வியாழமாற்றம் 21-03-2013 : ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்

Mar 21, 2013

Lanka-marina_1401367gஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்!


தமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை காட்டவேண்டும்.

நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த ஈமெயில் இது. மாணவர் போராட்டம், தமிழக அரசியல் நிலைமை என்றெல்லாம் விரிவாக எழுதலாம் தான். தகுதி இருக்கிறதா? என்று கேட்டு யாரேனும் கன்னத்தை பொத்தி அறைவார்களோ என்ற எண்ணம் வந்தது. கருணாநிதியை கொலைஞர், கிழம் என்றெல்லாம் கீழ்த்தரமாக திட்டுவதையும், 2009 இல் இதை செய்யாமல் இப்போது செய்வதை நாடகம் என்று ஏசுவதையும் பார்க்க கொஞ்சம் சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.  காலம் தாழ்த்திய, தவறான முடிவுகளை எடுத்தவர்களை எல்லாம் இப்படித்தான் திட்டவேண்டும் என்றால் நாங்கள் சேர் பொன் இராமநாதனிடம் இருந்து ஆரம்பித்து, ஜிஜி பொன்னம்பலம், செல்வா, அமிர்தலிங்கம், பிராபகரன், என் அப்பா, உங்கள் அப்பா, நான், நீங்கள் வரைக்கும் வரிசைப்படுத்த வேண்டி இருக்கும். தவறு விட்டவர்களை சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது, facebook இருக்கிறது என்பதற்காக கையில் கிடைத்த கற்களால் அடிக்க ஆரம்பித்தோமானால் நாம் எல்லோருமே மண்டை உடைபட்டு கிடக்க வேண்டிவரும். அத்தனை தவறுகள். தவறுகள் இல்லாமல் எங்கள் போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்காது. எங்களுடைய எல்லா தவறுகளுமே கியூவில் நின்றால், கலைஞரது தவறுகள் கல்வியங்காடு சந்தி தாண்டி குச்சொழுங்கைக்குள் போய் நிற்கும். வேண்டாமே. எல்லோரையும் நக்கல் அடித்து நக்கல் அடித்து யாருமே இல்லாத அநாதைகள் ஆகவேண்டாமே. ஆகியிருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன்.
karunaமாணவர்களின் எழுச்சி, வாசிக்கும்போது, கேட்கும்போது, பார்க்கும்போது கை துறுதுறுக்கிறது. ஏதாவது செய்யவேண்டும் போல. தோள் கொடுக்கவேண்டும் போல. “வாருங்கள் தோழர்களே, ஒன்றாய் சேருங்கள் தோழர்களே, போகுமிடம் வெகு தூரமில்லை, சாவு எமக்கொரு பாரமில்லை” என்று Facebook இல் ஒரு ஸ்டேடஸ் போட்டேன் என்றால் அடுத்த கணம் நான் போராளி. தோழர். காம்ரேட்.  புதுமண தம்பதிகள் படத்துக்கு விழும் லைக்குகளை விட அதிகமாக விழும். ஆனால் மனச்சாட்சி என்ற ஒரு சனியன் அதை செய்யாவிடமாட்டுதாம். எனக்கு அதை செய்ய எந்த தகுதியும் கிடையாது. இங்கே பக்கத்தில், வெறும் எட்டு மணி நேர டிரைவிங்கில் கான்பரா வந்துவிடும். தமிழர்கள் கொஞ்சப்பேர் பார்லிமெண்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அழைத்தார்கள். நான் போகவில்லை. ஏன் என்றால் பயம். செம பயம். போனால் கொடி பிடிக்கவேண்டும். படம் பிடிப்பார்கள். கோத்தாவுக்கு போகும். இலங்கை போனால் விமானநிலையத்தில் வைத்து என்னை பிடிப்பார்கள். நாலாம் மாடியில் ஜட்டியோடு ஒரு கதிரையில் கட்டிவைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து, சேர் சேர் என்று கெஞ்சி, இல்லாத உண்மைகளை சொல்லி, யோசிக்கவே நடுங்குகிறது.
