வியாழமாற்றம் 14-03-2013 : யாரடா அவன் துட்டகைமுனு

Mar 14, 2013

மஹாகவி!

ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.
40039_420717206414_3583362_n

பொன்னப்பன் துலாவின் மீது
போய் வந்து கொண்டிருந்தான்;
சின்னையன் இறைத்தான்; தண்ணீர்
சென்றோடி உருகும் வெள்ளி
என்னப் பாய்ந்தது வாழைக்குள்.
“ஏனிந்த கஞ்சிக் காரி
இன்னும் வந்திறங்க வில்லை?”
என்று பொன்னப்பன் பார்த்தான்.


இரண்டாவது வரியிலேயே நான் குழம்பிவிட்டேன். துலாவில் மேல் என்னத்துக்கு பொன்னப்பன் நிற்கவேண்டும்? அம்மாவிடம் கேட்க சொன்னார். “அந்தக்காலத்தில கன நேரம் தண்ணி இறைப்பு எண்டதால அப்படித்தான்” என்று தொடர்ந்து விளக்கினார். துலாவில் ஒருவர் ஏறி, நடுக்கால் பக்கம் ஒரு கயிற்றை கட்டி பிடித்துக்கொண்டு வாளி உள்ளே போகும்போது முன்னே போய் அழுத்துவதும், அள்ளும்போது பின்னே வந்து கனம் கொடுப்பதுமாக ஓடித்திரிவாராம். அதுதான் “பொன்னப்பன் துலாவின் மீது போய் வந்து கொண்டிருந்தான்”. கீழே நின்று சின்னையன் வாளியை தூக்கி வாய்க்காலில் இறைக்கிறானாம். வெள்ளி போல வாழைக்கு தண்ணி பாய, மேலே நின்று இறைப்பவனுக்கு பசி. எங்கேடா இவளை காணேல்ல என்று தொடருகிறான்.
“உச்சிக்கு வெயில் ஏறிற்றே”
உன்னையும் மறந்தாளோ, உன்
மச்சாள்? இம்மினை கேடேனோ?
மாற்றுகின்றாளோ சேலை
அச்சிறு கள்ளி?’ என்றே
அவிழ்க்காமல் நினைத்தான் மாமன்;
மிச்சத்துக் கிவன் சிரித்தான்;
மீண்டும் அவ் வழியைப் பார்த்தான்.
என்னவாம்? பொன்னப்பன் மகள் தான் தோட்டத்துக்கு கஞ்சி கொண்டு வருபவள். இன்னும் வரவில்லை. வெயில் ஏறிவிட்டது. பொன்னப்பன் சின்னையனை சீண்டுகிறார். “என்னைத்தான் மறந்தாள், சரி, மச்சான் உன்னையுமா மறப்பாள்? என்று முதல் கேள்வி. “இல்லை இல்லை, உன்னை பார்க்க தான் இவ்வளவு நேரம் மினக்கெட்டு சேலை உடுத்துகிறாளோ?” என்று அடுத்த நக்கல். மாமன் மருமகன் உறவு, ஒரு துலாவில் நீர் இறைப்பு. மருமகனை கீழே விட்டுவிட்டு தான் துலா ஏறி மிதிக்கும் மாமன் காரன். எட்டு வரியில யாழ்ப்பாணத்து வாழ்க்கையை பட்டென்று எழுத மஹாகவியை விட்டால் யாரால் முடியும்?
ஒரு சனிக்கிழமை, வேலையில்லை, கொஞ்சம் நித்திரை கொள்ளலாம் என்றால் தூக்கம் வரவில்லை. ஏழு மணிக்கே முழிப்பும் வெளிச்சமும் வந்துவிட்டது. கட்டிலில் கிடந்தவாறே Facebook திறந்தால் சக்திவேல் அண்ணே இந்த ஸ்டேடஸ் போட்டிருந்தார்.
“இன்றைக்கு ஒரு சம்பாஷணையில் 'கலட்டி' என்று தமிழ் வார்த்தையைப் பாவித்துவிட்டேன். அப்போது இருந்த யாருக்கும் (எல்லோருக்கும் யாழ்ப்பாணந்தான் பூர்வீகம்) அதன் அர்த்தம் தெரியவில்லை . தனித்து விடப்பட்டேன். நிற்க "கலட்டி" என்ற சொlல் உங்கள் ஊர் வழக்கில் உண்டா? இந்த மாதிரிச் சொற்களை (அழிந்துபோகாமற்) காக்க, கி.ரா. மாதிரி இலக்கியவாதி எங்களுக்குக் தேவைப்படுகிறார்.”
வாசித்துக்கொண்டிருக்கும்போது கொஞ்சம் டென்ஷனாகிவிட்டேன். இதற்கெதுக்கு கீ.ரா? எங்கட ஆள் “கலட்டி” என்று தனியாக காவியமே வில்லுப்பாட்டாக எழுதியிருக்கிறார்.1966ம் ஆண்டு. அதிலே கலட்டி என்ற நிலத்தை விவரித்தே மூன்று பாடல்கள் இருக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று.
tamilnadu079காரை சூரை நாக தாளி
கள்ளி முள்ளி ஈச்சை மட்டும்
வேர் விடுத்து வளர லாகும்
வெட்டை; அந்த வெளியில் எங்கு
பாரை கொண்டு தொட்ட போதும்.
படுவ தொன்று-பாறை என்று!
யாரை அந்த நிலம் அழைக்கும்?
அன்பு கெட்ட மனம் நிகர்க்கும்.

