வியாழமாற்றம் : 07-03-2013 : பிரான்ஸிஸ் ஹாரிசன்

Mar 7, 2013

பிரான்ஸிஸ் ஹாரிசன்

images (1)“இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த நாட்களில் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு ஒரு சிங்கள பத்திரிகையாளர் தான் தவறான தகவல்கள் குடுத்தாராமே, அது உண்மையா?” என்று ஒருவர் உளறிக்கொட்ட பிரான்சிஸ் ஹாரிசன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்
“சிங்கள பத்திரிகையாளர் இருந்தாரா என்று தெரியாது. ஆனால் அப்போது விஜய் நம்பியார் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார்”
தை மாதம் Still Counting The Dead வாசித்து முடித்தவுடனேயே தோன்றிய எண்ணம். இத்தனை இன்னல் பட்ட பத்துபேரின் வாழ்க்கையை அதே உணர்வுகளோடு, உருக்குலைவுகளோடு, கண்ணீரோடு எப்படி இந்த பெண்மணியால் கொண்டுவர முடிந்தது என்ற எண்ணம். வெறும் பத்திரிகையாளராக இதை எழுத முடியாது. இதை எழுத தன் விழியால் பிறருக்கழுகின்ற மனசு வேண்டும். அது பிரான்ஸிஸிடம் இருக்கிறது. அவரை தூரவேனும் நின்று பார்த்திட வேண்டும் என்று அவர் எப்போது ஆஸி வருகிறார் என்று அறிந்து, ஜூட் அண்ணாவுக்கு கோல் பண்ணி, “அவர் மெல்பேர்ன் வந்தா சொல்லாம விட்டிடாதீங்க அண்ணே” என்று ஞாபகப்படுத்தி, இரண்டு மாதங்களுக்குள்ளேயே அவரை நேரில் சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்பு காலையிலேயே தொற்றிவிட்டது. அலுவலகத்துக்கு போனால், சரியான சமயத்தில் கூட்டத்துக்கு போய்ச்சேருவது கடினம் என்பதால் திடீர் காய்ச்சலை உருவாக்கி, ஸிக் போட்டு, ஐந்து மணிக்கே கேதாவை பிக்கப் பண்ணிக்கொண்டு கூட்டத்துக்கு ஏழு மணிக்கு போனால் மூன்று பேர் வழமை போல சரியான டைமுக்கு வந்திருந்தார்கள்.
“யாராவது எதையாவது செய்வார்கள் என்று ஒரு வருடம், ரெண்டு வருடம், மூன்று வருடம் என்று காத்திருந்தேன். ஒன்றுமே நடக்கவில்லை. எல்லாமே தலைகீழாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஓர் பேரழிவை உலகத்துக்கு சொல்லவேண்டாமா? ஒரு பத்திரிகையாளராக நான் என்ன செய்யமுடியும் என்று யோசித்தே, இப்படிப்பட்ட அனுபவங்களை சேகரித்து புத்தகமாக வெளியிட்டேன்” என்று இந்த புத்தகம் உருவானமைக்கான காரணத்தை விளக்கினார். வைத்தியர் நிரோன் பற்றிய இரண்டு பக்கங்களை வாசித்துக்காட்டி, இன்றைக்கும் இந்த வைத்தியர் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றார். அவருக்கு கனடா அமைப்பு ஒன்று கொடுத்த “வாழ்நாள் சாதனையாளர்” விருதை கூட, பிரான்சிஸ் ஹாரிசன் தான் ரகசியமாக நிரோனிடம் சேர்ப்பித்தாராம்.  எப்படிப்பட்ட பெண்மணி என்று பாருங்கள்.
பொதுநலவாய அமைப்புகளின் மாநாடு இலங்கையில் இடம்பெறுமா? நடந்தால் பிரிட்டன் அதை புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு அதற்கான சந்தர்ப்பம் குறைவு என்றார். கமரூன் வெறும் வாக்குகளுக்காக ஈழத்தமிழர் அது இது என்று போற்றிப்பாடினாலும் இப்படியான முடிவு எடுக்க தயங்கலாம் என்றார். கனடா அளவுக்கு இன்னமும் இரண்டு மூன்று நாடுகள், அதுவும் ஆபிரிக்கா, ஆசியா பகுதிகளில் இருந்த சில நாடுகள் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தாலே இது சாத்தியம் என்று புருவம் சுருங்க கவலைப்பட்டார்.