பயத்தில் தான் அந்த நாடே வேண்டாம் என்று ஓடி வந்தேன். கொஞ்சம் படித்ததால் படகேறவேண்டிய தேவை இருக்கவில்லை. மற்றும்படி அகதி தான். பின்னங்கால் பிடரியில் பட ஒவ்வொரு அடிக்கும் ஓடி ஓடி மெல்பேர்ன் வரைக்கும் வந்திருப்பவன். சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்த நாடு கற்றுத்தருகிறது. சுவாசிக்கிறேன். ஆனாலும் திடீரென்று அலுவலகத்துக்கு மேலால் சுப்பர்சொனிக் ஜெட் போகும்போதோ, ரெஸ்கியூ ஹெலிகப்டர்கள் தாழ பறக்கும்போதோ அடிவயிற்றில் மட்டத்தேள் ஊரும். இந்த போலீஸ்காரர் ஹை மேட் என்றாலே ஐஸியை தேடி கை சட்டைப்பையை தடவும். அந்த பயம் இன்னமும் போகவில்லை. அது என் எழுத்திலும் இருக்கிறது. சிட்டிசன் எடுத்தால் சிலவேளை கொஞ்சம் வீரம் வரலாம். அவ்வளவே.
இப்போது சொல்லுங்கள், நான் எந்த மூஞ்சியோடு ஆதரவு தெரிவிக்க? ஆதரவு தெரிவிக்க ஒரு தார்மீக தகுதி வேண்டுமில்லையா? எனக்கு அது இஞ்சி கூட கிடையாது. அரையில் கோவணம் கூட இல்லாமல் இருக்கும் நான் அரசியல் ஸ்டேட்மென்ட் விடக்கூடாது. அனேகமானோர் இங்கே அம்மணம் தான். அவர்களுக்கும் அது தெரியும். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனக்கு அது முடியாது. குட்டிக்கு முன்னாலே சின்னவயதில் நின்ற குமரன் இந்த கழுதை வயதிலும் மாறவேயில்லை.
இறங்கு கண்ணினன் நான், நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட மீண்டும் ஒரு முறை நின்றேன்
ஆனாலும் சேஃபாக நான் செய்யக்கூடியது சிலது இருக்கிறது. பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் படலையை அண்மையில் லைக் பண்ணினான். படலையின் பத்து சதவீத வாசகர்கள் இருபது வயதுக்கு குறைந்தவர்கள். அவர்களுக்கு இது தான் தண்ணீர் என்று குளத்தை கொஞ்சம் சுவாரசியமாக, அலுப்படிக்காமல் காட்டலாம். சினிமாவை தாண்டி வாசிக்கவும் பொழுதுபோக்கவும் சிந்திக்கவும், சுவையான விஷயங்கள் இருக்கென்று சொல்லலாம். அவனுக்கு போரடித்து, பிரவுசரை கிளோஸ் பண்ண முதல் சொல்லவேண்டும். அது தான் சவால். சமாளித்துவிட்டால், அப்புறம் எனக்கு தெரியாத நீச்சலை அவன் தானாகே பழகுவான். முயன்றால் நானும் அவனோடு சேர்ந்து நீச்சல் பழகலாம்.

நவநீதம் பிள்ளை

navi-pillay (1)
இலங்கை அரசின் எத்தனை சுத்துமாத்துகளையும் மனிசி சும்மா சிம்பிளாக புறம்தள்ளும். “உங்களை மாதிரி ஆக்கள் என்ன பண்ணுவாங்கள் எண்டு எனக்கு தெரியாதா?” என்ற தோரணையில் அவருடைய பேச்சுகளும் பதில்களும் இருக்கும். உலகத்தின் மிகச்சிறந்த இராஜதந்திரிகளுக்கு நன்றாக அவித்து தூள் உப்பு போட்டு கொடுக்கப்பட்ட பருப்பு மனிசியிடம் மட்டும் எப்படி வேகாமல் இருக்கிறது என்ற ஆச்சர்யம் ஓரிரு வருடங்களாகவே பிடுங்கித்தின்றது. அவரைப்பற்றி கொஞ்சம் விவரம் சேகரிக்க, மனிசிக்கு முன்னால் எவனும் ரீல் விட முடியாது என்பது புரிந்தது.