அறுபதுகளில் உலகிலே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த பொதுவுடைமை தத்துவம் தான் கலட்டியின் ஆதாரமான கரு. உயர்சாதி செல்லையன், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கண்மணியாளை கைப்பிடிப்பது. ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமூக சேவைகள் செய்வது. முதலாளிகள், அரசாங்க ஊழியர்களுக்கெதிராக குரல் எடுப்பது, கலட்டி நிலத்தை பண்படுத்தி கமம் செய்வது, ஏழைகளுக்கு பிரித்துக்கொடுப்பது என்று எல்லாமே பாடல்கள்.கலட்டியின் முடிவு சந்தோஷ முடிவு. அதை பிறகு அவர் கண்மணியாள் காதை என்று மாற்றினார். பலதை வெட்டி எறிந்தார். முடிவை கவலையாக மாற்றினார். செல்லையன் இறந்துபோக கண்மணியாள் அவன் மேல் புரண்டு அரற்ற, நில முதலாளிகள் அவளை அடைய துரத்துவதாக. சோக முடிவு யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக அவர் நினைத்திருக்கலாம்.
images (2)கலட்டி/கண்மணியாள் காதல் கவிதை தொகுப்பு சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையே சொல்லுகிறது. இதையே செங்கை ஆழியான் காட்டாறு என்று கதையாக சொல்லியிருப்பார். புதுவை கூட கொம்யூனிசம் பேச தவறவில்லை. அது ஒரு தலைமுறை. தமிழகத்தில் திராவிட இயக்க எழுச்சி, ஒருவித எழுத்து புரட்ச்சிக்குள் புகுந்து, மரபுடைத்து உரைநடையாக போய்க்கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் மகாஹவி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் சத்தம்போடாமல் அதே புரட்சியை மரபுக்குள் நின்று மீறாமல் செய்துகொண்டிருந்தார்கள். சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான் போன்ற கவிஞர்கள் அதை அடுத்த பத்தாண்டுக்கு தொடர்ந்தார்கள். பின்னர் ஈழப்போராட்டம் உருவாகி, எங்கள் கவிதையும் மரபை தாண்டி, உரைநடைக்கும், சந்தத்துக்கும் அகப்பட்டுக்கொண்டது காலத்தின் தேவை என்றாலும், மரபு எம்மத்தியில் அருகிவிட்டது கவலையே. அருமையான கேதா, வாலிபன் போன்ற கவிஞர்கள் கூட மரபு விதிகளை படிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதை பார்க்கையில் அவர்கள் மேல் உள்ள உரிமையில் மூஞ்சில் நாலு குத்து விட்டால் என்ன என்று தோன்றும். வெண்பாவில் கலக்கலாம், கவியரங்கம் செய்யலாம் என்று இங்கே சொன்னால், “சனம் வராதுடா தம்பி”.
ஒரு காதல் காட்சி. தலைவர் இதிலே விண்ணர்! கலட்டி குடிசை தொகுதி. அங்கே கணவனும் மனைவியும் காதலோ காமமோ ஒன்றுமே “பண்ண” முடியாது. எங்கேயும் குடிசை. குடிசைக்குள்ளும் குஞ்சு குருமான் சிலது கிடக்கும். கலியாணமான பம்பாய் படத்து அரவிந்த்சாமி, மனீஷா நிலைமை. செல்லைய்யன் எட்ட நின்று குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கண்மணியாளை பார்த்து ஏங்குகிறான். “தண்ணியோ கிணற்றினில!, தாகமோ, தனிமையிடை போய்த் துயின்றால்,  போகுமோ? ” என்று புலம்புகிறான். உள்ளே தாழ்ப்பாள் போட்டு தூங்குவது போல நடிக்கும் கண்மணியாளுக்கு கேட்கிறது. அப்புறம் கவிதையை கேளுங்கள்.
Large_1835[1]

