டேய் ஜேகே!

விட்டு வைப்பாங்களா பாஸ்? நாங்க யாழ்ப்பாணத்துக்காரர், ஒலகம் தெரியாது காட்டுறோம் என்று காட்டக்கூடாததை எல்லாம் காட்டினாங்க பாஸ். மொறட்டுவ ஹோஸ்டலில் முதல் ராக்கிங் ஞாபகம் இருக்கு. மிகப்பெரிய இரும்புத்தடியை கையில வச்சிருந்து ஒருத்தன் மிரட்டிக்கொண்டிருந்தான். “வேர்க்குது மின் விசிறியை சுத்து” என்று என்னை பார்த்து சொல்ல, கதிரையில் ஏறி நின்று கையாலேயே மின்விசிறியை சுத்த ஆரம்பித்தேன். நம்பர் மூண்டில விட்டு சுத்து என்றான். இரண்டு கையாலையும் வேக வேகமாக சுத்தோணும். ஸ்லோவாக சுத்தினா அடி பழுக்கும். என்ர கஷ்டத்தை பார்த்து பக்கத்தில ஜட்டியோட முழங்காலில நிண்ட ரெண்டு பெடிப்பிள்ளையள் கிளுக் எண்டு சிரிக்க அண்டைக்கு ஆரம்பிச்சது அவங்களுக்கு அட்டமத்து சனி. அவங்கள் இரண்டுபேரையும் மாறி மாறி கிஸ் அடிக்கச்சொல்ல, அப்புறமா அதுகள் பெட்டைகள் ஒருத்தரையும் பார்க்காம ஒண்டாவே சுத்தித்திரிந்தது ஏன் எண்டு இங்க மெல்பேர்னில அப்பிடி ஆக்களை பார்த்தாபிறகு தான் விளங்கினது.
எனக்கு அடிச்ச சீனியர் எல்லாம் ராக்கிங் முடிஞ்சா பிறகு ஏன் நாயே எண்டு கூட திரும்பிப்பார்க்கவில்லை (எல்லா அண்ணேமாரையும் பொதுமைப்படுத்த இல்ல). ஏன் எதற்கு என்று தெரியாமலேயே இப்படி ஒரு கீழ்த்தர வன்முறை சில மாதங்கள் அரங்கேறியது. அம்மா நயினாதீவு அம்பாளுக்கு நேர்த்தி வச்சதால உயிர் தப்பி படிச்சு முடிச்சிட்டன்.


கூகிள்
டேய் ஜேகே, இந்த பேஸ்புக் காரன் ஏதோ புதுசா சேர்ச் எஞ்சின் கொண்டுவந்திருக்கிறாங்களாம்? என்னாது?
அது சாதாரண கூகிள் சேர்ச் போல தான். ஆனா கொஞ்சம் பெர்சனலைஸ்ட் பண்ணி ரிசல்ட்டை தரும். இப்போது “மிகச்சிறந்த இந்திய நாவல்கள்” என்று கூகிளில் சேர்ச் பண்ணினால் சிலவேளை அருந்ததிராயின் “The god of small things” முதலில் வரலாம். அதை நம்பி வாசிக்கதொடங்கினா லம்பாடி கிழிஞ்சிடும். ரெண்டே நாளில் ஆஸ்பத்திரியில் ஒக்ஸ்போர்ட் டிக்ஷனரியோடு படுத்துகிடக்க வேண்டியிருக்கும். இதையே Facebook Graph இல் தேடினால் “பிரிவோம் சிந்திப்போம்”, “ஒரு புளியமரத்தின் கதை”, “குவேனி”, “Longitude”, “Outliers” ஒருவேளை மன்மதகுஞ்சு மாதிரி நண்பர்கள் இருந்தால் மலையாளத்து சரோஜாதேவிகள் கூட வந்துசேரலாம்.


மும்பை
இந்த வியாழமாற்றம் உன்னோட 150வது பதிவாச்சே! வழமையா 50, 100 க்கு ரொம்பவே பீல் பண்ணி கிரவுண்டை எல்லாம் சுத்தி சுத்தி ஓடுவாய். இந்த முறை அடக்கி வாசிக்கிறாய்?
அப்பிடியே பீல் பண்ணினாமட்டும் எவனாவது சீண்டுவான்ரே? ஆணியே ஆகாது பாஸ். என் அகராதிப்படி மொக்கை ஸ்டேடஸ் போட்டா முன்னூறு லைக்கு. முப்பது நாளு கண்ணு முழிச்சி எழுதினா மூணு லைக்கு. அதிலயும் ஒரு நாதாரி ஐஞ்சு நிமிஷத்தில அன்லைக் பண்ணிடுவான். இவனுகள குத்தோணும் எஜமான் குத்தோணும்!
ஆண்கள் இல்லாத வீடு!