1941, தென் ஆபிரிக்க, டேர்பனில் ஒரு ஏழை குடியிருப்பு பகுதியில் பிறந்தவர். தமிழ் வம்சாவளி. அப்பா பஸ் ஓட்டுனர். கூட இருந்த சக தமிழர்கள் செய்த உதவியில் படித்து 24 வயதில் சட்டத்தரணி ஆகிறார். அதே ஆண்டு திருமணம். கணவனும் ஒரு சட்டத்தரணி தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஹார்வார்டில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென் ஆபிரிக்கர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
DSC_0137-734793ஊரிலே படித்து முடித்தபின், வெள்ளையராக இல்லாததால் எந்த சட்ட நிறுவனங்களும் இவருக்கு வேலை கொடுக்கவில்லை. இவரே சொந்தமாக ஒரு சட்டநிறுவனம் ஆரம்பித்தார்.  நீதிபதிகளின் சேம்பருக்கு கூட வெள்ளையர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட அடக்குமுறை காலத்தில் 28 வருடங்கள் சட்டத்தரணியாக, அடக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர். அரசியல் கைதிகளின் மோசமான நிலைமையை வெளி உலகத்துக்கு கொண்டுவந்தவர்.  நெல்சன் மண்டேலா, மற்றும் ஏனைய அரசியல் கைதிகளுக்கான சட்ட உரிமைகளுக்காக போராடி பலவற்றை வென்று கொடுத்தவர். வெள்ளையர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தபின்னர்,  நெல்சன் மண்டேலா செய்த வேலை, நவநீதம்பிள்ளையை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது தான்.
பின்னர் ஆரம்பித்தது ஆட்டம். ரூவாண்டாவில் நடைபற்ற குற்றங்களை விசாரிக்கும் சர்வேதேச விசாரணைக்குழுவில் எட்டு வருடங்கள் வேலை பார்த்தார். யுத்தத்தின் போது செய்யப்படும் பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, அவையும் இன ஒழிப்பின் ஒரு கூறு தான் என்று ஆணித்தரமாக வாதிட்டு பல கொடியவர்களுக்கு தண்டனை வழங்கினார்.
navi-pillayபின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் பதவி.  அப்புறம் 2008 முதல் ஐநா மனித உரிமை ஆணைக்குழு தலைவர். இந்த பதவியில் இருந்துகொண்டு தான் இலங்கையை ஒருவழிக்கு கொண்டுவர பிரயத்தனம் செய்கிறார்.  இந்த பதவி 2014 இல் முடிகிறது என்பது கொஞ்சம் கவலை அளிக்கும் விஷயம். அவருக்கு பிறகு வருபவர் மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பார். அதுவும் கமலேஷ் ஷர்மா, யசூசி அகாஷி வகையறாக்கள் வந்தால் சுத்தம்.
நவநீதம் பிள்ளை ஒருமுறை சொன்ன திருவாசகம் இது.
“From time immemorial, rape has been regarded as spoils of war. Now it will be considered a war crime. We want to send out a strong signal that rape is no longer a trophy of war”
“ஆதி காலத்தில் பாலியல் வல்லுறவு என்பது போரின் கெடுதல்களாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது ஒரு போர் குற்றமாகவே பார்க்கப்படும்.  பாலியல் வல்லுறவு என்பது போரில் அடைகின்ற வெற்றி கேடயம் கிடையாது, எல்லோருக்கும் இதை அழுத்தமாக அறிவுறுத்துகிறோம்”
இலங்கை இந்திய அரசுகள் நவநீதம்பிள்ளையை கண்டு நடுங்குவதற்கு காரணம் இருக்கிறது.