Screen-Shot-2012-12-01-at-5.33.36-PM[4]பெரும்பாலான கேள்விகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை தாக்கியே கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்குமான பதில்களை மிக விவரமாக அவர் தன் புத்தகத்திலேயே விளக்கியிருக்கிறார். “மக்களை கொல்லுவதற்கு ஐக்கிய நாடுகளில் அனுமதி உண்டா?” என்று ஒரு பெண்மணி ஆதங்கமாகவே கேள்விகேட்டார். அப்படிப்பட்ட கேள்வியை, எம்மோடு சேர்ந்து, எம்மைவிட ஆயிரம் மடங்கு இந்த அநீதிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் பிரான்ஸிஸ் ஹாரிசனிடம் கேட்பது அபத்தமாக இருந்தது. ஆனால் அவர் அதற்கும் பொறுமையாக பதில் சொன்னார்.
அனேகமானவர்கள் பதில்கள் தெரிந்த கேள்விகளையே கேட்டார்கள். இப்படியான கேள்விகள் ஏன் கேட்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். இது ஒருவித உளவியல் பிரச்சனையாக இருக்கலாம். அரசியல் கேள்விகள், அட்டகாசமான கேள்விகளை கேட்டு பக்கத்தில் இருப்பவருக்கு தன்னுடைய ஈழப்பிரச்சனை உலக அரசியல் பற்றிய அறிவை காட்டுவதற்காக கேட்கப்படுபவையாகவே அவை பெரும்பாலும் இருந்தன. கேள்வியை கேட்டபின்னர், பிரான்சிஸ் பதில் சொல்லும்போதே கேட்டவர் அடுத்த கேள்விக்கு தயாராகிக்கொண்டிருந்ததும் நடந்தது!
என்னிடம் பிரத்தியேக கேள்விகள் என்று எதுவும் இருக்கவில்லை. நன்றி மட்டுமே சொல்லவேண்டும் போல இருந்தது. கூட்டத்துக்கு வந்தால் மறக்காமல் தன்னை வந்து சந்திக்குமாறு facebook இல் மெசேஜ் அனுப்பியிருந்தார். கூட்டம் முடிந்தால் சந்தர்ப்பம் கிடைக்காதோ என்ற பயத்தில் “பிரான்சிஸ்” என்று கை உயர்த்தும்போது, முன்னால் இருந்தவர் “ஐக்கிய நாடுகள் ஏன் எங்களை கண்டுகொள்ளவில்லை, நீங்கள் உங்கள் தொடர்புகளூடாக ஏதாவது செய்யமுடியாதா?” என்று பதினேழாவது தடவையாக கேட்கப்பட்ட கேள்வியை திருப்பிக்கேட்டார். “நான் வெறும் பத்திரிகையாளர், என்னால் செய்ய முடிந்தது இந்த புத்தகம் தான்” என்று மேசையில் தூக்கிப்போட்டார், சலிப்பை காட்டாமலேயே சிரித்துக்கொண்டு.
இப்போது கை உயர்த்தினேன். அரசியல் கேள்வி கேட்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் பிரான்ஸிஸ் என்ன சொல்லுவார் என்றும் எனக்கு தெரியும். அவரை மிக தீவிரமாக பின்தொடரும் வாசகன் நான். என் எண்ணமெல்லாம் அவர் எழுதிய புத்தகம் பற்றியே. “வாசிக்கும்போது அவமானமாக, ரணமாக இருந்தது. அழுதுவிட்டேன் (It was a humiliating and painful exercise, I was in full of tears)..” என்று நான் சொல்லும்போதே “நீங்களா அந்த ட்ரெயினில் அழுதது?” என்று கேட்க “ஆம்” என்றேன். “சொன்னது போல வந்துவிட்டீர்கள், நன்றி” என்றார். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எனக்கு இப்படியான கேள்வி பதில் என்றாலே வாய் டைப் அடிக்க ஆரம்பித்துவிடும். சென்றவருடம் சுமந்திரனிடமும் இது நடந்தது. தட்டுத்தடுமாறி “இந்த புத்தகத்துக்கு மிக்க நன்றிகள், இதிலே நீங்கள் முப்பது பேரளவில் கண்டு பேசியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். பத்து பேரின் வாழ்க்கையே இந்த பதிப்பில் இருக்கிறது. இதன் தொடர் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா? அந்த வாழ்க்கைகள் அப்படியே சொல்லப்படாமல் போய்விடக்கூடாது இல்லையா?” என்றேன்.
