வியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்

May 2, 2013

 

604145_436509086438264_1618075806_n

உரைநடை

இது ஒருவித ரெடிமேட் காய்ச்சல்.  ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று இருப்பவன் விடியக்காலமை ஏழு மணி தாண்டியும் எழும்பவில்லை என்றாலே சம்திங் ரோங் என்று அம்மாவுக்கு தெரிந்துவிடும்.

“அப்பன் எழும்படா”

சத்தம் இருக்காது.

“ஸ்கூலுக்கு நேரமாயிட்டு .. எழும்பு”

தலைவரிடம் இருந்து மெல்லிதாக ஒரு இழுப்பு வரும்.

“உன்னோட விடிய வெள்ளன மினக்கடேலாது … எழும்பு”

அம்மா வந்து போர்த்தியிருந்த பெட்ஷீட்டை இழுத்து எறியும்போது சிங்கன் கொடுக்கும் ரியாக்ஷனுக்கு மகளிர் மட்டும் நாசர் தோற்றுப்போவார். கான்சர் வந்து சோர்ந்து போயிருந்த கடைசிநாள் ஸ்டீவ்ஜொப்ஸ் மாதிரி காய்ந்து போய் கிடப்பார் நம்மாளு. கண்ணை திறக்கவே முடியாதாம்.

“தலை கனக்குது அம்மா .. கொத்தமல்லி அவிச்சு தாறீ..?”

“ங்களா?” என்பது வெறும் மூச்சாகவே வரும். அம்மாவிண்ட அனுபவத்தில இப்படி எத்தினை விளையாட்டு பார்த்திருப்பார்?.

“இந்த நடிப்பெல்லாம் என்னட்ட செல்லாது .. எழும்பு”

“நான் எதுக்கு நடிக்க போறன்? .. உடம்பெல்லாம் நோகுது .. கழுத்தை தொட்டுப்பாருங்க .. கொதிக்குது”

அம்மா கிட்டவந்து தொட்டுப்பார்க்கிறார்.

“என்னடா கழுத்து ஈரமா இருக்குது .. பெட்ஷீட்டை வாயால ஒத்தி கழுத்தில வச்சியா? அப்பரிண்ட அத்தினை தில்லுமுல்லுகளையும் நல்லா பழகு வை”

அப்பா எதுக்கு இந்த வேலை பார்த்திருக்கவேண்டும்? என்ற சந்தேகம் லைட்டாக வந்தாலும், அதைப்பற்றி யோசிக்க தலைவருக்கு நேரமில்லை.

“காய்ச்சலில வேர்த்திருக்கன .. வருத்தக்காரனை கூட கவனிக்கிற இரக்கம் இல்லாத குடும்பம் .. இந்த வீட்டில இருந்து தின்னிறதுக்கு பதிலா பேசாம நான் இயக்கத்துக்கே போகலாம்”

எங்க எப்பிடி எந்த இடத்தில ஸ்கட் ஏவுகணையை விடோணும் என்று தலைவருக்கு நன்றாகவே தெரியும். கள்ளக்காய்ச்சலா? கண்ணீர் அஞ்சலியா? என்று அம்மா ஒருகணம் பயந்திருக்கலாம். ஒருநாள் தானே.

“சரி இண்டைக்கு மட்டும் நில்லு .. ஆனா கொஞ்சம் சுகமான உடன கொப்பி புத்தகம் எடுத்து படிக்கோணும் சரியா?”

வேர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனால் உடனே ரியாக்ட் பண்ண கூடாது. பதில் சொல்லாமல் போர்த்து இன்னொரு அரை மணித்தியாலம் சமாளிக்கவேண்டும். பின்னர் அக்காக்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போன பிறகு மெல்ல எழுந்து, பெட்ஷீட்டை “தேவதை இளம் தேவி” கார்த்திக் ஸ்டைலில் வீசி போர்த்துக்கொண்டே, குசினியடியில் ஒரு சின்ன தங்கப்பதக்கம் இருமலையும் போட்டால், அம்மா கொத்தமல்லி நிஜமாகவே .. ஆஆஆஆ. வலி தாங்காமல் கத்தினேன்.

விடுடி விடுடி .. ப்ளீஸ்.

கேட்காமல் இன்னமும் காதையே திருகிக்கொண்டிருந்தாள் மேகலா.


 

மேகலா

541779_320623358038256_1408934519_n“என்னடி … இப்ப என்ன பிரச்சனை?”

