வியாழமாற்றம் 18-04-2013 - ஓடு ஓடு ஓடு.

Apr 18, 2013 14 comments

திடீரென்று சூரியன் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டால் அதன் உடனடி தாக்கம் எப்படியாக இருக்கும்? பூமியில் நிலைமை என்னவாக இருக்கும்? அடுத்தகணமே இருண்டுவிடுமா? விலகி போய்விடுமா? ஈர்ப்பு விசைக்கு என்ன நடக்கும்?

கனவு மெய்ப்படவேண்டும்!

vasul_12_800“வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறாய்” என்ற சின்ன வயது கேள்விக்கு ரெடிமேட்டான பதில் “டொக்டர்” தான். எனக்கும் வளர்ந்து FRCS முடித்து ஏழைகளுக்கு இலவச சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று ஐந்து வயதில் ஒரு ஆசை இருந்தது. கஜனிடம் சொன்னேன். தனக்கு மூன்று வயதிலேயே அது வந்தது என்றான்.
தன் பிள்ளைகளில் ஒருவராவது டொக்டராக வரவேண்டுமென்பது அப்பாவின் கனவு, அந்த கனவு குடும்பத்தில் ஒரு நல்ல கணிதவல்லுனரை உருவாகவிடாமல் செய்தது. என் அக்கா செம மண்டைக்காய். ஜியோமற்றியில் ஒரு கரை கண்டவர். நிறுவல் எல்லாம் சின்னதவறு செய்தாலே என் தலை கொழுக்கட்டை கணக்காய் வீங்கும். அப்பிடி குட்டுவார். ஓஎல் கணக்கு பரீட்சை முடிந்து வீட்டுக்கு திரும்புகிறேன். பரீட்சைக்கு போகும்போதே, விடைகளை வினாத்தாளில் குறித்துக்கொண்டு வந்துவிடு என்று சொல்லியிருந்தார். கொண்டுவந்து கொடுத்தவுடனேயே கட கடவெண்டு செய்து பார்த்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் தலையில் நங் என்று இரண்டு குட்டு. முப்பது கேள்விகளில் இரண்டை தவறாக செய்துவிட்டேனாம். “எண்ட தம்பி எண்டு வெளிய போய் சொல்லிடாதே, வெட்கக்கேடு” என்றார். அவரை வலுக்கட்டாயமாக பயோ சயன்ஸ் படிக்கவைத்தார் அப்பா. அக்காவுக்கு மனமே இல்லை. வேண்டாவெறுப்பாக நாலு பாடத்தையும் சப்பிப்பார்த்தார். சரிவரவில்லை. ஆனால் அந்த கணக்கு நெருப்பு அக்காவிடம் இப்போதும் இருக்கிறது. தானே வகையீடு தொகையீடு படித்து மற்ற மாணவர்களுக்கு சிங்கப்பூரிலே இப்போது சொல்லிக்கொடுக்குமளவுக்கு இருக்கும் நெருப்பு. “படலையில் தேவையில்லாம லொள்ளு பண்ணாத, நாளை இன்று நேற்று மாதிரியே எழுதிக்கொண்டிரு” என்பார். “அப்பிடியே நல்ல ஆமர்பூட்டு வாங்கி அனுப்புங்க, இழுத்து மூடலாம்”.
எது எமக்கு வரும் என்பதும் இந்த காதலி மாட்டார் போல சின்ன வயதில் இருந்தே டிமிக்கி காட்டிக்கொண்டிருந்தது. கம்பவாரிதியை ரசிக்கும்போதெல்லாம் பேசாமல் கலைப்பீடத்தில் நுழைந்து தமிழிலக்கியம் கலக்கவேண்டும் என்று ஆசை வரும். வீட்டில் கூட சொல்லியிருக்கிறேன். சண்முகநாதன் மிஸ் படிப்பிக்கும்போது அந்த ஆசை ஆங்கில இலக்கியத்துக்கு தாவும். எப்போதுமே என் கதைகளில் வரும் ஒரு பாத்திரம் ஆங்கில இலக்கியம் பேசும் சூட்சுமம் இதுதான். வன்னியில் படித்தபோது பரமோதயன் அண்ணா படிப்பிச்ச கொமர்ஸிலும், சேர்ந்து படிச்ச தாரணியிலும் மயங்கி, கொமர்ஸ் போல அழகான பாடம் ஒன்றுமே இல்லை என்று கொஞ்சநாள் தோன்றியது.
ஆனால் இதை எல்லாமே தாண்டிய வசதியான ஒரு பாடம். பாட்டு கேட்டுக்கொண்டே படிக்கலாம். கஷ்டமுமில்லை. முக்கி முனக தேவையில்லை. கணிதம். இயல்பாக வந்தது. அதுவும் இளையராஜா கேட்கும்போது இன்னமும் நன்றாக வந்தது.  கரும்பலகையில் கணக்கை செய்து முடித்துவிட்டு கீழே ரெண்டு கோடு சர்க் சர்க்கென்று இழுத்துவிட்டு எட்டிப்போய் நின்று பார்த்து ரசிக்கும் அனுபவம் தனி. நள்ளிரவு தாண்டி ரேடியோவில் ஏ எம் ராஜாவும் ஜிக்கியும் மட்டுமே நிலவும் மலரும் என்பார்கள். அப்போது செய்யும் applied கணக்குகள் அலுக்கவே அலுக்காது. கூடவே பிசிக்ஸ் என்ற ஆச்சர்யம். அப்போதே பூனையை கண்டால் ஷ்ரோடிங்கர் என்று அழைக்குமளவுக்கு குவாண்டம் பைத்தியம். இப்போது கூட, முதன்முதல் கேதா வீட்டில் ஒரு கறுப்பு பூனையை கண்டவுடன் ஷ்ரோடிங்கர் என்று கூப்பிட்டது ஞாபகம் வருது. மறக்கமுடியுமா அந்த பூனையை? அதை சரியாக புரிந்துகொள்ளாமல் “நான் பார்க்க முன்னர் நீ எப்படி இருந்தாய்? நான் பார்த்ததால் தான் நீ பூனையாக மாறினாயா?” என்றெல்லாம் யோசித்த மடையன் நான். இந்த மடையனுக்கு இப்போது நிறைய மட்டி நண்பர்கள் இது பற்றி பேச இருக்கிறார்கள். அப்போது ஒரே ஒருவன் இருந்தான்.
அந்த மட்டி பெயர் குகன். Non conformist, crazy and rebel. நாங்கெல்லாம் இதயம், தவளை என்று ஆய்வுகூடத்தில் வெட்டி பரிசோதனை செய்தோமல்லவா? குகன் அதை வீட்டில் செய்தான். பின் வளவில் அவனுக்கென்று ஒரு ஆய்வு கூடம், அத்தனை இரசாயன ஐட்டங்களும் கேகேஎஸ் ரோட்டில் வாங்கிவந்து வீட்டில் வைத்து குடைவான். ஒரு நாள் கை எல்லாம் எரிந்து கட்டோடு பாடசாலை வந்தான். என்னடா என்றால் தலைவர் தவளையை வெட்டி பிரிச்சு பரிசோதனை செய்திருக்கிறார். அதன் கால்களை நிறுத்திவைக்க மெழுகு பாவிப்பார்கள். உருக்கி ஊற்றும்போது கையில் ஓடிவிட்டது. இந்த விஷயம் எல்லாம் சமாதான காலத்தில் நடந்த விஷயமல்ல. புலிகளின் ஆட்சியில்; யாழ்ப்பாணத்தில்; ஒரு பக்கம் பொருளாதார தடை, மேலால கீழால என்று குண்டு. திடீரென்று ஆனையிறவு, மண்டைதீவு என்று அடிபாடுகள். பிரசாரம், ஆட்சேர்ப்பு. எல்லாவற்றுக்கும் மத்தியில் பதினைந்து வயது பெடியன் இதை செய்தான்.  இப்படி பல குகன்கள்.