சேலை ஒன்று சரசரப் புற்றது.
திறப்பும் பூட்டும் கறகறப் புற்றன.
வேலியோ கறையான் படர்ந்துள்ளது;
மெல்லவே அந்த மண் உதிர்வுற்றது.
வாழை நட்டுள பாத்தியில் ஈரமோ?
வைத்த காலிற் சளசளப் புற்றது.
மூளை ஒன்றினில் ஓலைக் கிடுகினை
முன் விரிக்க, அது நெரிவுற்றது.

மேலோட்டமாக பார்த்தால் வெளியில் தோட்டத்தில் தான் வேலை நடந்திருக்கும் போல இருக்கும். மஹாகவியின் குறும்பை யோசித்தால், அட குடிசைக்குள்ளே கூட இத்தனையும் நடந்திருக்கும் போலவே தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்? 

யாரடா அவன் துட்டகைமுனு?

வேலாயுதம் மாஸ்டரை அவரிடம் படிக்காதவர்கள் கூட மறந்துபோய் இருக்கமாட்டார்கள். தமிழில் காவி என்று அழைக்கப்படும் வெக்டர் கணிதத்தை கரைத்துக்குடித்தவர். மாணவர்களுக்கு மோர் ஊற்றுவது போல அழகாக சொல்லிக்கொடுக்கவும் செய்வார். அதனாலேயே அவருக்கு வெக்டர் வேலாயுதம் என்ற பெயர் வந்தது. நான் அவரின் பிரதான சீடன் கிடையாது. இரண்டு மணி நேரம் யார் எப்படித்தான் படிப்பித்தாலும் என்னால் ஒரு வகுப்பறையில் இருக்கமுடியாது என்பதும் ஒரு காரணம். அவருடைய வகுப்பு டைமில் தான் சந்திரன் மாஸ்டர் தன்னுடைய கிளாசை ஆரம்பிப்பார் என்பது இன்னொரு காரணம். ஆனாலும் வெக்டர் மாஸ்டரிடம் நான் விரும்பி முறையாக கற்றுக்கொண்ட ஒரு பாடம் சார்புவேகம். அதற்கு காரணம் சார்புவேக கணக்குகளை ஏனைய வாத்திமார் போன்றில்லாமல் இவர் காவியிலேயே நிறுவுவார். ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கு காவி பற்றிய அறிவு மிக முக்கியமானது. ஒரு சட்டத்தில் இருந்து இன்னொரு சட்டத்துக்கு முழுமையாக எங்களை மாற்றி ஒன்றை அவதானிக்க அது கை கொடுக்கும். அதென்ன சார்புத்தத்துவம்? இரண்டு வரியில் முயற்சிக்கலாம்.
பௌதீகவிதிகள் (வேகம், நேரம், ஆர்முடுகள், விசை) எல்லாமே, வேறு வேறு சட்டத்தில் இருக்கும் அவதானிப்பாளர்களுக்கு மாறுபடும். உதாரணமாக ஒரு புகையிரதத்தின் வேகம் வெளியில் இருப்பவனுக்கும் உள்ளே இருப்பவனுக்கும் மாறுபடும். ஆனால் உள்ளேயே இருக்கும் இருவருக்கு வேகம் ஒன்றாகவே இருக்கும். இந்த தத்துவம் விரிந்து பிரபஞ்சம் வரையிலும் சுருங்கி குவாண்டம் வரையிலும் போகும். இதை கொஞ்சம் விஞ்ஞானத்துக்கு வெளியேயும் யோசிக்கலாம். சிங்களவருக்கு தமிழரின் ஆதாரமான பிரச்சனைகள் புரிவதில்லை. ஏன்?
ஒளியின் வேகம் எந்தச்சட்டத்திலும் மாறாது. சாஸ்வதமானது. வண்டிக்கு உள்ளே இருந்தாலென்ன வெளியே இருந்தாலென்ன ஒளியின் வேகம் எல்லோருக்குமே ஒன்றாகவே இருக்கும். நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எழுதலாம். எஸ்கேப் ஆயிடுவீர்கள்.
சார்பியல் தத்துவத்தின் ஆதாரமான எண்ணங்கள் தலைவருக்கு எப்படி எங்கே தோன்றியிருக்கும்? பல்கலைக்கழகத்திலா? ஆராய்ச்சிசாலையிலா? ம்ம்ம்ஹூம். சின்ன வயதில். சின்ன வயதில் அவர் வீட்டில் சாப்பிடவரும் ஒரு மருத்துவ இளைஞன் இவருக்கு கொடுத்த சுவையான பௌதீகம் சார்ந்த புத்தகங்கள். தலைக்கு பத்து வயசு. அப்போது தான் ஒளியின் வேகமே ஆதாரமானது, மாறாதது என்ற பரிசோதனை பற்றி வாசித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பதினாலு வயதில் சுவிட்சர்லாந்தில் ஒரு பாடசாலையில் படிக்கிறார். அங்கே வழமையான கொப்பி, புத்தகம், மனப்பாடம், பரீட்சை