வியாழமாற்றம் 24-01-2013 : மண்டைக்காய்

Jan 24, 2013

வாடைக்காற்று!
vaadaik_kaarru“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன்.
“இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார்.
மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான்.
நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.
kadal3அந்த இடத்தில் என்னையறியாமலே ஏலே கீச்சான் என்று ரகுமான் பாடதொடங்கினார். காட்சிக்கு எவ்வளவு பொருத்தமான பாடல். வாசிக்க வாசிக்க நெடுந்தீவு இன்னமும் விரிகிறது. மீன் பிடிக்க மன்னாரிலிருந்து வந்து வாடியமைத்திருக்கும் செமியோன், அவன் சம்மாட்டியார், நாகம்மா பிலோமினா, பொன்னுக்கிழவர். விதானை, எந்த நேரமும் குதிரையோடு திரியும் விருத்தாசலம், கிராமத்து வில்லன் சண்முகம், வடதுருவத்தில் இருந்து பருவத்துக்கு வந்து சேர்ந்த கூழைக்கடாக்கள், இவர்களை எல்லாம் ஒன்றுசேர்த்த “வாடைக்காற்று”, நேற்றோடு ஒரு பத்து தடவை வாசித்திருப்பேன். முதல்முறை, தவ்வல் வயதில் 87/88 காலத்தில் வாசித்தது. பிறகு பேச்சுப் போட்டிக்கு முதல்பரிசாக பத்தாம் வகுப்பில் பாடசாலையில் தந்தார்கள். மனப்பாடம் செய்தேன். இடம்பெயர்ந்து போன இடமெலாம் பையில் வைத்திருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் செங்கை ஆழியான் எழுதிய கிளாஸிக், இன்றைக்கும் வாசிக்கும்போது அந்த மண்ணின் வாசத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்துகிறது என்றால் … பச்ச் ..அந்த மனுசனை கோயில் கட்டி கும்பிடவேண்டும்.
vaadai 7சோளகக்காற்று முடிந்து வாடைக்காற்று வீச ஆரம்பிக்க, நெடுந்தீவுக்கு வந்து வாடிபோட்டு மீன்பிடிக்கும் செமியோன், மரியதாஸ், இவர்கள் இருவரின் மீனவர் குழுக்களை சுற்றி பின்னப்பட்ட கதை. கூடவே அதையொட்டிய நெடுந்தீவு மக்களின் வாழ்க்கை. பிலோமினா, நல்ல சிவப்பா வெள்ளிக்காரியாட்டம், இன்னொருத்தி நாகம்மா இவர்கள் இருவரது குடும்பங்கள், காதல்கள். நாகம்மாவுக்கு பிழைக்கத்தெரியாத குதிரை மேய்ச்சு திரியும் தாய்மாமன். அவனின் நண்பன் வில்லன். இப்படி போகும் கதையில் சீசனுக்கு சீசன் வேடந்தாங்கல் வரும்பறவைகள் போல நெடுந்தீவுக்கு வந்துசேரும் கூழைக்கடாக்கள். மனிதர்களுக்கிடையே நிகழும் சம்பவங்களை கூழைக்கடாக்களை வைத்து உவமானப்படுத்தும், சில இடங்களில் இரண்டுமே ஒரே புள்ளியில் சந்திக்கும் (தாய்மாமன் கூழைக்கடா ஒன்றை வேட்டையாட நாயாட்டம் அலைவது) கதை சொல்லும்பாணி என்று செங்கை ஆழியான் சத்தம்போடாமல் கலக்கிய நாவல் இது. இந்த நாவலை வாங்கி வாசியுங்கள் என்று நான் சொல்லமுடியாது. அனேகமான ஈழத்து வாசகர்கள் இதை தாண்டாமல் வந்திருக்கமாட்டார்கள். ஒரு நினைவு மீட்டல், அவ்வளவு தான்.
