வியாழமாற்றம்-11-04-2012 : அஞ்சு அழகிகள்

Apr 11, 2013

 

சோதி அக்கா

pukal2[3]எண்பதுகளின் இறுதி அது. டிவியில் மகாபாரதம் போய்க்கொண்டிருந்த சமயம். விளக்குமாற்று ஈர்க்கை வளைத்து தையல் நூலால் வில்லு சரிக்கட்டி வைத்திருப்பேன். நான்கைந்து ஈர்க்குகள் என் காற்சட்டைக்கு பின்னால் செருகி இருக்கும். வாழைமரங்களுக்குள் ஒளிந்திருந்து, அம்புறாத்துணியில் இருந்து ஒரு ஈர்க்கை எடுத்து, வில்லில் ஏற்றி இழுத்து விட்டால் அடுத்த வாழையில் போய் சரக்கென்று குத்தி நிற்கும். குத்திய இடத்தில் வாழைச்சாயம் இரத்தமாய் ஓடும். “இன்று போய் போர்க்கினி நாளை வா” என்று ராமன் டயலாக்கை வாழையை பார்த்து சொல்லுவேன். அந்த சண்டையில் இராமன் பீஷ்மன் வாலி அர்ச்சுனன் எல்லாம் ஒவ்வொரு வாழைக்கு பின்னால் அம்போடும் வாளோடும் நிற்பார்கள்.

நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்படி குருஷேத்திரம் அகோரமாக நடந்துகொண்டிருந்த தினத்தில் அக்கா கேட்டடியில் வந்து தட்டினார். ஓடிப்போய் கேட்டை திறந்துவிட்டு, அம்மாவிடம் “சோதி அக்கா வந்திருக்கிறா” என்று கூவிவிட்டு மீண்டும் போர்க்களத்துக்கு தயாரானேன். “டேய் டேய் இங்க வாடா” என்று கூப்பிட்டார். கூச்சமாக இருந்தது. பின்னால் வேறு ஈர்க்கு ஒன்று டீப்பாக இறங்கியும் விட்டது. சங்கடத்தோடு “என்னக்கா?” என்றேன். “என்ன விளையாடுறாய்?” என்று கேட்டார். தயங்கியபடி, சும்மாதான் மகாபாரதம் விளையாடுறன் என்று சொல்ல, “நீ யாரு?” என்று திரும்ப கேட்டார். “அர்ஜுனன்” என்றேன். “பார்த்துடா, இந்த முறையாவது சில்லை ரிப்பயர் பண்ணுற நேரத்தில கர்ணன் மேலே அம்பை விட்டிடாத” என்றார். புரியாவிட்டாலும் “ஒகே அக்கா” என்று சொல்லிவிட்டு நான் வாழைத்தோட்டத்துக்குள் ஓடிவிட்டேன்.

சோதி அக்கா அப்போது யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கிறார். அப்பாவின் மாணவி. நெருங்கிய சொந்தம் என்பதால் வீட்டுக்கு அடிக்கடி வந்து படிப்பார். அவருடைய தகப்பன் தமிழரசுக்கட்சிகாரர், தமிழறிஞர். கவிஞர். கவிதை மகளுக்கும் தொற்றியது. கவிதாயினி. அவ்வப்போது எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவார். கவிதைகள் எல்லாமே விடுதலை, புரட்சி சார்ந்த கவிதைகள் தான். அவர் கவிதைகள் எதுவும் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். ஒன்றிரண்டு முத்துகள் மாட்டின. இப்பிடி எல்லாம் எழுதியிருக்கிறீங்களா அக்கா?

அடுத்த
கிறிஸ்மஸ் கரோலில்
என்னிடம் நீ
அன்றேல்
உன்னுடன் நான்!

அந்தவயதில் அவரின் கவிதை எனக்கு புரியவில்லை. ஆனால் பலர் அவர் கவிதைகளில் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். “அவள் பிரச்சாரத்திலேயே பல பெட்டைகள் இயக்கத்துக்கு போனதுகள்” என்று அம்மா சொல்லுவார்… சோதி அக்காவும் ஒருநாள் இயக்கத்துக்கு போய்விட்டார்.

பயிற்சி முடிந்து வந்து, அப்போது SALT என்று அழைக்கப்பட்ட மாணவர் இயக்கத்தில் இருந்தார். பரமேஸ்வரா சந்தியடியில் சிவன் ஸ்டோர்ஸ் கடைக்கு பக்கத்திலே இருக்கே ஒரு இரண்டு மாடி கட்டிடம். அது தான் சோல்ட் முகாம். முன்னர் இந்தியன் ஆர்மி அங்கே இருந்து, இயக்கம் அதற்கு சக்கை வைக்க முயன்றது எல்லாம் “விறகிலே” வந்திருக்கிறது . மாணவர் இயக்கத்தில் பிரச்சாரம், சிவில் நிர்வாகம் என்று பல பொறுப்புகளில் இருக்கிறார். எங்கள் வீடு அருகிலேயே இருந்ததால் அடிக்கடி வந்து போவார். அவர் வரும் ஸ்டைலே அழகாய் இருக்கும். இரட்டைப்பின்னல் தலைமயிர் அள்ளி சுருட்டி முடியப்பட்டிருக்கும். செக் சேர்ட் வெளியே டக் பண்ணாமல் விட்டு, சிலவேளைகளில் நடுவில் பெல்ட் கட்டுவார். சிலவேளை இருக்காது. லேடிஸ் சைக்கிள் தான். சிரித்தால் எங்கள் ஊரான நயினாதீவு லுக் அப்படியே இருக்கும். “அவளை போல நல்ல பிள்ளைய பார்க்கவே முடியாது, ஒரு சொல்லு குத்திற மாதிரி கதைக்கமாட்டாள்” என்று நேற்று கேட்டபோதும் அப்பா சொன்னார்.