வேதவியாசர் எழுதிய திரில்லர் கதை!

“கதவு ஓட்டைக்கால செல்வா பார்க்கேக்க வெளிய நாலு பொலிஸ்காரங்கள் நிக்கிறாங்கள்”
இந்த முதல் வரியை கொண்டு எப்படி ஒரு கதை எழுதிமுடிப்பாய்? என்று கேதாவிடம் கேட்டேன். இடம் கேதா-வீணா வீடு. “விளங்கின மாதிரி தான்” என்றாள் வீணா. கேதா திடீரென்று கிடைத்த பட்டிங் சான்ஸை மிஸ் பண்ணாத சேகர் தவான் போல அடித்தாட தொடங்கினான். அவன் சொன்ன கதை நகைச்சுவையாக இருந்தது. முடிவும் நகைச்சுவையாக முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“இப்ப இதையே திரில்லர் ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்வாய்?”
பல திருப்பங்கள் சொன்னார்கள். எல்லாம் முடிந்து பொலிஸ் போனபிறகு, செல்வா கீழே பாண் வாங்க போகும்போது அவனை வெள்ளை வான் கடத்துகிறது என்ற வீணாவின் பதில் பிடித்திருந்தது. சிறுகதை வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்றேன். அப்படி என்றால் “பொலிஸிடம் மாட்டுப்பட போகிறேன் என்று தெரிந்த கணம், கக்கூஸ் பைப்பால் தப்பி ஓடுகிறான், பொலிஸ் சுடுகிறது என்று முடிக்கலாம் அண்ணே” என்றான் கேதா.  ஆக மூவருமே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தோம். இதிலே சந்தேகநபர்/குற்றவாளி/போராளி யார் என்றால் அவன் செல்வா தான். அதே சமயம் செல்வா கதையின் முக்கிய பாத்திரமும் கூட. ஆக துப்பறியும் வேலையை பொலிஸ்காரரிடம் விடமுடியாது. செல்வா தான் குற்றவாளி என்று முதலிலேயே சொல்லிவிடவும் முடியாது. அப்படி என்றால் யார் அதை கண்டுபிடிப்பது? மூவருமே ஏகநேரத்தில் சொன்ன பதில் “வாசகன்”.
z_p-24-Facelift-02_thumb[1]
“வாசகன்” துப்பறிகிறான் என்றால் அவனுக்கு கதை பூரா துப்பு கொடுக்கவேண்டும்.  வாசிக்கும்போது அவன் அதை துலக்கிக்கொண்டே வர, முடிவில் “அட செல்வா தான் சந்தேக நபர்” என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகு செல்வா வாளியில் இருக்கும் பொருளை எடுத்து குப்பை ஓட்டைக்குள் தொங்கப்போடுகிறான்.  இங்கே பொலிஸ் செல்வாவை கோட்டை விடுகிறது. வாசகன் கண்டுபிடிக்கிறான். கதையில் துர்நாற்றம் ஒரு deterrent ஆக, கவனக்கலைப்பானாக பயன்படும். முடிவில் அந்த வாளி, குப்பை துவாரம். அவன் ஏன் குப்பை துவாரத்தில் முதலிலேயே தொங்கவிடாமல் வாளிக்குள் அதை ஒளித்து வைக்கவேண்டும்? இந்த கேள்விகளின் பதிலை வாசகனிடமே விட்டுவிடுவது. இது தான் ஸ்கெட்ச். டிசைன்.