Sengai Aaliyanமுன்னுரையிலே இந்த கதையை பாரதிராஜா ஏறத்தாழ திருடி தன்னுடைய கல்லுக்குள் ஈரத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று செங்கை ஆழியான் மிகவுமே மனம் வருந்தியிருந்தார். பாரதிராஜா நெய்தலை மருதத்துக்கு மாற்றினாலும் பாத்திரங்களும் ஆதாரமான கதையும் ஒன்றே என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். ஸ்வெட்டரை கூட கலர் மாத்தாமல் ஈயடிச்சான் கொப்பியாக சுட்டதுமட்டுமல்லாமல் அது “I am Sam” இல்லை என்னுடைய சொந்தக்கதை என்று கூசாமல் பொய்சொல்லும் திரையுலகத்தோடு, சாதாரணமாக பிறவுன் றோட்டில் சாய்வுநாற்காலியில் இருந்து எழுதும் செங்கை ஆழியான் சில்லுப்படமுடியாது. முன்னுரை மட்டும் எழுதலாம். வாடைக்காற்று ஈழத்திலும் திரைப்படமானது. கையில் சிக்கினால் பார்க்கவேண்டும். ஸ்டில்கள் கதி கலக்குகிறது.
imagesபாரதிராஜா என்றவுடன் தான் இன்னொரு ஞாபகம். கீராவின் “கோபல்லபுரத்து மக்கள்” நாவலில் ஒரு காட்சி. ஒரு இளம்பெண் கணவனோடு கோபித்தபடி, கழுத்தில் நகைகளோடு ஒரு குளத்துப்பக்கம் நடந்துகொண்டிருக்கிறாள். அங்கே திருடன். அவளை நீருக்குள்ளேயே அமுக்கி கொலை செய்ய அவளோ அவன் கால் பெருவிரலை கடித்துவிட்டாள். இப்போது விரலை வெட்டினால் தான் காலை விடுவிக்கமுடியும். இதை வாசிக்க வாசிக்க, அட இது கூட ஒரு படத்தில் வந்ததே என்று யோசித்து, “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வசனமும் ஞாபகத்துக்கு வர, பாரதிராஜா சுட்டதோ அல்லது இன்ஸ்பிரேஷனோ அது தெரியாது. ஆனால் மனுஷன் நல்ல வாசகன் என்று புரிந்தது.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போனபோது செங்கை ஆழியானின் மருமகனோடு பேசிக்கொண்டிருந்தேன். “மாமா இப்ப ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்” என்றான். முடித்துவிட்டாரா தெரியவில்லை. கேட்கவேண்டும். அடுத்தமுறை ஊருக்கு போனால் “அவருக்கு முன்னால போய் நிண்டா வாய் டைப் அடிக்குமே” என்ற பயத்தை ஒதுக்கி விட்டு அவர் வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டும். சுஜாதாவை தான் சந்திக்கமுடியவில்லை. செங்கை ஆழியானை மிஸ் பண்ணிவிட கூடாது.

மண்டைக்காய்
“என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற.  போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே”
என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது.
“முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவன் என்ன செய்கிறான் என்று தெரியுமா?”…. “தெரியாது யாரு?”….. “அவர் ஒரு பவுண்ஸர்!” …. “வாட் த …”
புத்திசாலித்தனத்தை அளப்பதற்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே தியரி இந்த IQ தான். பலதரப்பட்ட aptitude சார்ந்த சாதுரிய கேள்விகள், வேறு சில அளவிடைகளை கொண்டு அளக்கிறார்கள். இல்லை இது செல்லாது என்று DRS ஐ நிராகரிக்கும் BCCI போல IQ வை ஏற்றுக்கொள்ளாத ஒரு கூட்டமும் இருக்கிறது. சரி விடுவோம்.