பங்கர் ஒன்று டிசைன் பண்ணி, லெவல் புள்ளிகள் கணக்கிடவேண்டும் என்று அப்பாவிடம் ஒருநாள் உதவிக்கு வந்தார். கோவில் வீதியில் கந்தன்கருணைக்கு பின் வளவில் இருந்து ஆரம்பித்து இரண்டு மூன்று வளவுகள் நீண்டு போகும் பெரும் பங்கர் டிசைன் அது. அப்பா பயந்துவிட்டார். என் அப்பா அல்லவா. “உங்களுக்கு இதை செய்து குடுக்கிறது வெளிய தெரிஞ்சா நான் கொழும்பு பக்கமே போகேலாது, நீயே படிச்சத வச்சு மனேஜ் பண்ணு” என்று சொல்லிவிட்டார். அக்கா சிரித்தபடியே, “சும்மா கேட்டா செய்யமாட்டீங்க, பங்கருக்குள்ளேயே கொண்டுபோய் வச்சா அளக்கதானே வேண்டும்” என்று பகிடியாக மிரட்டினார். அப்பா நேற்று இதை ஞாபகப்படுத்தி “அவள் சீரியஸாக சொன்னாளோ பகிடியா சொன்னாளோ, எனக்கு வயுத்த கலக்கீட்டுது” என்றார். பின்னர் அந்த பங்கரை வேறு யாரையோ வைத்து டிசைன் பண்ணி கட்டி முடித்துவிட்டார்கள். நீண்டகாலமாக பாவனையில் இருந்த புகழ் பெற்ற பங்கர் அது.

அதற்கு பிறகும் அக்கா அடிக்கடி வருவார். தண்ணி குடிக்க, டீ குடிக்க… அம்மாவிடம் கேட்டேன். அவ்வளவாக ஞாபகம் இல்லை என்றார். கொஞ்ச நாளிலேயே இந்த மாணவர் இயக்கம் எல்லாம் வேண்டாம் அடிபாட்டுக்கு போகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு புஃரொன்ட்லைனுக்கு  போய்விட்டார். யாரோடும் தொடர்பில்லை. தகவல்கள் எதுவும் இல்லை. அந்த வருட ஜூலையில் ஆனையிறவு அடிபாடு தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.  விடியக்காலமை சந்திக்கடையில் பேப்பரை வாங்கி அவசர அவசரமாக பிரட்டியபோது தான் சோதி அக்காவின் படம்போட்டு தோற்றம் மறைவு விவரங்களோடு கண்ணீர் அஞ்சலி இருந்தது. அவரது இயக்கப்பெயர், என் கதைகளில் கூட அவ்வப்போது தலைகாட்டும். டக்கென்று ஒரு பெண் பெயர் வேண்டுமென்றால் அது தான் முதலில் வந்து விழும். உறுதியான மாற்றங்களை ஏற்படுத்திய என்னை கவர்ந்த பெண்களை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு சோதி அக்காவை விட்டுவிட்டால், திண்ட சோறு செமிக்காது.

சோதி அக்கா வேறு யாருமில்லை. அவர் தான், முன்னால் மத்திய கல்லூரி அதிபரான சண்முகநாதபிள்ளையின் மகளான, பெண் மாவீரர்களில் முதன் முதலில் உயர் ராங் வாங்கிய

“கப்டன் வானதி”


மார்கரட் தட்சர்

3980674-3x2-700x467எழுபதுகளின் இறுதியில் பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சியில் இருக்கிறது. இடதுசாரி கொள்கைகள் உச்சத்தில் இருந்த சமயம். நாட்டின் பொருளாதார நிலைமை மகா மோசம். பிரிட்டனின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடிந்துபோய், வளம் என்பது அதன் எல்லைக்குள்ளேயே சுருங்கிவிட்டது. அரசுடைமையான மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு, இறுக்கமான சட்ட அமைப்பு என்று எல்லாமே வீண் செலவுகளுடன் அப்படியே இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவு. பணவீக்கம். மக்களும் அப்படியே. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உருவான வேலையில்லா திண்டாட்டாம் மக்கள் மனதில் ஆழமான எண்ணத்தை விதைத்துவிட்டது. எப்பாடுபட்டாவது ஒரு வேலையை தேடுதல் வேண்டும். அந்த வேலையிலேயே காலம் முழுக்க குப்பை கொட்டுதல் வேண்டும். ரிஸ்க் எடுத்தால் வேலை போய்விடும். தொழில் தொடங்கினால் எப்போது சரியும் என்று தெரியாது. வேலை முக்கியம். சங்கங்கள் ஆரம்பித்தனர். வேலையை காப்பாற்றிக்கொள்ள எல்லாவகை முயற்சிகளையும் செய்தார்கள். முன்னேற்றம் என்பது முதலைக்கொம்பானாது. ஆளாளுக்கு கப்பல் கட்டி தேசங்கள் தேடிய பிரிட்டன் கலாச்சாரம் ஒழிந்துவிட்டது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் தப்பினால் போதும் என்ற நிலை தான். விளைவு?

