வியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி

Mar 28, 2013

 

downloadஉரிஞ்சான்குண்டிச் சிறுவர்
ஓடிவந்து கையசைக்க வேகமெடுக்கும்.
இருமருங்கும் சணல்விளைந்த வயலூடு
மஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்
அது வரும்.
அறுவடை முடித்த வயலூடு போகும்.
வெறும் இரும்புக்கூடெனினும்
எத்தனை நாள் பார்த்தாலும் அலுக்காது.
தொட்டுப்பார்த்தால் சுகமிருக்காது
எனினும்
புகைவண்டிமீது எமக்கு பகையில்லை.

இன்றேன்
தண்டவாளங்களிருந்த தடயங்களற்று
விதவைக்கோலத்தில் புகையிரதப்பாதை?
சிலிப்பர் கட்டைக்கும்
சிக்னல்
மரத்துக்கும்
என்ன நடந்தது?
எவர் பிடுங்கிச்சென்றார்?
இரும்புப் பாதையேன்
இல்லாமற் போச்சு?
ஸ்ரேசன் கட்டிடங்கள் கூரையற்று
குட்டிச்சுவரானதேன்?
சொந்தமற்றுப்போன தேசத்துடனான
உறவைத்துண்டித்தது ஓரினம்.
36225512இனத்தின் முகத்தைச் சிதைத்தவரின்
இரும்புப்பாதை இல்லாமற்போனது.
நூலறுந்த பட்டத்துக்கு வாலெதற்கு?
பகையற்றிருந்த வரை
ஊர்களை புகைவண்டி இணைத்தது.
உறவற்றுப் போனதும்
தொடர்பற்றுப் போனது.

தண்டவாளத்துக்கு என்ன தெரியும்?
அது பேசாமற்கிடந்து
துருப்பிடித்துப் போனதால்
பிடுங்கி எடுத்துக்கொண்டோம்.

ஒருகட்டத்தில் அழகாயிருந்தன தான் எல்லாம்.
இந்துசமுத்திர மாங்கனியை
“அந்த” அணில்கள்தான் அரித்தன.
நாங்கள் எமக்குரிய பாதியைப் பவுத்திரப்படுத்த
காம்பாய்க் கிடந்த இரும்புக்கம்பிகள் கழன்றன.
சிலிப்பர் கட்டைக்கும்
சிக்னல் மரத்துக்கும்
நடந்தது இதுதான்.

-- புதுவை இரத்தினதுரை, வெளிச்சம் பங்குனி, 1996ம் ஆண்டு இதழ். “பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்” என்ற தொகுப்பிலிருந்து.

இன்றைக்கு மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணம் வரை ஓடினால், இந்த கவிதை சொல்லும் ஆதாரமான செய்தியின் வீரியம் என்னவாக இருக்கும்? சொல்லுங்களேன்.


 

ஆச்சி பயணம் போகிறாள்!

ஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள்.  பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனாலும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி,

ஆச்சி பயணம் போகிறாள்.

3.4பயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் டேசனில்” இருந்து கதை நகர்கிறது. ஆச்சியின் அலப்பறைக்களோடு.

“ஈழத்து நகைச்சுவை வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்புமுனை” என்று இதை எழுதிய செங்கை ஆழியான் சொல்லிக்கொள்கிறார். அப்படியா? நகைச்சுவைகள் எல்லாம் லொள்ளுசபா வகை கடி ஜோக்குகள். சாம்பிளுக்கு இரண்டு.