“அம்மான .. நீயே ஒருக்கா வாசிச்சுப்பாருடா.. .. சளி பிடிக்குது”

“ஏன் மப்ளர் கொண்டு போகேல்லையா?”

“அது கூட பறுவாயில்ல.. இந்த தரித்திரம் பிடிச்ச நனைவிடை தோய்தலை நீயா நிறுத்திரியா? இல்லை கோத்தாவுக்கு அறிவிக்கட்டா?”

“நோ நோ  .. அப்பிடி ஸ்டார்ட் பண்ணீட்டு அப்புறமா விஞ்ஞானத்துக்கு ..”

“தெரியம்டா ..விஞ்ஞானத்துக்கு தாவீட்டு … பிறகு ஒரு பாட்டு போட்டு பீல் பண்ணுவாய் .. அப்புறமா அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொண்டே ரெண்டு செருகு செருகுவாய்.. ஏண்டா உனக்கு இந்த பிழைப்பு?”

“ஈழத்து எழுத்தாளன் எண்டா அப்பிடி ஏதாவது பிட்டு போட்டு ரெண்டு காம்ரேட், தோழர், இலக்கியம் என்று பீலா விட்டா தான் நம்மாளு பீல் பண்ணுறான் மேடம்.”

“வேணாம்டா … இட்ஸ் நோட் யூ .. இல்லாத காதலியை வச்சே இருபது கதை எழுதி எல்லார் மண்டையையும் காய வச்ச ஆளு .. இண்டைக்கு இந்த விஞ்ஞானம் அரசியல் இல்லாம கொஞ்சம் கம்பா ஒன்றை எடுத்து விடேன்?..”

“கம்பா எடுத்து விடவா? பப்ளிக் பப்ளிக்?”

“ஊப்ஸ் அது வந்து … ஆ .. வெண்பா .. அதை எடுத்து விடு?”

“வெண்பா .. உன்னை பற்றியே எழுதவா?”

“சுத்தம் … முதல் பந்தியிலே எழுதினியே .. கள்ளக்காயச்சல் .. அதையே வெண்பாவாக எழுத ட்ரை பண்ணு.. ஆனா எழுதி முடித்த பிறகு, நேரிசை வெண்பா, விருத்தப்பா, இலக்கணம், ஈரசை தளை மாட்டர் எல்லாம் நீ சொல்லக்கூடாது. வாசிக்கிறவனுக்கு அதுவா விளங்கோணும்”

“அட்லீஸ்ட் .. கவிஞர்கள் நிச்சயம் முதலில் மரபு படிக்கோணும், அப்புறமா தான் மயூ மனோ போல “மௌனம் கசியும் இரவும், உறவும்..!!” என்று ஒரு வரி கவிதை எல்லாம் எழுதி இருநூறு லைக் வாங்கோணும் என்று அட்வைஸ் பண்ணவா?”

“கொலை விழும்!”

“ஒகே .. கீழே பாரு”


936160_443226049099901_605184209_n

வெண்பா

காலமை வெள்ளன ஏழரை ஆகியும்
காந்தனை எழும்பென பெத்தவ கத்தியும்
கட்டில விட்டவன் எட்டலை கண்டனை – பெட்ஷீட்டை
பட்டென இழுத்தனள். பொட்டென கிடந்தனை.

அம்மாவின் அழைப்பு ஆகுதியில் கரைந்தது.
அண்ணலின் நடிப்போ மகாநதியானது
அணலை தொட்டதும் தணலாய் கொதித்தது -  ஒத்திய
புனலின் ஈரத்தில் களவு வெளுத்தது.

வெள்ளம் முட்டினாலும் பள்ளிக்கு போகோணும்
கள்ளம் நெடிப்பெல்லாம் சல்லிக்கு பெயராது – எள்ளி
நகையாடிய அன்னைக்கு வயிற்றில் ஆப்பு வைத்தான்
வசை மொழிந்து ஈற்றில் இயக்கம் போவேன் என்றான்.

இடி விழுந்த மலையானாள் வடு சொன்ன சுடு சொல்லில்
மடி கொடுத்த தலைமகளால் பொடி தாங்க முடியுமோ? -  கொத்த
மல்லி இலை அவித்து சீனி போட்டு கொடுத்தாள்
பள்ளிக்கு கள்ளமடித்த காய்ச்சல்கார ..ஆஆஆஆ!