குகன் என்னுடைய நெருங்கிய நண்பனாக ஆகியிருக்கவேண்டியவன். 95 இடம்பெயர்வு பிரித்துவிட்டது. பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கும். அப்போதே வீட்டு வாசலில் வந்து நின்று அவன் பேச தொடங்கினால் அம்மா திட்டி அனுப்பும் மட்டும் பேசிக்கொண்டே இருப்பான். பேச்சு கிட்டத்தட்ட குட்டி வியாழமாற்றம் போல இருக்கும். கொஸ்மோலஜியை அதன் பெயர் தெரியாமலேயே அலசியிருக்கிறோம். பதிவின் ஆரம்பத்தில் கேட்டிருக்கும் கேள்வியின் ஆதாரத்தை அப்பவே யோசித்த ஆள் அவன். அப்போதே ஒளியாண்டு கணக்கு எல்லாம் சொல்லுவான். பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால், இப்ப கண்ணுக்கு தெரியுதே அருந்ததி, அது உண்மையிலேயே அந்த இடத்திலேயே இருக்காதுடா” என்று சொல்லுவான். குகன் IBM Watson, CERN போன்ற நிலையங்களில் ஆராய்ச்சியாளராக இருக்கவேண்டியவன். எங்கள் கல்வித்திட்டம், புத்தகத்தை அப்படியே கரைத்து குடிக்க தெரியாத அவனின் குணம், இன்றைக்கு ஓடிட்டராக டை கட்டிக்கொண்டு.. ச்சே.
கஜன் என்று இன்னொருவன். சாதாரண தரத்தில் வர்த்தகப்பாடம் என்றால் பின்னுவான். எப்போதும் நூறு தான். ஐந்தொகை எத்தனை சிக்கல் என்றாலும் சமப்படும். இலாபநட்ட கணக்கு எல்லாம் பக்கா. உயர்தரத்தில் வர்த்தகம் படிப்பதாக இருந்தான். இங்கேயும் அப்பா தான் வில்லன். அவனை வர்த்தகத்தில் விட வேண்டாம் அன்று அவன் அப்பா பிரின்சிபல் வரைக்கும் போய் மிரட்ட, அவனும் வேறு வழியில்லாமல் பயோ படித்தான். விருப்பமே இல்லாமல் படித்தவன், ஏஎல் முடிந்த மறுநாளே CIMA படிக்க ஆரம்பித்து இன்றைக்கு மிகப்பெரிய நிலையிலே இருக்கிறான். ஆரம்பத்திலேயே படிக்கவிட்டிருந்தால் மூன்று வருடங்களை பொட்டனி, சூ என்று வேஸ்ட் பண்ணியிருக்கமாட்டான்.
எங்களோடு கூட இருந்த இந்த மாதிரியான நீல் போருக்கும், பிலாங்குக்கும், மேரி கியூரிக்கும், பில் கேட்ஸ், டாட்டா பிர்லா. எல்லோருக்குமே எதிரிகள் யார் என்றால் பெற்றோர்கள் தான். தன் பிள்ளை நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டுமென்ற நியாயமான கவலை பிள்ளைகளின் எதிர்காலத்தை சாதரணமாக்கி விடுகிறது. அவர்களை மீறி, பிள்ளைகளை அவர்கள் இஷ்டப்படி செயற்பட விடும் கலாச்சாரமோ, சுதந்திரமோ இல்லாத நாடு அது. பதினெட்டு வயதில் ஒரு இளைஞன் தொழில் தொடங்க முடியாது. சாப்பாட்டை பற்றி கவலைப்படாமல் பொசனுக்குள் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யமுடியாது. இது பெரும் சோகம்.
students 3_CI
இதைவிட பெரும் சோகம் எங்கள் கல்வித்திட்டம். எல்லாத்திட்டங்களும் ரோம் நகருக்கே போகும். திரும்பி பெர்லினுக்கு போகப்போகிறேன் என்றால் ஊரே சேர்ந்து கல்லால் அடிக்கும். நானோ நீயோ கெட்டிக்காரன் என்பதை மூன்று மணிநேர பரீட்சை இலகுவாக தீர்மானித்துவிடும். எனக்கு தெரிந்து ஒரு அறுப்பும் புரியாமல் முப்பது வருட வினாத்தாள்களை மட்டும் மீட்டியே ஒருவன் எல்லாப்பாடத்துக்கும் “ஏ” எடுத்தான். அதே ஷாட் விளையாடி பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு சித்தி அடைந்தான். ஆனால் காமசூத்ரா சீன் டிவியில் போனால் “ஏண்டா இவங்கள் கட்டிப்பிடிக்கிறாங்கள்?” என்பான். Wisdom, Conscience என்ற சொற்களே அவன் அகராதியில் கிடையாது. தேடல் சுத்தம். ஆனால் சமூகம் அவனை அழைப்பது அறிவாளி என்று. அதே நேரம் நிஜமான புத்திசாலிகள், ஒழுங்காக வகுப்புக்கு போகாமல் தன் பாட்டுக்கு லோனியின் கணக்கு செய்து, சிலபஸ்ஸில் இல்லாத பாடங்களை படித்தவர்கள் வெளியே இருந்தார்கள். பல்கலைகழக அனுமதி மறுக்கப்பட்டது.  படகு பிடித்து வெளிநாடு போய், ஒரு சாதாரண, திறமைக்கேற்ற வேலை செய்யாமல்…. அவர்களோடு ஒரு மணிநேரம் பேசிப்பார்த்தாலே புரியும். அவர்கள் எங்கேயோ இருக்கவேண்டியவர்கள்.
தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இங்கேதான் வருகிறது. படிக்கவேண்டும் என்று நினைக்கும் மாணவனை, “இல்லடா உனக்கு மண்டைல மாட்டர் இல்ல, நீ இதை தான் படிக்கோணும்” என்று ஒரே பரீட்சையில் முடிவு செய்ய எவனுக்கு தகுதி இருக்கிறது? உயர்தரத்து வினாத்தாள் தயாரிக்கும் பேர்வழிகள் கூட சொந்தக் கணக்கை தயார் பண்ணுவதில்லை. வெள்ளைக்காரன் போட்ட கணக்கை ட்ரான்சிலேட் பண்ணுவதுதான் அவர்கள் தொழில். அவர்களுக்கு குகன் போன்றவர்களின் தகுதியை தீர்மானிக்கும் தகுதியே கிடையாது. தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இலங்கையில் மிக அவசியம். அப்போதுதான் அரச பல்கலைகழகங்களும் நல்ல நிலைக்கு உயரும். திறமைசாலிகளுக்கு ஸ்கோலர்ஷிப் கிடைக்கும். ஏனையவர்களுக்கு தாம் விரும்பிய துறையில் தேர்ச்சிபெற சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் தனியார் பல்கலைக்கழகங்கள் வெறும் இலாபநோக்கத்துக்காக மாத்திரமே உருவாக்கப்படும்போதே, லைசன்சுக்குக்கூட இலஞ்சத்தோடு ஆரம்பிக்கும்போதே பிரச்சனை உருவாகிறது. துஷ்பிரயோகங்களைத் தடுக்க தகுந்த கவர்னன்ஸ் பொறிமுறையை உருவாக்கவேண்டும். இதை ஏன் பலர் வேண்டாம் என்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். ஒரு காரணம், தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளதையும் குட்டிச்சுவராக்கிவிடுமோ என்கின்ற பயம். இன்னுமொன்று Survival instinct. 