விஷயங்கள் இல்லை. படங்கள், ஓவியங்கள் மூலம் தத்துவங்களை படிப்பித்திருக்கிறார்கள். “குமரனை ஒரு இலத்திரனோடு இறுக்கி கட்டிவிட்டால், அவன் எங்கெங்கெல்லாம் போய்வருவான்?”, “ஒளியோடு சேர்ந்து நாமும் ஐந்தடி பின்னாலே ஓடினால் பிரபஞ்சத்தை எப்படிப்பார்ப்போம்?” வகை அசைன்மெண்ட்கள். கேட்கவே புல்லரிக்கிறது இல்லையா. ஐன்ஸ்டீன் போன்ற மூளைசாலிகளிடம் இவ்வகை கேள்விகளை பதின்மூன்று வயதில் கேட்டால், முப்பத்தைந்து வயதில் சார்பியல் கோட்பாடு கண்டுபிடிக்காமல் வேறு எதை தான் கண்டுபிடிப்பார்கள்?
einstein-on-bike
Thought Experiment என்று அழைக்கப்படும்  இந்த வகை பரிசோதனைகளில் ஜெர்மனியர்கள் அசகாயசூரர்கள். அப்படி யோசித்ததாலேயே ஒரு எல்லையை தாண்டி அணு தொழில்நுட்பம், குவாண்டம், ஷ்ரோடிங்கர் பூனை என்று அவர்களால் சிந்திக்க முடிந்தது. இந்த வகையிலான கேள்விகளை எங்கள் ஆசிரியர்கள் கேட்டார்களா? என்றால் விஞ்ஞான பாடத்தில் சுத்தமாக இல்லை. ஆசிரியர் தொழில் என்பது கிடைச்சத வச்சுக்கோடா அவ்வளவு தான் என்ற நிலையில் இருப்பதால் அதி மேதாவிகள், புத்திசாலிகள், விஞ்ஞானிகள் அந்த துறைக்கு, அதுவும் பாடசாலை கற்பித்தலுக்கு செல்வது வர வர அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதையும் தாண்டி வெக்டர், பிகே என்றழைக்கப்படும் யாழ்ப்பாணத்து விஞ்ஞான ஆசிரியர் என்று பலர் தோன்றி அவ்வப்போது வானதி அக்கா போன்ற மாணவர்களை உருவாக்கவும் செய்கிறார்கள்.
இந்த வருடம் மெல்பேர்னில் தமிழ் போட்டி வைத்தார்கள். எவரோ ஒருவர் என் மீது இருக்கும் செம காண்டில், ஜேகேக்கு தமிழ் தெரியும், நடுவரா போடலாம் என்று சொல்ல, வரும்படி அழைத்தார்கள். தமிழ், அதுவும் இலக்கணம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பது படலை வாசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். தமிழில் நேர்முக கேள்வி கேட்கவேண்டும். இங்கே உள்ள பிள்ளைகள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவார்கள். அவர்களை சுத்த தமிழில் பேசென்றால் அதுகள் என்ன செய்யும்? அதுவும் ஒருமுறை பிள்ளை “கரட்” என்று சொல்லிவிட்டு “ஒ ஷிட்” என்றது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். “கரட்டுக்கு தமிழ் தெரியாது நடுவர் அவர்களே!”. வெளங்கிடும். அதுவும் கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு ஒரு கம்பராமாயண பாடலை கொடுத்து வாசித்து விளக்கம் சொல்ல சொல்லி ஒரு கேள்வி. அந்த பாட்டு கம்பவாரிதிக்கு தெரிந்திருந்தாலே பெரியவிஷயம். பிள்ளை நாலெழுத்து வார்த்தையால் என்னை மனதுக்குள் திட்டியது புரிந்தது. கொஞ்ச நேரத்தில் கேள்விப்பேப்பரை கடாசிவிட்டு நான் கேட்ட கேள்வி “சின்ட்ரெல்லா கதையை தமிழில் சொல்லுங்க பார்ப்பம்?”. “இந்த நாலுவரி விளங்காத கவிதையை கம்பர்/பாரதி/வைரமுத்து, இவர்களில் யார் எழுதியிருக்கலாம்? வை டூ யூ திங் ஸோ?”. 
சென்ஜோன்ஸில் படிப்பித்த மயில்வாகனம் மாஸ்டர் கொஞ்சம் ஜெர்மன் வகை. படிப்பித்தது சமூகக்கல்வி. அதில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கும். மாணவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு அரசரின் பெயர் கொடுப்பார். முதலாம் பராக்கிரமபாகு முன்னே வா என்பார். நடுங்கிக்கொண்டு போவேன்.