சம்பளஉயர்வு அரச துறையில் இல்லை என்று அறிவித்து விட, தொழிற்சங்கங்கள் கொதித்து எழுந்தன. எங்கேயும் வேலை நிறுத்தம். வைத்தியசாலை தொழிற்சங்கங்களில் இருந்து குப்பை அள்ளும் தொழிலாளர் வரை எல்லோருமே வேலை நிறுத்தம் செய்தார்கள். மயானத்தில் புதைகுழி தோண்டுபவர்கள் கூட மண்வெட்டியை தூர வீசிவிட்டார்கள். அந்த குளிர்பருவத்தில் மொத்த பிரிட்டனுமே நாறியது. “Winter Discontent” (குளிர்பருவ அதிருப்தி), என்கின்ற ஷேக்ஸ்பியரின் பிரபலமான வாக்கியத்தால் அந்த நிலைமையை குறிப்பிடுவார்கள்.

தேர்தல் வருகிறது. தாராளமய திறந்த பொருளாதார கொள்கைகளை முன்னிருத்தி கொன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வருகிறது. பிரதமராக மார்கரட் தட்சர். தட்சரின் கொள்கைகள் இலகுவானவை. ரிஸ்க் எடுப்பவர்கள், தொழில் முயற்சி செய்பவர்கள் தான் ஒரு நாட்டின் ஆதாரமான பொருளாதார வளங்கள். அவர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் இயங்க முடியாது. ஏழை எளியவர்களுக்கும் உதவமுடியாது. தட்சர் ஆபிரகாம் லிங்கனின் இந்த வசனங்கள் எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டை எப்போதும் தன் கைப்பையில் வைத்திருப்பாராம்.

You cannot strengthen the weak by weakening the strong.
You cannot bring about prosperity by discouraging thrift.
You cannot help the wage-earner by pulling down the wage-payer.

இது முதலாளித்துவத்தின் அடிப்படை தத்துவம். தட்சருக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. வரவுக்கு மீறி செலவு செய்பவன், அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவன் ஒரு மகாபாவி என்பது அது. இந்த இரண்டு கொள்கைகளும் கலக்கும் புள்ளியை தான் Fiscal Policy என்பார்கள். அதன் தமிழ் எனக்கு தெரியாது.  ரொனால்ட் ரேகன் இதை வைத்தே அமெரிக்காவை இலாவகமாக நிமிர்த்தினார். தட்சரும் நிமிர்த்தினார். ஆனால் இலாவகமாக இல்லாமல் சுத்தியலால் அடித்து! அதனால் தான் அவரை இரும்பு பெண்மணி என்றழைக்கிறார்கள்.

தட்சரின் அப்பா ஒரு பலசரக்கு வியாபாரி. எந்த பொருளை கொள்முதல் செய்யலாம், தன வியாபாரத்துக்கு எவ்வளவு வங்கிக்கடன் வாங்கலாம், வியாபாரத்தை எப்படி பெருக்கலாம் என்ற பல வித யோசனைகளை சில்லரை வியாபாரத்தில் இருக்கும். அங்கே ஐஞ்சு லட்சம் ரூபாயை போட்டு ஒரு பொருளை வாங்குவது கூட ரிஸ்க் தான். சின்ன வயதில் கடையில் அப்பாவோடு இருந்து வியாபாரத்தை நோட்டம் விட்ட தட்சருக்கு இந்த விஷயங்கள் ஆழப்பதிந்துவிட்டன. கணவரும் ஒரு பிஸினஸ்காரன் தான். ஆட்சிக்கு வந்தபின் தட்சர் அந்த போஃர்மியூலாவையே கொஞ்சம் பரந்த அளவில் பயன்படுத்தினார்.

முதலில் செலவை கட்டுப்படுத்தினார். நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் காலி. கூடவே நாணயமதிப்பை மிதக்கவிட, ஆரம்பத்தில் நிலைமை இன்னமும் மோசமானது. வேலையின்மை அதிகரித்தது. இது வேலைக்காகாது என்று இறுதியில் பல நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினார். தொழிற்சங்க சட்டங்களை மீள வரையறுத்தார். யாராவது ஸ்ட்ரைக் பண்ணுவதாக இருந்தால், முதலில் உறுப்பினர் மத்தியில் வாக்கெடுப்பு நிகழ்த்தி பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே ஸ்ட்ரைக் பண்ணலாம் என்ற சட்டம் அதில் முக்கியமானது. அதை எதிர்த்து ஒன்றிரண்டு ஸ்ட்ரைக் நிகழ்ந்தாலும் அதையும் அடக்கி ஆள, முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனில் நம்பிக்கை வர, பொருளாதாரம் கிடு கிடுவென வளர்ந்தது.

ரொனால்ட் ரேகனும், தட்சரும் நம்பிய, கடைப்பிடித்த Fiscal Policy அடுத்த முப்பது வருடங்களில் அனேகமான உலக நாடுகளை ஆட்கொண்டது எனலாம். வெற்றியும் பணவெறியும் பேராசையும் அதை அதள பாதாளத்துக்கு உலகை, குறிப்பாக மேற்குலகை கடந்த பத்தாண்டுகளாக கொண்டு சென்றாலும், அதை முதலாளித்துவத்தின் தோல்வியாக கொள்ளலாமா? என்றால் அது சந்தேகமே. கார்ல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவத்தில் உருவாகப்போகும் புரட்சி இன்னமும் வரவேயில்லை. காரணம் அதற்கான மாற்றீடுகள் இல்லாமையே. முதலாளித்துவத்தை சரியாக கடைப்பிடித்தால் தப்பிக்கலாம் என்று அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகள் நிரூபித்திருக்கின்றன. அமேரிக்கா கூட குலைந்துவிடவில்லை. கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. இது 92இலும் உருவானது. பில் கிளிண்டன் வந்து நிமிர்த்தினார். மீண்டும் புஷ் வந்து சொதப்பினார். மற்றும்படி இதை முதலாளித்துவத்தின் தோல்வி என்று அலறுவது வெறும் prejudice.