ப்ரோகிராமிங்
ஒருமுறை ஹர்ஷால், அவன் மனைவியோடு பேசிக்கொண்டிருக்கும் போது வந்த டொபிக் இது.  “எது பிடிக்குதோ, அதையே வாழ்க்கைல செய்யோணும். அப்போது தான் வெற்றி வரும்” என்று சச்சின், ஏ ஆர் ரகுமானை உதாரணமாக்கி சொன்னான். அதற்கு அவன் மனைவி கேயா சொன்ன பதில் யோசிக்க தூண்டியது. எல்லோருக்குமே இசை பிடிக்கும் அதற்காக எல்லோருமே இசை கலைஞர் ஆகிவிட முடியாது. கிரிக்கட் பிடிக்கும் என்றதுக்காக சச்சின் ஆக முடியாது. வென்றவன் ஒருவன் சொல்லும் பேச்சை கேட்டு வெல்லாதவன் லட்சம் பேரின் வாழ்க்கையை மறந்துவிட கூடாது. அதைவிட இந்திய கலாச்சாரத்தில் பலமுகத்தன்மை இல்லை. எது உனக்கு பிடிக்கும் என்ற வட்டம் மிகச்சிறியது. அதனால் முன்முடிபு செய்யாமல் தேடு. உன் திறமைக்கு சவாலான வேலை அமையும் போது அதை இயல்பாகவே காதலிக்க தொடங்குவாய்.
ஸ்டீவ் ஜொப்ஸ் இதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருப்பார்.
If you haven't found it yet, keep looking. Don't settle. As with all matters of the heart, you'll know when you find it. And, like any great relationship, it just gets better and better as the years roll on.
சின்னவயதில் சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால் எஞ்சினியரிங் செய்யாமல் பிசிக்கல் சயன்ஸ் செய்து, தியரிட்டிகல் பிசிக்ஸில் மூழ்கி முத்தெடுத்திருக்கலாம் என்று அவ்வப்பொது நண்பர்களிடம் சொல்லி கவலைப்படுவதுண்டு. செய்யவில்லை. வளர்ந்து சொந்தக்காலில் நிற்கும்போது அந்தப்பக்கம் திரும்பலாம் என்று நினைத்து ஒத்திப்போட்டது. இப்போது முத்து எடுக்க முடியாவிட்டாலும் பழைய ஆசையில் சின்ன டைவ் அடிப்பதில் ஒரு சந்தோசம். தேவமாறன் என்ற நண்பனிடம், தமிழர்கள் யாராவது குவாண்டம் பிஸிக்ஸ் பிஎச்டி செய்கிறார்களா? என்று கேட்க, ஒருவரை தெரியும், அறிமுகப்படுத்துகிறேன் என்றான். கூடவே ஒரு தொகை புத்தகங்கள் லிஸ்ட் அனுப்பினான். “How to teach your dog physics”, “The Age of Entanglement: When Quantum Physics Was Reborn, Erwin Schrodinger and the Quantum Revolution”. இதிலே எண்டாங்கில்மெண்ட் பற்றி வியாழமாற்றத்தில் ஒரு முறை முயன்றிருக்கிறேன். ஷ்ரோடிங்கர் பூனை வராத படலை பதிவே இல்லை எனலாம். பிக் பாங், ஹிக்ஸ் பொசன் எல்லாம் வந்திருக்கிறது. கூடிய சீக்கிரம் General Theory Of Relativity அதிலிருந்து எப்படி பிரபஞ்சம் விரிகிறது என்பதை விளக்கி, அங்கிருந்து Cosmology பற்றி ஒரு நாள் படலையில் சாத்தவேண்டும்!
பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் துறை தெரிவுசெய்திருக்கலாம். “படிச்சு என்ன செய்யப்போறாய். இலங்கைல ஸ்கோப் இல்லை” என்றார்கள். கொஞ்சம் குழப்பத்துடன் தான் கணணித்துறையை தெரிவு செய்தேன். அதுவும் இரண்டாம் மூன்றாம் வருடங்களில் சில கவனக்கலைப்பான்கள், என் பொறுப்பின்மை, ”இனி எதுக்கு படிப்பான்?” என்ற எண்ணம் சேர்த்து அதளபாதாளத்துக்கு கொண்டுபோனது. அப்புறம் ஆறு மாதம் ட்ரைனிங். திடீரென்று ஒருநாள் XML என்று ஒரு தொழில்நுட்பம் வந்திருக்கிறது என்றார்கள். இன்னும் சில தொழில்நுட்ப பெயர்கள். இங்கே வேண்டாம். சொன்னார்கள். ஒரே வாரத்தில் படித்து செய்யவேண்டும். அங்கே ஆரம்பித்தது பிக்அப். அதற்கு பின்னர் இறுதி ஆண்டு படிக்கும்போதே ஒரு கொம்பனியில் வேலை கிடைத்துவிட, அசுவாரசியமாக ஆரம்பித்த துறை, இரண்டே மாதம் தான். ப்ரோகிராமிங் ஒரு டிவைன் என்று புரிய ஆரம்பித்தது.
ப்ரோகிராமிங் என்பது ஒருவித போதை. இசை போல. எழுத்து போல. அதில் வசப்பட்டுவிட்டால் நேரம் காலம் தெரியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் நீங்கள் ஏதாவது சிக்கலை தீர்த்துக்கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு தடவையும் சிக்கல்கள் புது வகையில் இருக்கும். அதை நண்பர்களோடு சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவது தனி அனுபவம். வெள்ளை பலகையில் டிசைன் போட்டு, அன்றைக்கே எழுதி, அது சரிவரும் போது கிடைக்கும் சந்தோசம் அனுபவித்தால் மாத்திரமே புரியக்கூடியது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வீட்டுக்கு போகாமல் அலுவலகத்திலேயே இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இரு என்று யாருமே சொல்லவில்லை. ஒரு சிக்கல் உருவாகி அதை தீர்க்கமுடியாமல் வீட்டுக்கு போனாலும் நித்திரை வரப்போவதில்லை. அதனால் தான் அந்த டேரா. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது புது புது விஷயங்கள் வாசிக்கலாம் படிக்கலாம். வேலை செய்யும்போது பாட்டுக்கேட்கலாம். விரும்பிய நேரம் போகலாம், வரலாம். வீட்டுக்கு போகவேண்டும் என்ற மனமே வராது. புதுக்காதலியை சந்திக்கப்போகும் அனுபவத்தை தினந்தோறும் கொடுக்கும் துறை அது!
இந்த துறையில் இருக்கும் இன்னொரு முக்கிய விஷயம் நண்பர்கள். நான் அடிமுட்டாளாய் இருப்பதோ என்னவோ, என்னோடு நெருங்கிப்பழகும் அத்தனை நண்பர்களும் என்னைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். உடனே ஞாபகம் வருபவர்கள் ஹர்ஷா, அமுதா, சயந்தன் மற்றும் பீட்டர். நேபாளத்துக்கு ஹர்ஷா, சயந்தன், நான் என மூவரும் ஒரு விசிட் அடிக்கிறோம். இமயமலை குளிர். ஹோட்டல் ரூமில் ஹீட்டர் இல்லை. குளிர் குலப்பனிடிகிறது. போர்ப்பதற்கு ஆளுக்கொரு மெல்லிய போர்வை. இப்படி ஒரு சூழ்நிலையில் ஹர்ஷா என்ன செய்தான் தெரியுமா? யன்னல்களை இறுக்கமாக சாத்திவிட்டு, மின் விசிறியை அதி உச்ச வேகத்தில் இயக்கிவிட்டான்.  நானும் சயந்தனும் கெட்ட தூஷணத்தில் திட்டினோம். But it worked. கொஞ்ச நேரத்தில் குளிர் ஓடிவிட்டது. ஏன் என்று யோசியுங்கள்! சாதரணமாக படிக்கும் பிசிக்ஸ் தான். அந்த இடத்தில் அவன் பயன்படுத்தினான்.
சயந்தன் யோசிக்கும் பல விஷயங்கள் ஆச்சர்யமாக என்னோடு ஒத்துப்போகும். பல தடவைகள் அவன் ஆங்கிலத்தில் எழுதுவதை படலையில் தமிழ் படுத்தியிருக்கிறேன். ஆங்கிலத்தில் அவனைப்போல எழுதமுடிவதில்லையே என்று போறாமைப்பட்டிருக்கிறேன். நான் ஆயிரம் சொற்களில் எழுதுவதை ஐந்து வரிகளில் முடிப்பான். அகில இலங்கை செஸ் சம்பியன். அவன் வேலையிலோ, அல்லது Yarl IT Hub இலோ எடுக்கும் நகர்வுகளை எதிர்த்தபடியே ரசித்திருக்கிறேன். நான் ஒரு எடுத்தான் கவுத்தான் கேஸ். அதை நாசூக்காக செய்வதில் சயந்தன் தேர்ந்தவன். அவனிடம் படிக்க பலது இருக்கிறது.
அமுதா, சிங்கப்பூரில் கிடைத்த நண்பி. கணவன் ஒரு ஐஐடி காரன். இருவருக்குமே தமிழ் தெரியாது. அலுவலக பழக்கம் ஒன்றாக ஸ்குவாஷ் விளையாடி, அவர்கள் வீட்டிலேயே குளித்து, சாப்பிட்டு, இரவு பதினொரு மணிக்கு ஸ்விம்மிங்பூல் பக்கம் ப்ளேன்டீ குடித்தபடி கடவுள் முதல் காதல் வரை எந்த டவுட்டையும் இருவரோடும் பேசி தெளியலாம். Never let your emotions to lead your intellectuality என்று அமுதா அடிக்கடி குட்டி குட்டி சொல்லும் விஷயம். இப்போதும் சாட்டில் வந்து “என்னடா .. யாராவது கேர்ளை இப்பவாச்சும் பார்க்கிறியா?” என்று கேட்டால், “தெரியேல்லையே” என்பேன். “திருத்தமுடியாது” என்று திட்டு விழும்.
இப்போது பீட்டர் முறை. எனக்கும் அவனுக்கும் பிடிக்கும் பொது விஷயம் குவாண்டம். இன்டர்வியூவில் கூட இதை கேட்டிருந்தான். சொன்னபோது சிரித்தான். அப்போதே தெரிந்தது வேலை நிச்சயம் என்று. ஐன்ஸ்டீனின் மூவிங் ரோட்ஸ் (Moving Rods) பரிசோதனை ஒன்று இருக்கிறது. சார்புத்தத்துவத்தின் மிகச்சிக்கலான படிமம். வேலை நேரம் மீட்டிங் ரூம் புக் பண்ணி, இருவரும் இரண்டு மணி நேரம் அதை விவாதித்து மண்டை காய்ந்திருக்கிறோம். குகனுக்கு பிறகு சீரியஸாக ஐன்ஸ்டீன் தேடும் ஒரு நண்பன். ப்ரோகிராமிங் துறைக்கு வந்திருக்காவிட்டால் கிடைத்திருக்கமாட்டான்.
சிறுவர்கள், இளைஞர்கள் கணணித்துறையை “ஸ்கோப்” உள்ள துறை என்று நினைத்து தயவு செய்து நுழையாதீர்கள். அதை ரசியுங்கள். “இந்த ப்ராப்ளத்தை நான் தீர்க்காமல் வேறு எவன் தீர்ப்பான்?” என்ற ஒருவித தன்னம்பிக்கை உதவி செய்யும். இதில் ஒரு “முடிவு கட்டியே தீருவோம்” என்று சொல்லிக்கொண்டு நுழையுங்கள். அப்போது அதன் அண்டசராசரம் விரியும். மூழ்கிப்போய் திளைப்பீர்கள்.
இல்லையா? Facebook இல் ப்ரோகிராமிங்கை பற்றி நக்கல் அடித்து யாராவது போடும் நிலைத்தகவலை ஷேர் பண்ணி லைக் பண்ணுவீர்கள்.