“அப்படி ஒரு எண்ணம் இல்லை. சொல்லப்போனால் லட்சக்கணக்கானோர் இப்படி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வெளிவரவேண்டும். எனக்கு தெரிந்து அவரவர் தங்கள் வாழ்க்கையை குறிப்பெடுத்துக்கூட வைத்திருக்கிறார்கள். அவை எல்லாம் வெளிவரவேண்டும். ஆங்கிலம் என்றில்லை, தமிழில் கூட இருக்கலாம். சொல்லப்படவேண்டும். அவ்வளவே. அதை நீங்கள் கூட செய்யலாம்” என்றார்.
1353344651-former-bbc-foreign-correspondent-frances-harrison_1608520
கூடவே அந்தப்புத்தகத்தில் இல்லாத ஒருவரின் அனுபவத்தை விவரித்தார். ஒரு தமிழ் சிங்கள பெற்றோருக்கு பிறந்த பெண் பட்ட பாடு அது. அந்தப்பெண் மாறி மாறி குழு பாலியல் வன்முறைக்கு உள்ளானதையும், உறவுகள் எல்லோரையும் இழந்ததையும், இறுதியில் ஐரோப்பியா வந்து சேர்ந்தபின் அந்த பெண் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்ததையும் விவரிக்க விவரிக்க எனக்கு விசர் பிடித்தது. அதுவும் கேள்வி கேட்டது நானானதால் என்னையே பார்த்துக்கொண்டு அவர் பேச, என் முகம் கறுத்து கண்கள் குழம்ப ஆரம்பித்தது. நேரில் பார்க்க முடியாமல் தலை குனிந்துவிட்டேன். நிமிர்ந்து பார்த்து நன்றி கூட சொல்ல முடியவில்லை.
இறுதியாக ஒரு கேள்வி என்றார்கள். “ஈழப்பிரச்சனையை வெளியில் இருந்து பார்க்கும் புத்திஜீவி என்ற வகையில், ஆளாளுக்கு பிரிந்து அடிபட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?” என்றார் ஒரு வயோதிபர். முக்கியமான கேள்வி அது. பிரான்சிஸின் பதில் உலகத்தமிழர் எல்லோருக்கும் போய் சேரவேண்டியது.
“புலிகள் இருக்கும்போது ஒரே கொள்கை, ஒரு கருத்து, மாற்றுக்கருத்தாளர்கள் சத்தம்போடாமல் இருந்தார்கள். இப்போது நிலைமை வேறு என்பதால் எல்லோரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த நிலையை நீங்கள் தவிர்க்கமுடியாது. You have to get through this process. சிலவேளைகளில் அது நல்லதும் கூட. எல்லோரும் கருத்துரையாடுங்கள். போருக்கு பின்னரான ஈழம் எது என்ற ஒரு தெளிவான பார்வைக்கு வாருங்கள். இப்போதைய உலகநிலை, உள்நாட்டு நிலை, புலம்பெயர் தமிழர் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உங்கள் ஈழத்தை மீள்வரையறை செய்து தெளிவாகுங்கள். அதை நீங்கள் தெளிவு படுத்தினால் தானே வெளியார் எங்களுக்கு புரியும். இன்னமுமே எனக்கு அது சரியாக புரியவில்லை” என்றார்.
“வெளிநாட்டு அமைப்புகளை உள்வாங்கிக்கொண்டு உங்கள் செயற்பாடுகள் நீங்கள் செய்யுங்கள். தனி நபராக உங்கள் பிரச்சனை என்ன என்று நண்பர்களுக்கு சொல்லுங்கள். அலுவலகம், கிளப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்று எதையுமே விட்டுவைக்கவேண்டாம். கிரிக்கட் ரசிகர்களுக்கு கூட தெரியப்படுத்தலாம்” என்றார்.
