வியாழ மாற்றம் 28-02-2013 : உங்கள் பெண்குழந்தையின் பெயரில் ‘ஷ’ இருக்கா?

Feb 28, 2013

The Kite Runner

kiterunnerxஎழுபதுகளில் ஆப்கானிஸ்தான் கொஞ்சகாலம் குண்டுவெடிப்புகள் குறைந்து ஆசுவாசமாக இருந்த சமயத்தில் கதை காபுலில் ஆரம்பிக்கிறது. அமீர், ஹாசன் என்று இரண்டு நண்பர்கள். அமீர் மேல்வர்க்க பாஷ்டூன் சாதியை சேர்ந்தவன். அவன் வீட்டு வேலைக்காரரின் மகன் ஹாசன். சிறுபான்மை ஹசாரா சாதியை சேர்ந்தவன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆனாலும் அந்த நட்பு ஒருவித மேல்சாதி கீழ்சாதி நட்பு தான். அமீர் சொல்வதை ஹாசன் பேசாமல் கேட்பான். அவன் வாசிக்கும் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பான். அமீருக்கு ஒன்றென்றால் ஹாசனால் தாங்கமுடியாது. ஆனால் ஹாசனை எல்லோரும் ஹசாரா என்று ஏளனப்படுத்தும் போது அமீர் ஒன்றும் சொல்லமாட்டான். உள்ளூர பயந்த, பொறாமை குற்றஉணர்வு மிக்க சாதாரண மனிதகுணம் அமீருக்கும்.
அந்த ஏரியாவில் பட்டம் விடும் போட்டி பிரபலம். ஊருலகத்தில் இருக்கும் குஞ்சு குருமார்கள் எல்லாம் பட்டம் ஏற்றுவார்கள். பட்டங்கள் தங்களுக்குள் வெட்டி வெட்டி சண்டை போட்டுககொள்ளும். ஒவ்வொன்றாக விழுத்தப்படும். மாறி மாறி பட்டங்கள் விழுத்தப்பட இறுதியில் இரண்டு பட்டங்கள் மட்டுமே வானத்தில் எஞ்சி நிற்கும். அவற்றுக்குள் இறுதியாக சண்டை. ஒன்று அறுபடும். அறுபட்ட பட்டத்தை ஓடிப்போய் எடுக்கவேண்டும். அதற்கு போட்டி. சண்டை. அந்த பட்டம் எங்கே போய் விழும், எப்படி போய் எடுப்பது, காற்றின் திசை எல்லாவற்றையும் கணித்து ஓடவேண்டும். இறுதியில் அறுந்த பட்டத்தை எடுப்பவனும், அந்த பட்டத்தை தன் பட்டத்தால் அறுத்தவனும் வெற்றிவீரர்கள். அமீர் பட்டத்தை அறுப்பான். அறுந்த பட்டத்தை ஓடிப்போய் கைப்பற்றிக்கொண்டு கொடுப்பவன் ஹாசன். அமீரின் Kite Runner.
ஒரு முறை அமீருக்கு அந்த கிராமத்து முரட்டு இளைஞனால் சிக்கல் வந்தபோது ஹாசன் தன் ஹெட்டபோலை(கவண்) நீட்டி மிரட்டி, அந்த இடத்தில் இருந்து தப்ப வழி செய்கிறான். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் ஹாசனுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்ட போது பயத்தினாலோ என்னவோ, அமீர் அதை தூர நின்று வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறான். அப்படி செய்தததால் அமீருக்கு குற்ற உணர்ச்சி. தன் கையாலாகத்தனத்தை மறைக்க அமீர் ஹாசனையே திருடன் என்று பழி சொல்லி வீட்டை விட்டு அனுப்புகிறான். அமீரின் இயல்பு அது. ஹாசன் அளவுக்கு தன்னால் நல்லவனாக நேர்மையாளனாக இருக்க முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை. தன் தந்தை ஹாசனையும் தன்னை போலவே நடத்துவதை சகித்து கொள்ளமுடியாமை. இப்படி ஒரு இயல்பான பலவீனங்கள் உள்ள உயர்சாதி சிறுவன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவன்.