ஷரோன் ஓல்ட். ஆங்கில இலக்கிய உலகில் பரிச்சயமான பெயர். இன்றைக்கு பெண்ணிய இலக்கியம் என்று பலரால் சகட்டுமேனிக்கு ஆண் பெண் உறுப்புகள் உறவுகள் சிதைக்கப்படுவதன் சூத்திரதாரி. ஆனால் ஷரோனின் கோபத்திலோ கவலையிலோ பாசாங்கிருக்காது. பெண் விடுதலை என்று சும்மா ஊசிப்பட்டாசு வெடிக்கமாட்டார். தன் வாழ்க்கையை எழுதினார். வலியை எழுதினார். போலி இல்லை. அம்பையை, லீனாவை சில சமயங்களில் வாசிக்கும்போது கொஞ்சம் அயர்ச்சி வரும். எதுக்கு இப்பிடி? என்று கேட்கத்தோன்றும். ஷரோனை பார்த்து கேட்க தோன்றுவதில்லை. கிளிக்கானால் அன்று முழுதும் அவரை வாசித்துக்கொண்டே இருப்பீர்கள். சனிக்கிழமை இங்கே ஒரு நிகழ்ச்சியில் பொங்கலுக்கு ஒரு கவிதை எழுதி வாசிக்கவேண்டும். எழுதுவோம் என்று உட்கார்ந்தால், இவருக்கு எலியட் பரிசு கிடைத்த செய்தி ரீடரில் குதித்தது, அட என்று மீண்டும் இவரைப்பற்றி ஞாபகம் வந்து தேடி தேடி வாசித்து … பொங்கல் கவிதை .. அது கிடக்கட்டும்!
ஷரோனின் தந்தை கொடூரன். சின்ன வயதில் தாய்க்கும் தந்தைக்கும் சண்டை. அவர்கள் சண்டையில் இவள் பாடு மோசம். பெற்றோர் பிரிவு.. தந்தை மேலான கோபம் என்று வாசிப்பவர்களின் மனம் வெடிக்கும். பொதுவாக பிரிவு, சோகம், தனிமை, அத்தனை ஆண்களும் ஏமாற்றுபேர்வழிகள், ஹோமோ செக்ஸுவலிட்டி(ஒரு கவிதையில் தங்கையோடு கூட) ரக கவிதைகள். கவியில் யாப்பு இருக்காது, சந்தம் இருக்காது, அசை இருக்காது. ஆனால் ஜீவன் இருக்கும் வாசித்து முடித்தபின மனசுக்குள் போட்டுத்தாக்கும். அவருடைய தாயும் தந்தையும் 1937 இல் தான் முதன்முதலில் சந்தித்தார்கள். அதை கேட்ட கோபத்தில் எழுதியது தான் “I go back to Mar 1937”. செம கவிதை. கடைசில சொல்லுவார் 
I want to go up to them and say Stop, 
don’t do it—she’s the wrong woman,
he’s the wrong man, you are going to do things
you cannot imagine you would ever do.
இதை மொழிபெயர்ப்போமா என்று யோசித்துவிட்டு வேண்டாம் என்று இன்னொரு கவிதைக்கு தாவிவிட்டேன். இந்த ஷரோன் திருமணமாகி எழுபது வயது ஆகிவிட்ட நிலையில் கணவன் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறான். தாயின் நிலையே கடைசியில் தனக்கும் என்று புலம்பியபடி தாயிடமே வந்து சேர்கிறாள். ஆங்கில வடிவம் இங்கே. மொழி பெயர்க்க முயன்று தோற்றிருக்கிறேன்.
முற்றத்து வேம்பு
விளக்குமாறால் கூட்டித்தள்ளியும்
சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள்
மரத்தடி நிழலில் நாற்காலி
என் ராங்கிகார அம்மா,
கால்கள் மெல்லமாய் தாளம்போட
ஏதோ ஒரு பாட்டு
நாளை இந்த வேளையோ?இது நல்ல வேளையோ?
எப்படிச்சொல்வேன் நான்?
என்னை விட்டு போய்விட்டான் என்றா?
அதிர்வாளா? அழுவாளா?
யாருக்காக அழுவாள்?
ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி
ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு.
பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன்.
என்னடா?
சொன்னேன்.
என்னடி சொல்லுறாய்?
திரும்பவும் சொன்னேன்.
போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா?
அரற்றினாள்
விடம்மா.. போனால் போறான்.
அம்மாளாச்சி … போயிட்டாரா ..
அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ
அழுதாள். அரட்டினாள்.
அதிர்ந்து போனேன் நான்.
அம்மா நீ வந்து…
உடம்பில் ஏதோ ஊர்வது போல
அவனை காதலித்தேனா?
அறிந்தேனா புரிந்தேனா?
என்ன கருமாந்திரம் செய்தேன் நான்?
நான் நினைத்தது தான் அவன் என்றேனோ?
அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ?
அறியவும் முயலாமல் முனிந்தேனோ?
அம்மாவை பார்த்தேன்.
கண்களால் கோதிவிட்டாள்.
இந்த அன்பு
அவங்கள் இல்லாதவிடத்தில்
அம்மாவின் அன்பு
அவளுக்கு என் அன்பு
நடக்கும் என்று பயந்தது தான்
நடந்துவிட்டது
இனி என்ன?