THE SMARTEST MAN OF U.S.A BELIEVE THAT GOD DO EXISTசராசரி மனிதனின் IQ(Intelligent Quotient) 100 என்று பரிசோதனைகள் மூலம் தெரியவந்திருக்கிறது. வகுப்பில் முதல் மாணவனுக்கு 120, 130 வரை போகலாம். என்னை மாதிரி கேஸ் என்றால் 70. அதுவே ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளுக்கு 150 என்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் லங்கனின் IQ புள்ளி 200ஐ தாண்டுகிறது. பிறந்தது சான் பிரான்சிஸ்கோவில், இருந்தும் லங்கனால் ஒரு சிறந்த விஞ்ஞானியாகவோ ஒரு கணிதமேதையாகவோ வரமுடியவில்லை. ஒரு சாதாரண பொறியியலாளராகவோ, வைத்தியராகவோ கூட வரமுடியவில்லை. ஏன் என்பதற்கு Malcom Gladwell தன்னுடைய Outliers, The story of Success என்ற நூலில் பல காரணங்களை விளக்குகிறார். லிங்கன் பிறந்து ஆறுமாதத்திலேயே பேச ஆரம்பித்திருக்கிறார். நான்கு வயதில் சிக்கலான புத்தகங்களை தானாகவே வாசிக்க பழகி, வகுப்புகளில் திறமை எல்லை மீறி பல வகுப்புகளை ஒரே வருடத்தில் கூட கடந்திருக்கிறார்.  இறுதியில் கல்லூரி பேராசிரியர்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்பதை புரிந்து கல்லூரிப்படிப்பை முடிக்காமல் .. அங்கே தான் சிக்கல்.
chris-langan-iq-comparison
திறமை இருந்தும் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று லங்கனுக்கு தெரியவில்லை. சின்னவயதில் அப்பாவை இழந்து, அம்மா மறுமணம் முடித்தவனின் அடி உதைகளில் துன்பப்பட்டு ஒரு கட்டத்தில் ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றினால் தான் அந்த அப்பனை சமாளிக்கலாம் என்று உடம்பை தேற்றி அப்பன்காரனின் கொட்டத்தை அடக்கியிருக்கிறார். குடும்பத்தில் சீன் இப்படிப்போனால் படித்து விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வரும்? இருபது வயதாகிவிட்டது. கல்லூரி படிப்பு கூட முடிக்கவில்லை. பணம் வேண்டும். உடம்பு கட்டுமஸ்தாக இருந்ததால் பாரிலே பவுண்ஸர் வேலை. அதாவது யாரை உள்ளே விடுவது, யாரே வெளியே தள்ளுவது, எவனாவது குடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணினால் தூக்கிக்கொண்டுபோய் ரோட்டில் போடும் வேலை. அமெரிக்காவின் அதி புத்திசாலி செய்யும் வேலை.
ஆடுறகாலும் பாடுறவாயும் சும்மா இருக்காது என்பது போல, அதி புத்திசாலியான லங்கன் ஓய்வு நேரங்களில் தன்பாட்டில் ஒரு தியரியை கூட உருவாக்கி வருகிறார். பிரபஞ்சத்தை பற்றி அறிய வெளிப்புற கணித விஞ்ஞான அமைப்புக்கள் போதாது, பிரபஞ்சம் புறத்தையும் அகத்தையும் ஒருங்கமைக்கும் ஒரு அசாதாரணமான அமைப்பு, அதை கொஞ்சம் ட்ரை பண்ணினால் நிறுவலாம். நிறுவிக்காட்டுகிறேன் என்று அவர் தன் தியரிக்கு “Cognitive-Theoretic Model of the Universe” என பெயரிட்டிருக்கிறார். கந்தசாமியும் கலக்ஸியும் எழுத பயன்படுமே என்று வாசித்துப்பார்த்தேன். ஒன்றிரண்டு வரிகள் மாத்திரமே புரிந்தது. அந்த அளவில் எங்கள் உபநிடதங்களை எழுதியவர்களின் IQ கூட கிட்டத்தட்ட் 200 வந்தாலும் வரும் என்றும் தெரிந்தது. அவருடைய தியரியும் உபநிடதங்களில் சொல்லப்படும் ஏகாதசம், துவாதசம் மாட்டர்களும் அவ்வளவுக்கு பொருந்துகிறது.