ஒரு ஐடியா!


sujathaசுஜாதாவை அடிக்கடி நான் சிலாகிக்கும்போது சிலர், அதுவும் நெருங்கிய சில நண்பர்கள் முகம் சுளிப்பதுண்டு. “என்ன எப்ப பார்த்தாலும் சுஜாதாவை தூக்கிப்பிடிக்கிறீங்க, அவரை விட எத்தனை பேர் என்னமா எழுதியிருக்கிறார்கள்?” என்பார்கள். இருக்கலாம். ஆனால் சுஜாதாவை வெறும் இலக்கியவாதி என்பதற்காக ரசிப்பதில்லை. அவர் ஒரு ஐடல். என்னை போன்ற காட்டுப்பயலுகளுக்கெல்லாம் குளத்தை காட்டி, குடிடா என்றவர். அதை எந்த பள்ளிக்கூட ஆசிரியரும் எனக்கு செய்யவில்லை. தமிழ் பாட புத்தகத்தில் நளவெண்பா இருந்தாலும் எவரும் வெண்பா எழுத தூண்டவில்லை. குமரன் மாஸ்டர் மூன்று வருடங்கள் பிசிக்ஸ் படிப்பித்தார்.  ஒருநாள் கூட நியூட்டனின் விதிகள் தவறு என்று சொல்லவில்லை. அவருக்கே அது தெரியுமோ தெரியாது. இலத்திரன், புரோத்திரன் தவிர ஏனைய கூறுகள் பற்றி மூச்சு விடவில்லை. லைட் குவாண்டா, குவார்க், பொசன் பற்றி சுத்தம். ஒரு சிறுகதை எழுதுவது எப்பிடி? வாசிப்பது எப்படி? என்னெல்லாம் உலகத்தில் இருக்கு? அரசியல், விளையாட்டு, சினிமா என்று கிணற்றை விட்டு எம்மை தூக்கி வெளிய போட்ட ஆளு சுஜாதா. “Conventional Wisdom can often go wrong” என்று அவர் சொல்லித்தான் எங்களுக்கு தெரியும். “எழுத்தில் தவிர்க்க பாருங்கோ” என்பார்கள். முடியாது. “நாடி நரம்பு மூளை முடுக்கு எல்லாம் ஊறிக்கிடக்கும்” விஷயம் இந்த சுஜாதா. பத்து வயதில் இருந்தே இது நடக்கிறது. இப்போது நானே நினைத்தாலும் மாற்றமுடியாது.
படலையால் கிடைத்த முகம் தெரியாத நண்பர்களில் துஷியும் ஒருவன். எப்போதாவது ஒருமுறை சாட் பண்ணுவோம். அப்படி ஒருநாள் அண்மையில் சாட் பண்ணிக்கொண்டிருக்கும்போது தான் புத்தக வாசிப்பு பற்றி வந்தது. Yarl IT Hub தன்னுடைய நிஜமான நோக்கத்தை அடையோணும் என்றால், கண்ணுக்கு தெரியாத மூலையில், தன் இஷ்டத்துக்கு ஒரு புத்தகத்தை வாசித்தபடி, அடிக்கடி விட்டத்தை பார்க்கின்ற, வாத்தியால் “மொக்கன்” என்று அழைக்கப்படுகின்ற அந்த சிறுவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று சொன்னேன். “அண்ணே முன்னே மாதிரி இல்ல, இப்ப யாழ்ப்பாணத்தில வாசிப்பு எண்டது குறைஞ்சு போச்சு” என்றான். “இப்பிடித்தான் என் காலத்திலும் சொன்னார்கள், வாசிப்பு ஒரு லவ் போல, எப்பவுமே இருக்கும். எங்கேயுமே இருக்கும். ஆனால் வாசகனை கண்டுபிடிப்பது தான் சவால்” என்றேன்.  “எப்படி செய்யலாம்?” என்று யோசித்தோம். எண்டாங்கில்மெண்ட் தான். அனேகமான வாசகர்கள் பொதுவாக introverts(இதுக்கு என்ன சரியான தமிழ்?). அவர்கள் தங்களுக்கு வசதியான வட்டத்துக்குள் தான் உரையாடுவார்கள்.  கொஞ்சம் சுவாரசியமான, வித்தியாசமான சிந்தனைகளை தோற்றுவிக்கும் புத்தகங்களை அந்தவகை மாணவர்களுக்கு காட்டிவிட்டால் ஆச்சர்யங்கள் இருபது வருடங்களில் நிகழ்த்துவார்கள். அந்த விதையை இங்கே போடவேண்டும். எப்படி?
299472_399602143441648_1167340463_nசும்மா, நூறு புத்தகங்களை நூலகங்களுக்கு கொடுப்பது வேலைக்காகாது. இலக்கிய சந்திப்புகளில் அரசியல் வந்துவிட்டது. தவிர நான் இங்கே பேசும் விஷயம் இலக்கியமே கிடையாது. இளைஞர்கள் எழுத்தாளர் விழா, இலக்கியம் என்றாலே பாத்ரூம் போய்விடுகிறார்கள். கொஞ்சம் நவீன முறையில் இந்த இளைஞர்களை ஆர்வப்படுத்தவேண்டும். பல வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு சின்ன ஐடியா.
ஐம்பது மாணவர்கள் கூடுகிறார்கள். பத்து குரூப்பாக பிரியுங்கள். ஒவ்வொரு அணிக்கும் “என் இனிய இயந்திரா” வின் ஒவ்வொரு அத்தியாயம் கொடுப்போம். அவர்கள் முன்னர் அந்த நாவலை வாசிக்கவில்லை. அடி நுனி தெரியாது. கொடுக்கப்பட்ட அத்தியாயத்தை மாத்திரமே வாசிக்கவேண்டும். முப்பது நிமிடங்கள். முடிய ஒவ்வொரு அணியும் தம் அத்தியாயத்தை எல்லோருக்கும் ப்ரெசென்ட் பண்ணவேண்டும். அது முடிந்தபின், மீண்டும் ஒவ்வொரு அணியும் மொத்த நாவல் கதையை இப்போது ஊகித்தறிந்து பிரசென்ட் பண்ணவேண்டும். எப்படி இருக்கும்?
இது நடக்கும் பொது நிறைய வாத பிரதிவாதங்கள் நடக்கும். அந்த நாவல் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்று ஆளாளுக்கு சொந்தமாக யோசிப்பார்கள். அது ஒருவகை கிரியேட்டிவிட்டி. இதை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் பண்ணி, “Alice in the wonder world”, “Mort”, “Restaurant at the end of universe” என்று விரித்து இன்னும் மேலே “Evolution of physics” வரைக்கும் போகலாம். பாடசாலைகளில் Science Club, Tamil Union போன்றவை இதை செய்யவேண்டும்.
இது ஒரு ஐடியா தான். இப்படி தினுசு தினுசா யோசிக்கலாம். நடைமுறை படுத்தவேண்டும். Yarl IT Hub செய்யும் என்று நம்புகிறேன். இதை நம்பி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கூச்சசுபாவம் உள்ள சிறுவன், வெட்கத்தை விட்டு எங்கள் மீட்டிங்குக்கு வருவான் என்று நம்புகிறேன்.
வருவான்.