“மாத்தையா மொனவத பொண்ட”

“போண்டாவாமே, சுசியம் இருந்தா தரச்சொல்லு”

இது யாழ்தேவி ரயில் கண்டீன் வெய்ட்டருக்கு ஆச்சி சொல்லும் பதில். “எப்பா” என்று சிங்களத்தில் சொன்னால் “அப்பாவோ.. எங்கை பிள்ளை” என்பாள். இப்படி சிங்கள வசனங்களுக்கு நாவல் பூரா ஆச்சி கவுண்டர் குடுத்துக்கொண்டே இருக்கும். சிவராசா செல்வி இருவரும் ஆச்சி கவனிக்காத போது செய்யும் சில்மிஷங்களும் குறைவில்லை. நுள்ளுவார்கள். கிள்ளுவார்கள். ஆச்சி அரவம் கேட்டு என்னெவென்று கேட்டால் சமாளிப்பார்கள். குகைக்குள்ளால் ரயில் போய் வெளிவரும் போது செல்வி அவனைப்பார்த்து “காவாலி” என்பாள். இப்படி பல நடக்கும். சண்டையும் பிடிப்பார்கள். சிவராசா தான் ஒரு “விண்ணன்” என்று காட்டிக்கொள்வான். செல்வி எது சொன்னாலும் மட்டந்தட்டுவான். அவள் ஆங்கிலேயரை உயர்வாக பேசினால் சிவராசா இல்லை என்று ரஷ்யாவையும் சீனாவையும் உயர்வாக பேசுவான். இப்படி ஒரு காதலர் ஜோடி அனேகமான செங்கை ஆழியான் கதைகளில் வந்தே தீரும். வருகிறது.

பார்க்கபோனால் இது ஒரு பயண நாவல். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு போய்,  பல்கலைக்கழக சூழல், பேராதனை பூங்கா, தலதா மாளிகை காட்டிவிட்டு, அப்புறம் பஸ் பயணத்தில் கதிர்காமம் போகும் நாவல். போகிற போக்கில் அந்த காலத்து வாழ்க்கை, கொஞ்சம் அரசியல் இவை தான் இந்த நாவல். இதில் தேவையில்லாமல் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானிடம் எப்போதுமே இயல்பான நகைச்சுவை இருக்கும். அவரின் வயோதிப பாத்திரங்கள் மிகவும் ஆளுமை மிக்கதாக இருக்கும். இதிலே மிஸ்ஸிங். இலங்கை வானொலி நாடகங்கள், தெனாலி கமல் ரக நகைச்சுவை இது. நாடகத்துக்கு ஒகே. நவீனத்துக்கு ஒட்டவில்லை.  மணிரத்தினத்துக்கு ஒரு கடல் போல செங்கை ஆழியானுக்கு “ஆச்சி பயணம் போகிறாள்”.

இதற்கு அணிந்துரை எழுதிய செம்பியன்செல்வன், “உயர்ந்த நகைச்சுவையானது மனித குலத்தின் ஆத்ம பரிசீலனையாகும், அதை இந்த நாவல் செய்கிறது” என்கிறார். சிரிப்பு வந்தது. அறுபதுகளிலேயே இப்படி நகைச்சுவை எழுதியிருக்கிறார்களே. அப்போது இப்படி எல்லாம் எழுதவும் முடியுமா? என்று யாராவது கேட்டால், பதிலுக்கு தலைவரின் தலைவரை துணைக்கு அழைக்கவேண்டும்.  “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்று ஒரு சிறுகதை. சில பகுதிகளை சும்மா சாம்பிளுக்கு தருகிறேன்.

கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். வரம் கொடுக்க தயாராகும் கடவுளிடம் கந்தசாமிப்பிள்ளை சொல்லுகிறார். “ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தை கொடுத்து விட்டு உம்பாட்டுக்கு போவீர்; இன்னொரு தெய்வம் வரும். தலையை கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக்கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தை தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல!”

கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தைக்கு லட்டு வாங்கிக்கொடுக்கிறார். குழந்தை அதை எடுத்து சாப்பிட்டவாறே கடவுளுக்கும் நீட்டுகிறது. “இதைத்தின்னு பாரு, இனிச்சுக்கெடக்கு” என்கிறது. வாங்கிச்சாப்பிட்ட கடவுள், குழந்தையின் மனதை குளிர்விக்கவெண்ணி “பாப்பா உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு” என்பார். குழந்தை முழு லட்டை கையில் வைத்துவாறே யோசித்துவிட்டு சொல்லும்.

“தாத்தா முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே, உதுத்தா உனக்கென்னு சொல்லுதீயே, அப்பா எனக்கு இல்லையா?”