மூன்றாவதாக முக்கியமாக ஒன்றை சொன்னார்.
“எடுத்ததுக்கெல்லாம் ஐநா என்ன செய்தது. உலகம் என்ன செய்தது என்று உங்களை தவிர மிகுதி எல்லோரையும் குறை சொல்லும் பாங்கு இருக்கிறது. அவர்கள் செய்தது பிழை தான். குறை சொல்லத்தான் வேண்டும். ஆனால் உங்கள் பிரச்சனைகளை முறையாக உலகம் கேட்கும்படி செய்யும் பொறுப்பு உங்களிடம் தானே இருக்கிறது. மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதை குறைத்து நீங்கள் என்ன தவறுகள் செய்தீர்கள் என்று அறிந்து அதிலிருந்து பாடம் படிக்கவேண்டியது மிக முக்கியமானது” என்றார்.
சபையை நிறைத்திருந்தவர்கள் அனேகமானவர்கள் அறுபதை தாண்டியவர்கள். எண்ணிப்பார்த்தால் நான்கு இளைஞர்கள் இருந்திருப்பார்கள். அதிலும் ஒரு பெண் சிங்கப்பூரை சேர்ந்தவர். தமிழ் எங்கள் மூச்சு, தமிழன் லெமூரியாக் கண்டத்தில் முதன் முதலில் ஐபாடை கண்டுபிடித்தான், டைனோசருக்கு புட்டும் தேங்காய்ப்பூ சம்பலும் செய்து கொடுத்தான் என்ற ரீதியில் பெருமை பேசுபவர்களை அன்று காணாமல் போனது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. சந்தானம் நைட்டில் மீட் பண்ணுவோம் கைஸ்!
நிகழ்ச்சி முடிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு பிரான்ஸிஸிடம் ஓடினேன். “So glad you came to see me” என்றார். பெருமையாக இருந்தது. “இந்த புத்தகம் என்னை கூனி குறுக(humble) வைத்துவிட்டது, இப்போதெல்லாம் டக்ஸ் அதிகம், எட்டு நாளாய் வெயில் முப்பதில் எரிக்கிறது, ட்ரையின் டிலே என்று சின்னப்பிள்ளை முறைப்பாடுகள் செய்யமுடிவதில்லை, எவ்வளவு தான் மனசு பாரமாக இருந்தாலும் இவர்கள் பிரச்சனைகளுக்கு முன்னாலே என்னது நத்திங் என்றே நினைத்து அமைதியாகிறேன்” என்று நேற்று நான் ஆங்கிலத்தில் எழுதின பதிவின் சாராம்சத்தை சொன்னேன். சிரித்தார். “நீங்கள் அனுப்பிய மெசேஜை huffingtonpost இல் என்னுடைய பத்தியில் சேர்த்திருக்கிறேன். பெயரை குறிப்பிடாமல் தான் எழுதியிருக்கிறேன், கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார். மறக்காமல் அடுத்தநாள் காலை அவரிடமிருந்து அந்த நியூஸ் லிங்க் என் மெசேஜ் பொக்ஸில் வந்திருந்தது. மேன் மக்கள் மேன் மக்களே. கொஞ்சம் நன்றாகே எழுதுகிறோமோ என்றெல்லாம் எண்ணம் வீட்டு வாசலை தட்டும்போது இப்படி யாராவது வந்து பக்குவம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டு போகிறார்கள். வாசகனாய் கிடைத்த முதல் அங்கீகாரமும் சந்தோசமும் இது.
வீடு வந்து புத்தகத்தை திறந்து பார்த்தேன்.
For JK,
So great to meet you in Person!
Frances
என்று பெரிய கையெழுத்தில் அழுத்தி எழுதியிருந்ததில் அவர் வாசகன் மீது கொண்ட மதிப்பும் பாசமும் புரிந்தது. இன்றைக்கு facebook இல் சாட் பண்ணும்போது சொன்னார்.