தட்சர் வட அயர்லாந்து போராட்டத்தை கொடூரமான முறையில் அடக்கியவர், ஆசிய குடிவரவை கடுமையாக எதிர்த்தவர், இனவாதி என்றெல்லாம் கறுப்புபக்கங்களை கொண்ட பெண் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதற்காக அவரை முற்றுமுழுதாக புறக்கணிக்க முடியாது. தட்சரை தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி, முதலாளித்துவத்தின் அடிமை அது இது என்று ஏச்சு பேசுபவர்கள் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தபோது சிலர் கொண்டாடியிருக்கிறார்கள். பிரிட்டன் இன்றைக்கு இருக்கும் நிலையோடு 1979ம் ஆண்டை ஒப்பிட்டுப்பார்த்தால் தட்சரின் முக்கியத்துவம் புரியும்.  எப்படி செய்தார்கள் என்பதை விட என்ன செய்தார்கள் என்பதை வைத்தே தலைவர்களை சரித்திரம் தீர்மானிக்கிறது. தட்சர் இரும்புப்பெண்மணி தான்.  ஆனால் முக்கியமான தலைவர். அதுவும் எண்பதுகளில் பிரிட்டனுக்கும் உலகத்துக்கும் தேவைப்பட்ட தலைவர்.


 

இந்திரபிரியதர்ஷினி

css1255நம் எல்லோருக்கும் பரிச்சயமானவர். ஆனாலும் தட்சரை பற்றி எழுதிவிட்டு இந்திராவை கடந்து போக முடியாத அளவுக்கு இரண்டு பெண்களிடமும் அவ்வளவு ஒற்றுமை இருக்கிறது.  தட்சர் ஆட்சிக்கு வந்தபோது பிரிட்டன் என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் இந்திரா வந்தபோதும் இந்தியா இருந்தது. அதற்கு மருந்தாக தட்சர் முதலாளித்துவத்தை பாவித்தார் என்றால் இந்திரா சோஷலிசத்தை பாவித்தார் அவ்வளவே. உடனே இந்திராவை கொம்யூனிஸ்ட், கொம்டேர் என்று எண்ணிவிடவேண்டாம். பங்களாதேஷ் பிரிவினையின் போது தான் இந்திய அமேரிக்கா உறவுகள் அதலபாதாளத்துக்கு சென்றது. உதவிகள் நிறுத்தப்பட்டது. உடனே இந்திரா சோவியத் பக்கம் சாய்ந்தார். உதவிகள் பெற்றார். அமெரிக்காவையும் முதலாளித்துவத்தையும் சாடத்தொடங்கினார். கம்யூனிசம் பற்றிய ஒரு தவறான புரிதலும் இந்திராவுக்கு இருந்தது. வறுமையை போக்க கம்யூனிசம் ஒரே வழி என்று நம்பினார். தனியார் நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. எதிர்த்தவர்கள் ஈவு இரக்கமில்லாமல் ஒடுக்கப்ட்டார்கள். கோதுமை இறக்குமதி விஷயத்தில் மீண்டும் அமெரிக்காவுடன் சச்சரவு. விளைவாக தன்னிறைவு பொருளாதாரத்தின் அவசியத்தை உணர்ந்தார். பசுமைப்புரட்சியை ஊக்குவித்தார்.

தட்சர் முறை தான் இங்கேயும். ஆனால் கொள்கைகள் ஏறுக்கு மாறு. ஆச்சர்யமாக அது வேலை செய்தது. பணவீக்கம் குறைந்தது. பணம் வந்தது. தட்சர் எதையெதை தனியார் மயப்ப்டுத்தினாரோ அதெல்லாம் இங்கே அரசுடமையானது. நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், நெசவு, காப்புறுதி என்று எல்லாமே.  நாணயப்பெறுமதியை மிதக்கவிட்டார். ஆனால் வேறு பல சிக்கல்கள் வந்தன. தேர்தல் மோசடி செய்தார் என்று நீதிமன்றம் அறிவித்துவிட,  திடீரென்று எமர்ஜென்சி கொண்டுவந்தார். எதிரிகள் எல்லாம் உள்ளே போனார்கள். திமுக ஆட்சியும் குஜராத் ஆட்சியும் தான் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். இரண்டு சட்டசபைகளையும் கலைத்தார்.

தட்சருக்கு Falklands தீவுகளில் ஆர்ஜெண்டீனாவோடு போர் என்றால் இந்திராவுக்கு பாகிஸ்தானோடு போர். தட்சர் வட அயர்லாந்து போராட்டத்தை ஈவு இரக்கமில்லாமல் ஒடுக்கினால், இந்திரா சீக்கிய புரட்சியை ஒடுக்கினார். தட்சர் கொலை முயற்சியில் இருந்து மயிரிழையில் தப்பினார். இந்திராவால் தப்ப முடியவில்லை. அவருடைய வீட்டில் வைத்தே மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த இடத்தை நேரில் பார்த்திருக்கிறேன். இந்திராவின் வீட்டை அணு அணுவாக சுற்றிப்பார்த்து வியந்திருக்கிறேன். டெல்லியில் எனக்கு மிகவும் பிடித்த இடம் அந்த வீடு. அதவும் அவருடை அறையை பார்க்கவேண்டுமே. புத்தக அலுமாரிகள் எல்லா மூலைகளிலும். கரையில் ஒரு ஈசி சேர். படிக்கும் மேசை. அற்புதமான வீடு அது. கண்காட்சிக்காக திறந்துவிட்டிருக்கிறார்கள். டெல்லி போனால் மிஸ் பண்ணீடாதீர்கள்.