இனி துப்புக்களை கொடுக்கவென்றே சம்பவங்களை கதையில் அமைக்கவேண்டும். “ஒண்டுக்கடிக்கிறான், தண்ணீர் ஊற்றவில்லை ஏன்?”. “உடனே திறக்காமல், தப்பி ஓடுவதை பற்றி ஏன் ஒரு கம்பஸ் மாணவன் சிந்திக்கவேண்டும்?”. “கம்பியூட்டரை ஏன் ஷட் டவுன் பண்ணவேண்டும்?”, “அவன் பெயர் செல்வா, ஆனால் கொம்பியூட்டரில் பாவித்த பாஸ்வேர்ட் வேறு, ஏன்?”, இவை எல்லாம் குட்டி குட்டி துப்புகள்.
முக்கியமான தடயம் அந்த கார்ட்ஸ் ஆட்டம் சொல்லப்பட்ட விதம். முன்னை நாள் நடந்த காட்சியை கதை விவரிக்கிறது. அந்த காட்சியில், விளையாடிய ஆறுபேரில், செல்வாவும், ரெஜினொல்டும் இல்லை. ஆனால் செல்வா தானும் விளையாடியதாக பொலீஸிடம் சொல்லுகிறான். பொய். அதை சொல்லும்போது கூட கீழே நிலத்தை பார்த்து என்ன நடந்திருக்கலாம்? என்று ஊகித்தபடி தான் சொல்லுகிறான். அது இன்னொரு துப்பு. குடிப்பழக்கம் இல்லாத செல்வாவுக்கு புகைப்பழக்கம் இருக்க சான்ஸ் இல்லை. அது இன்னொரு பொய். இப்படி கதை முழுக்க வாசகன் கண்டுபிடிக்கும் வண்ணம் பொய்களை திரும்ப திரும்ப சொல்லுகிறான். சிங்களம் தெரியாது என்பவனுக்கு போலீஸ் சிங்களத்தில் யாரோடோ பேசுவது புரிகிறது.
30-FC-Pic1இத்தனை தடயங்களும் செல்வாவிடம் சம்திங் ரோங் என்று சந்தேகப்பட போதுமானவை. வாசகன் நிச்சயம் எக்சைட் ஆவான் என்று நினைத்தேன். என் ராசி! நடக்கவில்லை! பொதுவாக வாசித்தவர்கள் அதனை ஒரு கொழும்பு தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்ற அடிப்படையிலேயே கருத்து சொன்னார்கள். ஏன் என்று யோசித்தேன். புரியவில்லை. லத்தீன் அமெரிக்க வாசகர்கள், கேரளா என்றால் இந்நேரம் இந்த கதையை கொண்டாடியிருப்பார்கள் என்று சும்மா டகால்டி விடமுடியாது. படலை வாசகர்கள் என்னை மண்டை காயவைப்பவர்கள். ஒருமுறை “கந்தசாமியும் கலக்ஸியும்” நாவலில் டார்க் மாட்டர் பற்றி எழுதும்போது ஒரு சின்ன சறுக்கல். கிழித்து எடுத்துவிட்டார்கள். ஆக வாசகனில் தப்பு இல்லை. அது என் கதையில் தான். ஏன் என்று நேற்று முழுக்க மண்டை காய்ந்தது. கஜன், “கார்ட்ஸ் விளையாட்டை தான் பகிடியாக தான் எழுதியிருக்கிறாய் எண்டு நினைச்சன்” என்றான். டொக் டொக் டொக் கதையை ஒரே மூச்சில் அட்சரம் பிசகாமல் உள்வாங்கி முதுகில் தட்டிக்கொடுத்த வாலிபன் இந்த கதையில் ஏனோ அரசியல் தேடினான். எங்கேயோ ஒரு பெரிய கோட்டை விட்டுவிட்டேன் என்று புரிந்தது. ஆனால் எங்கே?