IMG_1735லங்கன் போன்ற மண்டைக்காய்கள் எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள். வட்டக்கச்சியில் விக்கி மாமா என்று ஒருவர். “என்ன மண்ணுக்கடா உன்னையெல்லாம் கெட்டிக்காரன் எண்டு சொல்லுறாங்கள்” என்று நக்கல் அடிப்பார். அவரே டிசைன் பண்ணிய, மாட்டுவண்டில் மூலம் சூடு மிதிக்கும் ஒரு இயந்திரம் பற்றிய கட்டுரை, வெளிச்சம் சிறப்பு இதழில் “வட்டக்கச்சியில் ஒரு சிறப்பு விஞ்ஞானி” என்ற கவர் ஸ்டோரியுடன் வெளிவந்தது. தயிரை கடைந்து நெய் உருவாக்க என ஒரு மெஷினை அவர் டிசைன் பண்ணும்போது கூட இருந்து விஞ்ஞான விளக்கம் குடுத்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டு இது சரிவருமா சரிவருமா என்று கேட்டுக்கொண்டிருப்பார். அதைப்பற்றி விரிவான சிறுகதை எழுதிவைத்திருந்தேன். சென்றவருடம் லப்டப் களவு போனபோது கூடவே போய்விட்டது. மீண்டும் எழுதவேண்டும்.
இன்னொரு மண்டைக்காய், கிட்டத்தட்ட 150, 160 வரை IQ வரக்கூடிய ஒருவர் என்னோடு படித்த தர்மினி என்ற நண்பி. அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடம். டியூஷன் ஒன்றுக்கும் பெரிதாக போகாமல் சாவகச்சேரியில் இருந்தே படித்து கலக்கிய பெண். மொறட்டுவவில் ஒரே பிரிவு என்பதால் அவளின் திறமையை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. கணக்கில் புலி என்பார்களே, அது தர்மினி தான். கோயில் கட்டி கும்பிடலாம். எந்த கணித பாடம் என்றாலும் 100 மார்க்குகள் சாதாரணமாக எடுப்பாள்.
Signals & Systems மிட்செமிஸ்டர் பரீட்சை. முதல் நாள் இரவு கொன்கோர்டில் “ரன்” பார்த்துமுடித்து நானும் கஜனும் ரோலக்ஸில் கொத்துரோட்டி சாப்பிட்டுவிட்டு, வெள்ளைவத்தையில் ஊர் உலாத்திக்கொண்டு அடுத்தநாள் போனால் பரீட்சை என்றார்கள். எக்ஸாம் பேப்பரில் ஜிலேபியை பிச்சு போட்டது போல ஒரு தொகை x, y, z, சிக்மாக்கள். ஒன்றுமே புரியவில்லை. பத்து நிமிஷங்கள் விறைச்சுபோய் என்ன செய்யிறது எண்டு யோசித்தவன், சடாரென்று பின்னால் திரும்பினேன். தர்மினி விடைகளை எழுதிமுடித்துவிட்டு ஏதோ ஒரு பாட்டை ஹம்மிங் பண்ணிக்கொண்டிருந்தாள். அந்த இடத்திலேயே குனிந்து காலில விழுந்து “ப்ளீஸ் ஆன்சரை சொல்லும்” என்று கேட்டால், கையை எனக்கு பக்கத்தில் சுட்டிக்காட்டினாள். அங்கே என்னவென்றால் இந்த நாதாறி கஜன் முன்னமேயே காலில விழுந்து ஆன்சரை வெட்கம் மானம் இல்லாமல் அப்பிக்கொண்டிருந்தான். அப்புறம் நான் அவன் காலில் விழுந்து ஆன்சரை கொப்பி பண்ணி, மூவருக்குமே A+ வந்ததும் மிச்ச வகுப்பு வெறும் B களிலேயே நின்றதும் தர்மினியின் திறமைக்கு ஒரு சாம்பிள் தான். ஆனால் ஸ்ரோடிங்கர், ஐன்ஸ்டீன் பாதையில், தகுதியும் திறமையும் இருந்தும் தர்மினி பயணப்பட முயலவில்லை.