1313144241“சொல்லு நீ என்ன செய்தாய்?”
“இலங்கையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தேன்”
“இஸ் இட்? அடிக்கடி என்ன டயலோக் விடுவாய்?”
“வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரேனும் வீணாக கடலை சென்றடைய விடக்கூடாது சேர்”
“வெரி குட், அப்ப நீ என்னென்ன குளங்கள் கட்டினாய்?”
“பராக்கிரம சமுத்திரம் ஒண்டு தான் சேர்”
“ஒகே நீ போகலாம் … அடுத்ததாக எவண்டா அவன் துட்டகைமுனு?”
துட்டகைமுனு குலப்பன் காய்ச்சலுடன் முன்னே வருகிறான்.
“சொல்லு அப்பன்.. நீ யாரை போரில் வென்றாய்?”“வந்து … மறந்து .. போச்சு .. சேர்”
படார் என்று துட்டகைமுனு மன்னன் முதுகில் அடி விழ ஏனைய மன்னர்கள் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்து பேப்பர்

kannan_arunasalam_2_1
கண்ணன் அருணாசலத்தை பற்றி முன்னமும் எழுதியிருக்கிறேன்.  காட்சியில் கவிதை எழுதும் விற்பன்னர். இப்படி ஒரு படைப்பாளி, அதுவும் யாரு பார்க்கிறார்களோ இல்லையோ, தன்னுடைய சுயதிருப்திக்காக, நேர்த்திக்காக எந்த எல்லை மட்டுக்கும் போகக்கூடிய, சமரசங்களே இல்லாமல் கலை வடிக்கும் ஒருவர். அவருடைய எடிட்டிங், கமரா கோணங்கள், வெளிச்சம்/வெளிச்சமின்மை எல்லாமே புதிதாக இருக்கும். இளையராஜாவோ பீத்தோவனோ யார் சொன்னது என்று தெரியாது. நிஜமான இசை என்பது இரண்டு சுரங்களுக்கிடையில் சிக்குப்பட்டிருக்கும் நிசப்த்தத்தில் தான் கிடைக்கும். கண்ணன் அதை ஒளி ஓவியத்தில் கொண்டுவருவார். சட்டிலான எடிட்டிங் இடைவெளிகளை கவனமாக பார்த்ததால் ஏதோ ஆண்டுகள் கடப்பது போல ஒரு உணர்வு இருக்கும்.  இந்த பேப்பரையே பாருங்களேன். முழுமையாக ஒரு காட்சியை காட்டமாட்டார். காட்டிவிட்டால் பார்ப்பவன் உனக்கென்ன வேலை? உன் ஸ்ருஷ்டிக்கென்ன வேலை? அது தான் படைப்பிலக்கியம். ஒவ்வொரு எழுத்தாக அது ஒரு நாளும் படிப்பிக்காது.
Paper from Kannan Arunasalam on Vimeo.