புதுமைப்பித்தன் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எழுதியது 1943ம் ஆண்டு!


 

ஸ்டேசன் மாஸ்டரின் தாலி!

கவனித்திருப்பீர்கள். ரெயில்வே ஸ்டேஷனில் ரெயில் நிற்கும்போது டிரைவர் ஒரு வளையத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் வீசி எறிவார். பதிலுக்கு இவர் டிரைவரிடம் இன்னொரு வளையத்தை நீட்டுவார். இன்றைக்கும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த நடைமுறை இருப்பதை காணலாம். சிரித்திரன் சுந்தர் அதை ஸ்டேஷன் மாஸ்டரின் தாலி என்று நக்கலடித்து கார்ட்டூன் வரைந்திருப்பார்.

சயந்தன் சிலவாரங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் எழுதினபோது தான், அட இதை இவ்வளவு காலமும் எழுதாமல் விட்டோமோ என்று வருத்தம் வந்தது. அந்த ஸ்டேஷன் மாஸ்டரின் தாலிக்கு பின்னால் ஒரு கொம்பியூட்டர் அல்கோரிதமே இருக்கிறது. அது ஒருவித சாவி. அது கையில் கிடைக்காமல் ரயில் வண்டி ஒரு அடி கூட முன்னே நகரமுடியாது. எப்படி என்று பார்ப்போம். இடுப்புப்பட்டியை இறுக்கிக்கொள்ள்ளுங்கள்.

ஆரம்பத்தில் ரயில் பாதைகள் ஒருவழிப்பாதைகளாகவே இருந்தன. அதாவது இரண்டு நிலையங்களுக்கிடையில் ஒரே ஒரு பாதை தான். எல்லா ரயில்களும் அதில் தான் பயணிக்கவேண்டும். டைமிங் மிஸ்ஸானால் நேருக்கு நேரு இரண்டு வண்டிகளும் நடுவழியில் மோதிக்கொள்ளும் ஆபத்து இருக்கின்றது. மோதலை தவிர்க்க தான் இந்த தாலி. கலியாணம் போல.

Capture

உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான காங்கேசன்துறை, சுன்னாகம், கோண்டாவில் கொக்குவில் என்ற நான்கு ரயில் நிலையங்களை எடுத்துக்கொள்வோம். யாழ்தேவி ரயில் காங்கேசன்துறையில் இருந்து புறப்படுகிறது. டிரைவர் கையில் சிவப்பு தாலி இருக்கும். சுன்னாகம் நிலையத்தில் சிவப்பு தாலியை கொடுத்துவிட்டு பச்சைத்தாலியை ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிரைவர் வாங்கிக்கொள்வார். இப்போது சுன்னாகத்திலிருந்து கோண்டாவிலுக்கு வண்டி பயணிக்கும், டிரைவர் கையில் பச்சைத்தாலி.

அதே சமயம் கொக்குவிலில் இருந்து உத்தரதேவி மெதுவாக புறப்படுகிறது, அந்த டிரைவரின் கையில் இப்போது நீலதாலி இருக்கும். உத்தரதேவி ஒரு ஸ்லோ கோச்சி. ராகுல் டிராவிட் ரகம். பாய் போட்டு படுத்தபடியே வரும். அது கோண்டாவிலை அடையும் முன்னமேயே யாழ்தேவி கோண்டாவிலை அடைந்துவிடும். ஆனால் கோண்டாவிலில் இருந்து கொக்குவிலுக்கு யாழ்தேவி போகவேண்டுமானால் நீல தாலி வேண்டும். அது இப்போது உத்தரதேவியிடம் அல்லவா. ஆக உத்தரதேவி வந்துசேரும் மட்டும் யாழ்தேவி கோண்டாவிலில் காத்துக்கிடக்கவேண்டும். வந்தபின்னர், யாழ்தேவி நீலதாலியையையும் உத்தரதேவி  பச்சைதாலியையும் எடுத்துக்கொண்டு அதது திசையில் பயணிக்கும். புரிகிறதா? இரண்டு வண்டிகளுமே இடைவழியில் மோதிவிட சாத்தியமில்லை.