167156_478824236414_3180668_n

ஸ்ரீமாவோ பண்டாராநாயக்கா இந்திராவை கொப்பி பண்ணி தான்  பொருளாதார கொள்கைகள் வகுத்தார். அந்த காலத்தில் இந்திராவுக்கு இலங்கை மீது ஒரு நல்லெண்ணம் இருந்தது.  ஆனால் ஜே ஆர் வந்து தாராளமய கொள்கைகளை புகுத்தியதை அடுத்து அவரை அமெரிக்காவின் ஊதுகுழல் என்று இந்திரா வர்ணித்தார். 83 கலவரத்தின் போது ஜேஆருக்கு இந்திரா தொலைபேசியில் அழைத்து கிழி கிழி என்று கிழித்தது எல்லோருக்குமே தெரிந்ததே. ஆனால் என்ன காரணத்தாலோ இராணுவத்தை அப்போது அனுப்பவில்லை. 

இந்திரா உயிரோடு இருந்திருந்தால் இலங்கை பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். இன்னும் சிலர் டெல்லியில் தப்பியிருந்தாலும் ஸ்ரீபெரும்புதூரில் செத்திருப்பார் என்பார்கள். அப்படி யோசித்து பிரயோசனமில்லை. What if என்று கடந்த காலத்தை யோசிக்க ஆரம்பித்தோமேயானால் விஜயனும் அவன் சகோதர்களும் எங்கள் நாட்டில் காலடியே எடுத்துவைத்திருக்கமாட்டார்கள்!


அவ்வையார்

தமிழ் வரலாற்றில் பெண்ணை தெய்வமாக, அம்மாளாச்சியாக, குத்துவிளக்காக பார்த்தோமே ஒழிய பெண்ணை பெண்ணாக பார்க்கும் தைரியம் ஆண்களுக்கு வரவேயில்லை. காட்டவேண்டும் என்று பெண்களும் பெரிதாக நினைக்கவில்லை. Stubborn என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த குணாதிசயம் எங்களது புகழ்பெற்ற “அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு” என்ற எந்த பயறு லிஸ்டிலும் சேர்க்கப்படவில்லை. எங்கள் இலக்கியங்களில் நிலவு பெண்ணானது. சூரியன் ஆணானான். கொஞ்சம் இதிலிருந்து விலகிய மங்கயர்க்கரசி வகை பெண்களை கூட ஆண் குணம் கொண்ட பெண் என்றார்களே ஒழிய அந்த குணத்தை கொண்டாடவில்லை. ஆ ஊ என்றால் “கண்ணகி” காப்பிய பாத்திரத்தை வைத்தே நம்மவர் காப்பி ஊற்றி சமாளித்துவிடுவார்கள். பெண்ணை தெய்வமாக பார்த்த கலாச்சாரம் என்று டிஸ்கி விடுவார்கள்.

large_163446220அப்படி பார்க்கும்போது அவ்வையார் ஒரு ரெபல். போராளி. சரித்திரத்தில் ஆறு அவ்வையார்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள். சிலர் வள்ளுவரோடு டீ குடித்திருக்கிறார்கள். ஒரு சிலர் கம்பர் ஓட்டக்கூத்தனோடு; இன்னொருத்தர் அதியமானோடு நட்பு பாராட்டியிருக்கிறார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளாமல் காத்தவர் அவ்வையார் என்கிறார்கள். அவ்வை தொண்டைமானின் அரண்மனைக்கு போனாராம். அவ்வைக்கு தன் படைப்பலத்தை காட்டினால், அவள் போய் அதியமானிடம் அதை சொல்லி மிரளவைக்கலாம் என்று தொண்டைமான் நினைத்திருக்கிறான். தன் ஆயுத பலத்தை காட்டியிருக்கிறான். எல்லாமே மினுங்குகின்றன. “பார்த்தியா நம்ம பலத்தை” என்று சொல்லியிருக்கிறான்.  “மினுங்கல் ஒகே, ஆனா எல்லாமே புதுசா இருக்கும் போல கிடக்கே, அங்கே அதியமானிண்ட கருவிகள் எல்லாம் அடிபாட்டுக்கு போய் இரத்தகறையாவும் உடைஞ்சும் அல்லோ கிடக்கு, உன்னாலே அவன் போரனுபவத்தை மீறி வெல்ல முடியுமா?” என்று அவ்வை ஒரு போடு போட்டிருக்கிறார். இந்த கவிதை புறநானூற்றில் வருகிறது. தரலாம். ஆனால் ரெண்டாம் நூற்றாண்டு. முதல் சங்கம். மொழி பிரெஞ்சை விட சிக்கலாக சங்கறுக்கிறது. பேசாமல் புரியக்கூடிய கவிதை ஒன்றுக்கு போவோம்.

vlcsnap-2011-01-06-23h35m45s142நம்மாளுக்கு கவிதை என்றால் பிடிக்கும். அவ்வை என்றால் உயிர். ஆனால் மாப்பிள்ளை கலியாணம் கட்டின மனிசிக்காரி கொஞ்சம் பொசசிவ். கொஞ்சம் என்ன, பயங்கர பொசசிவ். அண்ணன் ஒருநாள் ஏதோ தமிழ் வெப்சைட் ஓபன் பண்ண, ரெண்டு மூன்று பொப்அப் விண்டோ வந்திட்டுது. ஒன்றில் “ஹாய் பேப், யூ வோன்ன சாட்?” என்று இரண்டு மூன்று வெள்ளைக்காரிகள் இடுப்பில் மட்டும் ரெண்டு இஞ்சி துணியுடன் நின்றபடி கேட்க, இவர் “என்னடா சனியன்” என்று அவசர அவசரமாக குளோஸ் பண்ணியிருக்கிறார். அதற்கு முதல் மனிசிக்காரி நோட் பண்ணீட்டுது. “யாரது?” என்று கேட்க “இல்லேம்மா .. அது தானா ஓபின் ஆயிட்டுது, ஸ்பாம்” என்றிருக்கிறார். “நீ பல்லு இளிக்காம அவள் ஏன் அவுத்துப்போட்டு நிக்கிறாள்?” என்று கேட்டுவிட்டு இடியப்ப உரலால மனிசி நம்மாளுக்கு தலையிலே ரெண்டு தட்டு தட்டியது. அதுக்கேன் பாஸ் நீங்க தலையை தடவுறீங்க? பேசாமல் விஷயத்துக்கு போவோம்.