இதே வீடு தான்
ஆண்கள் இல்லாத வீடு
இதே வேம்பு, தோட்டம், துரவு
அடுப்புக்கரி சரவச்சட்டி
ஒழுகல் கூரை, தேடாவளையம்
பட்டி மாடு கன்றுக்குட்டி
கழுத்துவெட்டி சேவல் கோழி
கெக்கலிக்கின்றன
இது ஆண்கள் இல்லாத வீடு
அப்படியே மொழி பெயர்க்காமல் கொஞ்சம் எங்கள் ஊரில் ஒரு தாயும் மகளும் வசப்படக்கூடிய சிந்தனைகள் கலக்க முயன்றிக்கிறேன். அம்மாவின் மறுமொழிகள், அதிலிருந்து தொடங்கும் change over, அந்த கடைசி இரண்டு வரிகள் இவற்றின் சப்டெக்ஸ்டுகள் எல்லாமே ஆண் பெண், பெண்ணீயம் தாண்டிய விஷயங்கள். இப்படி நாங்கள் எழுத இன்னுமொரு பத்து வருடங்கள் பிடிக்கலாம். இதையெல்லாம் வாசிக்கும்போது பேசாம ஆங்கில இலக்கியம் மேஜர் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என்ன ஒன்று, பலாலி றோட்டில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்திருப்பேன், அல்லது உதயன் நடுப்பக்கத்தில் சமாதான நீதவானாகியிருப்பேன்! அதுக்கு மேல ஒரு புளியங்கொட்டையை கூட அசைத்திருக்கமுடியாது.
கண்ணே கண்மணியே!
Life of Pi பார்த்த பாதிப்பு விரிவாக அதை அனுபவித்து எழுதியும் போகமாட்டேங்குது(வியாழமாற்றத்தில் கூட அது தெறிக்குதோ?). மொனாஷ் ப்ஃரீவேயில் போய்க்கொண்டிருக்கும்போது தான் படத்தை பார்ப்பதென்று எதேச்சையாக தீர்மானித்தோம். படத்தை பற்றி அடி முடி தெரியாது. அலுவலகத்தில் ஒருவன் புத்தகத்தை வாசித்துவிட்டு முடிவு அப்படியே தன்னை அடித்துப்போட்டுவிட்டது என்று சொன்னவன். அதனால் கதையை கேட்காமல் புத்தகம் வாங்கி வாசிப்பதாக இருந்தேன். அரிதாக மூன்றுபேருக்கும் நேரம் கிடைக்கவே சரி என்று வெளிக்கிட்டாச்சு. இர்பான் கான், தபுவை கண்டவுடனேயே இது “வேற லெவல்ல” இருக்ககூடிய படம் என்று புரிந்துவிட்டது. 3D, பாந்தமான காட்சிகள், இதமான வேகம், இசை என்று போய்க்கொண்டிருந்த படம் இறுதி இருபது நிமிஷத்தில் அடித்து தூக்கி துவைத்து போட்டது. முடிந்து வெளியே வந்து ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்க்க அவிழ்க்க எனக்கு இலேசான நடுக்கம் கூட. இது மொமெண்டோ பார்த்தபோதும் எனக்கு இருந்தது. தமிழில் 12B முதல் நாள் ஷோ நானும் கஜனும் பார்த்தபோதும் கொஞ்சம் இருந்தது. ஆனால் இந்த படம் வேறு தளம். அலுவலகத்தில் நான் பண்ணிய ப்ரோமொஷனில் ஆளாளுக்கு அன்றிரவே தியேட்டருக்கு போய் மண்டை விறைச்சுபோய் வந்தாங்கள். கொஞ்சபேர் புத்தகம் வாங்கி வாசிக்கிறார்கள். லஞ்ச் ரூமில் கூட Life of Pi தான்.
இந்த பாட்டே படத்தின் மூடை ஆரம்பத்தில் கிரியேட் பண்ணிவிட, அதே ஆதார மெலடியோடு படம் முழுக்க பார்த்தோம். ஒஸ்கார் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ள பாடல். அந்த கடுப்பில் இது ஓமனதிங்களின் தழுவல் என்று ஒரு கூட்டம் லூசுத்தனமாக உளறத்தொடங்கிவிட்டது. இரண்டுமே தாலாட்டு தவிர மெட்டில் பல வித்தியாசங்கள் இருப்பது போலவே படுகிறது.
அட அட, இந்த பாட்டை தான் தலைவர் குலுவாலிலே பாட்டில கொண்டுவந்து செருகினார். அந்த பாட்டில மைக்கல் ஜாக்சனின் பில்லி ஜீனும் இருக்கும். பில்லி ஜீன் கூட Fontella Bass இன் தழுவல் என்று சொல்லுவார்கள். இப்படியெல்லாம் கோர்க்க ஆரம்பித்தால் ஓடிவிளையாடு பாப்பாவின் கொப்பி தான் Show me the meaning என்று சொன்னாலும் சொல்லுவார்கள் நம்ம அறிவுக்கொழுந்துகள்.