இதை கொஞ்சம் சிக்கலாக்குவோம். பயணிகள் அதிகரித்ததால் புதிதாக ஒரு ரெயில் சேவையை அறிமுகப்படுத்துகிறார்கள். சாரதாதேவி என்று வைத்துக்கொள்வோம். யாழ்தேவி புறப்பட்டு அரைமணி நேரத்தில் சாரதாதேவி காங்கேசன்துறையில் இருந்து புறப்படதயாராகிறது. ஆனால் புறப்படுவதற்கு சிவப்பு தாலி வேண்டும். ஆனால் தாலியை யாழ்தேவி கொண்டுபோய் சுன்னாகத்தில் கொடுத்துவிட்டிருக்கும் அல்லவா? உத்தரதேவி அதை எடுத்துக்கொண்டு வரும்வரை காத்திருக்கவும் முடியாது. எப்படி சமாளிப்பது?

IMG_8030அந்தக்காலத்தில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ஒரு குதிரை வைத்திருப்பார்களாம். இப்படியான நிலைமைகளில், அதாவது ஒரே திசையில் போகும் இரண்டாவது வண்டி வந்து தாலி கிடைக்காமல் தரித்து நின்றால், ஒருவர் குதிரையில் வேகமாக அடுத்த ஸ்டேஷனுக்கு போய் அந்த தாலியை எடுத்துக்கொண்டு வருவார். அவருக்கு அதுக்கு சம்பளம். கவுன்மேந்து உத்தியோகம். அவர் அதை கொண்டுவந்து டிரைவரிடம் கொடுத்தபின்னர் தான் ரெயில் காங்கேசன்துறையில் இருந்தே புறப்படும். பகிடியாக இருக்கிறது இல்லையா? பயணிகள் உயிரோடு விளையாடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. பின்னர் இந்த முறை மாறி, டோக்கன் டிக்கட் சிஸ்டம், கொண்டுவந்தார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியாகி, சிக்கலாகி, சிங்கப்பூரில் டிரைவர் இல்லாமல் எம்ஆர்டி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஆனா ஆவன்னா மாறவில்லை. இரண்டு வண்டிகள் மோதாதவகையில், கால தாமதமில்லாமல் எப்படி போக்குவரத்தை ஒழுங்குபண்ணுவது? அது தான் கேள்வி.

ஐடி துறையில் இருப்பவர்கள் இந்த கேள்விக்கு பதிலை அடிக்கடி பலவிடயங்களில் தேடுவார்கள். லொக்கிங்(Locking) என்று பொதுவாக சொல்லப்படும் பொறிமுறை இது. டேட்டாபேஸ்(Database) படிப்பவர்களுக்கு பரிச்சயமாக இருக்கும். மொத்த டேபிளையும் லொக் பண்ணுவதில் ஆரம்பித்து, ஒரு வரிசையை மட்டும் லொக் பண்ணினால் போதாதா என்று யோசிப்பது எல்லாமே இதே தாலி விஷயம் தான். ஒபெரேட்டிங் சிஸ்டம் என்கின்ற இந்த விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் இந்த பொறிமுறை சகட்டுமேனிக்கு இருக்கும். மியூட்டெக்ஸ்(Mutex)  என்பார்கள். யாராவது கேட்டால் “பூ.. இது ரயில் தாலி தான்” என்று சொல்லுங்கள்.  சின்ன உதாரணம். ஒரு வேர்ட் டொக்கியூமெண்ட் இருக்கிறது. ஒரே சமயத்தில் இருவர் அதை எடிட் பண்ணுகிறார்கள் என்றால் குழப்பம் வராது? ஆக ஒருவர் எடிட் பண்ணும்போது மற்றவர் எடிட் பண்ணாதபடி லொக் போடலாம். பின்னர் மொத்த டொக்கியூமெண்டுக்கு பதிலாக குறிப்பிட்ட எடிட் பண்ணுகின்ற அந்த ரெண்டு மூன்று வரிகளை மாத்திரமே லொக் பண்ணலாம். இது கணனியின் ஆதாரமான விஷயங்களில் எல்லாம் பயன்படுத்தப்படும். டுவல் கோர்(Dual Core), குவாட்கோர்(Quadcode) என்று லேப்டாப் வாங்கபோகும்போது கடைக்காரன் பீலா விட்டிருப்பான். அங்கேயும் இது தேவை. ஒரே ஒரு ஹார்ட்டிஸ்க், ஒரே ஒரு மெமரி ஆனால் நான்கு ப்ரோசசர் என்றால், எங்கேயும் குழப்பம் வராமல் இருக்க தாலி வேண்டும். ப்ரோகிராமிங் அதுவும் ஜாவா என்றால் திரட் ப்ரோகிராமிங்கில்(Thread Programming) இம்மை மறுமை இல்லாமல் லொக், இந்த தாலி இருக்கும். செய்யும்போது புல்லரிக்கும்.