ஒருநாள் சந்திக்கடையடியில் அவ்வையார் போவதை நம்மாள் பார்த்துவிட்டார். அவ்வையார்? அட, “அறஞ்செய்ய விரும்பு” சொன்ன ஆள்.  அப்பிடியே விட்டுவிட முடியுமா? ஆளை மறித்து “வீடு வந்தே ஆகவேண்டும்” என்று மாப்ள கேட்டிருக்கிறார். அவ்வையோ “வேண்டாம் போகோணும்” என்று சொன்னாலும், இவரு வடிவேலு கணக்கா “இல்ல நீங்க வந்தே ஆகணும், அல்லாட்டி அழுதுடுவன்” என்று வற்புறுத்த, அவ்வையும் சரி என்று வீடு வந்திருக்கிறார். அங்கே ஆரம்பித்தது ஆட்டம்.

நம்மாளு ஒரு ஆர்வத்தில் அழைத்து வந்துவிட்டாலும், கேட்டடியில் மனிசி ஞாபகம் வந்து ஜீன்ஸ் நனைந்துவிட்டது. அவ்வையை கதிரையில் இருத்திவிட்டு “திரிபு குட்டி” என்று சொல்லிக்கொண்டே குசினிக்குள் போகிறார். மனிசிக்காரி ஏற்கனவே குசினி யன்னலால் அவ்வை வருவதை பார்த்துவிட்டாள். இவர் “திரிபு செல்லம்“ என்று மீண்டும் கூப்பிட , திரிபு என்கின்ற திரிபுரசுந்தரி திரும்பி ஒரு லுக்கு விட்டாள் பாருங்கள். சந்திரமுகி ஜோதிகா தோற்றாள். சுப்பர் ஸ்டார் சில்வர் ஜூப்ளி அன்று ஹட்ஸ் ஒப் சொல்லியிருப்பார். அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இவன் தொபுகடீர் என்று காலில் விழுந்துவிட்டான். “பிளீஸ் பிளீஸ், அவ்வையார்டி, சின்ன வயசு இன்ஸ்பிரேஷன், எனக்கு இருக்கிற சாப்பாட்டையாவது குடுக்கலாம்” என்று கெஞ்ச, மனிசி ஓங்கி ஒரு அறைவிட்டு கெட்ட தூஷணத்தால் ஏசியிருக்கிறாள். இவன் அழுதிருக்கிறான். அரட்டியிருக்கிறான். சுளகால் இம்முறை அடி விழுந்தது.  அவ்வை எழுதுகிறாள் பாருங்கள்.

imagesஇருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்

இவனோ அழுதுகொண்டே “அம்மான இதான் கடைசி தடவை” என்று சொன்னதால் சரி என்று அவளும் சாப்பாட்டு தட்டத்தொடு வெளியே வருகிறாள். அவ்வையை பார்த்து சின்ன சிரிப்பு கூட இல்லை. இலையை குனியாமல் வீசி எறிய, அது ஆடி அசைந்து அவ்வை முன்னாலே புறப்பக்கமாக விழுகிறது. சோறை லபக்கென்று போடுகிறாள். சாம்பாரு ஊற்றும்போது அவ்வையின் வெள்ளை சேலையில் ஒரு முருங்கைக்காய் துண்டு வந்து விழுகிறது. குழம்பை ஊற்ற, தெறித்து கண்ணுக்குள் தெறிக்கிறது. அவ்வைக்கு வந்ததே கோபம். இலையை தூர வீசிவிட்டு அந்த அடங்காபிடாரியை பார்த்து காறித்துப்பி விட்டு, இவனை ஏளனமாக பார்க்கிறாள். பெண்ணோ ஆணோ, புதுமையும் புரட்சியில் சேர்ந்து இருக்கவேண்டும். ஆனால் பிடாரியாகவோ கொடுங்கோலனாகவோ இருக்ககூடாது. அப்படியானவர்களுடன் வாழ்வதை விட நெருப்பில் விழுந்து செத்து அழிவதே மேல். அவ்வை எப்படி சொல்லுகிறார் பாருங்கள்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே-தொண்டா
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

நேரிசை வெண்பா. இதிலே அவ்வை ஒரு மாஸ்டர். எளிமையாக எழுதுவார். எங்களையும் எழுத சொல்லி திட்டுவார். “பிறர் சொல்லக் கேட்டோ, தானே முயன்றோ வெண்பா கல்லாதவனையும், ஓலையில் எழுதத் தெரியாதவனையும் பெற்ற பெண்பாவி நகைப்புக்கு உள்ளாவாள்” என்று அவ்வை சொன்னதை ஒருமுறை வாசித்தேன். சன் டிவி பார்த்துக்கொண்டிருந்த அம்மாவையும் பார்த்தேன். எதுக்கு வம்பு என்று இரண்டு நாள் முக்கி முனகி வெண்பா நேரிசை வெண்பா கற்றுக்கொண்டாயிற்று.