ஐந்து வருடங்களில் சோவியத்படைகள் காபூலை ஆக்கிரமிக்க, அமீரின் குடும்பம் பாகிஸ்தானின் பெஷாவருக்கு இடம்பெயருகிறது. அங்கிருந்து அவர்கள் கலிபோர்னியாவுக்கு செல்கிறார்கள். அங்கே ஆயிஷா என்ற பெண்ணை அமீர் திருமணம் முடிக்கிறான். எழுத்தாளர் ஆகிறான். அப்போது தான் பாகிஸ்தானில் இருந்து அமீரின் மாமா அவனுக்கு தொலைபேசியில் அழைக்கிறார். ஹாசனின் குடும்பம் தலிபானின் தாக்குதலில் இறந்துவிட்டது என்றும் அவன் மகன் மட்டும் உயிர்தப்பி தலிபான்களிடம் துஷ்பிரயோகத்துக்குள் ஆட்பட்டிருக்கிறான் எனவும் சொல்லுகிறார். வேறொரு முக்கிய உண்மையும் சொல்லுகிறார். நீ போய் அவனை காப்பாற்றவேண்டும் என்கிறார்.
There is a way to be good again.
அமீர் எப்படி ஆப்கான் போகிறார், அங்கே போய் ஹாசனின் மகனை மீட்டுக்கொண்டு அமேரிக்கா வருகிறார் என்பது மீதிக்கதை.
bookkite4காலித் ஹோசைனி எழுதிய இந்த “The Kite Runner” வாசித்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கலாம். முதல் பதிவான அரங்கேற்ற வேளையிலேயே குறிப்பிட்டிருப்பேன். என்னை எழுத தூண்டிய இரண்டு நாவல்களில் ஒன்று இது. ஒரு தேசத்தின் வாழ்க்கையை, மிக இயல்பாக, அதில் இருக்கின்ற இனிமைகள், சந்தோஷங்கள், குட்டி குட்டி கலாச்சார விஷயங்கள், அவை எப்படி போர் என்ற அசுரனால் உடைந்து சுக்குநூறாகிறது, இருந்தும் அந்த மனிதர்கள் இடம்பெயர்ந்தும் எப்படி அழகான வாழ்க்கையை அமைக்கிறார்கள் என்று சாதாரண பொதுமகனின் பார்வையில் ஒரு போரியல் வாழ்க்கையை படம்பிடித்து காட்டிய மிகச்சிறந்த நாவல் இது. இதே எழுத்தாளரின் இன்னொரு வைரம் தான் “A thousand splendid suns”.
நேற்று திலகனிடம் சாட்டில் பேசும்போது சொன்னது. எப்போதாவது எங்கள் வாழ்க்கையை நான் நாவலாக எழுதுவதாக இருந்தால் அதிலே The Kite Runner இன் பாதிப்பு நிச்சயம் இருந்தே தீரும். எனக்கு ஒரு சின்ன மனக்குறை இருக்கிறது. போர், அழிவுகள் கொடுமைகள் துப்பாக்கி குண்டுகள் என்றே எங்கள் இலக்கியங்கள் சுத்திவிட்டன. அதில் தவறேதுமில்லை. எங்கள் வாழ்வை தானே பிரதிபலிக்கின்றன அவை. ஆனாலும் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று எங்கள் சந்தோஷங்களை பதிந்து வராதா என்ற கவலை. யோசித்துப்பாருங்கள். ஒரு நாவல், நல்லூரில் காதல், இடம்பெயர்வு, சாவகச்சேரியில் காதல், குடும்ப பிரச்சனைகள், வன்னி இடம்பெயர்வு என்று டொராண்டோ வரைக்கும் கதையை நகர்த்தலாம்.  