திருமணங்களில், தாலி, மோதிரம், இந்த மெட்டி சமாச்சாரம், ஆழ யோசித்தால், இதே அல்கோரிதம் தான். இது தெரிந்து தான் “வாழ்க்கை ஒரு ரயில் பயணம்” என்றார் நம்ம டீ ஆர்.


 

கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி!

 

197921_10150111999848170_6085810_n“புதுவருடம் அன்று தாஜ்மகாலுக்கு போனா ஏதாவது ஒரு காதல், பொண்ணு சரிவரும்” என்று சயந்தன் சொன்ன அடவைசை நம்பி ஜனவரி முதலாம் திகதி ஆக்ரா பயணம் என்று முடிவாகிறது. ஏழு மணி ரயிலுக்கு நாங்கள் ஆறரைக்கே டெல்லி நிசாமுதீன் நிலையத்தில் ஆஜர்.  அங்கே ஆக்ரா போகும் வண்டி மூன்று மணிநேரம் தாமதம் என்றார்கள். வெளியில செம குளிர். கணகணப்புக்கு கொஞ்ச நேரம் டெல்லிப்பெண்களை பார்க்கலாம் என்று மீண்டும் சயந்தன் அடவைஸ் பண்ண முறைத்துப்பார்த்தேன். அந்த ஸ்டேஷனுக்கு வருபவர்கள் எல்லாம் டெல்லியின் முனியம்மா, மயிலம்மாக்களாகவே இருந்தது. கத்ரீனா கைப், பிரீத்தி ஜிந்தா எல்லாம் கோனோட் பிளேசில் தான் இருப்பார்கள் என்றார்கள். இது கிட்டத்தட்ட புறக்கோட்டை, அதைவிட மோசம். பேசாமல் டைம்ஸ் ஒப் இந்தியாவும், ஹிந்துவும் வாங்கி வாசித்தபடி ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்தோம். தூங்கினோம். அதுவும் அலுப்படிக்க, கிடைக்கும் வரைக்கும் லாபம் என்று சயந்தன் முனியம்மாக்களை மேயத்தொடங்க, புலி பசித்தாலும் புல்லை தின்னாதடா என்று சொல்லி நான் மீண்டும் பேப்பர் விரித்து சாய்ந்தேன்.

250047_10150184340446415_3726415_n (1)

மூன்று மணிநேர பயணம், பனிப்படலத்தால் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் சென்றது. ஆனாலும் அலுக்கவில்லை. அதற்கு காரணம் ஒரு தேவதை. ஸ்ரீநகரில் ஏதோ ஒரு பூர்வீக கோயிலுக்கு போய்விட்டு உத்தரபிரதேசத்து ஜஸ்வந்த்நகருக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவளோடு அவள் தம்பி, அம்மா அப்பா, சின்ன குடும்பம் தான். அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையில் இராமா ஜெயம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் இருக்கைக்கு பக்கத்தே ஒரு தாய் சின்னக்குழந்தையுடன் இருந்தார். அவர் குழந்தை ஒரு சுட்டி. அழும், திடீரென்று எங்களிடம் வந்து டாட்டா காட்டிவிட்டு மீண்டும் போய் அழும். நாங்கள் மூன்று பேரும் ஒருபக்க சீட்டில். முன்னே அவளும் தம்பியும். அவனுக்கு ஒரு பதினைந்து வயது இருக்கலாம். இந்த விவரணங்களை ஸ்கிப் பண்ணிவிட்டு அவளிடம் போவோம்.