“சட்டென நனைந்தது இரத்தம்” சிறுகதையிலும் இம்மாதிரி நிறைய முயற்சிகள் இருக்கும். எவற்றையும் தவறவிடாமல் வீணா அந்த கதையை உடைத்து விளக்கியபோது அப்பாடா என்ற நிம்மதி வந்தது. ஸோ இம்முறையும் வீணா தான் ஆள் என்று நினைத்து கேட்டேன். “அண்ணே சொதப்பீடீங்க” என்ற முதல் வரியுடன் ஆரம்பித்த சாட்டிங் அலுவலகம் முடியும் வரை தொடர்ந்தது. அந்த சாரம்சம் இன்னொருமுறை கதை எழுதும் பொது உதவலாம்.
முதல் தவறு, வாசகன் துப்பறிவாளன் என்றால், அதற்கு அவனை கதை தயார்படுத்தவில்லை. இது துப்பறியும் கதை என்று தெரியாத வரைக்கும் அவன் ஏன் தடயங்களை தேடப்போகிறான்? என்பது வீணாவின் வாதம். சரி முதல் தடவை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் முடிவு இப்படியான பின்னர், மீண்டும் வாசிக்கும்போது புலப்படும் இல்லையா என்றேன். இரண்டாம் முறை வாசிக்கச்செய்யும் அளவுக்கு முடிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. “It was a surprising end but not an exciting one” என்றாள். கிளீன் போல்ட்.
இரண்டாவது தவறு, கதை சொல்லும்பாணியில்.  கதையில் செல்வாவின் எண்ண ஓட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. அப்படியானால் அவனை வாசகன் சந்தேகிக்கமாட்டான். சொல்லும் வார்த்தையில் பொய் இருக்கலாம். ஆனால் எண்ணங்கள் பொய் சொல்லாது, சிலதை செலக்டிவ்வாக மறைத்து சிலதை மட்டும் நினைக்காது இல்லையா? ஆக வாசிப்பவன் செல்வாவை சந்தேகிக்க சான்ஸ் குறைவு என்று வீணா சொன்னதை கேட்டபோது, என் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விடவேண்டும் போல இருந்தது. அடச்சீ. இதை தானே தலைவர் படிச்சு படிச்சு சொல்லியிருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வந்த விஷயம் இது. 1972 இல் எழுதியிருக்கிறார்.
135192726_12a198aef5_o“மனதின் எண்ணங்களை விவரமாக தருவதில் தவறில்லை, ஆனால் இந்த “அவன்”, “இவன்” கதைகளில் அது எனக்கு பிடிப்பதில்லை. “இவன் மனதின் ஆழத்தில் என்னவோ பிசைந்தது” என்றால் உனக்கு எப்படி அய்யா தெரியும்? என்று கேட்கத்தோன்றுகிறது. “அவனுக்கு எப்பொழுதுமே விரை கொஞ்சம் பெரிசு” என்று வாசிக்கையில் “அவ்வளவு அன்யோன்யம் எப்படி ஏற்பட்டது?” என்று கேட்கத் தோன்றுகிறது”
அடிக்கடி எப்போது ஜேகே புத்தகம் வெளியிடப்போறீங்கள் என்று நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில்.
அதற்கு ஏதாவது எழுத தெரியவேண்டுமே Sad smile

தனிமை தனிமையோ! கொடுமை கொடுமையோ!

“எல்லாமே முடிஞ்சுது, இட்ஸ் ஓவர்” என்று திடீரென்று அவன் வந்து சொன்னபோது எப்படி இருந்தது தெரியுமா? உனக்கெங்கே அது புரியப்போகிறது. சொன்னவன் திரும்பியேனும் பார்த்தானா? கேட்டால் இட்ஸ் ஓவராம்.  அப்படி முடிக்கமுடியுமா என்ன? கொஞ்சம் காலம் தான். இதுவும் கடந்துபோகும். எனக்கு இது புதிதல்லவே. ஆனால் இந்த நேரத்தை நிச்சயம் நிதானமாக நான் கடக்க விரும்புகிறேன். அவன் சொல்லிய வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த  சொல்லாத வார்த்தைகளை தேட எனக்கு அவகாசம் வேண்டும். அந்த வார்த்தைகள் எனக்கு பயன்படும். எதிர்காலத்தில், வயது ஏற ஏற, இன்னொரு தவறு நிகழாமல் இருக்க .. அது எனக்கு தேவை.