FH : This one is for you! Great to meet you in person yesterday - thank u! fh
JK : Thank you Francis. Moment of glory for me meeting you. During your reporting time in SL, your voice-over would be played before the Tamil translation in BBC Tamil service. Ten years after I have talked to you in person now! wow. Thank you. Bit surprised to know that there are negative comments about the book. Then again its Sri Lanka! like you mentioned in the book, 'Denial has become a Sri Lankan habit', including Tamils too. Thank you again.
FH : wow - didn't expect to have my words quoted back at me! But yes. f
இது போதும் எனக்கு இது போதுமே. வேறென்ன வேண்டும்?

நிலா நிலா ஓடி வரவா?

கெய்லா ஒரு சுட்டிப்பெண். இரண்டே வயது தான். அவளுக்கு நிலா என்றால் கொள்ளை இஷ்டம். எப்போது வானத்தில் நிலாவை கண்டாலும் “நிலா நிலா நிலா” என்று கத்துவாள். அப்பா “நிலாவை போய் பிடி” என்று சொல்ல, இவள் முடியாது என்கிறாள். “முடியும் பாய்ந்து பார்” என்கிறார் அப்பா. கெய்லா பாய்ந்து பார்க்கிறாள். “என்னால பிடிக்க முடியேல அப்பா” என்கிறாள். “இல்ல முடியும், இன்னும் நல்லா பாய்” என்கிறார் அப்பா.  கெய்லாவும் அதை நம்பி மீண்டும் மீண்டும் முயன்று பார்க்கிறாள். இறுதியில் பிடிக்கமுடியவில்லையே என்று குழந்தையின் முகம் வாடிவிட்டது. ச்சோ கியூட்.
இந்த வீடியோவை பார்த்த நாஸா உத்தியோகத்தர் ஒருவர் கெய்லாவை அழைத்து நிலாவை எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கமாக காட்டமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக ஆய்வுகூட தொலைகாட்டி மூலம் காட்டியிருக்கிறார். கெய்லா இரண்டு வயதில் முயன்றாள். சாதித்தும் விட்டாள்.
இந்த வீடியோவை பார்த்தது முதல் எனக்கு ஆச்சர்யம் தான். அதுவும் அவள் அப்பா மீது. எங்கள் ஊரில் என்றால் “நிலா நிலா ஓடி வா” என்று லொஜிக் இல்லாமல் பாட வைப்பார்கள். அதை நம்பி வளர்ந்த நாங்களும் பெண்ணை பார்த்தெல்லாம் நிலாவுக்கு ஒப்பிடுவோம். கடைசியில் அதுவும் வந்து சேராது என்பது வேற விஷயம். இங்கே இந்த தந்தை “நிலாவை எல்லாம் பிடிக்கமுடியுமா? அலம்பாம வா” என்று மகளை அதட்டாமல், அவளாகவே முயன்று பார்க்கட்டும் என்று ஊக்குவிக்கிறார்.
பல நண்பர்களுக்கு கெய்லாவின் செய்கையை பார்க்க சின்னப்பிள்ளைதனமாக இருந்தது. Facebook இலே அர்த்தமே இல்லாத நக்கல் கொமெண்டுகள் வந்தன. அது தான் எங்கள் பிரச்சனை. நிலாவை சும்மா பாய்ந்து பிடிக்கமுடியாது என்று வளர்ந்தவர்கள் நாங்கள் முன்முடிபுபண்ணி வைத்திருக்கிறோம். அதனால், பிள்ளை பிடிக்கலாம் என்று முயலும்போது அறிவுரை செய்கிறேன் பேர்வழி என்று “நிலாவை பிடிக்க ஏலுமே, அது அங்க கிடக்கு உனக்கேன்ன லூசா?” என்று கேட்டுவிடுவோம். “Our minds are corrupted and we have too much of prejudice” என்று சயந்தன் மிக அருமையான கருத்து ஒன்றை என் ஆங்கில பதிவில் சொல்லியிருந்தான். பெரியவர்கள் எங்களால் ஏற்கனவே புரையேறிப்போயிருக்கும் சிந்தனைகளை மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த சிந்தனைகள் தவறாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறை ஒரு நாளும் நாங்கள் நிராகரிக்கக்கூடாது. அது விஞ்ஞானமாக இருக்கலாம். கலாச்சாரமாக இருக்கலாம். மொழியாக கூட இருக்கலாம்.