பார்த்தி என்று இன்னொருவன், இப்போது CEB இல் எஞ்சினியராக இருக்கிறான். செம இன்டெலிஜென்ட். “மச்சான் உங்கள் எல்லாரையும் விட நான் மண்டைக்காய்” என்று வேறு அடிக்கடி சொல்லி வெறுப்பேத்துவான். எப்படிப்பட்ட IQ கேள்வி என்றாலும் படார் படார் என்று பதில்வரும். அதிக திறமை. அதைவிட அதிகமாக அவனுக்கு தன் திறமை மீது நம்பிக்கை. இப்போதும் அவன் அப்படித்தான் என்று நண்பர்கள் சொல்வார்கள். அவனும் ஒரு அளவுக்கு மேலே உயரவில்லை. ஆராய்ச்சி, கணிதம் சார்ந்த துறைகளில் மிளிரக்கூடியவன் இப்போது பொறியியல், மேலதிகாரி என்று பியுரோகிராடிக் வட்டத்தில் இருக்கிறான். இப்படி லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கும்.
லங்கன் கதையை சொல்லிவிட்டு பீட்டர் கேட்டான்.
783b62c57a4d381087ad2b60deaa1258_ls_t“இப்ப சொல்லு, அமெரிக்காவில பிறந்திருந்தா இன்னும் சாதிச்சிருப்பியா?”
“ஆணியே புடுங்கியிருக்க ஏலாது… ஒடம்பு கூட வெறும் சக்கை .. பவுன்சர் வேலை கூட கிடையாது”
இப்ப சொல்லு .. “நீ எழுதுற பதிவுகளுக்கு ரெஸ்போன்ஸ் கிடைக்குதா”
“ஓ கிடைக்குதே .. என் ரேஞ்சுக்கு குடுத்த காசுக்கு மேலாகவே கொண்டாடுறாங்க பாஸ்”
“அது!”


பூ முடித்து பொட்டு வைத்த வட்டநிலா!
images (1)அந்தக்காலத்து கலியாண வீட்டு கொப்பிகளில் ஒரு சீன் இருக்கும். ட்ரெஸிங் டேபிள் முன்னாடி, பின்னாலே நீளமாக தொங்கும் கனகாம்பர ஜடையை காட்டிக்கொண்டே மணப்பெண் பத்து பதினைந்து நிமிடங்கள் நிற்பாள். கிளாஸிக் சீன் அது. தலையில் ஒரு வலை மூடிக்கிடக்கும்! மேக்அப்காரி கொஞ்சம் லேட்டஸ்ட் ஆள் என்றால் இரண்டு எக்சோறா எவர்கிரீன் குருத்து செருகிவிடுவார். ஏலியன்களின் அன்டெனா போல குத்திக்கொண்டு நிற்கும். ப்ளவுஸ் தைப்பவருக்கும் இந்த சீனில் தான் ஸ்கோப். முதுகுவெட்டு விதம் விதமான ஸ்டைலில் இருக்கும். சிலவேளை V ஷேப்பில். சிலவேளை முள்ளு முள்ளாக, சிலவேளை குறுக்க மறுக்க லேஸ் போகும். யன்னல் எல்லாம் வைப்பார்கள். சிலது நல்லா இறங்கும். சிலது மேலேயே நின்றுவிடும். அதில ஒரு போர்டர். தெரியும் மேனிப்பகுதியில் கொஞ்சம் மிணுங்கல்கள் கூட தெரியும். வியர்வைத்துளிகளில் வீடியோ லைட் பட்டுத்தெறிக்கும்.
பார்த்துக்கொண்டிருக்கிறவன் ஏற்கனவே நாலு தரம் வவுத்தால போயிருப்பான். ஆனாலும் அதிரடி சீன் இனித்தான் இருக்கு மாப்ள. அப்படியே அவள் திரும்புவாள். உச்சி வகிட்டில் பதக்கம், முகத்தில் அவள் நிறத்தை விட மிகுதி அத்தனை நிறமும் வியர்வையோடு ஹோலிப்பண்டிகை கொண்டாடும். கண்ணிமைகளில் அடித்த கறுப்பு வழிந்து கண்ணீராய் ஓடும். இது போதாது என்று மணமகளை யாரோ ஒரு பொறாமை பிடித்த நண்பி சிரிக்கச்சொல்லுவாள். இவளும் தான் ஏதோ ரேவதி, மதுபாலா நினைப்பில் சிரிக்க, அப்போது தான் உதடுகளில் அப்பியிருக்கும் நாலாந்தர லிப்ஸ்டிக் எரிமலை லாவா போல பூரணமாக தெரிய ஆரம்பிக்கும்.