love_failure_how_much_percent_of_girls_do_like_this
இப்ப நான் என்ன செய்வது? உன்னை விட்டால் எனக்கு யாரு தான் கதி? உன்னிடம் வந்து சேருவோம் என்றால் இந்த சனியன் பிடித்த மலை இன்னமும் முன்னால் நிற்கிறது. தாண்டவேண்டும். ஏறி கடக்கவேண்டும். மொத்த உலகமுமே என் தோளில் ஏறி மிதித்தால் நான் எப்படி ஏறுவேன் சொல்லு?  ஏற ஏற குளிர் வேறு ஏறுகிறது. நல்ல காலம், முகிழ்களுக்கிடையில் தெரிகின்ற சூரிய ஒளிகள், அது தரும் வெப்பம் . இந்த குளிருக்கு இதமாக, என்னை கணகணப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் எனக்கு அந்த சூரியன் வேண்டாம். இதோ இந்த நிமிடம் கிடைக்கும் இந்த காதல் போதும். சூரியன் தூர இருந்து ஒளி தர தான் லாயக்கு. அட என்று அருகில் போனால் சுட்டு பொசுக்கி விடும். வேண்டாம். எனக்கு நீ, பக்கத்தே நிலவு, அது போதும். எரிக்காது. இதமான இரவிலும் உன் மடி வைத்து தலை சாய்த்தால் எறிக்கவும் செய்யும். வேறொன்றும் வேண்டாமே.
இந்த வலி, காயம் எல்லாமே போதும் போதும் என்னுமளவுக்கு பார்த்துவிட்டேன். இனி முடியாது. ஒருத்தி எத்தனை ஏமாற்றங்களை தான் தாங்கிக்கொள்வாள்? நான் என்ன பெண் இல்லையா? இதெல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றாலும் அது முடியுதில்லை. ஒரு பக்கம் தனிமை துரத்துகிறது. அதிலிருந்து தப்ப காதலை தானே தேடவேண்டி இருக்கிறது. இவ்வளவு தூரம் ஏறியும் ஆயிற்று. இனி இறங்கவும் முடியாது. இறங்கினாலும் அந்த தனிமை. வேண்டாம்.
Love-Girl
நீ என்றதும் ஏன் இத்தனை குறுகுறுப்பு? ஒன்றுமில்லை, என்ன தான் இந்த காதல்? அது தெரியவேண்டும். அதை நீ மட்டுமே எனக்கு காட்டமுடியுமடா. என்ன தான் இந்த காதல்? உணரவேண்டும். அதையும் உன்னால் தான் எனக்கு உணர்த்த முடியும்.  உள்ளுணர்வு சொல்லுகிறது. அதை நம்பலாம். உள்ளுணர்வு ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வருவதில்லையே.  அனுபவங்களில் இருந்து தானே வருகிறது. என் அனுபவங்களை விட வேறு சிறந்த பாடங்கள் எங்கே கிடைக்கப்போகிறது? உன்னை தான் இனி நம்பியிருக்கிறேன். சிக்கென பிடித்தேன் தேவனே. எழுந்தருள ஏன் இந்த தயக்கம்? பார் என்னை. மலை உச்சியில், தன்னந்தனிச்சியாக, ஒளிந்து கொள்ள கூட இங்கே இடமில்லை. என்னது அது. எங்கிருந்தோ வந்து எட்டும் தூரத்தில் திடீரென்று வந்து நிற்கிறாயே. இது நீதானா? என்ன இது கண்ணாமூச்சி ஆட்டம். இது இது தான் அந்த புள்ளியா? கடையில் கண்டுவிட்டேனா. என் காதல் என்னை கண்டுவிட்டதா? இது தான் அதுவா?