முட்டாளாயிரு, பசித்திரு, (Stay foolish, Stay hungry) வாழ்க்கையில் வெற்றிபெற இது இரண்டும் அவசியம் என்று ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருப்பார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மின் காந்தவியல் சார்ந்த தேடல், அவர் நான்கு வயதில் ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கும்போது, அப்பா விளையாடவென கொடுத்த திசைகாட்டியில் இருந்து ஆரம்பித்தது. “என்னடா இது எந்த இயந்திரமும் இல்லாமல், கண்ணுக்கு புலப்படாத சக்தியால் திசை காட்டி நகருகிறதே” என்று நினைத்தது இன்றைக்கு எமக்கு E=MC2 ஐ கொடுத்திருக்கிறது. தியரி ஒப் ரிலேட்டிவிட்டியை கொடுத்திருக்கிறது. இத்தனையாயிரம் விஞ்ஞானிகளை அவர் வழியில் பின் தொடர வைத்தது. அவரே சொல்லுகிறார்.
“Never cease to stand like curious children before the great mystery into which we were born”
93434191-einstein-tongue_custom-36fb0ce35776dc2d92eda90880022bf48a67e192-s6-c10
மிகப்பெரும் அறிவுஜீவிகளுக்கு இந்த சிந்தனை மிதமிஞ்சி இருக்கும். Misfits, crazy, rebels, trouble makers என்று அப்பிளின Think Different விளம்பரம் பெருமையாக ஐன்ஸ்டீன், காந்தி போன்றவர்களை குறிப்பிடும். சாதாரணமாக எங்களிடம் இல்லாதது அவர்களுக்கு இருப்பதால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எங்களுக்கு புரிவதில்லை. அதனால் எங்களை விடுத்து அவர்களுக்கு ஆட்டிசம் (Autism) வியாதி இருப்பதாக சொல்லிக்கொள்ளுவோம் நாங்கள். Losers.
இனிமேலும் எங்கள் குழந்தைகள் ஏறுக்கு மாறாக ஏதாவது சொன்னால் செய்தால் கவனமாக வெடிக்கை பாருங்கள். மரத்தில் ஏறும் குழந்தையை ஏறவிட்டு விழும்போது பிடிப்பது தான் குழந்தைக்கு நல்லது என்கிறார்கள். என்னை என் பெற்றோர் அப்படி வளர்க்கவில்லையோ என்ற குறை அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இதை போய் என் அக்காவுக்கோ நண்பர்களுக்கு சொன்னால், “உனக்கென்று குடும்பம் குட்டி வந்தால் அப்ப புரியும். அதுக்கு பிறகு என்ன நடக்குது என்று பார்க்கலாம்” என்கிறார்கள் …அடச்சே …  யாருடி நீயி? அப்பிடி எங்க தான் இருந்து தொலைக்கிறாய்?

யார் அந்த கண்ணம்மா?

காதல் பற்றி எழுதும்போது “வீட்டில் செல்லம்மா சிவனே என்று இருக்க “தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்” என்று கண்ணமாவை பார்த்து பாடினான் பாரதி.” என்று சொல்லியிருந்தேன் அல்லவா.  துஷி “அது தப்பாட்டம் அண்ணே, பாரதி செல்லம்மா செல்லம்மா என்று தான் எழுதினார். கொஞ்சம் ஓவராக இருந்ததால் பிற்காலத்தில் செல்லம்மாவின் அண்ணன்காரன் தான் அதை கண்ணம்மாவாக மாற்றிவிட்டார்” என்று புது குண்டை தூக்கிப்போட்டான். தக்காளி இப்பிடி எல்லாமா உல்டா பண்ணுவாங்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. நம்பவும் முடியவில்லை. துஷி வேறு மாட்டர் உள்ள ஆள் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. பாரதியார் கவிதைகள் புத்தகத்தை தூசி தட்டினேன்.

b1கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ ?
விண்ணவர் தொழுதிடும் - வீரச் சிங்கா தனத்தே 
நண்ணிச்சிவன் உடலை - நாடும் அவள் என்கோ?
எண்ணத் ததிக்குதடா - இவள் பொன் உடலமுதம் !