அவ்வையின் இந்த பாட்டு ஏற்கனவே இரண்டு முறை படலையில் வந்திருக்கிறது. கம்பவாரிதியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருக்கிறேன். “காடு திறந்து கிடக்கிறது” என்ற சிறுகதையில் யோசிக்காமலேயே இந்த வரிகள் இயல்பாக வந்து விழுந்தது.

“நானா? கவிதையா? கவிஞர்கள் உலகில் தவறிப்பிறந்த கவிப்பொருள் நான். மற்றவர்கள் எழுத முதுகும் கொடுத்து பொருளும் கொடுக்கும் அதிசய சடையப்பன்”

“அதிலும் ஒரு அங்கதம் .. உன் பிழைப்புக்கு தான் “நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” என்றாளே அவள்”

“யாரவள் அவ்வையா?”

“அட .. அவ்வையும் அறிந்தவன் ஏன் இந்த காட்டில் திக்கித்திணருகிறாய்? பேசாமல் வீடு போய் சேர்”

இப்படி எங்கேயாவது இலக்கியத்தை செருகுவதில் ஒரு சந்தோசம். யாருமே கவனிக்காவிட்டாலும் காட்டிலே நிலா எறிக்கும் தானே! (குவாண்டம் அது சந்தேகமே என்று சொல்லும்!)

அவ்வையை வயது முதிர்ந்த பிராட்டியாகவே பார்த்து பழகிவிட்டோம். ஆனால் எல்லா அவ்வைகளும் கேபி சுந்தராம்பாள் மாதிரி ஹை பிட்சில் கத்திக்கொண்டிருப்பார்கள் என்று நம்புவது கஷ்டமாக இருக்கிறது. அவ்வை இளம் பெண்ணாக இருந்திருக்கலாம். காதலித்திருக்கலாம். லவ் பெயிலியர் கூட அவ்வைக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் – பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாகாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

எத்தனை ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரம் ஊறாமல் மிதக்கும் பிளாஸ்டிக் டப்பா போல, ஆணும் பெண்ணும் கூடி “அலுவல்” பண்ணாமல் வெறும் துறவறமோ, பதிவோ, படலையோ எழுதி என்ன பயன்? என்கிறார்.


சுதா!

சாதாரண அலுவலகத்தில் கிளார்க்காக இருக்கிறாள். வீட்டில் தாத்தா தங்கை மாத்திரமே. வாடகை வீட்டில் குடியிருப்பு. குடும்ப பொறுப்பு முழுதும் இவள் தலையில். அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒருவனோடு காதல். அவனுக்கு ரெண்டு தங்கச்சிகள். இப்படியான சூழ்நிலையில் வீட்டுக்காரன் காலி பண்ண சொல்லிவிடுகிறான். வீடு எதுவும் இவர்கள் வசதிக்கு குறைந்த வாடகைக்கு கிடைக்கவும் இல்லை. என்ன செய்ய என்று கையை பிசைந்துகொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் லோன் எடுத்து பேசாமல் வாயைக் கட்டி, வயிற்றை கட்டி ஒரு வீட்டையே கட்டிவிடலாம் என்று நண்பர் ஒருவர் சொல்ல, அதை நம்பி,

சுதா வீடு கட்ட ஆரம்பிக்கிறாள்.

veedusisterவீடு கட்டுவது என்பது, அதுவும் தனியனாக ஒரு பெண் முன்னின்று கட்டுவது என்பது எவ்வளவு சவால் என்று அடுத்த இரண்டு மணி நேரங்களில் நச்சென்று புரியும்படி சொல்லியிருப்பார்கள்.  அவசரத்துக்கு பணம் புரட்டமுடியாது, லோன் சாங்க்ஷன் பண்ணிய மேலதிகாரி திடீரென்று மகாபலிபுரம் போவோமா என்று கேட்பான். கட்டிட கொன்றாக்டர் சீமெந்து திருடுவான். வீட்டில் நிம்மதி போகும். தங்கையை கோபிப்பாள். பிறந்தநாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு சேலை வாங்கித்தரும் காதலனை திட்டுவாள். பின்னர் வருந்துவாள். எல்லோரும் ஏமாற்றும்போது எதிர்பாராத இடங்களில் இருந்து நண்பர்கள் கிடைப்பார்கள்.  ஐயாயிரம் ரூவாவின் பெறுமதி பணக்காரனுக்கும் மிடில்கிளாசுக்கும், ஏழைக்கும் எப்படி மாறுபடும் என்று ஒரு காட்சியில் சொல்லுவார்கள். எல்லோரும் ஏமாற்றும்போது போது ஒரு ஏழை கூலி வேலை செய்பவள் இவளுக்காக குத்தி முறிவாள். மொத்த வீட்டு வேலையையும் தன் தலையில் போட்டு செய்வாள். அவளுக்கு சுதா கொடுக்கும் பரிசு வெறும் பாவித்த சேலை தான். இப்படி நுணுக்கமான காட்சிகள்.

veedu.0பாலுமகேந்திரா எடுத்த வீடு மாத்திரம் இன்றை தேதியில் வெளிவந்திருந்தால் உலகமே ஆவென்று பார்த்து வியந்திருக்கும். அப்படி ஒரு படம். அதுவும் அந்த கிளைமக்ஸ்.  சான்சே இல்லை. “வீடு கட்டி முடித்து எல்லோரும் சந்தோஷமாக சிரிக்கிறார்கள்”,  அல்லது “வீடு கட்டி முடிக்க முடியாமல் எல்லாவற்றையும் இழந்து பாலச்சந்தர் ஹீரோயின் போல சோகமாக சுதா போவாள்” என்று எதிர்பார்த்திருந்தேன். இரண்டுமே இல்லாமல் வெகு இயல்பாக பாலு முடித்திருப்பார். What an ending.