எழுத்தாளர் விழா
“சினிமா விமர்சனம் போல வாராவாரம் “நூல் அறிமுகம்” செஞ்சு இம்சிக்கிறாய். ஆனா உண்ட “கந்தசாமியும் கலக்ஸியும்” நாவலை எவனும் சீண்டவே இல்லையே”
கஜன் கேட்டபோது என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. அதை நாவல் என்று ஏற்றுக்கொள்வதில் மூன்று சிரமங்கள் இருக்கிறது. முதலில் இணையத்தில் வெளிவந்ததால் அது நாவலாகுமா? என்பது. அதில் நாவலுக்குரிய அம்சங்களே இல்லையே என்பது இரண்டாவது.  மூன்றாவது அதை சிறுவர்கள்(வயதடிப்படையில் அல்ல) எவரும் இன்னமும் வாசிக்கவில்லை. இலக்கியம் என்பது மிகவும் யதார்த்தமாக எங்கட ஊரில போயிட்டுது. அதுவும் ஈழத்து எழுத்தாளன் “ஐயோ அம்மா வலிக்கிறது” என்று வாய்விட்டு தன் அழுகையை கூவி விற்றால்தான் போய் சேருகிறது. சனநாயகம், சோஷலிசம், கொம்ரேட்,  தலித்தியம்(இந்த சொல்லே ஈழத்தில் பாவனையில் இருக்கவில்லை என்று சொன்னால் அடிக்க வருகிறார்கள்), பெண் விடுதலை மட்டுமே இங்கே கருப்பொருட்களாகின்றன. எழுத்தில் அடிக்கடி “காத்திரமான” என்ற வார்த்தை வேறு வந்து தொலைக்கவேண்டும்.
310691_10150312965606415_753825724_n[3]
நான் எழுதிய நாவல் ஒருவேளை தரமற்றதாக இருக்கலாம். ஆனால் அது எடுத்த கருப்பொருள் முக்கியமானது. பன்னிரண்டு வயது சிறுவன் வாசித்தால் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற குட்டி நம்பிக்கையில் எழுதியது. தலைவர் போன பின்னர் யாருமே அந்த ஏரியாவில் கை வைக்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் நான் ஆடிய வான்கோழி ஆட்டம். இந்த ஆட்டத்தை பார்த்தாவது ஒரு கானமயில் ரோஷம் வந்து ஆடாதா? என்ற நப்பாசை தான்.
புத்தகங்கள் மூலம் ஒரு புரட்சியை செய்யலாமா? அரசியல் புரட்சி அல்ல, தத்துவமும் அல்ல, நான் சொல்வது ஒருவகை தொழிற்புரட்சி, economic enlightenment என்பான் கோபி. நான் அதை கிரியேட்டிவிட்டிக்குள் அடக்கிவிட நினைக்கிறேன். இப்போது எங்களால் ஒரு நல்ல சினிமாவை பிரித்து மேய தெரிகிறது அல்லவா? கடல் படத்தின் கிளைமாக்ஸ் மொக்கை என்று சொல்ல தெரிகிறது இல்லையா. பேஸ் நோட் நிர்ஜானிக்கு எட்டுதே இல்லை என்று சொல்லுகிறோமோ?. அதற்கு காரணம் எங்கள் புத்தியை, எங்கள் திறமையை சினிமாவும், டிவியும் கிரிக்கட்டும், இசையும் ஆக்கிரமித்து இருக்கின்றன.  கொஞ்சம் நல்ல எழுத்தாளர்கள், துறை சார் வல்லுனர்கள் அவர்கள் துறைகளை சுவாரசியமாக பகிர தொடங்கினால், அது எழுத்தென்றில்லை, ஒரு யூடியூப் வீடியோவாக கூட இருக்கலாம், ஒரு ஐம்பது சிறுவர்களை, விஞ்ஞானத்தின் பக்கமோ, பொருளியல் பக்கமோ திருப்பலாம். கொஞ்சம் யோசிச்சு பாருங்கள். நாங்கள் கருணாநிதியையும், இளையராஜாவையும், இளையதளபதியையும் பின்னி பெடலெடுப்பது போல, ஒரு ஐம்பது சிறுவர்கள் ஐன்ஸ்டீனையும் பிலாங்கையும் .. ஏன் லாரி பேஜ், கோஸ்லிங்க் ஆக கூட இருக்கலாம், பிரித்து மேய்ந்தால் எப்படி இருக்கும்? அதற்கு பத்துவயது சிறுவனை டார்கட் பண்ணி, அவன் அப்படியான விஷயங்களை ரசிக்கும்படியான சூழலை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அந்த சூழலை புத்தகங்கள் இலகுவாக கொடுக்கும். ஒரு புத்தகமே போதும், ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்க. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியில் அது நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் நிகழ்ந்தது.
எங்களுக்கும் நடக்கலாம். நாங்கள் மனது வைத்தால்.
சனிக்கிழமை அன்று சிட்னியில் நடைப்பெறப்போகும் எழுத்தாளர் விழாவில் இதை பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.  இங்கே இதை பேசுவதில் என்ன பலன்? என்று கேட்கலாம். வேறு இடங்களில் பேச சந்தர்ப்பம் இல்லை பாஸ். ஆற்றில் போட்டு குளத்தில் தேடும் மாட்டார் தான். ஆறு சிலவேளை ஐட்டத்தை அடித்து தள்ளிக்கொண்டு குளத்தில் சேர்த்தாலும் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் பேசப்போகிறேன்.
லண்டன் இலக்கிய சந்திப்பில் குத்துப்பாடு என்று அருளினியன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதால், பேச்சை தயார் பண்ணி பேசுவது ஜீன்சுக்கும் என் ஜட்டிக்கும் கூட சேஃப்  என்று நினைக்கிறேன். மற்றபடி சிட்னியில் யாராவது படலைப்பக்கம் மழைக்கு ஒதுங்கியிருந்தால், குடை பிடித்திருந்தால், வாருங்கள். பேசுவோம்!
இடம் : Homebush Boys’ High School.