சொல்லு சொல்லு சொல்லு…இப்போது பரவுகிறதே? இந்த உணர்வா? நான் பேசுகிறேனே இதுவா? மறைக்காதே சொல்லு.  எனக்கு புரிகிறது. புல்லரிக்கிறது பாரு. காதல். பார்த்தியா. நான் தான் ஏறவேயில்லையே. எல்லோரும் முடியாது என்று ஏளனம் செய்தார்களே. மலையை கடக்கமாட்டேன் என்று நினைத்தவர்களை எல்லாம் தவிடு பொடியாக்க, மலையையே குன்றாக்கினாயே என் தேவ? இன்னும் ஏன் தயங்குகிறாய். வாயேன் பேசுவோம். காதலை, திகட்ட திகட்ட பேசுவோம்.  இந்த காதலை சொல்லித்தா. இதுவரை நான் செய்தது எல்லாமே காதலே இல்லை என்று சொல்லு. மேலும் இது தான் காதல் என்று சொல்லு. சொல்லு. சொல்லு!

80களில் வெளியான இந்த பாடலை மீண்டும் வடிவமைத்திருக்கிறார்கள். மரியா அதற்கு உயிரும் உள்ளமும் கண்ணீரும் சேர்த்திருக்கிறார். முதன்முதலில் அவர் American Idol இல் நான்கு வருடங்களுக்கு முதல் பாடியபோது என்னை வசப்படுத்திய பாட்டு. அன்றே டவுன் லோட் பண்ணி கேட்டு கேட்டு மீண்டும் கேட்டு, ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதுசாக ஒரு cry இருக்கும் பாட்டு இது. டிவைன்.
Angels-Cry-Video-mariah-carey-11056793-500-342
மேஜர் நோட்டில் ஆரம்பிக்கிற பியானோ, திடீரென்று மைனருக்கு போவது, காதல் உணர்வு வந்த பெண் திடீரென்று தன் பழசை நினைத்து அச்சமுறுவதை காட்ட.  அது முடிய மெல்லிய சாரீரத்தில் “I want to know what love is” என்று மரியா கிரே பாடி கொஞ்சம் கொஞ்சமாக மலை ஏறும் உணர்வு இருக்கிறதே. அதை தான் தமிழில் எழுத முயன்று தோற்றிருக்கிறேன். இசையும் வரியும் அதை நிஜமான உணர்வோடு பாடும் குரலையும் வெறும் வாரித்தைகளுக்குள் வடிக்கும் வல்லமை என் எழுத்துக்கு இன்னமும் படியவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி தான்.

பத்த வச்சிட்டியே பரட்டை!

மச்சான் இளையராஜா ப்ரோகிராம் மெல்பேர்னில நடக்குது. டிக்கட் வாங்கிட்டியா?
இல்லை மச்சி, அது ஷுவரா நடக்குமோ தெரியாது. எதுக்கும் முதல்நாள் போய் வாங்குவம்.
direcrors193313_206ஏன் என்ன ப்ரோப்ளம்?
இல்லடா, போன வருஷம் நவம்பர் மாசம் என்று கனடாவில வைக்கவிடாமா தடுத்தாங்களே
அதுக்கென்னடா .. இது மே மாசம் தானே.
அதாண்டா யோசினையா இருக்கு. எவனாவது மே மாசம், சோகமான மாதம், நிகழ்ச்சி வைக்க கூடாது என்று Facebook ஸ்டேடஸ் போட்டு அதை ஒரு பத்து பேர் ஷேர் பண்ணினா கதை கிழிஞ்சுது
டேய் தெரியாம தான் கேட்கிறன்.  உண்ட நாலு வயசு பெடியனுக்கு பேர்த்டே பெப்ருவரி தானே வந்தது.
ஓம் மச்சி அதுக்கென்ன?
நல்ல காலம் அந்த டைம் ஒருத்தரும் ஸ்டேடஸ் போடேல்ல .. போட்டிருந்தா… சரி விடு!
&&&&&&&&&&&&&


Contact Form