸ்எல்ஆரில் சுழட்டி சுழட்டி சுற்றுலா பயணிகள் படமெடுத்துக்கொண்டிருக்க, குளித்துக்கொண்டிருந்த மேகலாவுக்கு வெட்கம் பிடுங்கித்தள்ளியது. உடனடியாக மீசாலை பங்குக்கிணற்றுக்கு தாவினாள். கொஞ்சம் தள்ளி ரோசாக்கா டொராண்டோவிலிருந்து “உங்காலப்பக்கம் விடிஞ்சிட்டா?” என்று கேட்க அவரோடு கனடா புதினங்கள் கதைத்தாள்.
கிணற்றடியில் இருந்து வெளியே வந்து, ஹாங்கரில் தொங்கிய துவாயால் தலையை துவட்டிவிட்டு, அள்ளி முடியும்போது தான் “தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்” என்று குமரன் ஸ்டேடஸ் போட்டிருந்ததை கவனித்தாள். “என்ன அண்ணே விடியக்காலமையே பீலிங்கா?” என்று ஸ்மைலியோடு அவனுக்கு ஒரு கொமெண்டை போட்டுவிட்டு, அப்படியே படுக்கையறைக்குள் வந்த மேகலா, இன்னமும் தூங்கியபடியே கிடந்த குமரனை ஏக்கமாக பார்த்தாள். தூங்கும்போது மேல்மூச்சின் ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் ஏதோ செய்தது. பத்து செக்கன்கள் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க,
“ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ” என்று மித்தாலி பாடத்தொடங்கினார்!

mqdefault
&&&&&&&&&&&&&&


Contact form