அரசியலும் போரும் சொல்லாமல் சொல்லப்படும். ஆனால் கதை என்னவோ சாதாரண மனிதனின் சரிதம் தான். அதை கொஞ்சி கொஞ்சி எழுதினால், அப்படியே வாசிக்கலாம். “நீங்க எழுதுங்க அண்ணே” என்றான் திலகன். என் நாவலை தொடராக விழுந்து விழுந்து வாசகர்கள் வாசிக்ககூடிய அளவுக்கு எழுத்து இன்னமும் வசப்படவில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் போகட்டும்.
இந்த வகை எழுத்துக்களை செங்கை ஆழியான் பகிர்ந்திருக்கிறாரே என்று நினைக்கலாம். நிச்சயமாக செய்திருக்கிறார். செங்கை ஆழியான் நாவல்களில் ஒரு பிரதேசத்தின் வாழ்க்கை இருக்கும். ஆனால் அவருடைய பாத்திரங்கள் அவ்வளவு ஆழமானவை இல்லை. ஒரு பாத்திரத்துடன் சட்டென்று ஒன்றிவிடும் அளவுக்கு அவர் எழுதுவதில்லை. பாவை விளக்கு உமாவையோ, சுஜாதாவின் மதுமிதாவையோ செங்கை ஆழியானிடம் காண்பது அரிது. ஏன் என்று அடுத்தமுறை போய் சந்திக்கும்போது அவரிடமே கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. வந்த சூட்டோடு ஒரிஜினல் டிவிடி வாங்கி போட்டுப்பார்த்தேன். நாவல் கொடுத்த அனுபவத்தை திரைப்படம் அப்படியே படம் போட்டு காட்டியது. அதிலே இனிமையான ஆப்கான் வாழ்க்கை தெரிந்தது. அது எப்படி சோவியத், முஜாகிதீன், அமேரிக்கா, தலிபான், ஈரான், பாகிஸ்தான் என எல்லா தேசங்களாலும் சீரழிக்கப்பட்டது என்பதை காட்டியது. மனிதம் என்பது எந்த நாட்டிலும், எந்த கலாச்சாரத்திலும் எந்த சீரழிவுக்கு மத்தியிலும் எப்படி எஞ்சி இருக்கிறது என்பதை காட்டியது.
அடர்ந்த பாலைவனத்தில் தனித்து நிற்கும் சிறுவனின் உதட்டோரத்தில் விழும் மழைத்துளி அவனுக்கு கொடுக்கும் பரவசத்தை காட்டுவதே என்னளவில் உலக திரைப்படம். ஒரு மழைத்துளி விழுவதற்குள் எப்படி பத்து பேரை ஒருவன் கொன்று குவிக்கிறான் என்று காட்டுவது அல்ல. கமல் இந்தப்படத்தை பார்த்திருந்தால் அக்சன் படமேயானாலும் ஒரு உணர்வு பூர்வமான நிஜமான ஆப்கான் மனிதர்களை காட்ட முயன்றிருக்கலாம். வெறும் வீடு, வைக்கோல், குதிரை, சுரங்கம் என்று பம்மாத்து காட்டியிருக்க தேவையில்லை.