&&&&&&&&&&&&&&&&&&&


Comments

 1. Survival Instinct - DAMN RIGHT

  ReplyDelete
 2. ஐம்பது மாணவர்கள் கூடுகிறார்கள். பத்து குரூப்பாக பிரியுங்கள். ஒவ்வொரு அணிக்கும் “என் இனிய இயந்திரா” வின் ஒவ்வொரு அத்தியாயம் கொடுப்போம். அவர்கள் முன்னர் அந்த நாவலை வாசிக்கவில்லை. அடி நுனி தெரியாது. கொடுக்கப்பட்ட அத்தியாயத்தை மாத்திரமே வாசிக்கவேண்டும். முப்பது நிமிடங்கள். முடிய ஒவ்வொரு அணியும் தம் அத்தியாயத்தை எல்லோருக்கும் ப்ரெசென்ட் பண்ணவேண்டும். அது முடிந்தபின், மீண்டும் ஒவ்வொரு அணியும் மொத்த நாவல் கதையை இப்போது ஊகித்தறிந்து பிரசென்ட் பண்ணவேண்டும். எப்படி இருக்கும்?

  - உண்மை JK . ஆனாலும் எத்தனை பெற்றோர்கள் பாடப்புத்தகத்தை தவிர வேறு நூல்களை வாசிக்கத் தூண்டுகிறார்கள். இந்த நூலை எனது அக்காவின் மகனுக்கு சொன்னபோதே மிஞ்சியது அக்காவின் எரிக்கும் பார்வைதான்.

  Banu

  ReplyDelete
  Replies
  1. It could and will slowly happen. Not many parents encourage kids to watched movies either. But kids eventually watch them. I am sure it will happen if we keeping pushing towards.

   Delete
 3. What If The Sun Disappeared?

  http://www.youtube.com/watch?v=rltpH6ck2Kc

  great youtube channel.

  ReplyDelete
  Replies
  1. Thanks .. There is think 8 mins theory .. nothing will happen for 8 mins in earth as Gravity is slower than speed of light.

   Delete
 4. can't accept it. just memorize the code or else copy paste from internet nothing special even person who don't have A/L can do it
  .//ப்ரோகிராமிங் என்பது ஒருவித போதை. இசை போல. எழுத்து போல. அதில் வசப்பட்டுவிட்டால் நேரம் காலம் தெரியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் நீங்கள் ஏதாவது சிக்கலை தீர்த்துக்கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு தடவையும் சிக்கல்கள் புது வகையில் இருக்கும். அதை நண்பர்களோடு சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவது தனி அனுபவம்.//

  ReplyDelete
  Replies
  1. //just memorize the code or else copy paste from internet nothing special even person who don't have A/L can do it//

   Happy you are in not programming field. BTW who would have written those codes in internet anyway? The god?