படத்தின் குறை என்று ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் அது பின்னணி இசைதான். தலைவர் பின்னணி இசை. How to name it? இசையை அகப்பட்ட இடத்தில் பாலுமகேந்திரா கேட்டதற்காக பயன்படுத்தியிருக்கிறாரோ என்னவோ. ஒட்டவில்லை. முக்கியமாக துருத்திக்கொண்டு இருக்கிறது. “அட ராஜா பின்னியிருக்கிறாரே” என்று படம் பார்க்கும்போது எண்ண தோன்றுகிறது. அப்படி தோன்றினால் அது பின்னணி இசையில் இருக்கும் தவறு தான். சத்தம்போடாமல் வெகு சப்டிலாக இருந்திருக்கவேண்டிய இசை. ராஜாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தால் கலக்கியிருப்பாரோ என்னவோ. Sometimes even the almighty can falter!


 

மேகலா!

இருபது சிறுகதைகளில் குறைந்தது ஆறிலாவது மேகலா வருகிறாள். வியாழமாற்றங்களில் வந்து கேள்வி கேட்டிருப்பாள். பதிவுகளிலும் தலை காட்டியிருக்கிறாள். ஏதோ நான் ஏங்கியும் எட்டாத தேவதையை பற்றி தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறார்கள். கேட்கிறார்கள். தேடுகிறார்கள். தினம் ஒரு மெசேஜ் Facebook  இல் வந்து விழுகிறது. விழாவிட்டால் நானே அந்த கேள்வியை என்னிடம் கேட்டுக்கொள்கிறேன். யார் தாண்டா அந்த மேகலா?

உல்டா தான். சுஜாதாவின் ஆரம்பகால கதைகளில் கணேஷ் பிரியா ஜோடி தான் இருந்தது. சேர்ந்தே துப்பறிவார்கள். கணேஷ் ஒருவித ரிசெர்வ்ட் லோயர். பிரியா fun loving, ஜோவியல், ஆங்காங்கே நக்கலடிக்கும் புத்திசாலிப்பெண். தலைவருக்கு திருமணம் ஆகியபின் வேண்டாம் சிக்கல் என்று பிரியாவை வசந்த் என்று மாற்றிவிட்டார். ஆகாததால் இன்னமும் மேகலா உலாவுகிறாள். அவ்வளவே.

life_of_pi_8-440x250

கொஞ்சம் டீப்பாக யோசித்தால் மேகலா வேறு யாருமில்லை. கண்ணம்மா தான். உஷ் இது கடவுகள் துயிலும் தேசத்தில் வந்த கிரிஷாந்தி கூட மேகலா தான். புத்திசாலி, அடிக்கடி அவனை டீஸ் பண்ணுவாள், ஆளுமை நிறைந்தவள், ஆனால் அதற்குரிய துளி ஈகோ இல்லாதவள். பிறக்கும் பெண்ணுக்கு கண்ணம்மா என்று பெயர்வைக்க யோசிக்கிறாள் தனக்கு நடக்கப்போவது அறியாமலேயே!

துஷியோடு பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னது. மேகலா எனக்குள் இருக்கும் பெண். நான் விரும்பும், என்னிடம் இல்லாத குணங்களை பெண் உருவில் புகுத்தி பேசிக்கொள்ளும் தேவதை. தன்னந்தனியனாக கடலில் சிக்கித்தவிக்கும் ரிச்சார்ட் பார்க்கரான எனக்கு நம்பிக்கையும், ஆதரவும், பேச்சும் கொடுக்கும் ஒரு பை (Life of Pi).  மேகலா, சுந்தரகாண்டம், வானம் மெல்ல கீழிறங்கி போன்ற சிறுகதைகளில் வருகின்ற மேகலாக்களில் அந்த ஆதரவும், அன்பும், வழி நடத்தலும் தெரியும். ஒரு விதத்தில் கடவுள் தான். ஆங்கிலத்தில் எழுதிய “The God’s Coming” என்ற சிறுகதையில் நேரடியாக கடவுளையே பாவித்திருப்பேன். கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை உள்வாங்குவது சிரமமாக இருந்தாலும் கடவுளின் தேவை அனேகமானவருக்கு போல எனக்கும் இருக்கிறது. அதற்காக நானே உருவாக்கிக்கொண்ட கடவுள் தான் மேகலா. இதை கொஞ்சம் கவிதையாக முயன்றிருக்கிறேன்.

709970_156யார் மேகலா?
அவன் என்பார் அவனறியாதார்!
அவள் என்பார் அவளறியாதார்!
அதுவென்பார் சிலர்.
அசையாதென்பார்!
அரி என்பார் அரன் என்பார்!
ஹரிஹரன் பாடும் கமகம் என்பார்!
அவர் அறியாதன எல்லாம் அறிந்திட முனைவார்
அவளோ அவனோ அதுவோ எதுவோ
அவரவர் வடிவில் உருவம் எடுக்கும்
சமயத்தில் இசை போல் அருவமும் எடுக்கும்
இருளிடை ஏறிய இறையே என்றால்
எதுவுமே புரியாமல் மலைத்திட இருப்பர்!

&&&&&&&&&&&&&&&&&&&&

 

கிருத்திகா, மேரி கியூரி, இந்திரா நூயி போன்ற பெண்களையும் எழுதுவதாக இருந்தது. பதிவு நீண்டுவிட்டதால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துகொள்ளலாம்.

Contact Form