உதயன் எங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை கொல்லைப்புறத்து காதலிகளில் எழுதியிருக்கிறேன். அப்போது கணக்கு செய்ய வெற்றுத்தாள் வாங்குவதற்கு உதயனுக்கு தான் போவோம். பத்திரிகை கட் பண்ணிய மிகுதி துண்டு தாள்களை தருவார்கள். போப்பரசர் இன்றைக்கு தெரிவானபோது கூட உதயன் தான் எனக்கு ஞாபகம் வந்தது.  1995 ஜனவரியில் புனித ஜோன் போல் போப்பரசர் இலங்கை வந்தது அப்போது திருவிழா செய்தி. காலிமுகத்திடலில் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக பிரகடனம் செய்ததும் ஞாபகம் வந்தது. உதயன், பளிச்சென்ற மினுங்கல் தாளில் அவரின் படத்தை பிரசுரித்து இணைப்பாக வெளியிட்டிருந்தது. நெஸ்பிறே பெட்டி மட்டையில் அதை ஒட்டி, சாமித்தட்டில் இயேசுக்கு பக்கத்தில் வைத்து பூவெல்லாம் போட்டு கும்பிட்டுக்கொண்டிருந்தேன். ஏழெட்டு மாதத்தில் இடம்பெயர்ந்து எல்லாமே போய்விட்டது.
உதயன் அப்போது யாழ் மக்களின் குடும்ப நண்பன். இப்போது யாருக்கு நண்பன் என்று எழுதினால் அரசியல் புகுந்துவிடும். வேண்டாம்.

பனிவிழும் இரவு

இன்றைக்கு அலுவலகத்தில் இளையராஜா ஸ்பெஷல். “வா வா வஞ்சி இள மானே” கேட்டுக்கொண்டிருந்தேன். “பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா” என்னும்போது என்னையறியாமல் ஏதோ ஒரு எக்ஸ்பிரஷன் காட்டியிருக்கவேண்டும். பீட்டர் வந்து “யூ இன் எ குட் மூட் டுடே” என்றான். “இளையராஜா பாடல் கேட்கிறேன்” என்றேன். விசாரித்தான். சொன்னேன். தான் ஒரு பாட்டு கேட்கவேண்டும் என்று சொல்ல, இரண்டு செக்கன்ஸ் யோசித்துவிட்டு ப்ளே பண்ணிக்காட்டிய பாட்டு இது. “Wait till the interludes. You are in for a surprise” என்றேன்.
முதல் இன்டர்லூடில் ஓர்கன் முடிய ஒரு இடைவெளி. மௌனம் மட்டுமே அங்கே ஒரு இசை கோர்வையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். படீரென்று கிழித்துக்கொண்டு வயலின்கள் ரீங்காரிக்க  ஆரம்பிக்கும். இந்த பாட்டின் இசை கோர்வை ஒரு உச்சம்.  வசியப்படுத்தும் இசை. அதுவும் “தனிமையே போ” என்று ஜானகி பிட்ச் பிடிச்சு ஏங்கும்போது,
டேய் மொட்டை, ரொம்ப அநியாயம்டா!

&&&&&&&&&&&&&Contact Form