நாளும் பொழுதும் நனைவிடை தோய்ந்தால்
நாளைய தலைமுறைக்கு விடுவது எதுவோ? – மேகலா
நாக்கை அறுப்பது போல நாலு கேள்வியை முறுக்கினாள்.
வாக்கை கொடுக்கும் வரை ஆளு காதினை திருகினாள்!

ஆஆஆஆ. வலி தாங்காமல் கத்தினேன்.

விடுடி விடுடி .. ப்ளீஸ்.

கேட்காமல் இன்னமும் காதையே திருகிக்கொண்டிருந்தாள் மேகலா.


 

கடிதங்கள்

“I am unable to come to work as I am suffering from fever.”

வேலைக்கு போவோரின் போனில் நிரந்தரமாக சேவ் பண்ணப்பட்டிருக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் இது. அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு பத்து நாள் மெடிக்கல் லீவ் எடுக்கலாம். அதில் ஐந்து நாட்கள் சேர்டிபிகட் காட்டாமலேயே எடுக்கலாம். ஆக எல்லோருமே மினிமம் ஐந்து தடவை இதே டெக்ஸ்டை மனேஜருக்கு அனுப்பி “No worries, get well soon” ரிப்ளை வாங்கியிருப்பார்கள். 

இந்த கடிதங்கள் பற்றி யோசிக்கும்போது நம்ம கஜன் எழுதிய காய்ச்சல் கடிதம் ஞாபகம் வருகிறது. அன்னார் கம்பஸில் படிக்கும்போது சகட்டு மேனிக்கு கட் அடிப்பார். பொதுவாக முகர்சிங் கச்சேரிக்காக தான் அந்த கட் இருக்கும். ஒருமுறை அவசரத்தில் எழுதிய கடிதம் இது.

“I was unable to attend the lecture due to heavy diaria. Please execute me”

576434_348176768616248_399558619_nகாய்ச்சலுக்கு நிகராக நடக்கும் இன்னொரு விஷயம் அம்மம்மாவை கொலை செய்வது. ஒரு முறை நல்லூர் தேருக்காக எங்கள் பாட்ச்சில் இருபதுக்கும் மேற்பட்ட அம்மம்மாக்கள் அவசரமாக இறந்துபோனார்கள். இப்படி கடிதங்கள் எழுதுவதற்காக என்னுடைய ரூமுக்கு ஆட்கள் வருவதுமுண்டு. வளரும் பயிர் முளை மாட்டர் பாஸ். கண்டீனில் ஒரு வடை, ப்ளேன் டீ கொண்டிஷனில் எழுதிக்கொடுக்கும் கடிதம் இது.

“My grandmother passed away last week and I had to attend the funeral henceforth. Sorry couldn't come to the last lecture.”

வடையோடு சாப்பாடும் வாங்கித்தந்தால், கடிதம் பிளாட்டினம் ஸ்டாண்டர்டாக மாறும்.

“With my heavy heart and sorrow, which I cannot still bear, I lost my sweet grand mother last week in Jaffna Teaching Hospital. I am sorry I couldn’t afford to make it to the last lecture”

இலக்கண தவறு இருந்தாலும் கடிதத்தில் இருந்த ஒரிஜினாலிட்டி விரிவுரையாளரை கவுக்கும் என்று நானும் நம்பினேன். எழுதி வாங்கிக்கொண்டு போனவனும் நம்பினான். இப்போது யோசித்துப்பார்த்தால் தேவையில்லாமல் ரெண்டாவது கடித்ததில் மானே தேனே போட்டிருக்கிறேன். Excuse letters எல்லாமே கடமைக்காக கேட்கப்பட்டு, எழுதப்பட்டு, எதிர்ப்பார்க்கப்படுவது தான். அது பொய்யென்று எழுதுபவனுக்கும் தெரியும். வாசிப்பவனுக்கும் தெரியும்.

இப்படி கள்ளமாக மெடிக்கல் லீவு எழுதி வாங்குவதற்கென்றே வெப்சைட் வைத்திருந்திருக்கிறார்கள்.  நாற்பது தொடக்கம் ஐம்பது டொலர்களில் ஒரிஜினல் போன்றே டுப்ளிகேட் மெடிக்கல் கடிதங்கள் தருவார்கள். இந்த விளம்பரத்தை பாருங்கள்.

For around $40 – $50, you can suffer a sudden infliction of:

  • Anything contagious
  • Jury duty
  • A dead family member
  • Lower, upper, inner or outer pain of any kind
  • A nervous breakdown
  • Any other ailment that your brain can concoct.