உங்கள் பெண்குழந்தையின் பெயரில் ‘ஷ’ இருக்கா?

எழுபது எண்பதுகளில் அமெரிக்காவிலே இருந்த வன்முறைகளின் அளவு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் குறைய ஆரம்பித்ததாம். ஏன் என்று கேட்டால் 1973ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டரீதியான கருக்கலைப்பு அனுமதிகள் தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் மூலம் சின்ன வயதில் கர்ப்பமுற்று, பிள்ளை பெற்று வளர்க்க முடியாமல் கைவிட்டு, அந்த பிள்ளை எடுபட்டு போய், கெட்டவனாக மாறுகின்ற சூழல் குறைக்கப்பட்டது. விளைவு ஒரு தலைமுறை கழிய தொண்ணூறுகளில் வன்முறைகள் குறைய ஆரம்பித்தன.
freakonomics02
1978 இல் சீன அரசாங்கம் மக்கள் பெருக்கத்தை தடுக்க “ஒரு குழந்தை” திட்டம் கொண்டு வந்ததல்லவா. அது இப்போது ஒரு சமூக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு குழந்தை உள்ள பெற்றோர்கள் அதிகம் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். குழந்தையை பொத்தி பொத்தி வளர்ப்பார்கள். விளையாட விடமாட்டார்கள். தனியே போக விடமாட்டார்கள். மரத்தில் ஏறவிடமாட்டர்கள். இப்படி பிள்ளை ஒருவித கட்டுக்குள் வளர்வதால் கிரியேட்டிவிட்டி என்பது குறைகிறது. சுய தொழில் முயற்சிகள் அந்த பிள்ளைகள் செய்வது அரிது என்றெல்லாம் ஆய்வு சொல்லுகிறது. அதன் விளைவை இப்போது தான் சீனா உணர்ந்திருக்கிறது போல தெரிகிறது. இதை இனிவரும் காலத்தில் தவிர்க்க ஒரு குழந்தை திட்டத்தையே தூக்கலாமா என்று யோசிக்க தொடங்கியிருக்கிறது.
“Conventional wisdom is often so wrong” என்று Freakonomics என்ற நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். சில சம்பவங்களின் காரணங்களை வெறுமனே ஊகத்தினால் சொல்லிவிடமுடியாது. ஒரு சின்ன சம்பவம், ஒரு அசைவு கூட மிகப்பெரும் புரட்சிக்கோ வீழ்ச்சிக்கோ காரணமாக அமைந்துவிடலாம் என்கிறார்கள். Hush Puppies செருப்புகள் அமெரிக்காவில் மறுஜென்மம் எடுத்தது எங்கேயோ ஒரு ஊரில் ஒரு சில இளைஞர்கள் காசுவலாக பேஷன் போன அந்த செருப்புகளை பார்ட்டிக்கு போட்டுக்கொண்டு போனதால் தான். என்னடா இப்படி வந்திருக்கிறார்களே என்று எல்லோரும் பார்க்க, அது கவனத்தை ஈர்த்து, மற்றவர்களும் அப்படியே அதை தொடர, மாநிலம், மொத்த நாடு, உலகம் என Hush Puppies மீண்டும் பிரபலமடைந்துவிட்டது. Epidemic Creation என்று இதை Tipping Point என்ற நூல் அழகாக விளக்கும். இந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கி வாசியுங்கள் என்று ஒரே வியாழமாற்றத்தில் மூன்று புத்தகங்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு முட்டாள் இல்லை நான். ஆனாலும் அருமையான புத்தகங்கள். வாங்கி வாசிச்சு பாருங்க!
இந்த வகையில் எனக்கும் சில கேள்விகள் வருகின்றன. பதில் சொல்ல நீங்களும் முயலலாம்.
trisha-is-angry-with-the-media-3
  1. ஏன் தமிழர்கள் தம் பெண் குழந்தைகளுக்கு பொதுவாக ‘ஷ’ என்ற எழுத்து வரும்படி பார்த்துக்கொள்கிறார்கள்? வர்ஷா, தர்ஷா, மதூஷா, விதூஷா… இன்னபிற ஷாக்கள்.
  2. ஆண் குழந்தைகளின் பெயர்கள் “அ” வில் ஆரம்பிப்பது குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாகுமா?
  3. யாழ்ப்பாணத்தில் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்தமைக்கும் 1995ம் ஆண்டு மாபெரும் இடப்பெயர்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
  4. எப்படி இன்றைய ஈழத்தலைமுறை இலங்கை கிரிக்கட் அணியை ரசிக்க தொடங்கியது? 96 world cup என்று ஒற்றை வரி காரணம் சொல்லமுடியவில்லை.
“Conventional wisdom is often so wrong” என்பதை மீண்டுமொருமுறை மனதில் வைத்துக்கொண்டு யோசித்துபாருங்கள். பகிரவேண்டும் என்று தோன்றினால் எழுதலாம். There are no wrong answers btw.