   Delete
 5. The mentioned parenting problem exists for a long time almost in all parts of the civilized world. I like to point out the following Khalil Gibran's poem as an example.

  They come through you but are not from you,
  And though they are with you yet they belong not to you.
  You may give them your love but not your thoughts,
  For they have their own thoughts.
  You may house their bodies but not their souls,
  .................................................
  .......................................................
  You are the bows from which your children
  as living arrows are sent forth.
  The archer sees the mark upon the path of the infinite, and
  He bends you with His might that His arrows may go swift and far
  Let your bending in the archer’s hand be for gladness;
  For even as He loves the arrow that flies,
  So he loves also the bow that is stable.
  (from http://anattitudeadjustment.com/2011/01/04/poetry-file-children/ <-- you can find this other websites also. Do you know who is the archer? I am bit confused on that, I know about bow and arrow)

  Whenever you get a chance take a look at these: http://www.ted.com/talks/sugata_mitra_the_child_driven_education.html, http://www.youtube.com/watch?v=y3jYVe1RGaU, http://www.ted.com/speakers/sugata_mitra.html.
  This guy doing(did) similar things to what you are planning to do with kids. I am going to try something similar during this summer, let you know how it goes.

  Finally, //நான் அடிமுட்டாளாய் இருப்பதோ என்னவோ, என்னோடு நெருங்கிப்பழகும் அத்தனை நண்பர்களும் என்னைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.// எனக்கும் அப்படியேதான், ஒரு வித்தியாசம் எனக்கு, அது வந்து எனக்கு ஒரே நண்பர். அவர் பெயர் JK, அவருடைய படலையில் கற்றதும் பெற்றதும் நிறைய.

  ReplyDelete
  Replies
  1. Thats a stunning poem Mohan, thanks for sharing it. Hope the attitude changes over time.

   Delete
 6. Jeyakanthan did not go to school. But got the award.
  Balamurali Krishna did not go to school. But a Music mastro.
  Schools are like a prison. It is a factory that produces end products.
  When I was a physics teacher during some free periods I have discussed about Ramayana with students. Luckiley I did not get any memoes as I am distarcting the future engineers, scientists.

  Anyway I learned more Tamil after coming to Europe. Yes, in Asian countries, for survivial we have to do what we do not like.

  siva

  ReplyDelete
  Replies
  1. Thanks Siva .. Jeyakanthan did have literature topics in Tamil to get inspired. Balamurali Krishna comes from musical family. Schools may be like prisons. But an encouragement and exposure can come from friends and well wishers. We just need to have the culture for it. Discussing Ramayana is not a distraction. But discussion only the ramayana but nothing else, is indeed a distraction.

   Hope it changes in asian countries over the time.

   Delete
 7. நன்றாக இருக்கிறது.

  Am I agree with you? Yes and No.

  சொன்னதில் குறை இல்லை, சொல்லத்தான் வேண்டும். சொல்லிய காலத்தையும் இடத்தையும் குறைவில்லாமல் தொட்டு சென்றிருக்கிறீர்கள்.
  ஒரு உண்மை இருக்கிறது, பரம்பல் ஒன்றில் உள்ள விலகல்கள் பற்றிய Bell curve - குணசீலன் -தாவரவியல்; அதை கவுண்ட மணி என்றும் சொல்லுவார். நீங்கள் சொல்லும் அதி மேதைகள், அந்த 2SD க்கு வெளியே வருபவர்கள். அவர்களுக்கு பள்ளிக்கூடம் தேவையில்லை, பாடப்புத்தகம் தேவையில்லை, வாத்தியார் தேவையில்லை, 4 பிரத்தியோக வகுப்புக்கள் தேவையில்லை..எதுவுமே இல்லாத போதும் அவர்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள.. கருவிலே திரு உடையவர்கள் என்று சொல்லுவோமே அவர்கள்தான் இவர்கள்.

  ஆனால், பெரும்பான்மை, அலைகிற கூட்டம் அதும் குணசீலன் வார்த்தையில் "சோத்து பண்டாரங்கள்" அவர்களை வழி நடத்துகிற பொறுப்பு பெற்றோரிடமும், வாத்தியாரிடமும், சமூகத்திடமுமே இருக்கிறது.

  அந்த 2.5 சதவீத மேதாவிகளை தேடுவதற்காக, 95 வீதம் உள்ள சாதாரண "அடியாத மாடு படியாது" என்கிற கூட்டத்தை, போன போக்கில் விடுவது சரியோ என யோசித்து பாருங்கள்?

  இப்பவுமே எங்களுக்கு ஏதும் தெரியாது, அதுவும் வேணும் இதுவும் வேணும் என்கிற நிலை, இந்த வள்ளலில் , 10 வயதில் சத்திரனை பாக்கிறதோ, தவைளை காலில் மின்சாரம் எடுக்கிறதோ தேவையில்லை என்றுதான் சொல்லுவேன்.

  அதேநேரத்தில் எனது வீட்டில்/பக்கத்து வீட்டில் இருந்து ஒரு விஞ்ஞானி வந்தால் தமிழ்lan என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட என்று பாடவும் பின்னிற்க மாட்டேன்

  வாழ்த்துக்கள் JK

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. //அந்த 2SD க்கு வெளியே வருபவர்கள். அவர்களுக்கு பள்ளிக்கூடம் தேவையில்லை, பாடப்புத்தகம் தேவையில்லை, வாத்தியார் தேவையில்லை, 4 பிரத்தியோக வகுப்புக்கள் தேவையில்லை..எதுவுமே இல்லாத போதும் அவர்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள.//
   Definitely .. Problem is they all need mentors and inspirations. There should be some stimulation and support. Life for Einstein he had hell lot of physicists friends in German in that era. Hope it happens.

   //அதேநேரத்தில் எனது வீட்டில்/பக்கத்து வீட்டில் இருந்து ஒரு விஞ்ஞானி வந்தால் தமிழ்lan என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட என்று பாடவும் பின்னிற்க மாட்டேன் //

   Classic Anna :D ha ha

   (Sorry to type in Eng .. using a different machine)

   Delete

Post a comment

Contact form