மெடிக்கல் லீவு சம்பந்தமாக ஒரு சட்டம் இருக்கிறதாம். நான் என்னுடைய முதலாளிக்கு காய்ச்சல் என்று கடிதம் குடுத்தால் முதலாளி நம்பத்தான் வேண்டுமாம். அப்படி நம்பாமல் பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு என்னை அனுப்பி எனக்கு உண்மையிலேயே காய்ச்சல் இருக்கா? என்று அறியும் உரிமை முதலாளிக்கு இல்லை என்கிறார்கள். அதை சட்ட ஓட்டை இங்கே பயன்படுகிறது. ஆனால் மெடிக்கல் செர்டிபிகட்டின் முகவரியை தொடர்பு கொண்டு, உண்மையில் நீங்கள் தான் இந்த சேர்டிபிகட் குடுத்தீர்களா? என்று அங்கே செக் பண்ணலாமாம். அப்படி பண்ணினால் சங்கு தான். எது எப்படியே அரசாங்கங்கள் இந்த வெப்சைட்டை இப்போது தடை செய்துவிட்டதாம்.

http://echoreply.us/tech/2007/10/26/my-excused-absence-busted/


வெங்காயம்

கமக்கட்டுக்குள் வெங்காயமோ உள்ளியோ வைத்தால் அடுத்த நிமிடமே காய்ச்சல் வரும் என்பது கள்ளக்காயச்சல் வந்த எல்லோருக்குமே தெரிந்தவிஷயம். அதென்ன கமக்கட்டு? என்ற டவுட் இருந்தாலும் இன்றைக்கு தான் இன்டர்நெட்டில் செக் பண்ணினேன். சுவாரசியமாக இருந்தது.

உள்ளி, வெங்காயத்தில் ஒருவித நோய் எதிர்ப்பு மாட்டர்கள் இருக்கின்றனவாம். பைட்டோன்சைட்ஸ் என்று அதன் பெயரை இங்கே எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. நோய் எதிர்ப்பு கூறுகள். அது தான் முக்கியம். இப்போது கமக்கட்டுக்குள் வெட்டிய வெங்காயத்தையோ உள்ளியையோ வைத்தால், இந்த நோய் எதிர்ப்பு கூறுகள் உள்ளே உடலுக்குள் புகுந்து இரத்தத்தில் சேர்ந்துவிடும். உடனே மேலே மூளைக்கு மெசேஜ் போகும். இரத்தத்தில் “நோய் எதிர்ப்பு கூறுகள்” அதிகரித்ததை கவனித்த மூளை, அடடா ஏதோ டேஞ்சர், அதுதான் “நோய் எதிர்ப்பு கூறுகள்” உடலில் உற்பத்தியாகி இருக்கின்றன என்று தவறாக நினைத்துவிடும். விளைவு, உடல் முழுதும் எலார்ம் அடித்து, வெப்பநிலையை கூட்டி மூளை ஒரு சீன் போட்டுவிடும். அதனால் தான் இந்த காய்ச்சல் வந்த கொஞ்சநேரத்திலேயே உயர்ந்து பின்னர் “அட நாம தான் ஏமாந்திட்டம்” என்று சுதாரித்தவுடன் மூளை சுனாமி வோர்னிங்கை பின்வாங்கிவிட கள்ளக்காய்ச்சல் பறந்துவிடும்!

இதை எதற்கு கமக்கட்டு என்று கேட்கலாம். கமக்கட்டில் நிறைய குட்டி குட்டி சென்சிடிவ் துவாரங்கள் இருக்கின்றனவாம். அதனால் தான் தெர்மாமீட்டரை அங்கேயே வைப்பார்கள். உள்ளக வெப்பநிலையை ஈசியாக அறியலாம். இது தவிர அடிநாக்கு கூட அப்படிப்பட்ட இடம் தான். ஆனால் வெங்காயம் அங்கே வைத்தால் வாய் நாற்றத்திலேயே கள்ளம் பிடிபட்டுவிடும். மூன்றாவது ஒப்ஷன் ஆசனவாயில். அங்கே போய் .. அதுக்கு பேசாம பள்ளிக்கூடத்துக்கே போயிடலாமே!

அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு உலக மகா மொக்கை படம் ஒன்றை, இளையராஜா, ராதா என்ற இருவரின் இளமையை நம்பி எடுத்து ஓட்டினார் பாரதிராஜா. அதிலே இந்த வெங்காய சீன் வருகிறது. இதை இன்றைக்கு கொடுக்கவென யூடியூபில் தேடினேன். கிடைக்கவில்லை. அடிச்சேன் பாரு ஒரு டெலிபோன் நம்ம மன்மதகுஞ்சுவுக்கு.

“மச்சி .. அலைகள் ஓய்வதில்லை பிட்டு ஒண்டு வேணும்”

“ஒட்டுத்துணியில்லாம வெறும் தாமரைப்பூவை ராதாவிண்ட பொடில கார்த்திக் தடவுவானே அந்த பிட்டா மச்சி?”

“இல்லடா அந்த வெங்காய சீன்”

“ஓ அதுவா … கமக்கட்டுக்க செருகமுதலா இல்ல பின்னேயே?”

“டேய் .. ஒரு பேச்சுக்கு தான் பிட்டு எண்டு .. அதுக்காக இப்பிடியா?”

“ஓகே ஒகே .. ஒரு மணித்தியாலம் டைம் கொடு”, என்றவன் நாற்பத்தைந்து நிமிஷத்தில் லிங்க் அனுப்பினான். “ஏண்டா இவ்வளவு நேரம்?” என்று கேட்டேன்.

“பின்னே .. முழுப்படத்தையும் டவுன்லோட் பண்ணி இந்த சீனை மட்டும் வெட்டி தந்திருக்கிறன் மச்சி”

“நண்பேண்டா!


காதல்

நேற்றுவரைக்கும் நெடுவனம் கண்டு, ஒற்றைக்காலில் உயரத்தில் நின்று, மஞ்சள் மாலை மழையில் நனைந்து, சித்திரை மாதம் வெயிலும் சுமந்து இத்தனை தவங்கள் செய்தாலும், இந்த சமந்தா பொண்ணு, போடா சட்டத்தில் உள்ளே போன போக்கத்த சித்தார்த் பயல் தான் வேணும்னு அடம்பிடித்ததில் நானு கொஞ்சம் அப்சட்.

“ஊமைக்கு பாடலென்ன? கோழைக்கு காதலென்ன?” என்று மொக்கை பாட்டு வரிகளை சொல்லி அழுதபோது தான், நம்ம படலைல அடிக்கடி படுத்து தூங்கிற அஹமத் சாஜ் பயபுள்ள, ரம்ஜானுக்கு மூணு மாசத்துக்கு முன்னாலேயே புரியாணி போட்டிட்டான். நேற்று ஒரு பொண்ணை அறிமுகப்படுத்தினான். அண்ணனுக்கு இவதான் தோதுன்னு அருந்ததியை அத்தனை ஒளியாண்டு தூரத்தில இருந்து அடுத்தகணம் மண்ணில எறக்கினான். கவிதைடா கவிதை!  கலியாணம் கட்டினவன் எவனாவது பார்த்தான் என்றால் அடுத்த கணமே மனைவியை பார்த்து ஹூர் ஆர் யூ? என்பான். காதலியின் Facebook profile ஐ உடனேயே புளோக் பண்ணுவான். இரண்டுமே இல்லாத சிங்கிள் பசங்க படத்தை பார்த்தே ------------- (கீறிட்ட இடத்தை நிரப்பவும்)

ஆனா இந்த படலை எழுதுறவனோ நேரே போய் காலில விழுந்துடுவான். அவ்ளோ அழகு!

149092_434831436606029_1478605790_n

பெயர் நஸ்ரியா நசீம். வயது இன்னும் ஆறு வருடங்களில் இருபத்தைந்து.  தமிழனின் கோவணத்தை கொஞ்சநாளுக்கு உருவ வந்திருக்கும் இன்னொரு ஓமணக்குட்டி. “நேரம்”, “திருமணம் என்கின்ற நிக்கா”, “நையாண்டி” என்று மூன்று சூப்பர்ஹிட் படங்களில் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்த தேவதையை பற்றி கவிதை பாடுவோம் என்றால், எல்லா கற்பனைகளும் “என்னால முடியாதுப்பா” என்று வெட்கத்தில் ஒதுங்கிவிட்டன.

ஹாய் நஸ்ரியா ... ஐ ஆம் ஜேகே ...

நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
And I am love in with you..

கிட்டாரோட பாட்ட போடுங்கடா!!!

**********************

Contact Form