Making of “இருவர்

நாலரைக்கு புறப்பட்டு அகிலனின் வீடு போய் சேரும்போது மணி ஐந்தரை. அத்தனை விஷயங்களும் பேசிவிட்டு அங்கேயே இடியப்ப புரியாணி சாப்பிட்டு புறப்படும்போது எட்டரை. வீடு சேர ஒன்பதரை. அதற்குப்பிறகு “கொல்லைப்புறத்து காதலிகள் : அகிலன் & கஜன்” என்று தலைப்பு போட்டுவிட்டு ஒரு கணம் பார்த்தேன். படு மொக்கையாக இருந்தது. “ராகம் தாளம்”, “சங்கீத சகவாசம்” என மேலும் பல மொக்கை தலைப்புகள் யோசித்துவிட்டு இறுதியில் ஒன்றுமே சரியாகாமல் என்னடா இது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் “இருவர்” மனதில் தோன்றியது. அதற்குள் நேரம் பத்தரை.
lunapic_136171527425941_2
அப்புறம் பதிவை எழுத ஆரம்பித்தபின்னர், no look back. நண்பர்களை பற்றி எழுத டிசைனோ, பிளானோ தேவையில்லை. அதுவாய் வந்து விழுந்தது. எழுந்து நிமிரும்போது ஒன்றரை. அதற்கு பிறகு ஒவ்வொரு வீடியோவாக ஏற்றிவிட்டு, கடைசியில் 2GB சைஸ் வீடியோவை அப்லோடிங் போட்டுவிட்டு, படங்கள் டவுன் லோட் பண்ணி, ஸ்கான் பண்ணி, செட் அப் செய்து வந்து படுத்தால் ஏதோ ஒரு குறை. முடிவு சரியாக அமையவில்லை என்று தோன்றியது.
இறுதியில் அவர்கள் இருவரின் நண்பனாக ஒரு அன்னியோன்னியம் வேண்டும். அதே நேரம் ரசிகனாகவும் வேண்டும். இவை ஒன்றுமே இல்லாமல் டல்லாக இருந்தது அந்த முடிவு. தூக்கம் வரவில்லை. ஐந்தரைக்கு எழும்பி இப்போதிருக்கும் இறுதிப்பந்தியை எழுதிமுடித்துவிட்டு, பப்ளிஷ் பண்ணுவோம் என்று நினைத்தபோது “பாதகமில்லை” என்ற வார்த்தை இரண்டு தடவை வந்திருந்தது. அதில் ஒன்றை “காரியமில்லை” என்று மாற்றிவிட்டு, பதிவை ஏற்றிவிட்டு பேரூந்து நிலையத்துக்கு போன போது எல்லோருக்கும் சேர்த்து காலை அது பாட்டுக்கு விடிந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.  யன்னலோர சீட்டை பிடித்து அப்படியே சாய்ந்தால் Southern Cross ஸ்டேஷன் வந்தபோது தான் கண் விழித்தேன். இப்படி ஏன் எழுதவேண்டும்? உனக்கென்ன காசா? பணமா? லைக் கூட விழுவதில்லையே என்று யாராவது திட்டினால் வேறொன்றுமில்லை. சக்திவேல் அண்ணேயிடம் கேட்டால் சரியாக சொல்லுவார். “அரிப்பு”.
அலுவலகத்துக்கு போகவே முதல் கடிதம் வாணியிடம் இருந்து.
“OMG, I saw your entry at 3AM when I woke up with my youngest and I read it without even thinking about sleeping. Normally, each minute counts for me regarding sleep as my sons are not good sleepers. So now you should know how you mesmerise your readers with your writing.”
அதற்கு பிறகு அலுவலகத்தில் தூக்கமே வரவில்லை. அகிலன் மத்தியானம் அழைத்து “வக்ரதுண்ட வாழ்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக், உன் பதிவில் அப்படி ஒரு தவறு வரக்கூடாது” என்றான். அங்கேயே வைத்து திருத்திவிட்டு கஜனுக்கு அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, தலைக்கு வாய் குழறியது. “சூர்யான்னா யார்னு தெரியுமாடா?”
ஒருவர் “We have lots to write, we don't have time, you have taken up the burden” என்று ஒரு கொமென்ட் போட்டிருந்தார். சிரித்துக்கொண்டேன்.
“You have no clue at all buddy”.