பிகொம் இறுதியாண்டு. ஐந்தடி ஏழு அங்குலம். ஆங்கிலம் நுனிநாக்கு. லோ ஹிப்பில், நைலக்ஸ் சேலை கட்டி திரும்பி நின்றால் இலியானா காலி. மெல்லிய சின்ன மூக்கு, கேர்லி ஹேர், “அன்பே அன்பே கொல்லாதே” பாட்டில் ஆடும் ஐஸ்வர்யாராய் ஜீன்ஸ், டீசேர்ட் போட்டபடி எங்கள் சீட்டுக்கு முன்னாலே இருந்தால் எப்படி இருக்கும்? இருந்தாள். புதுவருஷம், தாஜ்மகால் பயணம், போக முன்னமேயே காதலா? சயந்தனை பார்த்து தாங்க்ஸ்டா என்றேன்.

மூன்றாவது இடியட்டான ஹர்ஷா இவ்வளவு டீடைலிங்குக்கு மெனக்கெடவில்லை. முதலில் பேச்சுக்கொடுத்தான். “ஏன் இந்தியப்பெண்கள் வெளியாரிடம் பேச வெட்கப்படுகிறார்கள்” என்ற முதல்கேள்வி. அர்த்தமற்ற கேள்வி போல எனக்குப்பட்டது. ஆனால் ஆச்சர்யமாக கேள்வி வேர்க் அவுட் ஆனது. “அப்பிடி இல்லை, அதெல்லாம் அந்த காலம்” என்று அவள் பேசத்தொடங்க, ஹர்ஷா “இரவில் ஒருக்களித்துப்படுக்க பிடிக்குமா? விட்டத்தை பார்த்தபடி படுக்க பிடிக்குமா?” வரைக்கும் டிஸ்கஸ் பண்ண தொடங்கியபோது தான் எனக்கு அன்பே அன்பே பாட்டு சீன் முடிந்திருந்தது. சுதாரிக்கமுதல், சயந்தன் திடீரென்று அவள் தம்பியிடம், “உமக்கு செஸ் விளையாட தெரியுமா? நான் ஸ்ரீலங்கன் சாம்பியன்” என்று சொல்ல, எனக்கு உதறலெடுத்தது. "விளையாட்டு காட்ட தொடங்கீட்டாங்கள்” என்று தெனாலி கமல் மைன்ட் வோய்ஸில் சொல்லக்கேட்டது. ஏதாவது செய்யடா ஜேகே. இம்ப்ரஸ் ஹேர்!

163147_478828411414_8206617_nகையில் இருந்த “Kite Runner” உதவி செய்யும் போல தெரியவில்லை. அவளைப்பார்த்தால் மகாபாரதம் தான் கடைசியாக படித்த நாவல் என்று சொல்லுவாள் போல தோன்றியது. ஏதாவது செய்யவேண்டும். “பாக்கியராஜின் இன்று போய் நாளை வா” ஞாபகம் வந்தது.  உடனேயே பக்கத்து சீட்டில் அழுதுகொண்டிருந்த அந்த பிள்ளையை கையில் வாங்கி, விளையாட்டு காட்டினேன். குழந்தை சிரித்தது. திடீரென்று குழந்தையை அவளின் கையில் கொடுத்துவிட்டு பையில் இருந்த பிஸ்கட்டை எடுத்து அதனிடம் நீட்ட, குழந்தை தாங்க்ஸ் சொன்னது. அவள் “ச்சோ கியூட்” என்று குழந்தையின் கன்னத்தை முத்தமிட,  ஐந்து நிமிடம் காஷ்மீர் போய் கோஸ்டியூம் மாற்றி “புது வெள்ளை மழை” பொழிய ஆசையாய் இருந்தது. அவகாசம் இல்லை. கீப் த போஃகஸ் ஜேகே.