பெண்ணில் அரசி இவள் - பெரிய எழில் உடையாள்
கண்ணுள் மணிஎனக்குக் - காதல் இரதியிவள்
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணும் இதழ்அமுத ஊற்றினள் கண்ணம்மா
கவிதையை வாசிக்கும்போது, கலியாணமான புதுசில் செல்லம்மாவை பார்த்து பாரதி இதை பாடியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் “நண்ணிச்சிவன் உடலை நாடும் அவள் என்கோ” என்று கட்டிய மனைவியை நெருங்கும்போது எவனாவது பாடுவான்? எனக்கென்னவோ இந்த இடத்தில் கண்ணம்மா என்று தேவியை தான் காதலியாக்குகிறான் பாரதி என்றே தோன்றுகிறது.
திருவே நினைக்காதல் கொண்டேனே -- நினது திரு
உருவே மறவா திருந்தேனே -- பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே -- நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே -- அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே -- மிகவும்நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே -- இடைம்நடுவில்
பையச் சதிகள்செய் தாயே -- அதனிலுமென்
மையல் வளர்தல்கண் டாயே -- அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே -- நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே -- பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே -- அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே -- அடியெனது
தேனே, எனதிரு கண்ணே, -- எனையுகந்து
தானே வருந்திருப் -- பெண்ணே!
என்று அடுக்களைக்குள் இவன் வருகைக்காய் ஆக்கி வைத்து காத்திருக்கும் செல்லம்மாவை பார்த்து பாரதி ஏன் பாடவேண்டும்? பாரதிக்கு கண்ணம்மா என்பது ஒரு கனவு. தேவதை. அவன் இஷ்டத்துக்கு அந்த தேவதை உருமாறுவாள். அது செல்லம்மாவுக்கு புரிந்திருக்காது. பேதைப்பெண் தன்னைத்தான் இந்த முண்டாசுத்தலையன் பாடிக்கொண்டு திரிகிறான் என்று நினைத்திருக்கலாம். அண்ணன்காரனும் ஆறுதல் கூறியிருக்கலாம். மற்றும்படி பாரதி என்பவன் ஐன்ஸ்டீன், காந்தி வரிசையில் வந்த misfit, rebel. ஆட்டிச வியாதிக்காரன். சாமானியர் எமக்கு அவன் என்ன நினைத்திருப்பான் என்று புரிவது என்பது ஆகாத விஷயம். அவன் கவிதைகளை வேண்டுமானால் எங்கள் தளத்தில் ஆராயலாம். இங்கே நான் செய்வது போல.  அவ்வளவே.

பள்ளம் குழி பாத புரியல!

“சொல்லு மேகலா .. அப்படீண்டா பிடிக்கவே இல்லையா?”
Caramel latte இல் கவனமாக அரை பக்கட் சீனியை அளந்து போட்டுக்கொண்டிருக்கும்போது தான் குமரன் கேட்டான். மேகலா நிமிர்ந்து அவனின் கண்களை நேராக பார்த்தாள்.
“சொன்னேனா?”
“அப்ப இருக்கு எண்டுறாய்?”
“ஹெலோ … எக்ஸ் கியூஸ் மீ சேர், இது வெறும் மீட்டிங் தான் .. டேட்டிங் கூட கிடையாது. ஜஸ்ட் டாம்ன் கொஃபி, அது வேற கடைல நிக்கிற எருமை மாடு, பாலை ஒழுங்கா ஸ்டீம் பண்ணாம .. பாரு கருகி மணக்குது .. ப்ச் ”Neethane-En-Ponvasantham_takie_portion“முப்பத்திரண்டாவது தடவை … பதினாலு டைம் குளோரியாவில, பத்து தடவை கொஃபிபீன்ஸ், ஆறு தடவை உண்ட ஹோஸ்பிடலுக்கு பக்கத்தில இருக்கிற லோக்கல் கடை ..ஸ்டில் .. ஒரு ஹின்ட் கூட இல்லையே’
“முப்பத்தி ஒண்டு தான் வருது .. மற்றது எங்கே?”