பூமாலையில் ஒரு மல்லிகை

அகிலன் ஹம் பண்ணிக்காட்டிய போது இந்த பாடலில் இருக்கும் ஒருவித அலை தெரிந்தது. அதுவும் “நான்”, “தான்” சங்கதிகள் எம்எஸ்வி டச். அருமையாக டிஎம்எஸ் பாடியிருப்பார். கரும்போ, கனியோ கவிதை சுவையோ என்று சுசீலா ஒவ்வொரு முறையும் பாடும்போது ஒவ்வொரு சுவை. “சும்மா போட்டிருக்கிறாங்கள் மச்சான்” என்று அகிலனிடம் சொன்னேன். “அவங்கள் ஆருடா .. ஆனா இப்பவும் நல்ல பாட்டு வருது” என்று “உன்னை காணாத நாளிங்கு” விஸ்வரூபம் பாட்டை சொன்னான்.  உண்மை தான், நல்ல இசை எந்த காலத்திலுமே வந்து கொண்டே இருக்கும். அதற்கு அழிவே கிடையாது. அந்த காலம்,  இந்த காலம், எம்எஸ்வி, ராஜா, ரகுமான், ராஜா முன்ன மாதிரி இல்லையே என்று தேர்வு செய்ய ஆரம்பிக்கிறோம் என்றால் இசையை விட்டுவிட்டு வேறு எதையோ ரசிக்கிறோம் என்று தான் அர்த்தம்.


என்ன ஒன்று ஒரு மலைக்கு மேலே இன்னொரு மலையை படுக்க வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். பாட்டு ஷூட்டிங் போது கே.ஆர்.விஜயாவை பார்த்து யாரோ ஒரு லைட் மேன் “புன்னகை அரசி வாழ்க” என்று கோஷம் போட்டிருக்கவேண்டும் போல.  அவரும் சான்ஸ் கிடைக்கிற நேரமெல்லாம் டென்டிஸ்ட் அப்போய்ன்ட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார். முடியல. ஒரே ஒரு நிம்மதி, வழமையாக டிஎம்எஸ் சங்கதிகளுக்கு இணையாக முகத்தில் அலாரிப்பு நாட்டியமே ஆடும் சிவாஜி இதில் அடக்கி வாசித்திருப்பது தான்.


விஸ்வரூபம் பார்ட் டூ


images
அம்மாவும் அப்பாவும் எங்கேயோ ஒரு கடையில் விஸ்வரூபம் சிடியை வாங்கிக்கொண்டு வந்து நீட்டினார்கள். போட்டுவிட்டேன். கமல் சக் சக்கென்று அத்தனை பேரையும் கொன்று குவித்துக்கொண்டிருக்க, ஜிம்முக்கு போகணும் என்று நான் எஸ்கேப். இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தால் படம் இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது. என்னப்பா இன்னமும் முடியேல்லையா? என்று கேட்டால் அப்பா சொன்னார் “இல்லடா .. விஸ்வரூபம் பார்ட் டூ திருட்டு விசிடியில வந்திட்டு போல, பார்ட் வன்னை விட நல்லா இருக்கு. அடிபாடு ஒண்டும் இல்லை” என்றார். என்ன கருமம் என்று டிவியை பார்த்தால் … “உன்னைப்போல் ஒருவன்” போய்க்கொண்டிருந்தது.
வெளங்கிடும்.
&&&&&&&&&&

Contact form