உடனேயே “ஏ ஆர் ரகுமான் பிடிக்குமா?” என்றேன். “பிடிக்குமாவா?” என்றுவிட்டு “தில் கபி கண்டா, கபி ஹே நெக் பண்டா, தில் க பரோசா கெய்ஷே கொய் கரே” என்று ஹம் பண்ணினாள். அம்மாளாச்சி கைவிடவில்லை. அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ். “தில் கபி தண்டா, கபி ஹே அடம் போம்ச, ம்ம்ம்ம் ம்ம்” என்று வரிகள் தெரியாமல் டியூன் கொடுத்தேன். எசப்பாட்டு பாஸ். “வா….வ்” என்று வாய் அகன்றாள். இருவருமே ஒரே கோரஸில் “நஸ்ரின் மிலானா” என்றோம். முழுப்பாட்டும் இப்படியே போனது.

சயந்தன் கடுப்பில் செஸ் பெட்டியை படாரென்று அடித்து மூடினான். ஜானா டு யா ஜானா பாட்டெல்லாம் முடிய ஆக்ரா வந்தது. நாங்கள் இறங்கவேண்டும். மனமேயில்லை. நம்பர் கொடுத்தேன். தந்தாள். அடுத்தநாளே டெல்லி ஏர்போர்டில் வைத்து கோல் பண்ணினேன்.

Jaane-Tu-Ya-Jaane-Na“ஹே திஸ் இஸ் ஜேகே … ரிமெபர் மீ? .யூ நோ. ஏ ஆர் .. ”
“ரஹ்மான் .. வாவ் நஸ்ரின் மிலானா?’
“யா .. நஸ்ரின் … மிலானா .. ஆப் நாம் … ..  தும் .. மாதும் .. தும் .. ஐ டோன்ட் நோ”
“கமோன் ஜேகே .. யூ ஆர் ஒல்மோஸ்ட் தேர்”
“மாதும் ஸியே பியார் கர்தாகேஹும்”
“வாவ் … பேனும் தான்”
“பேனா? யூ மீன் ஹெட் லைஸ்?”
“நோ நோ … அதான் .. மீ டூ .. இன் தமிழ்!”
அடக்கடவுளே அது “நானும் தான்”

காதல் தொடர்ந்தது. Facebook  இல் மாறி மாறி இருவரும் போடும் மொக்கை ஸ்டேடஸ் எல்லாம் லைக் பண்ணினோம். அவள் ஹிந்தியில் போட்டாலும் லைக்கினேன். என்னவோ தெரியவில்லை. திடீரென்று என்னை புளோக் பண்ணிவிட்டாள். வலித்தது. தாங்கமுடியவில்லை. அது கூட பரவாயில்லை. சரி இது நமக்கென்ன புதுசா, போடீ என்று விட்டுவிட்டேன்.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சயந்தனின் தமிழ் ஸ்டேடஸ் ஒன்றை அவள் லைக் பண்ணியிருந்தாள்.

டேய் துரோகி!

பிற்குறிப்பு : சயந்தனின் வேர்ஷன் இங்கே!


 

ரயில் விடு தூது.

ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது தான் இந்த சம்பவமும் நிகழ்ந்தது. மெல்பேர்னில்.  எனக்கு பக்கத்தில் இருந்த பெண்ணோடு அப்போது தான் உள்ளே நுழைந்த ஒருவன் பேச்சு கொடுத்தான். அது மெல்பேர்னில் சகஜமானது. இருவரும் இயல்பாக, வேலை, வெதர், விளையாட்டு என்று பேசிக்கொண்டார்கள். வேறு பலவும் பேசினார்கள். புரியவில்லை. அப்போது எனக்கு மெல்பேர்ன் புதிதானதால் யார் பேசினாலும் ரிக்கி பொண்டிங் பேசுவது போலவே இருக்கும். சுத்தமாக விளங்காது. பத்து சொற்கள் சொன்னால் அதில் இரண்டை தட்டுதடுமாறி கண்டுபிடித்து, மிகுதியை டக் டிக் டோஸ் போட்டு தான் புரிந்துகொள்வேன்.