“விளையாடாத மேகலா ப்ளீஸ் .. பி சீரியஸ்”
“சரி என்ன வேணும் சொல்லு”
“ஏதாவது தெளிவா சொல்லு .. பிடிச்சிருக்கா .. என்னை மாதிரி பட்டென்று சொல்லு .. இல்லையா … அப்ப கூட ஐ லவ் யூ எண்டே சொல்லலாம் .. தப்பில்ல”
“பார்த்தியா .. உண்ட டகால்டி வேலையை காட்டீட்ட”
“இல்ல மேகலா .. இட்ஸ் கில்லிங் … வட்ஸ் ரோங் வித் மீ சொல்லு? படிப்பில்லையா .. அழகு .. சரி லூஸ்ல விடு … குவாண்டம் பிஸிக்ஸ் .. கேளேன் .. க்வார்க் இன்டெர் எனெர்ஜி எப்பிடி வோர்க் பண்ணும் எண்டு ..”
“செம மொக்கைடா நீ … கொஃபி ஷாப்பில குவாண்டம் கதைக்கிற… உருப்படுவியா? உன்னை நம்பேலாது .. சுத்த கள்ளன்டா நீ! யூ மேக் திங்க்ஸ் அஃப் .. ”
“நீயும் தான் மேக் அப் போடுறாய்.. நான் சொன்னேனா? இந்த சம்மரில யாராவது வயலட் கலர் லிப்ஸ்டிக் அதுவும் இந்தா அப்பு அப்புவாளவையா? சகிக்கல. பட் பேசாமா இருக்கிறன் தானே”
“அடி வாங்க போற நீ’

சொல்லிக்கொண்டே தன்னுடைய ஹான்ட் பாக்கில் இருந்த குட்டி கண்ணாடியை வெளியில் எடுத்த மேகலா அவசர அவசரமாக லிப்ஸ்டிக்கை அட்ஜஸ்ட் பார்த்து செய்தாள். திருப்திபட்டவளாய் தோன்றவில்லை. குமரனை பார்த்து கேட்டாள்.

“இப்ப ஓகேயா?”
“நீ தான் சொல்லோணும் மேகலா … நான் எப்பவுமே ஒகே தான்”
“அடங்க மாட்டியா சரியான ஜவ்வுடா நீ .. சரி விடு”
“என்ன சொல்ற”
“சரி .. நீயும் தான் எவ்வளவு காலத்துக்கு படலைலேயே கிடப்பாய் .. பிழைச்சுப்போ ராஜா”
“நிஜமா தான் சொல்லுறியா? ப்ச் .. இங்க பாரு கூஸ் பம்டி … ஆர் யூ ஷுவர்”
“போதும்டா கதையே இல்லாமா எவ்வளவு நேரம் தான் இழுப்பாய் .. பாட்டு போடு .. கிளாசிக் ரொமாண்டிக் சோங்”
“போட்டா போச்சு .. ஏதாவது ஸ்பெசிபிஃக் ராகம்?”
“துலைச்சு போடுவன் .. ராகம், பாடியவர், உனக்கு 90ம் ஆண்டில அந்த ரோட்டில இந்த சீனில மனதை அள்ளிச்சு எண்ட எந்த லொள்ளும் பண்ணாம பாட்டுக்கு போ”
“இத மாதிரி ஏற்கனவே இளையராஜா போட்டிருக்கிறார் எண்டு ..”
“ஒரு மண்ணும் வேண்டாம் .. நேரே பாட்டை போட்டு வியாழமாற்றத்தை முடிடா டொங்கா”
“ஓல்ரைட் .. தேர் யூ கோ.. எடுத்துக்கோ”

வர வர உன்னோட பாடல் விளக்கம் எல்லாம் டெக்னிக்கலா இருக்குடா. பீல் பண்ணி எழுதுறது குறைஞ்சு போச்சு, வித்தியாசமா ட்ரை பண்ணு” என்றான் கஜன்(நான் எப்பேடா சொன்னேன்?). அதுக்காக தான் இந்த முயற்சி! மற்றும்படி எந்த ஆணி புடுங்கினாலும் அது தேவையில்லாத ஆணி தான் பாஸு! ஆளாளுக்கு என்னைய போட்டு கும்மாதீங்க மக்களே.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Contact Form