வீடியோகாரனும் இந்த இடத்தில், எண்பதுகளில் மொக்கை படத்துக்கெல்லாம் மாய்ஞ்சு மாய்ஞ்சு மெலடி போட்ட இளையராஜாவாக மாறி, சிட்டுவேஷன் சோங் போடுவார். அப்படி ஒரு பாட்டு தான் இது.
ராகம் ஹம்சத்வதனி. கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லை. “மாலைகள் இடம் மாறுது” கூட ஒரே ராகம். “மழைநேர காற்றே காற்றே மணம் தின்ன வா வா, குடையோர ஊற்றே ஊற்றே குணம் சொல்லி தா தா” என்று ஹர்ணி பாடும்போது யுரேகா சொல்லத்தோன்றுதா? சாட்சாத் ஹம்சத்வதனியே தான்!
அண்மையில் எம்எஸ்வியும் ராஜாவும் சேர்ந்து இசையமைத்த விஸ்வதுளசியிலும் இந்த ராகம் ஒரு சின்ன பிட்டு பாடலில் அடித்து ஆளப்பட்டிருக்கும். கேட்டுக்கொண்டே இருக்கும்போது இறுதி புல்லாங்குழல் போய் ஒரு வீணையோடு இணையும். அதே சுரத்தை பிடித்துக்கொண்டு பூ முடித்து பொட்டுவைத்த்த வட்டநிலா என்று ஆரம்பியுங்கள். அப்போது புரியும் இந்த ராகம் எப்பிடிப்பட்ட சாத்தான் என்று.

சென்ற வருடத்தில் அதிக தடவை நான் கேட்ட பாடல் இந்த “பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா”. கேட்க கேட்க லீவு போட்டு ஒரு பார்க்கில் போயிருந்து தனியனாக கூட கேட்கச்சொல்லும், இன்னும் நூறு குமரன்-மேகலா சிறுகதைகள் எழுத வைக்கக்கூடிய “கெட்ட சனியன்” இது!

விஸ்வரூபம்
kamal-hassan-andrea-jeramiah-viswaroopam-movie-stillsஇரண்டு வாரங்களுக்கு முதல் கேதா கேட்டான். இரண்டு நாட்களுக்கு முன்னமும் கேட்டான். அவன் கேட்கும் நேரமோ என்னமோ, விஸ்வரூபத்தை பிடித்த ஏழரை விடமாட்டேங்குது. நாளைக்கும் ரிலீஸ் ஆகாது போல கிடக்கு. நடிகர் கமலை விட இயக்குனர் கமல் இருபது மடங்கு புத்திசாலி என்பதால் முதல்நாளே பார்க்கலாம் என்றால் நாலைந்து கொசுக்கள் சேர்ந்து தடையுத்தரவு வாங்கீட்டுதுகள். டேய் முன்னேற்ற கழகங்களா, அந்தப்படத்தில ஆண்ட்ரியா கதக் நடனத்தை பார்த்தா பிறகுமா தடையுத்தரவு வாங்கினீங்க? என்ன டேஸ்டோ. வெளங்கிடும். காந்தியை கொச்சைப்படுத்துகிறார் என்று ஒரு கூட்டம் தடையுத்தரவு வாங்கினது. காந்தியத்தை பென் கிங்ஸ்லி நடித்த “காந்தி” படம் சொன்னதை விட ஹேராம் முகத்தில் அறைந்தால் போல அருமையாக சொன்னது. சண்டியருக்கும் அலுப்பு குடுத்தீங்க. கமலுக்கு ஒஸ்கார் கொடுக்கவேண்டாம், அட்லீஸ்ட் தன் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதியாவது கொடுங்கள். அது போதும். மற்றும்படி எல்லாப்புகழும் இறைவனுக்கே!

&&&&&&&&&&&

Contact Form