அவர்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவன் இறங்கவேண்டிய நிலையம் வருகிறது. பை பை சொல்லிவிட்டு ரயிலின் கதவடிக்கு போனவன், ஏதோ யோசித்தவனாய், திரும்பிப்பார்த்து “How about a coffee?” என்கிறான். இவள் சிரிக்கிறாள். அவன் கதவை திறந்துவைத்துக்கொண்டே நிற்கிறான். கதவு மூடாமல் வண்டி புறப்படாது. மீண்டும் கேட்கிறான். அவள் கொஞ்சம் வெட்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஒல்ரைட் என்று சொல்லி எழுந்துபோகிறாள்.

அன்றைக்கு முழுக்க அந்த காட்சி கண்ணைவிட்டு மறையவில்லை. என்ன ஒரு காட்சி.ஒரு ரயில் சந்திப்பில் டேட்டிங். அந்த பாதிப்பில் அன்றிரவே ஒரே மூச்சில் எழுதிய கதை தான் “Coffee”. என் செல்லக்குழந்தை இந்த கதை. அதையே படலை ஆரம்பித்தபின் தமிழில் “என்ர அம்மாளாச்சி” என்று எழுதினேன். இரண்டாவது குழந்தை!

இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு அந்த காட்சி ஞாபகம் வரும்.

ரயிலில் எந்தப்பெண் எனக்குப்பிடித்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாலும், அவள் அறுபது வயது பாட்டியாக இருந்தாலுமே காதல் வந்து சேரும். ஒருமுறை Interpreter of Maladies வாசித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் “இந்த புத்தகம் வாசிக்கும் ஒருவரை ரயிலில் சந்திப்பது சர்ப்பரைஸ்” என்று சொல்லியிருக்கிறேன்.

இந்த பாட்டில் வரும் நாயகியும் அந்த ரகம். கையில் இர்விங் வாலஸ் (Irving Wallace) புத்தகம். ஜனரஞ்சக கதைகளை புத்திசாலித்தனமாக எழுதுபவர் என்று இர்விங்கை பற்றி குறிப்பிடுவார்கள்.  கனிகா வாசிப்பது “The Second Lady”. மசாலா கதை. அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை கடத்திவிட்டு, அவரைப்போலவே தோற்றமளிக்கும் ரஷ்ய உளவாளியை ஆள்மாற்றுகிறார்கள். இறுதியில் இருவரையுமே கொல்ல முயற்சி செய்கிறார்கள். ஒரு பெண் சாகிறார். மற்றவர் தப்புகிறார். தப்பியது முதல் பெண்மணியா இல்லை உளவாளியா என்பது இறுதிவரை சொல்லாமலேயே விட்டுவிட வாசகன் மண்டை காயும்!

பாட்டின் வரிகளும் சுவையானவை. காதலன் ரயிலை தூதுவிடுவது யாழ்ப்பாணத்தாருக்கு புதுசில்லை. காதலுக்கு “புக்காரா”, “முள்வேலி”, “யாழ்தேவி” என்று பலவற்றை தூதுவிட்டு கவியரங்கம் செய்திருக்கிறார்கள். நம்ம வாலிபனின் அண்ணன்காரன் கூட தூதுவிட்டவர்களில் ஒருவர். 90களில் நான் ஆவென்று பார்த்து ரசித்த அரங்கம் அது.

248770_10150184341151415_5038922_nஉலகெங்கும் நீ போகிறாய் வருகிறாய்
இவளை போல் பெண்ணை எங்கு நீ பார்கிறாய்

சிவப்பு நிறமது வழியில் தெரிந்ததும் நிற்பாயே நீயும்
இவளின் இதழ் நிறம் பார்த்ததும் என் இதயம் நிற்காதா பாவம்

ஏ ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்
எனக்கு நீ எனக்கு போய் பெண் பார்த்து சொல்வாயா

பா.விஜய் எழுதியதாம். “ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்” என்ற வரிகளில் வித்தகக்கவிஞராக ஜொலிக்கிறார்.

 

&&&&&&&&&&&&&&&&&&&&&

Contact Form